Tuesday, November 30, 2021

மலையில் ஆண்டவர்

நாளின் (1 டிசம்பர் 2021) நல்வாக்கு

மலையில் ஆண்டவர் 

தொடக்கநூலில், ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைச் சோதிக்கும் நிகழ்வில் (தொநூ 22), 'யாவே யீரே' ('மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்') என்று ஆண்டவருக்குப் பெயரிட்டு அழைக்கின்றார். 'மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்ளும் விதம்' பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

'படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்' என்ற துள்ளல் வார்த்தைகளோடு முதல் வாசகம் தொடங்குகிறது (காண். எசா 25:6-10). 'படைகளின் ஆண்டவர்' என்று ஆண்டவரின் பெயரைக் குறிப்பிடக் காரணம், இஸ்ரயேலை ஆண்டவராகிய கடவுள் எதிரிகளின் படைகளளிலிருந்து விடுவிப்பார் என்னும் நம்பிக்கை தருகிறது. 'இந்த மலை' என்பது எருசலேம் அல்லது சீயோன் மலையைக் குறிக்கிறது. தொடர்ந்து, விருந்தில் பரிமாறப்படும் உணவுப் பொருள்களைப் பட்டியலிடுகிறார் எசாயா. அடுத்ததாக, 'மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார் ... துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். சாவை ஒழித்துவிடுவார்.' 'முக்காடு,' 'துன்பத் துகில்' என்னும் இரு சொற்களும் சாவிற்காக மக்கள் புலம்புவதைக் குறிக்கின்றன. இஸ்ரயேலின் சமகாலத்தில், இறப்புக்கான புலம்பல் நேரத்தில் மக்கள் தங்கள் முகங்களை மூடிக்கொள்வது வழக்கம். நம் ஊரில் இறந்தவரின் வீட்டில் உள்ள ஆண்கள் மொட்டையெடுத்துக்கொள்வதுண்டு. ஒரு வீட்டில் 'சேதம்' (இதுவே மங்கலமாக, 'கேதம்' என்று சொல்லப்படுகிறது) நடந்தது என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு இந்த மொட்டை அடையாளமாக இருக்கிறது. அது போலவே இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் முகங்களை முக்காடிட்டு மறைத்துக்கொள்வதும் மற்றவர்களுக்கான அடையாளமாக இருந்தது. 'முக்காடு' அகற்றப்படும் என்று சொல்வதன் வழியாக ஆண்டவராகிய கடவுள் இறப்பு என்னும் எதார்த்தத்தை அகற்றுவதாக முன்மொழிகின்றார். இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்லாமல் உலகின் அனைத்து மக்களும் சாவிலிருந்து விடுதலை பெறுவர்.

ஆக, 'உணவு,' 'வாழ்வு' என்னும் இரு கொடைகளை கடவுள் மலையின்மேல் அளிக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 15:29-37), இயேசு மலையின்மீது ஏறி அமர, பெருந்திரளான மக்கள் அவரிடம் வருகின்றனர். முந்தையதொரு நிகழ்வில், இயேசு மலைமீது ஏறி அமர்ந்தபோது (காண். மத் 5:1), பெருந்திரளான மக்கள் அவரிடம் வர, அவர் திருவாய் மலர்ந்து கற்பிக்கின்றார். இங்கே, இயேசு கற்பிப்பவராக அல்லாமல், செயலாற்றுபவராக முன்வைக்கப்படுகின்றார். ஏனெனில், மலையில் ஏறி வருகின்ற பெருந்திரளான மக்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர்களையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்க்கின்றனர். இவ்வார்த்தைகளைக் கற்பனை செய்து பார்க்கும்போது நம்மை அறியாமல் ஏதோ ஒரு சோகம் பற்றிக்கொள்கிறது. தங்களுடைய வலுவற்ற நிலையிலும், தங்களுக்கு இருக்கின்ற ஒரே துணை இயேசுதான் என்ற நிலையிலும், இயேசுவிடம் சென்றால் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும்தான் அவர்கள் வலி பொறுத்து, மூச்சிரைக்க மலைமேல் ஏறி வருகின்றனர். இவர்களை உடன் நடத்தி வந்த மக்கள் கூட்டத்தினரும் பாராட்டுக்குரியவர்கள். 'வா! கண்டிப்பா உனக்கு நலம் கிடைக்கும்!' என்று அவர்கள் தங்கள் நண்பர்களை, உறவினர்களை அழைத்துவந்திருப்பர். அவர்கள் அனைவருக்கும் நலம் தருகின்றார் இயேசு. தொடர்ந்து, மக்கள் அனைவரையும் பார்த்து, 'நான் இவர்கள்மேல் பரிவு கொள்கிறேன். இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட நான் விரும்பவில்லை' எனச் சொல்கின்ற இயேசு, ஏழு அப்பங்களைப் பகிரச் செய்து அவர்களின் பசியைப் போக்குகின்றார். மக்கள் உண்டது போக, மீதியும் கிடைக்கிறது.

ஆக, 'உடல் நலம்,' மற்றும் 'உணவு' என்னும் இரு கொடைகளை இயேசு மலையின்மேல் தருகின்றார்.

இரு நிகழ்வுகளிலும் மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். முதல் வாசகத்தில், 'இவரே நம் கடவுள். இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்' என்று துள்ளிக் குதிக்கின்றனர். நற்செய்தி வாசகத்தில், மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர். இன்றைய பதிலுரைப்பாடலில், தன் ஆண்டவரை ஆயர் எனக் கண்டுகொள்கின்ற தாவீது (காண். திபா 23), 'ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்' என அக்களிக்கின்றார்.

இறைவனின் திருமுன்னிலையில் 'உணவு', 'உடல்நலம்,' மற்றும் 'வாழ்வு' ஆகியவை கிடைக்கின்றன. இறைவன் இவற்றை இலவசமாகவும், வியத்தகு முறையிலும், எதிர்பாராத விதத்திலும் தருகின்றார். 'மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்பது பல நேரங்களில் நம் வாழ்வியல் அனுபவமாகவும் இருக்கின்றது. நாம் பெற்ற நலன்களுக்கு நன்றி கூறுகின்ற வேளையில், நலமற்றவர்களை மலையில் ஏற்றி வந்த நல்லுள்ளங்கள் போல மற்றவர்களுக்கு நம் கரம் நீட்டும்போது, 'நாமும் அவர்களைப் பார்த்துக்கொள்ளும் ஆண்டவர்போல' மாறுகின்றோம்!'

Monday, November 29, 2021

புனித அந்திரேயா

இன்றைய (30 நவம்பர் 2021) திருநாள்

புனித அந்திரேயா

புனித பேதுருவின் சகோதரர் என்று விவிலியத்திலும் வரலாற்றிலும் அறியப்படுகின்ற புனித அந்திரேயாவின் திருநாளை இன்று கொண்டாடுகின்றோம். 'அனெர்' அல்லது 'ஆன்ட்ரோஸ்' என்னும் கிரேக்கப் பதத்திலிருந்து இந்தப் பெயர் வருகின்றது. கிரேக்கத்தில் 'ஆண்மை' அல்லது 'பலம்' என்று பொருள். இவர் தமிழ் மரபில் 'பெலவேந்திரர்' என்றும் அழைக்கப்படுகின்றார்.

கீழைத் திருச்சபைகளில் 'முதலில் அழைக்கப்பட்டவர்' என்று இவர் அறியப்படுகின்றார். ஏனெனில், யோவான் நற்செய்தியின்படி இவரே இயேசுவின் முதற்சீடர். ஒத்தமைவு நற்செய்திகள் முதற்சீடர்களை, 'பேதுரு, அந்திரேயா' என்று இணைத்தே குறிப்பிடுகின்றன. கான்ஸ்தாந்திநோபில் திருஅவையின் முதல் திருத்தந்தை என்றும் கீழைத்திருஅவை இவரைக் கொண்டாடுகிறது. ஒத்தமைவு நற்செய்திகளின்படி இயேசுவால் அழைக்கப்படும்போது பேதுருவும் அந்திரேயாவும் மீன் பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். யோவான் நற்செய்தியில் அந்திரேயா திருமுழுக்கு யோவானின் சீடராக ஏற்கெனவே இருந்ததாக அறிமுகம் செய்யப்படுகின்றார். ஆங்கில 'எக்ஸ்' வடிவ சிலுவையில் இவர் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதாக மரபு சொல்கிறது. ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பாதுகாவலராக இவர் கொண்டாடப்படுகின்றார்.

முதல் வாசகத்தில் (உரோ 10:9-18) அனைவருக்கும் கிறிஸ்து அறிவிக்கப்பட்டதை உரோமைத் திருஅவைக்கு நினைவூட்டுகின்ற பவுல், 'நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?' எனக் கேட்கின்றார். இவ்வாறாக, 'மன்றாடுதல், நம்பிக்கை கொள்தல், அறிவிக்கப்படுதல், அனுப்பப்படுதல்' என்று அனைத்தையும் இணைக்கின்றார். திருத்தூதர்கள் இயேசுவால் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் செய்யும் நற்செய்திப் பணியின் பயனாக நம்பிக்கையாளர்கள் இறைவனோடு தங்களையே இணைத்துக்கொள்கின்றனர். இயேசுவுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துபவர்கள் திருத்தூதர்களே. 'நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன' என்று எசாயா இறைவாக்கு நூலை மேற்கோள் காட்டுகின்றார் பவுல். திருத்தூதர்கள் அறிவித்த ஒற்றைச் சொல்லும் காற்றோடு காற்றாகக் கலந்து அனைவரையும் சென்றடைகின்றது.

நற்செய்தி வாசகத்தில் (மத் 4:18-22), இயேசுவால் அழைக்கப்படுகின்ற அந்திரேயா (மற்றும் பேதுரு) தனது வலையை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றார். இயேசுவின் அழைத்தல் திடீரென வருகின்றது. மனிதர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அது வருகிறது. அழைப்பு வந்தவுடன் அழைக்கப் பெற்றவர்கள் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

யோவான் நற்செய்தியில் புனித அந்திரேயா பேதுருவையும் (யோவா 1:42), அப்பம் வைந்திருந்த இளவலையும் (6:9), கிரேக்கர்களையும் (12:22) இயேசுவிடம் கொண்டு வருகின்றார். இயேசுவின் உயிர்ப்புக்கு முன்னர் மற்றவர்களை இயேசுவிடம் கொண்டு வருகின்ற அந்திரேயா, உயிர்ப்புக்குப் பின்னர் இயேசுவை மற்றவர்களிடம் கொண்டு போகின்றார். சீடத்துவத்தின் இரு புலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார் அந்திரேயா.

'படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 19). நாம் நம்மை அறியாமலேயே நம் சொல்லாலும் செயலாலும் இயேசுவை அறிவித்துக்கொண்டே இருக்கின்றோம். இந்த அறிவித்தல் உலகெங்கும் சென்றுகொண்டே இருக்கின்றது. திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அழைப்பை உணர்ந்து, சின்னச் சின்ன வழிகளிலும் நற்செய்தி அறிவித்தால் எத்துணை நலம்!

Sunday, November 28, 2021

வார்த்தையின் ஆற்றல்

நாளின் (29 நவம்பர் 2021) நல்வாக்கு

வார்த்தையின் ஆற்றல்

'வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவான் 1:14) என்னும் மனுவுருவாதல் மறைபொருளை நினைவுகூரும் திருவருகைக்காலத்தில், 'கடவுளின் வார்த்தை' கொண்டிருக்கின்ற ஆற்றலை நமக்கு எடுத்துரைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

முதல் வாசகம் (எசா 2:1-5) எசாயா நூலின் ஆறுதல் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களோடு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமில்லாமல் நடந்துகொண்டபோது அவர்களை எதிரிகள் வழியாகத் தண்டிக்கின்றார். நீதியோடு தண்டித்த அவரே, இப்போது இரக்கத்துடன் எருசலேமையும் இஸ்ரயேல் மக்களையும் மேலான நன்னிலைக்குக் கொண்டு வருகின்றார். அழிவுக்கும், அடக்குமுறைக்கும் பயன்பட்ட வாள்கள் ஆக்குவதற்கும், வளர்ப்பதற்கும் பயன்படும் கலப்பைக் கொழுக்களாகவும், ஈட்டிகள் அறுவடைக்கான கருக்கரிவாள்களாகவும் மாறுகின்றன. ஓர் இனம் இன்னொரு இனத்தை அழிப்பதற்கு முயற்சிக்காது. அதாவது, மொத்தத்தில் எருசலேம் தன் பெயருக்கேற்ற 'அமைதியை' பெறும். விதை விதைப்பதற்கு முன்னர் பயன்படும் கலப்பை, அறுவடைக்குப் பயன்படும் கருக்கரிவாள் என்னும் இரு உருவகங்கள் வழியாக, நிலம் பெறுகின்ற அமைதியையும், மக்கள் பெறுகின்ற மறுவாழ்வையும் எடுத்துரைக்கின்றார் எசாயா. இறுதியாக, 'யாக்கோபின் குடும்பத்தாரே' – ஏனெனில், யாக்கோபிலிருந்துதான் இஸ்ரயேல் இனம் உருவானது – என அழைத்து அவர்களின் வேர்களையும், மேன்மையையும் அவர்களுக்கு நினைவூட்டி, 'வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்' என அழைக்கின்றார்.

ஆக, ஆண்டவரின் வார்த்தை – உடன்படிக்கை - இஸ்ரயேல் மக்களுக்குப் புதுவாழ்வு தருகிறது.

இரண்டாம் வாசகத்தில் (மத் 8:5-11), நூற்றுவர் தலைவரின் பையனுக்கு நலம் தருகின்றார். 'ஐயா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் பையன் நலமடைவான்' என்று இயேசுவின் வார்த்தையின் ஆற்றலின்மேல் நம்பிக்கை வைத்து சரணாகதி அடைகின்றார் நூற்றுவர் தலைவர். இயேசு அவருடைய நம்பிக்கையைப் பாராட்டுவதோடு, தூரத்திலிருந்தே நலம் தருகின்றார். இயேசுவின் வார்த்தை நோயிலிருந்து நலத்திற்குப் பையனை அழைத்துச் செல்கிறது.

ஆக, இயேசுவின் வார்த்தை நலம் அல்லது புதுவாழ்வு தருகிறது.

'அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என நம்மை அழைக்கிறது பதிலுரைப் பாடல் (திபா 122).

தகுதியற்ற நம்மைத் தேடி வந்து மனுவுரு ஏற்றார் இறைவனின் வார்த்தை. அந்த வார்த்தை புதுவாழ்வும் நலமும் தருகிறது. அந்த வார்த்தையைத் தேடிச் செல்லும் நம் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.

இறைவனின் வார்த்தை ஆற்றல் கொண்டுள்ளது போல நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் ஆற்றல் உண்டு. ஆக, வார்த்தையானவர் நம் உதடுகளில் இருந்து நாம் பேசும் வார்த்தைகளைப் புனிதப்படுத்துவாராக. நம் செயலுக்கும் வார்த்தைக்கும் உள்ள நெருக்கத்தை அதிகரிப்பாராக. நாம் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் வார்த்தைகளைச் சொல்ல நம்மைத் தூண்டி எழுப்புவாராக!

Saturday, November 27, 2021

உம்மை நோக்கி என் உள்ளம்

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

I. எரேமியா 33:14-16      II. 1 தெசலோனிக்கர் 3:12-4:2      III. லூக்கா 21:25-28,34-36

உம்மை நோக்கி என் உள்ளம்

'மனித உறவுகள் தரும் இன்பப் பிணைப்பு, பிணைப்போடு வரும் பொறாமை, சந்தேகம், பயம், கோபம், மற்றும் சண்டை சச்சரவுகள், அறிவுக்கான தொடர்தேடல், தேடலின் இறுதியில் மிஞ்சும் விரக்தி, அடுத்தவரை மகிழ்வித்து அவர்தரும் புகழால் அடையும் களிப்பு, களிப்பு தரும் வெறுமை, பேருண்டி தரும் நிறைவு, நிறைவுக்குப் பின் வரும் வலி மற்றும் நோய், புலன்கள் தரும் மயக்கம், மயக்கத்தின்பின் வரும் குழப்பம், அமைதிக்கான தேடல், தேடலில் திசைமாறும் பயணங்கள்' என்று தன் வாழ்வைப் பின்நோக்கிப் பார்க்கின்ற அகுஸ்தினார், 'உமக்காகவே நீர் எங்களைப் படைத்துள்ளதால், உம்மில் அமைதி காணும் வரை எம் இதயம் அமைதி கொள்வதில்லை' எனச் சரணடைகின்றார் (காண். ஒப்புகைகள், புத்தகம் 1, பிரிவு 1). எதிரிகளாலும், உடல்நலக் குறைவாலும், உறவுச் சிக்கல்களாலும் துன்பத்துக்கு ஆளாகி, செல்லும் வழி அறியாது நிற்கின்ற தாவீது, 'ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்' (காண். திபா 25, பதிலுரைப்பாடல்) என்று தன்னையே ஆண்டவரிடம் சரணாகதி ஆக்குகின்றார்.

திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது: (அ) அவரது முதல் வருகையின் நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும்ளூ (ஆ) அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை விழிப்போடும், கவனமோடும்ளூ (இ) அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும், நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி பரிவோடும், பகிர்வோடும்.

இறைவாக்கு நூல்களில் எரேமியா மட்டுமே அழிவு மற்றும் ஆறுதலின் செய்திகளை இணைத்துத் தருகின்றார். 'தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்' என்று ஆண்டவராகிய கடவுள் எரேமியா வழியாக ஆறுதல் தருகின்றார் (காண். எரே 33:14-16, முதல் வாசகம்).  நாட்டில் அவர் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டி, யூதாவுக்கு விடுதலை தரும் நாளில், 'யாவே சித்கேனூ' ('ஆண்டவரே நமது நீதி') என்று எருசலேம் புதிய பெயரைப் பெறும். 'தளிர்' என்பது மெசியாவுக்கான உருவகம் (காண். செக் 3:8). யூதாவை 'செதேக்கியா' ('ஆண்டவர் நீதியானவர்,' 'ஆண்டவரே நீதி') மன்னன் ஆண்டபோது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஆண்டவரின் முதல் நீதி (செதேக்கியா) எருசலேமுக்கு தண்டனையைக் கொணர்ந்தது. இரண்டாம் நீதி (சித்கேனூ) இரக்கத்தைக் கொண்டு வருகிறது. தங்கள் அரசரை நோக்கி உயர்ந்த இஸ்ரயேல் மக்களின் உள்ளம் தண்டனை பெற்றது. ஆண்டவரை நோக்கி உயர்கின்ற உள்ளம் இரக்கம் பெறுகின்றது. 'நம் கிறிஸ்தவப் புரிதலின்படி, 'தாவீதின் நீதியின் தளிர்' இயேசுவைக் குறிக்கிறது. அவரில் கடவுளின் நீதி இரக்கமாகக் கனிந்தது. சக்கேயு, பாவியான பெண், நோயுற்றோர், பேய்பிடித்தோர், பசியால் வாடிய மக்கள் போன்றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி பரிவாகக் கனிகிறது' என்பது திருஅவைத் தந்தையர்களின் விளக்கம்.

புனித பவுல் தெசலோனிக்கியருக்கு எழுதிய முதல் திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இரண்டாம் வாசகம்  (காண். 1 தெச 3:12-4:2). தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான் (மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப 17:1). அந்த மூன்று நாள்களிலேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும், அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும் என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: '... நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!' உள்ளங்களை உறுதிப்படுத்தும் ஆண்டவர், 'அவர்கள் ஒருவர் மற்றவருக்காகக் கொண்டுள்ள அன்பை வளர்த்துப் பெருகச் செய்வாராக!' என்றும் பவுல் வாழ்த்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். 21:25-28, 34-36), மானிட மகனின் வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும், வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களை திருவெளிப்பாட்டு நடையில் பட்டியலிடும் இயேசு, 'உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது' என்ற அவசரமான ஆறுதலைத் தந்து, 'உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு காத்துக்கொள்ளவும்,' 'அந்நாள் திடீரென ஒரு கண்ணியைப் போல் சிக்க வைக்காதவாறு எச்சரிக்கையாக இருக்கவும்,' 'மானிட மகன்முன் நிற்க வல்லவராவதற்கு எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடவும்' அறிவுறுத்துகின்றார். 'இப்பொழுதே இன்பம்' என்று 'குடிவெறி', 'இனி ஒன்றும் இல்லை' என்று 'களியாட்டம்,' 'நேற்று இப்படி ஆகிவிட்டதே' என்று 'கவலை' நம்மை மந்த நிலைக்கும் தேக்கநிலைக்கும் இட்டுச் செல்கின்றன. 'கண்ணி' என்பது விவிலியத்தில் எதிரி அல்லது பகைவரின் சூழ்ச்சியின் உருவகம். 'இறைவேண்டல்' என்பது லூக்கா நற்செய்தியில் இறையுறவுக்கான முக்கியமான கூறு. ஒருவர் கொண்டிருக்கிற விழிப்புநிலையில்தான் அது சாத்தியமாகிறது. இறைவேண்டலில் நம் உள்ளம் ஆண்டவரை நோக்கி எழுகின்றது.

ஆக, ஆண்டவர் தருகின்ற நீதியை நோக்கி எருசலேமும், அன்பை நோக்கி தெசலோனிக்கத் திருஅவையும், மீட்பை நோக்கி நாமும் நம் உள்ளங்களும் உயர வேண்டும்.

திருவருகைக்காலம் முதல் வாரத்தில், 'உம்மை நோக்கி என் உள்ளம்' என்னும் கருத்துரு நமக்கு எதை உணர்த்துகிறது? ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியும் இன்று எண்ணற்ற விவாதங்களும், பரப்புரைகளும், அச்சுறுத்தல்களும் நம்மைச் சுற்றி நடக்கின்றன. தொடங்கியது அனைத்தும் நிறைவுறும் என்பது எதார்த்தம். நம் இயக்கத்தின் இலக்கான இயேசுவில் அனைத்தும் நிறைவுபெறும் என்பது நம் எதிர்நோக்கு. வருகின்ற ஒன்றுக்காகக் காத்திருப்பது என்பது, இருக்கின்ற ஒன்றில் மூழ்கிவிடாமல் இருக்க எச்சரிக்கிறது. மேலும், 'மானிட மகன் முன் வல்லவராக நிற்பதற்கு' தகுதிப்படுத்தும் செயல்களை மட்டும் செய்யுமாறு நம் இலக்குகளைக் கூர்மைப்படுத்துதல் அவசியம்.

'உம்மை நோக்கி என் உள்ளம்' என்று நாம் எதிர்நோக்கத் தடையாக இருப்பவை எவை?

(அ) ஆன்மிக மந்தநிலை. 'குளிர்ச்சி அல்லது சூடு நலமாக இருந்திருக்கும்' எனச் சொல்கின்ற ஆண்டவர், 'வெதுவெதுப்பாய் இருப்பதை' கடிந்துகொள்கின்றார் (காண். திவெ 3:16). வழிபாடுகள், வெளிப்புறக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டிய ஆன்மிகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை. கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக என்னும் மாமன்றத்தின் சூழலில், நம் கொண்டாட்டங்களை ஆய்வுசெய்துபார்க்க நம்மை அழைக்கிறார் திருத்தந்தை. ஆன்மிகம் அன்பில் கனியும்போது ஆண்டவர் திருமுன் நாம் தூயோராக நிற்க முடியும்.

(ஆ) கவனச் சிதறல்கள். இணையதளங்களும் சமூக ஊடகங்களும் நம் இன்றைய குடிவெறியாகவும், களியாட்டமாகவும், கவலையாகவும் – ஏனெனில், எவ்வளவு நுகர்ந்தாலும் இன்னும் அதிகம் நுகரவே விரும்புகிறோம், மெய்நிகர் உணர்வே உண்மை என நினைக்கிறோம், பிறர் பார்க்கவும் விரும்பவும் இல்லையே என்று கவலை கொள்கிறோம் - மாறிவிட்டன. இவற்றிலிருந்து நம் கண்கள் உயர்ந்தால்தான் நம் உள்ளம் இறைவனை நோக்கி உயரும்.

(இ) அநீதியால் வரும் சோர்வு. நம் சமூக, அரசியல், பொருளாதர, சமயம், மற்றும் பணித்தளச் சூழல்களில் நாம் எதிர்கொள்ளும் அநீதி நமக்கு மனச்சோர்வையும் விரக்தியையும் தருவதால், நம்மால் நிமிர்ந்துகூடப் பார்க்க இயலாத அளவுக்குச் சோர்ந்து போகின்றோம். 'ஆண்டவரே நமது நீதி!' என்பது வெறும் எதிர்நோக்காகவே இருந்துவிடுமோ என அச்சப்படுகின்றோம். ஆண்டவர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நம் சோர்வை அகற்றும்.

இறுதியாக, புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் நாம் இன்று ஏற்றும் முதல் திரியான 'எதிர்நோக்கு' அணையாமல் ஒளிவீசுவதாக! 'உம்மை நோக்கி என் உள்ளம்' என்னும் சரணாகதியும் காத்திருப்பும்தான் 'எதிர்நோக்கு.'

Friday, November 26, 2021

மன்றாடுங்கள்

இன்றைய (27 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:34-36)

மன்றாடுங்கள்

இன்றுடன் திருவழிபாட்டு ஆண்டு நிறைவு பெறுகிறது. நம்மிடமிருந்து விடைபெறும் இந்த ஆண்டு, 'விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்ற அழைப்பை நமக்கு விடுத்து நம்மிடமிருந்து கடந்து செல்கிறது.

'குடிவெறி, களியாட்டம், கவலை ஆகியவற்றால் உங்கள் உள்ளம் மந்தம் அடைய வேண்டாம்' என்றும் அறிவுறுத்துகின்றார் இயேசு.

கவலை என்பது நாம் கையில் ஏந்தும் கண்ணாடி கிளாஸ் போல. ஏந்துகின்ற அந்த நொடி நமக்கு ஒன்றும் வலிக்காது. ஆனால், நேரம் செல்லச் செல்ல நம் கையை அது மரத்துப் போகச் செய்யும். கண்ணாடி கிளாஸின் எடை என்னவோ மாறுவதில்லை. நேரம்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நாம் செய்ய வேண்டியது என்ன? கண்ணாடி கிளாஸை கீழே வைக்க வேண்டியதுதான்.

குடிவெறி மற்றும் களியாட்டம் என்பது நாம் இடம் கொடுக்கும் சின்ன சின்ன இன்பங்கள். நம் உள்ளத்தை நம் உணர்வுகள் வெல்லும் பொழுதுகள் இவை. உள்ளம்தான் எப்போதும் உணர்வுகள்மேல் ஆட்சி செலுத்த வேண்டுமே தவிர, உணர்வுகள் உள்ளத்தின்மேல் அல்ல.

விழிப்பு மனநிலையுடன் கூடிய மன்றாட்டு, நம்மைக் கண்ணியிலிருந்து தப்புவிக்கும்.

இந்த திருவழிபாட்டு ஆண்டு முழவதும் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்காக, அவர் பொழிந்த அருளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

Thursday, November 25, 2021

அறிந்துகொள்ளுங்கள்

இன்றைய (26 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:29-33)

அறிந்துகொள்ளுங்கள்

இன்று காலை திருப்பலியில் முதல் வாசகம் ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தபோது, என்னில் ஓர் எண்ணம் உதித்தது. 'தானியேலை சிங்கத்தின் வாயிலிருந்து ஆண்டவர் விடுவித்தார்' என்று நம் விவிலியத்தில் உள்ளது. 'பாபிலோனியர்கள் தங்களுடைய நூலில் இதே நிகழ்வை எப்படி பதிவு செய்திருப்பார்கள்?' தங்கள் கடவுள் தோற்றுவிட்டார் என்று அவர்கள் பதிவு செய்ய வாய்ப்பில்லை. 'யூதன் ஒருவன் அரச கட்டளைக்குப் பணிய மறுத்து, தன் கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்தான். இதை அரசன் கண்டு அவனைச் சிங்கத்தின் குகையில் தள்ளினான். குகையின் வாயிலை நெருங்குமுன் அது அவனை அடித்துக் கொன்று போட்டது' - இப்படித்தான் அவர்கள் எழுதியிருப்பார்கள். எந்தவொரு இலக்கியமும் தன் இலக்கியத்தின் பாடுபொருளை, கடவுளை உயர்த்தியேதான் எழுதும்.

இன்றைய முதல் வாசகத்தில், தானியேல் நான்கு விலங்குகளின் காட்சிகளைக் காண்கின்றார். இறுதியாக விலங்கு கொல்லப்படுகிறது. தொன்மை வாய்ந்தவர் (கடவுள்) மானிட மகனுக்கு (இஸ்ரயேல்) ஆட்சி உரிமையை வழங்குகின்றார்.

வெகுசன மக்கள் தங்கள் அடிமைத்தனமெல்லாம் மறைந்து ஒருநாள் தாங்கள் அரியணையில் அமர்வோம் என்ற அவர்களுடைய ஆசை நிறைவேறுவதாக (விஷ் ஃபுல்ஃபில்மென்ட்) (wish fulfillment) நினைப்பதாக நாம் இந்தக் காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், தானியேல் கண்ட காட்சி அவருடைய காலத்தில் நிறைவேறவில்லை. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதற்கான முன்சுவையாகவே இவை இருக்கின்றன.

இரு விடயங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை:

வெகுசன ஊடகங்கள் தங்கள் பாடுபொருளை முன்னிறுத்தியே பதிவுகளை இடும்.

அடிமைத்தனத்தில் இருப்பவர்கள் தாங்கள் விடுதலை பெற்றுக்கொள்வதாகக் காட்சிகளை பதிவிடுவர். இவை சில நேரங்களில் 'தானாக நிறைவேறும் இறைவாக்குகளாக' ('ஸெல்ஃப் ஃபுல்ஃபில்லிங் ப்ராஃபஸி) (Self-fulfilling prophecy) மாறிவிடுவதும் உண்டு.

பல அருங்கொடை இல்லங்களிலும், ஆவிக்குரிய சபைகளிலும் தானியேல் நூலின் பகுதிகளும், திருவெளிப்பாட்டு நூல் பகுதிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு விளக்கங்கள் தரப்படுகின்றன. அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் நேரடிப் பொருளாக இருக்கின்றன. ஆனால், நேரடிப் பொருளாக நாம் இவற்றைப் புரிந்துகொள்ளும்போது பாடங்களின் சூழல்களை அப்படியே தள்ளிவிடுகிறோம். அது தவறு. ஏனெனில், ஒவ்வொரு பாடமும் அதனதன் சூழலில்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

தானியேலைச் சிங்கத்தின் வாயிலிருந்து கடவுள் காப்பாற்றுவார் என்பது நமக்கு எதிர்நோக்கைத் தருமே தவிர, உத்திரவாதம் தராது. சிங்கங்களின் வாயில் கடிபட்டு இறக்கின்ற தானியேல்கள் இன்றும் நம் நடுவில் இருக்கின்றனர். அன்று அனுப்பப்பட்ட வானதூதர்கள் எங்கே போயினர்?

கடலிலிருந்து எழுந்து வந்து மனிதர்களை அச்சுறுத்திய விலங்குகள் போல, இன்றும் நம்மைச் சுற்றி அச்சுறுத்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அன்று வந்த தொன்மை வாய்ந்தவர் இன்று எங்கே போனார்?

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நிகழ்வுகளைத் தெரிந்து தெளிதல் பற்றி இயேசு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

அன்றைய மக்கள் இயற்கையின் இயக்கத்தை வைத்துப் பல விடயங்களைக் கணிப்பார்கள். இன்று நாம் செயற்கைக்கோள்கள் வைத்திருந்தும் நம்மால் கணிக்க இயலவில்லை. இயற்கை ஒரு கணிதச் சமன்பாடு போல இயங்குகிறது என்பது கிரேக்க மெய்யிலாளர் பித்தாகரஸின் வாதம். இப்படி இருந்தால் அப்படி நடக்கும் என்று நாம் கணித்துவிட முடியும்.

இறுதிக்கால நிகழ்வுகளும் அப்படிப்பட்டவையே என்கிறார் இயேசு. அதாவது, மண்ணிலும் விண்ணிலும் நாம் காணும் அடையாளங்களைக் கொண்டு மானிட மகனின் வருகை அண்மையில் உள்ளது என்பதை நாம் கணித்துவிட முடியும்.

இந்தப் போதனை நமக்குச் சொல்வது என்ன?

(அ) தேர்ந்து தெளிதல்

ஒரு விடயத்தின் பல கூறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அல்லவை நீக்கி, நல்லவை தழுவலே தேர்ந்து தெளிதல். 'இது அல்ல! இது அல்ல!' என்று நாம் ஒவ்வொரு அடுக்காக நீக்கும்போதுதான் இயற்கையின் மறைபொருளை உணர முடிகிறது. தேர்ந்து தெளிதல் வளர நாம் நம் உள்ளுணர்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

(ஆ) காரணம் - காரியம்

இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் காரணம் - காரியம் என்றே நகர்கின்றன. 'காரணம் - காரியத்திற்கு' அப்பாற்பட்டவற்றை நாம் வல்ல செயல்கள் என்று சொல்கின்றோம்.

(இ) என் வார்த்தைகள் ஒழியா!

தன் வார்த்தைகள் அனைத்தும் நிறைவுறும் என இயேசு மொழிகின்றார். அதாவது, தன் வார்த்தை பொய்யாகாமல் நிறைவுபெறும் என்கிறார். நம்மைத் தயார்நிலைக்கும் விழிப்புநிலைக்கும் அழைக்கிறார் இயேசு.

Wednesday, November 24, 2021

எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய (25 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:20-28)

எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று கருத்துருக்கள் உள்ளன: ஒன்று, எருசலேம் நகரின் அழிவு பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பு,  இரண்டு, திருவெளிப்பாட்டு நடையில் முன்மொழியப்படுகின்ற உலகின் இறுதி நாள்கள், மற்றும் மூன்று, மானிட மகனின் வருகையின்போது நம்பிக்கையாளர்களின் பதிலிறுப்பு.

கிபி 70இல் நடந்த எருசலேம் முற்றுகை வரலாற்றில் மிக முக்கியமானது. முதல் யூத-உரோமைப் போர் என அழைக்கப்படுகின்ற அந்தப் போரில் எருசலேம் நகரமும் ஆலயமும் உரோமையர்களால் அழிக்கப்படுகின்றது. தீத்து மற்றும் திபேரியு ஜூலியஸ் இந்தப் படையெடுப்பை முன்னெடுக்கின்றனர். இந்த முற்றுகை ஏறக்குறைய ஐந்து மாதங்கள் நீடித்தன. யூதர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றாலும், இறுதியால் உரோமைப் பேரரசு வெற்றிகொள்கின்றது.

இந்தப் போரின் கோர முகத்தை வரலாற்று ஆசிரியர் யோசேஃபுஸ் இப்படிப் பதிவு செய்கின்றார்: 'அழிவின் காட்சி கொடூரமாக இருந்தது. மரங்களாலும் தோட்டங்களாலும் நிறைந்திருந்த இடங்கள் பாலைவனமாகக் காட்சி அளித்தன. யூதேயாவின் அழகைப் பார்த்து வியந்த எந்த அந்நியரும் இப்போது அதைப் பார்த்தால், அதன் பரிதாப நிலை கண்டு புலம்புவார். அழகின் அடையாளங்கள் அனைத்தும் குப்பையாகக் கூட்டித் தள்ளப்பட்டன. இதற்கு முன்னர் இந்த நகரைப் பார்த்த ஒருவர் அதைப் போல இன்னொரு முறை காண இயலாது. இந்த நகரில் தங்கியிருந்தவரும் இந்நகரை அடையாளம் காண இயலாது.'

எருசலேம் முற்றுகை நடைபெற்ற பின்னர், கிபி 80-90 ஆண்டுகளுக்குள் லூக்கா தன் நற்செய்தியை எழுதியிருப்பார். ஆக, எருசலேம் முற்றுகையை அவர் நேரடியாகக் கண்டவராகவோ, அல்லது எருசலேம் அழிவின் எச்சத்தைக் கண்டவராகவும் இருந்திருப்பார். முற்றுகை நடந்த வேளையில் பெண்களும், குழந்தைகளும் அனுபவித்த இன்னல்களை அவர் அறிந்திருப்பார். தன் காலத்திலும் எருசலேம் பிறஇனத்தார் கையில் இருப்பதைக் கண்டிருப்பார். தான் கண்ட அனைத்தையும் இயேசுவே முன்னுரைத்தாக அவர் பின்நோக்கிப் பதிவு செய்திருப்பார். இந்த இலக்கிய நடைக்குப் பெயர் 'ரெட்ரோஜெக்ஷன்' என்பதாகும்.

மேலும், உலக முடிவு பற்றிய ஆவல் மேலோங்கி இருந்ததால், உலக முடிவு பற்றிய கருத்துகளும் இயேசுவால் முன்னுரைக்கப்படுவதாக எழுதப்படுகின்றன. இயேசுவின் சமகாலத்து ஸ்தாயிக்கியர்கள் பிரபஞ்சம் 3000 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அதன் பின்னர் அது மீண்டும் தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் என்றும் கருதினர். தங்கள் காலத்தில் அது நிகழ்வதாக அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

மானிட மகனின் இரண்டாம் வருகையும் கிறிஸ்தவ குழுமத்தால் எதிர்நோக்கப்பட்டது. மானிட மகனின் வருகையின்போது தங்கள் துன்பம் அனைத்தும் மறைந்துபோகும் என்று எண்ணினர். ஏனெனில், அவர்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக மிகவும் துன்புறுத்தப்பட்டனர்.

ஆக, லூக்கா என்னும் வரலாற்று ஆசிரியர், தன் சமகாலத்து நிகழ்வுகளை, இயேசு முன்னறிவித்த நிகழ்வுகளாகப் பதிவு செய்கின்றார். அல்லது இயேசுவே இதை முன்னுரைத்திருக்கலாம்.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

ஒன்று, மாட்சியும் வீழ்ச்சியும் தொடர்ந்து நிகழக் கூடியவை. எருசலேமை வீழ்த்திய உரோமை பின்நாள்களில் தானும் வீழ்கிறது. பாவத்திற்கான தண்டனை என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், பாவமே செய்யாத பச்சிளங் குழந்தைகள் அழிக்கப்பட்டது ஏன்? நாம் பிறப்பது போலவே இறக்கிறோம். அப்படி மட்டும் நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இரண்டு, இறுதி நாள்கள் பற்றிய அச்சம். நம் தனிப்பட்ட வாழ்வின் இறுதி நாள்கள் பற்றிய அச்சம் நமக்கு இயல்பாகவே நம்மில் இருக்கிறது. 'இதுதான் நடக்கும்' என்று ஏற்றுக்கொள்கின்ற மனம் அச்சத்தைக் களையும்.

மூன்று, 'தலைநிமிர்ந்து நில்லுங்கள்.' இது படைவீரருக்கான சொல்லாடல். தலைநிமிர்ந்து நிற்கின்ற படைவீரர் தயார்நிலையில் இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலைக் காப்பாற்றுகின்றார். தீமை ஒருபோதும் நன்மையை வெல்ல இயலாது என்பதற்குச் சான்றாக இந்நிகழ்வு உள்ளது.

Tuesday, November 23, 2021

வாழ்வின் எச்சரிக்கைகள்

இன்றைய (24 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:12-19)

வாழ்வின் எச்சரிக்கைகள்

இளைஞன் ஒருவன் தன் விலைமிகு ஃபெராரி கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு மலைப்பக்கம் சென்றான். திடீரென, 'ஏய் ... மாடு!' என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். இளவல் ஒருத்தி, அவன் காரை நோக்கிக் கையை நீட்டி, 'ஏய் ... மாடு!' என்று கத்திக் கொண்டிருந்தாள். 'நானா ... நானா .. மாடு ... நீதான் மாடு!' என்று கண்ணாடியை இறக்கிக் கொண்டு கத்த முனைந்தவன் சில நொடிகளுக்குள் எதிரில் நின்ற மாடு ஒன்றின்மேல் மோதி தன் வாகனத்தைப் பாழாக்கிக் கொண்டான். நின்றவள், 'ஏய் ... மாடு இருக்கிறது! கவனமாகப் போ!' என எச்சரித்தாள். ஆனால், சென்றவனோ, அவள் தன்னைத்தான், 'மாடு' எனக் கடிவதாக நினைத்துக்கொண்டான்.

வாழ்வின் எச்சரிக்கைகள் நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கின்றன. எச்சரிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களையே தயார்படுத்தி வருகின்ற ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாதவர்கள் அல்லது நிராகரிப்பவர்கள் தங்களையே பாழ்படுத்திக்கொள்கின்றனர்.

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் எச்சரிக்கைகளைத் தாங்கி நிற்கின்றன.

முதல் வாசகத்தில், பாபிலோனிய அரசர் நெபுகத்னேசர் தன் மனைவியருடன் இணைந்து விருந்து கொண்டாடுகின்றார். விருந்து கொண்டாடுவது தவறா? இல்லை. ஆனால், விருந்தில் அவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் அனைத்தும் ஆண்டவருடைய ஆலயத்தின் பாத்திரங்கள். நினைத்துப் பார்க்கவே மனம் வேதனைகொள்கிறது. 'தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா! தெருவினிலே விழுந்தாலும் வேறொர் கை தொடலாமா!' என்பது போல, நெபுகத்னேசர் மற்றும் விருந்தினர்களின் கைகளில் ஆலயத்தின் பாத்திரங்கள் மதுப் பாத்திரங்களாக மாறி நிற்க, அங்கே தோன்றுகின்ற ஒரு மனிதனுடைய கைவிரல்கள், அரண்மனையின் உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே – அதாவது, அனைவருக்கும் தெரியும் வண்ணம் - எழுதத் தொடங்குகின்றன. 'சுவரில் தோன்றிய எழுத்துகள்' என்று ஆங்கிலத்தில் சொலவடை ('இடியம்') உருவாகக் காரணமான நிகழ்வு இதுவே. 

'நீர் தராசில் நிறுக்கப்பட்டீர். எடையில் மிகவும் குறைந்துள்ளீர்' என்று ஆண்டவராகிய கடவுள் அவரை எச்சரிக்கின்றார். அதாவது, 'நான் நினைத்தது போல நீ இல்லை. என்னை ஏமாற்றிவிட்டாய். நான் ஏமாந்து போனேன்' என்று கடவுள் வருந்துகின்றார். நெபுகத்னேசர் அரசருக்கு வழங்கப்படும் எச்சரிக்கை அவர் செய்த தவறுக்காக அவருக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு நேர்முகமான எச்சரிக்கை அளிக்கின்றார். அதாவது, தன்னைப் பின்பற்றும் சீடர்கள் பெறுகின்ற துன்பங்களை முன்னறிவித்து, அவர்கள் விழிப்போடு நடந்துகொள்ள அறிவுறுத்துகின்றார். இந்த எச்சரிக்கை அவர்களுடைய தவறுக்காகக் கிடைக்கும் தண்டனை பற்றியது அல்ல. மாறாக, அவர்கள் மேற்கொண்ட தெரிவுக்காக அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய துன்பம் பற்றிய எச்சரிக்கை.

முதல் வாசகத்தின் எச்சரிக்கை, வருகின்ற ஆபத்தைக் குறித்தாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தின் எச்சரிக்கை, 'உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மனஉறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்' என்ற ஆறுதலைத் தாங்கி நிற்கிறது.

வாழ்வின் எச்சரிக்கைகள் நாம் எதிர்பாராமல் நமக்கு வருகின்றன. உடனடியான செயல்பாட்டை அவைந நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன. உடனடியாகச் செயல்படுபவர்கள் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

இன்று நாம் கற்க வேண்டிய பாடங்கள் மூன்று:

(அ) இன்று என்னிடம் வரும் வாழ்வின் எச்சரிக்கைகளுக்கு எனது பதிலிறுப்பு எவ்வாறாக உள்ளது?

(ஆ) நான் தராசில் நிறுத்தப்பட்டால், எடை குறைவேனா? எடை குறைகின்ற என் வாழ்வின் பகுதிகள் எவை?

(இ) எச்சரிக்கைகளைக் கடந்து செல்ல மனஉறுதி தேவை. மனஉறுதியைக் குலைக்கக் கூடிய என் அக, மற்றும் புறக் காரணிகள் எவை?


Monday, November 22, 2021

கோவிலின் மறுபக்கம்

இன்றைய (23 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:5-11)

கோவிலின் மறுபக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்னர், 'மறுபக்கம்' என்னும் கவிதை ஒன்றை வாசித்தேன். இது இப்படி நீள்கிறது:

'நாம் அநேகமாக மறுபக்கத்தைப் பார்ப்பதில்லை.

மரப்பாச்சியின் மறுபக்கத்தை.

புகைப்படத்தின் மறுபக்கத்தை.

இலையின் மறுபக்கத்தை.

மலரின் மறுபக்கத்தை.

பிறரின் மறுபக்கத்தை.

ஒருபக்கம் போல மறுபக்கமும் உண்மை.'

ஞானம் பெற்றவர்கள் ஒரு பக்கத்தைப் பார்க்கின்ற அதே வேளையில் வாழ்வின் மறுபக்கத்தையும் பார்க்கின்றனர். 

'என்னே! இளமை! என்னே பொலிவு! என்னே வடிவு! என்னே அழகு!' என்று ஓர் இளவலைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் நம்மைக் கடந்து போகின்ற பட்டினத்தார், போகிற போக்கில், 'ஓர் பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே!' என்று பாடிக் கொண்டு போகின்றார். நாம் அழகு என்று ஒரு பக்கத்தைப் பார்க்கின்ற வேளையில், எரித்துவிட்டால் ஒரு பிடி சாம்பல்கூட மிஞ்சுவதில்லை என்று நம் கன்னத்தில் அறைந்து வாழ்வின் மறுபக்கத்தைப் பார்க்கச் சொல்கின்றார்.

மலையின் மேல் நின்றுகொண்டிருக்கும் சபை உரையாளர், எல்லாரையும் பார்த்து, 'பிறப்புக்கு ஒரு காலம்ளூ இறப்புக்கு ஒரு காலம். அரவணைக்க ஒரு காலம்ளூ அரவணையாதிருக்க ஒரு காலம். பேசுவதற்கு ஒரு காலம்ளூ பேசாதிருக்க ஒரு காலம். அன்புக்கு ஒரு காலம்ளூ வெறுப்புக்கு ஒரு காலம்' (காண். சஉ 3:2-8) என்று பாடிக்கொண்டிருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் எருசலேம் ஆலயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற சிலர், கவின்மிகு கற்களாலும் நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து நிற்கின்றனர். அவ்வழியே கடந்து போகின்ற இயேசு, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்' என்கிறார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அவரை எதிர்மறைவாதி என எண்ணியிருப்பார்கள். ஆனால், இயேசு, நிகழ்மைய வாதியாக, எதார்த்தவாதியாக இருக்கின்றார். உரோமைப் படையெடுப்பின்போது ஆலயம் தகர்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்வது என்ன?

வாழ்வின் ஒரு பக்கத்தைக் காணும் நாம் மறுபக்கத்தையும் அறிய முயற்சி செய்தல் வேண்டும்.

சில நேரங்களில், நாம் மறுபக்கத்தை நிராகரிக்கிறோம். 

சில நேரங்களில், மறுபக்கத்தை மிகைப்படுத்துகின்றோம். 

சில நேரங்களில், மறுபக்கத்தை நாம் கண்டுகொள்வதில்லை.

இன்றைய முதல் வாசகத்தில், நெபுகத்னேசர் அரசர் கனவில் ஒரு பெரிய சிலையைக் காண்கின்றார். அவர் சிலையின் ஒரு பக்கத்தையே – அதாவது, கனவாக – காண்கின்றார். அதன் மறுபக்கம் - அதாவது, கனவின் பொருள் - தானியேலுக்கு கடவுளால் அருளப்படுகிறது.

வாழ்வின் மறுபக்கத்தைப் பார்க்க, கடவுளின் கண்கள் நமக்குத் தேவை. மறுபக்கத்தையும் இணைத்துப் பார்த்தால் வாழ்வில் பற்றுகள் குறையும்.

Sunday, November 21, 2021

வறுமையில் வாடிய கைம்பெண்

இன்றைய (22 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 2:1-4)

வறுமையில் வாடிய கைம்பெண்

'இந்தியக் கைம்பெண்களின் உளவியல், மற்றும் சமூக நிலை' என்ற ஓர் ஆய்வுக்கட்டுரையை இரு நாள்களுக்கு முன்னர் வாசித்தேன். 'கைம்பெண்கள் மறுவாழ்வு அல்லது மீள்வாழ்வு அல்லது மறுமணம்' என்பது அதிகரித்து வந்தாலும், மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்கின்ற அளவுக்கு, கணவரை இழந்த ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும் ஆய்வு சொன்னது. தன் கணவரை இழந்ததால் உள்ளத்தில் சோகமும், தன் பிள்ளைகளின் கைகளை நம்பி நிற்பதால் உடல்நோயையும் பொறுத்துக்கொண்டும் பலர் இருப்பதாகவும், கைம்பெண்கள் சமூகத்திலும் பல துன்பங்களுக்கும் ஆளாவதாகவும் கட்டுரை சொன்னது. இன்னொரு பக்கம், தாங்கள் தங்கள் கணவரை இழந்ததால், இனி தனக்கே அனைத்துப் பொறுப்பும் என்று தங்கள் குடும்பத்தை மேலே உயர்த்திய பல பெண்களைப் பற்றியும் கட்டுரை கூறுகிறது.

இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் பின்தங்கி இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர். இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை' நிகழ்வை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள், இவரை 'கைம்பெண்' என அழைக்க, லூக்கா மட்டும், 'அவர் வறுமையில் வாடியவர்' என்று பொருளாதார நிலையையும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சமகாலத்தில் எல்லா யூதர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வரி பெரும்பாலும் கீழிருப்பவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, நம் ஆலயங்களில் திருவிழாவுக்கென்று வரி, ரூ 1000 விதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்கில் உள்ள வசதியானவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்காது. ஆனால், சில குடும்பங்களுக்கு அந்த 1,000 என்பது அவர்களுடைய ஒரு மாத வருமானமும், செலவினமுமாகவும் இருக்கும். இயேசுவின் சமகாலத்திலும் அனைவரும் அரை ஷெக்கேல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம் நிகழ்வில் வருகின்ற கைம்பெண்ணிடம் அரை ஷெக்கேலில் ஆறில் ஒரு பகுதிதான் இருந்தது. ஆனால், அவர் அதையும் காணிக்கையாகப் போடுகின்றார்.

நிகழ்வில் வரும் கைம்பெண்ணைப் பற்றி மூன்று குறிப்புகளைத் தருகின்றார் இயேசு:

(அ) தமக்குப் பற்றாக்குறை இருந்தும்

'பற்றாக்குறை' என்பது தேவைக்கும் குறைவான நிலை. ஆனால், அந்தக் கைம்பெண் தன் பற்றாக்குறையை பெரிதுபடுத்தவில்லை. தன் வாழ்வில் நிறைய பற்றாக்குறைகளை அனுபவித்த அவர் இந்தப் பற்றாக்குறையையும் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) தம் பிழைப்புக்காக அவற்றை வைத்திருந்தார்

அதாவது, அவர் இட்ட காணிக்கை அவருடைய ஒரு நாள் செலவினம். தன் வாழ்வைத் தக்கவைக்க அவர் செலவழிக்க வேண்டிய பணம். ஆக, மருத்துவம், முதுமை போன்ற எந்த எதிர்கால வசதிகளையும் கூட எண்ணிப்பார்க்காத நிலையில் இருந்த அவர், தன் நிகழ்காலத் தேவையையும் தள்ளி வைக்கின்றார்.

(இ) எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண். ஆலயத்தை விட்டு வெளியே சென்றால் அவர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. 

லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், 'மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை' என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, 'அன்றைய நாளைப் பற்றிக் கூட' அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.

நிற்க.

இப்படியாக நாம் அந்த இளவலின் செயலைப் புகழ்ந்து கொண்டாடினாலும், அவருடைய வறுமை என்னவோ நம்மை நெருடவே செய்கிறது. 'கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். அவர் நம்மைப் பாராட்டுகிறார்' என்னும் சொற்கள் நமக்கு ஆறுதல் தரவில்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா? 

Saturday, November 20, 2021

ஆண்டவரின் ஆட்சி!

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா

I. தானியேல் 7:13-14  II. திருவெளிப்பாடு 1:5-8  III. யோவான் 18:33-37

ஆண்டவரின் ஆட்சி!

'கிறிஸ்து அரசர் பெருவிழா' திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்கிறது. 'அரசர்' என்ற சொல் 'செங்கோல், கிரீடம், அரியணை, போர், அரண்மனை, கோட்டை, அதிகாரம், படைவீரர்கள், பணியாளர்கள், பணம், தங்கம்' ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது. அரசாட்சி எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் - குடியரசு, சமய அரசு, வாரிசு அரசு – தீயதாகவே இருக்கிறது என்பது நம் வாழ்வியல் அனுபவமாக இருக்கிறது. 'தீமை இல்லாத அதிகாரம்' என்பது இல்லை என்பது அக்வினா நகர் புனித தோமாவின் கருத்து. நீதித் தலைவர்கள் நூலில், யோத்தாம் கூறும் உருவகத்தில் வருகின்ற ஒலிவ மரங்களும், அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் அரசாட்சி ஏற்க மறுத்ததால், முட்புதர் அரசாட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. முட்புதரிடம் அரசாட்சியைக் கொடுத்துவிட்ட ஒலிவ மரங்களும், அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் காய்க்க முடியுமா? கனிதர இயலுமா? இன்னொரு பக்கம், அரசாட்சி என்பதை, 'தலைமைத்துவம்' என்று புரிந்துகொண்டால், இன்று நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் - குடும்பத்தில், பணியிடத்தில், பங்கில், மறைமாவட்டத்தில், சமூக அமைப்பில் - தலைவராக இருக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு நாமே (அதாவது, எனக்கு நானே) தலைவராக இருப்பதும் அரசாட்சி சார்ந்ததே.

ஆக, நாம் விட்டு விலக முடியாத அரசாட்சிக்கும், நம் தனிப்பட்ட மற்றும் வாழ்வியல் தலைமைத்துவத்துக்கும் இன்று நாம் கொண்டாடுகிறது கிறிஸ்து அரசர் பெருவிழா முன்வைப்பது என்ன?

முதல் வாசகத்தில் (தானி 7:13-14) தானியேல் இறைவாக்கினர் காட்சி ஒன்றைக் காண்கின்றார். 'மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்' எனக் கூறுகிறார் தானியேல். 'தொன்மை வாய்ந்தவர்' என்னும் சொல்லாடல் கடவுளைக் குறிக்கிறது. மானிட மகனுக்கு ஆட்சியுரிமையும் மாட்சியும் கொடுக்கப்படுகின்றது. அவர் அனைவரும் வழிபடக் கூடிய கடவுளாக இருக்கின்றார். அவருடைய ஆட்சி நீடித்த, முடிவுறாத ஆட்சியாக இருக்கிறது. இக்காட்சியின் பின்புலத்தில் இருப்பது செலூக்கிய ஆட்சி. கிரேக்கர்களுக்குப் பின்னர் பாலஸ்தீனத்தை செலூக்கியர்கள் ஆட்சி செய்கின்றனர். செலூக்கிய அரசன் நான்காம் அந்தியோக்கஸ் எபிஃபானஸ் (கிமு 167 – 164) யூதர்கள் அனைவர்மேலும் கிரேக்கக் கலாச்சாரத்தையும், மொழியையும், வழிபாட்டையும் திணிக்கின்றான். தன்னையும் தான் நிறுவுகின்ற கடவுளையும் மக்கள் வழிபட வேண்டும் என்றும், ஆலயத்தில் படைக்கப்படும் பன்றிக்கறி உணவை அனைவரும் உண்ண வேண்டும் என்றும் இஸ்ரயேல் மக்களைக் கட்டாயப்படுத்துகின்றான். அரசக் கட்டளையை மீறுகின்ற பலர் கொல்லப்படுகின்றனர் (காண். 1 மக் 1:41-63). இதற்கு எதிராக எழுகின்ற மக்கபேயர்கள், மத்தத்தியா, யூதா போன்றவர்களால் நீடித்த ஆட்சியைத் தர முடியவில்லை. ஆக, தங்களை ஆட்சி செய்கின்ற கொடுங்கோல் அரசன், தங்களைக் காப்பாற்ற இயலாத தங்கள் தலைமை என வாடியிருந்த மக்கள் விரைவில் தங்களுடைய ஆட்சியுரிமையைப் பெறுவார்கள் எனக் காட்சி காண்கின்றார் தானியேல்.

'மானிட மகன்' என்னும் சொல்லாடல், 'மெசியா' அல்லது 'இஸ்ரயேல் மக்கள்' ஆகியோரைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். இஸ்ரயேல் மக்களின் கையில் ஆட்சியுரிமை கொடுக்கப்படுகிறது. கடவுள் ஏற்படுத்துகின்ற நீதி மற்றும் நேர்மையின் அரசை அவர்கள் மக்கள் நடுவில் மலரச் செய்வார்கள். துன்புறும் மக்களுக்கு தானியேல் நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார். அவர்களுடைய துன்பம் நீடித்தது அல்ல என்றும், கடவுள் விரைவில் குறுக்கிட்டு, அவர்களின் துன்பத்தை அகற்றுவார் என்றும், கடவுளே வரலாற்றைத் தன் கைகளில் கொண்டுள்ளார் என்றும், தீமையின்மேல் அவரே வெற்றிகொள்வார் என்றும் மொழிகின்றார். வானத்தில் தோன்றுகின்ற மனித உருவம் வெற்றியைக் கொண்டு வரும்.

ஆக, மனித வரலாறு கடவுளின் கண்முன் விரிந்து நிற்கிறது. நம்பிக்கையாளர்களைத் துன்பத்திலிருந்து அவரே விடுவிக்கின்றார். தீமையின் ஆதிக்கத்தை வேரறுக்கின்ற கடவுள் தான் படைத்த இந்த உலகை நம்பிக்கையாளர்களிடம் மீண்டும் அளிப்பார். ஆண்டவரின் ஆட்சி தானியேலின் காட்சியாகவும், ஏக்கமாகவும் இருக்கிறது.

இரண்டாம் வாசகம் (திவெ 1:5-8), இயேசுவை, 'அரசர்க்கெல்லாம் அரசர்' என்று முன்மொழிகின்றது. தானியேல் நூலுக்கும் திருவெளிப்பாட்டு நூலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் திருவெளிப்பாட்டு நடையில், உருவங்கள், எண்கள், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இரண்டு நூல்களும் எழுதப்பட்ட சூழல் நம்பிக்கையாளரின் துன்பமே. நம்பிக்கையாளர்களின் துன்பம் கடவுளின் குறுக்கீட்டால் நிறைவுக்கு வரும் என்பது இந்நூல்கள் தரும் நம்பிக்கை.

கிறிஸ்துவை மூன்று தலைப்புகளால் குறிக்கிறார் ஆசிரியர்: (அ) 'நம்பிக்கைக்குரிய சாட்சி' – ஏனெனில், தன் மண்ணகப் பணியில் இறுதிவரை நிலைத்து நின்று சான்று பகர்ந்தார், (ஆ) 'முதலில் உயிர்பெற்று எழுந்தவர்' – கடவுளின் வல்லமையால், (இ) 'மண்ணுலக அரசர்க்கெல்லாம் தலைவர்' – அவருடைய விண்ணேற்றத்துக்குப் பின்னர் கடவுள் அவருக்கு எல்லா ஆற்றல்களையும் வழங்குகின்றார். இந்த மூன்று தலைப்புகளும், இயேசு கடவுளுக்குக் காட்டிய அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கம், அந்த அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கத்திற்கு கடவுள் தந்த பரிசு அவருடைய அதிகாரமும் ஆட்சியுரிமையும் என்று அடையாளத்தப்படுத்துகின்றன.

இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஆட்சி உரிமை பெற்ற குருக்களாக மாறுகின்றனர். அவர் விரைவில் வரவிருக்கின்றார். அவரே தொடக்கமும் முடிவுமான இறைவன்.

ஆக, உரோமையர்களின்கீழ் துன்புற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு – தானியேல் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை தந்தது போல – ஆசிரியர் நம்பிக்கை தருகின்றார். மண்ணுலகில் நிலவும் தீமையின் ஆட்சி மறைந்து ஆண்டவரின் ஆட்சி மலரும் என்பது அவருடைய எதிர்நோக்காக இருக்கின்றது.

நற்செய்தி வாசகம் (யோவா 18:33-37), உரோமை ஆளுநர் பிலாத்துவுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கின்ற உரையாடலின் ஒரு பகுதியாக உள்ளது. மற்ற நற்செய்தியாளர்களை விட யோவான் நற்செய்தியாளர், பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை நீண்டதாகப் பதிவு செய்கின்றார். யோவான் நற்செய்தி, 'அரசர்' என்னும் தலைப்பில் தொடங்கி, அதே தலைப்போடு நிறைவு செய்கிறது. இயேசுவைக் காண்கின்ற நத்தனியேல், 'நீர் இறைமகன், நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' (யோவா 1:49) என அறிக்கையிடுகின்றார். நற்செய்தியின் இறுதியில், 'யூதர்களின் அரசர்' என்று பிலாத்து இயேசுவுக்கு குற்றஅறிக்கை எழுதுகின்றார் (யோவா 19:19). பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வில், இயேசுவே அரசன்போல அரியணையில் அமர்ந்திருப்பவராகவும், உறுதியாகப் பேசுவதாகவும், தன்னைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். இதற்கு மாறாக, பிலாத்து உள்ளேயும் வெளியேயும் நடப்பவராகவும், முடிவெடுக்க இயலாதவராகவும், மக்களுக்கும் இயேசுவுக்கும் அஞ்சுபவராகவும் காட்டப்படுகின்றார்.

பிலாத்துவோடு கொண்ட உரையாடலில் இயேசு தன் அரசாட்சி பற்றிய தெளிவை அவருக்கு அளிக்கின்றார்: ஒன்று, 'என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல.' இவ்வுலகில் உள்ள ஆட்சிக்கு அதிகாரத்தை இன்னொருவர் தர வேண்டும். மேலிருக்கிற இன்னொரு அரசர் தர வேண்டும். அல்லது மக்கள் தர வேண்டும். ஆனால், இயேசு அதிகாரத்தை தன்னுள்ளேயே கொண்டிருக்கின்றார். அது அவருக்கு மேலிருந்து அருளப்படுகின்றது. இரண்டு, இவ்வுலக ஆட்சி போட்டி, பொறாமை, இரத்தம், பிறழ்வு நிறைந்த ஆட்சி. ஆனால், இயேசுவின் ஆட்சி அமைதியின், நீதியின், சமத்துவத்தின், சகோதரத்துவத்தின் இறையாட்சி. மூன்று, அரசாட்சி என்பது உண்மையை அறிவிக்கும் பணி. பணி செய்வதே அரசாட்சியின் முதன்மையான இலக்கு.

இயேசுவுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் அவருடைய ஆட்சியில் உறுப்பினராக மாற முடியும். 'உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்று சொல்வதன் வழியாக, 'நீ உண்மையைச் சார்ந்தவரா?' என்று பிலாத்துவிடம் கேள்வி கேட்கின்றார் இயேசு. பிலாத்து தன் போலியான அதிகாரத்திலிருந்தும், முழமையற்ற ஆற்றலிலிருந்தும் வெளியே வர வேண்டும் என்பது இயேசுவின் அழைப்பாக இருக்கிறது.

ஆக, தன் சமகாலத்து உரோமையர் கொண்டிருந்த புரிதலைவிட ஒரு மாற்றுப் புரிதலை முன்வைக்கின்றார் இயேசு.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையக்கருத்துகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்:

(அ) ஆண்டவராகிய கடவுளின் கையில் ஆட்சி உள்ளது. அவர் நினைக்கும் நேரத்தில் அனைத்தும் மாறி விடும்.

(ஆ) ஆண்டவருடைய ஆட்சி நீடித்த ஆட்சியாக இருக்கும். அங்கே நீதிமான்கள் துன்பமுற மாட்டார்கள். தீமையின் ஆதிக்கம் முழுமையாக அழிக்கப்படும்.

(இ) ஆண்டவருடைய ஆட்சி உண்மைக்குச் சான்று பகரும் பணியாக மிளிர்கிறது. இந்த ஆட்சியில் பங்குபெற அனைவரும் அழைப்பு பெறுகின்றனர்.

கிறிஸ்து அரசர் இன்று நம் தனிப்பட்ட வாழ்வியல் தலைமைத்துவத்துக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) அரசர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை (Kings don't comrpromise).

இயேசு தன் வாழ்வில் இறுதிவரை தன் மதிப்பீடுகளோடு சமரசம் செய்துகொள்ளவே இல்லை. பாலைநிலத்தில் சாத்தான் அவரைச் சோதித்தபோதும் சரி, பணியில் மக்கள் அவரைச் சோதித்தபோதும் சரி, இறுதியில், 'இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா!' என்று மக்கள் சொன்னபோதும் சரி, அவர் அவர்களுடைய சோதனைகளுக்குள் விழவே இல்லை. இவை அனைத்திலும் தன் சுதந்திரத்தையும் கட்டின்மையையும் காத்துக்கொள்கின்றார். கட்டின்மை (சுதந்திரம்) மிகப்பெரிய மதிப்பீடு. இதை இழந்த எவரும் சமரசம் செய்துகொள்கின்றார். இதை இழக்கிறவரை நாம் அடிமை என்கிறோம். அடிமைகள் அனைத்திலும் அனைவரோடும் சமரசம் செய்துகொள்கின்றனர். அரசர்கள் சமரசம் செய்துகொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறார்கள்.

(ஆ) அரசர்கள் தங்கள் மையத்தை இழப்பதில்லை (Kings are centred).

சதுரங்க ஆட்டம் அரசர் என்றை மையத்தைச் சுற்றியதாகவே உள்ளது. தன்னைச் சுற்றியிருப்பவர்கள் வீழ்ந்தாலும் அரசர் உறுதியாகவே இருக்கின்றார். தன் நம்பிக்கையிணைவையும், நோக்கத்தையும், நலத்தையும் அரசர் இழப்பதில்லை. தன்னைச் சுற்றி நடந்த அனைத்து பரபரப்புகளுக்கு நடுவிலும் இயேசு தன் அமைதியைக் காத்துக்கொள்கின்றார்.

(இ) அரசர்கள் மற்றவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் (Kings leave a legacy).

அரசர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் நேர்முகமாக தாக்கத்தை ஏற்படுத்தி, அங்கே மாற்றத்தைக் கொண்டுவருகிறார்கள். தங்கள் இலக்கு சரியாக இருக்க வேண்டும் என்றும், அந்த இலக்கை தாங்கள் எட்டியே தீர வேண்டும் என்றும் உறுதிகொண்டவர்களாக இருக்கிறார்கள் அரசர்கள்.

இறுதியாக,

நாம் அனைத்துத் தலைவர்களுக்காகவும் இன்று மன்றாடுவோம். இவ்வுலக ஆட்சி நமக்குத் துன்பமாக மாறும்போது அவ்வுலக ஆட்சியைக் காட்சியில் கண்டு மனநிறைவு கொள்வோம் என்றோ, நாம் இறந்த பின்னர் நமக்கு மாட்சி காத்திருக்கிறது என்றோ ஓய்ந்துவிட வேண்டாம். சிறிய சிறிய தளங்களில் நாமும் அரசர்கள் என்பதை உணர்ந்து அதன்படி நடப்போம். ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர்த்திய நாம்தான் அரசர்கள். அனைத்துத் தளங்களிலும் நம் தலைமைத்துவத்தை நம் கட்டின்மையை வைத்து நிர்ணயம் செய்வோம்.

எந்த நபரும், எந்தக் கருத்தியலும், எந்தச் சூழலும் நம் கட்டின்மையை (சுதந்திரத்தை) எடுத்துவிட அனுமதிக்க வேண்டாம். இப்படியாக, கட்டின்மையில் நாம் உறுதியாக இருக்கும்போது, மற்றவர் நம்மைப் பார்த்து, 'நீ அரசரா?' எனக் கேட்பார். 'அரசர் என்று நீர் சொல்கிறீர்!' என நாம் புன்னகைத்துக்கொண்டே அவரைக் கடக்க முடியும்.

'ஆண்டவர் ஆட்சி செய்கின்றார். மாட்சியாய் ஆடையாய் அணிந்துள்ளார்' (திபா 93) என்னும் பதிலுரைப் பாடல் வரி நம் வாழ்வியல் அனுபவமாக மாறும் வரை, நாம் அதை உணரும் வரை, நாம் அரசர்களாக வாழ்வோம்!

Thursday, November 18, 2021

அனைவரும் உயிருள்ளவர்களே

இன்றைய (20 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 20:27-40)

அனைவரும் உயிருள்ளவர்களே

உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர்கள் இயேசுவிடம் கேள்வி ஒன்றைக் கேட்கின்றனர். இறந்தோரின் உயிர்ப்பைக் கேலிசெய்வது போல இருக்கிறது அவர்களுடைய கேள்வி: '... அப்படியானால், உயிர்த்தெழும்போது அவர் எழுவருள் யாருக்கு மனைவி ஆவார்?' 

சதுசேயர்கள் இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய நான்கு குழுக்களில் முதன்மையானவர்கள். இவர்கள் ஆலயத்தைத் தங்கள் பொறுப்பில் வைத்திருந்தனர். தலைமைக்குருக்கள் அனைவரும் சதுசேயர்களாகவே இருந்தனர். அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களிலும் இவர்களுடைய கை ஓங்கியிருந்தது. இவர்கள் எபிரேய விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே இறைநூல்களாக ஏற்றுக்கொண்டனர். ஆகையால்தான், இயேசு அவர்களுக்கு விளக்கம் சொல்லும்போது விடுதலைப் பயண நூலிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். வானதூதர்கள், ஆவிகள் போன்றவற்றின் மேல் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இறந்தோர் உயிர்த்தெழுதல் மற்றும் இறப்புக்குப் பின்னர் வாழ்வு ஆகியவற்றை இவர்கள் மறுத்தனர்.

இவர்கள் எழுப்பும் கேள்வி, 'லேவிரேட் திருமணம்' என்னும் பின்புலத்தில் உள்ளது. லேவிரேட் திருமண முறைப்படி, கணவர் ஒருவர் தன் மனைவிக்கு மகப்பேறு அளிக்காமல் இறந்துவிடுவார் எனில், அவருடைய தம்பி அப்பெண்ணை மணந்து மகப்பேறு அளிக்கலாம். அப்படி அளிக்கும் மகப்பேறு இறந்த கணவருக்குரிய மகப்பேறு என்று கருதப்படும். ஆண்கள் விதையிடுபவர்கள், பெண்கள் விதையேற்பவர்கள் என்றும், ஆண்களின் வாரிசு காப்பாற்றப்பட வேண்டும் என்றும், குழந்தைப் பேறு என்பது இறைவனின் ஆசி என்பதால் எப்படியாவது இறையாசியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிலவிய அன்றைய சிந்தனைச் சூழலை இத்திருமணம் குறித்துக்காட்டுகிறது. 

இயேசு எப்படி விடையளிக்கின்றார்?

(அ) திருமணம் செய்துகொள்வதில்லை

திருமணம் செய்துகொள்தல் என்பது வாரிசு உருவாக்கத்திற்கே. யாரும் இறப்பதில்லை என்ற நிலை வந்தவுடன் வாரிசு எதற்கு? குழந்தை எதற்கு? எனக் கேட்கின்றார் இயேசு. ஆக, இறப்புக்குப் பின்னர் உள்ள வாழ்வு நீடித்த வாழ்வு. மறுபடியும் இறப்பு என்பது அங்கே இல்லை.

(ஆ) வானதூதரைப் போல இருப்பார்கள்

அதாவது, ஆண்-பெண் என்னும் பாலின வேறுபாடு களையப்படும். திருமணம் இருக்கும் வரை ஆண்-பெண் வேறுபாடு இருக்கும். அல்லது ஆண்-பெண் வேறுபாடே திருமண உறவுக்கு வழி செய்கிறது.

(இ) கடவுளின் மக்களே

அவர்கள் கடவுளின் வாரிசுகளாக இருப்பார்கள். நிரந்தரத்தில் இருப்பார்கள். என்றும் வாழ்வார்கள். ஏனெனில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற குலமுதுவர்கள் இறந்தாலும், அவர்கள் கடவுளில் வாழ்கின்றனர். அவர் வாழ்வோரின் கடவுள்.

மேற்காணும் கேள்வி-பதில் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

இறப்பு என்ற எதார்த்தம்தான் நம் வாழ்வுக்குப் பொருள் தருகிறது. இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் நாம் வாழ்க்கையை பொருளுடனும், வேகமாகவும், நன்றாகவும் வாழ முயற்சி செய்கின்றோம். இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு நமக்கு எதிர்நோக்கைத் தருகிறது. எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போகிறது என்றால், யாரும் எதற்கும் முயற்சி செய்ய மாட்டார்கள். கல்லறையையும் தாண்டிய வாழ்வு ஒன்று உள்ளது என்பதே நம்மைப் புதிய முயற்சிகளுக்கும், மதிப்பீடுநிறை வாழ்வுக்கும் உந்தித் தள்ளுகிறது. வாழும் கடவுளின் மக்களாக இருக்கும் நாம் வாழ்வுக்குரிய காரணிகளை என்றும் தழுவிக்கொள்ள முன்வர வேண்டும்.

கோவிலுக்குள் இயேசு

இன்றைய (19 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 19:45-48)

கோவிலுக்குள் இயேசு

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் நகரை நெருங்கி வருகின்ற இயேசு, அந்நகருக்காகக் கண்ணீர் வடிக்கின்றார். எருசலேம் நகரத்தின் மையம், தலைமை, உச்சம் என்று இருந்த ஆலயத்திற்குள் நுழைகின்ற இயேசு இன்று அதைத் தூய்மைப்படுத்துகின்றார். இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் அவருடைய பாடுகளின் வரலாற்று முன்னும், யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலும் நடக்கும் நிகழ்வாகப் பதிவு செய்கின்றனர். எருசலேம் ஆலயம் தலைமைக்குருவால் நிர்வகிக்கப்பட்ட காவலர்கள்கீழ் இருந்தது. அவ்வளவு எளிதாக இயேசு உள்ளே சென்று புரட்சி செய்திருக்க வாய்ப்பில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிலர், இந்நிகழ்வை ஓர் இறையியல் நிகழ்வு என்று கருதுகின்றனர். அதாவது, மெசியாவின் வருகையின்போது ஆலயம் தூய்மையாக்கப்படும் என்பது எபிரேய நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் நிறைவாக இயேசு ஆலயத்தைத் தூய்மை செய்கிறார் என்றும், இயேசுவே மெசியா என்றும் முன்மொழிகின்றனர் நற்செய்தியாளர்கள்.

இன்னொரு பக்கம், இயேசுவின் காலத்தில் ஆலயம் அதிகாரத்தின், அடக்குமுறையின், நிர்வாகப் பிறழ்வுகளின், பேராசையின் உறைவிடமாக இருந்தது. ஆலயத்தின் பெயரால் வெகுசன மக்கள்மீது வரி சுமத்தப்பட்டது. தலைமைக்குருவே ஆலயத்தின் தலைவராக இருந்ததால், அரசியல்தளத்திலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில், ஆண்டவராகிய கடவுள் வாழும் தளம் என்றும், அவருடைய பெயர் அங்கே குடிகொள்கிறது என்றும் இஸ்ரயேல் மக்கள் நம்பியதால் ஆலயம் அவர்களுடைய உணர்வுகளில் பதிந்த ஒன்றாகவும் இருந்தது. 

ஆகையால்தான், இயேசு ஆலயத்தைத் தொட்டவுடன் அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைக்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசு ஆலயத்திற்குள் நுழைந்து அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தோரை விரட்டியடிக்கின்றார். இரண்டாம் பகுதியில், அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைத்தாலும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏனெனில், மக்கள் அனைவரும் இயேசுவைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

(அ) நோக்கப் பிறழ்வு

ஆலயம் இறைவேண்டலின் வீடாக இருக்க வேண்டிய நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால், அந்த நோக்கம் பிறழ்வுபட்டு, கள்வர் குகையாக, இருள் நிறைந்ததாக, பேராசையும் அநீதியும் நிறைந்த இடமாக மாறுகிறது. நாம் அனைவரும் ஆண்டவராகிய கடவுள் குடிகொள்ளும் கோவில் என்கிறார் பவுல். ஆலயம் என்னும் நம் உடலின் நோக்கம் இறைவன் குடிகொள்வது என்றால், அந்த நோக்கம் பிறழ்வுபடாமல் காக்கப்படுகிறதா?

(ஆ) போதனையும் போதகரும்

இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார் என்று பதிவு செய்கின்றார் லூக்கா. இயேசுவின் போதனையைக் கேட்கின்ற மக்கள் அவரைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர், அதாவது, அவரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில், இயேசுவின் போதனைக்கும் அவருடைய வாழ்வுக்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் இல்லை. இன்று நாம் இறைவார்த்தையைப் போதிக்கிறோம், அல்லது கேட்கிறோம். நம் வாழ்வில் முரண்கள் இருப்பது ஏன்?

(இ) அறச்சினம்

இரக்கம், மன்னிப்பு, பரிவு என்று இயேசு ஒரு பக்கம் போதித்தாலும், தவறுபவர்களை அவர் பொறுத்துக்கொண்டாலும், தவறுகளை அவர் பொறுத்துக்கொள்வதில்லை. அவருடைய அறச்சினம் நமக்கு வியப்பளிக்கிறது. தவறுகளோடு சமரசம் செய்துகொண்டு அவற்றைப் பொறுத்துக்கொள்வதற்குப் பதிலாக, தவறுகளைத் திருத்த முயற்சி செய்கின்றார். நான் என்னில் காணும் தவறுகளோடு சமரசம் செய்துகொள்கிறேனா? அல்லது திருத்த முயற்சி செய்கிறேனா?



Wednesday, November 17, 2021

கண்ணீர்விடும் கடவுள்

இன்றைய (18 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 19:41-44)

கண்ணீர்விடும் கடவுள்

இயேசு அழுததாக அல்லது கண்ணீர் வடித்ததாக இரண்டாம் ஏற்பாடு மூன்று நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றது. முதலில், பெத்தானியாவில் லாசரின் கல்லறைக்கு அருகில் வருகின்ற இயேசு அழுகின்றார் (காண். யோவா 11:35). தன் நண்பன் லாசருக்காக மட்டும் அவர் இங்கே அழவில்லை. மாறாக, மனுக்குலம் இறப்பு என்ற ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எண்ணி, இறப்பு ஒரு குடும்பத்திலும் ஊரிலும் ஏற்படுத்தும் இழப்பை எண்ணி அழுகின்றார். இரண்டாவதாக, கெத்சமேனித் தோட்டத்தில் இறுதி இராவுணவுக்குப் பின்னர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவர் கண்ணீர் விட்டு இறைவேண்டல் செய்ததாகவும், அந்த இறைவேண்டலைக் கடவுள் கேட்டார் என்றும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் பதிவு செய்கின்றார் (காண். எபி 5:7-9).

இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கண்ணீர் வடிக்கும் நிகழ்வு. 'இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா (19:41). மேலும், எருசலேம் நகர் விரைவில் இடிபடும் என்றும் முன்னுரைக்கின்றார். இதை இயேசுவே இறைவாக்காக உரைத்தார் என்றும், அல்லது லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தி எழுதப்படும்போது நடக்கின்ற எருசலேம் அழிவைக் கண்ணுற்று, அதை இயேசுவே முன்னுரைத்தார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

எருசலேம் இரு தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு: ஒன்று, 'அமைதிக்குரிய வழியை எருசலேம் அறியவில்லை.' 'அமைதிக்குரிய வழி' என்பது இயேசுவையே குறிக்கிறது. இயேசுவின் பணி கலிலேயாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்கு யூதேயாவிலும் அதன் தலைநகரான எருசலேமிலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. அவரை அழிப்பதற்கான வழியை எருசலேம் தேடிக்கொண்டிருந்தது. இரண்டு, 'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை.' கடவுள் தேடி வந்த அருளின் காலம் இயேசு கிறிஸ்துவில்தான் வெளிப்படுகிறது. ஏனெனில், 'ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும்' (காண். லூக் 4) என்று இயேசு நாசரேத்தூர் தொழுகைக்கூடத்தில் போதிக்கின்றார்.

இயேசுவின் இந்த அழுகை நமக்கு உணர்த்துவது என்ன?

(அ) இயலாமை

இயேசுவின் கண்ணீர் அவருடைய இயலாமை மற்றும் கையறுநிலையின் வெளிப்பாடாக இருக்கிறது. இறந்த ஒருவருக்கு அருகில் அமர்ந்து நாம் அழுகிறோம். எதற்காக? அவருடைய இழப்பை எண்ணி அழுகிறோம். ஆனால், அதற்கும் மேலாக, 'என்னால் உனக்கு ஒன்றும் செய்ய இயலவில்லையே! நான் உயிரோடிருக்க, நீ மட்டும் இறந்துவிட்டதேன்! என் உயிரை உனக்கு நான் கடனாகக் கொடுக்க இயலாதா?' என்ற இயலாமையில்தான் நாம் அழுகிறோம். இயேசு தன் பணிவாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டார். அவரை ஏற்றுக்கொள்ளாத எருசலேம் இறந்துவிட்டது. இதற்குமேல் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இயேசு அழுகின்றார்.

(ஆ) மனமாற்றத்திற்கான அழைப்பு

குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் தன் கணவரின் அலங்கோலமான நிலை காண்கின்ற மனைவி அழுகிறார். குழந்தைகளும் இணைந்து அவரோடு அழுகின்றன. இந்தக் கண்ணீரின் நோக்கம் மனமாற்றம். மனைவி மற்றும் குழந்தைகளின் கண்ணீரைப் பார்த்தாவது, குடிக்கின்ற நபர் திருந்த மாட்டாரா? என்ற எண்ணத்தில் கன்னத்தில் வடியும் கண்ணீர்த் துளிகள் இவை. ஆனால், பல நேரங்களில் இக்கண்ணீரைப் போலவே மனமாற்றத்திற்கான எண்ணமும் விரைவில் காய்ந்துவிடுகிறது.

(இ) எச்சரிக்கை

சில நேரங்களில் நம் கண்ணீர் மற்றவர்களை எச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, வன்மத்துக்கு உள்ளான ஒருவர் தனக்கு மற்றவர் இழைத்த தீமையை எண்ணி அழுகிறார். அவருடைய கண்ணீர், தீமையை இழைத்த மற்றவருக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. 'நீயும் இதைப் போல அழுவாய்!' என்று தனக்கு அநீதி இழைத்தவரைக் கண்ணீர் எச்சரிக்கிறது.

நமக்காகக் கண்ணீர் வடிக்கும் கடவுள் நம் அருகில் இருக்கிறார். 

எருசலேம் போல நாமும் அமைதிக்குரிய வழியை அறியவில்லை என்றால், கடவுள் நம்மைத் தேடி வரும் காலத்தை நாம் அறியவில்லை என்றால், இயேசு இன்று நம்மையும் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றார்.

Tuesday, November 16, 2021

உமது மினா

இன்றைய (17 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 19:11-28)

உமது மினா

மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் தாலந்து எடுத்துக்காட்டைத் தழுவியது போல இன்றைய நற்செய்திப் பகுதி இருந்தாலும், மத்தேயுவுக்கும் லூக்காவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு: (அ) மத்தேயு நற்செய்தியாளர், 'தாலந்து' கொடுக்கப்பட்டதாக எழுதுகிறார். லூக்கா, அதை, 'மினா' என்று குறிப்பிடுகின்றார். மினா தாலந்தை விட மதிப்பு குறைவானது. (ஆ) மத்தேயு நற்செய்தியாளர் ஐந்து, இரண்டு, ஒன்று வௌ;வேறு அளவில் தாலந்துகளைக் கொடுக்கின்றார். லூக்கா நற்செய்தியில், பத்து பேர், ஆளுக்கு ஒரு மினா வழங்கப்பட்டதாகக் காண்கிறோம். (இ) மத்தேயு நற்செய்தியில் வீட்டுத் தலைவர் நெடுந்தொலைவு பயணம் செய்கின்றார். லூக்கா நற்செய்தியில் அவர் அரசுரிமை பெறுவதற்காகச் செல்கின்றார். (ஈ) தாலந்துகளைப் பணியாளர்களுக்குக் கொடுக்கின்ற தலைவர் அவர்களுக்கு எந்தவொரு அறிவுரையும் சொல்வதில்லை. ஆனால், மினாக்களைக் கொடுக்கின்ற தலைவர், அவற்றை வைத்து வாணிபம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார். (உ) லூக்கா நற்செய்தியில் மூன்று பேரிடம் மட்டுமே கணக்குக் கேட்கப்படுகின்றது. (ஊ) மூன்றாவது பணியாளர் மத்தேயு நற்செய்தியின்படி, தாலந்தை மண்ணில் புதைக்கின்றார். லூக்கா நற்செய்தியின்படி, மினாவை கைக்குட்டையில் முடிந்து வைக்கிறார் பணியாளர். (எ) மத்தேயு நற்செய்தியில் தலைவர் நல்ல பணியாளர்களை வெறும் சொற்களால் பாராட்டுகின்றார். லூக்கா நற்செய்தியில் அவர்களை வாழ்த்துவதோடல்லாமல் உடனடியாக அவர்களை நகரங்களுக்கு மேற்பார்வையாளர் ஆக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் சந்திக்கின்ற மூன்றாவது பணியாளர், 'இதோ! உமது மினா!' என்று தன் தலைவரிடம் ஒப்படைக்கின்றார்.

இவர் செய்த தவறு என்ன?

(அ) தலைவரைப் பற்றிய புரிதலைச் செயல்படுத்தாமல் இருக்கின்றார்.

தன் தலைவர் கண்டிப்புள்ளவர் என்பதை அறிந்துள்ளார் பணியாளர். ஆனால், அறிதலுக்கேற்ற செயல்பாடு அவரிடம் இல்லை. எடுத்துக்காட்டாக, சர்க்கரை நோய் உள்ளவர் சர்க்கரை எடுத்தல் கூடாது என்பது அறிதல். அறிதலுக்கு ஏற்ற செயல்பாடு இருந்தால்தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிதல் மட்டும் அல்லாமல் செயலும் இணைந்து நிற்றல் வேண்டும்.

(ஆ) எளிதானதைச் செய்கின்றார்.

எளிதானதைச் செய்யலாம், அல்லது சரியானதைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, காலையில் நான் எழுந்து உடற்பயிற்சி செய்தால் என் உடல்நலத்துக்கு உகந்தது என உணர்கிறேன். ஆனால், காலையில் மணி அடித்தவுடன் நான் எழாமல் தொடர்ந்து உறங்குகிறேன். அப்படிச் செய்யும்போது நான் எளிதானதைச் செய்கிறேனே அன்றி, சரியானதைச் செய்யவில்லை. மினாவைக் கைக்குட்டையில் முடிந்துகொள்வது எளிது. வியாபாரத்தில் முதலீடு செய்வது சரியானது. அந்த நபர் எளிதானதைச் செய்யவே விரும்புகிறார்.

(இ) புதிய முயற்சிகள் பற்றிய அச்சம்.

வியாபாரத்தில் மினாவை இழந்துவிடக் கூடும் எனப் பயப்படுகின்றார் பணியாளர். ஆனால், அதற்கு மாற்றாக வட்டிக்கடை இருப்பதை அவர் மறந்துவிடுகின்றார். யோசிக்கும்போது புதிய முயற்சிகளும், முயற்சிகளுக்கான வழிகளும் பிறக்கவே செய்யும். நம் கதைமாந்தர் கொண்டிருந்த அச்சம் புதிய முயற்சிகளை அவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகின்றது.

லூக்கா நற்செய்தியில், இறையாட்சிக்கான நேரடியான உவமையாக இது இல்லை என்றாலும், சீடர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வரையறுத்துக்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கின்ற பாடமாக இது இருக்கிறது.  

ஆண்டவராகிய கடவுள் என்னும் நம் தலைவர் பற்றிய நம் புரிதல் என்ன? நான் எளிதானதையே செய்ய விழைகிறேனா? சீடத்துவத்தில் நான் எடுக்கும் புதிய முயற்சிகள் எவை?

Monday, November 15, 2021

சக்கேயு

இன்றைய (16 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 19:1-10)

சக்கேயு

'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும்!' என்பது ஜென் தத்துவத்தின் மொழி. சக்கேயு தயாராக இருக்கும்போது இயேசு என்னும் நட்சத்திரம் தோன்றுகிறார். சக்கேயு நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஓர் இனம் புரியாத சோகமும் வேகமும் இழைந்தோடுவதை நம்மால் காண முடிகிறது. 

(அ) சக்கேயுவின் சோகம்

சக்கேயு மூன்று நிலைகளில் சோகமாக இருந்திருக்க வேண்டும். ஒன்று, வாழ்வியல் வெற்றிடம். சக்கேயுவிடம் பணம், அதிகாரம், ஆள்பலம் நிறைய இருந்தது. ஆனால், அவை எதுவும் அவருக்கு நிறைவு தரவில்லை. அவர் யூதர்களிடமிருந்து பணத்தை எடுத்து உரோமையர்களிடம் கொடுத்ததால் அவருடைய இனத்தாரே அவரை வெறுத்து அவரிடமிருந்து தள்ளி நின்றிருப்பர். ஆக, உறவுநிலையும் அவருக்கு வெற்றிடமாகத்தான் இருந்திருக்கும். இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார். தன் வெற்றிடத்தை இயேசு நிரப்ப மாட்டாரா என நினைத்து அவரைக் காண ஏக்கமாயிருக்கின்றார்.

இரண்டு, சக்கேயுவின் குறைபாடுகள். 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. இதை அவருடைய ஒட்டுமொத்தக் குறைபாடுகளின் உருவகம் என எடுத்துக்கொள்ளலாம். உடலளவில் குட்டையாக இருக்கின்றார். தன் கோபம், எரிச்சல், அநீதியான எண்ணம் போன்றவற்றால் உள்ளத்தாலும் குட்டையாக இருந்திருப்பார்.

மூன்று, மக்களின் கேலிப் பேச்சுகள். அவருடைய பணியும் அவருக்குக் கடினமாகவே இருந்திருக்க வேண்டும். யாரும் தாங்கள் உழைத்த பொருளை வரியாகத் தானம் செய்வதில்லை. வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கவே மக்கள் முயற்சி செய்வர். ஆக, அவர்களின் பொய்யைக் கண்டுபிடித்து, அவர்களைத் துன்புறுத்தி, அச்சுறுத்தி வரி வசூலிக்க அவர் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும். இவரைப் பாவி என மக்கள் முத்திரை குத்தினர். ஆலயத்திலும், தொழுகைக்கூடங்களிலும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். மேலும், உரோமை அரசும் நிறைய அச்சுறுத்தல்களை அவருக்குக் கொடுத்திருக்கும்.

இவ்வாறாக, உள்ளத்தில் வெற்றிடம், உடல் மற்றும் உறவுநிலைகளில் குறைபாடு, மக்களின் கேலிப் பேச்சுகள், கடவுளிடமிருந்து அந்நியப்பட்ட மனநிலை என சோகத்தில் மூழ்கியிருந்த சக்கேயு, தான் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற முடிவெடுக்கின்றார். முடிவெடுக்கின்ற அந்த நொடியில் மாற்றம் நிகழ்கிறது. 

(ஆ) சக்கேயுவின் வேகம்

முடிவெடுத்தவுடன் விரைவாகச் செயல்படுகின்றார். இயேசுவைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம் வாழ்வா – சாவா என்பது போல அவரை விரட்டுகிறது. பார்க்க விரும்பும் ஆவல். ஆனால், அடுத்தடுத்த தடைகள். கூட்டம் பெரிய தடையாக இருக்கிறது. உடலளவிலும் அது தடையாக மாறுகிறது. உளவியல் அளவிலும் தடையாக மாறுகிறது. ஆக, தான் தனியே மரத்தில் ஏற முயற்சிக்கின்றார். வயது வந்த ஒருவர் மரத்தில் ஏறுவதை நம் சமூகம் கேலியாகவே பார்க்கும். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தன் உள்ளத்தின் சோகம் இந்தக் கேலியைவிடப் பெரியதாக இருந்ததால், அது அகல்வதற்கு எப்படியாவது ஒரு வழி பிறக்காதா என விரைவாக ஏறுகின்றார்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன் அண்ணாந்து பார்க்கிறார். குனிந்து பார்ப்பதுதான் கடவுளின் இயல்பு. ஆனால், இங்கே கடவுள் அண்ணாந்து பார்க்கின்றார். ஒரு நொடி, இங்கே சக்கேயு கடவுளாக மாறுகின்றார். கீழே இயேசு நிற்பதைக் காண்கின்றார். கடவுளுக்கு மேலே நிற்பது நல்லதன்று என்று இறங்கி வருகிறார். 'உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று இயேசு சொன்னபோது சக்கேயுவின் மனம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும்!

அந்த மகிழ்ச்சியில் அவர் மீண்டும் எழுந்து நிற்கின்றார். தன் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும், எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்கவும் உறுதி ஏற்கின்றார். தன் வாழ்வின் தேடல் நிறைவுபெற்றதாக உணர்கிறார். இயேசுவைக் கண்டவுடன் தன் வாழ்வு முடிந்துவிட்டதாகவும், இனி தனக்கு எதுவும் தேவையில்லை என்றும் நினைக்கிறார் சக்கேயு.

'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார் இயேசு.

ஆக, மீட்பு என்பது மறுவுலகில், நாம் இறந்த பின்னர் நடக்கும் நிகழ்வு அல்ல. மாறாக, இன்றே இப்பொழுதே நாம் அதை அனுபவிக்க முடியும்.

'இழந்து போனதைத் தேடி மீட்க மானிட மகன் வந்திருக்கிறார்' என்று இயேசு தன் வருகையின் நோக்கத்தையும் முன்வைக்கின்றார்.

மற்றவர்களைப் பொருத்தவரையில் சக்கேயு தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்தார். ஆனால், சக்கேயுவைப் பொருத்தவரையில் அவர் தன் இழத்தலில்தான் அனைத்தையும் பெற்றார்.

நம் வாழ்வின் சோகமும் வேகமும் இறைவனை எதிர்கொள்ளும் நேரங்கள்.

சோகம் நம் உள்ளத்தை நிரப்பினால் வேகம் குறைக்க வேண்டாம். வேகம் கூட்டுதல் சோகத்தைக் களைக்கும்.


Sunday, November 14, 2021

இது என்ன?

இன்றைய (15 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 18:35-43)

இது என்ன?

இயேசு எரிகோவுக்குச் செல்லும் வழியில் பார்வையற்ற ஒருவருக்கு பார்வை தருகின்றார். இந்த நிகழ்வை மாற்கு நற்செய்தியிலிருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாம் வாசித்தோம். மாற்கு பதிவு செய்கின்ற பல நுணுக்கமான தகவல்களை லூக்கா விட்டுவிடுகின்றார். மாற்கு நற்செய்தியில் பார்வையற்றவரின் பெயர் பர்த்திமேயு என வழங்கப்பட்டுள்ளது. பர்த்திமேயு இயேசு வந்திருப்பதை தானாக உணர்ந்துகொள்கின்றார். ஆனால், லூக்கா நற்செய்தியில், 'இது என்ன?' என்று கேட்கின்றார். மாற்கு நற்செய்தியில் அவர் தன் மேலுடையை உதறிவிட்டு வருகின்றார். லூக்காவில் அந்தக் குறிப்பு இல்லை. 

மாற்கு நற்செய்தியாளர் இந்த நிகழ்வை இயேசுவின் வல்ல செயலாகப் பதிவு செய்யாமல், ஓர் உருவகமாகவே பதிவு செய்கின்றார். ஏனெனில், இயேசுவுக்கு அருகில் இருந்த அவருடைய சீடர்கள், பார்வை பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களால் இயேசுவை, 'தாவீதின் மகன்' என்று கண்டுகொள்ள இயலவில்லை. ஆனால், இங்கே, பர்த்திமேயு பார்வையற்ற மனிதராக இருந்தாலும் இயேசுவை, 'தாவீதின் மகன்' என்றும், 'மெசியா' என்றும் கண்டுகொள்கின்றார். 

லூக்கா பதிவின்படி, தனக்கு முன் மக்கள் கூட்டம் கடந்து போவதைக் கவனிக்கின்ற பார்வையற்ற நபர், 'இது என்ன?' எனக் கேட்கின்றார். 'நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார்' என்று அவருக்குச் சொல்லப்படுகிறது. 'நாசரேத்து இயேசு' என்ற சொற்களைக் கேட்டவுடன், 'இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' என கூக்குரலிடுகின்றார் அவர்.

'இது என்ன?'

இந்த மனிதரின் ஆவல் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. இந்த ஒன்றைக் கேள்வியைக் கேட்க அவர் தயங்கியிருந்தால், அல்லது 'யார் போனா என்ன?' என்று ஓய்ந்திருந்தால் அவர் பார்வை பெற்றிருக்க முடியாது. இந்தக் கேள்வியைக் கேட்குமாறு தூண்டிய அவருடைய உள்ளுணர்வை நாம் பாராட்ட வேண்டும். அல்லது அவர் தன்னுடைய உள்ளுணர்வுக்கு உடனடியாகச் செவிகொடுத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ஒரே ஒரு கேள்வி அவரை முழுவதுமாக மாற்றிவிடுகின்றது. அவருக்குப் பார்வை அளிக்கின்றது. வழியோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டவர் இயேசுவைப் பின்பற்றத் தொடங்குகின்றார்.

மாற்றம் ஒரே இரவில் வருவதில்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், இங்கே மாற்றம் ஒரே மாலைப்பொழுதில் நடந்தேறுகிறது. 

பார்வையற்ற நபர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் மூன்று:

(அ) நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் நடப்பவை பற்றிய கவனம். கவனம் எப்போது வரும்? அக்கறை மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்களே அனைத்தையும் கவனித்துப் பார்ப்பர் அல்லது கவனம் செலுத்துவர். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நடப்பவையும் நம்மேல் நேர்முகமான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

(ஆ) கேள்வி கேட்பது. கேள்வி கேட்பது ஒரு கலை. சிலருடைய கேள்விகள் நம்மை முகம் சுளிக்க வைக்கும். சிலருடைய கேள்விகள் எரிச்சல் தரும். சிலருடைய கேள்விகள் நம் சிந்தனையைத் தூண்டும். 'இது என்ன?' என்று அந்த நபர் கேட்ட கேள்வி, மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டியிருக்கும். இறைவனிடம் அல்லது ஒருவர் மற்றவரிடம் நாம் இன்று கேள்விகள் கேட்கிறோமா?

(இ) நாசரேத்து இயேசுவே தாவீதின் மகன்

நாசரேத்து இயேசுவை, 'தாவீதின் மகன்' என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற நபர். அந்த நம்பிக்கையே அவருக்கு நலம் தருகிறது. இயேசுவும் உடனடியாக நின்று பதிலிறுப்பு செய்கின்றார். 

'இது என்ன?' என்னும் ஒற்றைக் கேள்வி அவரின் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றியது போல, நம் வாழ்வையும் மாற்றும்.

Saturday, November 13, 2021

நான் அசைவுறேன்!

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

I. தானியேல் 12:1-3 II. எபிரேயர் 10:11-14,18 III. மாற்கு 13:24-32

நான் அசைவுறேன்!

ஆண்டின் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு இன்று. வருகின்ற ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. இன்றைய ஞாயிற்றை ஏழைகள் ஞாயிறு என்றும் நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளின் வாசகங்கள் உலகத்தின் இறுதி நாள்கள் பற்றிப் பேசுகின்றன.

முதல் வாசகம் தானியேல் நூலின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாட்டு நடை என்னும் இலக்கியக் கூற்றை நாம் இங்கே காண்கிறோம். இந்த நடையில் நிறைய உருவகங்களும், அடையாளங்களும், குறிச்சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. துன்பம், போர், வன்முறை, வறுமை, பசி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் என வருந்தும் உலகம் நொடிப்பொழுதில் முடியும் அல்லது மாறும் என மொழிகிறது இந்த நடை. சிரிய அரசர் நான்காம் எபிஃபேனஸ் காலத்தில் யூதர்கள் அனுபவித்த துன்பங்களின் போது தானியேல் காட்சி காண்கின்றார். நீதித் தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதைக் காட்சியாகக் காண்கிறார் தானியேல். மிக்கேல் என்னும் அதிதூதர் யூத நாட்டின் காவல் தூதராக இருக்கின்றார். மக்களின் கருத்துகளைக் கடவுள்முன் கொண்டு செல்பவர் இவரே. கடவுளின் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றுபவரும் இவரே. உலக முடிவில் தீமைக்கு முடிவு கட்டுவதற்காக கடவுள் மிக்கேல் அதிதூதரை அனுப்புகிறார். இந்த நேரத்தில் இறந்தோர் உயிர் பெறுவர். நல்லோர் எனவும், தீயோர் எனவும் இரு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்படுவர். தானியேல் நூலைப் பொருத்தவரையில் நல்லோர் என்பவர் கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, துன்பங்களை ஏற்றுக்கொண்டோர் ஆவர்.

இரண்டாம் வாசகத்தில், எருசலேமில் வாழ்ந்த தலைமைக் குருக்களுக்கும் ஒப்பற்ற தலைமைக் குருவாம் இயேசுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் ஆசிரியர். ஒரே பலியால் - தன் உடலால் - நிறைவுள்ளவராக்குகிறார் இயேசு. நிறைவுள்ளவராக்குதல் என்பது பலி செலுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதலைக் குறிக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், மாற்கு நற்செய்தியில் உள்ள திருவெளிப்பாட்டு நடைப் பகுதியை – உலக இறுதியை – வாசிக்கின்றோம். உலக இறுதியின்போது வான்வெளியில் நிகழும் மாற்றங்களையும், மானிட மகனின் வருகையையும் முன்மொழிகின்ற இயேசு (மாற்கு), 'விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். என் வார்த்தைகள் ஒழிய மாட்டா' என்கிறார். மேலும், அந்த நாள் வானகத் தந்தைக்கு மட்டுமே தெரியும்.

ஆக, தொடங்கியது அனைத்தும் முடிவுறும் என்றும், இறுதியில் நல்லோர் வெல்வர் என்றும், இயேசுவின் வழியாக நாம் அனைவரும் நிறைவுள்ளவராக்கப்படுவோம் என்றும் முன்மொழிகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

உலகம் அழிந்தாலும், வான்கோள்கள் அதிர்ந்தாலும், நல்லோர்-தீயோர் எனப் பிரிக்கப்பட்டாலும், நமக்கு இவை அனைத்தும் அச்சம் தந்தாலும், 'நான் அசைவுறேன்!' எனத் துணிவோடும் உறுதிபடவும் கூறுகின்றார் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 16). 'ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார். எனவே, நான் அசைவுறேன்' என்கிறார் பாடல் ஆசிரியர். ஆண்டவரைத் தன் கண்முன் வைத்துள்ளவர்கள் அசைவுறுவதில்லை.

இன்று நான் கண்ட திருப்பலி ஒன்றில், பெங்களுரு பேராயர் அவர்கள், மூன்று 'டி' பற்றிப் பேசினார்கள். இராணுவப் பயிற்சியின்போது கற்பிக்கப்படும் இந்த மூன்று 'டி'யை நம் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்:

(அ) டிவோஷன். தமிழில், 'அர்ப்பணம்' என்று சொல்லலாம். ஆண்டவருக்கும், வாழ்க்கைக்கும், நம் அழைப்புக்கும் நாம் கொடுக்கும் பதிலிறுப்பே டிவோஷன். தானியேல் காலத்தில் சிலர் தங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளைப் பற்றிக்கொண்டனர். அப்படி அவர்கள் பற்றிக்கொண்டதே அர்ப்பணம்.

(ஆ) டெடிகேஷன். 'அர்ப்பணம்' என்பது 'உணர்வு' என்றால், 'ஈடுபாடு' என்பது செயல். எடுத்துக்காட்டாக, நான் இறைவனுக்கு அர்ப்பணமாக இருந்தால், அவர்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவேன். குடும்ப உறவில், கணவன் மனைவியிடமும் மனைவி கணவரிடமும் அர்ப்பணத்தோடு இருந்தால், அவர்கள் தாங்கள் செய்கின்ற அனைத்திலும் ஈடுபாட்டுடன் விளங்குவர்.

(இ) டிஸிப்லின். 'ஒழுக்கம்' என்று இதை மொழிபெயர்க்கலாம். தீர்க்கமான முடிவும் அந்த முடிவைச் செயல்படுத்துதலுமே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது அறநெறி சார்ந்த ஒன்று அல்ல. மாறாக, அது அன்றாட வாழ்வியல் சார்ந்தது.

அர்ப்பணம், ஈடுபாடு, ஒழுக்கம் என்னும் அணிகலன்கள் நம்மை அலங்கரித்தால், நாம் எச்சூழலிலும் அசைவுறாமல் நிலைத்து நிற்க முடியும்.

ஏழையர் ஞாயிற்றுக்கும் இந்த இறைவார்த்தை வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு?

ஏழ்மை என்பது சார்பு நிலையை உணர்தல். ஏழையர் இயல்பாகவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்தலைப் பண்பாகக் கொண்டவர்கள். பல நேரங்களில் பணம், பொருள், ஆற்றல், அதிகாரம், ஆள்பலம் ஆகியவற்றைக் கொண்டு தற்சார்பு நிலையில் நாம் வாழ விழைகின்றோம். நம் தற்சார்பு இறைவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நம்மை அந்நியப்படுத்துகின்றது.

ஏழ்மை என்னும் சார்புநிலையை திருப்பாடல் ஆசிரியர் கொண்டிருந்ததால்தான், இறைவனைப் பற்றிப் பிடித்துக்கொண்ட அவர், 'நான் அசைவுறேன்!' என்று துணிந்து சொல்கின்றார்.

இன்று நம் நாட்டில் குழந்தைகள் தினத்தையும் கொண்டாடுகின்றோம். குழந்தைகள் இயல்பாகவே மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்கள். மற்றவர்களைச் சார்ந்த நிலையை உணர நமக்கு நிறைய தாழ்ச்சி தேவை. நாம் இருக்கும்போது ஒருவர் மற்றவரையும், இறக்கும்போது இறைவனையும் சார்ந்திருக்கின்றோம்.

'நான் அசைவுறேன் - ஏனெனில், நான் சாய்ந்துள்ளேன்!'