Friday, June 19, 2015

ஆய்வுத்தாளின் நிறைவாக

ஆய்வுத்தாளின் நிறைவாக நான் கற்றுக்கொண்டவை எவை?

1. இறையரசு
இந்த உவமையில் வரும் திராட்சைத்தோட்டம்தான் இறையரசு. இதற்கு உள் நுழையவும், வெளியே செல்லவும் உரிமை தோட்ட உரிமையாளரிடமிருந்துதான் வரும். அவரைப் போல சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்லது அவரின் செயலுக்கு எதிராக முணுமுணுப்பவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள்.

2. கடவுளும், கிறிஸ்துவும்
நல்லோர் மேலும், தீயோர் மேலும் தன் கதிரவனை ஒளிரச் செய்யும் கடவுள், முதலில் வந்தவருக்கும், கடைசியில் வந்தவருக்கும் ஒரே கூலி கொடுக்கிறார். இறுதியில் வேலைக்கு வந்தவர்களுக்கு 12 மடங்கு அதிகம் கூலி கிடைத்தது அவர்களுக்கு நடந்த அற்புதம். வாழ்வில் அற்புதங்களை தேடும் ஒருவரால்தான் அற்புதங்களைக் கண்டுகொள்ள முடியும். மேலும், கடவுள் சின்னஞ்சிறியவர்களின் கடவுள். மனிதர்கள் கணக்கை எழுதி விடையை எழுதுகிறோம். ஆனால், அவர் விடையை எழுதிவிட்டு பின் அதற்கேற்ற கணக்கை உருவாக்குகிறார்.

திராட்சைத்தோட்ட உரிமையாளர் 'ஆண்டவர்' என 20:8ல் அழைக்கப்படுகிறார். இந்த வார்த்தை இயேசுவைச் சுட்டுகிறது.

3. சீடர்களும், சீடத்துவமும்
வழக்கமாக சீடர்கள் என்றால் வெளியில் அனுப்பப்படுபவர்கள் என்றுதான் நாம் நினைக்கிறோம். உரிமையாளர் தன் தோட்டத்திற்குள் வேலையாட்களை அனுப்பும்போதும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை 'அப்போஸ்தெல்லா' (அனுப்பப்படுதல்) என்பது. ஆக, அனுப்பும் திசை இங்கே உள்ளிருந்து வெளியே என்றல்லாமல், வெளியிலிருந்து உள்ளே என இருக்கின்றது. சீடர்களின் முதன்மையான பணி தன் தலைவரோடு உடனிருப்பதுதான். 'தம்மோடு இருக்கவும், அனுப்பப்படவும்தான்' (மாற்கு 3:14) அவர் சீடர்களைத் தெரிந்து கொள்கிறார். ஆக, முதன்மையான பணி தலைவரோடு தன்னையே இணைத்துக்கொள்வது. முதலில் வேலைக்கு வந்த கூலியாட்கள் தங்களுக்கு ஒரு தெனாரியம் கிடைத்தது என்று வருத்தப்படுகிறார்களே தவிர, திராட்சைத்தோட்டத்தின் குளுமையையும், தலைவரின் விருந்தோம்பலையும் 12 மணிநேரங்கள் அனுபவித்தார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மத்தேயு நற்செய்தியாளரின் திருச்சபையில் நிலவிய பிரச்சினை சீடத்துவம்தான். யார் பெரியவர்? இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரோடு மூன்று ஆண்டுகள் இருந்தவர்களா? அல்லது அவரைப் பார்த்திராத மூன்றாம் தலைமுறையினரா? யார் எப்போ சீடத்துவத்தில் இணைந்தாலும், சம்பளம் ஒன்றுதான் என சொல்கிறார் மத்தேயு.

4. திருச்சபையும், பணியும்
உரிமையாளர் வெளியில் செல்லும்போது முதலில் பார்க்கின்றார், பின் தேடுகின்றார். மற்றவர்களால் பயனில்லாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்களையும் தன் பணிக்கு எடுத்துக்கொள்கிறார். திருச்சபையின் உறுப்பினர் நிலையில் இருக்கும் அனைவரின் கடமையும் இதுதான் - பயனற்றவர்களையும் தெரிந்து கொள்வது.

5. அருளா? செயல்களா?
லூத்தர் அவர்கள் கத்தோலிக்க திருஅவையை விட்டு பிரிந்து செல்ல அவர் சொல்லக் காரணம் இதுதான்: 'கத்தோலிக்கத் திருஅவை நம் செயல்களின் வழியாகத்தான் மீட்பு பெற முடியும் என சொல்கிறது. ஆகையால்தான் அது பூசைக்கருத்துகள், அருளிக்கம் வணக்கம் போன்றவற்றை உற்சாகப்படுத்துகிறது. ஆனால், இயேசுவின் அருள்தான் நம்மை மீட்கிறது. ஆக, நம் செயல்களால் கடவுளின் அருளுக்கு மேல் ஒன்றையும் கூட்டுவதில்லை.' இந்த உவமையில் முதலில் வந்தவர்கள் தங்கள் செயலினால் ஏற்புடையவர்களாகின்றனர். இறுதியில் வந்தவர்கள் அருளினால் ஏற்புடையவர்களாகின்றனர்.

6. மனிதர் என்பவர் யார்?
'மனிதர் என்பவர் வேலைக்காரர்' என்று சொல்கிறார் மார்க்ஸ். வேலைக்காரர்களுக்குள் உவமையில் நிலவக்கூடிய ஒன்று 'பொறாமை'. இதை 'கெட்ட பார்வை' அல்லது 'தீய கண்' என்கிறது உவமை. நாம் அனைவரும் வேலைசெய்யப் பிறந்தவர்கள்தாம். நாம் செய்கின்ற வேலையை செவ்வனே செய்தல் போதுமே. தீய கண் தேவையா?

7. மேலாண்மை
அ. இந்த உவமை மேலாண்மைக்குப் பொருந்தாத ஒன்று. எல்லாருக்கும் ஒரே சம்பளம் என்றால், நல்லா வேலை பார்ப்பவரும், 'என்ன வேலை பார்த்தாலும் ஒரே சம்பளம்தானே என்று தன் வேலைத்தரத்தைக் குறைத்துக்கொள்ளமாட்டாரா?

ஆ. உரிமையாளரின் இந்தச் செயல் சமூகத்திலும் குழப்பம் உண்டாக்கும். எப்படி? இந்த வேலைக்காரர்கள் வேலை முடிந்து வீட்டுக்குப் போய், சாப்பிட்டுவிட்டு, பொதுவிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். குறைவான வேலை பார்த்து நிறைவான சம்பளம் வாங்கியவர், அதிகமான நேரம் வேலை செய்தவரைப் பார்த்து கிண்;டல் செய்கிறார்: 'இந்தா! இவன்! ஓடுனான் வேலைக்கு! ஆனா பாரு! இவனுக்கும் இதே சம்பளம்தான்!' முதலில் வேலைக்குப் போனவருக்கு கோபம் வந்து, கிண்டல் செய்தவர் மேல்தான் பாய்வார். ஆக, காயின்கள் உருவாவதற்குக் கடவுள்தான் காரணம்!

இ. ஆன்மீகம் - பரந்த மனப்பான்மைதான் ஆன்மீகத்தின் அடிப்படை. திராட்சைத்தோட்டத்திற்குள் உரிமையாளரோடு அதிக நேரம் இருந்தாலும், அவரின் தாராள உள்ளத்தை கண்டுகொள்ள மறுக்கின்றனர் முதலில் வந்தவர்கள். அவரின் பரந்த மனத்தைக் கண்டு, அதை நாமும் பெற்றுக்கொள்வதுதான் ஆன்மீகம்.

இந்த எளிய ஆய்வுத்தாளை இப்படி நான் அர்ப்பணம் செய்தேன்:

'என் இனிய அப்பாவுக்கு,
அவர், திராட்சைத் தோட்டத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே
வேலை செய்யும் வாய்ப்பு பெற்றார்.
ஆனாலும், கடவுள் அவரின் சம்பளத்தை 12 மடங்காகக் கொடுத்தார்.
முதலில் வந்தவர்களோடு அவரைச் சேர்த்துக்கொண்டார் -
இம்மையிலும், மறுமையிலும்!'

ஆய்வுத்தாள் நிறைவுற்றது.



2 comments:

  1. என் நேற்றைய வேண்டுகோளை ஏற்று எனக்கு விளக்கம் தந்துள்ள தந்தைக்கு என் நன்றிகள்.தங்களின் விளக்கத்தில் கோபம் அங்கங்கே கொப்பளித்து வருவதை உணர முடிந்தது.' விசுவாசம்' எனும் கொடை அனைவருக்கும் ஒன்றுபோல பொழியப்படுவதில்லை என்பதையும் தாங்கள் மறுக்க முடியாது." அவரின் பரந்த மனத்தைக்கண்டு,அதை நாமும் பெற்றுக் கொள்வதுதான் ஆன்மீகம்" எனவும்,"இறுதியில் வேலைக்கு வந்தவர்களுக்கு 12 மடங்கு அதிகம் கூலி கிடைத்ததும் அவர்களுக்கு நடந்த அற்புதம்" எனவும் கூறிவிட்ட பிறகு அப்பீல் ஏது? எது எப்படியோ தந்தையின் ஆய்வுத்தாளை நிறைவு செய்த அந்த வரிகள் என் சங்கடத்திற்கும் கூட நிறைவு வரிகளாக இருக்கட்டும்.தந்தையின் முயற்சிக்கு நன்றிகள்.இறைவனின் திருக்கரம் தங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்!!!

    ReplyDelete
  2. Thank you Father, excellent thought.

    ReplyDelete