Friday, June 26, 2015

உனக்கு நல்லதாகப் படுவதை

ஆபிராம் சாராயிடம், 'உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்' என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். (தொநூ 16:6)
(எபிரேயத்திலிருந்து இந்த மொழிபெயர்ப்பை செய்தவர்கள் சாராயை 'அவர்' என்றும், ஆகாரை 'அவள்' எனவும் குறிப்பிடுகின்றனர். ஆண்டான்-அடிமை பேதம் விவிலிய மொழிபெயர்ப்பிலும் இருப்பது தவிர்க்கப்படலாம். எபிரேய மூலத்தில் இந்த பேதம் இல்லை!)

மனைவி பேச்சை அப்படியே கேட்கிற கிளிப்பிள்ளை ஆபிராமைதான் இன்றைய இறைவாக்கு சுட்டிக்காட்டுகிறது. சாராய் தன் பணிப்பெண்ணை அனுப்பி 'இவரோடு உறவுகொள்' என்றால், உடனே உறவு கொள்கின்றார். 'இவள் வேண்டாம்' என்றால், உடனே 'சரி! உனக்கு எது நல்லதுன்னு படுதோ அதைச் செய்!' என்கிறார். விவிலியத்தில் ஆணாதிக்கம் இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த இறைவாக்கைப் படித்தால் பின்வாங்க வேண்டும்.

'தனக்கு கிடைத்திருக்கும் இவன் தன்னை விட்டு போகமாட்டான் என தெரிந்தால், பெண்கள் அவர்களைப் படுத்தும் பாடு இருக்கிறதே!' என்று புலம்புவார் டாஸ்டாய்வ்ஸ்கி (ரஷ்ய எழுத்தாளர்). அப்படித்தான் இந்த சாராயும் படுத்தியிருக்க வேண்டும்.

'நல்லதுன்னு எது படுதோ அதைச் செய்!' என ஆபிராம் சொல்ல, சாராய், பாவம் அந்தப் பணிப்பெண் ஓடும் அளவிற்கு கொடுமைப்படுத்துகின்றார். (இது கடவுளின் திட்டம் என்று சிலர் சொல்வர். வாயில்லா பூச்சியை கொடுமைப்படுத்துவதுதான் கடவுளின் திட்டமா?)

நம் கண்ணுக்கு நல்லதுன்னு படுவது அடுத்தவர்களுக்கு துன்பமாகத் தெரிகிறது!

இன்று ஒரு பாட்டியை சந்திக்க முதியோர் இல்லம் சென்றேன். பாட்டி பெயர் கிளவுதியா. வயது ஏறக்குறைய 80 இருக்கும். சில நாட்களாக ஆலயத்திற்கு வருவதில்லை என்பதால் அவரின் தங்கைய எலிசாவிடம் (வயது 73) விசாரித்தேன். கிளவுதியாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டதாக அழாதகுறையாய் சொன்னார். பார்வையாளர் நேரம் விசாரித்து, பழம், காய்கறி என்று சென்றேன்.

இத்தாலியில் நான் இதுவரை பார்த்த முதியோர் இல்லங்கள் மருத்துவமனைபோல இருந்தன. ஆனால், இன்று நான் சென்றது ஒரு 'வில்லா' டைப் - அதாவது, பண்ணைவீடு போன்றது. ஒரு பெரிய வீடு. ஏறக்குறைய பத்து பாட்டிகள் இருந்தனர். இவர்களைக் கவனிக்க ஒரு கம்பெனி குத்தகை எடுத்திருந்தது - சாப்பாடு, அறை நிர்வாகம் மற்றும் மருத்துவம்.

கிளவுதியாவின் குடும்பத்தார் தினமும் வேலைக்குச் செல்வதாலும், வீட்டில் பணிப்பெண் வைப்பது அதிக செலவு என்பதாலும், முடிவெடுத்து தங்கள் அம்மாவை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றனர்.

உண்ண உணவு, உடுத்த உடை, பார்க்க டிவி, பணிபுரிய தாதிகள் இருந்தாலும், பாட்டியில் கண்களில் ஒரு வெறுமை. இந்த பத்துப் பாட்டிகளும் ஒருவர் மற்றவருக்கு புதிது. இன்னும் பழகி, பேசி என்ன செய்ய முடியும் அவர்களால்? ஆக, எங்கும் நிசப்தம். சக்கரநாற்காலிகள் கிரிச் சத்தம் தவிர வேறொன்றும் கேட்கவில்லை.

ஆண்டவர் பேதுருவைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்தாம் நினைவிற்கு வந்தன:

'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார்!' (யோவான் 21:18)

நம் கண்ணுக்கு நல்லதெனப்படுவது, அடுத்தவருக்குத் துன்பமாக இருந்தால் என்ன செய்வது?


1 comment:

  1. ' முதுமை'....இது ஒரு அழகான விஷயம் எனச் சொல்லப்பட்டாலும் அதை இனிமையாக்குவதும்,கொடுமையாக்குவதும் சம்பந்தப்பட்டவர்களைச்சுற்றியிருப்பவர்களைப் பொறுத்ததே!என்னதான் வசதிகள் நிறைந்த வாழ்க்கையாக இருப்பினும் சுற்றம் நம்மைச் சுற்றி இல்லாத வாழ்க்கை கிளியைத் தங்கக் கூட்டுக்குள் அடைப்பது மாதிரிதான்.வளர்ந்து வரும் நாகரீக உலகில் எல்லாமே ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயமாகி விட்டது.இதைப்பார்க்கும்போது தந்தை குறிப்பிட்டுள்ள பேதுருவுக்குச் சொல்லப்பட்ட ஆண்டவரின் வார்த்தைகள் நமக்கு ஆறுதல் தருமா??!! தெரியவில்லை.மிக உருக்கமான பதிவு.

    ReplyDelete