Monday, June 22, 2015

உமக்கே புகழ்

'லௌதாத்தோ சீ' - LAUDATO SI' - (உமக்கே புகழ்) என்னும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாம் சுற்றுமடல் இம்மாதம் 18ஆம் தேதி வத்திக்கானில் வெளியிடப்பட்டது. இந்த சுற்றுமடலின் துணைத்தலைப்பு: நம் பொதுவில்லத்தின்மேல் உள்ள அக்கறை. இந்தச் சுற்றுமடலில் திருத்தந்தை அவர்கள் நுகர்வுக்கலாச்சாரத்தையும், பொறுப்பற்ற முன்னேற்றத்தையும் சாடுவதோடு, அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயல்பாட்டிற்கும், இதன் வழியாக நம் பூமிப்பந்தை காக்கவும் அழைப்பு விடுக்கின்றார்.

மே 24, 2015 அன்று இது வெளியிடப்பட்டதாக இதில் எழுதப்பட்டிருந்தாலும் ஜீன் 18ஆம் தேதிதான் வெளியிடப்பட்டது. அராபிக், ஜெர்மன், இஸ்பானியம், இத்தாலியன், ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ் மற்றும் போர்த்துகீசு என எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் சுற்றுமடல் லூமன் பிதெய் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது என்பதால், அவரின் இரண்டாம் சுற்றுமடலே முழுக்க முழுக்க பிரான்சிஸ் அவர்களுக்குரியது.

இது வெளிவந்த இரவே தரவிறக்கம் செய்து படித்து முடித்தேன்.

இந்த சுற்றுமடலில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

1. தலைப்பு. 'லௌதாத்தோ சீ' என்பது ஒரு உம்ப்ரியா எனப்படும் இத்தாலி நாட்டு மாகாணத்தில் பேசப்படும் ஒரு வழக்கு மொழியில் தூய பிரான்சிஸ் அவர்கள் பாடிய ஒரு பாடலின் முதல் வரி. 'லௌதாத்தோ சீ மியோ சிஞ்ஞோரே' என அப்பாடல் தொடங்கும். தூய பிரான்சிஸ் அசிசியாரின் பெயரைத் தாங்கியிருப்பதால், அவர் எழுதிய பாடலிலிருந்தே திருத்தந்தை அவர்கள் தலைப்பைத் தெரிவு செய்திருக்கிறார். மேலும், சுற்றுச்சூழல் பற்றிய இச்சுற்றுமடலுக்கு, இயற்கைக்காக இறைவனுக்கு நன்றி கூறும் தூய பிரான்சிஸ் அசிசியாரின் பாடல் வரி மிகவும் பொருத்தமானதே.

2. மொழி. வழக்கமாக திருத்தந்தையின் சுற்றுமடல்கள் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டு பின் மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். ஆனால் இந்தச் சுற்றுமடல் இலத்தீனில் எழுதப்படவில்லை. இதன் முதல் பிரதியை (டிராப்ட்) எழுதியவர் கர்தினால் பீட்டர் டர்க்ஸன் (ஆப்பிரிக்கா). எந்த மொழியில் முதல் பிரதி எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் திருச்சபை இலத்தீன் மொழியிலிருந்து விடுதலை பெற்றிருப்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

3. மண்ணைத்தொட வருவாயா. வான்நோக்கிய ஆன்மீகத்தை விடுத்து திருஅவை இந்தச் சுற்றுமடலில் மண்ணைத் தொடத் தொடங்கியிருக்கிறது. மண், தண்ணீர், காற்று என நாம் உணர்கின்ற, அனுபவிக்கின்றவைகளைத் தொடத் தொடங்கியிருப்பது ஒரு புதிய முயற்சி.

4. அறிவியல். அறிவியலும், விசுவாசமும் ஒன்றுக்கொன்று முரண்படும் என சொல்லிக்கொண்டிருந்த திருச்சபை இச்சுற்றுமடலில் அறிவியலோடு கைகோர்க்கத் தொடங்கியிருக்கிறது. சுற்றுச்சுழல் பற்றிய அறிவியல் கோட்பாடுகள் (புவி வெப்பமயமாதல் (global warming), பச்சை வீடு விளைவு (green house effect), உயிரியல் பன்மயம் (biodiversity), இன்னும் பல) மிக எளிதாக, சாதாரண மொழிநடையில் தரப்பட்டுள்ளது.

5. ஆர்த்தோடாக்ஸ். கத்தோலிக்கத் திருஅவையின் ஏடு வழக்கமாக கத்தோலிக்க புனிதர்களின் சொற்களைத்தான் மேற்கோள்காட்டுவதாக இருக்கும். ஆனால், இந்த சுற்றுமடலில் பயன்படுத்தப்படும் முதல் மேற்கோளே, கீழைத்திருச்சபையின் திருத்தந்தை பார்த்தலோமேயுவின் வார்த்தைகள் தாம். ஆக, கத்தோலிக்கத் திருஅவை தன்னிடமிருந்து பிரிந்து சென்றவர்களின் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை பெறத் தொடங்கியுள்ளது.

6. யூத-கிறிஸ்தவ விவிலிய விளக்கம். பழைய ஏற்பாட்டு பகுதிகளுக்கு விளக்கம் தரப்படும் இடங்களில் எல்லாம் யூதர்கள் இந்த விவிலியப் பகுதிகளை புரிந்து கொள்ளும் விதமும் தரப்பட்டிருக்கின்றது.

7. சுயஆய்வு. கத்தோலிக்கத் திருஅவை தான் விவிலியத்தை தவறாகப் புரிந்து கொண்டதை அறிக்கையிட்டிருக்கின்றது இச்சுற்றுமடலில். 'பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்' என்ற தொநூ வார்த்தைகள் திருச்சபையில் தவறாக அர்த்தம் கொடுக்கபட்டுள்ளதாகவும், புதிய அர்த்தம் அவசியம் எனவும் சுற்றுமடல் தெரிவிக்கின்றது.

8. பாலினத்தை உள்ளடக்கிய மொழிநடை. வழக்கமாக 'ஆண்பாலில்' எழுதப்படும் சுற்றுமடல்களைப்போல அல்லாமல், மொழிநடை இருபாலரையும் உள்ளடக்கி இருக்கின்றது.

9. தந்தையர்களும், திருத்தந்தையர்களும். சுற்றுமடல்கள் வழக்கமாக பேட்ரிஸ்டிக் லிட்ரேச்சர் என்று சொல்லப்படும் தந்தையர்களின் இலக்கியம் (அகுஸ்தினார், அக்வினாஸ் போன்றோர்) சார்ந்தே இருக்கும். ஆனால் இச்சுற்றுமடல் தந்தையர்களின் ஆன்மீகத்தை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், திருத்தந்தையர்கள் இரண்டாம் யோவான் பவுல் மற்றும் பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் உரைகளும், மடல்களும் அதிகமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

10. ஆயர்களின் மாநாட்டு உரைகள். இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆயர்களும் திருத்தந்தையோடு இணைந்திருக்கிறார்கள் என்றும், ஆயர்களுக்கும் தங்கள் தலத்திருச்சபையில் முழுமையான அதிகாரம் இருக்கிறது (Collegiality of Bishops) எனவும் சொன்னது. ஆனால், இந்தக் கருத்து பல ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில்தான் இருந்தது. ஆனால், இந்தச் சுற்றுமடலில் கனடா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா போன்ற ஆயர்களின் குழும சுற்றுமடல்களும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. ஆக, அந்தந்த நாடுகளில் ஆயர்கள் சொல்லும் கருத்துகள் ஒட்டுமொத்த திருஅவையின் கருத்தின்மேல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று ஆயர்களையும், திருத்தந்தையின் அளவுக்கு உயர்த்துகிறது இச்சுற்றுமடல். இது மிக மிக பாராட்டப்படவேண்டிய ஒன்று.

11. புதிய வார்த்தைகள். மிக நேர்த்தியான புதிய வார்த்தைகளை இந்தச் சுற்றுமடல் ஆங்கில மொழிக்குத் தந்திருக்கிறது: உதாரணத்திற்கு, rapidification, throwaway culture, water poverty, differentiated responsibilities.

12. மதம் ஒரு உட்கலாச்சாரம். உட்கலாச்சாரம் என்பது ஒரு சமூகவியல் வார்த்தை. அதாவது, கலாச்சாரத்தை எதிர்க்கும் சிலர் உருவாக்குவது உட்கலாச்சாரம். மதம் ஒரு உட்கலாச்சாரம் என்று சொல்வது மதத்தை தாழ்வாக்குவது. ஆனால், இப்படி மக்கள் நினைத்தாலும் தவறில்லை என்று திருச்சபை தன் மதத்தையே விட்டுக்கொடுத்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

13. இறுதி செபங்கள். சுற்றுமடலின் இறுதியில் எல்லாரும் செபிக்க ஒரு செபம், கிறிஸ்தவர்கள் செபிக்க ஒரு செபம் என இரண்டு செபங்களைக் கொடுத்துள்ளார் திருத்தந்தை. இதில், எல்லாரும் செபிக்க வேண்டிய செபத்தை முதலில் கொடுத்து, கிறிஸ்தவம் இரண்டாம் இடத்தில் தன்னையே தாழ்த்திக் கொண்டிருப்பதும் சால்பு.

14. யோசேப்பு. திருத்தந்தையரின் சுற்றுமடல்களும், அவரின் எல்லா உரைகளும் இறுதியாக அன்னை மரியாளைப் பற்றி எழுதி நிறைவு செய்யப்படும். ஆனால், இங்கே இன்னும் ஒருபடி மேலே போய் மரியாளின் துணைவர் யோசேப்பையும் பற்றி எழுதியிருக்கின்றார் திருத்தந்தை.

15. ஆறு அத்தியாயங்கள். 246 பத்திகள், 172 அடிக்குறிப்புகள் என நிமிர்ந்து நிற்கும் இச்சுற்றுமடல் கத்தோலிக்கத் திருஅவையின் புதிய மைல்கல். சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்கள், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், சுற்றுச்சூழலின்மேல் நமக்குள்ள பொறுப்புணர்வு, மற்றும் அன்றாடம் நாம் வாழ வேண்டிய எளிய வாழ்க்கை குறிப்புகள் என அலசி ஆராய்கிறது இச்சுற்றுமடல். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏழையரின் திருத்தந்தை என அழைக்கிறோம். இந்த ஏழையர், எளியவர், பொருளாதார முதலைகளின் வாயில் சிக்கத்தவிக்கும் திராணியற்றோர் அனைவரின் மனச்சான்றாக ஒலிக்கின்றது இச்சுற்றுமடல்.

இந்தச் சுற்றுமடலை ஆங்கிலத்தில் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்:

Laudato Si' in English


1 comment:

  1. "உமக்கே புகழ்"....எப்பொழுதுமே திருத்தந்தையின் வாய்மொழியோடு போருக்கு நிற்கும் தந்தை இன்று அவரது சுற்றுமடலை அக்கு வேறு,ஆணிவேறாக ஆய்வு செய்தது மட்டுமின்றி காலத்தின் தேவை கருதி வந்த இந்த மடலை எல்லோருக்கும் புரியக்கூடிய வித்த்தில் பகிர்ந்து கொண்டதற்கும்ஒரு சபாஷ்! ஆன்மீகத்தை மட்டுமல்ல....நமது பூமிப்பந்தையும் அதன் அனைத்து ஜீவராசிகளையும் காப்பதும் கூட 'கிறித்துவத்தின்' குறிக்கோள் எனச் சொல்கிறது இந்த சுற்றுமடல்.நாம் அனைவருமே யோசிக்க வேண்டிய தருணம்.பூமியை,நம் சுற்றுச்சூழலை,நம்மைச் சுற்றியிருக்கும் உயிரினங்களை மதிக்கத் தொடங்குவோம்....அதன் வழியே நமது பாதுகாப்புக்கும் ஒரு பிள்ளையார் சுழியிடுவோம்.தன் மந்தையின் நலன் கருதும் இந்த ஆயனை(திருத்தந்தை) இறைவன் நல்ல உடல், உள்ள சுகத்தோடு வைத்திருக்க வாழ்த்துவோம்.தன்னை வந்து சேரும் அத்தனையையும் தன் உறவோடு பகிரத் துடிக்கும் தந்தைக்கும் என் நன்றிகள்!!!

    ReplyDelete