Wednesday, December 30, 2020

இவரது நிறைவிலிருந்து

இன்றைய (31 டிசம்பர் 2020) நற்செய்தி (யோவா 1:1-18)

இவரது நிறைவிலிருந்து

இன்று ஆண்டின் இறுதிநாள்.

'இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் (அருளுக்கு மேல் அருள்) பெற்றுள்ளோம்' என்னும் இன்றைய நற்செய்தி வாசக வார்த்தைகள் இந்த ஆண்டு முழுவதும் நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிகூறுமாறு நம்மைத் தூண்டுகின்றன.

மேலும், கடவுள் மனுவுருவாதல் நிகழ்வை மிக அழகான இரண்டு வார்த்தைகளில் பதிவு செய்கின்றார் யோவான்: 'வெளிப்பாடு' 'பதிலிறுப்பு'

கடவுள் தம்மை வெளிப்படுத்துகின்றார். மனிதர்கள் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர். வெளிப்பாடும் பதிலிறுப்பும் சந்திக்கும் அந்தப் புள்ளியில் மனுவுருவாதல் நடந்தேறுகிறது.

எல்லாரும் பதிலிறுப்பு செய்தார்களா? இல்லை.

ஏரோது போன்றவர்கள் வெளிப்பாட்டை எதிர்த்தார்கள்.

எருசலேம் நகரத்தவர் வெளிப்பாட்டைக் கண்டுகொள்ளவில்லை.

மரியா, யோசேப்பு, எலிசபெத்து, சக்கரியா, சிமியோன், அன்னா, இடையர்கள், ஞானியர்கள் போன்றவர்கள் வெளிப்பாட்டுக்குத் திறந்த மனத்துடன் பதிலிறுப்பு செய்கின்றனர்.

இந்த ஆண்டு முழுவதும் இறைவன் தம்மைப் பல நிலைகளில், பல நபர்கள் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். நம் பதிலிறுப்பு எப்படி இருந்துள்ளது?

சில நேரங்களில் வெளிப்பாட்டை எதிர்த்திருக்கலாம் நாம்! அல்லது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்! அல்லது திறந்த மனத்துடன் பதிலிறுப்பு செய்திருக்கலாம்.

பதிலிறுப்பு செய்பவர்கள் பெறும் கொடை அளப்பரியது.

'அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்' என்று யோவான் பதிவு செய்கின்றார்.

'கடவுளின் பிள்ளை' என்ற அடையாளம் நம்மை ஒருவர் மற்றவரோடு இணைப்பதோடு, நம் வாழ்வை மிகவே புரட்டிப் போடுகிறது. நம் எண்ணங்களையும் செயல்களையும் உயர்த்துகிறது.

நிற்க.

இந்த ஆண்டு ஓர் இறைவேண்டலோடு நிறைவு செய்வோம்:

இறைவா,

இதோ உம் திருமுன் நான் நிறைவுடன் நிற்கின்றேன்.

உம் கைகளால் என் கொடைகள் நிறைந்துள்ளன.

நான் தடுமாறிய பொழுதுகள், தடம் மாறிய நேரங்கள்

தவறவிட்ட வாக்குறுதிகள், தவறி விட்ட உறவுகள் அனைத்தையும்

உம் பாதம் ஒப்படைக்கின்றேன்.

உம் திருமகனின் பிஞ்சு விரல் பிடித்து புதிய ஆண்டுக்குள் நடக்க விரும்புகிறேன்.

என் உள்ளத்தின் வெறுமை, தனிமை, சோர்வு, விரக்தி, ஏமாற்றம் அனைத்தும்

கடந்து போகும்!

நீர் என்னைவிட்டுக் கடந்து போகாமலிருந்தால்!

Tuesday, December 29, 2020

அன்னா

இன்றைய (30 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 2:36-40)

அன்னா

சிமியோன் கைகளில் குழந்தை ஏந்தியதைத் தொடர்ந்து அங்கே வருகிறார் அன்னா.

சிமியோன் பற்றி எந்தப் பின்புலக் குறிப்பும் தராத லூக்கா, அன்னா பற்றி சில குறிப்புகளைத் தருகின்றார்: (அ) ஆசேர் குலத்தைச் சேர்ந்தவர், (ஆ) பானுவேலின் மகள், (இ) கைம்பெண், (ஈ) இறைவாக்கினர், (உ) வயது முதிர்ந்தவர், (ஊ) ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர், மற்றும் (எ) அவருக்கு வயது எண்பத்து நான்கு.

ஆசேர் குலத்துக்கு குலமுதுவர் யாக்கோபு இவ்வாற ஆசி வழங்குகிறார்: 'ஆசேரின் நிலம் ஊட்டமிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்' (காண். தொநூ 49:20). மோசேயும் ஆசேர் குலத்திற்கு நீண்ட ஆசி வழங்குகின்றார்: 'ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான். தன் உடன்பிறந்தாருக்கு உகந்தவனாய் இருப்பான். அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான். உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை. உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்' (காண். இச 33:24).

'பானுவேல்' என்றால் எபிரேயத்தில் 'கடவுளின் முகம்' என்று பொருள். கடவுளின் முகத்தைப் பார்ப்பார் இவருடைய மகள் என்பதற்காக லூக்கா உருவாக்கிய காரணப்பெயராகவும் இது இருக்கலாம்.

'கைம்பெண்' - கைம்பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர் யூதச் சமூகத்தில். ஏனெனில், அவர்களுடைய பாவங்களுக்காகவே அவர்களது கணவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்று அவர்கள் எண்ணினர். ஆனால், கைம்பெண் ஒருத்தியும் கடவுளைக் கைகளில் ஏந்தும் பாக்கியம் பெற்றாள் என்று சொல்வதன் வழியாக லூக்கா அன்றைய சமூகத்தின் சிந்தனையைப் புரட்டிப் போடுகின்றார்.

'இறைவாக்கினர்' - ஆலயத்தில் அமர்ந்து இறைவனின் திருவுளச்சீட்டு எது என அறிய மக்களுக்கு உதவியவராக அன்னா இருக்கலாம்.

'வயது முதிர்ந்தவர்' - இங்கே, 'ஏழு' மற்றும் 'ஏழு முறை பன்னிரண்டு - எண்பத்து நான்கு' என்னும் இரு எண்களைப் பயன்படுத்துகிறார் லூக்கா, 'ஏழு' என்றால் நிறைவு. 'ஏழு முறை பன்னிரண்டு' என்றால் நிறைவிலும் நிறைவு. ஆக, திருமண வாழ்விலும், மண்ணக வாழ்விலும் நிறைவுடன் இருக்கின்றார் அன்னா.

'அன்னா' - 'இரக்கம்' என்பது பொருள்.

சிமியோன் குழந்தையைக் கைகளில் ஏந்தி குழந்தையின் தாயிடம் பேசுகின்றார்.

அன்னா, குழந்தையைக் கைகளில் ஏந்தவில்லை. ஆனால், குழந்தை பற்றி அனைவரிடமும் பேசுகின்றார்.

கடவுள் அனுபவம் பெற்ற சிமியோன் கடவுளிடம் பேசுகின்றார்.

கடவுள் அனுபவம் பெற்ற அன்னா மற்றவர்களிடம் பேசுகின்றார். தான் கண்டு அனுபவித்ததை மற்றவர்களுக்குச் சொல்கின்றார் அன்னா. இறையனுபவம் என்ற பெரிய புதையலைத் தனக்குள் வைத்துக்கொள்ளத் தெரியாத அன்னா தான் கண்ட அனைவரிடமும் தான் கண்ட புதையல் பற்றிப் பேசுகின்றார்.

இன்று நாம் இறையனுபவம் பெறுகின்றோம்.

தனிப்பட்ட வாழ்வில், பிறரைச் சந்தித்தலில், செபத்தில், வழிபாட்டில், இறைவார்த்தை வாசிப்பில் என நிறையத் தளங்களில் நாம் இறையனுபவம் பெறுகின்றோம்.

அனுபவம் பெற்றவுடன் அதற்கான நம் பதிலிறுப்பு எப்படி இருக்கிறது?

எனக்குள் அந்த அனுபவத்தைப் புதைத்துக்கொள்கிறேனா? அல்லது மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறேனா?

இங்கே அன்னா இன்னொன்றையும் நமக்குக் கற்றுத் தருகிறார்.

அவர் ஒருபோதும் தன்னைச் சூழலின் பலிகடா என்று உணரவில்லை. சீக்கிரம் முடிந்த திருமண வாழ்வை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல், இறைப்பணிக்கான வாய்ப்பாகப் பார்க்கின்றார். நம் வாழ்வில் நமக்கு நேர்கின்ற நிகழ்வுகளையும் நேர்வுகளையும் நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால், அவற்றுக்கான பதிலிறுப்பை நாம் கட்டுப்படுத்தலாம். அன்னாவின் பதிலிறுப்பு நேர்முகமானதாக இருந்தது.

மேலும், அன்னா நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருந்தார். தன் குடும்பம் விட்டு விலகிய அவர், தனக்குத் தெரிந்த அனைவரையும் தன் குடும்பம் என ஆக்கிக்கொள்கின்றார். ஆகையால்தான், அவரால் எல்லாரோடும் உரிமையோடு பேசவும் குழந்தை பற்றிப் பகிரவும் முடிந்தது.

அன்னாவின் கூன்விழுந்த உடல் கேள்விக்குறியாக வளைந்து கிடந்தது. ஆண்டவரைக் கண்டவுடன் அது ஆச்சர்யக்குறியாக நிமிர்ந்து நின்றது.

அமைதியுடன் போகச் செய்கிறீர்

இன்றைய (29 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 2:22-35)

அமைதியுடன் போகச் செய்கிறீர்

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் இன்று நாம் சந்திக்கும் கதைமாந்தர் சிமியோன். தன் உள்ளுணர்வால் ஆண்டவரின் மெசியாவைக் கண்டுகொண்டவர். மெசியாவைக் கண்டவுடன் அவருடைய தேடல் நிறைவுபெறுகிறது. அவருடைய எதிர்பார்ப்பு முடிவுக்கு வருகிறது.காத்திருத்தல் நிறைவேறியவுடன் விடைபெற விழைகின்றார்.

விடைபெறுதல் ஒரு சோகமான அனுபவம்.

ஆனால், விடைபெறல்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

நம் வாழ்வில் 'நிறைவு' என்ற ஓர் உணர்வை நாம் பெற்றுக்கொள்ள சிமியோன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 

ஒரு குழந்தையில் மெசியாவைக் கண்டார் சிமியோன்.

அந்தக் குழந்தையைக் கையில் ஏந்தினார்.

கையில் ஏந்தியவர், அந்தச் சின்னக் குழந்தையின் பிஞ்சு விரல் விலக்கி விடைபெறுகின்றார்.

மெசியாவையும் பற்றிக்கொள்ள விரும்பவில்லை சிமியோன்.

பற்றற்றான் பற்றை அவர் இறுகப் பற்றிக் கொண்டதால் மற்றப் பற்றுகள் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

தான் போவதற்கு முன் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவு செய்கின்றார்.

பற்றுகள் பல நேரங்களில் நம் வாழ்வின் தொற்றுகளாக மாற வாய்ப்பு உள்ளது.

பற்றுகள் தவிர்த்தல் நலம்.

ஆனால், அதற்கு அசாத்திய துணிச்சலும் மனத்திடமும் தேவை.

தன் வாழ்வில் தனியாhகக் காத்துக்கிடந்த சிமியோன் சற்று நேரம் அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிடித்தார். விரல்களின் இறுக்கமும் நெருக்கமும் அவருக்குக் கிறக்கம் தந்தாலும், விரல்களை விட்டு விடைபெறுகின்றார்.

பற்றுகள் விடும்போது மனம் அமைதி பெறுகின்றது.

ஆனால், அவற்றை விட்டுவிட்டால் என்ன ஆகும்? என்று பதைபதைத்து மனம் அமைதியை இழக்கின்றது.

Sunday, December 27, 2020

மாசில்லாக் குழந்தைகள்

இன்றைய (28 டிசம்பர் 2020) திருநாள்

மாசில்லாக் குழந்தைகள்

இயேசு பிறந்த காலத்தில், பெத்லகேமில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏறக்குறைய 20 முதல் 50 வரை இருந்திருக்கலாம். குழந்தைகள் படுகொலை பற்றிய குறிப்பு மத்தேயு நற்செய்தி தவிர, வேறு எந்த நற்செய்திப் பகுதியிலும், உரோமை அல்லது யூத வரலாற்றுப் பதிவேடுகளிலும் இல்லை. பெரிய ஏரோது தன் ஆட்சிப் பீடத்தைத் தக்கவைப்பதற்காக தன் பெற்றோர்களையும் தன் இரண்டு மகன்களையும் கொன்றவர். மேலும், தான் இறக்கும் நேரத்தில் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து மேன்மக்களையும் கொன்றுவிடுமாறும் ஆள்களுக்கு முன்பணம் கொடுத்துவைத்திருந்தார். தானே அரியணைக்கு உரியவர். அரியணை தனக்கே உரியது என்ற எண்ணத்தில் வாழ்ந்தவரின் மனத்தில் உள்ள வன்மத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

இந்த நற்செய்திப் பாடத்தை ஒருமுறை நான் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பில் நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளவல், 'ஏன் ஃபாதர் கடவுள் மற்றக் குழந்தைகளையும் காப்பாற்றவில்லை?' என்று கேட்டார். எல்லாத் தந்தையர்களின் கனவுகளிலும் தூதர் வந்து எச்சரித்திருக்கலாமே? அல்லது பெரிய ஏரோதுவைக் கடவுள் கொன்றிருக்கலாமே? ஒரு குழந்தை காப்பாற்றப்படுவதற்காக மற்றக் குழந்தைகள் கொல்லப்பட வேண்டுமா? இலக்கு சரியானது என்பதற்காக, எந்தவொரு வழியையும் பயன்படுத்த இயலுமா? அந்தக் குழந்தையின் கேள்விகளில் பிறக்கும் கேள்விகள்தாம் இவை.

நிகழ்வின் சோகம் நம் முகங்களையும் நிறையவே அப்பிக்கொள்கிறது.

இந்த நிகழ்வின் சோகத்தை மத்தேயு நற்செய்தியாளர் பாபிலோனிய நாடுகடத்தல் நிகழ்வோடு ஒப்பிடுகின்றார்.

'ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவர் மறுக்கிறார். ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' என்னும் எரேமியா இறைவாக்கினர் வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டுகின்றார். 'ராமா' என்பது இஸ்ரயேல் நாட்டின் எல்லைப் பகுதி. நெபுகத்னேசர் அரசர் யூதா மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்திச் செல்லும்போது, அந்த இடத்தில் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அங்கிருந்து அவர்களை சங்கிலிகளால் பிணைத்து இழுத்துச் சென்றார். அந்த இடத்தில்தான் யாக்கோபின் இனிய இல்லாளாகிய இராகேலின் கல்லறை இருந்தது. நாடுகடத்தப்பட்ட மக்களின் அழுகுரல் கேட்டு, துயில் எழுகிற இராகேல் அழுகிறாள். அவளுடைய குழந்தைகள் நாடுகடத்தப்படுவதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

என்ன ஒரு சோகம்!

இறந்தவளும் எழுந்து அமர்ந்து அழும் அளவுக்குச் சோகம்.

இருப்பவர்கள் நாம் அழலாம்! நம் தனிமையில், பிரச்சினையில், சோகத்தில், சோர்வில்! பாவம்! இறந்தவள் ஏன் எழ வேண்டும்?

மாசில்லாக் குழந்தைகள் கொண்டாடப்படுவதை விட, வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பமாக இருக்கிறது. மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்காக இறந்து சான்று பகர்ந்தார்கள் என்று ஆன்மிக நிலையில் புரிந்துகொள்ள என் மனம் ஒப்பவில்லை. 

ஒரு குழந்தையை நள்ளிரவில் அதன் பெற்றோர் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலைக்கு அன்றைய அரசு எந்திரத்தின் அதிகார வெறி இருந்திருக்கிறது.

ஓர் அரசன் தன் கோபத்தை குழந்தைகள்மேலும் திருப்பலாம் என்ற அளவுக்கு அவன் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவனாக இருக்கிறான்.

அதிகாரத்தின் முன்னால் அதிகாரமின்மை துன்புறுகிறது.

வலிமையின் முன்னால் வலுவின்மை மரித்துப் போகிறது.

மாசில்லாக் குழந்தைகள் போல இன்றும் பலர் துன்புறுகிறார்கள் என்று சொல்லி, துன்பத்திற்கு மாட்சி உண்டு என்று ஆறுதல் தருவது தவறு.

வலுவற்றவர்களை வாழ வைக்காத வலிமையால் பயன் ஏது?

சாலையில் அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒரு நபரை மறிக்கும் காவல்துறை என்ற அரசு எந்திரம், 'ஹெல்மெட் அணியவில்லை' என்று சொல்லி அவன் தன் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த 100 ரூபாயைப் பறித்துக்கொள்கிறது. காவல்துறை என்ற ஏரோதின் முன் அந்த நபரும் மாசற்ற குழந்தையே.

இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.

இன்றும் பல ஏரோதுக்கள் பல நிலைகளில் நம் பச்சிளம் குழந்தைகளைக் கொல்ல நம் இல்லங்களுக்கு வருகின்றனர்.

இன்றும் இராகேல் அழுகிறாள். தன் கல்லறையிலிருந்து!

Saturday, December 26, 2020

ஒன்றும் இரண்டும் ஐந்து

திருக்குடும்பத் திருவிழா

I. சீராக்கின் ஞானம் 3:2-7,12-14  II. கொலோசையர் 3:12-21 III. லூக்கா 2:22-40

ஒன்றும் இரண்டும் ஐந்து

'மேன்மையான மனிதர்களின் ஏழு பண்புகள்' என்ற நூலின் ஆசிரியர் ஸ்டீபன் கோவே அவர்கள், 'சினர்ஜி' ('கூட்டாற்றல்' அல்லது 'கூட்டொருங்கியக்கம்') என்பதை ஆறாவது பண்பாகக் குறிப்பிடுகின்றார். இந்த வார்த்தையின் பொருள் என்ன? 'சினர்ஜி' என்ற பெயர்ச்சொல், 'சுன்' மற்றும் 'எர்கவோ' ('இணை' மற்றும் 'செயலாற்றுதல்') என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. அதாவது, 'ஒன்றும் ஒன்றும் மூன்று' என்பதுதான் இதன் பொருள். அது எப்படி? அதாவது, இரு ஆற்றல்கள் இணையும்போது உருவாகும் ஆற்றல் அவற்றின் கூட்டுத்தொகையை விட அதிகம். பவுல் தன் திருமுகத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் (கூட்டொருங்கியக்கம்) செய்கிறார்' (காண். உரோ 8:28). நான் கடவுளை அன்பு செய்கிறேன். அவர் எனக்கு நன்மை செய்கிறார். இங்கே நானும், கடவுளும் இரு ஆற்றல்கள். ஆனால், இந்த இரு ஆற்றல்களும் இணையும்போது என் ஆற்றல் பன்மடங்கு பெரிதாகிறது.

ஓர் உருவகம் வழியாகப் புரிந்துகொள்வோம். ஒரு வண்டியில் பூட்டப்பட்ட இரு மாடுகள் செயலாற்றி அந்த வண்டியை இழுக்கின்றன. அவை இணைந்து செயல்படும்போது உருவாகும் ஆற்றல் அவற்றின் தனித்தனி ஆற்றலின் கூட்டுத்தொகையைக் விட அதிகமாக இருக்கிறது. 10 பேர் கொண்ட கிரிக்கெட் அணி ஒன்றில் 10 பேரின் தனித்தனி ஆற்றலால் அந்த அணி வெல்வதில்லை. மாறாக, அணியின் 10 பேரும் தங்கள் ஆற்றல்களை ஒருவர் மற்றவரோடு இணைத்துக்கொள்வதால்தான் அங்கே வெற்றி கிடைக்கிறது.

இன்று, யோசேப்பு-மரியா-இயேசு திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.

'ஆண்' என்ற 'ஒன்றும்', 'பெண்' என்ற 'இரண்டும்' இணையும்போது அங்கே உருவாகும் ஆற்றல் 'ஐந்து' என இருக்கிறது என்று இன்றைய இறைவார்;த்தை வழிபாடு நமக்குச் சொல்கிறது. ஏனெனில், மனிதர்கள் குடும்பத்தை உருவாக்குகின்றனர். இறைவனே அதைத் திருக்குடும்பம் ஆக்குகின்றார்.

குடிலின் நடுவே பாலன் இயேசு படுத்திருக்க, அவரின் வலப்புறமும் இடப்புறமும் அவரின் கண்கள்மேல் தங்கள் கண்களைப் பதித்தவாறு யோசேப்பும் மரியாவும் நிற்கின்றனர். இந்த மூன்று பேரையும் ஒரு சேரப் பார்க்கும் நம் கண்கள் நம்மை அறியாமலேயே அவர்களின் கண்களில் ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.

இன்றைய முதல் வாசகம் சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'ஏசு பென் சீராக்' என்னும் யூத ஞானியே இதன் ஆசிரியர். எபிரேயத்தில் எழுதப்பட்ட நூலை அவருடைய பேரன் சீராக் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கிறார். நிறைய அறிவுரைப் பகுதிகள் காணக்கிடக்கும் இந்நூல் முழுக்க முழுக்க குடும்ப ஞானம் பற்றியதாகவும், குடும்ப வாழ்வுக்குத் தேவையான அறநெறிகள் கொண்டதாகவும் இருக்கிறது. 'உன் தந்தை, தாயை மதித்து நட' என்னும் நான்காவது கட்டளையின் வாழ்வியல் நீட்சியாக இருக்கிறது இன்றைய வாசகப் பகுதி. கீழ்ப்படிதல் என்பதை வெறும் கட்டளையாக அல்லாமல் மதிப்புநிறை மனப்பாங்காகவே மாற்றிக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் சீராக். பெற்றோரை மதித்தல் நமக்கு இரண்டுநிலைகளில் ஆசீராக அமைகின்றது: (அ) அது நீண்ட ஆயுளை நமக்குத் தருகிறது. இதை நாம் அப்படியே நேரிடைப் பொருளில் எடுக்கத் தேவையில்லை. 'நீண்ட ஆயுள்' என்பது உச்சகட்ட ஆசீர். ஏனெனில், மற்ற அனைத்தையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். நாம் வாழும் காலத்தை நீட்ட ஆண்டவரால் மட்டுமே இயலும். (ஆ) நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நம் இறைவேண்டல்கள் கேட்கப்படும். பெற்றோரை மதிப்பவர்கள் பாவம் செய்வதில்லை. ஏனெனில், தான் செய்வதை தன் தந்தை அல்லது தாய் ஏற்றுக்கொள்வாரா என்று நான் ஒரு நிமிடம் யோசித்தால் அந்தச் செயலைச் செய்ய மாட்டேன். ஆக, பாவம் தானாகவே குறைந்துவிடுகிறது. மேலும், பெற்றோரிடம் ஒருவர் இணக்கம் கொண்டிருப்பதால், அங்கே இறைவன் உடனிருக்க, நம் இறைவேண்டல்கள் கேட்கப்படுகின்றன.

மேலும், பெற்றோருக்குரிய மதிப்பு அவர்கள் செயலாற்றும் நிலையில் இருப்பதால் அல்ல, மாறாக, அவர்களுடைய முதுமையிலும், அவர்களுக்கு உடல் மற்றும் அறிவாற்றல் குன்றும்போதும் இருக்க வேண்டும். மேலும், அது நிபந்தனையற்றதாக இருத்தல் வேண்டும்.

பெற்றோரைக் கொண்டாடுவதால் ஒருவர் தன் கூட்டாற்றலை அதிகரித்துக்கொள்கின்றார். எனக்கு உடலில் ஆற்றல் இருக்க, என் அப்பாவுக்கு அனுபவத்தில் ஆற்றல் இருக்க, என் அம்மாவுக்கு ஆன்மிகத்தில் ஆற்றல் இருக்க, இம்மூன்று ஆற்றல்களும் இணைந்தால் வல்லசெயல் நடந்தேறுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:12-21), இறைமக்களுக்குரிய அறிவுரைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொலோசை நகரத் திருஅவை மக்கள் பெற்றிருக்கின்ற அழைத்தலின் மேன்மையை அவர்களுக்கு நினைவூட்டுகின்ற பவுல், 'இறைமக்களுக்குரிய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால்' அவர்கள் தங்களை அணிசெய்ய அழைப்பு விடுக்கின்றார். 'அணிசெய்தல்' அல்லது 'உடுத்திக்கொள்தல்' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் பவுல். ஏனெனில், இறைமக்கள் சமூகமே ஒரு குடும்பம்தான்.

தொடர்ந்து, இரண்டாவது பகுதியில் குடும்பத்தில் திகழ வேண்டிய அறநெறி பற்றி எழுதுகின்றார் பவுல். 'பெண்கள் ஆண்களுக்குப் பணிந்திருக்க வேண்டும்' என்றும், 'ஆண்கள் பெண்களை அன்பு செய்ய வேண்டும்' என்றும், 'பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்' என்றும் அறிவுறுத்துகிறார் பவுல். இங்கே பணிதலும், கீழ்ப்படிதலும் அடிமைத்தனப் பண்புகள் என எண்ணுதல் தவறு.

இறைமக்கள் குடும்பம் நற்பண்புகளால் தன்னை அணிசெய்யும்போதும், தனிநபர் குடும்பங்கள் பணிதல், அன்பு, மற்றும் கீழ்ப்படிதல் கொண்டிருக்கும்போதும் அங்கே கூட்டொருங்கியக்கம் சாத்தியமாகிறது.

நற்செய்தி வாசகத்தில், திருக்குடும்பம் முதன்முதலாக எருசலேம் செல்லும் நிகழ்வை வாசிக்கின்றோம். மூன்று காரணங்களுக்காக அவர்கள் எருசலேம் செல்கின்றனர்: (அ) குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க - ஏனெனில், தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு உரியது. எனவே, நாம் விலைகொடுத்து அதை மீட்டுக்கொள்ள வேண்டும். விலையாக ஒரு இளம் ஆடு அல்லது இரு மாடப்புறாக்கள் கொடுக்க வேண்டும். (ஆ) தாயின் தூய்மைச் சடங்கு நிறைவேற்ற - ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் 40 நாள்கள் தீட்டாக இருக்கிறார். அவர் 40 நாள்களுக்குப் பின் தன்னையே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் - பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 80 நாள்கள் தீட்டு என்கிறது மோசேயின் சட்டம். (இ) குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய - விருத்தசேதனம் என்பது உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது.

இயேசுவின் திருக்குடும்பம், இறைவனின் குடும்பத்திலிருந்த சிமியோன் மற்றும் அன்னாவை தன்னை நோக்கி இழுத்துக்கொள்கிறது. இந்நிகழ்வில், இயேசுவின் பெற்றோர் ஆண்டவரின் திருச்சட்டத்துக்குப் பணிந்து நடப்பவர்களாகவும், குழந்தை இயேசு, கடவுளுக்கு உகந்தவராகவும் இருக்கிறார்.

இவ்வாறாக, திருக்குடும்பம் இறைவனின், இறைவனின் அடியவர்களின் கூட்டாற்றலின் இயங்குதளமாக இருக்கிறது.

திருக்குடும்பத் திருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) நம் குடும்பம் நம் வேர்கள்

நம் குடும்பத்தில்தான் நம் கால்கள் நிலைபெற்று நிற்கின்றன. அங்கே நாம் வேர்விட்டு நிற்கின்றோம். நம் வேர்கள் கசப்பானதாக, பார்ப்பதற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் அவை இல்லையேல் நாம் இல்லை. அவற்றால் நாம் வந்தோம், வளர்ந்தோம், ஊட்டம் பெற்றோம், நலம் பெற்றோம். நம் குடும்பம் என்னும் வேர்களுக்காகவும், நாம் வளர, வளர நம்மை அணைத்துக்கொண்ட குடும்பங்களுக்காகவும், நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களுக்காகவும், இறைச்சமூகம் என்னும் குடும்பங்களுக்காக நன்றி கூறுவோம் இன்று. தொடர்ந்து, நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் நாம் கற்றுக்கொண்ட அல்லது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பண்பை எடுத்து அதை நம் வாழ்வாக்க முயல்வோம். அப்பாவின் நேர்மை அல்லது கடின உழைப்பு, அம்மாவின் தியாகம் அல்லது கனிவு, சகோதரியின் குழந்தை உள்ளம் அல்லது துடிப்பு, சகோதரரின் உற்சாகம் அல்லது துணிச்சல் என எண்ணிப் பார்த்தல் சிறப்பு.

(ஆ) வலுவற்ற நிலையில் தாங்குவோம்

நம் அப்பா மற்றும் அம்மாவின் வலுவின்மை எது என்று சற்று நேரம் யோசிப்போம். நோய், முதுமை, ஆற்றல் இழப்பு, பொருளாதார ஏழ்மை, தனிமை, வறுமை, சோர்வு இப்படி பல்வேறு துன்பங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவற்றை அவர்கள் பெரும்பாலும் நம்மிடம் காட்ட மாட்டார்கள். அவற்றை நாம் எண்ணிப்பார்த்து அவர்களுக்கு நம் உடனிருப்பை உறுதி செய்தல் சிறப்பு.

(இ) இறைமையக் குடும்பம்

எல்லாவற்றிலும் இறைவன் மட்டுமே நம் சிந்தனையில் இருந்தால், நாம் ஒருவர் மற்றவரை அன்புடனும் நடத்தி, பணிவுடனும், பரிவுடனும் வழிநடப்போம். 

மனிதர்கள் குடும்பங்களை உருவாக்கலாம். இறைவன் மட்டுமே திருக்குடும்பத்தை உருவாக்கின்றார்.
ஆகையால்தான், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் குடும்பத்தில் ஆசீராகப் பொழிகிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்:

'உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர். நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! 
உம் இல்லத்தில் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்.
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பர்!' (திபா 128)

Friday, December 25, 2020

புனித ஸ்தேவான்

இன்றைய (26 டிசம்பர் 2020) திருநாள்

புனித ஸ்தேவான்

திருஅவை வரலாற்றின் முதல் மறைசாட்சி என அழைக்கப்படும் புனித ஸ்தேவானின் (புனித முடியப்பர்) திருநாளை நாம் கொண்டாடுகின்றோம். முதலில் தெரிவு செய்யப்பட்ட ஏழு திருத்தொண்டர்களில் இவரும் ஒருவர்.

இவரின் மறைசாட்சியத்திற்கும் இயேசுவின் இறப்பிற்கும் நிறைய தொடர்பு இருப்பதுபோல லூக்கா பதிவு செய்கின்றார்.

இந்த நிகழ்வில் புனித பவுலும் இடம்பெறுகிறார். ஸ்தேவானைக் கொலை செய்தவர்கள் சவுலிடம் தன் ஆடைகளை ஒப்படைக்கின்றனர்.

அவர் ஆடைகளைக் காவல்காத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண்டவர் அவரைக் காத்துக்கொண்டிருக்கின்றார்.

தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு புனித ஸ்தேவான் துணிச்சல் கொண்டிருந்தது எப்படி?

அவருடைய மனவுறுதி மற்றும் மனத்திடம்.

Thursday, December 24, 2020

தீவனத் தொட்டியில் குழந்தை

கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவு)

எசாயா 9:2-4, 6-7 தீத்து 2:11-14 லூக்கா 2:1-14

தீவனத் தொட்டியில் குழந்தை

'ஆதாமை, ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டினார். கண்ணீரும் கவலையுமாய் சற்றுத் தூரம் கடந்து திரும்பிப் பார்க்கும் ஆதாம், ஏதேன் தோட்டத்தை ஏக்கத்தோடு பார்க்கிறார். ஆதாமை வெளியே அனுப்பியதில் கடவுளுக்கும் சற்றே வருத்தம்.

'நான் கழுதையுடன் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டுமோ?

என் குழந்தையின் வாய், கழுதைகள் உண்ணும் தீவனத் தொட்டியில் பட வேண்டுமோ?'

என்று கேட்டுக்கொண்டே ஆதாம் நகர்கின்றார். 

அவரின் பார்வையிலிருந்து தோட்டமும் மறைகின்றது, கடவுளும் மறைகின்றார்.'

ரபிக்களின் மித்ராஷ் இலக்கியம் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது.

'காளை தன் உடைமையாளனை அறிந்துகொள்கிறது. கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றது. ஆனால், இஸ்ரயேலோ என்னை அறிந்துகொள்ளவில்லை. என் மக்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை' (எசா 1:3) என்று எசாயா இறைவாக்கினர் ஆண்டவராகிய கடவுளின் சோக வார்த்தைகளைப் பதிவுசெய்கின்றார்.

ஒரு பக்கம், கழுதையின் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டிய கட்டாயம் ஆதாமுக்கு.

இன்னொரு பக்கம், தீவனத் தொட்டி இருந்தும் அதன் பக்கம் திரும்பாத இறுமாப்பு இஸ்ரயேலுக்கு.

இந்த இரண்டுக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கின்றது 'தீவனத் தொட்டியில் பொதிந்து வைக்கப்பட்ட குழந்தை.'

இயேசுவின் பிறப்பு நிகழ்வை வேகமாகப் பதிவு செய்யும் லூக்கா, 'தீவனத் தொட்டி' என்று வந்தவுடன், நிறுத்தி நிதானமாக மூன்று முறை அதை எழுதுகின்றார். 

கடவுள் நம் உணவாக மாறுகிறார். இன்று!

இரண்டாவதாக, 'விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை' என்ற வார்த்தையில் மானுடத்தின் மறுப்பு மட்டுமல்லாமல், யோசேப்பின் எளிமையும் புரிகிறது. யோசேப்பு, தன் சொந்த ஊருக்கு வருகின்றார். சொந்த ஊரில் அவருக்கு வீடில்லை. அல்லது அவரைச் சொந்தம் என்று வைத்துக்கொள்ள யாரும் இல்லை. தனக்கென அவர் அங்கே எந்த இல்லத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. 

மூன்றாவதாக, 'நடக்கின்றவர்கள்' மெசியாவைக் கண்டுகொள்கின்றனர்.

முதல் வாசகத்தில், காரிருளில் நடந்த மக்கள் பேரொளியைக் காண்கின்றனர். பெத்லகேம் நோக்கி நடந்த யோசேப்பு மெசியா பிறப்பதைக் காண்கின்றார். மேலிருந்து கீழ் நடந்து வந்து தூதரணி மெசியாவின் செய்தியை அறிவிக்கின்றது.

ஆக, நடப்பவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்

Wednesday, December 23, 2020

விண்ணிலிருந்து விடியல்

இன்றைய (24 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 1:67-79)

விண்ணிலிருந்து விடியல்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சக்கரியாவின் பாடலைக் கேட்கின்றோம்.

ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் மௌனமாக இருந்தவரின் நா கட்டவிழ்க்கப்பட்டதும் மிகவும் உற்சாகமாகப் பாடுகிறார் சக்கரியா.

'விண்ணிலிருந்து விடியல்' என்னும் அழகான உருவகத்தின் வழியாக இயேசுவின் வருகையைச் சொல்கின்றார் சக்கரியா. மேலும், கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் இந்நிகழ்வு அரங்கேறுகிறது.

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கான தொடக்க உருவகமாக இது இருக்கட்டும்.

Tuesday, December 22, 2020

உம் விருப்பம் என்ன?

இன்றைய (23 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 1:57-66)

உம் விருப்பம் என்ன?

இன்றைய நற்செய்தியின் கதைக்களம் சக்கரியா-எலிசபெத்தம்மாளின் வீடு. திருமுழுக்கு யோவான் பிறந்துவிட்டார். அவருக்குப் பெயரிடும் சடங்கு நடைபெறுகிறது. பெயரிடுதலோடு இணைந்து விருத்தசேதனமும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் மகிழ்ச்சி மேலோங்கி நிற்கிறது.

எலிசபெத்து மற்றும் சக்கரியா தம்பதியினரின் சுற்றத்தார் நமக்கு ஆச்சர்யத்தக்க வகையில் இருக்கிறார்கள். எப்படி?

தங்கள் சுற்றத்தில் உள்ள வயது முதிர்ந்த தம்பதியினருக்கு ஆண்டவர் அருள்கூர்ந்ததை எண்ணி மகிழ்கின்றனர். வழக்கமாக, நம் நலன் கண்டு நம் சுற்றம் மகிழ்வதில்லை. ஒருவேளை நம் துன்பம் கண்டு அழும். ஆனால், நலன் கண்டு மகிழ்தல் மிகவும் அரிது.

இவர்கள் செய்கின்ற அடுத்த காரியம் இன்னும் பாராட்டுதற்குரியது.

வாய் பேச மூடியாத ஊமையிடம் போய், 'உம் விருப்பம் என்ன?' எனக் கேட்கின்றனர்.

கடவுளால் சபிக்கப்பட்டவர் சக்கரியா என்று அவர்கள் அவரை ஒதுக்கவில்லை.

'அவன் ஊமை! பேச மாட்டான்! நாம முடிவெடுப்போம்!' என அவர்கள் அவரை நிராகரிக்கவில்லை.

மாறாக,

'உம் விருப்பம் என்ன?' எனக் கேட்கின்றனர்.

நம் இல்லங்களில் உள்ள குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்கள், கையறுநிலையில் உள்ளவர்கள், இயலாதவர்கள், மனம் அல்லது உடல்நலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை நாம் எப்படிப் பார்க்கிறோம்?

அவர்கள் அனைவரும் நம் தயவில் அல்லது கருணையில் இருப்பவர்கள் என்று நாம் அவர்களை ஒதுக்கிவிடுகிறோமா?

அல்லது

'உம் விருப்பம் என்ன?' என்று அவர்களைக் கேட்கின்றோமா?

எலிசபெத்தின் சுற்றத்தார் ஏறக்குறைய சக்கரியாவுடன் இருந்து ஊமை பாஷை பழகிவிட்டனர். எல்லாமே பழக்கம்தான். இல்லையா?

ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டுகிறார் என்றால், அதே இரக்கத்தை நாம் மற்றவர்களுக்குக் காட்டும்போதுதான் அந்த வட்டம் நிறைவடையும்.

Monday, December 21, 2020

இன்னும் சிறு பையனாகவே

இன்றைய (22 டிசம்பர் 2020) முதல் வாசகம் (1 சாமு 1:24-28)

இன்னும் சிறு பையனாகவே

விவிலியத்தில் நாம் காணும் பெண்கள் சிலர் கடவுளையே கடன்பட வைத்தவர்கள். அப்படிப்பட்ட வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் சாமுவேலின் அம்மா அன்னா.

நிறைய ஆண்டுகள் கடந்து, நிறையக் கண்ணீர் வடித்து, நிறைய அவமானங்கள் சுமந்து குழந்தை பெற்ற அன்னா, பிறந்த குழந்தை பால்குடி மறந்தவுடன் அவரை அள்ளிக்கொண்டு போகிறார் அன்னா. 

அன்னா கோவிலுக்குப் போகும் ஸ்டைல் நம்மை வியக்க வைக்கிறது.

இடுப்பில் குட்டிக் குழந்தை சாமுவேல், தலையில் ஒரு மரக்கால் மாவு, தோளின் குறுக்கே தொங்கும் திராட்சை இரசம், இன்னொரு கையில் மூன்று காளை மாடுகளை இணைத்துப் பிடித்த ஒரு கயிறு. வேகமாக நடக்கிறார் அன்னா. மலையில் உள்ள ஆலயத்திற்கு ஓட்டமும் நடையுமாக, மூச்சிரைக்கப் போகிறார்.

'சாமுவேல் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்' - ஆனால் அன்னாவின் மனம் கழுகுபோலப் பறந்தது.

அதற்குக் காரணம், அன்னாவின் நிறைவு மனப்பாங்கு (abundance mindset or mentality).

இந்த மனப்பாங்கு வந்துவிட்டால், எல்லாமே எளிதாகிவிடும்.

கையை நீட்டி மகனைப் பெற்றுக்கொண்ட அன்னா, அப்படியே கையை விரித்துக் கொடுக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் அன்னை கன்னி மரியாளின் புகழ்ப்பாடலை வாசிக்கின்றோம்.

எலிசபெத்தம்மாள் மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளை வாழ்த்துகிறார்.

இன்று நாமும் கடவுளிடமிருந்து நிறைய அருள்கொடைகளைப் பெறுகின்றோம். நாம் அவற்றுக்காக நன்றி செலுத்துகின்றோமா? அவரைப் பாடுகின்றோமா? அவருக்கு அள்ளிக் கொடுக்கின்றோமா?

'நிறைவு மனப்பாங்கு' பெறுவது எப்படி?

1. அதிகமாக நன்றி சொல்வதை நம் வழக்கமாக்கிக் கொள்வது. 

நாம் கடவுளிடம் பெற்ற நன்மைகளுக்காக, மற்றவர்களிடம் பெற்ற நன்மைகளுக்காக, நமக்கு நாமே செய்த நன்மைகளுக்காக என நன்றி சொல்லிக் கொண்டே இருந்தால், அது நாளும் நம் வழக்கமாகிவிடும்.

2. நேர்முகமான பார்வை கொண்ட மக்களை அருகில் வைத்துக்கொள்வது

நம்மைச் சுற்றி இருக்கும் நபர்கள் நம் மனப்பாங்கை நிறையவே பாதிக்கிறார்கள். நேர்முகமான பார்வை கொண்ட மனிதர்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது எதிர்மறையான மனிதர்களைத் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

3. நிறைவான வாழ்க்கை வாழ்வது

சரியான இலக்குகளை நிர்ணயத்து, அவற்றை நோக்கி விடாமுயற்சியுடன் பயணம் செய்வது. அன்றாட இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்றுவது. சின்னச் சின்ன வாக்குறுதிகள் கொடுத்தாலும் அதில் பிரமாணிக்கமாக இருப்பது. எடுத்துக்காட்டாக, 5 மணிக்கு வேக்-அப் டைமர் வைத்தால் சரியாக 5 மணிக்கு எழுந்துவிடுவது.

4. நம் வலிமையின்மேல் கவனம் செலுத்துவது

நம் வலுவின்மையைப் பற்றி அதிகம் கவலைப்படக்கூடாது. நம் வலிமை என்று நாம் எதை உணர்கிறோமோ அதில் கவனம் செலுத்துவது.

5. நாம் விரும்புவதை அதிகம் செய்வது

அல்லது செய்வது அனைத்தையும் விரும்பி, அல்லது முழு மனத்துடன் செய்வது.

6. புதிதாக்கிக் கொண்டே இருத்தல்

உடல், உள்ளம், ஆன்மா என அனைத்துக்கும் புத்தாக்கம் அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு, வாசித்தல் அல்லது நல்லோர் சொல் கேட்டல் உள்ளத்துக்கு, இறைவார்த்தை மற்றும் தியானம் ஆன்மாவுக்கு.

நிறைவு மனப்பான்மை வந்தால் நம் மனம் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருக்கும் - மரியா போல!

அந்த மனப்பான்மை கடவுளையும் கடனாளியாக்கிவிடும் - அன்னா போல!

Sunday, December 20, 2020

என் காதலர் குரல் கேட்கின்றது

இன்றைய (21 டிசம்பர் 2020) முதல் வாசகம் (இபா 2:8-14)

என் காதலர் குரல் கேட்கின்றது

இன்று இரண்டு முதல் வாசகங்கள் கொடுக்கப்பட்டு, நாம் ஒன்றைத் தெரிவுசெய்துகொள்ளுமாறு திருவழிபாடு நம்மை அழைக்கின்றது. இரண்டு வாசகங்களின் மையமாக இருக்கின்ற செய்தி மகிழ்ச்சிதான். இனிமைமிகு பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் ஒரு காதலியின் மகிழ்ச்சியையும், செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் ஒரு மகளின் மகிழ்ச்சியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது. காதலியின் மகிழ்ச்சியையே நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இதே வாசகம் புனித மகதலா மரியாளின் திருநாளன்றும் நமக்கு முதல் வாசகமாக வருகிறது.

'என் காதலர் குரல் கேட்கிறது. இதோ, அவர் வந்துவிட்டார்!'

'நாம் சந்திக்கும் அனைவருமே நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றனர் - சிலர் வரும்போது, சிலர் போகும்போது' என்பது ஆஸ்கர் ஒயில்ட் அவர்களின் வாக்கியம்.

ஒருவரை நமக்குப் பிடிக்கிறதா அல்லது இல்லையா என்பதை அவருடைய உடனிருப்பு நம்மில் ஏற்படுத்தும் உணர்வை வைத்துச் சொல்லிவிடலாம். இல்லையா? சில நேரங்களில் மட்டுமே மனம் புத்தன் போல எவ்விதச் சலனமின்றி இருக்கும். 

துறவி ஒருவர் ஆற்றின் நடுவில் ஒரு படகில் அமர்ந்தவாறு தியானம் செய்துகொண்டிருந்தார். அந்நேரம் திடீரென அவருடைய படகில் இன்னொரு படகு வந்து மோதுகிறது. 'யார் அது கண் தெரியாதவன்?' எனக் கோபித்துக்கொண்டே கண்களைத் திறக்கின்றார். மோதிய படகில் யாரும் இல்லை. பரிசல் ஒன்று காற்றில் அடித்துக்கொண்டே வரப்பட்டு இவருடைய படகில் மோதியிருக்கிறது. 'வெற்றுப் படகையா திட்ட முடியும்?' எனத் தனக்குள் சிரித்துக்கொண்டே தியானத்தைத் தொடர்கின்றார்.

இதுதான் புத்தன் மனநிலை. நம்மேல் வந்து மோதுகின்ற வெற்றுப் படகுகளைத் திட்டியே பல நாள்கள் நம் மகிழ்ச்சியை, அமைதிiயை, மதிப்பை இழந்திருக்கின்றோம்.

காதலனின் வருகை காதலிக்கு மகிழ்ச்சி தருகிறது.

வருகின்ற காதலன் உடனே வந்து காதலி முன் நிற்கவில்லை. மாறாக, அவனுடைய வருகையே சின்னச் சின்ன விளையாட்டாக இருக்கிறது: 'மதிற்சுவருக்குப் பின் நிற்கின்றார். பலகணி வழியாகப் பார்க்கின்றார். பின்னல் தட்டி வழியாக நோக்குகின்றார்.' காதலன் இப்படியாக விளையாடியிருக்கலாம். அல்லது 'இப்படி எல்லாம் தன் காதலன் வந்து நின்று தனக்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்க மாட்டானா?' என்ற ஒரு விஷ் ஃபுல்ஃபில்மென்ட் கொண்டிருக்கலாம். 'சர்ப்ரைஸ்க்கும்' 'ஷாக்கிற்கும்' சின்ன வித்தியாசம்தான். மகிழ்ச்சி விளைந்தால் சர்ப்ரைஸ்! துன்பம் விளைந்தால் ஷாக்!

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45), காதலன் மற்றும் காதலி யார் என்பதை நமக்குச் சொல்கிறது. ஒரு பக்கம் எலிசபெத்தாம்மாளைக் காதலி என்றும், மரியாவை காதலன் என்றும், இன்னொரு பக்கம் வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவானைக் காதலி என்றும், இயேசுவைக் காதலன் என்றும் உருவகித்துக்கொள்ள முடியும்.

மரியா எலிசபெத்தைக் காணப் புறப்பட்டுச் செல்கின்றார். மரியாவின் செல்கை மூன்று கூறுகளை உள்ளடக்கியுள்ளது: (அ) அவர் உடனே புறப்படுகின்றார், (ஆ) அவர் எந்தவொரு முன்னறிவிப்பும் தராமல் புறப்படுகின்றார், (இ) நீண்ட பயணமாக இருந்தாலும் புறப்படுகின்றார்.

யூதேய மலைநாட்டிலிலுள்ள எலிசபெத்தின் இல்லம் அமைந்த ஊர் அய்ன் கரிம் என்று மரபுவழியாக அறியப்படுகிறது. கலிலியேப் பகுதியிலிருந்து, சமாரியப் பகுதி தாண்டி, யூதேயா வருகின்றார் மரியா. இயேசுவின் இறையாட்சிப் பணியின் உருவகமாகவும் இது இருக்கிறது எனலாம். இயேசுவும் தன் பணியைக் கலிலேயாவில் தொடங்கி யூதேயாவில் நிறைவு செய்கின்றார். மரியா ஏறக்குறைய 150 கிமீ தூரம் பயணம் செய்திருக்க வேண்டும். பயணத்தை நிறைவு செய்ய அவருக்கு 5 நாள்கள் ஆகியிருக்கும்.

எதற்காக இவ்வளவு தூரப் பயணம்?

முதிர்கன்னியான எலிசபெத்துக்கு உதவி செய்யவா? அல்லது

வானதூதர் அறிவித்தவாறே எலிசபெத்து கருத்தரித்தார் என்பதை உறுதி செய்யவா? அல்லது

தான் கருவுற்றிருப்பதை தன் கணவர் யோசேப்பிடம் எப்படிச் சொல்வது என்று ஆலோசனை கேட்கவா? அல்லது

தன் குழப்பத்தை, அச்சத்தை, கலக்கத்தைப் பகிர்ந்துகொள்ள ஒரு தோள் தேவை என்ற தேடலிலா? அல்லது

'மெசியா வரப்போகிறார்!' 'அவர் என் வயிற்றில் பிறக்கப்போகிறார்!' என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ளவா?

மரியாவின் பயணத்துக்கான காரணத்தை லூக்கா பதிவு செய்யவில்லை. 

செக்கரியாவின் வீட்டை அடைந்தவுடன் மரியா அவரை வாழ்த்துகிறார். வழக்கமாக யூதர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும், 'ஷலோம்!' என்ற சொல்லால் வாழ்த்தியிருக்கலாம். அந்த வாழ்த்தோடு இணைந்து அந்த அற்புதம் நடக்கிறது.

'ஷலோம்!' என்று ஸ்விட்ச்சை அழுத்த, 'காலிங் பெல்' தன் வயிற்றில் அடிப்பதை உணர்கின்றார் எலிசபெத்து. கதவு நோக்கி ஓடி வருகிறார். ஆச்சரியம்! மரியா என்னும் இளவல் அங்கே நிற்கின்றார். 'மிரியம்! என்னடா இங்க? எப்படி இவ்வளவு தூரம்? யாரும் உடன் வரவில்லையா?' என்று பரஸ்பர கேள்விகள் கேட்பதற்குப் பதிலாக, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' என்று உச்சி முகர்கின்றார். அந்த நிகழ்வை நாம் நம் கண்முன் நடப்பது போல யோசித்தால் நம் மெய் சிலிர்க்கிறது. தனக்கு முன் வந்து நிற்கின்ற ஒரு குட்டிப் பூவில் ஆண்டவரின் தாயைக் காண எலிசபெத்தால் எப்படி முடிந்தது?

நிற்க.
மகிழ்ச்சி என்பது இங்கே ஒரு எதார்த்தமான, இயல்பான ஒன்றாக நடந்தேறுகிறது. என்ன ஆச்சர்யம்! மகிழ்ச்சிக்காக நாம் எந்த முயற்சியும் செய்யவில்லை. அது தானாகவே நடந்தேறுகிறது.

நம் கதவருகில் வந்து நிற்கும் அனைவரையும், 'என் ஆண்டவரின் தாய், என் ஆண்டவரின் தந்தை' என்று 'கடவுள்தாங்குபவராக' பார்த்தால் அங்கே மகிழ்ச்சி சாத்தியம்.

அல்லது மரியா போல வாய் நிறைய மற்றவர்களை வாழ்த்தினால் அங்கே மகிழ்ச்சி சாத்தியம்.

காதலன் குரல் கேட்டால் மகிழ்ச்சி. கடவுளே அந்தக் காதலன் என்றால் மகிழ்ச்சி நிரந்தரம்.