'இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர்.
முதன்மையானோர் கடைசியாவர்' என்றார். (மத்தேய 20:16)கடந்த புதன்கிழமையோடு என் முதுகலைப்படிப்பு முடிந்தது. எபிரேயம், கிரேக்கம், அரமேயம், இலத்தீன், இத்தாலியன் என்று ஓடிக்கொண்டிருந்துவிட்டு இந்த ஒரு வாரம், ஒரு வருடம் போல இழுக்கிறது. செய்வதற்கு ஒன்றுமில்லையென்றால் நாளும் நீண்டுவிடுகிறது.
முதுகலைப்படிப்பின் நிறைவாக ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆய்வுத்தாள் எழுதி அதை வழிநடத்தும் பேராசிரியர்முன் விவாதிக்க வேண்டும்.
நான் எழுதி, விவாதித்த ஆய்வுத்தாள் பற்றி பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
மத்தேயு 20:1-16. இதுதான் நான் என் ஆய்வுக்காக எடுத்த பகுதி. இது ஒரு உவமை. மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரும் உவமை. இது ஒரு சிக்கலான உவமை. ஏனென்றால், மனித கணிதத்திற்கு எதிராகச் செல்லும் இதன் நிறைவு. 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும், ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கும் உவமை இது. வழக்கமாக இதை 'திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமை' என்று அழைக்கிறோம். ஆனால், நான் 'கணிதம் தெரியாத ஒரு ஆண்டவரின் கதை' (Parable of an Illogical Lord) என்று பெயரிட்டேன்.
உவமை என்று சொல்லும்போது அதை பல நிலைகளில் ஆய்வு செய்யலாம். இதை இயேசுதான் சொன்னாரா என்று வரலாற்று ஆராய்ச்சி செய்யலாம். அல்லது உவமை எப்படி கருத்தை சொல்கிறது என்று மொழியியில் ஆராய்ச்சி செய்யலாம். அல்லது உவமையில் வரும் சமூக நடைமுறை குறித்து சமூகவியல் ஆராய்ச்சி செய்யலாம். அல்லது உவமையின் வழியாக இயேசு சொல்ல வரும் இறையியல் செய்தி என்ன என்று இறையியல் ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நான் செய்ததோ, உவமையை வெறும் கதையாக பார்ப்பது. இதை ஆங்கிலத்தில் Narrative Analysis or Narrative Criticism என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு கதைக்கும் ஒரு தளம் உண்டு. அந்தத் தளத்தைப் புரிந்து கொண்டால் கதை புரிந்துவிடும். தளம் ஐந்து காரணிகளைக் கொண்டது: (1) தொடக்கம், (2) பிரச்சினை, (3) திருப்புமுனை, (4) தீர்வு, (5) முடிவு.
உதாரணத்திற்கு, எந்திரன் திரைப்படம் எடுத்துக்கொள்வோம். (1) எந்திரன் உருவாகிறான் - தொடக்கம், (2) ஒரு பெண், இரண்டு காதல். மனித காதல். எந்திரக் காதல் - பிரச்சினை, (3) பகைவன் கையில் எந்திரன் - திருப்புமுனை, (4) எந்திரனை செயலிழக்கச் செய்தல் - தீர்வு, (5) தீமை அழிகிறது, நன்மை வெல்கிறது - முடிவு.
இந்தக் காரணிகளை எல்லாக் கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாமா?
நாளை பார்ப்போம்.
தந்தையே! தங்களது ஆய்வுத்தாளுக்குறிய பகுதி மத் 20:1-16 தங்களுக்கு மட்டுமல்ல என் போன்றவர்களுக்கும் கூட சிக்கலான பகுதிதான்.அப்பகுதிக்கு நீங்கள் ' கணிதம் தெரியாத ஒரு ஆண்டவரின் கதை' எனப்பெயரிட்டிருப்பது மிகச் சரியே.மற்றபடி இந்த ஆய்வு, உவமை, காரணி எல்லாம் என் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். வரும் நாட்களில் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
ReplyDeleteI also interest to know the hidden meaning of the parable
ReplyDelete