Thursday, June 4, 2015

உடற்பயிற்சி ஆசிரியர்

'பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளிவிடாதே.
அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.
தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல்,
ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்!'
(நீதிமொழிகள் 3:11-12)

தினமும் திருப்பலிக்குச் செல்லும் ஒருவர் ஒருநாள் ஏதோ காரணங்களுக்காக திருப்பலிக்குச் செல்ல முடியவில்லை என வைத்துக்கொள்வோம். அன்று அவருக்கு வங்கியில் முக்கியமான பணப் பரிவர்த்தணை வேலை இருக்கிறது. எல்லாம் தயராகி வங்கிக்குச் செல்கிறார். வங்கியில் அன்று அவருக்குரிய வேலையைச் செய்ய வேண்டிய மேனேஜர் மட்டும் விடுமுறை. எப்படியாவது அந்த வேலை முடிந்தால் நன்றாக இருக்கும் என அங்கலாய்க்கிறார். ஆனால், வேறு யாரும் அதை செய்ய முன்வரவில்லை. சோகத்துடன் வீடு திரும்புகிறார். வரும் வழியில் அவருக்கு நினைவிற்கு வருகிறது: 'ஐயோ! இன்னைக்கு நாம பூசைக்கு போகலையே! அதான் இப்படியெல்லாம் நடக்குது!'

இந்த நபர் தன்னுள் இப்படி நினைப்பது சரியா?

இந்த நினைவு உங்களுக்கும், எனக்கும் எப்போதாவது கண்டிப்பாக வந்திருக்கும்.

இவரின் கடவுள் ஒருநாள் வராததற்கு தண்டிக்கிறார் என்றால், இவ்வளவு நாட்கள் வந்ததற்கு அன்பளிப்பு கொடுத்திருக்கலாமே!

முதல் ஏற்பாட்டு காலத்தில் நிலவிய மனப்பாங்கும் இதுதான். தோல்வி, விரக்தி, நோய், மரணம் என அனைத்தும் கடவுளின் கோபத்தின் விளைவு என சொல்லப்பட்டது. இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய நாளின் இறைவாக்குப் பகுதியில் நீதிமொழிகள் நூலின் ஆசிரியர், 'கடவுள் இவ்வாறு கண்டித்துத் திருத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!' என்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் கண்டித்துத் திருத்துவது என்னவென்றால், நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு வேலையை செய்ய முடியாமல் செய்யும் சோம்பலை முறியடிப்பதே எனக்கு நானே செய்யும், அல்லது கடவுள் எனக்கு செய்யும் கண்டித்துத் திருத்துதல்.

ஞாயிறு மறையுரையை நான் புதன்கிழமையே எழுத வேண்டும் என முடிவெடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். செவ்வாய் கிழமையிலிருந்து அதைத் தள்ளிப்போடும் எண்ணம் உருவாகும். புதன் எழுதலாம். வியாழன் எழுதலாம். வெள்ளி எழுதலாம். சனி எழுதலாம். இவ்வாறு நினைத்து சனியும் வந்து இருட்டிவிடும். காலையில் பிரசங்கம் வைக்க வேண்டுமே. ஓ! இந்த வாரம் இந்த வாசகம்தானே! சமாளித்துக்கொள்ளலாம்! இந்தத் தள்ளிப்போடுதல் தரும் சிற்றின்பத்தை விடுத்து, கொஞ்சம் கையும், உடலும் வலித்தாலும் புதன்கிழமையே உட்கார்ந்து எழுதுவதுதான் கண்டித்துத் திருத்துதல்.

வாழ்க்கை ஒரு நல்ல உடற்பயிற்சி ஆசிரியர். உடலுக்கே வலிக்காமல் பயிற்சி சொல்லிக்கொடுப்பவர் நல்ல உடற்பயிற்சி ஆசிரியர் அல்லர். உடலின் எந்த தசை உடற்பயிற்சியின்போது வலிக்கிறதோ அந்த தசையே வலிமை பெறுகிறது.

வலி உள்ளிருந்தாலும், வெளியிலிருந்தாலும் அது வளர்ச்சியையே குறிக்கிறது!


1 comment:

  1. இந்தக்காலத் தலைமுறைக்குப் பிடிக்காத ஒரு விஷயம் புத்திமதி பெறுதலும்,கண்ணடிக்கப் படுதலும்.இவர்களுக்காக வருவதே இன்றையப்பதிவு." நம்மிடம் பாசமும்,உரிமையும் உள்ளவர்களால் மட்டுமே நம்மைக் கண்டித்துத் திருத்த முடியும்....என்பதை இவர்கள் ஞாபகம் வைத்தால் போதும்.நம் உடம்பின் பலம்,பலவீனங்களை நம் கட்டுக்குள் கொண்டுவரலாம்தான்.ஆனால் நமக்குள்ளே இருப்பதைக் காட்டிலும் வெளியிலிருந்து வருவதற்கு 'மவுசு' அதிகம்தானே!

    ReplyDelete