Tuesday, February 28, 2023

யோனாவைவிடப் பெரியவர்

இன்றைய இறைமொழி

புதன், 1 மார்ச் 2023

தவக்காலம் முதல் வாரம்

யோனா 3:1-10. லூக் 11:29-32

யோனாவைவிடப் பெரியவர்

இன்றைய இரு வாசகங்களையும் அலங்கரிக்கும் ஒரு நபர் யோனா. எபிரேயத்தில் 'யோனா' என்றால் 'புறா' என்பது பொருள். பல ரபிக்கள் யோனா நூலை மித்ராஷ் வகை இலக்கியம் (கதையாடல் இலக்கியம்) எனக் கருதுகின்றனரே அன்றி, இறைவாக்கு நூலாகக் கருதுவதில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களை உருவமாகத் திகழ்கிறார் யோனா. யோனா நூல் மூன்று நபர்களைச் சுற்றிச் சுழல்கிறது: நினியே நகர மக்கள், கடவுள், யோனா. நூலின் தொடக்கத்தில் நினிவே மக்கள் பாவிகளாக இருக்கிறார்கள், கடவுள் கோபமாக இருக்கிறார், யோனா தயக்கம் காட்டுகிறார். நூலின் இறுதியில் மேற்காணும் மூன்று பேருமே மனமாற்றம் அடைகிறார்கள்: நினிவே மக்கள் சாக்கு உடை உடுத்தி மனம் திரும்புகிறார்கள், கடவுள் அவர்கள்மேல் இரக்கம் காட்டுகிறார், யோனா கடவுளின்மேல் கோபம் கொள்கிறார்.

அசீரியாவின் தலைநகரமே நினிவே. கி.மு. 723-722ஆம் ஆண்டில் வடக்கு இஸ்ரயேலை அடிமைப்படுத்துகிறது அசீரியா. இதனால் இஸ்ரயேல் மக்கள் அசீரியாமேல் வெறுப்பும் கோபமும் கொள்கிறார்கள். கடவுள் யோனாவை முதன்முதலாக நினிவே நகர மக்களிடம் அனுப்பியபோது அவர்கள் அந்நகருக்கு எதிர்திசையில் செல்லக் காரணம் இதுவே. இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த இனவெறுப்பும் கோபமும் யோனா வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால், கடவுளின் அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த நிகழ்விலிருந்து இஸ்ரயேல் மக்கள் மூன்று பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது: (அ) கோபம் அல்ல, மாறாக, இரக்கமே மற்றவர்களுக்கு நலம் தரும், (ஆ) கடவுளின் வழிகள் தனித்துவமானவை. அவற்றை நம்மால் கேள்விக்கு உட்படுத்த இயலாது, (இ) இந்த உலகில் தீமை எல்லாக் காலங்களிலும் எதிர்க்கப்படுவதில்லை. தீமையுடனும் வாழ்வதற்குப் பழகிக்கொள்தல் அவசியம்.

நற்செய்தி வாசகத்தில், அடையாளம் கேட்டுச் சோதித்த தம் சமகாலத்து மக்களுக்கு இரு அடையாளங்களைத் தருகிறார் இயேசு: சாலமோன், யோனா. இவ்விருவருமே தங்களுடைய சமகாலத்து மக்களைத் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். சாலமோன் மிகப்பெரும் ஞானியாகத் திகழ்ந்தார். யோனா ஆற்றல்மிகு போதகராகத் திகழ்ந்தார். இயேசு சாலமோனைவிடப் பெரியவர். ஏனெனில், அவர் கடவுளின் ஞானம். இயேசு யோனாவைவிடப் பெரியவர். ஏனெனில், போதிக்கும் பணியுடன் சேர்த்து, நலம்தரும் பணியையும் இயேசு செய்தார்.

தென்னாட்டு அரசி சாலமோனை நம்பினார். நினிவே மக்கள் யோனாவை நம்பினார்கள். ஆனால், இயேசுவின் காலத்து மக்கள் அவரை நம்பவில்லை. 

யோனாவைவிடப் பெரியவரான இயேசு நம்மிடம் விரும்புவதும் பெரிய மனமாற்றமே.


Monday, February 27, 2023

கடவுளின் வாய்ச்சொல்


இன்றைய இறைமொழி

செவ்வாய், 28 பிப்ரவரி 2023

தவக்காலம் முதல் வாரம்

எசா 55:10-11. மத் 6:7-15.

கடவுளின் வாய்ச்சொல்

எபிரேயத்தில் சொல் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பதம் 'தவார்.' இப்பதம் 'செயல்' என்பதையும் குறிக்கும். ஆக, சொல்லும் செயலும் ஒரே பதத்தால் குறிக்கப்படுகின்றன. இதன் உட்பொருள் என்ன? சொல் என்பது செயலாக மாற வேண்டும்.

முதல் வாசகத்தில் கடவுளுடைய சொல்லின் ஆற்றலைப் பதிவு செய்கிறார் எசாயா. வானத்திலிருந்து இறங்கி வரும் மழையும் பனியும் நிலத்தை நனைத்து, நிலத்தில் மாற்றத்தையும் வளமையையும் ஏற்படுத்தாமல் திரும்பிச் செல்வதில்லை. அது போலவே, கடவுளின் சொல்லும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் அவரிடம் திரும்பிச் செல்வதில்லை.

'நான் எட்டு மணிக்கு வருகிறேன்' என்னும் சொற்கள், நான் எட்டு மணிக்கு வந்தால் செயலாக மாறுகின்றன. அல்லது அவை வெற்றுச் சொற்களாகவே நின்றுவிடுகின்றன.

இன்று சொற்களின் பயன்பாடு வேகமாகக் குறுகிக் கொண்டே வருகிறது. மின்னஞ்சல் வந்த புதிதில் நிறைய எழுதினோம். பின் அதுவே குறுஞ்செய்தியாக மாறியபோது நம் சொற்கள் குறைந்தன. இன்று சொற்களை மறந்து வேகமாக எமோஜிக்கு மாறுகிறோம். மேலும், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் நிறைய எழுதிய சொற்கள், டுவிட்டரின் வரவால் 140 (இப்போது 280) எழுத்துருக்களாகக் குறைந்துவிட்டன. 

குறைவான சொற்களைக் கொண்டு இறைவேண்டல் செய்யுமாறு தம் சீடர்களுக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கற்றுத் தருகிறார் இயேசு. புறவினத்தார்போலப் பிதற்ற வேண்டாம், மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போக வேண்டாம் என அறிவுறுத்துகிறார். தொடர்ந்து, இறைவேண்டல் செய்வது எப்படி எனத் தம் சீடர்களுக்குக் கற்றுத்தருகிறார். 

முதல் வாசகத்தின் பின்புலத்தில் நற்செய்தி வாசகத்தைப் பார்த்தால், நாம் செபிக்கிற ஒவ்வொரு சொல்லும் செயலாக மாறாத வரை அது வெற்றுச் சொல் என்னும் பாடம் கற்கிறோம். எடுத்துக்காட்டாக, 'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பது போல' என்னும் சொற்களை நான் சொல்லும் அந்த நொடிகளில் நான் என் எனக்கு எதிராகத் தீங்கிழைத்தவர்களை மன்னிக்க இயலவில்லை எனில் என் சொற்கள் வெற்றுச் சொற்களே!

(அ) கடவுளின் வாய்ச்சொல் போல நம் சொல் இருத்தல் - அதாவது செயலாக வெளிப்படுதல் வேண்டும்.

(ஆ) குறைவான சொற்கள் பேசுதல் நலம் என ஞானநூல்களும் நமக்கு அறிவுறுத்துகின்றன. பேச்சு நீள நீள அதன் பயன் குறைந்துபோகிறது.

(இ) நான் வாசிக்கும் இறைவார்த்தை செயலாக மாறும்போது, இறைவனின் சொல்லாகவும் செயலாகவும் நான் மாறுகிறேன். 


Sunday, February 26, 2023

சிறிய வழிகள்

இன்றைய இறைமொழி

திங்கள், 27 பிப்ரவரி 2023

தவக்காலம் முதல் வாரம்

லேவி 19:1-2, 11-18. மத் 25:31-46.

சிறிய வழிகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதித்தீர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். என் சிறுவயதில் நான் அடிக்கடி வாசித்து இரசித்த, வியந்த, பயந்த விவிலியப் பகுதி இது. இந்த நிகழ்வை கற்பனை செய்து பார்க்கும்போது வியப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லாரையும் - உலகம் தொடக்கமுதல் இன்று வரை - ஒரே தளத்தில் கூட்ட வேண்டும். இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கேட்கும்படி அரசர் பேச வேண்டும். இவ்வளவு பெரிய வேலையை மிக எளிதாகச் செய்துமுடிக்கிறார் மானிட மகன், அரசர், நடுவர். நமக்குத் தெரிந்தவர்களை, நம் உறவினர்களை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கும்போது நமக்கு எப்படி இருக்கும்!

இந்த நிகழ்வு சொல்வது ஒரே செய்திதான்:

மானிட மகனின் மாட்சியில் வலப்பக்கம் நிற்பதற்கு பெரிய தகுதிகள் எவற்றையும் இயேசு நிர்ணயிக்கவில்லை:

திருச்சட்டத்தை மனப்பாடம் செய்ய வேண்டும், பத்துக் கட்டளைகள் கடைப்பிடிக்க வேண்டும், இறையியல், விவிலியம் படிக்க வேண்டும், மெய்யியலில் தெளிவு வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், அந்த வேலை செய்ய வேண்டும், இவ்வளவு படித்திருக்க வேண்டும், இவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும், இவ்வளவு கையிருப்பு வேண்டும், இன்னென்ன பொருள்கள் வைத்திருக்க வேண்டும் - இப்படி எதுவும் இல்லை தகுதிகள் லிஸ்டில்.

இறையாட்சிக்குள் நுழைவதற்கான வழிகள் எல்லாமே சிறிய வழிகள்.

சிறிய வழிகள் வழியாக, சிறியவர்களுக்குச் சிறியவர்களாக மாறினால் போதும் - வலப்பக்கம் நின்றுவிடலாம்.

மேலும், இந்நிகழ்வில் ஆண்டவரே, அரசரே தன்னை சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார்.

1. பசித்தோருக்கு உணவு

2. தாகமுள்ளோருக்கு தண்ணீர்

3. அந்நியருக்கு வரவேற்பு

4. ஆடை இல்லாதவருக்கு ஆடை

5. நோயுற்றோரைச் சந்தித்தல்

6. சிறையிலிருப்போரைச் சந்தித்தல்

வெறும் ஆறு நிகழ்வுகள். ஆறும் சின்னஞ்சிறு நிகழ்வுகள். கையில் கொஞ்சம் பணமும், இருக்க ஒரு சிறிய வீடும், கொஞ்ச நேரமும் இருந்தால் இந்த ஆறையும் செய்து முடித்துவிடலாம்.

ஆனால், இதைச் செய்வதற்குக் கடினமாக இருக்கக் காரணம் என்னவென்றால், நாம் சிறியவர்களாக மாற மறுப்பதும், சிறியவர்களில் அவரைக் காண மறுப்பதும், சிறிய வழிகளைத் தேர்ந்தெடுக்க மறப்பதும்தான்.

மேலும், இவற்றைச் செய்வதால் இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் செய்யக்கூடாது. ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் நாம் இவர்களைப் 'பயன்படுத்தி' நம் இறையாட்சியைச் சம்பாதிக்க விரும்புவோம். ஒரு மனிதர் தன் சக மனிதரைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தானது.

மேலும், பசி, தாகம், அந்நியம், நிர்வாணம், நோய், தனிமை ஆகியவற்றை மானுடத்தின் முகத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.

இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறது இன்றைய முதல் வாசகம் (காண். லேவி 19:1-2, 11-18): 'உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'

என்னை நான் அன்பு செய்வது மிக எளிது என்றால், அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் அப்படித்தானே!

சிறிய வழிகள், எளிய செயல்கள் - இறையாட்சியின் சாவிகள்.


Saturday, February 25, 2023

கட்டின்மை போற்றுதல்

தவக்காலம் முதல் ஞாயிறு

I. தொடக்கநூல் 2:7-9, 3:1-7 II. உரோமையர் 5:12-19 III. மத்தேயு 4:1-11

கட்டின்மை போற்றுதல்

நல்வாழ்வு தரும் கட்டின்மை நோக்கி நம்மை அழைக்கிறது தவக்காலத்தின் முதல் ஞாயிறு.

இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 2:7-9, 3:1-7) விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உருவான வரலாற்றின் பதிவே இப்பக்கங்கள். இரண்டு கதையாடல்கள் வழியாக மனித வாழ்வின் தொடக்கத்தை விளக்குகிறது விவிலியம். இவ்விரண்டு கதையாடல்களையும் ஒன்றுக்கொன்று அருகில் வைத்துப் பார்க்கும்போது மனிதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவுநிலை என்ன? அவர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டறிய முடியும். 

முதல் வாசகத்தின் முதல் பகுதி படைப்பின் இரண்டாம் கதையாடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடவுளின் படைப்புச் செயலின் முதற்கனியாக முதல் மக்களை முன்வைக்கிறது இது. மனிதர்கள் கடவுளின் மூச்சையே தங்களுக்குள் கொண்டிருக்கின்றனர். இதுவே மனிதர்கள் கடவுள்மேல் கொண்டிருக்கும் சார்புநிலையின் அடையாளம். கடவுளின் மூச்சை இழப்பது என்பது ஒருவரை இறக்கச் செய்யும். இச்சார்புநிலையின் மற்றொரு பக்கம் கடவுள் அவர்களுக்கு இட்ட நிபந்தனை அல்லது விதிமுறை. கடவுள் படைப்பில் சில வரையறைகளை நிர்ணயித்து, மனிதர்களின் நலனை முன்னிட்டும், ஒட்டுமொத்தப் படைப்பின் ஒழுங்கிற்காகவும் சிலவற்றைத் தடைசெய்கின்றார். நன்மை-தீமை அறியும் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்று முதல்மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார் கடவுள். ஏனெனில், இத்தகைய அறிவை மனிதர்களால் கையாள முடியாது. மேலும், இது அவர்களை அழிப்பதோடு, கடவுளின் படைப்பில் தொய்வையும் ஏற்படுத்திவிடும்.

ஆனால், முதல் மனிதர்கள் கடவுளின் கட்டளையை மீறுகின்றனர். அவர்கள் கடவுள் தங்களுக்குத் தந்த கொடைகளை மறந்துவிட்டனர். கடவுள் கனியை விலக்கிவைத்ததை உரிமை மீறலாகப் பார்த்தனர். தாங்கள் உண்ணுமாறு கடவுள் கொடுத்த அனைத்து மரங்களையும் அவற்றின் கனிகளையும் மறந்துவிட்ட இவர்கள் விலக்கப்பட்ட கனியை நாட ஆரம்பிக்கின்றனர். தாங்கள் ஏற்கனவே கடவுளின் சாயலில் இருக்கிறோம் என்பதை மறந்து, பாம்பின் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர். அவர்கள் தங்கள் கைகளை நீட்டி உண்ட அக்கனியால் முதலில் அவர்களின் கண்கள் திறக்கப்பட தாங்கள் ஆடையின்றி - நிர்வாணமாக - இருப்பதை உணர்கின்றனர். அவர்களின் ஆடையற்ற நிலை அவர்களுடைய வலுவின்மையையும், நொறுங்குநிலையையும் அடையாளப்படுத்துகிறது. அன்றிலிருந்து அதுவே அவர்களின் வாழ்க்கை அனுபவமாகவும் மாறிவிடுகிறது. விலக்கப்பட்ட கனியை உண்டதால் அவர்கள் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கின்றனர். 

ஆக, அவர்களின் கீழ்ப்படியாமை அவர்களை இந்நிலைக்கு ஆளாக்குகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-19), ஆதாம்-இயேசு, பாவம்-விடுதலை, குற்றம்-அருள்கொடை என்னும் முரண்களைப் பட்டியலிடுகின்ற பவுல், ஆதாமின் கீழ்ப்படியாமை பாவத்தைக் கொணர்ந்தது என்றும், இயேசுவின் கீழ்ப்படிதல் கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர் ஆக்கியதும் என்றும் நிறைவு செய்கின்றார். 

ஆக, கீழ்ப்படியாமையால் பிறழ்வுபட்ட உறவுநிலைகள் இயேசுவின் கீழ்ப்படிதலால் சரிசெய்யப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 4:1-11) இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வை நமக்குக் காட்டுகிறது. திருமுழுக்கு பெற்றவுடன் இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்காக பாலை நிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். திருமுழுக்கின்போது அவர் 'அன்பார்ந்த மகன்' என்று அழைக்கப்பட்டார். பாலைவனத்தில் சோதிக்கிறவன் மூன்றுமுறை சோதித்தபோது நம்பிக்கைக்கும் பிரமாணிக்கத்திற்கும் உரியவராக இருந்து மகன் என்ற நிலையைக் காத்துக்கொள்கின்றார். இயேசுவின் பாலைநில அனுபவம் 40 நாள்கள் நீடிக்கின்றன. 

நாற்பது என்ற எண் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த பயணத்தைக் குறிக்கிறது. செங்கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்கள் மூன்று சோதனைகளுக்கு உள்ளாகின்றனர்: (அ) உணவு வேண்டி அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தது (காண். விப 16) இயேசுவின் முதல் சோதனையில் எதிரொலிக்கிறது. (ஆ) கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்று அவர்கள் கேட்ட கேள்வி (காண். விப 17) இரண்டாம் சோதனையில் தெரிகிறது. (இ) பொன்னாலான கன்றுக்குட்டியை அவர்கள் வணங்கியது (காண். விப 32) மூன்றாம் சோதனையில் எதிரொலிக்கிறது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களை எகிப்தில் கண்டாலும் அவரை நம்பவில்லை. ஆனால், இயேசுவோ இறுதிவரை நம்பிக்கைக்குரியவராகவும், கீழ்ப்படிபவராகவும் விளங்கினார். 

இயேசு யார் என்பதைத் தன் குழுமத்தாருக்கு அறிமுகம் செய்ய விழைகின்ற நற்செய்தியாளர்கள், 'இயேசு அலகையையும் அதன் சோதனைகளையும் வென்றவர்' என்று சோதனைகள் நிகழ்வு வழியாக அறிமுகம் செய்கின்றனர். சோதனைகள் நிகழ்வு இயேசுவை முதல் இஸ்ரயேலோடு இணைக்கிறது (காண். 'நாற்பது நாள்கள், மன்னா, அப்பம்,' விப 16:15, 'ஆண்டவரை சோதித்தல்,' விப 17:1-7, 'சிலைவழிபாடு,' விப 32).  இது இறைவனின் ஆட்சிக்கும், அலகையின் ஆட்சிக்கும் உள்ள முரண்பாட்டை விளக்குகிறது. சோதனைகள் நிகழ்வு இயேசுவை முதல் ஏற்பாட்டு இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றன. இயேசு சோதனைகளை வெல்லும் நிகழ்வு பிற்காலச் சீடர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.

அ. கற்களை மாற்று!

சோதிக்கிறவன் அவரை அணுகி, 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்' என்றான். அவர் மறுமொழியாக, ''மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'' (காண். இச 8:3) என மறைநூலில் எழுதியுள்ளதே என்றார். (காண். மத் 4:3-4) லூக்கா நற்செய்தியாளர், 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என்று மட்டும் பதிவிடுகின்றார். (காண். லூக் 4:4)

நாற்பது நாள்கள் இரவும் பகலும் நோன்பிருக்கின்றார் இயேசு. நோன்பு என்பது பசியை விரும்பி ஏற்கும் நிலை. உணவு மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும்.

நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மிகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மிகம்சார் பாலை. 

உடல்சார் பாலை என்னும் பசியை பாலைநிலத்தில் எதிர்கொள்கின்றார் இயேசு. 'கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்னும் அலகையின் சொற்கள் மூன்று நிலைகளில் இயேசுவுக்கு ஈர்ப்பாக இருந்திருக்கும்: ஒன்று, அவர் பசியாக இருக்கிறார். இரண்டு, வல்ல செயல் செய்யும் ஆற்றலைச் சோதிப்பதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்தியிருக்கலாம். மூன்று, மெசியா என்பவர் மாற்றத்தைக் கொணர்பவர். இருப்பதை இல்லாமலும், இல்லாததை இருக்கவும், ஒன்றை மற்றொன்றாகவும் செய்கின்றவர்.
 
உறுதியற்ற ஒன்றை உறுதியாக்கிக்கொள்ளத் தூண்டுகிறது அலகை. பாலைவனத்தில் உள்ள கற்கள் எல்லாம் அப்பமாக மாறிவிட்டால், பசியைப் பற்றிய கவலையே தேவையிருக்காது. எங்கு திரும்பினாலும் அப்பமாக இருக்கும். விரும்பும் வரை உண்ணலாம். ஆனால், பசி தீர்ந்தவுடன் எஞ்சிய அப்பங்களால் பயன் ஒன்றுமில்லை. பசியில்லாத நபருக்கு ருசியான உணவும் சுமையே. மனிதர்களின் தேடல் என்பது வெறும் உணவுதான் என்றும், அந்த உணவுக்கான தேடலில் மனிதர்களை அமிழ்த்தி விட்டால் அவர்கள் வேறெதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் என்பதும் அலகையின் எண்ணமாக இருந்தது. ஆனால், மனிதர்களின் தேவை வெறும் உடல் சார்ந்தது அல்ல, மாறாக, ஆன்மிகம் சார்ந்தது என்றும், அவர்கள் வெறும் சதை அல்ல, மாறாக, ஆவிக்குரிய ஆன்மாவைக் கொண்டிருப்பவர்கள் என்றும் அலகைக்கு நினைவூட்டுகிறார் இயேசு.

மேலும், கற்களை அப்பமாக மாற்றுதல் என்பது தேவையானதை விடுத்து, தேவையற்றதன்மேல் கவனத்தைத் திருப்பும் சோதனையாகும். ஒருவேளை இயேசு கற்களை அப்பமாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தால், 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' (காண். மாற் 1:15) என்று அறிவித்திருக்க இயலாது. பார்க்கின்ற அனைத்துக் கற்களையும் அப்பமாக்கும் பணியே அவருடைய முதன்மையான பணியாக இருந்திருக்கும்.

கற்கள் கற்களாகவும், அப்பம் அப்பமாகவும் இருக்கட்டுமே என்பது இயேசுவின் பதில்மொழியாக இருக்கிறது.

ஆ. கடவுளைச் சோதி!

பின்னர் அலகை இயேசுவை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது (காண். திபா 91:12) என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், ' 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே' என்று சொன்னார். (மத் 4:5-6)

மத்தேயு நற்செய்தியாளர், 'இரண்டாவது' என முன்மொழியும் சோதனையை, லூக்கா நற்செய்தியாளர், 'மூன்றாவது' என எழுதுகின்றார். 'கோவில்' என்பது மத்தேயு நற்செய்தியில் 17 முறை வருகின்றது. 'கோவிலின் உயர்ந்த பகுதி' என்பதை 'கோபுரம்' அல்லது 'இறக்கை வடிவிலான நீட்சி அமைப்பு' அல்லது 'சிறிய கைப்பிடிச் சுவர்' என்று புரிந்துகொள்ளலாம். 'மெசியா வெளிப்படுத்தப்படும் நாளில் அவர் திருக்கோவிலின் கூரைமேல் நிற்பார்' என்பது ரபிக்களின் போதனையாக இருந்தது (காண். பெசிக்தா ரப்பாதி, 62இ-ஈ). எருசலேம் ஆலயத்தின் திருத்தூயகத்திற்கு மேல் உள்ள பகுதி, அல்லது ஆலயத்தின் முன்முகப்புக் கூரை, அல்லது கெதரோன் பள்ளத்தாக்கைப் பார்த்தவாறு அமைந்துள்ள வெளிப்புறச் சுவரின் கோபுரம் எனப் பலர் இந்த இடத்தை அடையாளம் காண்கின்றனர்.

மாயவித்தை செய்து மக்களின் கவனத்தை ஈர்க்குமாறும், வல்ல செயல்கள் வழியாக கடவுளைச் சோதிக்குமாறும் தூண்டுகிறது அலகை. 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' (காண். இச 4:16) என்னும் மோசேயின் வார்த்தைகளைச் சொல்லி, அலகையின் சோதனையை விலக்குகிறார் இயேசு. 

முதல் ஏற்பாட்டில் பாலைவனத்தில் இரபதிம் பகுதியில் பாளையம் இறங்கிய போது மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை. மக்கள் மோசேயிடம் வாதாடி, 'குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்!' என்று கேட்கின்றனர். ஆண்டவரின் அறிவுறுத்தலின்படி மோசே பாறையைக் கோலால் அடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படுகின்றது. ஆண்டவர் தங்களோடு இருக்கிறாரா அல்லது இல்லையா என்று இஸ்ரயேல் மக்கள் சோதித்துப் பார்க்கின்றனர் (காண். விப 17:1-7).

ஆனால், இறைமகன் இயேசு அப்படிச் சோதித்துப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில், இயேசுவின் திருமுழுக்கின்போது, தூய ஆவி புறாவைப் போல அவர்மேல் இறங்கி வர, 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று தந்தையின் குரல் ஒலித்தது (காண். மாற் 1:10-11). தான் இறைமகன் என்பதும், இறைத்தந்தை என்றும் தன்னோடு உடனிருக்கிறார் என்பதும் இந்த நிகழ்வு வழியாக இயேசு பெற்ற அடித்தள அனுபவமாக இருந்ததால் அவர் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தவில்லை.

இ. காலில் விழு!

மறுபடியும் அலகை இயேசுவை மிக உயர்ந்த மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், 'நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்றது. அப்போது இயேசு அதனைப் பார்த்து, 'அகன்று போ, சாத்தானே. 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது (காண். இச 6:13) என்றார். (மத் 4:8-10)

'நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது' (மத் 6:24) என்னும் வாக்கியத்தின் விளக்கவுரையாகக் கூட இந்தச் சோதனையை எடுத்துக்கொள்ளலாம்.

'நெடுஞ்சாண்கிடையாக விழுதல்' என்பது கடவுளுக்கு மட்டுமே உரித்தான ஒரு வழிபாட்டு முறை. இருந்தாலும், அரசர்கள் முன்னும் அதிகாரம் பெற்றவர்கள் முன்னும் நெடுஞ்சாண்கிடையாக விழும் வழக்கம் விவிலியக் காலத்தில் இருந்தது. இந்தச் செய்கையின் வழியாக ஒருவர் தனக்கு முன்னால் இருப்பவரைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கின்றார். தனது விருப்புரிமை, தன்னுரிமை, விடுதலை போன்றவற்றை அவருக்கு விற்றுவிடுகின்றார். 

இயேசு தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட மறுத்ததோடு, கடவுள் ஒருவரே வணங்குதலுக்கும் பணி செய்தலுக்கும் உரியவர் என்ற தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றார்.

இவ்வாறாக, 'கற்களை மாற்று!,' 'கடவுளைச் சோதி!,' 'காலில் விழு!' என்னும் மூன்று பாலைவனச் சோதனைகளையும் வெற்றி கொள்கின்றார் இயேசு.
தவக்காலத்தின் முதல் ஞாயிறு கீழ்ப்படிதல் என்ற மதிப்பீட்டைக் கற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. முதல் மக்கள் கடவுளை நம்ப மறுத்தனர். ஆகையால் கீழ்ப்படிய மறுத்தனர். அதற்கு மாற்றாக இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். நம்பிக்கையின்மை-நம்பிக்கை, கீழ்ப்படியாமை-கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கான போராட்டம் எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும். நம்பிக்கையாளர்கள் தாங்கள் இப்படி அலைக்கழிக்கப்படும்போதெல்லாம் இன்றைய பதிலுரைப்பாடல் வரிகளை நினைவில்கொள்ள வேண்டும்: 'கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்' (திபா 51:10).

இயேசு இறுதிவரை தன் கட்டின்மையை – சுதந்திரத்தை – விட்டுவிடவில்லை. நம் முதற்பெற்றோர் பாம்பின் சோதனையில் விழுந்தபோது தங்கள் கட்டின்மையை இழக்கின்றனர். கட்டின்மையை என்றும் விரும்புவதும், அதைப் பற்றிக்கொள்வதும் நலம்.

Friday, February 24, 2023

உன் ஒளி உதிக்கும்

இன்றைய இறைமொழி

சனி, 25 பிப்ரவரி 2023

திருநீற்றுப்புதனுக்குப் பின்வரும் சனி

எசா 58:9-14. லூக் 5:27-32.

உன் ஒளி உதிக்கும்

இன்றைய முதல் வாசகம் மூன்றாவது எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா நூலின் இறுதிப் பகுதி, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து தங்களுடைய சொந்த நாடு திரும்பும் யூதா மக்களுக்கு ஆறுதல் சொல்கின்ற பகுதியாக இருக்கிறது.

'இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்,' 'நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும், வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்' என்னும் இரு வாக்கியங்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. இவை இரண்டுமே உருவகங்கள். இருள் என்பது அடிமைத்தனத்தின் அடையாளம். இஸ்ரயேல் மக்கள் இப்போது பாபிலோனிய அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டனர். புற இருள் அகன்றுவிட்டது. ஆனால், அவர்களை அக இருள் இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறது. அந்த இருள் நடுவே இஸ்ரயேல் மக்களின் ஒளி உதிக்க வேண்டியது இப்போது அவசியம். ஒருவரின் உள்ளே நிகழும் மாற்றம் அடுத்து வருகின்ற உருவகத்தால் புறத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. வற்றாத நீரூற்று போல இஸ்ரயேல் மக்களின் வாழ்வு திகழும்.

ஒளி உதிப்பதும், வாழ்வு நீரூற்றாக மாறுவதும் எப்போது?

(அ) உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றும்போது – கழுத்தை அழுத்திய பாபிலோனிய நுகம் அகன்றாலும், உள்ளத்தில் அடிமைத்தனம் சுமையாக அவர்களை அழுத்துகிறது. குறிப்பாக, தங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகத் தாங்கள் செய்த பாவம் குற்றவுணர்வாக மாறுகிறது. அவர்கள் தங்கள் எதிரிகள்மேல் பகையுணர்வை வளர்க்கின்றனர். தங்கள் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கின்றனர். ஆக, குற்றவுணர்வு, பகை, மற்றும் அச்சம் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அகல வேண்டும்.

(ஆ) குற்றம் சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்தும்போது – பழைய வாழ்க்கையை எண்ணி வருந்துவதை விடுத்து, மற்றவர்களுக்கு எதிராகப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

(இ) பசித்திருப்போருக்கு உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்யும்போது – அடிமைத்தனம் பலரை வறுமைக்கு உள்ளாக்கியது. வளமையுடையோர் வறியவர்களுடன் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மேற்காணும் மூன்றும் நிகழும்போது ஒளி உதிக்கிறது.

நற்செய்தி வாசகத்தில், லேவியின் (மத்தேயு) அழைப்பு நிகழ்வை வாசிக்கிறோம். இந்நிகழ்வில் மத்தேயுவின்மேல் இயேசு என்னும் ஒளி உதிக்கிறது. மத்தேயுவின் வாழ்க்கைப் பாதை மாறுகிறது. இயேசுவின் அழைப்புக்கு மத்தேயு உடனடியாகப் பதிலிறுப்பு செய்கிறார். தொடர்ந்து இயேசுவுக்கு விருந்தளிக்கிறார் மத்தேயு. அங்கே இயேசு தாம் யாருக்காக என்பதை முன்மொழிகிறார்.

பல நேரங்களில், 'நான் யார்?' என்னும் கேள்வி நம்மைப் பெரும்பாலும் ஆட்கொள்கிறது. ஆனால், 'நான் யாருக்காக?' என்பதில்தான் 'நான் யார்?' என்பதற்கான விடை ஒளிந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

இஸ்ரயேல் மக்களின் தான்மை அவர்கள் பிறருக்காகத் தங்களைக் கையளிப்பதில் ஒளிர்கிறது.

மத்தேயு தான் யாருக்காக என்பதை உணர்ந்து தன் இருக்கையை விட்டு எழுகின்றார்.

என்னை இன்று அழுத்தும் நுகம் எது?

நான் யாருக்காக?

இயேசு என்னும் ஒளி என்னை நோக்கி வரும்போது, என் பதிலிறுப்பு என்ன?


Wednesday, February 22, 2023

வாழ்வைத் தெரிந்துகொள்

இன்றைய இறைமொழி

வியாழன், 24 பிப்ரவரி 2023

திருநீற்றுப்புதனுக்குப் பின்வரும் வியாழன்

இச 30:15-20. லூக் 9:22-25.

வாழ்வைத் தெரிந்துகொள்.

இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலின் இறுதிப் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவே ஐநூலின் இறுதிப் பகுதியாகும். ஐநூலின் தொடக்கத்தில், தொடக்கநூலில், நம் முதற்பெற்றோர் நன்மை-தீமை அறியும் மரத்தைப் பற்றிக்கொள்கின்றனர். இணைச்சட்ட நூலில் வாழ்வைப் பற்றிக்கொள்ளுமாறு அழைக்கிறார் மோசே. வாழ்வைத் தெரிந்துகொள்தல் என்பது கடவுளைத் தெரிந்துகொள்தல் ஆகும். கடவுளைத் தெரிந்துகொள்வதால் ஒருவர் வளமை பெறுகிறார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் இறப்பை முதன்முறை அறிவிக்கிறார். தொடர்ந்து சீடத்துவம் பற்றியும் அறிவுறுத்துகின்றார். தன் வாழ்வை இழப்பதால் அதைப் பற்றிக்கொள்பவரே நற்சீடர்.

இரு வாசகங்களும் 'வாழ்க்கை' என்னும் ஒற்றைச் சொல்லில் சுழல்கின்றன. வாழ்க்கை நமக்கு சாத்தியமே. ஏனெனில், தெரிவு செய்யும் விருப்புரிமை நமக்கு உண்டு. 

பதிலுரைப்பாடல் நல்லார் மற்றும் பொல்லார் இயல்புகளை முன்வைத்து, நல்லார் போல் வாழ நம்மைத் தூண்டுகிறது.

சிந்திப்போம்: (1) இன்று என் விருப்புரிமையை நான் எப்படிப் பாராட்டுகிறேன்? (2) நான் வாழ்வைத் தெரிந்துகொள்கிறேனா? (3) எனக்கு வாழ்வு தருவது எது?


Sunday, February 19, 2023

நான் நம்புகிறேன்

இன்றைய இறைமொழி 

திங்கள், 20 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 7ஆம் வாரம்

சீஞா 1:1-10. மாற் 9:14-29.

நான் நம்புகிறேன்

'ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது' என்று சொல்லி ஞானத்தின் முதலும் தோற்றுவாயுமான கடவுளை நோக்கித் தம் வாசகர்களை அழைக்கிறார் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர். 

நற்செய்தி வாசகத்தில் இயேசு இளவல் ஒருவரிடமிருந்து தீய ஆவியை ஓட்டுகிறார். தோற்றமாற்ற நிகழ்வுக்குப் பின்னர் இயேசு மூன்று திருத்தூதர்களுடன் சமவெளிக்கு இறங்கி வருகிறார் இயேசு. இதற்கிடையில் கீழே இருந்த திருத்தூதர்களிடம் தந்தை ஒருவர் பேய் பிடித்த தன் மகனை அழைத்துக்கொண்டு வருகிறார். திருத்தூதர்களால் பேயை ஓட்ட இயலவில்லை. இதற்கிடையில் கூட்டம் கூடுகிறது. தந்தை செய்வதறியாது நிற்கிறார். அங்கே வருகிற இயேசுவிடம் தந்தை தன் மகனுக்காக முறையிடுகிறார். 

'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்கிறார் தந்தை.

'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்கிறார் இயேசு. 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று சரணடைகிறார் தந்தை. 

இயேசுவின் பரிவை நாடி நிற்கிறார் தந்தை. நம்பிக்கையை நோக்கி அவரை அழைக்கிறார் இயேசு.

பரிவும் நம்பிக்கையும் சந்திக்கும் புள்ளியில் வல்ல செயல் நடக்கிறது.

'எங்களால் பேயை ஓட்ட ஏன் இயலவில்லை?' என்னும் திருத்தூதர்களின் கேள்விக்கு, 'இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது' என்று சொல்லி, இறைவேண்டலுக்கு அவர்களை அழைக்கிறார்.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடம் என்ன?

ஞானம், பரிவு, நம்பிக்கை, இறைவேண்டல் ஆகியவை நாம் விரும்பித் தேடுபவையாக இருக்கட்டும்.


Thursday, February 16, 2023

நமது பெயரை

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 17 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் வாரம்

தொநூ 11:1-9. மாற் 8:34-9:1.

நமது பெயரை

படைப்பின் தொடக்கக் கதையாடல்களின் இறுதிக் கதையாடலுக்கு நம்மை இன்றைய முதல் வாசகம் இட்டுச் செல்கிறது. மனுக்குலத்தில் மொழிகள் தோன்றியதன் காரணக் கதை என்று இன்றைய இலக்கிய உலகில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

இன்னொரு பக்கம், இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்தின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்க்கிற ஆய்வாளர்கள், இந்நிகழ்வில் வரும் 'பாபேல்' என்பது 'பாபிலோன்' அல்லது 'பாபிலோனியாவை' குறிக்கிறது என்றும், 'மொழிகளில் ஏற்பட்ட குழப்பம்' இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அந்நாட்டின் மொழி தெரியாது அடைந்த துன்பத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறது என்றும், 'பாபேலின் அழிவு' என்பது தங்களின் எதிரி நாடான பாபேல் அழிய வேண்டும் என்னும் இஸ்ரயேல் மக்களின் 'விருப்ப நிறைவு' (ஆங்கிலத்தில் 'விஷ் ஃபுல்பில்மென்ட்') குறிக்கிறது என்றும் எழுதுகின்றனர்.

காரணக் கதை என்று இதைச் சுருக்கிவிடாமல், பாபிலோனியா பற்றிய உருவகம் என்று எடுத்துக்கொள்ளாமல், இந்நிகழ்வு தரும் இறைச் செய்தி அல்லது இறை அனுபவம் என்பதை நாம் புரிந்துகொள்வது நல்லது.

படைப்பின் தொடக்கத்திலிருந்து பார்க்கும்போது, சில எதிர்மறை உணர்வுகள் மனிதர்களைத் தழுவிக்கொண்டே வருகின்றன. மானுடத்தைத் தழுவிய முதல் எதிர்மறை உணர்வு தனிமை ('ஆதாம் தனிமையாக இருந்தான்), அச்சம் (முதற்பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்றவுடன் மரத்தின்பின் ஒளிந்துகொள்கின்றனர்), கோபம் (காயின் தன் சகோதரன்மேல் கோபம் கொண்டு அவனைக் கொலை செய்கிறான்), தீய எண்ணம் (மனிதரின் உள்ளத்தில் இருந்துகொண்டு மனிதரின் இயக்கத்தை இது நிர்ணயிக்கிறது – நோவா காலத்துப் பெருவெள்ளம் ஏற்படக் காரணம் இதுவே). இந்த வரிசையில் இன்றைய முதல் வாசகப் பகுதி – பாபேல் கோபுர நிகழ்வு – மனிதர்களின் எதிர்மறை உணர்வுகளில் ஒன்றான ஆணவம் அல்லது பெருமை உணர்வு மையமாகக் கொண்டு சுழல்கிறது. 

மனிதர்கள் அறிவுசெறிந்தவர்கள். விலக்கப்பட்ட இரு கனிகளில் - 'நன்மை-தீமை அறிதல்,' 'இறவாமை அல்லது நிலைவாழ்வு' ஒன்றை மட்டும்தான் அவர்களால் உண்ண முடிந்தது. இரண்டாம் கனியை உண்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்ற எண்ணத்தில்தான் ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றுகிறார். ஆனால், தோட்டத்திலிருந்து வெளியே விரட்டப்பட்ட மானுடம் தன்னுடைய இறவாமைக்கான வழிகளைத் தானே கண்டுகொள்கிறது. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட வழிகளில் ஒன்று 'குழந்தை பெற்றுக்கொள்வது.' தாங்கள் இறந்து போனாலும் தங்களுடைய உயிர் தங்களுடைய குழந்தைகளில் தொடருமாறு செய்துவிடுகின்றனர். குறிப்பாக, ஓர் ஆண் தன் உயிரணுவை தன் மகன் வழியாக இந்த உலகில் விட்டுச் செல்கின்றார். இப்படியாக, அவர் இறவாமைக்குள் நுழைகிறார். ஆகையால்தான், பெரும்பான்மையான மரபுகளில் ஆண் குழந்தைகள் மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருக்கிறார்கள். (ஆனால், உயிரணுவைக் கொடுப்பவர் ஆண் என்றால், அதற்கு உடல் தருகிறவர் பெண்ணே!)

இறவாமைக்கான இரண்டாவது வழியை இன்றைய முதல் வாசகத்தில் மானுடம் முயற்சி செய்கிறது. 'உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலைநாட்டுவோம்.' இவர்களுடைய உழைப்பும் தொலைநோக்குப் பார்வையும் நமக்கு வியப்பு தருகிறது. 'நமது பெயரை நிலைநாட்டுவோம்' என்னும் இலக்கு கடவுளுக்கு நெருடலாக இருக்கிறது. 'அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்' என்று கடவுள் இறங்கி வருவது வாசகர்களாகிய நமக்கு நெருடலாக இருக்கிறது. ஒற்றுமையை விரும்பும் கடவுள் வேற்றுமையையும் பிரிவையும் விரும்புவது ஏன்? கடவுளுடைய வழிகள் கடவுளுடைய வழிகளே!

நற்செய்தி வாசகத்தில், இயேசு சீடத்துவத்தின் முதல் பாடத்தைத் தம் சீடர்களுக்கு வழங்குகிறார். ஒத்தமைவு நற்செய்திகளில் இயேசு தம் பாடுகளை மூன்று முறை முன்னறிவிக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் பாடுகளை முன்வைக்கும்போதும் தொடர்பாடமாக சீடத்துவம் பற்றி அறிவுறுத்துகின்றார்: தன்னலும் துறத்தலும் சிலுவையைத் தூக்குதலும் இயேசுவைப் பின்பற்றுதலும் சீடத்துவத்தின் முதன்மையான பண்புகள்.

மேற்காணும் இரு வாசகங்களை இணைக்கின்ற ஒரு சொல்: 'பெயரை நிலைநாட்டுதல்.'

முதல் வாசகத்தில் மானிடர் தங்களுக்கென ஒரு பெயரை நிலைநாட்ட விரும்புகிறார்கள். அவர்களின் அந்த முயற்சியைக் கடவுள் தகர்க்கிறார். நற்செய்தி வாசகத்தில் தன்னலம் துறக்குமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. தன்னலம் துறத்தல் என்பது நமக்கென பெயரையும் பற்றிக்கொள்ளாத நிலையைக் குறிக்கிறது.

நம் உடல் மற்றும் மூளை இயல்பாகவே, தன்னலம் கொண்டதாக இருக்கிறது. அப்படி இருந்தால்தான் உயிரைக் காத்துக்கொள்ள இயலும். ஆனால், தன்மையம் கொண்ட வாழ்க்கை நம்மையே ஒரு தற்சுழலுக்குள் தள்ளி அழித்துவிடுகிறது.

'நான்,' 'எனது பெயர்' என்ற எண்ணம் எழும்போதெல்லாம் சிலுவையின் வெறுமை நம் கண்முன் நின்றால், நாம் நம்மையும் நம் பெயரையும் பற்றிக்கொள்வதைக் குறைக்க முடியும்.


Tuesday, February 14, 2023

தெளிவாகக் கண்டார்

இன்றைய இறைமொழி 

புதன், 15 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் வாரம்

தொநூ 8:6-13,20-22. மாற் 8:22-26.

தெளிவாகக் கண்டார்

இன்றைய வாசகங்களில் இருவர் தெளிவாகக் காண்கின்றனர். முதல் வாசகத்தில், நிலமெல்லாம் உலர்ந்திருப்பதை நோவா காண்கின்றார். நற்செய்தி வாசகத்தில், பார்வையற்ற நபர் அனைத்தையும் தெளிவாகக் காண்கின்றார். காணுதல் என்பது விவிலியத்தில் புறக் கண்களால் காண்பதைக் குறிப்பதை விட, அகக் கண்களால் காண்பதையே குறிக்கிறது. எனினும், இவ்விருவருடைய பார்வையும் புறம் சார்ந்ததாகவே இருக்கிறது.

முதல் வாசகத்தில், பெருவெள்ளத்திற்குப் பிந்தைய உடனடி நிகழ்வுகளை வாசிக்கிறோம். மூன்று நிகழ்வுகள் இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளன: (அ) மழை வடிந்தும் தண்ணீர் வடியாமல் நிற்கிறது. நோவா காகம் மற்றும் புறாக்களை அனுப்பி சோதித்துப் பார்க்கின்றார். 'பேழையின் மேற்கூரையை நோவா திறந்து பார்த்தார். நிலமெல்லாம் உலர்ந்திருந்தது' என்று ஆசிரியர் பதிவு செய்வது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. மேற்கூரையைத் திறந்தால் வானம்தானே தெரியும். அதை வைத்து நிலம் உலர்ந்திருப்பதை எப்படி நோவா கண்டார்? அவருடைய உள்ளுணர்வால் கண்டார். அல்லது, கடவுளின் பார்வையால் கண்டார். (ஆ) நோவா கடவுளுக்குப் பலி செலுத்துகின்றார். குலமுதுவர்களுக்கு முந்தைய காலத்தில் அனைவரும் பலி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். காயின், ஆபேல், நோவா என அனைவரும் கடவுளுக்கு நேரடியாகப் பலி செலுத்துகிறார்கள். குலமுதுவர்கள் காலத்தில் குலம் அல்லது வீட்டின் தலைவர் பலி செலுத்துகிறார். எ.கா. ஆபிரகாம். தொடர்ந்து வருகிற காலத்தில் குருத்துவம் என்னும் நிறுவனம் தோன்றுகிறது. நோவா செலுத்தும் பலி நன்றிப்பலியாக இருக்கிறது. (இ) நோவாவுடைய பலியின் நறுமணத்தை நுகர்ந்து நிறைவடைகிறார் கடவுள். 'இனி மனுக்குலத்தை அழிப்பதில்லை' என்று உறுதி ஏற்கிறார். 'மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகிறது' என்று அவரும் ஏற்றுக்கொள்கிறார். இதற்கு முன் எதிர்வினை ஆற்றியவர் இப்போது அமைதியாகிறார். பள்ளி இறையியல் கடவுள் - தாமஸ் அக்வினா முன்வைப்பது போல – 'மாறாதவராக, மாற்றத்திற்கு உட்படாதவராக' இருக்கிறார். ஆனால், இங்கே நாம் காணும் கடவுளும் மாற்றத்துக்கு உள்ளாகிறார்.

நோவா உலர்ந்த நிலத்தைக் காண்கிறார். கடவுள் மனித உள்ளத்தின் இயல்பைக் காண்கிறார்.

இரண்டாம் வாசகத்தில், பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை தருகிறார். மாற்கு நற்செய்தியில் மட்டுமே பார்வையற்றவர் பார்வை பெறும் நிகழ்வு இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு நிகழ்வுகளுமே 'வழியில்' – 'இயேசு எருசலேம் செல்லும் வழியில் - நடக்கின்றன. இவ்விரு நிகழ்வுகளுமே சீடர்களின் நம்பிக்கை வாழ்வின் உருவகங்களாக அமைகின்றன.

இன்றைய நற்செய்திப் பகுதி 'நெருடல் பகுதி' (ஆங்கிலத்தில், எம்பாரஸ்மன்ட் டெக்ஸ்ட்) என அழைக்கப்படுகிறது. அதாவது, இயேசுவால் இரண்டாம் முறை மட்டுமே முழுமையான பார்வையை அந்த நபருக்கு அளிக்க முடிகிறது. இப்பகுதியை வாசிக்கிற தொடக்கக் கிறிஸ்தவர்கள் தங்கள் தலைவரும் போதகரும் பெற்றிருந்த ஆற்றல் குறைவானது என எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 

இந்த நெருடலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இந்நிகழ்வை வல்ல செயல் அல்லது அறிகுறி எனப் பார்த்தால் இந்த நெருடல் வருகிறது. ஆனால், இதையே ஓர் உவமை அல்லது உருவகமாகப் புரிந்துகொண்டால் நெருடல் வருவதில்லை. எப்படி?

பார்வையற்ற நபர் இயேசுவிடம் அழைத்துவரப்படுகிறார். இயேசு அவரை அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே செல்கிறார். இப்போது இயேசுவும் அவரும் மட்டுமே இருக்கிறார்கள். பாதிக் கண்கள் திறக்கப்பட்டவுடன் அவர் இயேசுவை மட்டுமே பார்த்திருக்க முடியும். 'மனிதர்களைப் பார்க்கிறேன். ஆனால், அவர்கள் மரங்கள்போலத் தெரிகிறார்கள். ஆனால், நடக்கிறார்கள்' என்று அவர் மொழிவது சீடர்களுடைய உள்ளப்பாங்கின் எதிரொலியாக இருக்கிறது. அதாவது, சீடர்கள் இயேசுவுக்கு அருகில் இருந்தாலும் அவர்களால் அவர் யாரென முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. தொடர்ந்து, இயேசு தொட்டவுடன் அவர் அனைத்தையும் தெளிவாகக் காண்கிறார். தொடர்ந்து, இயேசு பேதுரு வழியாகத் தம்மைச் சீடர்களுக்கு வெளிப்படுத்தியவுடன் அவர் யாரென அவர்கள் கண்டுகொள்கிறார்கள். 

இயேசுவைப் பற்றிய முழுமையான பார்வை அவருடைய தொடுதலால் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது.

மேற்காணும் இரு வாசகங்களும் நமக்குத் தரும் செய்திகள் எவை?

(அ) நம் வாழ்வின் பெருவெள்ளமும் ஒருநாள் வடிந்து போகும். மழை பெய்வதற்கு முன்னர் நோவாவுடைய ஊரார் அவரைக் கேலி பேசியது போல, மழை நிற்காமல் பெய்யத் தொடங்கியபோது பேழைக்குள் அவரோடு இருந்த அவருடைய உறவினர்கள் பொறுமை இழந்திருப்பார்கள். 'மழை நிற்காது' என்னும் விரக்திக்குக் கூடச் சென்றிருப்பார்கள். ஆனால், நோவா பொறுமை காக்கின்றார். உலர்ந்த தரையைக் காண்கின்றார். அவசரம் விடுத்துப் பொறுமை பற்றுதல் நலம்.

(ஆ) நம் இதயச் சிந்தனை பற்றி அக்கறையுடன் இருப்பது. மனிதரின் உள்ளத்தில் உள்ள தீய இதயச் சிந்தனையை அவர்களுடைய இயல்பு என ஏற்றுக்கொள்கிறார் கடவுள். இதையே நீதிமொழிகள்நூல் ஆசிரியர், 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல்செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (4:23) என்கிறார்.

(இ) இயேசுவைப் பற்றிய நம் பார்வை எப்படி இருக்கிறது? நடக்கும் மரம் போலத் தெரிகிறாரா? அல்லது தெளிவாகத் தெரிகிறாரா?


Monday, February 13, 2023

ஆண்டவர் மனம் வருந்தினார்

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 14 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் வாரம்

தொநூ 6:5-8; 7:1-5,10. மாற் 8:14-21.

ஆண்டவர் மனம் வருந்தினார்

படைப்பின் தொடக்கத்தில், மனிதனின் தனிமை நல்லதன்று எனக் கண்ட ஆண்டவராகிய கடவுள், நோவா காலத்தில், மனித குலமே நல்லதன்று எனக் காண்கின்றார். மனிதரின் இதயச் சிந்தனை நாள் முழுவதும் தீமையை உருவாக்குவதை ஆண்டவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. படைப்பின் தொடக்கத்தில் கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், மனிதனுக்குள்ளே இருக்கிற தீமை எங்கிருந்து வந்தது? வெளியிலிருந்து உந்ததா? அவனுக்குள்ளேயே உருவானதா? என்னும் கேள்விகள் விடைகளில்லாமல் நம் விரல்களிடையே கடந்து போகின்றன.

மானுடம் தீமை நிறைந்ததாக இருந்தாலும், அங்கும் நேர்மையாளர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நோவா. மற்றவர்களின் தீமை தன்னைப் பாதிக்காவண்ணம் தற்காத்துக்கொண்டார் நோவா. அதாவது, மற்றவர்கள் தீயவர்களாக இருந்தாலும் தான் நேர்மையாளராக இருக்க முடியும் என்பது நோவாவின் வாழ்வியல் நோக்கமாக இருந்தது. விளைவு, ஒரு மனிதரின் நேர்மையால் அவருடைய குடும்பத்தார் அனைவரும் காப்பாற்றப்படுகின்றனர்.

நற்செய்தி வாசகம், பரிசேயருக்கும் இயேசுவுக்கும் இடையே நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. பரிசேயர்களைப் பற்றி தம் சீடர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிற இயேசு, புளிப்பு மாவு என்னும் உருவகத்தைப் பயன்படுத்தி, 'எச்சரிக்கையாக இருங்கள்' என மொழிகின்றார். ஆனால், சீடர்களின் எண்ணமெல்லாம் அப்பக் கூடைமேலே இருக்கிறது. அப்பம் பலுகச் செய்பவர் தங்களிடையே இருப்பதை மறந்துவிட்டு, அப்பங்கள் இல்லையே எனக் கவலைப்படுகின்றனர். இயேசு அவர்களை மிகவே கடிந்துகொள்கின்றார். 'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?' என்னும் அவருடைய வினாவில், அவருடைய விரக்தியை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இரு வாசகங்களையும் எப்படி இணைத்துப் புரிந்துகொள்வது?

ஒன்று, மனித உள்ளத்தில் இருக்கும் தீமை புளிப்பு மாவு போன்றது. அதை உடனே நீக்காவிட்டால், அது பிசைந்த நல்ல மாவையும் புளிக்கச் செய்துவிடும். புளிப்பேறிய மாவிலிருந்து புளிப்பை அகற்றுவது கடினம். 

இரண்டு, பல நேரங்களில் நாம் கடவுளின் உடனிருப்பை மறந்துவிட்டு, நம் அன்றாட அலுவல்கள் பற்றியே கவலைப்பட்டுக் கலங்குகிறோம். 

மூன்று, பாலைவனத்தில் எப்படி மழை பெய்யும் என நோவா கடவுளிடம் கேள்வி கேட்கவில்லை. தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்கின்றார். அவருடைய ஊரார் அவர் பேழை கட்டுவதைப் பார்த்துக் கேலி செய்திருப்பார்கள். வெள்ளம் வருமுன் படகு செய்தல் அவசியம். பின்வருபவை பற்றி முன்னரே திட்டமிட்டுச் செயல்படுதல் நலம்.


Saturday, February 11, 2023

இதய உருவாக்கம்!

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

சீராக்கின் ஞானம் 15:15-20 1 கொரிந்தியர் 2:6-10 மத்தேயு 5:17-37

இதய உருவாக்கம்!

இயேசுவின் சீடர்கள் தங்களுடைய நம்பிக்கையை இந்த உலகத்தில் வாழ்வாக்கி உப்பாக இவ்வுலகோடு கலந்து அதற்குச் சுவையூட்டவும், ஒளியாகக் கடந்து நின்று தன்னகத்தே ஈர்க்கவும் செய்கிறார்கள் என்று கடந்த வார ஞாயிறு வழிபாடு (நற்செய்தி வாசகம்) நமக்கு நினைவூட்டியது. நம்முடைய பிரசன்னம் வெளிப்புறத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறித்து இது நமக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 5:17-27) இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை சீடரின் உள்ளத்தில் உள்ளார்ந்த மாற்றத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை எடுத்தியம்புகிறது. அல்லது இதய உருவாக்கமே சீடத்துவத்தின் நோக்கம் என்று சொல்கிறது. 

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 15:15-20) சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகவும், ஞானநூல்களில் ஒன்றாகவும் உள்ளது இந்நூல். 'ஞானம்' என்பதை இப்படி வரையறுக்கலாம்: 'நம்முடைய நலத்திற்கும், வளத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஏற்றபடியான தெரிவுகளைச் செய்யும் கலை.' ஒவ்வொரு மனிதரும் தான் விரும்புவதைச் செய்யும் விருப்புரிமை பெற்றிருக்கின்றார் எனவும், நன்மை எது தீமை எது என்பதைப் பகுத்தாய்ந்து தீமையை விலக்கி நன்மையைப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு என்றும், தன்னுடைய நடத்தை பற்றிய தெரிவுகளை மேற்கொள்ளும் முழுச் சுதந்திரத்தை அவர் பெற்றிருக்கின்றார் என்றும் ஞானநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. மேலும், 'ஞானம்' மற்றும் 'மதிகேடு' என்ற இரு பெரும் பிரிவுகளாக மனித தெரிவுகளைப் பிரித்து, 'ஞானம்' நிறைவான மற்றும் ஆசீர்பெற்ற வாழ்வுக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது என்றும், 'மதிகேடு' இறப்பிற்கு அழைத்துச் செல்கிறது என்றும் கற்பிக்கின்றன. இப்படிப்பட்ட கற்பித்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். 

இன்றைய வாசகத்தின் பாடச் சூழல் மனிதர்கள் கொண்டிருக்கின்ற விருப்புரிமை என்ற மேலான கொடையைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாசகத்தின் முதல் பகுதி மனிதர்கள் பெற்றிருக்கின்ற விருப்புரிமையையும் தன்னார்வ மனத்தையும் அடிக்கோடிடுகிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் உண்டு. 'நீர் - நெருப்பு,' 'வாழ்வு - சாவு' என்னும் இரண்டு எதிர்துருவங்கள் நம் முன் நிற்க, நான் கையை நீட்டி எனக்கு 'விருப்பமானதை' நான் தெரிவு செய்ய வேண்டும். வாசகத்தின் இரண்டாம் பகுதி கடவுளுக்கு ஏற்ற வழிகளைத் தெரிவு செய்ய என்னைத் தூண்டுகிறது. இதையே 'ஆண்டவரின் ஞானம்' என்கிறார் ஆசிரியர். இது திருச்சட்டங்களில் காணப்படுகிறது. மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்த கடவுள் அவர்கள் தீமையில் உழல வேண்டும் என்று கட்டளையிடவோ, பாவம் செய்ய அனுமதிகொடுக்கவோ இல்லை. இந்த உலகின் இயக்கத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அவர் மனித தெரிவுகள் அவர்களுக்கு அதற்கேற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்கிறார்.

ஆக, ஆண்டவரின் ஞானத்தைப் பெறுதலும், அந்த ஞானத்தின் பின்புலத்தில் 'நீரை,' 'வாழ்வைத்' தெரிவு செய்தலே இதய உருவாக்கம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 2:6-10), கொரிந்து நகரத் திருஅவையில் இருந்த பிரிவுகளையும் வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் களையுமாறும், அவர்களுடைய குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டு பிரிவுகளைக் கடந்து நிற்குமாறும் அறிவுறுத்தும் பவுல், தன் கருத்தை வலியுறுத்த கடவுளின் ஞானம் என்னும் கருதுகோளை முன்னெடுக்கின்றார். யூத ஞான இலக்கியம் சொல்வதுபோல, கடவுளின் ஞானம் எல்லாவகை மனித புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது என்றும், அது மறைபொருளாய் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்றுக்கொள்கின்றார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே ஞானம் கடவுளோடு இருந்தது. கடவுள் தாம் விரும்புகிறவருக்கு அந்த ஞானத்தை வெளிப்படுத்துகின்றார். கடவுளின் ஞானம் உலகுசார் வாழ்க்கைமுறையையும் தாண்டி, எல்லாவற்றின் இறுதியை நோக்கியதாக இருக்கிறது. மேலும், இவ்வகை ஞானம் மனித வாழ்க்கையை மாட்சியை நோக்கி - அதாவது, கடவுளின் வாழ்விலேயே நாம் பங்குபெற - நகர்த்துகிறது.

இப்படிப்பட்ட மேன்மையை அல்லது மாட்சியை நோக்கி நகரும் கொரிந்து நகரத் திருஅவை தனக்குள் பிளவுகளையும் பிரிவினைகளையும் எப்படி வைத்துக்கொள்ள இயலும்? என்று அவர்களைச் சிந்திக்க அழைக்கின்ற பவுல், ஒளிந்திருக்கும் மறையுண்மையான ஞானத்தைக் கண்டடையும் வழியையும் சொல்கின்றார்: 'இந்த ஞானமும் அறிவும் நமக்கு தூய ஆவியாரிடமிருந்து வருகிறது.' தூய ஆவியாரின் செயல்பாட்டின்படி வாழ்பவர் முதிர்ச்சி அடைகிறார். இந்த உலகின் ஞானத்தின்படி வாழ்வோரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார். இவ்வுலக ஞானத்தின்படி வாழ்பவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடிக் கரைந்துவிடும். ஆக, தூய ஆவியாரின் இயக்கத்தின்வழி வாழ்பவர் இறைஞானத்தைப் பெற்றவராக இருப்பார். அவருடைய வாழ்க்கை அவர் அடையப் போகும் மாட்சியை நோக்கியதாக இருக்கும்.

ஆக, கடவுளுடைய ஞானத்தின்படி வாழுமாறு தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நம்மையே கையளிப்பதே இதய உருவாக்கம்.

மலைப்பொழிவின் ஒரு நீண்ட பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:17-37) வாசிக்கின்றோம். முதலில், இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை, மாறாக, நிறைவேற்றவே வந்தேன்' என்பதை வலியுறுத்துகின்றார். ஆக, இயேசுவின் பணி ஏற்கனவே கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் தொடங்கியுள்ள வெளிப்பாட்டின் நீட்சியே தவிர, அதன் அழித்தல் இல்லை என்பதை உறுதி செய்கிறார். இயேசுவின் பணியின் புதுமை என்பது மனித வாழ்வின் வழிகாட்டுதலுக்கான புதிய நெறிமுறைகளை வழங்குவதில் அல்ல, மாறாக, ஏற்கனேவே உள்ள வழியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மூன்று கட்டளைகளை எடுத்து, அவற்றின் பின்புலத்தில் சரியான வழி என்ன என்பதை வரையறை செய்கிறார் இயேசு. இந்த மூன்று கட்டளைகளும் மனித வாழ்வின் சவால் நிறைந்த பகுதிகள்: கோபம், பாலுணர்வு, மற்றும் தனிநபர் நாணயம்.

'கொலை செய்யாதே!' என்ற கட்டளையோடு தொடங்குகிறார் இயேசு. மனித உயிர்களை அழிக்கும் குழுமங்களைச் சிதைக்கும் முதன்மையான காரணி வன்மம் அல்லது வன்முறை. இது சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் நலனையும் சீர்குலைக்கிறது. வன்முறையின் வேர் கோபம். கோபமின்றி வன்முறையும், கொலையும் நிகழ்வதில்லை. கோபத்தைத் தடுப்பதன் வழியாக வன்முறை மற்றும் கொலையைத் தடுக்க முடியும். மேலும், சின்னச் சின்ன மனத்தாங்கல்கள், உள்ளக்கீறல்கள் ஆகியவற்றையும் சரி செய்தபின் பலி செலுத்துதலே சால்பு என்றும் அறிவுறுத்துகிறார் இயேசு.

இரண்டாவதாக, 'விபசாரம் செய்யாதே!' கட்டுப்படுத்தப்படாத பாலுணர்வு குடும்ப உறவைச் சிதைக்கிறது. பாலுணர்வுப் பிறழ்வின் அடிப்படையான உணர்வு காமம் என்பதை அடையாளம் காட்டுகிறார் இயேசு. 'கண்களைப் பிடுங்குதல் மற்றும் கைகளை வெட்டுதல்' போன்ற உருவகங்கள் வழியாக, காமஉணர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது குடும்ப உறவைப் பிடுங்கி எரிந்தும், வெட்டியும் விடும் என எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு அல்லது மணவிலக்கும் குடும்ப உறவைப் பாதிக்கும் என்பது இயேசுவின் தொடர்பாடமாக இருக்கிறது. 

தொடர்ந்து, 'பொய்யாணை இடாதீர்!' அல்லது 'பொய்ச்சான்று சொல்லாதே!' என்ற கட்டளை பற்றிப் பேசுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் ஆணையிடுதல் என்பது ஒரு சாதாரண செயலாக, நிகழ்வாக இருந்தது. ஒருவர் தான் சொல்வது உண்மை என்று உறுதி செய்யவும், அல்லது தான் ஒரு செயலைச் செய்வது உறுதி என்று அறிக்கையிடவும் ஆணையிடுவது மரபு. இதில் என்ன பிரச்சினை என்றால், இப்படி ஆணையிடுபவர் தன்னுடைய தனிநபர் நாணயத்தன்மையை மறந்து, தன் நாணயத்தன்மையை உறுதிசெய்ய கடவுளையோ, இன்னொருவரையோ துணைக்கு அழைக்கிறார். மேலும், தன் ஆணையை நிறைவேற்ற முடியாமற்போக அவர் கடவுளையும் மற்றவரையும் கூட பொய்யராக்கிவிடுகிறார். இதற்கு மாற்றாக, ஆணையிடுதலையே தவிர்க்குமாறு அழைக்கிறார் இயேசு. ஒருவரின் தனிநபர் நாணயம்தான் உண்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய வேண்டுமே தவிர, வெளிப்புறத்திலிருந்து வரும் ஒருவர் அல்ல என்று அறிவுறுத்துகிறார். 

ஆக, இந்த மூன்று கட்டளை நீட்சிகளிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது. அல்லது இவற்றை ஒரே கருத்துருக்குள் அடக்கிவிடலாம்: 'இதய உருவாக்கம்' - கட்டளைகள் செயல் வடிவம் பெறவேண்டுமெனில் இதயம் உருவாக்கம் அவசியம். கோபத்தையும் காமத்தையும் உள்ளத்திலிருந்து அகற்றும்போது கொலை மற்றும் விபச்சாரம் என்னும் ஆபத்துக்கள் மறைந்துவிடும். தனிநபர் நாணயம் என்பதும் இதய உருவாக்கத்தின் ஓர் அங்கமே. இதையே மனப்பாங்கு புதுப்பித்தல் என்கிறோம். மனப்பாங்கு புதுப்பிக்கப்படாமல் வெறும் செயல்களை மட்டும் சரி செய்தல் நீண்ட பலனைத் தராது. ஆனால், ஆண்டவரின் ஞானத்தின் வழிகளுக்கேற்ப உள்ளம் உருவாக்கம் அடைந்தால் கட்டளைகளை நிறைவேற்றுவது எளிதாகும். இயேசு கட்டளைகளை மாற்றவில்லை. ஆனால், இதயம் மற்றும் மனப்பாங்கு புதுப்பித்தல் வழியாக கட்டளைகளை நிறைவேற்ற முடியும் என்று சொல்வதன் வழியாக கடவுளின் கட்டளைகளை புதிய மற்றும் ஆழமான நிலைக்கு எடுத்துச் செல்கிறார் இயேசு.

இவ்வாறாக,

கட்டளைகளைக் கடைப்பிடிக்க இதய உருவாக்கம் அவசியம் என்பதை நற்செய்தி வாசகமும், நன்மையைத் தேர்ந்து தெளிதல் இதய உருவாக்கத்தின் முதல் படி என்பதை முதல் வாசகமும், தூய ஆவியாரின் உடனிருப்பு அதன் இரண்டாம் படி என்பதை இரண்டாம் வாசகமும் நமக்குச் சொல்கின்றன. 

இன்று நம்முடைய இதயங்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்பதுதான் கேள்வி.

இன்று நாம் பல நேரங்களில் மேலோட்டமாகவே வாழ்கிறோம். நல்லா இருக்கணும், நல்லதே செய்யணும், கோபப்படக் கூடாது, தவறான அல்லது தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது, பொய் பேசக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறோம். அதன்படி நடக்கவும் செய்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்வின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுகிறது. மீண்டும் செய்த தவறுகளையே செய்ய ஆரம்பிக்கின்றோம். விரைவாகத் தீர்ந்துவிடும் பேட்டரிகளை அகற்றிவிட்டு, நீடித்த இறைவனோடு தொடர்பில் இருப்பதுதான் இதயத்தைப் புதுப்பிப்பது, அல்லது இதயத்தை உருவாக்குவது. இதயம் உருவாக்கப்பட்டுவிட்டால் நம்முடைய செயல்கள் நற்செயல்களாகத் துலங்க ஆரம்பிக்கும்.

இன்று இதய உருவாக்கம் பெற நாம் சந்திக்கும் சவால்கள் எவை?

1. நம்மையே சூழ்நிலைக் கைதி என உணர்வது

சில நேரங்களில் நான் என்னுடைய வாழ்வு இப்படி இருக்கக் காரணம் என்னுடைய சூழல் அல்லது வளர்ப்பு அல்லது சேர்க்கை என என் பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்கிறேன். நான் இப்படி இருக்குமாறு கடவுள்தான் எழுதிவைத்துள்ளார் என்று கடவுள்மேல் பழிசுமத்தும் மனநிலையும் சில நேரங்களில் இருக்கிறது. ஆனால், இன்றைய முதல் வாசகம் தெளிவாகச் சொல்கிறது. நெருப்பையோ அல்லது நீரையோ கைநீட்டித் தேர்ந்துகொள்வது நான்தான். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை. நான் என் வாழ்வின் சூழல் கைதி என்னும் மனநிலை விடுக்க நான் என் வாழ்விற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

2. குறுகிய எண்ணம் கொண்டு வாழ்வது

கொரிந்து நகர திருஅவையினர் கிறிஸ்துவின்மேல் தாங்கள் கொண்ட நம்பிக்கையால் அடைந்த மாட்சியை மறந்துவிட்டு, தங்களுக்கு நற்செய்தி அறிவித்த பவுல், கேபா, அப்பொல்லோ ஆகியோரின் பெயர்களைக் கொண்டு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டு ஒருவர் மற்றவர்மேல் பகைமை பாராட்டுகின்றனர். குறுகிய எண்ணம் கொண்டவர்கள் வாழ்வின் முழுப்படத்தைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களையும் மிகவும் குறைத்தே மதிப்பிடுவார்கள். ஆக, குறுகிய எண்ணத்திலிருந்து நான் விடுபட்டு பரந்த உள்ளம் கொண்டிருக்க வேண்டும்.

3. மேலோட்டமாக வாழ்வது

நான்தான் யாரையும் கொலை செய்வதில்லையே? விபச்சாரம் செய்வதில்லையே? பொய்யாணை இடுவதில்லையே? என்று நான் மேலோட்டமாகப் பெருமை பாராட்டிக்கொண்டு, என் உள்ளத்தில் பகைமை, எரிச்சல், கோபம், காம உணர்வு, பேராசை, பொய் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு நடந்தால் நான் மேலோட்டமாக வாழ்கிறேனே அன்றி ஆழமாக வாழ்வதில்லை. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் மேல்பகுதி போல, வெளியே தெரிகின்ற பகுதியை மட்டும் நன்றாக வாழ்ந்துவிட்டு உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை பெறுகிறேன். அப்படி இருந்தால் மறைந்திருக்கும் அந்த 95 சதவிகித பாறையின்மேல் மோதுகின்ற வாழ்க்கை என்ற டைட்டானிக் கப்பல் உடைந்து தரைதட்டிவிடும்.

இறுதியாக,

'என் உள்ளத்தில் பகைவர்கள் இல்லையென்றால் வெளியிலிருக்கும் பகைவர்கள் என்னைக் காயப்படுத்த முடியாது!' என் உள்ளத்தின் பகைவர்களை அழிக்கும் ஒவ்வொரு நாளும் என் இதயம் உருவாக்கம் பெறுகிறது. அந்தப் பயணத்தில் நானும் திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!' (காண். திபா 119:5).


Thursday, February 9, 2023

திறக்கப்பட்டன

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 10 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் வாரம்

தொநூ 3:1-8. மாற் 7:31-37.

திறக்கப்பட்டன

இன்றைய முதல் வாசகத்தில், நம் முதற்பெற்றோர் பாம்பின் சொல் கேட்டு விலக்கப்பட்ட கனியை உண்கின்றனர். விளைவாக, அவர்களுடைய கண்கள் திறக்கப்படுகின்றன. தங்கள் ஆடையின்மையை உணர்ந்து தற்காலிகமாக ஆடைகளைத் தயாரித்து அணிந்துகொண்டு இறைவன் திருமுன்னிலையிலிருந்து மரங்களுக்கு இடையே ஒளிந்துகொள்கிறார்கள். 

நம் முதற்பெற்றோர் செய்த தவறு என்ன?

'நோ சொல்ல மறுத்தது!'

நம் விடுதலை அல்லது சுதந்திரம் ஒன்றை வேண்டாம் என்று சொல்வதில்தான் இருக்கிறது. விலக்கப்பட்ட கனியின் சோதனையை மூன்று சொல்லாடல்களால் பதிவு செய்கிறார் ஆசிரியர்: 'உண்பதற்குச் சுவையானதாக,' 'கண்களுக்குக் களிப்பூட்டுவதாக,' 'அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாக'. இயேசுவின் மூன்று பாலைவனச் சோதனைகளும் ஒருவகையில் இவற்றின் நீட்சியே: கற்களை அப்பமாக்குமாறு சொல்லும் அலகை கற்களை உண்பதற்குச் சுவையானதாக மாற்றுகிறது. 'மேலிருந்து கீழே குதி' என்று அலகை இயேசுவைச் சோதித்து, கண்களுக்குக் களிப்பூட்டும் காட்சிப் பொருளாக அவரை மாற்ற விரும்புகிறது. 'என்னைப் பணிந்து வணங்கு' என்று சொல்வதன் வழியாக தன் அறிவையும் விருப்பத்தையும் இயேசுவின் அறிவு மற்றும் விருப்பமாக மாற்ற விழைகிறது. இயேசு மிகவும் உறுதியுடன் 'நோ' சொல்லிவிடுகின்றார்.

கனியை உண்ட அந்த நொடியில் நம் முதற்பெற்றோரின் கண்கள் திறக்கப்பட்டபோது, அவர்கள் அடைந்த பரிதவிப்பை நம்மால் உணர முடிகிறது. 'இந்த நிகழ்வு நடந்திருக்கவே கூடாது!' 'இந்தப் பொழுது வந்திருக்கவே கூடாது!' போன்ற வருத்த எண்ணங்கள், குற்றவுணர்வு, பயம் என அனைத்தும் ஒரு சேர அவர்களைப் பற்றிக்கொள்கின்றன. மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள். கடவுளிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்வதற்காகவும், ஒருவர் மற்றவரிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்வதற்காகவும். பாவம் நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்பதை மிக அழகாகப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

பாவம் மானுடம்! அதன் முதல் அறிவொளியே குற்ற உணர்வு மற்றும் பயம் என்னும் இருளால் அணைக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை குற்றவுணர்வும் பயமும் நம்மை விட்டு நீங்காமல் நிற்கின்றன.

நற்செய்தி வாசகத்தில், காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவருக்கு நலம் தருகின்றார் ஆண்டவர். 'எப்பத்தா' ('திறக்கப்படு') என்றவுடன் அவருடைய காதுகள் திறக்கப்படுகின்றன. நா கட்டவிழ்கின்றது. அவர் தெளிவாகப் பேசினார். இவருடைய குரலைக் கேட்டவர்களும் வியந்து, 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்!' என்று இயேசுவைப் பாராட்டுகின்றனர்.

மேற்காணும் இரு வாசகங்களையும் அருகருகே வைத்துப் பார்ப்போம்:

(அ) முதற்பெற்றோரின் கண்கள் அவர்களுடைய முயற்சியால் திறக்கப்படுகின்றன. காதுகேளாதவரின் காதுகள் இயேசுவின் முயற்சியால் திறக்கப்படுகின்றன.

(ஆ) முதற்பெற்றோர் அச்சமும் குற்றவுணர்வும் கொள்கின்றனர். காது கேட்கத் தொடங்கியவர் நலமும் நிறைவும் பெறுகின்றார்.

(இ) முதற்பெற்றோர் மரங்களுக்கு இடையே ஒளிந்துகொள்கின்றனர். காது கேட்கத் தொடங்கியவர் தாம் பெற்ற நலத்தை மற்றவர்முன் அறிக்கையிடுகின்றார்.

இறைவன்தாமே முன்வந்து நம் காதுகளையும் கண்களையும் திறந்தால் நலம். நாமே முயற்சித்து அவற்றைத் திறக்க முற்படுதல் நலமன்று!

இறைவன் 'ஆம்' எனச் சொல்லும் வரை, அனைத்திற்கும் 'இல்லை' என நாம் சொல்லிப் பழகுதல் சால்பு.


Wednesday, February 8, 2023

தனிமையாக இருப்பது

இன்றைய இறைமொழி 

வியாழன், 9 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் வாரம்

தொநூ 2:18-25. மாற் 7:24-30.

தனிமையாக இருப்பது

முதல் வாசகத்தில் இரண்டாம் படைப்புக் கதையாடலின் நிறைவுப் பகுதியை வாசிக்கின்றோம். 'மனிதனின் தனிமை' என்னும் எதிர்மறை நிகழ்வாகத் தொடங்கி, 'இருவரும் ஒரே உடலாய் இருப்பர்' என நேர்முகமாக நிகழ்வாக கதையாடல் நிறைவு பெறுகிறது. அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள் மனிதனின் (ஆணின்) தனிமையை 'நல்லதன்று' எனக் காண்கின்றார். 

தாம் படைத்த அனைத்தையும் மனிதனிடம் கொண்டு வருகின்றார். மனிதன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயரிடுகிறான். அங்கே இன்னொரு எதிர்மறை விடயமும் பதிவு செய்யப்படுகின்றது. மனிதனுக்கு (ஆணுக்கு) ஏற்ற துணை எதுவும் அவற்றில் இல்லை. இது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. இன்று பல இடங்களில் ஆண்-பெண் உறவு நிலை மறுக்கின்ற பலர், ஆண்-ஆண், பெண்-பெண் உறவுநிலைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் திருமணம் என்றும் முன்மொழிகின்றனர். ஆணின் துணை ஆணிலிருந்து உருவாக்கப்படுகின்ற பெண்ணே அன்றி மற்றவை அல்ல.

கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்கின்றார். அக்காலத்து ஆசிரியருக்குத் தெரிந்த மயக்க மருந்து உறக்கம் என்பதே. கடவுள் என்னும் மருத்துவர் கத்தியின்றி இரத்தமின்றி அறுவைச் சிகிச்சை செய்கின்றார். ஆணின் விலா எலும்பு ஒன்று பெண்ணாக மாறுகிறது. விலா எலும்பு ஆணின் இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது. இவ்வாறாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நெருக்கம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆணின் மென்மையான இதயத்தை பெண் என்ற வன்மையான விலா எலும்பு காப்பாற்றுகிறது. இவ்வாறாக, பெண் திடமானவள் என்பதையும் ஆசிரியர் மிக அழகாகப் பதிவு செய்கின்றார். பெண்ணாக மாறி நிற்கும் விலா எலும்பைக் கண்டவுடன், ஆதாம் அவளுக்குப் பெண் எனப் பெயரிடுகிறான். 

'இருவரும் ஒரே உடலாய் இருப்பர்' எனத் திருமணம் பற்றிய குறிப்புடன் நிகழ்வு நிறைவுபெறுகிறது.

பெண் வந்தவுடன் ஆணின் தனிமை நீங்குகிறதா? அது போல பெண்ணின் தனிமையை ஆண் போக்க இயலுமா? 'உமக்காகப் படைக்கப்பட்ட ஆன்மாக்கள் உம்மில் மற்றும் உம்மால் நிறைவு காணும் வரை அவை நிறைவைக் காண்பதில்லை' என்று அகுஸ்தினார் மொழிவது ஏன்?

ஆண் தனிமையாக இருந்தபோது அவனோடு முதன்முதலாக உடனிருந்து தனிமை போக்கியது கடவுளே. அதுபோல பெண் படைக்கப்பட்டு ஆண் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின் தனிமை போக்கியவரும் கடவுளே. ஆகையால்தான், நாம் இன்னும் கடவுளால் மட்டுமே நிறைவுபெறுகிறோம். கடவுள் மட்டுமே நம் தனிமை போக்கக் கூடியவர். 

நற்செய்தி வாசகத்தில், பேய் பிடித்திருந்த தன் குழந்தைக்கு நலம் தரும்படி இயேசுவை நாடி நிற்கின்றாள் சிரிய பெனிசிய (புறவினத்து) பெண். அவள் ஒரு பெண், புறவினத்துப் பெண், பேய் பிடித்த குழந்தையின் தாய். இப்படி மூன்றுவகை நொறுங்குநிலையில் வந்த அவள், 'குழந்தையின் உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவதில்லை' என்று இயேசு சொன்னவுடன் சற்றே வதங்கி விடுகிறாள். குழந்தையும் நாய்க்குட்டியும் வேறு எனச் சுட்டிக்காட்டியவரிடம், அவை இரண்டும் இருக்கும் இடம்தான் வேறு, அவை சாப்பிடுகின்ற உணவு ஒன்றுதான் என்று மொழிகிறாள் அவள். 'நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்' என அனுப்புகிறார் இயேசு. 

தன் கையறுநிலையில் இயேசுவிடம் சரணாகதி அடைகின்றார் பெண். 

மேற்காணும் இரு வாசகங்களை இணைத்துப் பார்ப்பது எப்படி?

ஆணும் பெண்ணும் தங்களைப் படைத்தவர் முன் சரணாகதி அடையும்போதும் நலம் பெறுகின்றனர்.


Sunday, February 5, 2023

உம் வேலைப்பாடுகள்

இன்றைய இறைமொழி 

திங்கள், 5 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் வாரம்

தொநூ 1:1-19. மாற் 6:53-56.

உம் வேலைப்பாடுகள்

'ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்!' (திபா 104:24).

இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர் இறைவனின் படைப்பைக் கண்டு வியந்து இவ்வாறு பாடுகின்றார். முதல் வாசகத்தில், படைப்பின் தொடக்க நிகழ்வுகளை வாசிக்கின்றோம். முதல் நான்கு நாள்கள் நிகழ்வில் நாம் காண்பவை இவை: (அ) கடவுள் சொன்னவுடன் அது உருவாக்கம் பெறுகிறது. 'ஒளி உண்டாகுக' என்று அவர் சொல்லும்போது ஒளி உண்டாகிறது. (ஆ) கடவுள் ஒழுங்கற்ற தன்மையை ஒழுங்காக, ஒருங்கியக்கமாக மாற்றுகின்றார். (இ)  ஒன்றை மற்றொன்றிடமிருந்து பிரிப்பதன் வழியாக ஒவ்வொன்றின் வரையறையை நிர்ணயிக்கின்றார். மற்றும் (ஈ) படைப்பின் காரணரும் முதற்பொருளமாக ஆண்டவராகிய கடவுளே இருக்கின்றார்

நற்செய்தி வாசகத்தில் இயேசு கரையில் இறங்கியவுடனே மக்கள் கூட்டம் அவரை இன்னார் என்று கண்டுகொள்கின்றனர். இயேசுவைக் கண்டவுடன் அவர்களை ஒரு பரபரப்பு பற்றிக்கொள்கின்றது. ஊருக்குள் ஓடுகின்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள், தீய ஆவி பிடித்தவர்கள் என அனைவரையும் அவரிடம் அள்ளிக் கொண்டு வருகின்றனர். அவருடைய மேலுடையையாவது தொடுமாறு வேண்டுகிறார்கள். தொட்ட அனைவரும் கண்டுகொள்கின்றனர்.

பெயரில்லா இந்த மக்கள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றனர்:

(அ) இயேசுவை இன்னாரென்று அறிதல்

இயேசு என்ற நபரை அறிதல் என்பது அவருடைய பெயரையோ, உருவத்தையோ, அடையாளத்தையோ அறிதல் அல்ல. மாறாக, இயேசு எனக்கு இவர் என்று தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்தல். இயேசுவை மற்றவர்கள் இன்னாரென்று அறிந்துகொண்டனர். ஆனால், அவரோடு உடன் நடந்த திருத்தூதர்கள் அவரை இன்னாரென்று அறிந்துகொள்ளவில்லை. இதுதான் மாற்கு நற்செய்தியாளர் முன்வைக்கும் முரண். இயேசு எனக்கு யார்? அவரை நான் எப்படி அறிந்துகொள்கிறேன்?

(ஆ) இயேசுவைப் பற்றிக்கொள்தல்

இயேசுவைக் கண்டவுடன், அவரைப் பற்றிக்கொண்டு அவரிடமிருந்து முழுமையாகப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். வழியில் சென்றுகொண்டிருந்த பால் வண்டி கவிழ்ந்தவுடன், சாலையில் ஓடும் பாலை எப்படியாவது அள்ளிக்கொண்டு போக வேண்டும் என அங்கலாய்க்கும் மக்கள் போல, தங்களருகில் இயேசுவைக் கண்டவுடன் ஊருக்குள் சென்று நோயுற்ற அனைவரையும் அள்ளிக்கொண்டு வருகின்றனர். மகதலா மரியா உயிர்த்த ஆண்டவரைப் பற்றிக்கொண்டு நின்றதுபோல, இவர்களும் இயேசுவைப் பற்றிக்கொள்கின்றனர். எந்த அளவுக்கு அந்த மக்கள் தேவையில் இருந்தால் இயேசுவை இப்படிப் பற்றிக்கொண்டிருப்பார்கள்? இன்று கடவுளுக்கான என் தேவை எப்படி இருக்கிறது? கொஞ்ச நேரம் அவரை நற்கருணையில், இறைவார்த்தையில் கண்டாலும் அவரைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேனா அல்லது அவர் என் விரல்களின் இடையே நகர்ந்துவிடுமாறு நானே இறுக்கத்தை விடுகிறேனா?

(இ) உடனடி செயல்பாடு

'இன்று விருப்பம், நாளை செயல்' என்னும் வழக்கம் அந்த ஊர் மக்களிடம் இல்லை. மாறாக, 'இன்றே விருப்பம், இன்றே செயல்' என்று உடனடி செயல்பாட்டில் இறங்குகின்றனர். செயல்பாடாக மாறாத விருப்பங்கள் அனைத்தும் வெறும் கனவுகளாகவே மறைந்துவிடுகின்றன. நாம் எண்ணும் எண்ணங்கள் அல்ல, மாறாக, ஆற்றும் செயல்களே மற்றவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த உலகில் மாற்றத்தை உருவாக்கும். இயேசு ஊருக்குள் வந்த அன்று எத்தனை நோயுற்றவர்கள் நலம் பெற்றதால் மகிழ்ந்திருப்பார்கள். 


Saturday, February 4, 2023

மனிதர்முன் ஒளிர்க!

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

எசாயா 58:7-10 1 கொரிந்தியர் 2:1-5 மத்தேயு 5:13-16

மனிதர்முன் ஒளிர்க!

அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள் என்றால், அல்லது அவர்கள் பார்ப்பது நம் செய்கையைப் பாதிக்கிறது என்றால், நாம் அவர்கள் முன் ஒளிர வேண்டும் என்று நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு!

இன்று நாம் ஒளிர்கிறோமோ இல்லையோ நம்மைச் சுற்றி நிறைய ஒளிரிகள் இருக்கின்றன. நம்முடைய கைகளில் ஒட்டிப்போன ஸ்மார்ட்ஃபோன், நமக்கு முன் ஒய்யாரமாக சுவரில் அறையப்பட்ட செவ்வகமாய் எல்இடி டிவி, நம் மடிக்கணினி திரை, அறையின் ஒளிவிளக்குகள் என நம்மைச் சுற்றி நிறைய ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை நோக்கி நம் கண்கள் இயல்பாகவே செல்கின்றன. இவை ஒளிரும்போது நாம் ஒளிர வேண்டாமா?

எதற்காக ஒளிர்தல் வேண்டும்

'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க' என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்கின்ற இயேசு, இதே மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில், தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் என்னும் அறச்செயல்கள் பற்றிய அறிவுரைப் பகுதியில், 'மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்' (காண். மத் 6:1) என எச்சரிப்பது ஏன்?

இயேசுவைப் பொருத்தவரையில் நம்முடைய செயல்கள் ஒளிர வேண்டும். ஏன்? அவற்றால் விண்ணகத்தந்தை பெருமைப்படுத்தப்படுவதால்!

இன்றைய முதல் வாசகமும் (காண். எசா 58:7-10) நற்செய்தி வாசகமும் (காண். மத் 5:13-16), 'ஒளி' என்ற வார்த்தையை மையமாக வைத்தே சுழல்கின்றன. 

நற்செய்தி வாசகத்திலிருந்து நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவில், பேறுடைமைகளைத் தொடர்ந்து அமைந்திருக்கிறது. 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் ... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்கிறார் இயேசு. 'நீங்கள்' என்பது இங்கே இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. 'உப்பாக இருக்கவும், ஒளியாக இருக்கவும்' அறிவுறுத்தவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை இயேசு. மாறாக, சீடர்கள் உப்பாகவும் ஒளியாகவும் இருப்பதாகவே சொல்கின்றார். 

இயேசுவைப் பொருத்தவரையில் அவருடைய குழுமம் அல்லது குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் எல்லாருமே உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறார்கள்.

உப்பு மற்றும் ஒளி உருவகங்களை எப்படிப் புரிந்துகொள்வது?

உப்பு என்பது முதல் ஏற்பாட்டில் பலிப்பொருளில் கலக்கப்படும் பொருளாகவும், உடன்படிக்கை நிகழ்வில் பயன்படுத்தப்படும் பொருளாகவும், உணவைப் பாதுகாக்கும் பொருளாகவும், உணவிற்கு சுவையூட்டும் பொருளாகவும், கெட்டதைத் தூய்மையாக்கும் (கசப்பான தண்ணீரை நல்ல தண்ணீராக்கும்) பொருளாகவும் பயன்படுகிறது. ஒரே உப்பைச் சாப்பிடுவதன் வழியாக நட்பு வலுப்படுகிறது என்று மக்கள் நம்பினர். மேலும், ஆங்கிலத்தில் உள்ளத்தில் 'ஸேலரி' (சம்பளம்) என்ற வார்த்தையே 'ஸாலே' (உப்பு) என்ற இலத்தீன் சொல்லிலிருந்தே வருகிறது. ஏனெனில், தொடக்கத்தில் உரோமை படைவீரர்களின் சம்பளமாக உப்புதான் வழங்கப்பட்டது. இப்படிப் பல புரிதல்கள் இருந்தாலும், இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் பார்க்கும்போது, உவர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கும் வரைதான் உப்பு மதிப்பு பெறுகிறது. ஆனால், அத்தன்மையை இழந்துவிட்டால் அது குப்பையாக மாறிவிடுகிறது, பயன்படாப் பொருளாக, வைத்திருப்பவருக்குச் சுமையாக மாறிவிடுகிறது. நீண்ட காலமாக உப்பை வைத்திருக்கும்போது, அல்லது அதிகமான வெயில், அதிகமான குளிர் என்று தட்பவெப்பநிலை மாறிக்கொண்டிருக்கும்போது, அல்லது தூசியான இடத்தில் வைக்கும்போது என இந்நேரங்களில் உப்பு தன் தன்மையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. உப்பானது நீரில் கரைக்கப்படும்போது அல்லது உணவுப்பொருள்களில் கலக்கும்போதும் அது தன் தன்மையை இழக்கும். ஆனால், அப்படிப்பட்ட இழப்பு வரவேற்கத்தக்கது. ஏனெனில், அங்கே அது பயன்பாட்டுப்பொருளாக மாறிவிடுகிறது. பயன்பாட்டுப் பொருளாக மாறாமல் தன்னிலேயே தன்மை இழப்பதுதான் ஆபத்தானது. ஏனெனில், அப்படிப்பட்ட நேரத்தில் உப்பு யாருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது. ஆக, உப்பு சுவையாவதும், சுமையாவதும் அதனுடைய உவர்ப்புத்தன்மையில்தான் இருக்கிறது. அது போலவே, இயேசுவின் குழும உறுப்பினரும் சீடரும் உறுப்பினருக்குரிய சீடருக்குரிய தன்மையைக் கொண்டிருக்கும் வரை தான் அவர்கள் குழுமத்தில் இருக்க முடியும்

ஒளி என்பது கடவுளையும் வாழ்வையும் குறிக்கிறது. படைப்பின் தொடக்கத்தில், இருளும் வெறுமையும் குழப்பமும் நிறைந்த இடம், 'ஒளி உண்டாகுக!' என்ற வார்த்தைகளால் உயிர்பெறுகின்றன. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும்போது நெருப்புத்தூணாக உடன்செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். இஸ்ரயேலைத் தன்னுடைய ஒளி என அழைத்து மகிழ்கின்றார் கடவுள். 'ஒளி இனிமையானது' என்று ஞான இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. இரண்டாம் ஏற்பாட்டிலும் ஒளி கடவுளிடமிருந்து வருவதாகவும், கடவுள் சார்ந்த செயல்கள் செய்பவர்கள் ஒளியிடமிருந்து பிறக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீடத்துவம் என்பது இத்தகைய ஒளியைத் தன்னகத்தே கொண்டிருப்பது. மேலும், இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் எல்லா வீடுகளிலும் விளக்கு எப்போதும் அணையாமல் இருக்கும். தீப்பெட்டி பயன்பாடு அரிதாக இருந்த காலத்தில் விளக்கை அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும், திரியைச் சுருக்கி எரியவிடுவதும் இன்னும் கிராமங்களில் வழக்கத்தில் இருக்கிறது. அப்படி திரியை அணையவிடாமல் பாதுகாக்க அதை அவர்கள் மரக்காலின் கீழ் அல்லது கட்டிலின் கீழ் அல்லது ஒரு பாத்திரத்தால் மூடி வைப்பது வழக்கம். வீட்டிற்குள் யாராவது வரும்போதுதான் அவர்கள் அதைத் திறந்து வைப்பர். ஸ்விட்சைப் போட்ட அடுத்த நொடி எரியும் விளக்குகளுக்குப் பழகிவிட்ட நமக்கு இந்த உருவகம் சற்று தூரமாகவே இருக்கிறது. ஆனால், பொருள் மிகவும் எளிது. ஒளி பிறருக்குப் பயன்பட வேண்டும்.

ஆக,

உப்பு தன்னுடைய உவர்ப்புத்தன்மையாலும், ஒளி தன்னுடைய ஒளிரும் தன்மையாலும் மற்றவர்களின் வாழ்வுக்குப் பயன்தர வேண்டும். அப்படிப் பயன்பதருவதற்கான ஒரு வழியே நற்செயல்கள்.

இந்நற்செயல்கள் எவை என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது:

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வழிபாடு சார்ந்த செயல்பாடுகளில் மூழ்கிக்கிடந்து வாழ்வுசார் செயல்களை மறந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு நோன்பு பற்றிய புதிய வரையறையைத் தருகின்றார் எசாயா. நோன்பு என்றால் என்ன? 'பசித்தோருக்கு உணவைப் பகிர்வது, தங்க இடமில்லாதவர்களுக்குத் தங்குவதற்கு இடம் தருவது, ஆடையற்றோரை உடுத்துவது, இனத்தாருக்கு உடனிருப்பது'. இத்தகைய நோன்பை மேற்கொள்பவர்கள் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொள்வர். மேலும், 'உன்னிடம் இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு,' 'சுட்டிக் காட்டி குற்றம் சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,' 'பசித்திருப்போருக்கு ஒருவர் தன்னையே கையளித்து,' 'வறியோரின் தேவையை நிறைவு செய்தால்' இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இவை இஸ்ரயேல் மக்களின் இயலாமைகளாக, குறைகளாக இருந்தவை. இவற்றைக் களைய அவர்களை அழைக்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 2:1-5) புனித பவுல், தான் கொரிந்து நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது தன்னிடமிருந்த உணர்வையும் மனப்பாங்கையும் பதிவுசெய்கின்றார்: 'நான் உங்கள் நடுவில் வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும், நடுக்கத்தோடும் இருந்தேன்.' இப்படிப்பட்ட நிலையில் நற்செய்தி அறிவத்ததுதான் பவுலின் நற்செயல். இந்நற்செயலாலேயே இவர் ஒளிர்கின்றார்.

இன்று நாம் மனிதர்முன் எப்படி ஒளிர்வது?

அ. நற்செயல்கள் செய்வதால்

- எசாயா இறைவாக்கினர் முன்வைக்கும் பிறரன்புச் செயல்கள் வழியாக.

ஆ. நற்செய்தி அறிவிப்பதால் 

- பவுல் போல தன்னையே இறைவனுக்கு சரணாகதியாக்கி அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது.

இ. கலப்பதாலும் கடந்து நிற்பதாலும்

உப்பு தன்னையே அழித்து, மறைத்து, தன் இயல்பை இழந்து உணவோடு கலக்கும்போது சுவை தருகிறது. தனித்து நிற்றலில் அல்ல, மாறாக, கலந்துவிடுவதில்தான் உப்பின் பயன்பாடு இருக்கிறது. ஒளி தன் இருப்பைவிட்டு கடந்து நிற்றால்தான் மற்றவர்களுக்குப் பயன்தர முடியும்.

இப்படி வாழ்வதால் நமக்கு மன அழுத்தம் கூடிவிடாதா? எந்நேரமும் நாம் ஏன் பயன்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்? நாம் என்ன பயன்பாட்டுப் பொருள்களா? நாம் என்ன கால்நடைகளா? இப்படிப்பட்ட கேள்விகளால் எழும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து நாம் எப்படி விடுபவது?

நம்முடைய செயல்களால் இறைவன் அதாவது நம்முடைய விண்ணகத்தந்தை மாட்சி பெற வேண்டும். ஒரு குழந்தையின் செயலைக் கண்டு அதன் தாயையும் தந்தையையும் பாராட்டுவதுபோல இறைவன் பாராட்டப்பட வேண்டும். ஏனெனில், சீடத்துவம் என்னும் உவர்ப்புத்தன்மையின் ஊற்றும், ஒளிரும்தன்மையின் ஊற்றும் அவரே. 'அவருக்கு அஞ்சிநடப்போர் இருளிலும் ஒளியென மிளிர்வர்' (திபா 112) என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல்.


Thursday, February 2, 2023

சாட்சியத்தின் விலை

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 3 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

எபி 13:1-8. மாற் 6:14-29.

சாட்சியத்தின் விலை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

திருமுழுக்கு யோவான் - ஏரோது - ஏரோதியா - சலோமி

இந்த நான்கு பேருக்கும் இடையில் வேகமாக நடந்தேறும் நாடகத்தில் திருமுழுக்கு யோவான் தன் இன்னுயிரை இழக்கின்றார்.

'மனிதர்களின் வாழ்க்கையின் இலக்கு மகிழ்ச்சியில்தான் இருக்கின்றது. மகிழ்ந்திருக்கும் ஒவ்வொருவரும் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுகிறார்' என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. மேலும் அவர், மறைச்சாட்சியாளர்கள் தங்கள் இன்னுயிரை அழித்துக்கொள்ளத் தயாராக இருப்பதும் இம்மகிழ்விலேயே என்கிறார் அவர்.

மேற்காணும் நான்கு பேரும் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர்.

ஏரோது - இவர் தன் மகிழ்ச்சியை தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலும், தன் சகோதரன் மனைவியைத் தன் பொருள்களால் கவர்ந்து கொள்வதிலும், தனக்குக் கீழிருக்கும் அலுவலர்கள் மற்றும் தான் அழைத்த விருந்தினர்களைத் திருப்திப்படுத்துவதிலும் காண்கின்றான்.

ஏரோதியா - இவர் பிலிப்பின் மனைவி. பிலிப்பும் இவரும் ஒருவரையொருவர் நெருக்கமாகக் காதலித்தவர்கள். ஒரு கட்டத்தில் பிலிப்பு இவரிடம் சொல்வார், 'அன்பே, நான் உன்னிடம் 'ஐ லவ் யு' என்று சொல்ல மாட்டேன்!' ஏனெனில், அப்படிச் சொல்வதில் உனக்கும் எனக்கும் இடைவெளி வந்துவிடுகிறது. ஆனால், 'ஐ லவ் அஸ்' என்றே சொல்வேன். நாம் இருவர் இணைந்திராமல் ஒருவர் மற்றவரை எப்படி அன்பு செய்ய முடியும்?' இப்படிச் சொன்னவரிடமிருந்து ஏரோதியா எப்படி விலகிச் சென்றார்? காரணம், ஏரோதிடம் இருந்த பதவியும், செல்வமும். எது தேவையோ அதுவே தர்மம் என்பது இவருடைய கொள்கை. இவர் ஒரு சந்தர்ப்பவாதியாக இருந்ததால், 'ஒவ்வொன்றுக்கும் ஒரு சந்தர்ப்பம் அமையும்' என்று காத்திருந்ததால்தான், யோவானை அழிக்க சந்தர்ப்பம் தேடுகிறாள். இவள் தன் மகிழ்ச்சியை பொருளிலும், பொருளை வைத்திருப்பவர்களிடமும் தேடுகிறாள்.

சலோமி - சொன்னதைச் சொல்லும், செய்யும் கிளிப்பிள்ளை. நடனம் கற்ற இவளுக்கு வாழ்க்கையைக் கற்க நேரமில்லை. தாய் சொல்லைத் தன் செயலாக்குகிறாள். பாவம்! இவள் தன் பாதுகாப்பிற்குத் தன் தாயையே நம்பியிருந்தாள். இவள் தன் மகிழ்ச்சியை தன் தாயோடு சுருக்கிக் கொண்டாள்.

யோவான் - பிரித்துக் கொடுக்கப்படும் அன்பு அனைத்தும் பிரிந்து போகும் என்று உணர்ந்ததாலும், ஏரோதின் செயல் கடவுளின் 6வது மற்றும் 9வது கட்டளைக்கு எதிராக இருந்ததாலும் யோவான் ஏரோதைக் கண்டிக்கிறார். இவரின் கண்டிப்பிலும் கரிசனை இருந்தது. ஆகையால்தான், ஏரோது இவரின் வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம் உள்ளம் கலங்குகிறான். இவர் தன் மகிழ்வைத் தன் உறுதிப்பாட்டில் தேடினார்.

இவரின் உறுதிப்பாடு அன்பின் சாட்சியாக இருந்தது. அந்த சாட்சியத்திற்கு விலை அவருடைய உயிராகவே இருந்தது.

ஏரோதியாவின் மகள் சலோமியின் ஆட்டம் அடங்கிய கொஞ்ச நேரத்தில் இவரின் வாழ்வும் அடங்கிவிடுகிறது.

ஏரோது போதை மயக்கம் தெளிந்து அடுத்த நாள் தேடியிருப்பான் யோவானை. ஆனால், இனி அவரது குரலைக் கேட்கப்போவதில்லை. அவரின் மௌனமே அவனுடைய காதுகளைக் கிழிக்கும்.

மேற்காணும் நால்வரின் செயல்களின் நோக்கம் அவர்களுடைய மகிழ்ச்சியே. மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதே மகிழ்ச்சி என நினைத்தார் ஏரோது. சந்தர்ப்பம் பயன்படுத்துவதே மகிழ்ச்சி என்றார் ஏரோதியா. தாயின் சொல் நிறைவேற்றுவதே மகிழ்ச்சி என நினைத்தார் சலோமி. இறைவனின் திட்டம் நிறைவேற்றுவதே மகிழ்ச்சி என உறுதியாக இருந்தார் திருமுழுக்கு யோவான். 

மகிழ்ச்சியில் உயர்வு தாழ்வு இருக்கிறது. உயர்வான மகிழ்ச்சியின் விலையும் உயர்வே!


காணிக்கையாகும் கடவுள்

இன்றைய இறைமொழி 

வியாழன், 2 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

மலா 3:1-4. எபி 2:14-18. லூக் 2:22-40.

காணிக்கையாகும் கடவுள்

குழந்தை இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்த நாளை இன்று கொண்டாடுகின்றோம். ஆண்டவருக்கும் அவருடைய பணிக்கும் தங்களையே அர்ப்பணம் செய்துகொண்டோரின் திருநாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இன்றுடன் கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவு பெறுகிறது. நாம் இன்றைய திருப்பலியில் கைகளில் ஏந்திச் செல்லும் மெழுகுதிரி, புறவினத்தாருக்கு ஒளியாக வெளிப்படுத்தப்பட்ட இயேசுவைக் குறிப்பதோடு, நாம் அன்றாடம் இறைவனுக்கு நம்மையே அர்ப்பணம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது.

இன்றைய முதல் வாசகம் மலாக்கி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தின் இறுதி நூல் இது. 'நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் திடீரென ஆலயத்திற்குள் வருவார்' என இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. இங்கே மூன்று விடயங்கள் கவனிக்கத்தக்கவை. ஒன்று, ஆண்டவரின் ஆலய வருகை திடீரென நடைபெறும். இரண்டு, ஆண்டவர் ஆலயத்துக்குள் வருகிறார். மூன்று, ஆண்டவரைத் தேடுகிறவர்கள் மட்டுமே அவரைக் கண்டுகொள்ள இயலும்.

பாபிலோனியப் படையெடுப்பின்போது எருசலேம் நகரம் அழிவுக்குள்ளாகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் இடிக்கப்பட்டு, மக்கள் அடிமைகளாக வெளியேற்றப்பட்டபோது அவர்களோடு சேர்ந்து ஆண்டவரின் மாட்சியும் ஆலயத்தை விட்டு நீங்குகிறது. அன்று முதல் ஆண்டவரின் மாட்சி திரும்ப வர வேண்டும் என மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். இன்றைய நாளில் ஆண்டவரின் மாட்சி இதோ மீண்டும் ஆலயத்திற்குள் வருகிறது. மலாக்கி இறைவாக்கு நிறைவேறுகிறது. அவரை ஆவலோடு எதிர்நோக்கியவர்களின் அடையாளமாக சிமியோன் மற்றும் அன்னா நிற்கின்றனர். அவர்கள் அவரைக் கண்டுகொள்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று' என எழுதுகின்றார். இயேசுவின் தலைமைக்குரு பணி அவர் மனுக்குலத்தோடு கொண்ட ஒன்றிப்பிலிருந்து தொடங்குகின்றது. எல்லாக் குழந்தைகளைப் போல இயேசுவும் - கடவுளாக இருந்தாலும் - கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றார். 

நற்செய்தி வாசகம், இந்த நாளின் நிகழ்வுகளை நம் முன் கொண்டு வருகின்றது. இயேசுவுக்கும் அவருடைய பெற்றோருக்கும் இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது: ஒன்று, குழந்தைப்பேற்றுக்குப் பின்னர் தாய் தூய்மையாக்கப்படும் நாள் இந்நாள். இரண்டு, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யும் நாள் - சில இடங்களில் எட்டாம் நாள் விருத்தசேதனம் என்னும் குறிப்பும் உள்ளது. மூன்று, ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு உரிமையானது என்பதால், பலி செலுத்தி குழந்தையை மீட்டுக்கொள்ளும் நாள்.

சிமியோன் மற்றும் அன்னா ஆலயத்தில் நிற்கின்றனர். வாழ்வின் அஸ்தமனத்தில் நிற்கும் இவர்கள் மனுக்குலத்தின் விடியலைக் கைகளில் ஏந்தும் பேறு பெறுகின்றனர். குழந்தையைக் கைகளில் ஏந்துதல் ஒரு கலையும் கூட.

(அ) சிமியோன் குழந்தை இயேசுவின் கண்களில் தன் கண்களைக் கண்டார். அதன் வழியாகத் தன் வாழ்வின் நோக்கம் உணர்ந்தார். நோக்கம் நிறைவேறிய அவர் அமைதியுடன் விடைபெறத் தயாராகின்றார்.

(ஆ) சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி நின்ற போது, அந்தக் குழந்தை எப்படி மாறும் - இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் - என்பதை உணர்ந்திருந்தார். குழந்தை மாறுவதற்கான ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது.

(இ) சிமியோன் குழந்தையின் ஸ்பரிசத்தைத் தன் கைகளில் உணர்கின்றார். ஒரே நேரத்தில் குழந்தையின் வலுவின்மையையும், அது கொண்டிருக்கும் ஆற்றலையும் கண்டு வியக்கின்ற அவர் தன் எதிர்நோக்கு நிறைவேறியது கண்டு மகிழ்கின்றார்.

இந்த நாள் நம் வாழ்வுக்கு அளிக்கும் பாடங்கள் எவை?

(அ) பொறுமை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எருசலேம் ஆலயத்திற்குள் கொண்டுவரப்படுவர். அனைத்துக் குழந்தைகளையும் கண்டு சிமியோன் பரவசமாகவில்லை. காத்திருக்கின்றார். தூய ஆவியின் தூண்டுதலுக்காகக் காத்திருக்கின்றார். உள்ளத்தில் பொறுமை கொண்டிருப்பவர்களே காத்திருக்க இயலும். நாம் இன்று பொறுமை இழந்து நிற்கின்றோம். காத்திருத்தல் தேவையற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. விளைவு, தூய ஆவியின் தூண்டுதலை நம்மால் அறிய இயலாமற் போகிறது.

(ஆ) புகழ்ச்சி. சிமியோன் கடவுளைப் புகழ்கின்றார். அக்குழந்தை பற்றி பெற்றோர்களிடம் பேசுகின்றார். கடவுளால் நிரம்பியிருக்கும் ஒருவர் எப்போதும் கடவுளைப் புகழ்வதோடு, மற்றவர்களைப் பற்றியும் நேர்முகமாகப் பேசுவார். இன்று நாம் இறைவனை எப்போதெல்லாம் புகழ்கின்றோம்? மற்றவர்களைப் பற்றிய நம் உரையாடல் நேர்முகமாக இருக்கிறதா? அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

(இ) எளிமை. இயேசுவின் பெற்றோர் குழந்தைக்கு ஈடாக இரு புறாக்குஞ்சுகளைக் காணிக்கையாகக் கொடுக்கின்றனர். காளையோ, ஆடோ வாங்க அவர்களால் இயலவில்லை. அவர்களுடைய ஏழ்மையே அவர்களுடைய நொறுங்குநிலையாக மாறுகின்றது. கடவுள் மனுக்குலத்தோடு குறிப்பாக வலுவற்றவர்களோடு கொண்டுள்ள நெருக்கத்தை இது காட்டுகிறது. 'ஏழைகளுக்கு உதவி செய்ய மறக்க வேண்டாம்' என்பது தொடக்கத் திருஅவையின் அழைப்பாகவும் இருக்கிறது (காண். கலா 2:10).

(ஈ) கடவுள்மைய வாழ்க்கை. கடவுளுக்கு அர்ப்பணமாகும் குழந்தை கடவுளை மையமாகக் கொண்டு வாழத் தொடங்குகின்றது. நம் வாழ்வின் மையம் எது? இடமா? நபரா? அல்லது இறைவனா?

(உ) நோக்கம். குழந்தையின் வாழ்வின் நோக்கத்தை சிமியோன் அவருடைய பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கின்றார். வானதூதர் தனக்கு அறிவித்த நாள் முதல் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் சட்டென ஓடவிட்டுப் பார்க்கின்றார் மரியா. நம் வாழ்வின் நோக்கத்தை இறைவன் நமக்குச் சரியான நேரத்தில் வெளிப்படுத்துகின்றார். வாழ்வின் இலக்கு என்பது நாம் நிர்ணயிப்பது. வாழ்வின் நோக்கம் என்பது கடவுள் நிர்ணயிப்பது. இலக்கும் நோக்கமும் இணைதல் நலம்.

(ஊ) அன்றாட அர்ப்பணம். நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அர்ப்பணத்திற்கு நம்மை அழைக்கிறது. அர்ப்பணம் செய்கின்ற உள்ளம் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது, எதையும் பற்றிக் கொள்ளாது. ஒருவகையான சுதந்திரம் அல்லது கட்டின்மை அந்த உள்ளத்தில் குடிகொள்ளும். 

திருநாள் வாழ்த்துகள்.


Wednesday, February 1, 2023

நெருக்கமும் நம்பிக்கையும்

இன்றைய இறைமொழி 

புதன், 1 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 4ம் வாரம்

எபி 12:4-7, 11-15. மாற் 6:1-6.

நெருக்கமும் நம்பிக்கையும்

இயேசுவும் தம் சீடர்களுடன் சொந்த ஊருக்கு வருகின்றார். ஓய்வு நாள் ஒன்றில் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றார். அவருடைய போதனை வித்தியாசமான உணர்வலைகளை ஏற்படுத்துகிறது. சிலர் அவருடைய போதிக்கும் திறன் கண்டு வியப்படைகின்றனர். தச்சராக இருந்த அவர் போதகராக மாறியிருப்பது கண்டு மகிழ்கின்றனர். இளவலாக தங்கள் தெருக்களில் ஓடி விளையாடிய இயேசு அவர்கள் கண்கள் முன் வந்து போகின்றார். இப்படி மாறிவிட்டாரே என்று நினைத்துக்கொண்டிருந்த சிலர் இயேசுவின் எளிய பின்புலம் கண்டு அவரைக் குறித்து இடறல்படுகின்றனர். 'மரியாவின் மகன்தானே!' என்று கேலி பேசுகின்றனர். யூத மரபில் தந்தையரின் பெயர்களைக் கொண்டே பிள்ளைகள் அடையாளப்படுத்தப்படுவர். இயேசுவின் கன்னிமைப் பிறப்பைக் கேலி செய்வதாக இருக்கின்றது அவர்களுடைய சொல்லாடல். 

இறைவாக்கினர்கள் தங்கள் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்னும் தன் சமகாலத்துப் பழமொழி ஒன்றை அவர்களுக்கு நினைவூட்டுகின்றார் இயேசு. இறைவாக்கினர் பணி என்பது முன்நின்று உரைக்கும் பணி. முன்நிற்கும் ஒருவரை அவருடைய நிகழ்காலத்தில் பார்க்காமல் இறந்த காலத்தில் பார்க்கத் தூண்டுகிறது அவரோடு உள்ள நெருக்கம். விளைவு, அவரை இறைவாக்கினராக ஏற்றுக்கொள்வதற்கு மனம் தயக்கம் காட்டுகிறது. மேலும், ஒருவரின் நிகழ்காலத்தை நாம் ஏற்றுக்கொள்ள இயலாதபோது, அவருடைய கடந்த காலத்தைத் தேடிப் பார்ப்பதும் மனித இயல்பு. இயேசுவால் அங்கே எந்த வல்ல செயலும் செய்ய இயலவில்லை எனப் பதிவு செய்கின்றார் மாற்கு.

சிந்திப்போம்,

நெருக்கத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது. அந்தக் கோட்டைச் சரியாக நிர்ணயிக்கும் ஒருவர்தான் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ள முடியும். நம் அன்றாட திருப்பலிக் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், நவநாள்கள், பக்தி முயற்சிகள் போன்றவை ஒரு வகையான நெருக்கத்தை ஏற்படுத்தி நம்பிக்கையிலிருந்து நம்மை நகர்த்திவிடலாம். அல்லது நம் நம்பிக்கையை எந்திரமயமாக்கிவிடலாம். நம்பிக்கை எப்போதும் தனிநபர் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.

தன் வாழ்வில் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஒருவரை, அல்லது வெற்றியாளர் ஒருவரை, அல்லது நல்ல நிலையில் இருக்கும் என் நண்பரை நான் பார்க்கும்போது என் மனம் எப்படி இருக்கிறது? அவரைக் குறித்து நான் வியப்படைகின்றேனா? அல்லது அவருடைய எளிய தொடக்கம் நினைத்து இடறல்படுகின்றேனா? அவருக்கும் எனக்கும் உள்ள நெருக்கமே என்னை அவரிடமிருந்து தூரமாக்கிவிடுகிறதா?

வல்ல செயல்களை நம்புகிறவர்களுக்கே வல்ல செயல்கள் நடக்கின்றன. இயேசுவின் ஊரார் ஒரு போதகரில் தச்சரையும், இறைமகனில் மரியாவின் மகனையும் கண்டனர். அவர்களால் அவ்வளவுதான் காண முடிந்தது. வல்ல செயல்களுக்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கைப் பார்வை. நம்பிக்கைப் பார்வையே நம்மை சாதாரணவற்றிலிருந்து உயர்த்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், எபிரேய விவிலியத்திலிருந்து பல கதைமாந்தர்களை நம்பிக்கையின் முன்மாதிரிகளாகச் சுட்டிக்காட்டுகின்ற ஆசிரியர், துன்பங்களுக்கு நடுவிலும் நம்பிக்கையில் நிலைத்திருக்குமாறு கற்பிக்கின்றார். நம்பிக்கைக்கு அவசியம் விடாமுயற்சி. நெருக்கம் விடாமுயற்சியின் எதிரியாக இருக்கிறது.