Thursday, September 30, 2021

உனக்குக் கேடு!

இன்றைய (1 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 10:13-16)

உனக்குக் கேடு!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, திருந்த மறுத்த நகரங்களைச் சாடுகின்றார். அதாவது, கடவுளின் இரக்கத்தைப் பதிவு செய்யும் இளைய மகன் எடுத்துக்காட்டை எழுதுகின்ற லூக்காதான், நாம் மனம் மாறாவிட்டால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் என்றும் எச்சரிக்கின்றார். கண்டிக்கும் முகம் ஆணுடைய முகம். 


கடவுளின் கண்டிக்கின்ற, ஆண் முகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. 

இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில், தான் பணியாற்றித் திருந்த மறுத்த நகரங்களைச் சபிக்கின்றார். இயேசுவின் சாபம் அல்லது நிந்தனை மனமாற்றத்திற்கான அழைப்பாக அமைகின்றது. இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

செயல்களால் பதிலிறுப்பு

இறைவனின் செய்தியைக் கேட்கின்றவர்கள் அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும். அல்லது அது வெற்றுக் குரலாக மாறிவிடும். இயேசுவின் சமகாலத்தவர் இயேசுவின் போதனையைக் கேட்டதோடு, அவருடைய வல்ல செயல்களையும் கண்டனர். ஆனால், அவர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை நம்பவில்லை. ஆகையால், அவர்கள் சாபத்திற்கு உள்ளாகின்றனர். (ஆனால், இன்றைய பெண்முக இறையியல் இயேசு விடுகின்ற சாபத்தையும் சமரசம் செய்கிறது. இது ஓர் இலக்கியக் கூறு என்றும், இது பிற்காலத்தில் எழுதப்பட்ட பகுதி என்றும் சொல்கிறது). 

செயல்களால் பதிலிறுப்பு செய்வது மிகவும் அவசியம்.

இன்றைய முதல் வாசகத்தில், பாரூக்கு நூலின் ஆசிரியர், தாங்கள் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து மனம் வருந்துகின்றார். தாங்கள் அடைந்த துன்பங்களுக்குக் காரணம் தங்களுடைய தீமையே என்கிறார் பாரூக்கு. கடவுள் அறிவித்த கேடுகளும் சாபங்களும் தங்களுக்கு வரக் காரணம் தங்களுடைய செயல்களே என ஏற்றுக்கொள்கின்றார் பாரூக்கு. இதன் வழியாக, மனமாற்றத்திற்கும், தீPங்கற்ற நல்வாழ்வுக்கும் மக்களை அழைக்கின்றார். ஆனால், 'கடவுளின் இரக்கம் நம்மை மீட்டது' என்று அவர் சொல்லத் தொடங்கினால், மக்கள் தங்கள் தீமையிலேயே தொடர்ந்து இருப்பார்கள்.

இன்று, மௌனப் புன்னகையாள், சின்னராணி என அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தன் இறைவேண்டலால் மறைபோதகப் பணிகளுக்குத் துணைநின்றதால் மறைபரப்பின் பாதுகாவலர் என்றும், திருஅவையின் ஆசிரியர் என்றும் அழைக்கப்படுகின்றார் இப்புனிதை. இவர் மொழிந்த 'சின்ன வழி' மிகப் பெரிய தாக்கத்தை ஆன்மிகத்தில் ஏற்படுத்தியது. ஆக, ஆன்மிகம் என்னும் மலையில் ஏறி சின்னச் சின்ன எட்டுகளே போதும். 'சின்ன வழி என்றால் பற்றுறுதி மற்றும் சரணாகதியின் வழி' என்கிறார் சின்னராணி. மிகப் பெரிய அடிகள் எடுத்து வைக்கும் வளர்ந்த ஆண் மற்றும் பெண்ணாக வலம் வரும் நாம், கொஞ்சம் சிறிய அடிகள் எடுத்து வைக்கப் பழகுதலும் நலம்.


Wednesday, September 29, 2021

ஆண்டவரின் மகிழ்வு

இன்றைய (30 செப்டம்பர் 2021) முதல் வாசகம் (நெகே 8:1-12)

ஆண்டவரின் மகிழ்வு

இன்றைய முதல் வாசகத்தில் எஸ்ரா மற்றும் நெகேமியா தலைமையில் நடைபெறுகின்ற திருநூல் வாசிப்பு நிகழ்வு நம் கண்முன் கொண்டுவரப்படுகின்றது. பாபிலோனியாவில் அடிமைப்படுத்துக்கிடந்த மக்கள் மீண்டும் தங்கள் நகருக்குத் திரும்புகின்றனர். ஆலயம், மண், ஓய்வுநாள், தோரா என அனைத்தையும் இழந்து நின்றவர்கள் ஒவ்வொன்றாகத் திரும்பப் பெறுகின்றனர். தோராவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். ஆக, அவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் தங்களுடைய மூதாதையருடன் கடவுள் செய்த உடன்படிக்கையை நினைத்தும், அந்த உடன்படிக்கையை தாங்கள் மீறியதை நினைத்தும் அழுது புலம்புகின்றனர். ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் அழுகையும் அங்கே பெருக்கெடுத்து ஓடுகின்றது.

'நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்!' என்றும், 'வருந்த வேண்டாம்!' என்றும் சொல்லும் எஸ்ரா, தொடர்ந்து, 'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்கிறார்

'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்ற வாக்கியம் பல நிலைகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. 'ஆண்டவர் மக்கள் மேல் கொள்ளும் மகிழ்வு,' 'மக்கள் ஆண்டவர்மேல் கொள்ளும் மகிழ்வு,' 'ஆண்டவரில் மக்கள் மகிழ்தல்,' 'ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சி' என்று பல நிலைகளில் புரிந்துகொள்ளப்பட்டாலும், மகிழ்ச்சி என்பது நமக்கு வலிமை தருகின்றது என்பது இங்கே முன்மொழியப்படுகின்றது.

நம் அழுகையும், கண்ணீரும், வருத்தமும் நம் ஆற்றலை நம்மிடமிருந்து உறிஞ்சுகின்றன. ஆனால், மகிழ்ச்சி நம் ஆற்றலைப் பெருக்குகிறது. ஏற்கெனவே தங்கள் வலிமையை இழந்து நிற்கும் மக்கள் புத்துணர்ச்சி பெறுமாறு தூண்டுகின்றார் எஸ்ரா.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தனக்கு முன்பாக எழுபத்திரண்டு பேரை இருவர் இருவராக அனுப்புகின்றார். செல்கின்ற அவர்கள் அனைவருக்கும் 'அமைதியை' வாழ்த்தாகக் கூறுகின்றனர். அமைதியை விரும்புபவரிடம்தான் அமைதி தங்கும் என்பது இயேசு தருகின்ற புதிய செய்தியாக இருக்கின்றது.

ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்ளும் உள்ளம் வலிமை பெறுகின்றது

அமைதியை விரும்பும் உள்ளம் அமைதியைப் பெற்றுக்கொள்கின்றது.

இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்வது என்ன?

(அ) இறைவார்த்தை வாசிக்கப்படுவதை நாம் கேட்கும்போது, அல்லது இறைவார்த்தையை நாம் வாசிக்கும்போது, நாம் கொடுக்கும் பதிலிறுப்பு எப்படி இருக்கிறது? குறிப்பாக, நற்செய்தி நூல்கள் வாசிக்கப்படும்போது நாம் வெறும் வார்த்தைகளைக் கேட்டு நிறுத்திக்கொள்கிறோமா? அல்லது அந்த வார்த்தையின் பின்னால் மறைந்திருக்கும் கிறிஸ்து நிகழ்வில் பங்கேற்கிறோமா?

(ஆ) வார்த்தையை வாசிக்கக் கேட்டவர்கள் விருந்துக்குச் செல்லுமாறு பணிக்குமாறு எஸ்ரா. இல்லாதவர்களுடன் பகிர்ந்து உண்ணுதலைக் கற்பிக்கின்றார். ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்ளும் ஒருவர் யாவரும் மகிழ்ந்திருக்கவே விரும்புகிறார்.

(இ) திருச்சட்டம் அமைதியைத் தருகின்றது. திருத்தூதர்கள் அமைதியை அறிவிக்கின்றனர். அமைதியை விரும்புபவரிடமே அமைதி தங்குகிறது எனில், நம் விருப்பம் என்ன?


Tuesday, September 28, 2021

அதிதூதர்கள்

இன்றைய (29 செப்டம்பர் 2021) திருநாள்

அதிதூதர்கள்

இன்று அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உலகத்தில், இரு தளங்களிலும் செயல்படக் கூடியவர்கள் இவர்கள். எந்நேரமும் கடவுளின் முகத்தைத் தியானித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்களே. மனிதர்களை, 'சகோதரர்கள்' என்று அழைப்பவர்களும், நம்மைத் தீங்கனைத்திலிருந்தும் காப்பவர்களும், நம்மைக் கரம் பிடித்து வழிநடத்துபவர்களும் இவர்களே. மீட்பின் வரலாற்றில் மிக முக்கியமான இடம் இத்தூதர்களுக்கு உண்டு.

மிக்கேல் அதிதூதரை நாம் தானியேல் நூலிலும் திருவெளிப்பாடு நூலிலும் காண்கின்றோம். 'கடவுளுக்கு நிகரானவர் யார்?' என்பது இவருடைய பெயரின் பொருள். தீமைக்கு எதிராகப் போரிடுபவர் இவரே (காண். திவெ 12:7-12). அன்று நம் தாய் ஏவாளுக்குக் காட்டியது போல நமக்கும் ஆசை காட்டி நம்மைத் தனக்குரியவராக்கிக்கொள்ள விழைகிறான் சாத்தான். சாத்தானின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவரும், தீமைக்கு எதிரான நம் போராட்டத்தில் நமக்குத் துணை நிற்பவரும் இவரே.

மரியா, சக்கரியா, மற்றும் யோசேப்புக்கு நற்செய்தி கொண்டு வந்தவர் கபிரியேல். 'கடவுளின் வல்லமை' அல்லது 'கடவுள் வல்லவர்' என்பது இவருடைய பெயரின் பொருள். நம்மைச் சுற்றி இன்று எண்ணற்ற கெட்ட செய்திகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவற்றின் நடுவில், கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என்ற நற்செய்தி நமக்கு அன்றாடம் வழங்கிக் கொண்டிருப்பவர் கபிரியேல்.

'கடவுளே நலம்' அல்லது 'கடவுள் நலம் நல்குபவர்' என்னும் பெயரைத் தாங்கிய இரபேல் அதிதூதரை நாம் தோபித்து நூலில் காண்கின்றோம். அங்கே, தன் பெயர் 'அசரியா' ('கடவுள் உதவுகிறார்') என்று குறிப்பிடுகின்றார் இவர். தோபித்தின் கடன் பணத்தைத் திரும்பப் பெற்றவரும், தோபியாவுக்குத் திருமணம் நிறைவேற உதவியவரும், சாராவின் பேயைப் போக்கியவரும், தோபித்துக்குக் கண் பார்வை அளித்தவரும் இவரே. தோபித்தின் இறைவேண்டல் வானதூதரையே உதவிக்கு வரவழைக்கிறது.

இன்றைய திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) அதிதூதர்கள் நம் நடுவில் இருக்கிறார்கள். இன்றும் செயலாற்றுகிறார்கள். தீமையைப் போக்கவும், நற்செய்தி வழங்கவும், நம் கரம் பிடித்து நம்மை வழிநடத்தவும் நம்மோடு இருக்கின்றனர். நாம் அவர்களின் இருப்பை உணர்ந்துகொள்தல் அவசியம். மிக்கேல் அதிதூதரை நாம் அதிகமாக நினைக்கின்றோம். பெரும்பாலான நம் இல்லங்களைப் பாதுகாப்பவராக அவரின் திருவுருவம் இருக்கின்றது. ஆனால், கெட்ட செய்தி நம்மை வந்தடையும்போது கொஞ்சம் கபிரியேலையும், மருத்துவருக்கு ஃபோன் செய்யுமுன் கொஞ்சம் இரபேலையும் நினைத்தல் நலம்.

(ஆ) நாமும் அதிதூதர்களே. தீமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது நாம் மிக்கேலாகவும், நற்செய்தியைத் தாங்கிச் செல்லும்போது கபிரியேலாகவும், நலமற்றவர்களுக்குத் துணை நிற்கும்போது இரபேலாகவும் நாமும் இருக்க முடியும், இருக்கின்றோம், இருத்தல் நலம்.

(இ) இறைவனின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளங்கள் இவர்கள். இறைவனின் திருமுன்னிலையில் தீமைக்கும், தீயவற்றுக்கும், நோய்க்கும் இடமில்லை. இறைவனை அல்லும் பகலும் தியானிக்கும் இவர்கள், நம்மையும் அதே தியான நிலைக்கு அழைக்கின்றனர். நம்மிடமிருந்து மறைந்த நம் முன்னோர்களை இவர்கள் நன்கறிவர். ஏனெனில், அவர்களோடு இணைந்து இவர்கள் இறைவனின் திருமுகத்தைக் காண்கின்றனர். ஆக, நம் தாத்தா, பாட்டி, பெற்றோர், உடன்பிறந்தோர் என நமக்கு முன் சென்ற அனைவரையும் இவர்கள் நமக்கு இன்று நினைவூட்டுகின்றனர்.

Monday, September 27, 2021

வானத்திலிருந்து தீ

இன்றைய (28 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 9:51-56)

வானத்திலிருந்து தீ

இயேசுவுடைய சீடர்கள் ரொம்ப கோபக்காரங்களா இருக்காங்க! அவர்களைச் சமாளிப்பதே இயேசுவுக்கு மிகப் பெரிய வேலையாக இருந்திருக்கும்!

தங்களைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுவதைக் கண்டு நிறுத்தப் பார்க்கின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகர்மேல் தீ விழுமாறு செய்யவா? எனக் கேட்கின்றனர். இருமுறையும் இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.

'விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே இயேசு எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. லூக்காவின் நற்செய்தி பயணத்தின் நற்செய்தி என அழைக்கப்படக் காரணம் இந்த வாக்கியமே. ஏனெனில், லூக்காவின் இயேசு பயணம் செய்துகொண்டே இருக்கின்றார். அவருடைய போதனைகள் மற்றும் வல்ல செயல்கள் அனைத்தும் அவருடைய பயணத்தின் நிகழ்வுகளாக அமைகின்றன.

சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். ஏனெனில், இயேசு தங்களைக் கடந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஒருவேளை, அவர் தங்களுடன் தங்கவில்லை என்று அவர்மேல் கோபித்திருக்கலாம். வழக்கமாக, கலிலேயாவிலிருந்து (வடக்கிலிருந்து) யூதேயாவுக்கு (தெற்கு நோக்கி) பயணம் செய்யும் யூதர்கள், சமாரியா நிலப்பகுதியைத் தவிர்த்து, யோர்தானை ஒட்டிய பகுதியில் நடந்துசெல்வார்கள். ஏனெனில், சமாரிய நிலப்பகுதி தீட்டானது என்பது அவர்களுடைய நம்பிக்கை. இயேசு அந்த நம்பிக்கையை உடைக்கின்றார். சமாரியப் பகுதி வழியாகப் பயணம் செய்ய விரும்புகின்றார்.

சமாரியர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதைக் கண்டு, தங்கள் போதகரிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக, 'சமாரியக் கிராமத்தின்மேல் வானத்திலிருந்து தீ விழுமாறு செய்யவா?' எனக் கேட்கின்றனர்.

இயேசு தன் ஆற்றலை ஒருபோதும் தனக்காகவோ, அல்லது யாரையும் பழிதீர்க்கவோ பயன்படுத்தவில்லை. சாத்தான் அவரைப் பாலைவனத்தில் சோதித்தபோது, முதல் சோதனை அதுதான். கற்களை அப்பமாக மாற்றி பசியாற்றிக்கொள்ளுமாறு சாத்தான் தூண்டியபோது இயேசு மறுக்கின்றார்.

இங்கே, சீடர்கள் மற்றவர்கள்மேல் பழிதீர்த்துக்கொள்ள தங்கள் ஆற்றலைப் பயன்படுத்த நினைப்பதை இயேசு விரும்பவில்லை.

அதற்கும் முன்னதாக, தீமைக்குப் பதில் தீமை செய்வதோ, அல்லது உணர்வுப் பெருக்கில் ஒருவர் வினையாற்றும்போது அதே உணர்வுப் பெருக்கில் எதிர்வினை ஆற்றுவதோ தவறு என்பது இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.

இயேசு எதிர்வினை ஆற்றுவதற்குப் பதிலாக, அடுத்த முயற்சி என்ன என்பதைப் பார்க்கின்றார். வேறு ஊர் வழியாகப் பயணம் செய்கின்றார். எதிர்வினை ஆற்றி தன் ஆற்றலை விரயம் செய்ய அவர் விரும்பவில்லை.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) தூய்மை-தீட்டு என்ற நிலையிலோ, அல்லது அடிமைப்படுத்தும் நிலையிலோ சமூகம் அல்லது நாம் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறுவது. ஏனெனில், தூய்மை-தீட்டு, மேட்டிமை-தாழ்மை என்பது நம் உள்ளத்து உணர்வுகளே தவிர வெளியில் அப்படி எதுவும் இல்லை.

(ஆ) நம் வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை உணர்வது. இந்தப் பயணத்தில் தடைகள் வரலாம். நம்முடன் பயணம் செய்பவர்கள் நமக்கு இடர்கள் தரலாம். ஆனால், பயணம் தடைபடக் கூடாது. ஒரு பாதை அடைக்கப்பட்டால் மறு பாதையைக் கண்டுபிடித்து நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். விண்ணேற்றம் ஒன்றே – அதாவது, மேன்மை அல்லது வெற்றி ஒன்றே – நம் இலக்காக இருக்க வேண்டும்.

(இ) எதிர்வினை ஆற்றுதல் பெரிய ஆற்றல் விரயம் என்பதை உணர்வது. சமாரியர்கள் இயேசுவின்மேல் எதிர்வினை ஆற்ற, சீடர்கள் சமாரியர்கள்மேல் எதிர்வினை ஆற்றுகின்றனர். ஆனால், இயேசு இரு நிலைகளிலும் தன் ஆற்றலைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். நாம் பல நேரங்களில் நம்மை அறியாமல் எதிர்வினை ஆற்றிக்கொண்டே, அல்லது தேவைற்றவற்றுக்குப் பதிலிறுப்பு செய்துகொண்டே நம் ஆற்றலை வீணாக்குகின்றோம். ஆற்றலைத் தற்காத்தல் மிகப் பெரிய அவசியம். ஏனெனில், ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஓர் ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மட்டுமே மாற்ற முடியும்.

Sunday, September 26, 2021

அன்புவெறி

இன்றைய (27 செப்டம்பர் 2021) முதல் வாசகம் (செக் 8:1-8)

அன்புவெறி

'சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்றுகொண்டிருக்கிறேன். அதன்மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கிறேன்.'

உங்களுக்கு யார்மேலாவது அன்பு இருக்கிறதா? எனக் கேட்டால், நீங்கள் வேகமாக யார் பெயரையாவது சொல்வீர்கள்.

உங்களுக்கு யார்மேலாவது அன்புவெறி இருக்கிறதா? எனக் கேட்டால், நீங்கள் என்ன பதிலிறுப்பீர்கள்?

'தன் காதலி இன்னொருவருடன் பேசியதால் காதலியைக் கொலை செய்த காதலன்' அல்லது, 'தன் மனைவியின் தவறான தொடர்பால் தன் நண்பனைக் கொல்லத் துணிந்த கணவன்' என்றெல்லாம் நாம் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது நம் உள்ளத்தில் எழும் உணர்வு என்ன? 'உணர்ச்சிவேகத்தில்' அவர்கள் செயல்பட்டார்கள் என்று நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். 'பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு' என்று சிலர் சொல்வர்.

ஆனால், 'அன்புவெறி' என்ற புதிய சொல்லை இன்றைய முதல் வாசகம் நமக்கு அறிமுகம் செய்கிறது. ஆண்டவராகிய கடவுள் சீயோன்மீது, அதாவது எருசலேம் மீது, அன்புவெறி கொண்டு கனன்றுகொண்டிருப்பதாக – எரிந்துகொண்டிருப்பதாக – எழுதுகின்றார். மேலும், 'அன்புவெறியால் சினமுற்றிருக்கிறேன்' என்கிறார்.

அன்புவெறி இருந்தால் ஏன் சினம் வருகிறது? என்ற கேள்வியை நாம் கேட்கலாம்.

இந்தச் சினம் இருநிலைகளில் வருகின்றது: ஒன்று, தன் அன்புக்குரியவர்மேல் அதீத அன்பால் அவருக்கு தீங்கிழைக்க நினைக்கின்ற அனைவர்மேலும் சினம் வருகின்றது. இரண்டு, தன் அன்புக்குரியவர் தன்மீது அன்பு காட்டாமல் அன்பை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுப்பதால் அவர்மேலேயே சினம் உண்டாகிறது. இந்த இரண்டு நிலைகளிலும் நோக்கம் ஒன்றுதான்: தன் அன்புக்குரியவரைப் பாதுகாத்துக்கொள்வது.

பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது எருசலேம் நகரம் கேட்பாரற்றுக் கிடந்தது. யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த கண்டுகொள்ளாத்தன்மைக்கு மாற்றாக அன்பு இப்போது பற்றியெரிகிறது. ஆண்டவராகிய கடவுள் தன் அன்பின் மிகுதியால் எருசலேமை மீண்டும் அதன் முந்தைய நன்னிலைக்குக் கொண்டுவருகின்றார். 

'எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள் ... சிறுவரும் சிறுமியரும் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்' என்று நகரில் நிலவுகின்ற அமைதியையும் மகிழ்ச்சியையும் ஆண்டவராகிய கடவுள் எடுத்துரைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் தங்களுக்குள் பெரியவர் யார் என்று விவாதம் செய்கின்றனர். அன்பு என்ற ஆழமான உறவில் வருகின்ற முதன்மையான பிரச்சினையே, 'யார் பெரியவர்?' என்ற கேள்விதான். அன்பு இந்தக் கேள்விக்கு இடம் தரக் கூடாது.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) கடவுள் நம்மேல் அன்புவெறி கொண்டிருக்கின்றார். ஆக, நம்மை எல்லாத் தீங்கிலிருந்தும் அவர் காப்பாற்றுவார். சில வேளைகளில் நாம் தவறும்போது அவரின் சினம் நம்மேலும் விழுகிறது.

(ஆ) கடவுள் எப்போதும் நம் வாழ்க்கை என்னும் நகரை அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகிறார். நமக்குத் தேவையானதெல்லாம் கொஞ்சம் பொறுமையே.

(இ) 'பெரியவராக அவர் இருந்தால் போதும்' என்று நாம் இறைவனையும் அடுத்தவரையும் நினைத்தால் போதும். அன்பு அனைத்திலும் மேலோங்கி இருக்கும்.


Saturday, September 25, 2021

அறியாப் பிழை!

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

I. எண்ணிக்கை 11:25-29 II. யாக்கோபு 5:1-6 III. மாற்கு 9:38-48

அறியாப் பிழை!

'தம் தவறுகளை உணர்ந்துகொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்' (திபா 19:12). தன் ஆண்டவராகிய கடவுளின் திருச்சட்டத்திற்கு புகழாரம் சூட்டுகின்ற திருப்பாடல் ஆசிரியர் (இன்றைய பதிலுரைப்பாடல்), 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. இதயத்தை மகிழ்விக்கின்றன' என்று துள்ளிக் குதிக்கின்றார். ஆண்டவரின் திருச்சட்டம் அல்லும் பகலும் தன்னை எச்சரித்தாலும், சில நேரங்களில் தன் அறியாமையால் தவறு செய்வதாகவும், தன் அறியாப் பிழைக்காகத் தன்னை மன்னிக்குமாறும் ஆண்டவரிடம் மன்றாடுகின்றார் அவர்.

மெய்யியலில் அனைத்துத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அறியாமை என்று சொல்லப்படுகிறது. அல்லது மெய்யறிவு பெறுதலே தவறுகளைக் களைவதற்கான வழி.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று நபர்களின் அறியாப் பிழையை நமக்குச் சுட்டிக்காட்டி, அதே பிழை நம்மிடமும் இருந்தால் நாம் இறைவனால் மெய்யறிவு புகட்டுப்பட்டு, அவற்றைச் சரி செய்ய நம்மை அழைக்கின்றது.

முதல் வாசகம் (எண் 11:25-29) எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் யாவே இறைவன், அவர்களை மோவாபு பாலைநிலத்தில் வழிநடத்திச் செல்கின்றார். நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் பயணம் செய்யும் மக்களின் வாழ்வை எடுத்துச் சொல்கிறது எண்ணிக்கை நூல். பாலைவனத்துப் பயணம் அவர்களுக்கு அலுத்துப் போய்விடுகின்றது. 'நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? எகிப்தில் செலவின்றி உண்ட உணவு நினைவுக்கு வருகிறது. நம் வலிமை குன்றிப் போயிற்று. மன்னாவைத் தவிர வேறெதுவும் கண்களில் படுவதில்லையே!' (எண் 11:4-6) என்று முறையிடுகின்றனர். மக்களின் அழுகுரல் ஆண்டவருக்கு சினம் தருகின்றது. மோசேயும், 'எனக்கு ஏன் இந்தத் தீராச் சுமை? இவர்களை நானா கருத்தரித்தேன். இது எனக்கு மிகப்பெரிய பளு. இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்!' என்று ஆண்டவரிடம் அழுது முறையிடுகின்றார். இந்த நேரத்தில் மோசேயின் பணிக்கு உதவி செய்வதற்காக இஸ்ரயேலின் மூப்பரில் எழுபது பேரைத் தன்னிடம் அழைத்து வருமாறு சொல்கின்றார் ஆண்டவர். இந்த மூப்பர்களைத் தெரிவு செய்து அவர்களை ஆண்டவர் திருமுன் நிறுத்துகின்றார் மோசே. மோசேயிடம் உள்ள தன் ஆவியில் கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் பொழிகின்றார் கடவுள். எழுபதின்மேர் ஆவி இறங்கிய நேரத்தில் ஆண்டவரின் சந்திப்புக் கூடாரத்திற்குள் இல்லாமல், தங்கள் இல்லங்களில் - அதாவது, தூய்மையற்ற மக்களின் வாழ்விடத்தில் - இருந்த எல்தாது மற்றும் மேதாது என்னும் இளவல்கள்மேலும் ஆவி பொழியப்பட அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைக்கின்றனர். இதைக் காண்கின்ற யோசுவா, 'அவர்களைத் தடுத்து நிறுத்தும்!' என்று மோசேயிடம் சொல்கின்றார். அவரைக் கடிந்துகொள்கின்ற மோசே, 'என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? – அதாவது, எனக்கு அது தெரிந்தும் நான் அமைதி காப்பது குறித்து பொறாமைப்படுகிறாயா? – ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு!' என்று அறிவுறுத்துகின்றார்.

தூய்மையான இடத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆண்டவரின் ஆவி என்னும் கொடை வழங்கப்பட வேண்டும் என்றும், தூய்மையற்ற இடத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படக் கூடாது என்றும் யோசுவா நினைத்ததோடு, தனக்குக் கிடைப்பது தன் தகுதியால் வந்தது என்றும், தகுதியற்றவர்கள் அதைப் பெறக் கூடாது என்றும் பொறாமைப்படுகின்றார். யோசுவாவின் பொறாமையே அவருடைய அறியாப் பிழை.

ஆண்டவரின் கொடை அனைவருக்கும் பொதுவானது என்றும், ஆண்டவர் தான் விரும்பியவாறு செயல்படுகின்றார், அவருடைய நன்மைத்தனத்தை நாம் தடை செய்ய முடியாது என்றும் சொல்லி யோசுவாவின் அறியாப் பிழை போக்குகின்றார் மோசே.

இரண்டாம் வாசகம் (யாக் 5:1-6) யாக்கோபின் திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மெய்யான சமய வாழ்வு, குழும வாழ்வில் பாரபட்சம், செயலுடன் இணைந்த நம்பிக்கை, உள்ளத்தில் உள்ள தீய எண்ணம் ஆகியவை பற்றித் தன் குழுமத்திற்கு அறிவுறுத்திய யாக்கோபு, தொடர்ந்து. தன் திருச்சபையில் வாழ்ந்த பணக்கார நிலக்கிழார்கள் மற்றும் செல்வந்தர்களிடம் விளங்கிய தன்மையப் போக்கைக் கண்டிக்கின்றார். அதாவது, யாக்கோபின் குழுமத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள், 'தற்சார்பு' மற்றும் 'தன்நிறைவு' என்னும் பண்புகளைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். தற்சார்பு உணர்வு, 'எங்களுக்கு யாரும் - கடவுள்கூட – தேவையில்லை' என்ற எண்ணத்தை விதைத்துவிட்டால் அது ஆபத்தாகிவிடுகிறது. ஏனெனில், இவர்கள், மறுவுலகமும் மறுவுலகம் தருகின்ற மகிழ்ச்சியும் தேவையில்லை என நினைத்தனர். இவர்களின் பணம், பகட்டான ஆடை, பொன், வெள்ளி அனைத்தும் அழுகிப்போனவை என்றும், பயனற்றவை என்றும், கடவுளின் முன் செல்லாதவை என்றும் கடிந்துகொள்கிறார் யாக்கோபு. மேலும் இவர்கள், தங்கள் தற்சார்பு நிலையில் தொடர்ந்து நிலைத்திருக்கும் பொருட்டு எளியவர்களையும் பணியாளர்களையும் சுரண்டத் தொடங்கினர்.

யாக்கோபின் குழுமத்தில் உள்ள செல்வந்தர்களின் அறியாப்பிழை பேராசை. தங்களின் இன்பமான வாழ்க்கை நிலைக்கு எந்தவொரு இடர்ப்பாடும் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் பேராசை கொண்டு அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்கென வைத்துக்கொள்கின்றனர். செல்வத்தின் நிலையாமை பற்றி எடுத்துச் சொல்லியும், கடவுளின் கொடை அனைவருக்கும் பொதுவானது என்று கூறியும் அவர்களை எச்சரிக்கின்ற யாக்கோபு அவர்களின் அறியாப் பிழை போக்க முயல்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற் 9:38-48) மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது: (அ) 'நம்மைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுகிறார்' என்று இயேசுவிடம் புகாரளிக்கின்றார் யோவான். (ஆ) சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம். (இ) பாவத்தில் விழுவது பற்றிய எச்சரிக்கை.

முதல் வாசகத்தில் யோசுவா மோசேயிடம் புகார் அளித்தது போல, யோவானும் இயேசுவிடம் ஒரு முறையீடு செய்கின்றார். இயேசுவின் பெயரால் ஒருவர் பேயை ஓட்டுகின்றார். ஆனால், அந்த நபர் பன்னிருவர் குழாமைச் சேராதவர்.  திருத்தூதர்கள் இயேசு வழங்கிய கொடை தங்களுக்குரியது என்று நினைத்தனர். ஆக, தங்களைச் சாராத ஒருவர் அதே கொடையைக் கொண்டிருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள இயலவில்லை. 'அவரைத் தடுக்க வேண்டாம்' என்றும், தன் பெயரால் செய்பவர் தனக்கு எதிராகத் திரும்ப மாட்டார் என்றும் சொல்கின்றார் இயேசு. அதாவது, இயேசுவின் பெயர் என்பது தன்னிலேயே ஆற்றல் கொண்டது.

பன்னிருவரின், குறிப்பாக யோவானின், சகிப்புத்தன்மை என்னும் அறியாப் பிழையைக் கடிந்து கொள்கின்ற இயேசு, இரண்டு அறிவுரைகள் வழங்குகின்றார்: ஒன்று, 'யாருக்கும், குறிப்பாக, சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம்.' 'சின்னஞ்சிறியவர்கள்' என்பவர்கள் 'பன்னிருவர்' குழாமைச் சேராதவர்கள். மாறாக, தன்னைச் சார்ந்தவர் என்ற நிலையில் அனைவரையும் ஏற்றுக்கொள்தலும் உபசரித்தலும் பெரிய கைம்மாற்றைப் பெற்றுத்த தரும் என்றும் சொல்கின்றார். இரண்டு, பாவத்தில் விழுவது பற்றி எச்சரிக்கின்றார். இங்கே பாவம் என்பது யோவான் மற்றும் திருத்தூதர்களின் பொறாமை அல்லது குறுகிய மனப்பான்மையைக் குறிப்பதாக இருக்கிறது. பாவத்திற்கு இட்டுச் செல்லும் கை, கால், மற்றும் கண் - இடறலாக இருந்தால் - அவற்றை வெட்டி அல்லது பிடுங்கி எறிய வேண்டும் என்கிறார் இயேசு. இங்கே பயன்படுத்தப்படும் இலக்கிய நடை 'மிகைப்படுத்துதல்' (ஆங்கிலத்தில், 'ஹைப்பர்போல்') என்பதாகும். கை, கால், கண் என்னும் மூன்றும் பாலியல் சார்ந்த பாவங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பது ரபிக்களின் போதனை. தன் சமகாலத்தில் நிலவிய போதனையை இயேசு அப்படியே தன் போதனையில் சேர்த்திருக்கலாம். மூன்று உறுப்புகள் மட்டும் சொல்லப்பட்டிருப்பது எதற்காக என்றால், இந்த மூன்று என்ற எண்ணின் வழியாக எல்லா உறுப்புகளும் சொல்லப்படுகின்றன என்பதும் கருத்து. உடலை வெட்டுவது என்னும் கொடூரத்தை 2 மக்கபேயர் 7ல் வாசிக்கின்றோம். அங்கே தீய அரசன் நல்லவர்களுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கிறான். இங்கே தீமை நிகழாமல் இருக்க உறுப்பு சேதம் அவசியமாகிறது. உறுப்பு சேதம் இயேசுவின் சமகால கும்ரான் போதனையிலும் அதிகமாக இருந்தது. மேலும் கிரேக்க இலக்கியத்தில் நாம் காணும் இடிபஸ் தன் தாய் வழியாக தான் பெற்றெடுத்த குழந்தைகளைக் காண இயலாமல் தன் கண்களைத் தானே பிடுங்கிக் கொள்கிறார். உறுப்பு சேதம் பாவத்தின் கொடுமையான தன்மையைக் குறிப்பதாகவும் இருந்தது. தின்னும் புழு, அவிக்கும் நெருப்பு. புழுக்களும், நெருப்பும்தான் நரகத்தில் மனிதர்களை வதைப்பவை என்று நம்பினர் யூத முன்னோர். இங்கே நரகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி இயேசு பேசவில்லை. மாறாக, பாவத்தில் விழும் சீடர்களுக்கு என்ன நிகழும் என்பதையே இயேசு சொல்கின்றார்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் அறியாப் பிழை களையப்படுவதுடன், அறியாப்பிழைக்குக் காரணமாக இருக்கின்ற எதுவும் வேருடன் அழிக்கப்பட வேண்டும். குறிப்பாக, சகிப்புத்தன்மையின்மை என்னும் அறியாப்பிழையை நீக்க, திருத்தூதர்கள் பரந்த பார்வை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

இவ்வாறாக, யோசுவாவின் பொறாமை என்னும் அறியாப் பிழையும், யாக்கோபு குழுமத்தின் செல்வந்தர்களின் பேராசை என்னும் அறியாப் பிழையும், பன்னிருவரின் (யோவானின்) சகிப்புத்தன்மை என்னும் அறியாப் பிழையும் நம் கண் முன் நிறுத்தப்படுகின்றன.

இவர்களின் தங்களின் அறியாப் பிழையை எப்படிக் களைகின்றனர்?

கடவுளின் நன்மைத்தனத்தைக் கண்டுகொண்டால் பொறாமை விலகிவிடும் என்று யோசுவாவுக்குக் கற்பிக்கின்றார் மோசே.

அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது, நாம் இறைவனையும் ஒருவர் மற்றவரையும் சார்ந்தவர்கள் என்று கற்றுக்கொண்டால் பேராசை விலகிவிடும் என்று தன் குழுமத்துக்குக் கற்பிக்கின்றார் யாக்கோபு.

சின்னஞ்சிறியவர்களைப் பொறுத்துக்கொள்தலும், தீமையை அகற்றுவது தன்னகத்தே தொடங்க வேண்டும் என்று தன் திருத்தூதர்களுக்கு அறிவுறுத்தி அவர்களின் சகிப்புத்தன்மையின்மையைக் களைந்து, அனைவரையும் கொண்டாடவும், சிறியவர்களையும் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும் அழைக்கின்றார்.

இப்பாடங்களை நாம் நம் வாழ்வில் எப்படிச் செயல்படுத்துவது?

(அ) பொறாமை

'பொறாமை' என்பது 'தீய பார்வை' அல்லது 'தீய கண்' என்று சொல்லப்படுகின்றது. நமக்கு முன்பின் தெரியாதவர்கள்மேல் உள்ள பொறாமையைவிட, நம் அன்புக்குரியவர்கள்மேல் நாம் கொள்ளும் பொறாமை ஆபத்தானது. தெருவில் நான் நடந்துசெல்லும்போது, நான் காண்கின்ற ஓர் அழகான வீட்டைப் பார்த்து, 'ச்சே! இப்படி எனக்கொரு வீடு இல்லையே!' என்று அந்த நபர்மேல் நான் கொள்ளும் பொறாமை என்னையும் பாதிப்பதில்லை, அவரையும் பாதிப்பதில்லை. ஏனெனில், அடுத்த தெருவுக்கு நான் சென்றவுடன் அதை மறந்துவிடுவேன். நம் அன்புக்குரியவர்கள் நற்செயல் செய்யும்போது, அழகாக இருக்கும்போது, நன்றாக வாழும்போது, அறிவுடன் செயல்படும்போது, நிறையத் திறமைகள் பெற்றிருக்கும்போது அவர்களைக் கண்டு பொறாமைப்படுகின்றோம். இது ஆபத்தானது! ஏனெனில், இந்தப் பொறாமையே கோபம் அல்லது எரிச்சலாக மாறுகிறது. யோசுவா எந்த முகம் கொண்டு தன் பாளையத்துக்குச் சென்றிருப்பார்? எல்தாது மற்றும் மேதாதை அவர் எப்படி எதிர்கொள்வார்? பொறாமை நம் அன்புக்குரியவர்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றது. மற்றவர்களின் நற்குணங்களையும், நன்னிலையையும் பாராட்டும்போது, அவர்களை நம்மவர்கள் என்று உரிமை கொண்டாடும்போது பொறாமை மறைகிறது.

(ஆ) பேராசை

ஆசை என்பதை நாம் நிறைவேற்றியவுடன் அது அடுத்த ஆசையாக வளர்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், நம் எண்ணத்திற்கு அளவு இல்லாதது போல ஆசைக்கும் அளவு இல்லை. எண்ணத்தைக் கட்டுப்படுத்தும்போது ஆசைப்படுதல் என்னும் செயல் குறைய வாய்ப்பு உண்டு. மேலும், நீதியுணர்வு கொண்டிருக்கும்போதும் பேராசை கட்டுக்குள் இருக்கும்.

(இ) சகிப்புத்தன்மையின்மை

சகியாத்தன்மை அல்லது சகிப்புத்தன்மையின்மை என்பது அடுத்தவரின் பிரசன்னத்தை இல்லாமல் செய்துவிடுகிறது. தன் சகியாத்தன்மையால்தான் காயின் ஆபேலைக் கொல்கின்றார். நாம் கொலை செய்யும் அளவிற்குச் செல்வதில்லை என்றாலும், மற்றவர்களின் பெயர் அல்லது தன்மதிப்பைக் கொலைசெய்கின்றோம் நம் சகியாத்தன்மையால். மற்றவர்களின் தோல்வியில் அல்லது இழப்பில் அவர்களுடன் துணைநிற்பது எளிது. ஆனால், வெற்றியிலும் நிறைவிலும் உடன்நிற்பது கடினம்.

இன்று நம் இறைவேண்டல் எல்லாம், 'என் அறியாப் பிழையை மன்னியும்!' என்பதாகவே இருக்கட்டும்.

அறிந்தவுடன் பிழைகள் அகன்றுவிடும்.

Friday, September 24, 2021

வியப்பின் மறுபக்கம்

இன்றைய (25 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 11:43ஆ-45)

வியப்பின் மறுபக்கம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் இறப்பை இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். 'மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்' என்று மிகவும் சுருக்கமாக இருக்கிறது இயேசுவின் முன்னறிவித்தல். தொடர்ந்து, இந்த வார்த்தைகள் சீடர்களிடம் ஏற்படுத்திய உணர்வலைகளையும் லூக்கா பதிவு செய்கின்றார்: 'அவர்கள் புரிந்துகொள்ளவில்லை,' 'அவர்கள் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.'

நற்செய்தி வாசகத்திற்கு முந்தைய பகுதியில் இயேசு பேய் பிடித்த சிறுவனின் பிணியைப் போக்குகின்றார். அதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர், 'இயேசு செய்ததைப் பார்த்து வியக்கின்றனர்.' மக்கள் கூட்டத்தினரின் வியப்பு கண்டு சீடர்களும் பெருமிதம் அடைந்திருப்பார்கள். தங்கள் போதகர் வல்லமை உடையவர் என்றும், தங்கள் போதகருடன் இருப்பது தங்களுக்குப் பெருமை என்றும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அவர்களின் எண்ண ஓட்டங்களைத் திசைதிருப்புகின்றார் இயேசு.

இந்த நிகழ்வு மூன்று விடயங்களைக் கூறுகிறது:

(அ) வியப்படைந்த மக்கள் இயேசுவைக் கொலை செய்யுமாறு கேட்கின்றனர்

இந்தப் போராட்டம் நம் வாழ்விலும் நடக்கின்றது. கடவுள் நமக்கு நற்காரியங்களைச் செய்யும்போதெல்லாம், அவருடைய உடனிருத்தலைக் கண்டு வியக்கின்ற நாம், நாம் எதிர்பார்க்கும் விதமாக வாழ்க்கை செல்லாத போது நாம் அவரை நம் வாழ்விலிருந்து வெளியேற்றவும், அவரைக் கடிந்துகொள்ளவும் நினைக்கின்றோம். 

(ஆ) இயேசுவின் சமநிலை

மக்களின் வியப்பு கண்டு இயேசு மெய்மறந்து போகவில்லை. தன் வாழ்வின் இலக்கு மற்றும் இயக்கம் பற்றிய புரிதல் அவருக்குத் தெளிவாக இருந்தது. ஆகையால்தான், இதே மக்கள் தன்னைத் தங்கள் கரங்களில் ஏற்றுக் கொலை செய்வார்கள் என்று தெரிந்தாலும், எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கின்றார். வாழ்வின் அலைகள் நம்மைத் தாக்காத வண்ணம், நம் உணர்வுகளால் நாம் இழுத்துச் செல்லப்படாத வண்ணம் நாம் சமநிலையைக் காத்துக்கொள்தல் நலம்.

(இ) சீடர்களின் தயக்கம்

இயேசுவின் வார்த்தைகளைத் தாங்கள் புரிந்துகொள்ளவும் இல்லை, விளக்கம் கேட்கவும் இல்லை என்ற மனநிலையில் உள்ளார்கள் சீடர்கள். இது அவர்களின் மனக்குழப்பத்தைக் காட்டுகின்றது. 'மக்களிடம் ஒப்புவிக்கப்படுவார்' என்னும் இயேசுவின் வார்த்தைகளில் உள்ள 'மக்களில்' தாங்களும் ஒருவரோ என்ற குழப்பமும் அவர்களுக்கு எழுந்திருக்கலாம்.

இறைவன் ஒரே நேரத்தில் வியப்பையும் பயத்தையும் நமக்குத் தருகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், 'நான் வந்து உங்கள் நடுவே குடிகொள்வேன். மகளே! ஆர்ப்பரி!' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். 

இறைவனின் உடனிருப்பு நமக்கு மகிழ்ச்சி தருகின்றது - அவரை நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றாலும்!


Thursday, September 23, 2021

கேள்விகள்

இன்றைய (24 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக்கா 9:18-22)

கேள்விகள்

இயேசுவின் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எல்லாம் அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. பேதுருவின் நம்பிக்கை அறிக்கை நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகளின் முக்கியமான நிகழ்வாக இருக்கின்றது. ஏனெனில், 'யார் இவர்?' என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே நிகழ்வுகள் நகர, 'இவரே கடவுளின் மெசியா' என்ற விடை இங்கே தரப்படுகின்றது. தொடர்ந்து, 'இவர் எப்படிப்பட்ட மெசியா?' என்ற கேள்விக்கு விடையாக வருகின்றது இனி வரும் நற்செய்திப் பகுதிகள். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இயேசு தன் பாடுகளை முதன்முதலாக அறிக்கையிடுவார். பேதுரு இயேசுவைக் கடிந்துகொள்வார். ஆனால், லூக்காவின் பதிவில் இயேசு பேதுருவைக் கடிந்துகொள்வதில்லை. 

ஆக, இயேசுவைப் பற்றிய அறிக்கை, இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல், மற்றும் சீடர்களின் புரிதல் அனைத்தும் இறைவேண்டலின் துணையோடு நடக்கின்றது.

'இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா.

ஆக, இறைவன் - இயேசு – சீடர்கள் என்று குழுவுக்குள் நடந்தேறுகிறது இந்நிகழ்வு. 

முதல் கேள்வி, 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' இந்தக் கேள்விக்கு விடையாகக் கூறப்படுகின்ற மூன்று விடைகளும், நேற்றைய நற்செய்தி வாசகத்தில், ஏரோது கேள்விப்பட்ட வார்த்தைகளாகவே உள்ளன: 'திருமுழுக்கு யோவான், எலியா, இறைவாக்கினருள் ஒருவர்.'

ஆக, சீடர்கள் மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாக இருக்கின்றனர். 

இரண்டாவது கேள்வி: 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' இந்தக் கேள்விக்கு பன்னிருவர் சார்பாக விடையளிக்கின்ற பேதுரு, 'நீர் கடவுளின் மெசியா' என்கிறார். இது பன்னிருவரின் தனிப்பட்ட அனுபவம்.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) 'உனக்கு நான் யார்?'

இறையனுபவம் மற்றும் இறையறிதலில் இந்தக் கேள்வி மிகவும் முக்கிமானது. பல நேரங்களில் நாம் எளிதாகக் கடந்து செல்ல விரும்பும் கேள்வியும் இதுவே. நம் உள்ளத்தில் கடவுள், 'உனக்கு நான் யார்?' என்ற கேள்வியைக் கேட்கின்றார். அதற்கான பதிலிறுப்பை நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக அளிக்க வேண்டும். அதனால்தான், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என இயேசு கட்டளையிடுகின்றார். 

(ஆ) இறைவேண்டல்

பல நேரங்களில் இறைவேண்டல் என்பதை நாம் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்தல் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றோம். ஆனால், இறைவேண்டல் என்பது ஒரு வாழ்வியல் நிலை. நம் வாழ்வின் இருத்தல் மற்றும் இயக்கத்தில் இறைவனின் துணையை அறிதலே இறைவேண்டல். லூக்காவின் நற்செய்தியின்படி பன்னிருவரும் இறைவேண்டல் என்ற தளத்தில் இருந்ததால்தான் இயேசுவைப் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்கின்றனர்.

(இ) இறையனுபவமே தொடக்கப் புள்ளி

'கடவுளின் மெசியா' என்ற இறையனுபவம், அவர் துன்புறுவார் என்று இயேசு முன்மொழியக் காரணமாக இருக்கின்றது. நாம் பெறுகின்ற இறையனுபவமே அவர் நம் வாழ்வில் செயலாற்றப் போவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் இருக்கிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் (ஆகாய் 2:1-9), ஆண்டவராகிய கடவுளின் கோவில் எருசலேமில் மீண்டும் கட்டப்படுகின்றது. 'இந்த இடத்தில் நலம் நல்குவேன்' என்று ஆண்டவராகிய கடவுள் மொழிகின்றார். அவர் இருக்கும் இடத்தில் நலம் (அமைதி) உருவாகிறது. அவர் இருக்கும் இடத்தில் வாழ்வின் முக்கியமான மறைபொருள்கள் நமக்கு புரியத் தொடங்குகின்றன.


Wednesday, September 22, 2021

இவர் யாரோ?

இன்றைய (23 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 9:7-9)

இவர் யாரோ?

குழந்தை இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணம் செய்யும் நிகழ்வில், மரியாளிடம் உரையாடுகின்ற சிமியோன், 'இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு, பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்' (காண். லூக் 2:34-36) என்கிறார். 

குறுநில மன்னன் ஏரோதின் உள்ளத்து எண்ணங்கள் வெளிப்படுவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கின்றோம். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தியாளர்கள் திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படுவதைப் பதிவு செய்கின்றனர். தன் நற்செய்தியில் இயேசுவின் இரத்தக்கறை தவிர வேறு எந்த இரத்தக்கறையும் இருக்க விரும்பாத லூக்கா இந்நிகழ்வைப் பதிவு செய்யவில்லை. மாறாக, திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்பட்டார் என்பதை, கொலை செய்தவரின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் ஒப்புகையாக, உள்ளக்கிடக்கையாகப் பதிவு செய்கின்றார்.

'நிகழ்ந்தவற்றை எல்லாம் கேள்விப்படுகின்ற ஏரோது மனம் குழம்புகிறார்.' நற்செய்தி நூல்களில் நாம் இரண்டு ஏரோதுக்களைக் காண்கின்றோம். முதலாம் நபர் பெரிய ஏரோது. இவர் கிமு 37 முதல் 4 வரை யூதேயாவை ஆண்டவர். இவருடைய காலத்தில்தான் இயேசு பிறக்கின்றார். குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடுவதும் இவரே. இரண்டாம் நபர் ஏரோது அந்திபா. இவர் கிமு 4 முதல் கிபி 39 வரை கலிலேயா மற்றும் பெரேயாவின் குறுநில மன்னனாக விளங்கியவர். திருமுழுக்கு யோவானைக் கொன்றவரும், இயேசுவின் பாடுகள் வரலாற்றில் பிலாத்துவிடம் இயேசுவை அனுப்பியவரும் இவரே. இயேசுவின் பிறப்பு பற்றிய செய்திகள், குழந்தைப் பருவ நிகழ்வுகள், அவருடைய போதனைகள், வல்ல செயல்கள், பயணங்கள், அவரைச் சுற்றியிருக்கின்ற மக்கள் திரள் போன்றவற்றைப் பற்றி ஏரோது கேள்விப்படுகின்றார். ஆக, இயேசு புளிப்பு மாவு போல தன் பிரசன்னத்தை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக்கம் செய்துகொண்டே இருக்கின்றார். 

இயேசுவைப் பற்றி மக்கள் மூன்று புரிதல்களை ஏரோதுவிடம் சொல்கின்றனர்: 'இறந்த யோவான் எழுப்பப்பட்டார்' – அதாவது, இறக்கின்ற நீதிமானுடைய ஆவி இன்னொருவரின் மேல் தங்கும் என்பது யூதர்களின் நம்பிக்கை. அப்படித்தான் எலியாவிடம் தங்கியிருந்த ஆவி எலிசாவிடம் தங்குகிறது. 'எலியா மீண்டும் வருவார்' என்ற நம்பிக்கையில், இயேசுவை 'எலியா' என்கின்றனர் இன்னும் சிலர். மேலும் சிலர், 'முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர்' எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்கின்றனர்.

'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே!' என்னும் வார்த்தைகள் ஒரே நேரத்தில் ஏரோது தன் உள்ளத்தில் தான் செய்த தவற்றை ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவதாகவும், இவ்வார்த்தைகளைக் கொண்டு இயேசுவை எச்சரிப்பதாகவும் அமைந்துள்ளன. ஏனெனில், இந்த ஏரோதுவே இன்னும் சில நாள்களில் இயேசுவைக் கொல்லத் தேடுவார். இயேசு இந்த ஏரோதுவை அந்நேரத்தில் 'குள்ளநரி' என அழைக்கின்றார் (காண். லூக் 13:32). 

'இவர் யாரோ?' என ஏரோது கேட்கும் கேள்வியை, சற்றுமுன் சீடர்களும், 'இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகின்றார். அவை கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?' என்று கேட்கின்றனர் (காண். லூக் 8:25). ஆக, இயேசுவின் வல்ல செயலைக் காணும் ஒருவர் எழுப்பும் பதிலிறுப்பாகவும், இயேசுவின்மேல் கொள்ளும் நம்பிக்கையின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கிறது இக்கேள்வி.

இறுதியில், இயேசுவைக் காண வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார் ஏரோது. 'தொலைத்த ஒன்றைத் தேடுவதற்கான' கிரேக்கச் சொல்லே ('ஸ்ஷேடேயோ') இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஏரோது தொலைத்த பொருள் பிலாத்துவிடமிருந்து அனுப்பப்படுகின்றது. ஆனால், அந்தப் பொருளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டால் பிலாத்துவின் நட்பு பாதிக்கப்படும் என்பதால் அதைப் பிலாத்துவிடமே அனுப்புகிறார் ஏரோது. இறுதியில், இருவரும் இணைந்து மீண்டும் தொலைத்துவிடுகின்றனர். 

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடங்கள் மூன்று:

(அ) கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் நாம் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் அனைத்தும் மற்றவர்களின் காதுகளிலும் கண்களிலும் விழுந்துகொண்டே இருக்கும். நம் பிரசன்னத்தை நாம் மூடி வைக்க இயலாது. நம் எதிரிகளும் நம்மைப் பற்றிக் கேள்விப்படுவார்கள் எனில் நம் பேச்சும் நடத்தையும் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும்! இன்னொரு பக்கம், இயேசு மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எந்தவொரு பதற்றமும் இன்றி, நன்மையானவற்றைச் செய்துகொண்டே செய்கின்றார். அவருடைய வார்த்தைகளும் செயல்களும் அவருக்காக மற்றவர்களிடம் பேசுகின்றன. ஆக, நம் சொற்களும் நம் செயல்களும் மற்றவர்கள்முன் சான்றுகளாக இருப்பதால் அவை எப்போதும் நலமானவையாக இருத்தல் நலம்.

(ஆ) 'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே!' என்று உண்மையை எதிர்கொள்கின்றார் ஏரோது. நம் வாழ்வின் ஒரு கட்டத்தில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் பொய்களை எல்லாம் விடுத்து, 'நான் யார்? நான் ஏன் இப்படி இருக்கிறேன்? நான் இரட்டை வாழ்க்கை வாழ்வது ஏன்?' என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டும். கேள்விகளுக்கு விடை கண்டவர்கள் உண்மையைத் தழுவிக்கொள்கின்றனர். கேள்வியைக் கேட்டுவிட்டு மட்டும் நகர்ந்தவர்கள் பொய்யிலேயே நகர்கிறார்கள் ஏரோது போல.

(இ) இயேசு கிறிஸ்து இன்னும் நமக்கு ஒரு மறைபொருளாகவே இருக்கின்றார். அவரைப் பற்றிய நினைவு நமக்கும் குழப்பத்தை உருவாக்குகிறது. இன்றைய உலகுசார் அறிவியல் கண்கொண்டு அவரைப் பார்க்கத் துடிக்கும் நாம் அவரைக் காண இயலாததால், 'அவர் இல்லை! கடவுள் என்பது பொய்!' என்று சொல்லிக்கொள்கின்றோம். அல்லது, உண்மையான அவரின் இருத்தல் நமக்கு இடறலாக இருப்பதால், ஏரோது போல அவரை அழித்துவிட நினைக்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து வீடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரைப் பற்றிய அக்கறையை விடுத்து, தங்களைக் குறித்தே அக்கறை கொள்வதை இறைவாக்கினர் ஆகாய் கடிந்துகொள்கின்றார். இறைவனைப் பற்றிய தூண்டுதல் சில நேரங்களில் நமக்கு உள்ளிருந்து வருகின்றது. சில நேரங்களில் வெளியிலிருந்து வருகின்றது.

'இவர் யாரோ?' என்ற கேள்வி மனித வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் பரவிக் கிடக்கின்றது.


Tuesday, September 21, 2021

அவர்களை அனுப்பினார்

இன்றைய (22 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 9:1-6)

அவர்களை அனுப்பினார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பன்னிருவரைப் பணிக்கு அனுப்புகின்றார். பணிக்கு அனுப்பும்போது சில அறிவுரைகளைக் கூறுகின்றார். இறுதியில், பன்னிருவரும் பணி செய்ததாக லூக்கா பதிவு செய்கின்றார். இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கற்பிக்கின்றது:

(அ) புதிய பயணம்

'தம்மோடு இருக்க பன்னிருவரைத் தேர்ந்துகொண்ட இயேசு அவர்களைப் பணிக்கு அனுப்புகின்றார்.' அழைக்கப்படுதலும் அனுப்பப்படுதலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல இருக்கின்றன. அழைக்கப்படுபவர் அனைவரும் அனுப்பப்பட வேண்டும். மேலும், அழைக்கப்படுவதும் அனுப்பப்படுவதும் அவரால் நிர்ணயிக்கப்படுகின்றன. தான் விரும்பியவர்களை விரும்பிய நேரம் அவர் அழைக்கின்றார். அதுபோல தான் விரும்புகிற நேரம் அவர்களை அனுப்புகின்றார். இப்போது திருத்தூதர்கள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்தப் பயணம் இனி அவர்கள் வாழ்வின் இறுதி வரை தொடரும். இடையில் அவர்கள் பாதை மாறினாலும், பாதை தவறினாலும் அவர்களின் பயணம் இறையாட்சிப் பயணமே. நாம் அனைவரும் திருமுழுக்கு பெற்றபோது இந்தப் பயணம் தொடங்குகிறது. இந்தப் பயணம் பற்றிய தெளிவு நம்மிடம் இருக்கின்றதா? என்னும் கேள்வியை நாம் இன்று கேட்கலாம். ஒவ்வொரு நாள் திருப்பலியிலும், 'சென்று வாருங்கள்! திருப்பலி முடிந்தது!' என்று அருள்பணியாளர் சொல்லும் வார்த்தைகளில் இந்தப் பயணம் நம்மில் புதுப்பிக்கபடுகின்றது. ஆக, நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம், அனுப்பப்படுகின்றோம்.

(ஆ) புதிய பிறப்பு

இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் தன் சீடர்களைப் பணிக்கு அனுப்புவது வழக்கம். அப்படி அனுப்பும்போது, 'இதை எடுத்துக்கொள்! அதை எடுத்துக்கொள்!' என்று சொல்வது இயல்பு. மேலும், தங்களுடைய பணிக்கும் பயன்படும் என்று நிறைய ஏட்டுச் சுருள்கள், பை, கைத்தடி, காலணிகள் என நிறையவே அவர்கள் எடுத்துச் செல்வர். ஆனால், இயேசு அதற்கு எதிர்மாறாக எதையும் எடுத்துச் செல்லாதீர்கள் என அறிவுறுத்துகின்றார். ஏறக்குறைய இது அவர்களுக்கு இரண்டாம் பிறப்பு போல இருக்கின்றது. ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அந்தக் குழந்தை தன் கையில் கைத்தடியே, பையோ, உணவோ, பணமோ இன்றிதான் பிறக்கின்றது. நாமும் அவ்வப்போது இப்படி இரண்டாம் பிறப்பு எடுத்தல் நலம். பொருள்களைக் குறைக்கச் சொல்வதன் வழியாக, இயேசு பொருள்கள்மேல் உள்ள பிடிப்பைக் குறைத்துக் கடவுளின் பராமரிப்பின்மேல் உள்ள நம்பிக்கையை அதிகரிக்கின்றார்

(இ) புதிய செயல்

'பன்னிருவரும் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.' அதாவது, தாங்கள் இதுவரை செய்யாத ஒரு செயலை இப்போது செய்கிறார்கள். தங்களால் இதைச் செய்ய முடிகிறதே என்று வியக்கிறார்கள். மீன்பிடித்த கைகள் பேயை ஓட்டுகின்றன. வரி வசூலித்த கைகள் பார்வையற்றோருக்கு நலம் தருகின்றன. தீவிரவாதியின் உதடுகள் நற்செய்தி அறிவிக்கின்றன. இதுதான் இயேசுவால் வருகின்ற மாற்றம். இயேசுவால் அழைத்து அனுப்பப்படும் ஒருவர் மீண்டும் பழைய செயல்களையே செய்துகொண்டிருக்க முடியாது. பழைய செயல்கள் செய்வதற்கு எளிதாக இருப்பதால் நாம் அவற்றைச் செய்துகொண்டே இருந்துவிட்டு, ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்கின்றோம். புதிய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு இருக்கும்போது செயல் தானாகவே நடந்தேறுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் இறைவன் முன் முழந்தாளிட்டுக் கிடக்கின்ற எஸ்ரா ஆண்டவராகிய கடவுள் தங்கள் வாழ்க்கையில் செய்த அனைத்து செயல்களையும் எண்ணிப் பார்த்து வியக்கின்றார். இறைவனின் தயை தங்களைக் காப்பாற்றியது என்று நன்றி கூறுகின்றார்.

இறைவனின் தயவு நம்மை அழைக்கின்றது. நம்மை அனுப்புகின்றது.


Monday, September 20, 2021

புனித மத்தேயு

இன்றைய (21 செப்டம்பர் 2021) திருநாள்

புனித மத்தேயு

இன்று திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். வங்கியாளர்கள், காசாளர்கள், மற்றும் தணிக்கையாளர்களின் பாதுகாவலர் இவர்.

இந்திய மெய்யியலில், 'மார்க்கம்' என்ற ஒன்று உண்டு. அதாவது, 'வழி,' 'மோட்சம்' அல்லது 'பேறுபெற்ற நிலையை அடைவதற்கான வழி.' 'ஞான மார்க்கம்' ('அறிவின் வழி மோட்சம்'), 'கர்ம மார்க்கம்' ('செயல் வழி மோட்சம்'), 'பக்தி மார்க்கம்' ('பக்தி அல்ல வழிபாட்டு வழி மோட்சம்). இதன் பின்புலத்தில், மத்தேயு நற்செய்தி ஞானமார்க்கம் என்றும், மாற்கு நற்செய்தி கர்மமார்க்கம் என்றும், லூக்கா நற்செய்தி பக்திமார்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.

'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்' (மத் 12:52) என்று இயேசு கூறுவதாக மத்தேயு பதிவு செய்கின்றார். 

இந்தப் பதிவு நமக்கு இரு விடயங்களைக் கூறுகிறது: ஒன்று, 'விண்ணரசு என்பது கற்றுக்கொள்ளப்பட' அல்லது 'அறிந்துகொள்ளப்பட' வேண்டியது. ஆக, இது அறிவு அல்லது ஞானம் சார்ந்தது. எல்லாரும் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொள்ள முடியும். இரண்டு, இந்தப் பகுதி மத்தேயு நற்செய்தியாளரைப் பற்றியே கூறுகின்றது. ஏனெனில், சுங்கச் சாவடியில் வரி வசூல் செய்துகொண்டிருந்த மத்தேயு, விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்டவுடன், தன் இயேசு அனுபவத்திலிருந்து பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் வெளியே கொண்டு வந்து நற்செய்தியாகப் பதிவு செய்கின்றார். 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபே 4:1-7,11-13), புனித பவுல், 'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுரை கூறுகின்றார். மத்தேயு தான் பெற்ற திருத்தூதர் என்ற அழைப்புக்கு ஏற்ப மூன்று நிலைகளில் வாழ்கின்றார்:

ஒன்று, பழையதை விடுத்துப் புதியதைப் பற்றிக்கொள்கின்றார். 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்' என்கிறார் பவுல் (காண். 1 கொரி 13:10). நிறைவான இயேசு தனக்குக் கிடைத்தவுடன் அரைகுறையான தன் வரிவசூலிப்பவர் பணியை விட்டுவிடுகின்றார். 

இரண்டு, 'இதுதான் நான்!' எனத் துணிச்சலுடன் இயேசுவின்முன் எடுத்துச் சொல்கின்றார். தான் அழைக்கப்பட்டவுடன் முதல் வேளையாக இயேசுவைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கின்றார் மத்தேயு. உணவு என்பது உறவின் அடையாளம். அந்த உறவுத்தளத்தில், மற்றவர்கள் தன்மேல் பதித்த முத்திரைகள் மற்றும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாமல், தான் யார் என்றும், தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யார் என்றும் இயேசுவுக்கு அறிமுகம் செய்கின்றார் மத்தேயு. கடவுளுக்கே விருந்து வைத்த சில விவிலியக் கதைமாந்தர்களில் இவரும் ஒருவர். அடுத்தவருடன் தன் உணவைப் பகிர்ந்துகொள்ள விழைகின்ற பக்குவமே மேன்மையானது. ஏனெனில், பசி என்ற அடிப்படை உணர்வு நம்மை பதுக்கிக்கொள்ளவே தூண்டுகிறது.

மூன்று, 'கடவுள் நம்மோடு' என்னும் நற்செய்தி. மத்தேயு நற்செய்தி நமக்குத் தந்த மாபெரும் செய்தி, 'கடவுள் நம்மோடு' என்பதுதான். மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை. 'உலகமுடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்' என்று நம்மோடு தங்கிவிடுகின்றார். இந்த மாபெரும் எண்ணத்திற்குச் சொந்தமானவர் மத்தேயு. கடவுளை மனுக்குலம் சிக்கெனப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார் மத்தேயு.

மத்தேயு நற்செய்தியில் நாம் இரசிக்க வேண்டிய இன்னும் பல கூறுகள் உள்ளன: இயேசுவின் தலைமுறை அட்டவணை, திருக்குடும்பத்தின் ஒப்பற்ற தலைவர் யோசேப்பு, அவருக்கு மத்தேயு வழங்கிய 'நேர்மையாளர்' என்னும் அழகிய தலைப்பு, கீழ்த்திசை ஞானியர், மலைப்பொழிவு, பேதுரு கடலில் நடத்தல், யூதாசின் வருத்தம், பிலாத்துவின் மனைவியின் கனவு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு, திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் எடுத்துக்காட்டு, இறுதித் தீர்ப்பு.

இன்றைய நாளில் நாம் மத்தேயு நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசிக்க முயற்சி செய்வோம்.

'என்னைப் பின்பற்றி வா!' என்னும் இயேசுவின் குரல் கேட்டவுடன், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டுப் புறப்படுகின்றார். கணக்குப் பார்த்துக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றோ, நாளை பார்க்கலாம் என்றோ அவர் சொல்லவில்லை. அவர் தயாராக இருந்தார். எப்போதும்.

'கடவுளின் கொடை' எனப் பொருள்படும் 'மத்தேயு' தன்னையே கடவுளுக்குக் கொடையாகக் கொடுத்துவிடுகின்றார். வெறும் வரவுக் கணக்கை எழுதிக்கொண்டிருந்தவர், மீட்பின் வரவுக் கணக்கை நற்செய்தியாக எழுதி இன்றும் நம்மோடு வாழ்கின்றார்.


Sunday, September 19, 2021

அறிவின் நோக்கம்

இன்றைய (20 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 8:16-18)

அறிவின் நோக்கம்

'எல்லாவற்றுக்கும் மேலாக, உனக்கு நீயே பொய்யுரைக்காதே! தனக்குத்தானே பொய்யுரைத்து, அந்தப் பொய்க்குச் செவிகொடுக்கும் ஒருவர் காலப்போக்கில் தனக்குள்ளே உள்ள உண்மையையும், தனக்கு வெளியே உள்ள உண்மையையும் ஆய்ந்தறிய இயலாமல்போய்விடுவார். இவ்வாறாக, தன்மேல் உள்ள மதிப்பையும் பிறர்மேல் உள்ள மதிப்பையும் இழந்துவிடுவார். மதிப்பை இழந்துவிடுவதால் அன்பு செய்வதும் அவருக்கு இயலாமல் போய்விடும்!'

'கரமசோவ் சகோதரர்கள்' (The Brothers Karamazov) என்னும் நாவலில் ரஷ்ய எழுத்தாளர் ப்யோடோர் டோஸ்டாவ்ஸ்கி, மடாதிபதி ஒருவரைச் சந்திக்க சகோதரர்கள் கூடியிருக்கும் சூழலில் எழுதுகின்றார்.

ஒருவர் தன் இயல்பு என்ன என்பதை மறந்து, பொய்யான ஓர் இயல்பைப் பற்றிக்கொண்டு வாழ்வது தவறு என்பதும், பல நேரங்களில் அறிவு என நாம் எண்ணுவது உண்மையிலிருந்து முற்றிலும் மாறுபடக் கூடியது என்பதும் இதன் பொருள் ஆகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் இயேசு விளக்கு உவமையைக் குறிப்பிடுகின்றார். விளக்கை ஏற்றும் ஒருவர் அதைப் பாத்திரத்தால் மூடிவைத்தால், அல்லது கட்டிலின் அடியில் வைத்தால், அவர் விளக்கின் இயல்பை முழுமையாக அறியாதவராக இருக்கின்றார். அல்லது தான் பெற்ற அறிவுதான் சரி என்ற நிலையில் அப்படிச் செய்கின்றார். ஆனால், விளக்கு ஏற்றப்படுவதன் நோக்கம் விளக்குத் தண்டின்மீது வைத்து அனைவரும் ஒளி பெறுவதற்கே. இந்த உண்மையை அவர் மறந்து தன் அறிவின்படி மட்டும் செயல்பட்டால் அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார்.

எடுத்துக்காட்டாக, ஒர் அருள்பணியாளரின் இயல்பு அல்லது நிலை என்பது அனைவருக்கும் ஒளிதருகின்ற விளக்கு போல இருப்பது. ஆனால், அவர் தன் ஒளியைத் தனக்குத்தானே சுருக்கிக் கொண்டால், அல்லது தன் தவறான முதன்மைகள் என்னும் பாத்திரங்களால் அவற்றை மூடிக்கொண்டால், அவர் தனக்குத்தானே பொய்யுரைப்பவராக மாறுகின்றார். ஏனெனில், அவர் தன் இயல்பை மறுதலிக்கின்றார். 

தொடர்ந்து இயேசு, நம் மனநிலை குறித்துக் கவனமாக இருக்குமாறு நமக்குச் சொல்கின்றார். நீதிமொழிகள் நூலில் நாம் இதையொத்த அறிவுரை ஒன்றை வாசிக்கின்றோம்: 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (4:23). இதயத்தில் எழும் எண்ணங்கள் பற்றி நாம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பல நேரங்களில் நம் எண்ணங்கள் கட்டுக்கடங்காத குதிரைகள் போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இரவில் நாம் தூங்கும்போதும் நம் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்கள்தாம் உண்மை என நாம் நினைக்கின்றோம். ஆனால், பல நேரங்களில் நம் எண்ணங்கள் நம்மை ஏமாற்றிவிடுகின்றன. ஆக, நம் எண்ணங்களைப் பற்றி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அதீத எண்ணங்கள் நம் அனுமதி இல்லாமல் பிறப்பதில்லை. நாம் அவற்றுக்குத் தீனி போட போட அவை எண்ணெய் ஊற்றப்பட்ட திரிபோல எரிய ஆரம்பிக்கின்றன. 

இறுதியாக, இயேசு, 'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென அவர் நினைப்பது எடுத்துக்கொள்ளப்படும்' என எச்சரிக்கின்றார். இல்லாத நிலையில் இருப்பது கூடப் பிரச்சினையில்லை. மாறாக, 'தமக்கு உண்டென நினைத்துக்கொண்டு' ஒரு போலி இருத்தல் நிலையில் இருப்பதும் தனக்குத்தானே பொய்யுரைப்பதே. போலி இருத்தல் மனநிலையைக் கொண்டிருப்பவர் புதிதாக எதையும் தேடமாட்டார். ஏனெனில், தன்னிடம் எல்லாம் இருப்பதாக தன் மூளைக்குச் சொல்லிக்கொள்வார். அல்லது அவருடைய மூளை அவருக்குச் சொல்லி அவரை ஏமாற்றும்.

மொத்தத்தில், இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு நாமே உண்மையாக இருக்க நம்மை அழைக்கின்றது. நம் இயல்பு தண்டில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு போல எரிய வேண்டும். தண்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தன் பாதுகாப்பற்ற தன்மையை உணர வேண்டும். பாத்திரத்தின் பாதுகாவலும், கட்டிலுக்கு அடியில் உள்ள பாதுகாவலும் தனக்குப் போதும் என நினைத்தால் அது தன் இயல்பை மறுதலிப்பதோடு, பாத்திரத்திற்கும் கட்டிலுக்கும் சேதம் விளைவித்துவிடும்.

நாம் நம்மைப் பற்றிப் பெற்றுள்ள அறிவு உண்மையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும். அறிவு என்பது வெறும் வழியே. உண்மை என்பதே இலக்கு. அந்த இலக்கே நமக்கு வாழ்வு தரக்கூடியது. 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்' என்று சொன்ன இறைமகன் இயேசு இப்பயணத்தின் வழியாகவும், வழித்துணையாகவும் நமக்குத் திகழ்வாராக!


Saturday, September 18, 2021

யார் பெரியவர்?

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

I. சாலமோனின் ஞானம் 2:17-20 II. யாக்கோபு 3:16-4:3 III, மாற்கு 9:30-37

யார் பெரியவர்?

'நீங்கள் கடவுளைவிட பெரியவராக அல்லது கடவுளைப் போல பெரியவராக இருப்பீர்கள்' என்பதுதான் விவிலியத்தில் மனுக்குலம் எதிர்கொள்ளும் முதல் சோதனை. காயின் ஆபேலைத் தாக்கக் காரணமாக இருந்தது, 'யார் பெரியவர்?' என்ற உந்துணர்வே.மக்கள் பாபேல் கோபுரம் கட்ட முனைந்ததும்,யாக்கோபு ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையைப் பெற்றுக்கொண்டதும், யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்கள் கையில் விற்றதும்,பாரவோன் இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்தியதும், பாரவோன் இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் விடுவிக்க மறுத்ததும்,

... ... ...

சவுல் தாவீது மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்க விரும்பியதும், தாவீதின் மகன்களே ஒருவருக்கு ஒருவர் அரியணை சண்டை இட்டதும், சாலமோன் ஞானியாக இருந்தாலும் சிலைவழிபாட்டுக்கு தன்னையே கையளித்ததும் என எல்லா நிகழ்வுகளிலும் கதைமாந்தர்கள் தங்களுக்குள் எழுப்பிய கேள்வி, 'யார் பெரியவர்?' என்பதுதான்.

இந்தக் கேள்விதான் இந்த உலகின் பெரிய நாடுகள் எடுக்கும் முடிவுகளிலிருந்து, நம் வீட்டிற்குள் நடக்கும் சின்னச் சண்டை வரை அனைத்தின் பின்புலத்தில் இருக்கிறது. 'பெரியவராக' அல்லது 'முக்கியத்துவம்' பெற்றவராக இருக்க நாம் விருப்பம் அல்லது வெறி கொண்டிருக்கின்றோம்.

'பெரியவராக இருத்தல்' என்பதில் மூன்று கூறுகள் உள்ளன:

(அ) அனைவருடைய கவனமும் பெரியவர்மேல் இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, திருமண மண்டபத்திற்குள் அமர்ந்திருக்கிறோம். திடீரென 'பெரியவர்' ஒருவர் வருகின்றார். அனைவரும் அவரை நோக்கித் திரும்புகின்றனர்.

(ஆ) அனைவரும் அவருக்குப் பணிவிடை புரிவர். 'பெரியவர்' வரும்போது கதவுகள் திறக்கப்படுகின்றன.

(இ) அனைவரும் அவருடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவர். அல்லது அவர் தன் வார்த்தைகளால் அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குள் இருக்கும் இந்தச் 'சிற்றின்ப நாட்டத்தை' சுட்டிக்காட்டுவதோடு, 'பெரியவராக இருப்பது' எதில் அடங்கியிருக்கிறது என்பதையும் அறிவுறுத்துகிறது.

சாலமோனின் ஞானநூல் அலெக்ஸாந்திரியாவில் வாழ்ந்த யூத குழுமத்திற்கு எழுதப்பட்டது. அலெக்ஸாந்திரியா நகரம் கிரேக்க கலாச்சாரத்தை மிகவும் உள்வாங்கி செல்வச் செழிப்பிலும், கல்வி அறிவிலும் மேலோங்கி நின்றது. அந்நகரில் வாழ்ந்த யூதர்கள் கிரேக்க கலாச்சாரத்தினால் ஆச்சர்யப்பட்டு, தங்களின் 'திருச்சட்டம் பின்பற்றும் வாழ்வை' காலாவதியானதாக, உலகிற்கு ஒவ்வாத ஒன்றாகக் கருதினார்கள். காலப்போக்கில், அவர்கள் கிரேக்க கலாச்சாரத்தை ஒட்டி வாழவும் தொடங்கினார்கள். இதே நேரத்தில் மற்றொரு யூதக் குழுமம் கிரேக்க கலாச்சாரத்திற்கு உட்படாமல் தங்களின் சட்டங்களையும், மரபுகளையும் பின்பற்றுவதிலும், தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் என்ற சிந்தனையிலும் வாழ்ந்தனர். இந்த இரு குழுமங்களுக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல்களும், சண்டைகளும் வந்தன. தங்களின் திருச்சட்டத்தை மட்டும் பிடித்துக்கொண்டவர்கள் மற்றவர்களை 'நம்பிக்கையை மறுதலித்தவர்கள்' என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால், இப்படி குற்றம் சாட்டப்பட்ட முதல் குழுவினர் - அதாவது, யூதர்களாக இருந்தாலும் கிரேக்க கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் - திருச்சட்டத்தைப் பின்பற்றியவர்களின் செய்கை தவறு என்றும், அவர்கள் வைத்திருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை எனவும் நிரூபிக்க விரும்பினார்கள். எனவே, அவர்கள் கடவுளையும், கடவுளைப் பின்பற்றுபவர்களையும் சோதிக்க விரும்பினார்கள். இப்படி இவர்களைச் சோதிக்கும்போது கடவுள் வருவாரா என்று பார்த்து, கடவுளையும் பொய்யராக்க நினைத்தார்கள். இந்நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 2:17-20) வாசிக்கின்றோம்: 'நீதிமான்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம். முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார்.'

கிரேக்க கலாச்சாரத்தைப் பின்பற்றிய 'பொல்லாதவர்கள்' தங்கள் அடையாளத்தை வெளிப்புற கிரேக்க சின்னங்களில் தேடுகின்றனர். தாங்கள் கிரேக்கர்களைப் போல இருப்பதால் இவர்கள் தங்களை 'பெரியவர்கள்' என நினைத்தார்கள். மேலும், இதனால் தங்களைச் சாராத மற்றவர்களைப் பழிதீர்க்கவும் விரும்பினார்கள். ஆனால், கடவுளின் திருச்சட்டத்தையும், அவர் தந்த கடவுளின் பிள்ளைகள் என்னும் அடையாளத்தையும் பின்பற்றிய 'நீதிமான்கள்' தங்கள் அடையாளத்தை தங்களுக்கு உள்ளே கண்டனர். இந்த நீதிமான்கள் தங்கள் நீதியான வாழ்வின் வழியாக தாங்கள் 'பெரியவர்கள்' என நினைத்தார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 3:16-4:3) தன் திருச்சபையின் அடுத்த பிரச்சினையான 'பிளவு மற்றும் கட்சி மனப்பான்மையை' கையாளுகின்றார். யாக்கோபின் திருச்சபை பொறாமை மற்றும் தன்னல எண்ணங்களால் துன்பற்றது. பொறாமை மற்றும் தன்னல மையப்போக்கின் வழியாக தங்களையே 'பெரியவர்கள்' என நினைத்துக்கொண்டனர் அத்திருச்சபையில் உள்ள சிலர். ஆனால், இந்த இரண்டிற்கும் மாறாக, 'கடவுளின் ஞானத்தை' அவர்களுக்கு முன்வைக்கிறார் யாக்கோபு: 'ஞானத்தின் பண்பு தூய்மை. அது அமைதியை நாடும். பொறுமை கொள்ளும். இணங்கிப் போகும். இரக்கமும் நற்செயல்களும் கொண்டிருக்கும். நடுநிலை தவறாது. வெளிவேடம் கொண்டிராது.' எல்லாவற்றிற்கும் மேலாக, ஞானத்தின் கனி அமைதி.  யாக்கோபின் திருச்சபையின் பிரச்சினை நம்பிக்கையாளர்களுக்கு வெளியிலிருந்து வரவில்லை. மாறாக, அவர்கள் உள்ளத்தில் உதிக்கிறது. 'நாட்டம்' என்பதும், 'இன்பம்' என்பது ஒரே கிரேக்க வார்த்தையால் குறிக்கப்படுகிறது. ஆக, 'நாட்டம்' என்ற ஒன்று இருக்கக் காரணம் அந்த நாட்டம் கொண்டுவரும் இன்பமே. நாட்டம் கொண்டுள்ள மனிதர் தன்னுள்ளே பிளவுபட்டிருக்கிறார். அது அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்தப் பிளவை நிரப்ப அவர் தன் அந்தஸ்து, அதிகாரம், புகழ், அறிமுகம் ஆகியவற்றை நாடுகிறார். இது தொடர் போராட்டத்திற்கும், சண்டை சச்சரவுகளுக்கும், கொலைக்கும் வழிவகுக்கிறது.

'யாரும் பயணம் செய்யாத பாதை' என்ற நூலின் ஆசிரியர் ஸ்காட் பெக் 'க்ராட்டிஃபிகேஷன்' என்ற வார்த்தையை அறிமுகம் செய்தார். இவர் யாக்கோபின் திருமடலில்தான் இந்த சிந்தனையைக் கண்டறிந்திருக்க முடியும். அதாவது, நீண்டகால மதிப்பீடுகள் தரும் மகிழ்ச்சிக்கு காத்திராத மனம், சின்னச் சின்ன சிற்றின்பங்களை நாடி, தன்னையே 'கிராட்டிஃபை' செய்து செய்துகொள்ள நினைக்கிறது. உதாரணத்திற்கு, குழுவாழ்வு என்பது ஒரு நல்ல மதிப்பீடு. எல்லாரும் சேர்ந்து வாழ்வது, சேர்ந்து உழைப்பது, சேர்ந்து சாப்பிடுவது என்பது. ஆனால், இந்த மதிப்பீடு ஒரே நாளில் நாம் அடையக்கூடியதா? இல்லை. இதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்தால் இத்தகைய வாழ்வை நாம் கண்டிப்பாக அடைந்துவிட முடியும். ஆனால், இவ்வளவு நாட்கள் பொறுமை காக்க மறுக்கும் மனம் என்ன செய்கிறது? சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்வதில் சிற்றின்பம் தேடுகிறது. சாதி அடிப்படையில், மொழி அடிப்படையில், மதம் அடிப்படையில், இன அடிப்படையில், உறவு அடிப்படையில் என சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இந்தக் குழு தரும் சின்னச் சின்ன பாதுகாப்பு உணர்வில் இன்பம் அடைகிறது. ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்நேரமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பதை அது மறந்துவிடுகிறது. சிற்றின்ப நாட்டம் (பாலியல் உணர்வு என்று மட்டும் இதை நினைக்க வேண்டாம்!) உடனடி தீர்வைத் தருகிறது. ஆனால், உடனடித் தீர்வுகள் எப்போதும் நல்ல தீர்ப்புகளாக இருப்பதில்லையே. மேலும், சிற்றின்ப எண்ணங்கள் கொண்டவர்கள் கடவுளிடமிருந்துகூட உதவி பெற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் சோகத்தின் உச்சம்.

இப்படியான வாழ்வு ஒருவரின் ஆன்மீக வாழ்வையும் அழித்துவிடுகிறது. இப்படி பிளவுபட்டிருப்பவர்கள், தங்கள் நாட்டங்களால் அலைக்கழிக்கப்படுவதால், கடவுளைச் சார்ந்திருப்பதிலிருந்து முற்றிலும் விலகி விடுகிறார்கள். இவர்கள் கடவுளிடம் 'கேட்பதற்குப்' பதிலாக அவரிடமிருந்து 'பறித்துக்கொள்ள' விரும்புகிறார்கள். மற்றும் சிலர் கடவுளிடம் தவறானவற்றைக் கேட்கின்றனர். தன்மையம் கொண்ட விண்ணப்பங்களுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன் திருச்சபையினர் கடவுளின் ஞானத்தை மட்டும் கேட்கவும், அந்த ஞானத்தின் கனியாக அமைதியை அவர்கள் சுவைக்கவும் அழைப்பு விடுக்கிறார் யாக்கோபு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 9:30-37), 'யார் பெரியவர்?' என்ற கேள்வியை இரண்டு படிநிலைகளில் அணுகுகிறது. நற்செய்தி வாசகத்தில் முதல் பகுதியில் இயேசு தன் இறப்பை இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். ஆனால் அவர் சொன்னது அவரின் சீடர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. இரண்டாம் பகுதியில் அவர்கள் புரிந்துகொள்ளாததற்கான காரணம் நமக்குத் தெரிகிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமிற்கு வருகிறார்கள். பல சீடர்களின் சொந்த ஊரும் அதுதான். ஆக, சீடர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். வரும் வழியில் தங்களுக்குள் 'யார் பெரியவர்?' என்று விவாதிக்கின்றனர். தங்கள் சொந்த ஊரில் தாங்கள் பெரியவர் என அவர்கள் காட்ட விரும்பினர். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த போதனைகள், புதுமைகள், இயேசுவுக்கும் தங்களுக்கும் உள்ள நெருக்கம், தங்களின் இன்றியமையாமை குறித்து தங்களின் அடையாளத்தை மற்றவர்களுக்கு உறுதி செய்ய விரும்பினார்கள். தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களிடம் தங்களைப் பற்றிச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள விரும்பினார்கள். இயேசு தன்னுடைய தற்கையளிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சீடர்கள் தங்களின் அடையாளத்தையும், தகுதியையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். தன் சீடர்களை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளாத இயேசு அவர்களுக்கு இந்த நேரத்தில் 'யார் பெரியவர்?' என்று கற்பிக்கிறார்.

முதலில், 'பெரியவராக' இருப்பது என்பது 'பணி ஆற்றுவது' அல்லது 'சேவை செய்வது.' இயேசுவின் இப்போதனை அவரின் சமகாலத்து சிந்தனையை தலைகீழாகப் புரட்டியது. ஏனெனில், சீடர்களைப் பொருத்தவரையில் 'பெரியவராக' இருப்பது என்பது 'பணிவிடை பெறுவது' என்ற நிலையில்தான் இருந்தது. இரண்டாவதாக, சீடத்துவம் என்பது குழந்தைகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. குழந்தைகள் அடிமைகளைப் போல அக்காலத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் இருந்தவர்கள். தங்களின் பெற்றோர்களின் விருப்பங்கள் மற்றும் தெரிவுகளைச் சார்ந்தே வாழ்ந்தனர். இன்றுதான் நாம் குழந்தை என்றால் 'இன்னசன்ஸ்', 'தாழ்ச்சி', 'இயல்பானவர்கள்' என்று ரொம்ப ரொமான்டிக்காக சொல்கிறோம். குழந்தைகள் என்பவர்கள் யூத மரபில் 'மனிதர்கள் நிலையை அடையாதவர்கள்'. அவர்கள் வெறும் 'பொருட்கள்'. அவர்கள் 'வலுக்குறைந்தவர்கள்'. ஆக, இப்படிப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள நிறைய தாழ்ச்சி தேவை. ஆக, குழந்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்லும்போது, அவர் தாழ்ச்சியைக் கற்பிக்கின்றார் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆக, பெரியவர் என்பவர் யார்? கடைசியில் இருப்பவர். அல்லது தொண்டராக இருப்பவர். இவரால் மட்டும்தான் வலிமையற்ற குழந்தையையும் ஏற்று அரவணைத்துக் கொள்ள முடியும். ஆக, 'பெரியவர் நிலை' என்பது 'தனியே நிற்க முடியாதவர்களுக்கு உறுதுணையாக இருப்பதில்தான் இருக்கிறது' என்றும், சீடர்கள் தங்களுக்குள் படிநிலையை வகுத்து அதில் 'பெரியவர் நிலையை' அடைதலை விடுத்து, தற்கையளிப்பு, பணிவிடைபுரிதல், மற்றவர்கள்மேல் அக்கறை போன்றவற்றில் அதைக் கண்டுகொள்ளவும் அழைக்கின்றார் இயேசு.

இவ்வாறாக, 'முதன்மையாக இருப்பது' அல்லது 'பெரியவராக இருப்பது' என்பது நமக்குள் பரவலாக இருக்கும் ஒரு உந்துணர்வு. இந்த உந்துணர்வின் நேர்முகமான பகுதிதான் நம்மை முன்னேறத் தூண்டுகிறது. ஆனால், இதன் எதிர்மறையான பகுதி அடுத்தவர்களை அழிக்கவும், அடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் செய்துவிடுகிறது. ஆகையால்தான், அலெக்ஸாந்திரியாவில் இருந்து யூதர்கள் தங்கள் இனத்தாருக்கு எதிராகவே பழிதீர்க்க முனைந்தார்கள். தங்கள் தெரிவுகளைச் சரி என்று காட்டும் முகத்தான் மற்றவர்கள்மேல் வன்முறையும், கோபமும் காட்டினார்கள். அடுத்ததாக, தனிநபரின் நாட்டம் மையப்படுத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த குழுமத்தின் நலனைப் பாதிக்கும் என அறிந்திருந்த யாக்கோபு ஒவ்வொருவரும் தங்கள் உள்மனப் போராட்டங்களை வெல்ல அழைக்கின்றார். தொடர்ந்து, சீடத்துவம் பற்றிய தவறான புரிதலைக் கொண்டிருந்த தன் சீடர்களுக்கு 'பெரியவர்நிலை' என்பது 'சிறிதினும் சிறிதில்' இருக்கிறது எனக் காட்டுகிறார் இயேசு. இயேசுவின் இப்புதிய புரிதலை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே, 'என் ஆண்டவரே என் உதவி. அவரே என் வாழ்வுக்கு ஆதாரம்' (காண். திபா 54) என்று பாட முடியும்.

நாம் குழந்தைகள் நிலையிலிருந்து பெரியவர் நிலைக்கு வளர்தல் அவசியம். ஏனெனில், வளர்தலில்தான் மேன்மை இருக்கின்றது. ஆனால், 'நான் மற்றவர்களை விடப் பெரியவர்' என்ற ஒப்பீட்டு உணர்வே களையப்பட வேண்டியது. இந்த உணர்வை நாம் எப்படிக் களைவது?

(அ) பிறருக்கும் எனக்கும் உள்ள வேற்றுமையைப் பாராமல் அவருக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமையைக் காண்பது

பிறரைவிட என்னில் எது வேறுபடுகிறது என்று பார்க்கும்போது அது மேட்டிமை உணர்வைத் தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக, 'நான் ஓர் அருள்பணியாளர். அவர் ஒரு பொதுநிலையினர்' என்று நான் சிந்திக்கும்போது மற்றவரிடமிருந்து நான் எப்படி வேறுபட்டுள்ளேன் என்பதை உறுதிப்படுத்த நான் முனைகின்றேன். ஆனால், 'அவர் ஒரு நம்பிக்கையாளர். நானும் ஒரு நம்பிக்கையாளர்' என்ற நிலையில் நான் அவரோடு ஒரே தளத்தில் நிற்கின்றேன். வேற்றுமை மறக்கின்றேன்.

(ஆ) இன்றியமையாதநிலையுணர்வு விடுத்தல்

'நான் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவும் இல்லை' என்று நினைப்பதே இன்றியமையாதநிலையுணர்வு. இந்த உணர்வினால் நாம் நமக்குரிய இடத்தைத் தக்கவைக்க நினைக்கின்றோம். ஆனால், யாரும் இல்லாமலும் எதுவும் நடக்கும் என்பதை நாம் பெருந்தொற்றுக்காலத்தில் மிகவே உணர்ந்தோம்.

(இ) அடையாளங்கள் விடுத்தல்

குழந்தைகள் தங்களுக்கென்று எந்த அடையாளங்களையும் பற்றிக்கொண்டிருப்பதில்லை. புதிய வீடு ஒன்றைக் கட்டி அதைத் திறக்கும் நிகழ்வுக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அங்கே வருகின்ற 'வளர்ந்தவர்கள்' எல்லாம் ஒவ்வொன்றையும் திறனாய்வு செய்துகொண்டிருப்பார்கள். இது 'ஏசியன் பெயின்ட்ஸ்,' இது 'ஜக்வார்' ஃபிட்டிங்க்ஸ் என்று ஒவ்வொன்றையும் ப்ராண்ட் கொண்டு அறிய முற்படுவார்கள். ஆனால், குழந்தைகளுக்கு அது வெறும் நிறமும் தண்ணீர் வரும் குழாயும்தான். அடையாளங்களை அறிய முயல்பவர்கள், அடையாளங்களாக தாங்கள் மாற விரும்புவார்கள்.

நம் குடும்பத்திலும், குழுமத்திலும், 'நான் பெரியவர்' என்று உணர்வு நம்மில் எழுந்தால், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி, குழந்தை ஒன்றைப் பற்றிக்கொள்தல் நலம். குழந்தைகள் மிகப்பெரிய சமநிலையாளர்கள்.

Friday, September 17, 2021

நல்ல நிலமாக

இன்றைய (18 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 8:4-15)

நல்ல நிலமாக

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் பற்றிய உவமை, (ஆ) உவமைகள் கூறப்படுவதன் நோக்கம், மற்றும் (இ) இயேசு உவமைக்குப் பொருள் தருதல்.

'இறைவார்த்தை' என்பதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவைக் குறிக்கிறது. ஏனெனில், 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14), என்று நம் நடுவே இறங்கி வந்தவர் இயேசு. இயேசுவே இறைவனின் வார்த்தை. இரண்டு, 'இறைவன் சொன்ன வார்த்தை' அல்லது 'இயேசுவின் வார்த்தை அல்லது நற்செய்தி.' இவை இயேசுவின் காலத்தவர்களின் காதுகளில் நேரடியாக அவர் வாயிலிருந்து விழுந்தன. இயேசுவைத் தொடர்ந்த காலத்தில் இவை திருத்தூதர்களால் அறிவிக்கப்பட்டன. நமக்கு இவை விவிலியம் வழியாக வருகின்றன. இறைவார்த்தை பற்றிய விளக்கவுரைகள் மற்றும் மறையுரைகள் வழியாக வருகின்றன. மூன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவின்மேல் ஒருவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. இது அன்றைய காலத்தவர்களுக்கும் நமக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, பாறை நிலம் போல இருப்பவர்கள் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டவுடன் உடனடியாக தங்கள் வாழ்க்கையை மாற்றுவர், ஆலயம் வருவர், திருப்பலி காண்பர். ஆனால், நம்பிக்கை சோதிக்கப்படும்போது அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர்.

மனித வார்த்தைகள் நம்மில் மாற்றம் கொண்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை. மனம் சோர்வுற்று நிற்கும் வேளையில் திடீரென நண்பர் ஒருவர் அழைக்க அவர் பேசும் உற்சாக வார்த்தைகள் நம் உள்ளத்திற்கு எழுச்சி தருகின்றன. அல்லது நாம் கேட்கும் பாடல், வாசிக்கும் புத்தகம் என இவற்றில் நாம் கேட்கும் அல்லது காணும் வார்த்தைகள் ஏதோ ஒரு சலனத்தை உள்ளத்தில் ஏற்படுத்தவே செய்கின்றன.

'ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்னும் இறைவார்த்தையை நான் கேட்கிறேன் என வைத்துக்கொள்வோம். இது என் வாழ்வில் எப்படி பயன் தரும்? 'ஆண்டவரை என் ஆயர் போல ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரையே என் நிறைவு எனக் கொண்டு வாழ்வதன் வழியாகவும் பயன் தரும்.'

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு மடங்கு பலன் கொடுத்ததாக லூக்கா எழுதுகின்றார். மேலும், பலன் கொடுப்பதற்கான மூன்று படிகளையும் அவரே முன்மொழிகின்றார்: (அ) நல் உள்ளத்தோடு கேட்டல், (ஆ) கேட்டதைக் காத்தல், (இ) மனவுறுதியுடன் இருத்தல்.

மேற்காணும் உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.

'ஆண்டவரே என் ஆயர்' என்பதை நான் நல் உள்ளத்தோடு, அதாவது, திறந்த மனத்தோடு, கேட்கிறேன். கேட்டல் என்பது கீழ்ப்படிதலையும் குறிப்பதால், ஆண்டவரை என் ஆயராக நான் ஏற்றுக் கீழ்ப்படிகிறேன். தொடர்ந்து, நான் கேட்டதைக் காத்துக்கொள்கின்றேன். நான் பார்க்கும் வேலை, அல்லது என் நண்பர் போன்றவை தங்களையே 'ஆயர்' என முன்மொழிந்தாலும், நான் அவற்றை மறுத்துவிட்டு ஆண்டவரையே பற்றிக்கொள்கின்றேன். மூன்றாவதாக, நான் பற்றிக்கொண்டதில் மனவுறுதியாக இருக்கின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உவமை தருகின்ற செய்தி இதுதான்: விதை ஒருபோதும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. நிலம் தான் எப்படி இருக்கிறோம் என்பதை தானே வரையறுத்துக்கொள்ள முடியும். விதைப்பவரும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. கடவுள் நம் தனிமனித விருப்புரிமையை, ஆன்மிகக் கட்டின்மையை மதிக்கின்றார். நான் என்னையே மாற்றிக்கொள்வதன் வழியாக விதையை ஏற்றுக் கனி தர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், தன் மகன் திமொத்தேயுவிடம், 'எந்தவிதக் குறைச்சொல்லுக்கும் ஆளாகாமல் நம்பிக்கையைக் காத்து வா!' எனக் கட்டளையிடுகின்றார்.

கேட்டு, காத்து, மனவுறுதியுடன் இருக்கின்ற திமொத்தேயு நிறையவே பலன் தருகின்றார்.

Thursday, September 16, 2021

இயேசுவின் உடனுழைப்பாளர்கள்

இன்றைய (17 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 8:1-3)

இயேசுவின் உடனுழைப்பாளர்கள்

மற்ற நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத ஒரு குறிப்பை லூக்கா நற்செய்தியாளர் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பதிவு செய்கின்றார். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார் என்று சொல்கின்ற லூக்கா, அவருடைய பணியில் பன்னிருவரும், பெண்கள் சிலரும் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கூறுகின்றது:

(அ) தனியாய் எவரும் சாதிப்பதில்லை

சாதனைகள் பெரும்பாலும் சாதிப்பவர்களால் மட்டுமே நடப்பதாக நாம் பார்க்கின்றோம். ஆனால், சாதிப்பவர்களுடன் இருக்கும் பலராலேயே சாதனை சாத்தியமாகிறது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுவது முதல், நம் வீட்டில் அடுப்பில் அரைப்படி அரிசியைச் சோறாக்கி இறக்கி வைப்பது வரை மற்றவர்களும் நம் சாதனையில் பங்கேற்கின்றனர். அடுப்பில் பொங்கும் சோறு நம் உழைப்புதான் என்றாலும், அரிசியை விளைவித்தவர், விற்றவர், வாங்கியவர், எரிவாயு, அடுப்பு என எல்லாவற்றிலும் மற்றவர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. இதை நன்றாக அறிந்தவர் இயேசு. ஆகையால்தான், தன் பணியில் தனக்கென உடனுழைப்பார்களாக திருத்தூதர்களை ஏற்படுத்துகின்றார். மற்றவர்களை மதிக்கும் திறன், மற்றவர்களுடன் பணிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வம், மற்றவர்களுடைய உடனிருப்பைக் கொண்டாடும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே உடனுழைப்பாளர்களைத் தங்களுடன் வைத்துக்கொள்வர்.

(ஆ) இறையாட்சிப் பணியில் சமத்துவம்

லூக்கா நற்செய்தி ஆண்-பெண் சமத்துவத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆணுக்கும் கதையாடல் பொருத்தமாக பெண் இருப்பார். சக்கரியாவுக்கும் மரியாவுக்கும் காட்சி, சக்கரியாவுக்கும் மரியாவுக்கும் ஒரு பாடல், காணாமல் போன ஆட்டைத் தேடும் ஆண் - நாணயத்தைத் தேடும் பெண் என எல்லாவற்றிலும் ஆண்-பெண் இணைவைப் பயன்படுத்துகின்றார் லூக்கா. அவ்வரிசையில் இயேசுவுடன் இருந்த பன்னிரு ஆண்களுக்கு இணையாக பெண்கள் சிலரைக் குறிப்பிடுகின்றார். பன்னிவரும் இயேசுவோடு உடனிருக்கின்றனர். பெண்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்

(இ) ஒவ்வொருவரும் தத்தம் நிலையில் தமக்குரியதைப் பகிர முடியும்

லூக்காவின் பட்டியலை ஆராய்ந்து பார்த்தால் அங்கே பலதரப்பினர் இருப்பதைப் பார்க்கின்றோம். இயேசுவால் பயன்பெற்றவர்கள், நலம் பெற்றவர்கள், அரண்மனையில் வேலை பார்ப்பவர்கள், பேய்கள் நீங்கியவர்கள் என இவர்கள் தாங்கள் பெற்றதற்கு நன்றிக்கடன் செலுத்தினார்கள். அல்லது இயேசுவின்மேல் கொண்ட தனிப்பட்ட அக்கறையினால் அவரைப் பின்தொடர்ந்தனர். இவர்கள் எத்தரப்பினராக இருந்தாலும் இவர்களின் இணைப்புப் புள்ளி இயேசு. தாம் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் அவர்கள் பணிவிடை செய்தனர்.

இன்று இறையாட்சிப் பணியில் நாமும் துறவுநிலையில் அல்லது பொதுநிலையில் பங்கேற்கின்றோம். நாம் நம் உடனிருப்பையும் உடைமையையும் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றோமா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 6:2-12), 'பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்' என்கிறார் பவுல். ஆனால், பொருளை தீமையின் ஆணிவேர் என்று பார்க்காமல், அப்பொருளை இறையாட்சிப் பணிக்கான முதலீடாக மாற்றுகின்றனர் இயேசுவோடு உடனிருந்த பெண்கள்.

எப்படி அவர்களால் மாற்ற முடிந்தது?

அவர்கள் கொண்டிருந்த இறைப்பற்றினால்தான்.

'இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான். ஆனால், மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்' என்கிறார் பவுல். மனநிறைவுள்ளவர்கள் தங்களுக்கென எந்தப் பற்றுகளையும் கொண்டிருப்பதில்லை. ஏனெனில், பற்றற்றான் பற்றே அவர்களுடைய பற்றாக மாறிவிடுகிறது.


Wednesday, September 15, 2021

பாவியே பாடமாக

இன்றைய (16 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 7:36-50)

பாவியே பாடமாக

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன் இல்லத்தில் ஏற்று விருந்தோம்பல் செய்கின்றார். விருந்துக்கு அழைக்காமல் உள்ளே வந்த பாவியான பெண் ஒருவர் அனைவருக்கும் பாடமாக மாறுகின்றார்.

இந்தப் பெண் நமக்கு மூன்று வாழ்வியல் பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) அடுத்தவர் இடும் முத்திரை பற்றிக் கவலைப் படாதே!

'விருந்துக்குப் போனால் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்?' என்ற கவலை அந்தப் பெண்ணுக்குச் சிறிதும் இல்லை. ஏனெனில், வாழ்க்கை முழுவதும் மக்கள் தனக்கு இட்ட முத்திரை பற்றி அவள் ஒன்றும் கவலைப்படவில்லை. மற்றவர்கள் தனக்கு முத்திரை இட்டாலும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க இந்தப் பெண் முயற்சிக்கவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு, அப்படியே தொடர்ந்து பயணம் செய்கின்றாள். இப்படிச் செய்வதற்கு நிறையத் துணிச்சல் தேவை.

(ஆ) தன்னை முற்றிலும் மன்னிக்கின்றார்

பல நேரங்களில் கடவுள் நம்மை மன்னிக்கின்றார். மற்றவர்கள் நம்மை மன்னிக்கின்றனர். ஆனால், நாம் தான் நம்மை மன்னிப்பது இல்லை. கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒரு பெரிய மூட்டையாக, நத்தை தன் கூட்டைச் சுமப்பதுபோல, ஒட்டகம் தன் முதுகைச் சுமப்பது போலச் சுமந்துகொண்டே வருகின்றோம். குற்றவுணர்வினாலும் பயத்தினாலும் ஆட்கொள்ளப்படுகின்றோம். நற்செய்தியில் நாம் காணும் இந்தப் பெண் தன்னையும், தன் கடந்த காலத்தையும் மன்னிக்கின்றார்

(இ) தன் முதன்மைகளைச் சரி செய்கின்றார்

விருந்தினர் இல்லங்களில் மற்றவர்களை மகிழ்வித்துப் பழகிப் போன இந்தப் பெண், இப்போது தன் கண்களை இயேசுவின்மேல் மட்டுமே பதிய வைக்கின்றாள். தன் முதன்மைகளைச் சரி செய்துவிட்ட இவள் மீண்டும் தன் பழைய வாழ்க்கை நோக்கிச் செல்லவில்லை. இவளுடைய இந்தத் திடமான மனது நமக்கு ஆச்சர்யம் தருகின்றது

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 4:12-16), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த தன் அன்புப் பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற பவுல், 'இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்;த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' என அறிவுறுத்துகின்றார்.

பாவியான அந்தப் பெண் தான் பெற்ற அருள்கொடை பற்றி மிகவும் அக்கறையுடன் இருந்தாள்

நாமும் ஆண்டவரின் அருள்கொடையைப் பெற்றிருக்கின்றோம். ஆனால், அக்கறையுடன் இருக்கின்றோமா? அக்கறையின்றி அக்கரைக்குச் செல்தல் சாத்தியம் இல்லை. பாவியான அந்தப் பெண் தன் கண்ணீராலும் நறுமணத் தைலத்தாலும் அக்கரைக்குச் செல்கின்றாள்.


Tuesday, September 14, 2021

மரியின் ஏழு துயரங்கள்

இன்றைய (15 செப்டம்பர் 2021) திருநாள்

மரியின் ஏழு துயரங்கள்

இன்று நாம் அன்னை கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நினைவுகூருகின்றோம். கிபி 1232ஆம் ஆண்டில் தொஸ்கானா பகுதியின் ஏழு இளவல்கள் ('மரியின் ஊழியர்கள்') தங்களுடைய 'மரியின் ஊழியர் சபையை' தோற்றுவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மரியின் ஏழு துயரங்களை நினைவுகூர்ந்தவர்களாக, சிலுவையின் அடியில் நிற்கின்ற அன்னை கன்னி மரியாவைத் தங்களுடைய பாதுகாவலியாக ஏற்றுக்கொண்டனர். ஏழு துயரங்களின் செபமாலை, ஏழு துயரங்களின் உத்தரியம், துயர்மிகு அல்லது வியாகுல அன்னைக்கான நவநாள் போன்ற பக்தி முயற்சிகளையும் இவர்கள் தோற்றுவித்தனர்

1913ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி, அதாவது, திருச்சிலுவை மகிமையின் திருவிழாவுக்கு அடுத்த நாள் கொண்டாடுமாறு வழிபாட்டு ஆண்டை நெறிப்படுத்தினார்

மரியின் ஏழு துயரங்களாக திருஅவை பின்வருவனவற்றை முன்மொழிகின்றது: (1) சிமியோனின் இறைவாக்கு, (2) எகிப்துக்குத் தப்பி ஓடுதல், (3) இளவல் இயேசு எருசலேம் ஆலயத்தில் காணாமற்போதல், (4) சிலுவைப் பாதையில் இயேசுவைச் சந்தித்தல், (5) இயேசு சிலுவையில் அறையப்படுதல், (6) இறந்த இயேசுவைத் தன் மடியில் வளர்த்தல், மற்றும் (7) இயேசுவின் அடக்கம்.

இத்திருவிழா நமக்குத் தருகின்ற செய்தி என்ன?

(அ) துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம்

குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுக்கும் நிகழ்வில் சிமியோன் மரியாவைப் பார்த்து, 'இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் ... உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்' என்கிறார் (காண். லூக் 2:34). சிமியோனின் வார்த்தைகளின் தொனியை வைத்துப் பார்க்கும் போது, 'இருந்தாலும் ... உம் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும்' என்று அவர் சொல்வது போல இருக்கிறது. அதாவது, 'நீ மீட்பரின் தாயாக இருந்தாலும் துன்பம் உனக்கும் இருக்கும்!' பாவத்தின் வழியாகவே துன்பம் வருகின்றது என்று நாம் தொடக்கநூலில் பார்க்கின்றோம். ஆனால், பாவம் அறியாத மரியா துன்பம் ஏற்கின்றார். ஆன்மிக நிலையில் அவர் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர் என்றாலும், மனித வாழ்வின் எதார்த்த நிலையில் அவர் துன்பங்களை அனுபவிக்கின்றார். ஆக, துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம். இயேசுவின் துன்பம் நம் பாவங்களுக்காக என்று பல நேரங்களில் நாம் இறையியலாக்கம் செய்கின்றோம். ஆனால், மரியாவின் துன்பங்களை நாம் அப்படி இறையியலாக்கம் செய்வதில்லை. மரியா இயேசுவுக்காகவோ, அல்லது நமக்காகவோ துன்புற்றார். அவ்வளவுதான்! அதுதான் எதார்த்தம். பிள்ளைகள் பெற்றோர்களுக்காக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக துன்பங்கள் அனுபவிப்பதாக நாம் சொல்வது அனைத்தும் தவறு. நாம் யாரும் யாருக்காகவும் துன்பங்கள் அனுபவிக்க முடியாது. நாம் துன்பங்கள் அனுபவிக்கிறோம்! அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு புரிதல் வந்தால்தான் நாம் துன்பத்திற்கு ஆன்மிக அல்லது அறநெறிச்சாயம் பூசுவதை நிறுத்துவோம்.

(ஆ) துன்பம் ஒரு மேலான உணர்வு

'சிரிப்பை விடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம். ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்' என்கிறார் சபை உரையாளர் (காண். சஉ 7:3). துன்புறுதல் என்பது செயல். துயரம் அல்லது துன்பம் என்பது ஓர் உணர்வு. எடுத்துக்காட்டாக, நான் வழியில் செல்லும்போது கால் பிசகிவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது நான் துன்புறுகிறேன். கால் சரியாகிவிட்டால் துன்பம் மறைந்துவிடுகின்றது. ஆக, துன்பம் அல்லது துயரம் என்பது துன்புறுதல் என்னும் செயல் இருக்கும் வரை இருக்கின்றது. என் அப்பா இறந்தபோது நான் துன்பமுற்றேன். ஆனால், அவரின் இழப்பு அப்படியே ஒரு துயரமாக என் மனத்தில் படிந்துவிடுகிறது. துன்பமுறுதல் என்னும் செயல் ஒரு நாளில் முடிந்தாலும் அது உணர்வாக இன்றுவரை நீடிக்கிறது. மரியாவின் துயரம் நமக்கு இத்தகைய உணர்வைத்தான் சொல்கிறது. துயரம் என்பது ஓர் உணர்வு. இந்த உணர்வு உள்ளத்தைப் பண்படுத்தும் அல்லது உழும். அதாவது, உழும்போது நிலத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நிலம் புதிய காற்றைச் சுவாசிக்கின்றது. விதையையும், உரத்தையும், நீரையும் தன்னகத்தே எடுத்துக்கொள்கிறது. நாம் துன்புறும்போதும் உள்ளத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நாம் புதிய அனுபவங்களை உள் வாங்குகிறோம். அந்தக் கீறல் வழியாகவே நாம் நம்மையே முழுமையாகப் பார்க்கின்றோம். ஆதாம்-ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோர் இன்பத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே, ஆதாம் தன் மனைவி ஏவாளுக்கு, 'தாய்' என்ற பெயரைக் கொடுக்கின்றார். அதாவது, காயினைப் பெற்றெடுக்கும் முன்னரே ஏவாள் 'தாய்' என்னும் பெயர் பெறுகிறாள். துன்பம் ஏற்கும் எவரும் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்கின்றனர்.

(இ) துன்பம் என்பது நினைவு

நம் நினைவுகளே துன்பமாக மாறுகின்றன என்று இந்திய மெய்யியல் கற்பிக்கின்றது. எடுத்துக்காட்டாக, நம் சுண்டு விரல். இது என்றாவது நம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், கதவுக்கு இடையில் அதைக் கொடுத்து நாம் நசுக்கிவிட்டால், அது எந்நேரமும் நம் நினைவில் நிற்கிறது. ஆக, துன்பம் என்ற உணர்வு மட்டுமே நம் நினைவில் நிற்கிறது. நான் அணியும் செருப்பு என் காலுடன் பொருந்திவிட்டால் அதை நான் நினைப்பதே இல்லை. அது பொருந்தவில்லை என்றால் அது எப்போதும் என் நினைவில் இருக்கிறது. ஏனெனில், அது எனக்கு வலியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆக, பொருந்துகின்ற ஒன்று வலி தருவதில்லை. வலி தராத ஒன்று நம் நினைவில் நிற்பதில்லை. துயரப்படுகிறவர்கள் மது அருந்தக் காரணம் என்ன? அல்லது வாழ்வில் இழப்பை அனுபவிப்பவர்கள் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லக் காரணம் என்ன? தங்களுடைய நினைவுகளை மறக்கவும் மாற்றவும்தான்

அன்னை கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நாம் வெறுமனே போற்றிப் புகழ்ந்து அவரை அந்நியப்படுத்திவிட வேண்டாம். அவை வெறும் மறையுரைக் கருத்துகள் அல்ல. மாறாக, அவர்கள் நகர்ந்து வந்த வாழ்க்கைப் பாதைகள்

நம் உள்ளத்தை, உடலை, நினைவை பல வாள்கள் அன்றாடம் ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டும், சிலவற்றுக்கு மருந்திட்டும், சில வாள்களை அப்படியே தூக்கிக்கொண்டும், சில வாள்களைப் பிடுங்கும்போது பாதி வாள் உடைந்தும் பாதி வாள் இன்னும் நம் உடலில் மாட்டிக்கொண்டும், காயத்தின் ரணங்களோடு நாம் நடந்துகொண்டே இருக்கின்றோம். துன்பமும் இன்பமும் மாறி மாறி வரக் கூடிய எதார்த்தங்கள். ஆனால், துன்பமே நீடித்த, உண்மையான எதார்;த்தம். எனக்கு ருசியாக இருந்து எனக்கு இன்பம் தரும் உணவு அஜீரணமாக மாறினால் துன்பம் வந்துவிடுகிறது. பசி என்னும் துன்பம் நான் உணவு உண்டவுடன் மறைந்துவிடுகிறது.

இன்பம் தருகின்ற ஒன்று கண்டிப்பாகத் துன்பமாக மாறும்.

துன்பம் தருகின்ற ஒன்று துன்பமாகவே நீடிக்கிறது. இன்பத்திற்குப் பின்னரும்!


Monday, September 13, 2021

திருச்சிலுவை மகிமை


இன்றைய (14 செப்டம்பர் 2021) திருநாள் 

திருச்சிலுவை மகிமை

'யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது' என்கிறார் புனித பவுல் (காண். 1 கொரி 1:23).

இன்று, 'திருச்சிலுவையின் மகிமை' திருவிழாவைக் கொண்டாடுகின்றோம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிடமும் இருப்பதாக!' என்று பிலிப்பியருக்கு அறிவுரை வழங்கும் பகுதியில், கிறிஸ்து இயேசுவின் மனநிலை எப்படிப்பட்டது என்பது ஓர் அழகான பாடல் வழியாக எடுத்துரைக்கின்றார். தொடக்கத் திருஅவையின் தொடக்கத்தில் வழக்கத்திலிருந்த இப்பாடல் இயேசுவைப் பற்றிய மூன்று விடயங்களை எடுத்துரைக்கின்றது:

ஒன்று, இயேசு அடிமையின் வடிவம் ஏற்றார். அதாவது, தலைவராக இருந்தவர் அடிமையாக மாறினார். பவுலின் காலத்தில் அடிமைகள் தங்களுக்கென்று எந்தவொரு பெயரோ, அடையாளமோ இல்லாதவர்கள். கடவுள் தன்மையைக் கொண்டிருந்த இயேசு அதை விடுத்துவிட்டு அடிமையின் வடிவம் ஏற்கின்றார். 

இரண்டு, மனிதரின் உருவம் என்பது இயேசுவின் மனுவுருவாதலைக் குறிக்கின்றது. இங்கே இயேசு வெறும் உருவமாக அல்ல, மாறாக, உண்மையாகவே முழு மனிதநிலையை ஏற்கின்றார். துன்பத்தை ஏற்கும் நிலையில் அவரின் மனிதத்தன்மை வெளிப்படுகின்றது.

மூன்று, சிலுவையின் மரணம். சிலுவை என்பது உரோமையர்கள் கண்டுபிடித்த ஒரு கொலைக் கருவி. சிலுவையில் அறைதல் என்பது பெரிய அவமானமாகக் கருதப்பட்டது. 

ஆனால், இந்த மூன்றும் தலைகீழாக மாறுகின்றன.

தாழ்த்தப்பட்ட ஒன்று உயர்த்தப்படுகிறது.

காயப்பட்ட ஒன்று குணப்படுத்துகிறது.

வீழ்ச்சியுற்ற ஒன்று எழுச்சியடைகிறது.

கடவுள் என்னும் பெயரை ஒதுக்கி வைத்தவர், அடிமை போலத் தன் பெயரை இழந்தவர், மனிதர்போல தன் பெயரின் தான்மை தெரியாத இயேசுவின் பெயர் உயர்ந்த பெயராக அவர்களுக்குத் தரப்படுகின்றது.

இன்றைய திருநாள் நமக்குச் சொல்வது என்ன?

(அ) முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் சொல்வது போல, இயேசுவை உற்று நோக்கும் அனைவரைம் நலம் பெறுவர்.

(ஆ) சிலுவை என்பது மாற்றம் நடக்கும் என்னும் எதிர்நோக்கைத் தருகின்றதே அன்றி, உத்தரவாதம் தருவதில்லை.

(இ) நம் வாழ்வில் சிலுவை என்பது பல வடிவங்களில் வருகின்றன. அவற்றை நோக்கு நம் கண்களை எழுப்பும்போதெல்லாம் இந்த நாளின் பொருளை நாம் உணர்கின்றோம்.