Wednesday, June 10, 2015

எறும்பைப் பாருங்கள்!

'எறும்பைப் பாருங்கள். அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்.
அதற்குத் தலைவனுமில்லை. கண்காணியுமில்லை. அதிகாரியுமில்லை.
எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்.
அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.'
(நீமொ 6:6-8)

கடனைப் பற்றிப் பேசிய நீதிமொழிகள் நூல் ஆசிரியர் தொடர்ந்து சோம்பலைத் தவிர்ப்பதைப் பற்றிச் சொல்வதோடு, சுறுசுறுப்பின் அடையாளமாக எறும்புகளை முன்வைக்கின்றார்.

எறும்புகள் ஏறக்குறைய எல்லா மரபுகளிலும் சுறுசுறுப்பின் அடையாளமாகச் சொல்லப்படுகின்றன. மிக மிக பலவீனமான உயிர்கள் இந்த எறும்புகள். ஒரே ஒரு விரலை வைத்து இழுத்து ஒரு 1000 எறும்புகளை ஒரே நேரத்தில் நாம் கொன்றுவிட முடிகிறது. இப்போ எறும்பு சாக்பீஸ், எறும்பு பவுடர், ஏன் எறும்பை விரட்டும் செயலிகள்கூட ஆன்ட்டிராய்ட் மற்றும் ஐஃபோன்களில் வந்துவிட்டன.

இந்த எறும்புகள் இப்படி மாய்ந்து, மாய்ந்து சேர்த்து வைக்கின்றதே! ஆனால், ஒரு மழை பெய்தால் எல்லாம் நனைந்துவிடும்தானே! மேலும், இந்த எறும்பு இருப்பதே சிறியது. அதன் வயிறு இன்னும் சிறியதாக இருக்கும். அந்தச் சின்ன வயிற்றை நிரப்ப அது ஓடிக்கொண்டே இருக்கின்றது.

சித்தெறும்பு, கட்டெறும்பு, சாமி எறும்பு, விஷ எறும்பு என நாம் எந்தவகை எறும்பைப் பார்த்தாலும், ஒன்று அவைகள் ஓடிக்கொண்டிருப்பதாகப் பார்க்கிறோம். அல்லது இறந்து கிடப்பதாகப் பார்க்கிறோம். எறும்பு தூங்குவது போலவோ, அல்லது ஒரு இடத்தில் நின்றுகொண்டிருப்பதுபோலவோ நாம் பார்த்ததில்லை. அவைகள் எப்போதுதான் தூங்கும்?

ஆக, எறும்பு என்றால் இயக்கம். ஒன்று இயங்க வேண்டும். அல்லது இறக்க வேண்டும். இதுதான் அவைகளின் பாலிசி. இரண்டிற்கும் இடையே 'வயா மீடியா' கிடையாது.

சுறுசுறும்பு என்பதன் அர்த்தம் இதுதான். வாழ்வில் இயக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது முடிந்தால், அடுத்த வேலை வந்துவிடுகிறது என்று புலம்புவார்கள் சிலர். ஆனால், அதுதான் வாழ்க்கை. ஒரு அடி முடிய, நாம் அடுத்த எடி எடுத்து வைப்பதில்லையா? ஒரு சுவாசம் முடிய, நாம் அடுத்த முறை சுவாசிப்பதில்லையா? ஆக, அடுத்தடுத்து வாழ்க்கை நிகழ்வுகள் வந்து கொண்டேதான் இருக்கும். நாம் இயங்க வேண்டுமா அல்லது ஒரே இடத்தில் இருக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

இன்று நாம் பரபரப்புதான் சுறுசுறுப்பு என நினைக்கின்றோம். நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கிறோம். இரவில் உட்கார்ந்து, 'இன்று நான் என்ன செய்தேன்?' என்று சுயஆய்வு செய்தால் நம்மிடம் பதில் இல்லை.

வாழ்வின் இயக்கம் நம் இலக்கு நோக்கி நம்மை நகர்த்தியது என்றால் நாமும் எறும்புகளே!


2 comments:

  1. நாம் வாழும் உலகத்தில் சிறிது தலையை அசைத்துப் பார்த்தாலே போதும்;கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன என்ற பாடத்தை நாம் புரிந்து கொள்ள 'எறும்பு'களைக்கூட விட்டுவைக்கவில்லை 'நீதிமொழிகளின்' ஆசிரியர். அழகான பாடம் நாம் கற்றுக்கொள்ள...'ஒன்று இயங்க வேண்டும்; இல்லை இறக்க வேண்டும்.' அதுமட்டுமல்ல....நம்முடைய இயக்கம் கூட இன்னொருவரின் இயங்குதலுக்குக் காரணமாயிருக்கும் பட்சத்தில் மட்டுமே நம் இயக்கத்திற்கும் பொருள் இருப்பதாகத் தெரிகிறது.ஆகவே இயங்குவோம்; பிறரையும் இயங்க வைப்போம்.நல்ல பதிவு.

    ReplyDelete
  2. அருமையான பதிவு வரிகள்

    ReplyDelete