Sunday, June 14, 2015

அறிகுறிகளை நாடுவோர்

போஸ்னியா நாட்டில் அமைந்திருக்கும் ஒரு நகரம் மெட்சுகோர்யே. மெட்சுகோர்யே என்றால் 'மலைகளுக்கிடையே' என்று பொருள். 1981ஆம் ஆண்டு முதல் இந்தப் பங்கில் உள்ள ஆறு பேருக்கு அன்னை மரியாள் தொடர்ந்து காட்சி தருவதாக மக்கள் நம்புகின்றனர். வியாழன் மற்றும் சனிக்கிழமை ஒப்புரவு மற்றும் நற்கருணை வழிபாடுகளில் எண்ணற்ற பேர் கலந்து கொள்கின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெட்சுகோர்யே வழிபாட்டுத்தலத்திற்குச் செல்வோரை, 'அறிகுறிகளை நாடுவோர்' என்று சாடி மறையுரை நிகழ்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மதம் என்று பார்க்கும்போது அதில் இரண்டு அம்சங்கள் உண்டு: ஒன்று, நிறுவனமயமாக்கப்பட்ட மதம். மற்றொன்று, சாமானியர்களின் மதம். கிறிஸ்தவ மதத்தில் நிறுவனமயமாக்கப்பட்ட மதம் என்று சொல்லும் போது, திருத்தந்தை, வத்திக்கான், திருச்சபைச் சட்டம், விதிமுறைகள், சுற்றுமடல்கள் இவற்றில் அடங்கும். சாமானியர்களின் மதம் என்று சொல்லும்போது அந்தோணியார் பக்தி, மாதா பக்தி, காட்சி, பரவசம், குணமளிக்கும் வழிபாடு, ஊற்று, தண்ணீர் இவற்றில் அடங்கும். நிறுவனமயமாக்கப்பட்ட மதத்திற்கும், சாமானியர்களின் மதத்திற்கும் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும்.

1981 முதல் மெட்சுகோர்யேக்கும், வத்திக்கானுக்கும் இடையே நடந்த பனிப்போர் 2013ஆம் ஆண்டு முற்றியது. இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முன்னாள் திருத்தந்தை ஒரு குழுவையும் ஏற்படுத்தினார். ஆனால், பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை.

லூர்துநகர் மற்றும் போர்ச்சுகல் போகும் கூட்டம் இப்போது மெட்சுகோர்யே செல்வதால், அவர்கள் வத்திக்கானைத் தூண்டிவிட்டு மெட்சுகோர்யே வெளிப்பாடுகள் போலி எனச் சொல்லச் சொல்வதாக சில பத்திரிக்கைகள் சொல்கின்றன. இன்னும் சில பத்திரிக்கைகள், மெட்சுகோர்யே அமைந்திருக்கும் போஸ்னியா நாடு இன்னும் கம்யூனிச கொள்கையைப் பிடித்துக்கொண்டிருக்கும் நாடு. வத்திக்கானுக்கும், கம்யூனிசத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் அது மெட்சுகோர்யேயைச் சாடுகிறது என்பதும் சிலரின் கருத்து.

வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ளாதீர்கள். ஆனால், மக்களின் நம்பிக்கையைப் பாருங்கள். எத்தனை பேர் இந்தத் திருத்தலத்தால் சுகம் பெறுகின்றனர் என மற்றும் சிலர் வாதம் செய்கின்றனர்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி: மாதா எதுக்கு வெள்ளைக்காரங்களுக்கே காட்சி கொடுக்கணும்? ஆப்பிரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா எல்லாம் அவங்களுக்குப் பிடிக்காதா? 'வேளாங்கண்ணியில' காட்சி கொடுத்தாங்கனு சொல்லாதீங்க. வேளாங்கண்ணியில போர்ச்சுகீசியருக்குதானே காட்சி கொடுத்தாங்க.

இன்று இரவு நல்லா தூங்கிக்கொண்டிருக்கும்போது உங்க அறையில திடீர்னு வெளிச்சமாகி, மாதா வந்து நின்னாங்கன்னு வச்சிக்குவோம். அதை நீங்க நாளைக்கு வத்திக்கானுக்கு சொன்னீங்கன்னா, அவங்க அதை நம்ப மாட்டாங்க. ஏன்னா, தனிநபர் வெளிப்பாடுகளை வத்திக்கான் ஏற்றுக்கொள்வதில்லை என்று அவர்களுக்கு விதிமுறையும் இருக்கின்றது.

இந்த நிறுவனங்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையில் நடக்கும் இந்த சண்டையில் தவிப்பது பாவம் இந்தக் கடவுள்கள்தாம்!


1 comment:

  1. கிறிஸ்துவை மட்டுமே நம்பும் எம்போன்ற சாமான்யர்களுக்கு அவர் பெயர் சொல்லும் திருச்சபையைப் பற்றி ...அதில் என்ன பேதங்களிருப்பினும் கவலையில்லை. எமக்கு வேண்டியதெல்லாம் கரை ( கிறிஸ்து)சேர ஒரு படகு மட்டுமே. அந்தப்படகு மெட்சுகோர்யே மாதாவோ, லூர்துமாதாவோ, அந்தோணியாரோ, குணமளிக்கும் வழிபாடோ இப்படி எதுவாகவாயினும் இருந்துவிட்டுப் போகட்டும்.எங்களுக்கு வேண்டியதெல்லாம் எங்களின் 'அப்போதைய நம்பிக்கை.'யார் சொன்னது மாதா வெள்ளைக்காரங்களுக்கு மட்டுமே காட்சி கொடுப்பதாக?? தரிசனங்களும், காட்சிகளும் எத்தனையோ சாமான்யர்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் உள்ளது.வெளிச்சம் போட்டுக் காட்டாத்தால் உண்மை இல்லையென்று ஆகிவிடுமா என்ன?

    ReplyDelete