Monday, March 30, 2015

யாரும் ஏறாத கழுதை!

நேப்பிள்ஸ் நகர்வாழ் இலங்கைத் தமிழர்களோடு இணைந்து குருத்து ஞாயிறு கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது இன்று. நீண்ட நாளைக்குப் பின் இத்தாலிய நாட்டில் தமிழ்த்திருப்பலி வைக்கும் வாய்ப்பாக இருந்ததால்இ திருப்பலியின் போது நான் பணிசெய்த எல்லீஸ்நகர்இ ஞானஒளிவுபுரம்இ தேனி பங்குத்தளங்களும்இ பங்கு மக்களும் நினைவில் வந்து போனார்கள். இந்த ஒரு அனுபவத்திற்காகவே என் உள்ளமெல்லாம் ஊருக்குத் திரும்பத் துடிக்கிறது.

'யாரும் ஏறாத கழுதை!'

கழுதையைப் பற்றிய இந்தக் குறிப்பை மையமாக வைத்துதான் இன்று மறையுரையாற்றினேன்.

இயேசு பயணம் செய்தது புத்தம் புது கழுதை.

மத்தேயு நற்செய்தியாளர் மட்டும் இந்தக் குறிப்பை வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அதாவதுஇ 'குட்டியை அதன் தாயோடு கட்டியிருக்கக் காண்பீர்கள்!' - ஆகஇ தாயைவிட்டு இன்னும் பிரியாத ரொம்பக் குட்டிக் கழுதை.

'குட்டியா இருந்தா கழுதைகூட அழகாதான் இருக்கும்னு!' நம்ம ஊர்ல சொலவடை சொல்வாங்க.

ஆகஇ இயேசு பயணம் செய்தது ஒரு சின்னஇ குட்டியானஇ அழகானஇ இளம் கழுதை. யாரும் ஏறாத கழுதை.

இந்த மாதிரி வாய்ப்பு நமக்குக் கிடைச்சிருக்கா?

யாரும் பயன்படுத்தாத செல்ஃபோன்.
யாரும் ஓட்டாத பைக்.

யாரும் குடியிருக்காத வீடு.

யாரும் பயன்படுத்தாத புத்தகம்.

யாரும் திறக்காத ஒயின் பாட்டில்.

யாரும் பயன்படுத்தாத கம்ப்யூட்டர்.

யாரும் பயன்படுத்தாத டவல்.

யாரும் பயன்படுத்தாத பெட்ஷீட்.

யாரும் பயன்படுத்தாத சோப்பு.

யாரும் ஏறாத கழுதையின் அர்த்தம் என்னன்னா?

அந்தக் கழுதை முழுக்க முழுக்க இயேசுவுக்காக மட்டுமே காத்திருந்தது.

கடவுளின் பராமரிப்பு இதுதான். அவருடைய பராமரிப்பில் 'அடுத்தவர் பயன்படுத்தியது போக மற்றது உனக்கு!' என்ற சித்தாந்தமே கிடையாது. நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு பயன்படுத்தாத கழுதைஇ நமக்குன்னு என்று மட்டும் நிறைய நல்ல விஷயங்களை அவர் கொடுக்கவே செய்கிறார்.

இதைக் கண்டுபிடிக்கிறது ரொம்ப முக்கியமான ஒன்று.

'போய் இந்த மாதிரி ஒரு கழுதையை அழைத்து வாருங்க!' அப்படின்னு இயேசு தன் சீடர்களிடம் சொன்னபோது அவர்கள் ரொம்ப ஆச்சர்யமாகத்தான் பார்த்திருப்பார்கள். 'இப்படி ஒரு கழுதையை எங்க போயி தேடுறது!' அப்படின்னு கூட நினைச்சிருப்பாங்க. ஆனாஇ இயேசு உறுதியாக இருந்தார்.

இதுல இன்னொரு விஷயம்.

நமக்குன்னு நடக்குறது எப்படியா இருந்தாலும் நடக்கும்!

'எந்த அரிசியில நம்ம பேரு எழுதியிருக்கோ அந்த அரிசிதான் நம்ம தட்டுக்கு சோறா வரும்!' அப்படின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க.

ஆகஇ நமக்குன்னு இருக்கிற கழுதை நமக்குதான். அது உரிமையாளரிடம் இருந்தாலும் அது நம் பயன்பாட்டிற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவேஇ இன்னைக்கு ஒன்னு கத்துகிட்டேன். லைஃப்ல நமக்கு எந்தக் கழுதை அல்லது எந்த வாய்ப்பு அல்லது எந்த ஆற்றல் அல்லது எந்த உறவு கிடைக்குமோ அது மட்;டும்தான் கிடைக்கும். நாமலா கழுதைகளைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. நேரம் வரும்போது 'யாரும் ஏறாத கழுதை நம்மிடம் வரும்'. நாமும் பவனி செல்வோம்.

இதை இன்னொரு விதமாகப் பார்த்தால் அடுத்தவருக்குரிய கழுதையை நாம் வைத்திருக்க நினைப்பதும் சால்பன்று.


Saturday, March 28, 2015

ஜன்னல் அருகே இடம்

இறங்க வேண்டிய இடம் வரும்போது பேருந்தில் ஜன்னல் அருகே இடம் கிடைப்பது போலத்தான் நம் வாழ்வில் சில உறவுகள் கிடைக்கின்றன. கொஞ்சம் முன்னாலே கிடைத்திருக்கலாமே என்ற ஏக்கத்தைத் தருகின்றன இந்த உணர்வுகள்.

இயேசுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

அவரின் இறப்பு நெருங்கும் போதுதான் அவர் சொல்வதன்படி எல்லாமே நடக்கிறது. அவர் ஏறிச்செல்வதற்கு 'யாரும் ஏறாத' கழுதை கிடைக்கிறது. சீடர்களோடு பாஸ்கா கொண்டாட மேலறையில் இடம் கிடைக்கிறது. செபிப்பதற்கு ஒலிவத் தோட்டத்தில் இடம் கிடைக்கிறது. கலிலேயாவைச் சார்ந்த ஒரு வீதியோர போதகருக்கு எருசலேம் தலைமைச் சங்கத்தையும், அந்த சங்கத்தின் தலைவர் தலைமைக்குரு மற்றும் அவரின் சகாக்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உரோமை ஆளுநன் பிலாத்து நேருக்கு நேர் நின்று இவரோடு பேசுகிறார். இப்படி ரணகளத்திலும் இயேசுவுக்கு நல்லதெல்லாம் நடக்கத் தொடங்குகிறது.

இதுல இருந்து என்ன தெரியுது? நம்ம வாழ்வுல எல்லாம் நல்லா நடக்க ஆரம்பிச்சதுன்னா, நம்ம முடிவு நெருங்கிடுச்சுனு சொல்லலாமா? இல்லை! நம் வாழ்வில் கெட்டது என்று எதுவும் இல்லை. எல்லாம் நல்லவற்றின் பிரதிபலிப்பு என்றுதான் நான் நினைக்கிறேன். சில நேரங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? 'நாம சாதிக்கணும்னு காலையில எழுந்திருக்கும்போது, நம்ம கடவுள் நம்மைச் சோதிக்கணும்னு எந்திரிக்கிறாரோ!' என்று தோன்றும். ஆனா, எந்த நேரத்திலும் 'ஜன்னல் ஓர இருக்கை' கிடைக்கும் என்பதுதான் இயேசுவின் பாடுகள் நமக்குச் சொல்லும் பாடம். ஆகையால் தான் சிலுவையில் இறக்காத ஒரு கடவுளை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடிவதில்லை.

நாளை குருத்து ஞாயிறோடு ஆண்டவரின் திருப்பாடுகளின் வாரத்திற்குள் நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.

இந்த நாற்பது நாள்கள் விரதம் இருக்க நினைச்சு நமக்குத் தெரியாமலேயே சாப்பிட்டுவிட்டாலோ, இறைச்சி சாப்பிடக்கூடாது என நாம் நினைத்திருக்க, நம் நண்பரின் வீட்டு காதுகுத்து ஃபங்ஷனில் 'ஆட்டிறைச்சி குழம்பு' சாப்பிட்டிருந்தாலோ, 'இந்த வாரமாவது ஒழுங்கா இருக்கணும்னு!' யோசித்திருப்போம். அல்லது 'இந்த வாரத்திற்கன்று சிறப்பான' முடிவுகளை எடுத்திருப்போம். எது எப்படி இருந்தாலும் எல்லாமே நல்லா இருக்கட்டும். எல்லாமே நல்லா இருக்கும்!

இயேசு எருசலேம் நகருக்குள் நுழைவதற்குப் பயன்படுத்தப்படும் வாகனம் 'கழுதை'. இயேசுவின் எருசலேம் நுழைவு பற்றி மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் எழுதுகின்றனர். ஆனால் யோவான் இதைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை. ஒத்தமைவு நற்செய்தியாளர்களின் பதிவுகளிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த இடத்தில் மத்தேயு செப்பனியா இறைவாக்கினரின் இறைவாக்கைப் பற்றி எழுதுகின்றார். கழுதைக்குட்டியை அவிழ்க்கும்போது மாற்கு நற்செய்தியில் அங்கே நின்றுகொண்டிருக்கும் சிலர் 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' எனக் கேட்கின்றனர். லூக்கா நற்செய்தியில் அதே கேள்வியை கழுதையின் உரிமையாளர் கேட்கின்றார்.

இதுல ரெண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டியவை:

1. 'எல்லாம் என்னோடது!' என்னும் இயேசுவின் சித்தாந்தம். ஏதோ ஒரு வீட்டில் கட்டப்பட்டிருக்கும் கழுதையைத் தன் கழுதை என நினைக்கிறார் இயேசு. யாரோ ஒருவரின் வீட்டின் மேலறையைத் தன் அறை என்கிறார். யாரோ ஒருவர் கொண்டு வந்த அப்பத்தை 'என் அப்பம்' என்கிறார். 'எதுவுமே எனக்கில்லை' என்று சொல்பவரும், 'இது என்னுடையது' என்று எதையும் பற்றிக்கொள்ளாத ஒருவர் மட்டுமே இந்த மிக உன்னதமான நிலையை அடைய முடியும். இந்த எண்ணம் உருவாகக் காரணம் 'கடவுள் என்னைப் பராமரிப்பார்' என்னும் எண்ணம் மட்டுமே.

2. 'எதுவும் என்னோடதில்லை!' என்னும் கழுதை உரிமையாளரின் சித்தாந்தம். இன்னைக்கு நினைச்சுப் பாருங்களேன். நம்ம வீட்டுல நாம பயன்பாட்டிற்கு வைத்திருக்கின்ற ஒன்றை அல்லது இருக்கின்ற ஒன்றை திடீரென்று யாராவது எடுத்துக் கொள்ள வந்தால் நம் செயல்பாடு எப்படியிருக்கும்? 'கழுதையை அவிழ்க்கும் நிகழ்வு' ஒரு சுவராஸ்யமான விஷயம். முதலில் சரியான கழுதையை அடையாளம் காணுவது. இன்னொன்று இன்னொருவருக்காக அவிழ்ப்பது. இன்றைக்கு கிராமங்களுக்குச் சென்றோமென்றால் கழுதை உரிமையாளரின் சித்தாந்தம் கொண்ட மக்கள் நிறைய பேரைப் பார்க்கலாம். இன்னும் எங்க ஊரில் யார் வீட்டுக்குள்ளயாவது நுழைவதற்கு முன் பக்கத்து வீட்டுத் தண்ணீர் தொட்டியில் கூட தண்ணீர் எடுத்து உங்கள் பாதங்களைக் கழுவிக் கொள்ளலாம். நாய்க்குட்டிகளுக்கு எல்லா வீட்டிலம் சாப்பாடு கிடைக்கும். அவசரத்துக்கு பக்கத்து வீட்டுல குழம்பு வாங்கிக்கொள்ளலாம். மேலும் கிராமத்தில் யாரும் காணாமற்போவது இல்லை. வழி தவறி ஒரு குழந்தை சென்றாலும், 'இது யாரோட குழந்தை?' என்று எல்லாரும் கேட்பார்கள். ஒரே மாதிரி நிறத்தில் இரண்டு பூனைகள் இருந்தாலும் தங்கள் பூனை எது என்பதைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

'எல்லாம் என்னோடது!' என்ற இயேசுவின் மனப்பான்மையும். 'எதுவும் என்னோடதில்லை!' என்னும் கழுதை உரிமையாளரின் மனப்பான்மையும் தான் திருப்பாடுகளின் வாரம் எனக்குத் தரும் செய்தியாக நான் உணர்கிறேன்.

இந்த இரண்டு சித்தாந்தங்களிலும் ஆபத்தும் இருக்கின்றது. நம்மைச் சுற்றி நடக்கிற திருட்டு, கொலை, பாலியல் மற்றும் உடல் வன்முறை அனைத்திற்கும் காரணம் 'எல்லாம் என்னோடது! அல்லது எனக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு!' என்னும் மனநிலைதான். 'எதுவும் என்னோடதில்லை!' என்ற மனப்பாங்கு சில நேரங்களில் பொறுப்புணர்வு இல்லாத ஒரு வாழ்வுக்கும் நம்மைத் தூண்டிவிடலாம். ஆக, இந்த ஆபத்துக்களை நினைவில் வைத்துக்கொள்வதும் அவசியம்.
'என்னோடது!' - 'உன்னோடது!' என்னும் பேதம்தான் துன்பம்.

'எங்களுடையது!' 'உன்னுடையது!' என்று தலைமைக்குருக்களும், அரசியல் சக்திகளும் பிரித்துப் பார்த்ததால் தான் இயேசுவுக்கு சிலுவைச்சாவு கிடைத்தது.

பாடுகளின் வாரத்திற்குள் நுழையும் நமக்கு நாம் இன்று முதன்முதலில் சொன்னது நினைவிருக்கட்டும்.

இறங்க வேண்டிய இடம் வரும்போது ஜன்னல் அருகே இருக்கை கிடைப்பது போல, நல்லவைகளும் நடக்கும். கொஞ்ச நேரமாவது இருக்கையில் அமர்ந்து விட்டு இறங்குவோம்!



Friday, March 27, 2015

உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை!

கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், 'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்று சொன்னார். இதை இவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்று சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். (யோவான் 11:49-52)

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை!' என்ற வார்த்தைகளோடு தொடங்குகிறது தலைமைக்குரு கயபாவின் உரையாடல்.

'மத்தவங்களுக்கு எதுவும் தெரியாது, எனக்குதான் எல்லாம் தெரியும்!' என்பது இயல்பாகவே சாமியார்களுக்கு இருக்கும் எண்ணம். 'கடவுள் வேறு துணைக்கு இருப்பதால்' இதை ரொம்ப ஆணித்தரமாகவே சொல்வார்கள்.

'உங்களுக்கு எதுவும் தெரியாது!' என்று சொல்வதன் மூலம் மறைமுகமாகத் தனக்குத் தெரிந்ததை 'உண்மை' எனச் சொல்லுகின்றார் கயபா.

தலைமைக்குரு என்றால் இந்தக்காலத்தில் போப்பாண்டவர் மாதிரி. முதன்மைக்குருக்கள் என்றால் கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் மாதிரி. குருக்கள் என்றால் இப்போ இருக்கிற நம்ம பங்குச்சாமியார் மாதிரி.

என்ன ஒரு பிறழ்வு பாருங்கள்? இயேசு என்ற கடவுள்-மனிதனைக் கொல்லத் துணிவது குருத்துவமும், ஆன்மீகம்தான்.

கயபாவின் இறைவாக்கு ஒரு பொய்யான இறைவாக்கு. ஏனெனில் இயேசு தன் இனத்திற்காக இறப்பதாகச் சொல்கிறார். ஆனால், இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாத ஒரே இனம் இயேசு பிறந்து வாழ்ந்த யூத இனம்தான்.

வேண்டுமானால் இப்படி எடுக்கலாம். சாக்ரடிஸ் அவரின் சமகாலத்து இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, இளைஞர் இனம் காக்கப்பட வேண்டுமானால், சாக்ரடிஸ் கொல்லப்பட வேண்டும் என்று நஞ்சு கலந்த பானத்தை அருந்துவதற்கு உட்படுத்தப்படுகின்றார். அதுபோலத்தான் இயேசு தன் இனம் தன் போதனையால் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக கொல்லப்படுகின்றார்.

ஆக, கடவுளை அழிப்பவர்கள் அவருக்கு அருகில் இருப்பவர்கள்தாம்.

ஒருசில நேரங்களில் எனக்கு இப்படித் தோன்றும். நான் தினமும் கடவுளைப் பற்றி, இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றி, மோட்சம் பற்றி, நரகம் பற்றி ஏதோ ஒரு வகையில் போதிக்கிறேன். ஒருவேளை நாம் இறந்தபின் அப்படியில்லாம் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டால், நான் இந்த மக்களுக்கெல்லாம் 'நம்பிக்கை துரோகம்' செய்தவனாகவும், 'ஏமாற்றியவனாகவும்' மாறிவிடுவேன் அல்லவா?

மனித இனம் ஒரு விந்தையான இனம் - தன் எண்ணத்திற்கு ஒத்துவராத எதையும் அல்லது யாரையும் - அது கடவுளே என்றாலும் - அழித்துவிடத் துடிக்கிறது.



Thursday, March 26, 2015

நீங்கள் தெய்வங்கள்!

அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?' என்று கேட்டார்.
யூதர்கள் மறுமொழியாக, 'நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்' என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளதல்லவா?
(யோவான் 10:31-34)

யோவான் நற்செய்தியாளர் தன் நற்செய்தியில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு இலக்கிய உத்தி: 'மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்' - அதாவது 'தவறாகப் புரிந்துகொள்ளுதல்'. இந்த உத்தியை இயேசு மற்றவர்களுடன் பேசும் போது பயன்படுத்துவார். இயேசு ஒன்றைச் சொல்வார். ஆனால், மற்றவர் வேறொன்றாக அதைப் புரிந்துகொள்வார்.

இரண்டு சிறிய உதாரணங்கள்:

எ.கா. 1: இயேசுவும், யூதர்களும்

'இந்தக் கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்' என்கிறார் இயேசு. ஆனால், அதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள் வேறு மாதிரியாகப் புரிந்து கொள்கிறார்கள்: 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?' (யோவான் 2:19-20)

எ.கா. 2: இயேசுவும், சமாரியப் பெண்ணும்

இயேசு சமாரியப் பெண்ணிடம் 'கடவுளின் கொடை என்னும் தண்ணீரைப'; பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது சமாரியப் பெண்ணின் கேள்வி என்னவாக இருக்கிறது தெரியுமா? 'ஐயா! தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை. கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?' (யோவான் 4:10-11)

தவறான புரிதலின் நகைச்சுவை வழியாக சரியான புரிதலுக்கு இட்டுச்செல்வதுதான் இந்த உத்தியின் நோக்கம்.

நாளைய நற்செய்தியில் இயேசு தன்னைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டார் என்ற காரணத்துக்காக அவர்மேல் கற்களைத் தொடுக்கத் தயாராகின்றனர் யூதர்கள்சிலர்.

இயேசு அப்படியே ப்ளேட்டை மாற்றிப் போடுகின்றார். 'உங்கள் விவிலியத்திலும் 'நீங்கள் கடவுள்' என்று சொல்லப்பட்டுள்ளதே!' என்று அவர்களை அவர்கள் பக்கமே திருப்பி விடுகின்றார்.

'நீங்கள் தெய்வங்கள். நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்!' (திபா 82:6) என்னும் இறைவாக்கைத்தான் இயேசு மேற்கோள் காட்டுகின்றார்.

நாளைய நற்செய்தி நமக்கு இரண்டு பாடங்களைச் சொல்கின்றது:

அ. புரிந்து கொள்ளுதல். மற்றவரின் பேச்சை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோமா? அல்லது நம் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் நம் எதிர்செயல் எப்படி இருக்கும்?

ஆ. தத்வமசி. 'நீயே கடவுள்!' என்னும் சந்தோக்ய உபநிடதத்தின் (6.8.7.) தத்துவமும்; இதுதான். ஆக, கருத்தியல் அடிப்படையில் - அன்பு, கருணை, நம்பிக்கை, இரக்கம் - என்ற அடிப்படையில் எல்லா மதங்களும் ஒன்றுதான். செயல்பாடு மற்றும் வழிபாட்டில் தான் பிரச்சினைகள் வருகின்றன. ஆக, நம் உள்ளத்தையே அல்லது நம் உடலையே கடவுளாகவும், அப்படியே மற்றவர்களின் உள்ளத்தையும், உடலையும் பார்க்கின்ற மனப்பங்கு பிறந்தால் எத்துணை நலம்!


Wednesday, March 25, 2015

உன்பெயர் ஆபிராம் அன்று!

இனி உன்பெயர் ஆபிராம் அன்று.
'ஆபிரகாம்' என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையராக்கிறேன்.
(தொடக்கநூல் 17:5)

தமிழ் மொழியின் அழகுக்கு இந்த வாக்கியம் ஒரு எடுத்துக்காட்டு:

'உன்பெயர் ஆபிராம் அன்று'

இந்த வாக்கியத்தை 'உன் பெயர் ஆபிரகாம் இல்லை' என்றும் புரிந்து கொள்ளலாம்.

'உன் பெயர் அன்று ஆபிராம், ஆனால் இன்று அல்ல' என்றும் புரிந்து கொள்ளலாம்.

'பெயர் மாற்றம்' என்பது விவிலியத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு இலக்கிய உத்தி. அதாவது. கடவுளைச் சந்தித்தபின் ஒருவரில் ஏற்படும் மாற்றத்தைக் குறிப்பதற்கான வெளி அடையாளமாக இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. கடவுளால் மட்டுமன்றி மற்றவர்களாலும் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் பதிவு செய்துவிடுவோம்.

எத்தனை பேர் இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தபோது 15 பேருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது:

ஆபிராம் - ஆபிரகாம், அசாரியா - அபத்நேகோ, தானியேல் - பெல்தசார், எலியாக்கிம் - எகோயாக்கிம், கிதியோன் - யெருபால், அனனியா - சத்ராக்கு, ஒசேயா - யோசுவா, யாக்கோபு - இஸ்ரயேல், யோசேப்பு - சபனெத்பெனேயா, லோஅம்மி - அம்மி, லோருகாமா - ருகாமா, மத்தனியா - செதேக்கியா, மிசாயேல் - மேசாக்கு, சாராய் - சாரா, சீமோன் - பேதுரு.

'ஆபிராம்' - 'ஆபிரகாம்' என மாறும் படலமே நாளைய முதல் வாசகம்.

'ஆபிராம்' என்றால் 'மேன்மையான' அல்லது 'மேன்மைப்படுத்தப்பட்ட தந்தை' என்பது பொருள். ஆனால், இவர் இந்தப் பெயருக்குப் பொருத்தமானவராக இல்லை. இவருக்கென்று குழந்தை இல்லாததால் 'தந்தை பாக்கியம்' இல்லாதவராகவே இவர் இருக்கின்றார். கண் தெரியாத ஒருவரை 'கண்ணாயிரம்' என்று அழைப்பது எப்படி பொருத்தமில்லாததாக இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது 'ஆபிராம்' என்னும் பெயர்.

'ஆபிரகாம்' என்றால் 'பலரின் தந்தை' என்பது பொருள். அதாவது, வெறும் உடல்ரீதியான தந்தையாக இல்லாமல், உணர்வு ரீதியாக அல்லது உறவு ரீதியாக பலருக்கும் இவர் தந்தையாக இருப்பார் என்பதே இந்த வார்த்தையின் உட்பொருள். இந்தப் பெயர் இவருக்குப் பொருந்தும் என கடவுள் பிள்ளைப்பேற்றை இவருக்கு வாக்களிக்கவும் செய்கிறார்.

நம் பெற்றோர் நமக்கு இட்ட பெயர் ஒருபக்கம் இருந்தாலும், நம் உள்மனம் நமக்கென்று ஒரு பெயரை வைக்கும். அதுதான் கடவுள் நமக்கு வைக்கும் பெயர். அந்தப் பெயர் ஒரு காரணப்பெயர். அந்தப் பெயரைக் கண்டுபிடிப்பதும், அதன்படி வாழ்வதும் நம் முயற்சியாக இருக்கலாமே!


Tuesday, March 24, 2015

ஓர் உடலை எனக்கு தந்தீர்!

'பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை.
ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.'

... ... ...

'என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்!'

(எபிரேயர் 10:5,9)

நாசரேத்தூர் மரியாளுக்கு கபிரியேல் வானதூதர் வாழ்த்து சொன்ன 'மங்கள வார்த்தை திருநாளை' நாம் கொண்டாடுகின்றோம்.

'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவான் 1:14) என்னும் நற்செய்தி வாக்கு நிறைவேறிய நாள் இது.

கண்ணுக்குப் புலப்படாத கடவுள், கண்ணுக்குப் புலப்படும் உருவம் பெறுகின்றார். மனிதர்களின் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு முக்கியமோ. அந்த அளவுக்கு கடவுளின் வாழ்க்கையிலும் இது முக்கியம். ஏனெனில், இந்த நிகழ்வின் வழியாக கடவுள் தன்னையே குறுக்கிக் கொள்ள வேண்டும். கடவுளின் 'எல்லாம் வல்ல தன்மை' குறையத் தொடங்கும்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார் என்று நாம் ஒட்டுமொத்தமாகச் சொன்னாலும், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் கடவுள் ஒரு 'ஆணாக', ஒரு 'யூதனாக', ஒரு 'தச்சனின் குடும்பத்தில்', மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறிய 'கிராமத்தில்', 'அரமேய' மொழி பேசுபவராக, 'விருத்தசேதனம்' செய்யப்பட்டவராக பிறக்கின்றார். இந்த அடையாளங்களெல்லாம் கடவுளின் தன்மையை குறைக்கத் தானே செய்கின்றன!

கடவுள் ஏன் ஆணாக மட்டுமே இருக்க வேண்டும்?

அவர் வெள்ளை நிறத்தில், யூதனாகப் பிறந்திருப்பதற்குப் பதில், கொஞ்சம் 'கலரா' நம்ம ஊருல பிறந்திருந்தா என்ன நடக்கும்?

கடவுள்-மனிதன் 'அரமேய' மொழி பேசியதால் மற்ற மொழிகளுக்கெல்லாம் மதிப்பில்லையா?

கடவுள் மனிதனாக மாறிய நிகழ்வு எந்த அளவிற்கு மீட்பு கொண்டு வந்தது என நினைக்கிறோமோ, அதை விட பன்மடங்கு வரலாற்றில் ரத்தமும், கண்ணீரும் ஓடக் காரணமாக இருந்திருக்கின்றது. இந்த ஒரு கடவுள்-மனிதனுக்காக எத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டன! எவ்வளவு வன்முறைகள் கையாளப்பட்டன! எவ்வளவு கலாச்சாரங்கள் 'பேய்கள்' என்று சொல்லப்பட்டு கருவறுக்கப்பட்டன!

'கடவுள் இல்லாமல் நாம் வாழமுடியும்!' என்ற ஒரு நிலைக்கு மனித இனம் இன்று உயர்ந்து நிற்கின்றது. இது பெருமையான விஷயம். நமக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும்தான் பெருமை.

கடவுளின் பிரசன்னம் மங்களம் கொண்டுவந்ததாக நம்புகிறோம்.

இந்த மங்களம் அந்தக் கடவுளைப் பின்பற்றும் ஒவ்வொருவரின் வார்த்தையிலும், வாழ்க்கையிலும் இருந்தால்தான்...

'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்!'



தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?

நாளைய நற்செய்திப் பகுதியை வாசிக்கும் போது இரண்டு விஷயங்கள் என் மனதை நெருடுகின்றன.

ஒன்று இயேசுவின் பேச்சு.

மற்றொன்று பரிசேயர்கள் அல்லது யூதர்களின் பேச்சு.

'நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்!' என சபிக்கின்றார் இயேசு.

'இவர் தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?' என்று கிண்டல் செய்கின்றனர் பரிசேயர்கள்.
ஒருவர் மற்றவரைப் பார்த்து சாபம் விட்டுக்கொண்டது போல இருக்கிறது.

பாவம் என்றால் என்ன? என்பதற்கு புதிய அர்த்தம் கொடுக்கிறது நாளைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இடத்திற்கு நாம் போகமுடியாமல் இருப்பதே பாவம்.

இன்று எங்கள் பங்கின் வீடுகள் மந்திரிப்பின் இறுதிநாள். இந்த இறுதி நாளில் இறுதி வீட்டை மந்திரித்தவுடன் ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து புறப்படும்போது என்னுடன் வந்தவரை வெளியே போகச்சொல்லிவிட்டு என்னை மட்டும் மீண்டும் அழைத்துக்கொண்டு சென்றார் அந்தப் பெண்மணி.

'உங்களிடம் ஒன்று கேட்கவா?' என்றார்.

'இரண்டு கூட கேளுங்கள்!' என்றேன்.

'என் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவரின் உடலை நாங்கள் எரித்துவிட்டோம். அந்தச் சாம்பலை ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன். அதை நீங்கள் மந்திரிப்பீர்களா?'

கீழே குனிந்து ஒரு டிராயரைத் திறந்து ஒரு நீல நிற ஒரு கனசதுரப் பெட்டியை எடுத்தார்.

பெட்டியின் வெளியே அலையடிக்கும் கடற்கரையின் படம். பெட்டியின் மேல் அவருடைய கணவரின்

பெயர், பிறப்பு, இறப்பு தியதி குறிப்பிடப்பட்டிருந்தது.

கண்களை மூடி செபம் சொன்னேன்.

'கைகளை வைத்து மந்திரியுங்கள்!' என்றார்.

கைகளை வைக்கக் கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் வைத்தேன். செபித்தேன். தீர்த்தம் தெளித்தேன்.

'நன்றி!' என்றார்.

கொஞ்ச நேரம் கண்ணீர் வடித்தார்.

'போய் வரட்டுமா?' என்றேன்.

'ஹேப்பி ஈஸ்டர்' என்றார்.

'ஹேப்பி ஈஸ்டர்' என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

இறந்தவர்களின் சாம்பலை வீட்டில் வைத்திருப்பதை இன்றுதான் முதன்முதலில் கண்டேன்.

கிறிஸ்தவர்களில் உடலை எரிப்பது அல்லது தானம் செய்வது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம் நாட்டில் புழக்கத்தில் வருகிறது. எரிப்பதா? புதைப்பதா? தானம் செய்வதா? என்ற கேள்வி இப்போது வேண்டாம்.

ஒருவேளை அந்தப் பெண்மணிக்கு சாம்பலின் உருவத்தில் அவரது கணவர் உடனிருக்கிறார் போல என்று நினைத்துக் கொள்வதுதான் சரி.

நம் உறவுகளை நாம் எந்த விதத்திலாவது அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம் ஆசையாக இருக்கிறது.

அப்படியிருக்க, 'நீ அழிந்து போ! இறந்து போ!' என்று சொல்வது வெறுப்பின் உச்சகட்டமாக மட்டும்தான் இருக்க முடியும்.

இயேசுவைக் கொலை செய்ய திட்டம் தீட்டிக்கொண்டிருந்த அவரின் எதிரிகள் ஒருவேளை அவராகவே தற்கொலை செய்துகொள்வாரோ என்று கூட எண்ணுகின்றனர். அதனால் தான் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கின்றனர்.

யாரையும் 'நீ வேண்டாம்!' என்று சொல்லாத மனம் பெற்றால் எத்துணை நலம்.

Sunday, March 22, 2015

நானும் தீர்ப்பிடேன்!

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் அழைத்து வரும் நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது (காண்க. யோவான் 8:1-11). மேலும் இந்தப் பகுதியை கிரேக்க மூலப்பதிப்பில் அடைப்புக்குறிகளுக்குள் உள்ளது. ஆக, இந்த நிகழ்வைப் பற்றிய அதிகாரப்பூர்வமான பதிப்பு நம்மிடம் இல்லை அல்லது நமக்குக் கிடைக்கவில்லை. இயேசுவைப் பற்றி எடுக்கப்பட்ட எல்லாத் திரைப்படங்களிலும் இந்த நிகழ்வு சித்தரிக்கபட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வை வைத்து பல சிறப்பான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மட்டும் அழைத்து வருகின்றனர் சில நல்லவர்கள்(!). பெண்ணைப் பிடித்தாயிற்று. கூட இருந்த ஆண் என்ன ஆனார்? தனியொரு பெண் மட்டும் விபச்சாரத்தில் ஈடுபட முடியுமா என்ன? அடுத்தவர் இல்லாமல் விபச்சாரம் எப்படி சாத்தியமாகும்?

ஏதோ தாங்கள் எல்லா நாளும் மோசேயின் கட்டளைப்படிதான் நடப்பது போல மோசேயின் சட்டத்தையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

இயேசு குனிந்து தரையில் எழுதுகின்றார். இயேசு எழுதினார் என்பதற்கு நமக்கு இந்த ஒரு சான்று தான் இருக்கின்றது. ஆனால் என்ன எழுதினார் என்பது பற்றி ஒவ்வொருவரும் யூகித்துக்கொள்ள வேண்டியதுதான்.

'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் கல்லெறியட்டும்!'

இதுதான் இயேசுவின் புதிய கட்டளை.

ஆக, தன் நிலையைப் பார்க்காமல் மற்றவர்களின் நிலையைத் தீர்ப்பிடவோ,

யாருடைய உயிரை எடுக்கவோ நமக்கு உரிமை இல்லை.


Saturday, March 21, 2015

இதோ! இவங்கதான்!

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான் 1:40-42அ)

அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என்றார். (யோவான் 6:8-9)

கிரேக்கர் சிலர் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் அதுபற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். (யோவான் 12:20-23)

இந்த மூன்று வசனங்களையும் வாசிக்கும்போது என்ன தெரிகிறது? இந்த மூன்று நிகழ்வுகளிலும் பிரசன்னமாகி இருப்பவர் யார்?

'அந்திரேயா!'

நற்செய்தி நூல்களில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தமானவர்களில் ஒருவர் அந்திரேயா. யோவான் நற்செய்தியில் மட்டும்தான் இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இவரின் பெயரை வெறும் திருத்தூதர்களின் பெயர்களில் ஒன்றாக மட்டுமே குறிப்பிடுகின்றனர் (காண்க. மத்தேயு 10:1-4, மாற்கு 3:13-19, லூக்கா 6:12-16). யோவான் மட்டுமே இவரைப் பற்றி எழுதக் காரணம் ஒருவேளை யோவானுக்கு நெருங்கிய நண்பராகக் கூட இவர் இருந்திருக்கலாம்.

மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலும் அந்திரேயா ஒரு நல்ல பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். இயேசுவின் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் மூன்று பேரை அவரிடம் கூட்டி வந்து அறிமுகம் செய்கின்றார். 'ரெஃபரன்ஸ்' என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமான ஒன்று. நாம் டிவி, செய்தித்தாளில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விளம்பரங்களைப் பார்க்கின்றோம். அதில் வலம்வரும் பிரபலங்களும், மாடல்களும் நமக்கு தயாரிப்புகளை 'ரெஃபர்' செய்கிறார்கள் அல்லது 'அறிமுகம்' செய்கிறார்கள். 'அறிமுகத்தை' பொருத்தே அந்தத் தயாரிப்புகளின் விற்பனையும் இருக்கிறது. நம்மையறியாமலேயே நாமும் தினமும் பலவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்: 'பட்டு எடுக்கணும்னா நல்லி சில்க்ஸ் போங்க!' 'நகை வாங்கணும்னா ஜோய் ஆலுக்காஸ் போங்க!', 'கறி தோசை சாப்பிடனும்னா கோனார் மெஸ் போங்க!', 'அந்தக் கடை பனியாரம் நல்லா இருக்கும்!', 'இந்த பிராண்ட் ஃபோன் நல்லா இருக்கும்!' என நாம் அனுபவித்ததை பிறருக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.

ஆக, அறிமுகம் செய்து வைப்பதற்கு முதல் தேவை அனுபவம். ஒரு தயாரிப்பை அல்லது சேவையை அல்லது ஒரு நபரின் உறவை நாம் அனுபவித்தால் தான் அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும். நபர்களை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது அனுபவம் இன்னும் அதிகத் தேவையாகிறது. அங்கே இரண்டு வகை அனுபவம் வேண்டும். அறிமுகப்படுத்தும் நபரையும் நாம் அறிந்திக்க வேண்டும். யாரிடம் அறிமுகப்படுத்துகிறோமோ அந்த நபரையும் அறிந்திருக்க வேண்டும். அந்திரேயாவுக்கு இந்த அனுபவம் நிறையவே இருந்திருக்கிறது போல. தன் சகோதரையும் அறிந்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சிறுவனையும் அறிந்து வைத்திருக்கிறார். திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவையும் அறிந்து வைத்திருக்கிறார்.

இது ஒரு பெரிய கொடை. ஒரு சில கல்யாண வீடுகளில் பாருங்களேன். வெகுசில மனிதர்கள் எல்லாரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பர். பந்தி பரிமாறுபவர், இலை எடுப்பவர், தாம்பூலம் கொடுப்பவர், வெளியில் நிற்கும் வாட்ச்மேன் என எல்லாரோடும் இலகுவாகப் பேசிக்கொண்டிருப்பர். இது எப்படி சாத்தியம்?

உறவில் நான் அண்மையில் கற்றுக்கொண்ட ஒன்று இதுதான். இது ஒரு நல்ல பாடமும்கூட.

'நான் என்னை எப்போது மறக்கிறேனோ அப்போதுதான் மற்றவர்கள் என் கண்ணில் தெரிவார்கள்!'

என் படிப்பு, என் அருட்பணி நிலை, என் குடும்பம், என் விருப்பு-வெறுப்பு, என் பலம்-பலவீனம் என என்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் எனக்கு மற்றவர்கள் தெரிய மாட்டர்கள். ஒரு வீட்டுக்கே போறேன்னு வையுங்க. அங்க போனவுடன் அந்த வீட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் நம் நினைவிற்கு வரவேண்டும். அங்க போய் உட்கார்ந்து கொண்டு, 'நான் ரொம்ப படிச்சவன்! நான் ஒரு சாமியார்! எனக்கு எல்லாம் தெரியும்!' என்ற பெருமித நினைப்பில் இருந்தாலோ, அல்லது 'இந்த சோஃபா செட் என்கிட்ட இல்லையே!' 'இவங்க எல்.சி.டி. டிவி என்னோடதட விட பெருசா இருக்கே!', 'இந்த பெயிண்டிங் என்ன விலை இருக்கும்?', 'இந்தக் காரை மாதிரி நாமும் வாங்கணும்!' என்று என்னிடம் இல்லாதவைகளை நினைத்துக் கொண்டு, நான் சந்திக்கும் நபரோடு என்னை ஒப்பீடு செய்து கொண்டு என்னிடம் உள்ள குறைகளை நான் பட்டியலிட்டுக் கொண்டிருந்தாலோ என்னால் அவர்களோடு இயல்பாக பேச முடியுமா? எந்த நொடிப்பொழுதில் நான் என்னையே மறக்கிறேனோ அப்போதுதான் என் கண்முன் அமர்ந்திருக்கும் அவர்கள் என் இதயத்தில் பதிவார்கள். அப்போதுதான் அறிமுகம் அனுபவமாக முதிர்ச்சியடையும்.

இது நல்ல பாடம் தான!

'என்னோட யாருமே பேச மாட்றங்க!' என்று புலம்பும் நாம், நாமாக எத்தனை பேரிடம் சென்று பேசியிருக்கிறோம்?

இரண்டாவதாக, இன்றைக்கு இயேசுவை நான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதை விட, மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்ய வேண்டும். இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போதுதான் இந்த மனமாற்றம், கோயில் இடிப்பு, பலாத்காரம், கொள்ளை போன்ற பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன. ஒரு சேஞ்சுக்கு, இருப்பவர்கள் இருப்பது போல இருக்கட்டும். ஆனா இவங்க எல்லாத்தையும் பற்றி நாம் இயேசுவிடம் பேசிப் பார்க்கலாமே! இவங்க எல்லாத்தையும் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கலாமே!

என் வாழ்வில் என்னை முதன்முதலாக சிலவற்றிற்கு அறிமுகம் செய்து வைத்த சில நல்ல உள்ளங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்:

'இதுதான் உலகம்!' என்று என்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய என் அம்மா திருமதி. மரிய செல்வம்.
'இதுதான் பள்ளிக்கூடம்!' என்று கல்விக்கு அறிமுகப்படுத்திய என் அப்பா திரு. கருணாநிதி.
'இதுதான் ஊர்!' என்று அறிமுகப்படுத்திய என் அய்யாமை திருமதி. லட்சுமி அம்மாள்.
'இதுதான் காதல்!' என்று பிஞ்சுக்காதலை விதைத்த திருமதி. டயானா.
குருத்துவ அருட்பணி பயிற்சியில் காலடி எடுத்து வைத்தபோது 'குருத்துவம் என்றால் இதுதான்!' என்று அறிமுகப்படுத்திய அருட்தந்தை. மரிய அருள் செல்வம்.
'இதுதான் மதுரை!' என்று முதன்முதலாக அறிமுகப்படுத்திய என் பாட்டி திருமதி. பாக்கியத்தாய்.
'இதுதான் வங்கிக் கணக்கு!' என்ற வங்கி தொடர்புக்குள் அறிமுகம் செய்து வைத்து என் நண்பர் அருட்தந்தை. ஜூலியான்ஸ்.
'இதுதான் இசை!' என்று வாக்மேனுக்கு என்னை அறிமுகப்படுத்திய நண்பர் அருட்தந்தை. மோட்சராசன்.
'இதுதான் கம்ப்யூட்டர்!' என்று அறிமுகப்படுத்திய அருட்தந்தை. கிளைவ்.
'இதுதான் ஆசிரியப்பணி!' என்று அறிமுகப்படுத்திய அருட்தந்தையர். பிரிட்டோ பாக்கியராஜ் மற்றும் அமல்ராஜ்.
'இதுதான் குருத்துவம்!' என்ற அறிமுகப்படுத்திய என் பாசமிகு பேராயர்கள்.
'இதுதான் அமெரிக்க டாலர்!' என்று என் உலகை விரித்துக் காட்டிய என் கண்ணம்மா.
'இதுதான் இத்தாலி!' என அறிமுகப்படுத்திய என் பங்குத்தந்தை அருட்தந்தை. அத்திலியோ.
'இதுதான் தியாகம்!' என்று சொல்லாமல் சொல்லிக் காட்டிய என் வலேரியா.
'இதுதான்டா எங்க ஊர்!' என்று அறிமுகப்படுத்திய என் குட்டிப்பாப்பா.

புதிய மொழி, புதிய உறவு, புதிய நட்பு, புதிய உணவு, புதிய உடை என்று என்னை புதியவற்றிற்கு அறிமுகம் செய்து வைத்த அனைத்து 'அந்திரேயாக்களுக்கும்'...

... என் நன்றிகளும்! வாழ்த்துகளும்!




Friday, March 20, 2015

அவரைப் போல எவரும் என்றும்!

அவர்கள்: 'ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?'
காவலர்கள்: 'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'
அவர்கள்: 'நீங்களும் ஏமாந்து போனீர்களோ?'
(யோவான் 7:45-46)

இந்த உரையாடல் நடப்பது யூதர்களின் சட்டமன்றம் என்று சொல்லப்படும் 'சேனட்ரின்' என்ற இடத்தில் தாம். பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் என எல்லாரும் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரும்படி ஒரு காவலர் குழுவை அனுப்புகின்றனர். அந்தக் குழு இயேசுவைப் பிடித்துக்கொண்டு வருவதற்குப் பதிலாக, வெறுங்கையினராய் வந்து நின்று கொண்டு 'அவரைப் போல நல்லவர் யாரும் இல்லை!' என்று எதிர்சாட்சி சொல்கின்றனர்.

'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'

காவலர்களின் இந்தச் சான்று 'பேசுவதை' மையப்படுத்தியிருக்கின்றது. 'பேசுவது' என்பது முதல் ஏற்பாட்டில் யாவே கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வார்த்தை. யாவே இறைவன் தான் சீனாய் மலையில் மோசேயுடன் பேசுகிறார். அவரைப் போல வேறு எந்தக் கடவுளும் பேசியதில்லை. அவர் பேசிய வார்த்தைகள் தாம் அவர்களுக்குப் பத்துக் கட்டளைகள் ஆயிற்று. அவரின் வார்த்தைகள் தாம் அவர்களுக்கு பாலைநிலத்தில் உண்பதற்கு மன்னாவும், இறைச்சியும், குடிப்பதற்கு தண்ணீரும் கொடுத்தன. ஆக, கடவுளின் வார்த்தை என்றால் வாழ்வு.

காவலர்களின் சான்று மறைமுகமாகச் சொல்வதும் இதுதான்:

'வாழ்வின் காரணியைக் கொண்டிருக்கும் ஒருவரைச் சாகடிக்கப் பார்க்கிறீர்களே!' என்று கேட்காமல் கேட்கின்றனர்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், காவலர்களின் வேலை தங்களுக்குச் சொல்லப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதுதான். இந்தக் காவலர்கள் கட்டளையை நிறைவேற்றத் தவறியதுமன்றி, இயேசுவைப் பற்றி வாழ்த்தியும் பேசுகின்றனர்.

மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது வாழ்க்கையின் நியதி அல்ல. உண்மைக்கேற்ப நாம் எந்த இடத்திலும் வாழ முடியும். மேலும், இயேசுவைச் சந்தித்தபின் ஒருவர் பொய் பேச முடியாது. உண்மையை மட்டும் தான் பேச முடியும்.

நாம் இயேசுவை இன்றும் சந்திக்கிறோம் தானே? விவிலியத்தில், நற்கருணையில், அண்டை அயலாரில். நாம் மற்றவர்களிடம் போய் என்ன சொல்லப் போகிறோம்?

'அவரைப் போல எவரும் என்றும் பேசியதில்லை!'


Thursday, March 19, 2015

யோசேப்பு நேர்மையாளர்

'அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்.
அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத்திட்டமிட்டார்'
(மத்தேயு 1:19)

யோசேப்பைப் பற்றி மத்தேயு நற்செய்தியாளர் எழுதும் முதல் குணநலன் என்ன தெரியுமா?

'யோசேப்பு நேர்மையாளர்' என்பதுதான்.

'நேர்மையாளர்' என்று பொருள்படும் 'டிக்காயோஸ்' (dikaios) என்ற கிரேக்கச்சொல் புதிய ஏற்பாட்டில் 79 முறை பயன்படுத்தப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் முதல் பயன்பாடே மத்தேயு 1:19ல் தான் வருகிறது. அதுவும் முதல் பயன்பாடே யோசேப்பைப் பற்றியதாக இருக்கிறது. மேலும் இந்த 79 இடங்களில் 69 இடங்களில் இது கடவுளின் குணநலனைக் குறிக்கும் வார்த்தையாகவும், 10 இடங்களில் மனிதர்களின் நற்சான்றைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் யாவே இறைவனைக் குறிக்கும் சொல்லும் இதுதான். ஆனால் எபிரேயத்தில் 'சேதேக்' (tsedek) மற்றும் 'யசார்' (yasar) என்ற இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

'டிகாயோஸ்' என்றால் என்ன? அது யோசேப்பைப் பற்றி என்ன சொல்கிறது?

'டிகாயோஸ்' என்பதை பழைய மொழிபெயர்ப்பில் 'நீதிமான்' என்றும், புதிய மொழிபெயர்ப்பில் 'நேர்மையாளர்' எனவும் வாசிக்கின்றோம்.

'டிகாயோஸ்' என்ற வார்த்தையின் உறைவிடம் 'யசார்' என்ற எபிரேயச்சொல்தான். 'யசார்' என்பது நைல் நதிக்கரையில் வளரும் ஒருவகை கோரைப்புல். இந்தப் புல் அல்லது நாணல் நேராக இருக்கும். இந்த நாணல்தான் பழங்காலத்தில் அளக்கும் அளவுகோலாக, கோடுகளை வரையும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஆக, 'நேராக' இருப்பதுதான் 'டிகாயோஸ்'. மேலும், 'யசார்' எந்த நேரத்திலும் மாறாதது. ஒரு அடி அளவு என்றால் அது இன்றும் ஒரு அடி என்று காட்டும், பத்து ஆண்டுகளுக்குப் பின்பும் ஒரு அடி என்றுதான் காட்டும். நாம் பயன்படுத்தும் அளவுகோல்கள் மாறிக்கொண்டே இருந்தால் நாம் குழம்பிவிட மாட்டோமா?

'யசார்' என்ற இந்த நாணலின் இயல்பு மனிதர்களின் இரண்டு குணநலன்களை அடையாளப்படுத்துகிறது:

அ. மனிதர்கள் 'நேராக' இருக்க வேண்டும். உடல் அளவில் 90 டிகிரியில் இருப்பதல்ல! (ஆனால், மருத்துவ ஆய்வுகளின் படி நாம் 90 டிகிரி நேராக நின்றால் அல்லது 180 டிகிரி நேராகப் படுத்தால் மட்டுமே முழுமையாக வேலைசெய்வதாகச் சொல்கிறார்கள்). நம் சிந்தனை, எண்ணம், மதிப்பீடு நேராக இருக்க வேண்டும்.

ஆ. நாம் ஒரே அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும். பிடித்தவர்களுக்கு ஒரு மாதிரி, பிடிக்காதவர்களுக்கு வேறு மாதிரி, இன்றைக்கு ஒரு மாதிரி, நாளைக்கு வேறு மாதிரி, பகலில் ஒரு மாதிரி, இரவில் வேறு மாதிரி, வெளிச்சத்தில் ஒரு மாதிரி, இருட்டில் வேறு மாதிரி, மற்றவர்கள் பார்த்தால் ஒரு மாதிரி, பார்க்காவிட்டால் வேறு மாதிரி என இருப்பதும், வேறுபட்ட அளவைகளைக் கொண்டு நாம் மற்றவர்களை அளக்க முயல்வதும் இதற்கு எதிரானது.

இந்த இரண்டு இயல்பும் கடவுளுக்கு மட்டுமே பொருந்தும். அவர் தான் என்றும் மாறாதவர். அவர் தான் அனைவரையும் ஒரே அளவுகோலைக் கொண்டு பார்ப்பவர்.

இந்த இரண்டு குணநலன்களையும் யோசேப்புக்குப் பொருத்திப் பார்க்கிறார் மத்தேயு நற்செய்தியாளர்.

யோசேப்புக்கு எந்தச் சூழலில் பொருத்துகிறார்?

'மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்குத் தெரிந்து விடுகிறது. தான் கூடி வாழவில்லை என்பதும் தெரியும். மரியாள் நல்லவர் என்பதும் தெரியும். திருச்சட்டம் இந்த மாதிரி பெண்களை கல்லால் எறிந்து கொல்லச் சொல்கிறது என்றும் அவருக்குத் தெரியும். ஆனால், அவரின் 'நீதிமான்' தன்மையைக் குறிக்கும் சொல் 'மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்!' என்பதுதான்.

ஆக, நீதிமான்களும், நேர்மையாளர்களும் 'நேராக' இருப்பவர்களும், ஒரே அளவுகோல் பயன்படுத்தபவர்களும் மட்டுமல்ல. மாறாக, அவர்கள் அடுத்தவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை.

இது இன்று நமக்கு மிகவும் தேவையான ஒன்று. இன்று நம் எல்லாரிடமும் இருக்கும் மனப்பக்குவம் என்னவென்றால், 'அடுத்தவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் வழியாக நம்மையே நல்லவனாக்கிக் கொள்வதுதான்!'

கடந்த வாரத்தில் வாட்ஸ்ஆப்பில் ஒரு உதவி காவல் ஆணையாளரும், ஒரு கான்ஸ்டபிள் பெண் போலீசும் பேசிக்கொள்வதாகப் பதிவு செய்யப்பட்ட உரையாடல் ஒன்று பரவி, இணையதளம், ஜூவி, செய்தித்தாள்கள் என எல்லா தளங்களிலும் வந்துவிட்டன. இதை இவ்வளவு வேகமாகப் பரவலாக்கம் செய்யுமுன், நம்மவர்கள் ஏன் அதைப் பற்றி யோசிப்பதில்லை? 'அது உண்மையா! பொய்யா?' என்ற கவலை நமக்கில்லை. 'ஏன், அதை யோசிக்க நேரமுமில்லை!' 'எல்லாரும் செய்றாங்க! நானும் செய்றேன்!' என்ற மனநிலைதான். அந்தக் காவல் ஆணையாளர் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. நமக்குத் தேவையெல்லாம் கொஞ்சம் காருண்யம் அவ்வளவுதான்.

அதைத்தான் யோசேப்பு செய்தார். காருண்யம் யாரையும் இகழ்வாகப் பார்ப்பதில்லை. இந்தக் காருண்யம் தான் அவரை நீதிமான் நிலைக்கு உயர்த்துகிறது.

நான் படிக்கும் படிப்போ, சம்பாதிக்கும் பொருளோ, வகிக்கின்ற பொறுப்போ என்னை நீதிமான் ஆக்குவதில்லை.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!' என்று வள்ளலார் அளவுக்குக் காருண்யம் இல்லாவிட்டாலும்,

யாரையும் இகழ்ச்சிக்கு உள்ளாக்காத நல்ல உள்ளமும், செயலும் எனக்கு வேண்டும் என்பதே என் மன்றாட்டு.


Wednesday, March 18, 2015

வளன் வாழ்வின் ஏழு மகிழ்ச்சிகள்

நாளை தூய வளனாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

(மார்ச் 19ல் இவரை 'அன்னை மரியாளின் துணைவர்' எனக் கொண்டாடும் நாம்,
மே 1ல் 'தொழிலாளர்களின் பாதுகாவலர்' எனவும் கொண்டாடுகிறோம்)

சித்தரிக்கப்படும் எல்லாப் படங்களிலும், சுரூபங்களிலும் மரியாளைவிட வயது அதிகமானவராகவும், கைகளில் மரஉளி அல்லது குழந்தை இயேசுவை சுமந்தவராகவே இருக்கிறார். இவரின் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் இருந்திருக்கும்தானே. அந்தத் தேடலின் பின்னணியில் நான் கற்றவைகளைக் கொஞ்சம் மசாலா சேர்த்து பதிவாக்குகிறேன் இன்று.

வளன் வாழ்வின் ஏழு மகிழ்ச்சிகள் இவை:

1. மனுவுருவாதல் என்னும் மறைபொருள்

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். (மத்தேயு 1:20-21)

'ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்!' என்றுதான் ஒவ்வொரு யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தாவீதின் அரியணை என்றென்றும் நிலைபெறும் என்று அனைவரும் எதிர்நோக்கியிருந்த காலம் இது. மெசியாவின் வருகை மிக அண்மையில் உள்ளது என அன்றாடம் தெருவில் யாராவது சொல்லிக் கொண்டு திரிவதும், 'நான்தான் மெசியா' என்று சிலர் தங்களுக்குப் பின் சீடர்களைக் கூட்டிக் கொண்டு அலைவதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் தான் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மரியாளின் வழியாக மெசியா வரப்போகிறார் என்ற செய்தி யோசேப்புக்குத் தரப்படுகின்றது. தான் கூடிவாழுமுன்னே தன் துணைவி கருவுற்றிருப்பது தனக்கு நெருடலாக இருந்தாலும், தன் மனைவியைக் காட்டிக் கொடுக்காத நீதிமானாக நிற்கின்றார் யோசேப்பு. நெருடல், பயம், கலக்கம், வருத்தம் என்று குழம்பியிருந்த யோசேப்புக்கு மகிழ்வின் செய்தி தரப்படுகிறது. தன் வழிமரபில் பிறக்கும் இயேசுதான் இந்த உலகை மீட்க வந்த மெசியா என்பது அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

2. தேடி வந்த இடையர்கள்

வானதூதர்கள் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். (லூக்கா 2:16)

யோசேப்பு சிறுவயது முதல் எருசலேம் ஆலயத்தில் வளர்ந்தவர் என்பதும், அவர் வைத்திருந்த கைத்தடி ஒன்றுதான் லீலி மலர்களால் பூத்துக் குலுங்கியது என்பதும் மரபுவழிச் செய்தி. தான், தன் உலகம், தன் வாழ்க்கை என்று ஓய்ந்திருந்த யோசேப்பைத் தேடி இடையர்கள் வருகின்றனர். இயேசு பிறப்பின் செய்தி மாட, மாளிகைகளில் சொல்லப்படவில்லையா, இவர் அரசன் இல்லையா? ஏன் இந்த இடையர்களுக்கு, ஏன் இந்த ஏழையருக்கு இறைவனின் மீட்புச் செய்தி முதலில் அறிவிக்கப்படவேண்டும் என்ற குழப்பம் எதுவும் இல்லாமல், இறைவனின் எளிய பிறப்பையும், அவரைத் தேடி வந்த எளியவரையும் ஏற்றுக்கொள்கின்றார் யோசேப்பு. இன்று நாம் பெரிய நபர், பெரிய வீடு, பெரிய ஊர், பெரிய பொருள் என்று பெரியவற்றைத் தேடிச் செல்லவே விழைகின்றோம். ஆனால், நம்மிடமிருக்கும் பெரியதொன்றை விட மற்றொன்று பெரியதொன்றாகிவிட்டால் நம் மகிழ்ச்சி கலைந்து விடுகிறது. நம் இறைவன் சின்னஞ்சிறியவைகளின் இறைவன். சின்னஞ்சிறியவர்களையும், சின்னஞ்சிறியவைகளையும் நாம் தேடும்போது நம்மை மகிழ்ச்சி அரவணைத்துக் கொள்கிறது.

3. 'இயேசு' என்னும் பெயர்

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள். (லூக்கா 2:21)

இயேசுவின் பெயர் எபிரேய அல்லது அரமேய மொழியில் 'யோசுவா'. 'யோசுவா' என்றால் 'மீட்பர்' என்பது பொருள். இந்தப் பெயர் ஒவ்வொரு யூதரின் சிந்தனையிலும் பழைய ஏற்பாட்டு யோசுவாவைத்தான் படம்பிடித்துக் காட்டியிருக்கும். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த இறைவன், யோசுவாவின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அவர்களை நடத்திச் செல்கின்றார். பழைய ஏற்பாட்டு யோசுவா புதிய நாட்டிற்குள் மக்களை அழைத்துச் சென்றது போல, புதிய ஏற்பாட்டு யோசுவாவும் மக்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணி மகிழ்கின்றார் யோசேப்பு. இன்று நமக்கும் பெயர்கள் இருக்கின்றன. ஒருபக்கம், நாம் பிறந்தபோது அல்லது திருமுழுக்கு பெற்றபோது நம் பெற்றோர் இட்ட பெயர்கள். மற்றொரு பக்கம், நம் நண்பர்கள் நம்மை அடையாளப்படுத்தி அழைக்கும் பெயர்கள். இன்னும் நாம் செய்யும் பணிகளை வைத்து நமக்குத் தரப்படும் பெயர்கள். இந்தப் பெயர்கள் நமக்கு வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல. அவை நமக்கு நாம் சார்ந்திருக்கவேண்டிய அறநெறியையும் கற்பிக்கின்றன என்பதை உணர்ந்து நம் பெயருக்கேற்ற வாழ்வை வாழ நம்மை அழைக்கிறது யோசேப்பின் மூன்றாம் மகிழ்ச்சி.

4. 'என் கண்கள் கண்டுகொண்டன'

ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. (லூக்கா 2:30-32)

இயேசுவைத் தன் குழந்தைககளில் ஏந்தும் சிமியோன் தான் எதிர்பார்த்த மீட்பு வந்துவிட்டதாக உளம் மகிழ்கின்றார். சிமியோனின் வார்த்தைகளில் ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மகிழ்வையும் கண்டுகொள்கின்றார் யோசேப்பு. மீட்பு என்றால் என்ன? கடவுளுக்கும், மனிதருக்கும், யூதருக்கும், புறவினத்தாருக்கும், பகலுக்கும், இருளுக்கும் என இருக்கின்ற அனைத்து வேறுபாடுகளும் களையப்படுவதே மீட்பு. கடவுள் மனுவுரு ஏற்ற நிகழ்வின் வழியாக கடவுள் தன்மை மனுக்குலத்தைப் பற்றிக்கொண்டது. இயேசுவில் நமக்கு மீட்பு வந்து விட்டது என மகிழும் யோசேப்பு நம் மீட்புக்கேற்ற செயல்களை நாம் செய்ய நம்மை அழைக்கின்றார்.

5. தீமையின் அழிவு

ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 'நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்' என்றார். (மத்தேயு 2:19-20)

கடவுளின் வல்லமையை மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கும் வளன், கடவுளின் வலுவின்மையை முதன்முதலாக அனுபவிக்கின்றார். ஒரு குழந்தையின் வடிவில் தன் கைகளில் தழுவும் கடவுள் தன்மை, எதிர்த்து நிற்கும் ஒரு மனித அரசனைக் கூட எதிர்க்க முடியாமல் வலுவிழந்து கிடக்கிறது. இது வளனுக்கு ஒரு பெரிய மறைபொருள். அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்? 'என்ன கடவுளப்பா நீ?' என்று கேள்வி கேட்டிருப்போம். இன்று நாம் எல்லாமே உடனடியாகப் பெற விரும்புகின்றோம். உடனடி ரசம், உடனடி சாம்பார், உடனடி சாம்பிராணி, உடனடி நூடுல்ஸ் என வளர்ந்து, உடனடி ஃபோன், உடனடி மெசஜ், உடனடி காதல், உடனடி திருமணம், உடனடி அர்ப்பணம் என எல்லாவற்றையும் உடனடியாகவே விரும்புகின்றோம். ஆனால், வாழ்வின் மகிழ்ச்சி பெரும்பாலான நேரங்களில் இந்த உடனடிகளில் இருப்பதில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையுமே மகிழ்ச்சி எனக் கற்பிக்கிறார் வளன்.

6. நல்லதொரு குடும்பம்

யோசேப்பு நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ''நசரேயன்' என அழைக்கப்படுவார்' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. (மத்தேயு 2:23)

மரியாளுக்குத் துணைவர், இயேசுவுக்குத் தந்தை என்று இரண்டு பொறுப்புகள் இப்போது வளனுக்கு. நம் குடும்பங்களுக்கு மாதிரியாக இருக்கிறது வளன் தலைமையேற்ற நாசரேத்தூர் திருக்குடும்பம். 'நான், எனது, எனக்கு' என மனித மனங்கள் குறுகி வருகின்ற இந்த நாட்களில் வளன் நமக்கு ஒரு நல்ல பாடம். குடும்பமும், கூட்டு வாழ்வும் எப்போதும் மலர்ப்படுக்கையாகவே இருப்பதில்லை. அடுத்தவரின் பிரசன்னம் சில நேரங்களில் முட்களாகக் குத்தவே செய்யும். ஆனால், அடுத்தவரின் உடனிருப்பே நமக்கு உற்சாகமும், உத்வேகமும் தருகின்றது. நாம் தனிப்பட்ட மரங்களாக நிற்கப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். ஒருவர் மற்றவரின் செயலுக்கு எதிர்வினையாக மட்டுமே நம் செயல்கள் இருப்பதற்குப் பதிலாக, அடுத்தவரின் நலம் பேணும் செயலாக அமைந்தால் வளன் சுவைத்த மகிழ்வை நாமும் சுவைக்கலாம்.

7. 'காணாமற்போயிருந்தார்! கிடைத்துவிட்டார்!'

மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். (லூக்கா 2:46)

இயேசு தன்னுடன் இல்லாத மூன்று நாட்கள் வளன் எப்படி இருந்திருப்பார்? தன் கையில் கிடைத்த புதையல் தவறிவிட்டதாகவும், தன் முத்து தொலைந்து விட்டதாகவும் நினைத்து அங்கலாய்த்திருப்பார். இந்தத் தவிப்பில் இயேசுவைக் கண்டதும், மறைநூல் அறிஞர்கள் நடுவில் வெளிப்பட்ட அவரின் ஞானத்தைக் கண்டதும், 'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்' (குறள் 67) என்று மனமெல்லாம் மத்தாய்ப்பு வெடித்திருக்கும். இறைவனின் பிரசன்னம் நம்மிடம் இல்லாதபோது நாம் எப்படி உணர்கிறோம்? அந்த இடத்தில் மற்றவர்களையோ, மற்றவைகளையோ வைத்து நிறைவு காண விழைகின்றோமோ? எனக் கேட்கிறது வளனின் ஏழாம் மகிழ்ச்சி.

வளனின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியாகட்டும்!

தூய வளனாரே, கனவுகளின் நாயனே, தொடர்ந்து வாரும் எம்மோடு எம் வாழ்வுப் பயணத்தில்!


Tuesday, March 17, 2015

செலக்டிவ் அல்சைமர்

சீயோனோ, 'ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார். என் தலைவர் என்னை மறந்து விட்டார்' என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்'
(காண்க எசாயா 49:8-15)

நான் புனேயில் மெய்யியல் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் குருமடத்தில் கார்லோஸ் என்ற அருட்தந்தை இருந்தார். அவருக்கு வயது 75. அல்சைமர் நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். திடீரென்று, 'இந்தக் கப்பல் எப்போ புறப்படும்?' என்று கேட்பார். 'யார் கதவையாவது திறந்து தன் அறையென நினைத்துத் தூங்கிவிடுவார்'. 'இரவில் புத்தகங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு தான் பாடம் எடுக்கும் நேரம் வந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டு வகுப்பறைக்குப் போவார்'. இவரின் நடவடிக்கைகள் அவ்வப்போது நகைச்சுவையாக இருந்தாலும், முதுமையில் ஒருவர் அனுபவிக்கும் வலி என்று பார்க்கும் போது அவர்மீது அனுதாபமே வரும். ஆனால், என்னதான் மறதி இருந்தாலும் அவர் புலமைபெற்ற திருச்சபைச்சட்டத்தில் என்ன சந்தேகம் என்று கேட்டாலும் அழகாகத் தீர்த்து வைப்பார். மேலும் அவர் திருப்பலி நிறைவேற்றும்போது செபங்களையெல்லாம் மிகச் சரியாகச் சொல்வார். இந்த இரண்டிலும் மறதி இவரிடம் தோற்றுத்தான் விட்டது. கொஞ்சநாள் அடைச்சுப் பார்த்தாங்க. கொஞ்சநாள் ஆள்வச்சி கண்காணிச்சுப் பார்த்தாங்க. ஒருகட்டத்துல அவரைக் கட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை. ஒருநாள் மதிய உணவிற்கு ஆளைக்காணோம். 'எங்கே?' என்று எல்லாரும் தேட, எங்கள் கல்லூரி ஆலயத்தில் பீடத்திற்கும், நற்கருணைப்பேழைக்குமான இடையில் விழுந்து இறந்து கிடந்தார். நெற்றியில் காயம். ரத்தம். படிக்கட்டில் ஏற முடியாமல் அல்லது ஏறும்போது நிலை தவறி விழுந்திருக்கிறார் போலும். இன்றைக்கு அவருடைய நினைவு நாள்.

மறதி!

மறதி மற்றும் இல்லையென்றால் நாம் எல்லாரும் பைத்தியமாகிவிடுவோம் என்று சொல்வார்கள். காலம் செல்லச் செல்ல சில அனுபவங்கள், ஆட்கள், பெயர்கள் நம் நினைவை விட்டுச் சென்று கொண்டே இருக்கின்றார்கள். இது ஒரு தவறு அல்ல. இது ஒரு எதார்த்தம்.

சிலரை நாம் மறக்க நினைக்கின்றோம். சிலரை காலப்போக்கில் மறந்துவிடுகிறோம்.

நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நினைவில் வைத்துக்கொள்கிறோம். நாம் விரும்பாத எல்லாம் காற்றலையில் அழிக்கப்பட்டு விடுகிறது.

நாளைய முதல் வாசகத்தில் இறைவன் தன் நினைவை இரண்டு நிலைகளில் முன்னிறுத்துகின்றார்.

பால் குடிக்கும் குழந்தையை அதன் தாய் மறந்தாலும்,
பத்து மாதம் சுமந்து பெற்ற மகவை அதன் தாய் மறந்தாலும்...

இரண்டிலும் தாய்-சேய் உறவுதான் அடிப்படையாக இருக்கிறது. ஒரு தாய்க்கு எந்நிலையிலும் தன் குழந்தையைப் பிடிக்காமல் போவதில்லை (சில விலக்குகள் இருக்கலாம்!). அப்படிப்பட்ட நிலை வந்தாலும் கடவுள் நம்மை விரும்பாமல் இருக்க மாட்டார் என்பதே இதன் செய்தி.

இன்று கடவுள் நம்மை மறக்கிறார் என்று ஆராய்வதை விட நாம் கடவுளை மறக்கிறோமா என்று கேட்கலாம். வெகு எளிதாகவும், வெகு வசதியாகவும் இன்று கடவுளை நாம் மறந்துவிடுகிறோம்.

'செலக்டிவ் அல்சைமர்' என்றுகூட இதைச் சொல்லலாம்.

ஆலயத்தில் இருக்கும் ஒருமணி நேரம் தவிர மற்ற நேரங்களில் நான் அவரைப் பல நேரங்களில் மறந்துதான் போயிருக்கிறேன்.


Monday, March 16, 2015

நலம்பெற விரும்புகிறீரா?

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து,
'நலம்பெற விரும்புகிறீரா?' என்று அவரிடம் கேட்டார்.
'ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை.
நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்' என்று
உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.
(யோவான் 5:5-7)

இந்த நற்செய்திப் பகுதியை வாசித்தவுடன் உங்கள் உள்ளத்தில் வரும் முதல் உணர்வு என்ன? நோயுற்றிருந்த அந்த நபர் உங்களில் எந்த உணர்வை உருவாக்குகிறார்? அவர் மேல் உங்களுக்குக் கோபம் வருகிறதா? அல்லது இரக்கம் வருகிறதா?

மீண்டும் ஒருமுறை மேற்காணும் வசனங்களை வாசித்துப் பாருங்களேன்.

என் அருட்பணிவாழ்வின் இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டுத்தியானத்தில் தியான உரை வழங்க வந்திருந்த அருட்தந்தை இந்த நற்செய்திப் பகுதியோடுதான் தன் உரையைத் தொடங்கினார்.

அன்று இந்த நற்செய்திப் பகுதியை வாசித்த போது எனக்கு இந்த நோயுற்றிருந்த நபர் மேல் கோபம் தான் வந்தது. ஏன் கோபம்?

ஓராண்டல்ல, ஈராண்டல்ல, முப்பத்தெட்டு ஆண்டுகள் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கின்றார். 'ஏன் குணமாகவில்லை?' என்று கேட்டதற்கு, 'யாரும் இறக்கிவிடவில்லை!' என்று மற்றவர்களைக் குறைசொல்லுகின்றார். ஒருநாளைக்கு ஒரு படி என அவர் அந்தக் குளத்தில் இறங்க முயற்சித்திருந்தாலும், பதினெட்டு நாட்களில் பதினெட்டு படிகள் இறங்கியிருப்பார் (தொல்பொருள் ஆராய்ச்சியின் தகவல்படி அந்தக் குளத்தில் 18 படிகள் உள்ளன. நம்ம சபரிமலை உங்களுக்கு நினைவிற்கு வருகிறதா? அங்கேயும் ஐயப்பன் வீற்றிருக்கும் கருவறைக்குச் செல்ல 18 படிகள்தாம். ஐயப்பனுக்கு '18ஆம் படியான்' என்ற பெயரும் உண்டு. மீனாட்சி திருக்கோவிலின் பொற்றாமரைக் குளத்திலும் 18 படிகள்தாம் என நினைக்கிறேன்(!). ஒன்றும் எட்டும் ஒன்பது, நவகிரகங்களின் இரட்டிப்பு என இதற்குக் காரணங்கள் சொல்லலாம்!). நம்ம கதாநாயகன் அப்படி இறங்குவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு இந்த வாழ்க்கை முறை பிடித்தும் கூட இருந்திருக்கலாம். உடல்நலம் சரியில்லை. ஒரு வேலைக்கும் போக வேண்டாம். யாராவது எதாவது கொடுத்தால் சாப்பிடுவோம். சாப்பிட்டு விட்டு தூங்குவோம். உடல்நலம் சரியானால் வேலைக்கெல்லாம் போக வேண்டியிருக்கும். இப்படி ஓய்ந்து போய் இருந்திருக்கலாம். தன் வாழ்க்கையை மற்றவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது ஏற்புடையதா? இல்லை.

ஆனால், இன்று இந்த நற்செய்திப் பகுதியை வாசித்த போது அவர் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. இரக்கம் தான் வருகிறது.

இந்த முப்பத்தெட்டு ஆண்டுகள் குளிரையும், வெயிலையும், மழையையும் பொறுத்துக் கொண்டு அவர் எப்படி அந்தக் குளத்தின் படிக்கட்டுகளில் கிடந்திருப்பார். எத்தனை பேர் அவரைக் கண்டும் காணாமல் சென்றிருப்பார்கள். இன்றும் ரோமின் தெருக்களிலும், ரயில்வே நிலையங்களிலும் யாராவது படுத்திருப்பது போல தெரிந்தால் ஒதுங்கிச் செல்லவே மனம் சொல்கிறது. எத்தனைபேர் அவரை ஒரு இடையூறு என நினைத்திருப்பார்கள்! அவருடைய பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் அவரை வந்து பார்க்கவே இல்லையா? அவரை யாரும் தேடவேயில்லையா? 'வானத்துப் பறவைகளுக்கு உணவளித்த இறைவன் எனக்கும் உணவளிப்பார்', 'வயல்வெளி மலர்களை உடுத்தும் இறைவன் என்னையும் உடுத்துவார்' என இறைவனின் பராமரிப்பின்மேல் முழுமையாக நம்பிக்கை கொண்டவரும் இவராகத் தான் இருந்திருக்க முடியும். அல்லது ஒருவேளை கடவுளின் தூதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் அந்தக் குளத்தில் இறங்கி நீரைக் கலக்காமல் இருந்திருக்கலாம். ஆக, கடவுளின் வரவிற்கான உச்சகட்ட எதிர்நோக்கில் இவர் இருந்திருக்கலாம்.

இப்படியாக ஒரே நேரத்தில் கோபமும், இரக்கமும் தூண்டுகின்றார் இந்த முகம் தெரியாத மனிதர்.

இவர் இன்று எனக்குச் சொல்வது என்ன?

நானும் முப்பத்து மூன்று ஆண்டுகளாய் (இன்னும் முப்பத்தெட்டு ஆகவில்லை!) அல்லது பதினெட்டு ஆண்டுகளாய் ஏதாவது ஒரு தவறான பழக்கத்தை வைத்துக்கொண்டு அதைத் தவிர்க்க முடியாமல் அல்லது தவிர்க்க விரும்பாமல் இருக்கலாம். இதெல்லாம் என்ன பெருசா! யார்தான் இப்படிச் செய்யல? எல்லா நேரமும் நல்லவரா இருக்க முடியுமா? யார் வந்து இதைப் பார்க்கப் போறா? என்று எனக்கு நானே சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு என் வாழ்வில் எந்தவொரு இயக்கமும் இல்லாமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு, 'குளம் கலங்குமா! கலங்காதா!' என்றுகூட பார்த்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை இந்தப் பழக்கங்களை விட்டுவிட நான் பயப்படலாம்.

இப்படி எந்த நிலையில் இருந்தாலும், ஒருநாள் இயேசு என்னருகில் வருவார்.

'நீர் நலம்பெற விரும்புகிறீரா?' எனக் கேட்பார்.

அப்போது என் பதில் என்னவாக இருக்கும்?

'இப்பவேவா! இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!' என்று சொல்வேனா? அல்லது 'இந்தப் பழக்கம் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?' என்று பயப்படுவேனா?

எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் ஒருநாள் விடத்தான் வேண்டும். அதை இன்றே விடலாமே! இந்தப் படிக்கட்டு போதும்! எழுந்து ஊருக்குள் செல்வோம்!



என் மகன் இறக்குமுன் வாரும்!

அரச அலுவலர் இயேசுவிடம், 'ஐயா! என் மகன் இறக்குமுன் வாரும்!' என்றனர்.
(காண்க. யோவான் 4:43-54)

நாளைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் மெசியாவின் வருகைக்குப் பின் இறப்பு இராது என்றும், முழுமையான வாழ்வை அனைவரும் வாழ்வார்கள் எனவும் இறைவாக்குரைக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு இறப்பின் தருவாயிலிருக்கும் சிறுவனைக் காப்பாற்றுகின்றார்.

இறைவனின் பிரசன்னத்தில் இறப்பு இல்லை.
கடந்த வாரம் இணையதளத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை. கூகுள் நிறுவனம் மனிதர்களை 500 வருடங்கள் வாழ வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறதாம். நம் வாழ்நாட்களில் ஆய்வு வெற்றிபெறவில்லையென்றாலும், இனி வரும் காலங்களில் ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம்.

'இறக்குமுன் வாரும்!' என்று இயேசுவை அவசரப்படுத்துகிறார் அரசு அலுவலர்.

இயேசுவால் இறப்பிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியும் என்று நம்பும் அலுவலருக்குள் ஒரு சிறு நெருடல். ஒருவேளை இயேசு வருவதற்குள் தன் மகன் இறந்துவிட்டால் என்ன செய்வது?

நம்பிக்கை என்பதும் சரி. நல்லவராக இருப்பதும் சரி எப்போதும் ஒரு போராட்டம்.

எல்லாத்தையும் நம்பனுமா? அப்படின்னு மனம் கேட்கும்.

கொஞ்சம் கெட்டவனாகத்தான் இரேன்! என்று மூளை சொல்லும்.

இந்த இரண்டு போராட்டங்களிலும் வெற்றி பெறுவதே வாழ்க்கை, வாழ்வு.


Sunday, March 15, 2015

நான் உன்னை மறந்தால்

எருசலேமே! நான் உன்னை மறந்தால்
என் வலக்கை சூம்பிப்போவதாக!
உன்னை நான் நினையாவிடில்,
எனது மகிழ்ச்சியின் மகுடமாக
நான் எருசலேமைக் கருதாவிடில்,
என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
(திபா 137)

நேற்று எங்கள் பல்கலைக்கழகத்தில் சிறப்பு அமர்வு ஒன்று இருந்தது. 'எருசலேமின் அழிவும், சட்ட நூல்களின் எழுச்சியும்' என்ற தலைப்பில் இரண்டு வாரங்கள் கழித்து நடக்கவிருக்கும் ஒரு சிம்போசியத்திற்கான முன்னோட்டமாக அது இருந்தது.

இந்தத் தலைப்பைக் கேட்டவுடன் எனக்கு திபா 137தான் நினைவிற்கு வந்தது.

இதுதான் நாளைய பதிலுரைப்பாடல்.

மிகவும் சோகமான பாடல். நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வெறும் புலம்பல் மட்டுமல்ல. சோகம், கோபம், கையறுநிலை, அந்நியப்படுத்தப்பட்ட வாழ்க்கை, கடவுள் நம்பிக்கை, கடவுளின் மேல் உள்ள பற்று என எல்லாம் பிரதிபலிக்கிறது.

எருசலேமின் மதில்களையும், ஆலயத்தையும், நகரத்தையும் எதிரிகள் அழிக்க நேரிடலாம். ஆனால், எருசலேம் என்பது ஒரு நினைவு. அந்த நினைவை யாராலும் அழிக்க முடியாது.

கடவுளும் கூட ஒரு நினைவுதான். அவருக்காக நாம் எழுப்பும் ஆலயங்கள், செய்யும் வழிபாடுகள் அனைத்தும் இந்த நினைவிற்கு வலுசேர்க்கின்றன. அவ்வளவுதான்.


Friday, March 13, 2015

விடியும் வரை பெண்ணழகு!

'எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்?
யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்?
உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும்
கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!'
(ஓசேயா 6:4)

மற்ற இறைவாக்கினர்களை விட ஓசேயா இரண்டு விதங்களில் வேறுபட்டவர். எப்படி?

1. யாவே இறைவனை கணவனாகவும், இஸ்ரயேலை மனைவியாகவும் சித்தரிப்பது இவர் மட்டுமே. இறைவனுக்கும், மனிதருக்குமான உறவு கணவன்-மனைவி உறவு போலவும் இருக்கலாம் என்ற புதிய சிந்தனைக்கு வழிவகுப்பவர் இவர். ஆiகாயல், இவரை 'அன்பின் அல்லது காதலின் இறைவாக்கினர்' என்றும் அழைப்பர்.

2. ஆலய ஆன்மீகத்தை உடைத்தெறிந்து, இறைவாக்கு ஆன்மீகத்திற்கு வித்திட்டவர். ஆன்மீகம் என்பது ஆலயத்திலோ, ஆலயத்தின் திருப்பண்ட அறையிலோ முடங்கிக் கிடப்பது அன்று. மாறாக, வீதிகளில் மக்கள் படும் அவலங்களைக் கண்டு அதற்கு தீர்வு காண்பது. இந்த இறைவாக்கினர் ஓசேயாதான் 'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்!' என்று இயேசு அடிக்கடிப் பயன்படுத்தும் இறைவாக்கைச் சொன்னவர்.

நாளைய முதல் வாசகம் மூன்று இயற்கை உருவகங்களைக் கொண்டுள்ளது.

இந்த நாட்களில் இத்தாலியில் காலநிலை மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நடுக்கும் குளிர் மறைந்து, மரங்கள் தங்களையே புதிய இலைகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கத் தொடங்கியிருக்கின்றன. புதிய இலைகள், புதிய மலர்கள் என வசந்தகாலத்தின் வாசல் மிக அழகாக இருக்கின்றது.

ஓசேயா சொல்லும் மூன்று உருவகங்கள் எவை?

1. 'அவருடைய புறப்பாடு புலரும் பொழுது போல திண்ணமானது!'
'As certain as the rising of the Sun' - ஆங்கிலத்தில் உள்ள சொலவடை நாம் அறிந்ததே. ஷேக்ஸ்பியர் இதை அழகாகத் தன் கவிதையில் பயன்படுத்துகின்றார்:

'உனக்கு நீயே உண்மையாக இரு!
இரவும் பகலும் போல அது தொடரட்டும்!'

அதாவது, அந்தக்கால மக்கள் காலநிலைகளை சூரியனின் இருப்பிடத்தை வைத்தே கணித்தார்கள். எங்க அய்யாமை லட்சுமியம்மாள் கூட கடைசிவரை அப்படித் தான் மணி பார்த்தார். அந்தக்கால மக்களுக்கு உறுதியாகத் தெரிந்தது சூரியனின் உதயம் மட்டும்தான். ஆக, கடவுளின் வருகை திண்ணம். இந்த உருவகத்தை மற்றொரு நிலையிலும் பார்க்கலாம். அதாவது, இருளை அழிக்க வரும் கதிரவன் திண்ணமாய் வருவதுபோல, உலகின் இருளை அகற்ற இறைவன் என்னும் சூரியன் வருவார்.

2. 'முன்பனிக்கால (இலையுதிர்கால) மழைபோலவும்,
நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும்,
அவர் நம்மிடம் வருவார்'

இந்த இரண்டாம் உருவகத்தில் இறைவனின் வருகை ஏற்படுத்தும் மாற்றத்தைச் சொல்கின்றார் ஓசேயா. இலையுதிர்காலம் அல்லது முன்பனிக்காலத்தின் மழைதான் மரங்களின் பெரும்பாலான இலைகளை உதிர்க்கின்றது. அதே மழைதான் இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலத்தில் மரங்களைத் துளிர்க்க வைக்கிறது. ஆக, அழிப்பவரும் அவரே. ஆக்குபவரும் அவரே. காயப்படுத்துபவரும் அவரே. கட்டுப்போடுபவரும் அவரே.

3. காலைநேர மேகம் போல, கதிரவனைக் கண்ட பனிபோல
காலைநேர மேகமும், கதிரவனைக் கண்ட பனியும் எளிதில் மறையக் கூடியவை. இஸ்ரயேல் கடவுளிடம் காட்டும் அன்பும், பிரமாணிக்கமும் எளிதில் மறைந்து விடுவதாக இருக்கின்றது. இதுவும் ஒரு கணவன்-மனைவி உருவகம் தான். 'விடிகாலை விண்ணழகு! விடியும் வரை பெண்ணழகு!' என்ற தமிழ்த்திரைப்படப் பாடல் நினைவிருக்கிறதா. விடிய விடிய ரசிக்கும் மனைவி விடிந்தவுடன் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் காரணமானவராக மாறிவிடுகிறார். இஸ்ரயேலின் பிரமாணிக்கம் அப்படித்தான் இருந்தது. தனக்குத் தேவை இருந்தபோது மட்டும் கடவுளைப் பயன்படுத்திக்கொண்டு, தேவை முடிந்தவுடன், வேறு தெய்வங்களைத் தேடிப் போய்விடுகின்றனர் இஸ்ரயேலர் மக்கள். இன்றைக்குக் கடவுள் நம் 'பார்ட்டைம்' பார்ட்னராக மட்டுமே இருக்கின்றார் என்றால் இந்த உருவகம் நமக்கும் பொருந்தும்!

Thursday, March 12, 2015

நீர் தொலையில் இல்லை

'அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம். 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்றார்' (காண்க. மாற்கு 12:28-34)

இறையாட்சி, விண்ணரசு, இறையரசு என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றோம். 'இந்தக் குடும்பம் இறையரசின் குடும்பமாக' இருக்க வேண்டும் என நாமே செபம் கூட செய்திருக்கின்றோம். பல்வேறு சூழல்களில் இதைப் பயன்படுத்தியும் இருக்கின்றோம்.

இதன் பொருள் என்ன?

மன்னராட்சி, மக்களாட்சி, மிலிட்டரி ஆட்சி போல இது ஒரு வகை ஆட்சியா?

இந்த ஆட்சிநிலைகளுக்கும், இறையாட்சிக்கும் என்ன வித்தியாசம்?

முதல் ஏற்பாட்டில் மக்கள் தங்களால் ஏற்படுத்தப்பட்ட அரசர்கள் தங்களைக் காக்க முடியாத நிலை வந்தபோது கடவுளையே அரசராக ஏறெடுத்துப் பார்க்கின்றனர். 'தாவீதின் அரியணை என்றென்றும் நிலைத்திருக்கும்' என்ற இறைவாக்கை நிறைவேற்ற மெசியா ஒருவர் வருவார் எனக் காத்திருக்கின்றனர். ஆனால் மெசியாக வந்தவர் தாவீதின் வழி வந்தாலும், அரியணை இன்றி வந்ததால் பலரால் இயேசுவை அரசராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைவிட ஒரு விநோதம். இயேசு தன்னை அரசன் என்று அறிக்கையிட்டதும் இல்லை.

அப்படியென்றால் இறைவனின் அரசு வராதா?

இறைவனின் அரசுக்கு வேறு அர்த்தங்கள் உள்ளனவா?

'காலம் நெருங்கிவிட்டது. இறையரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்புங்கள். நற்செய்தியை நம்புங்கள்' என்று தன் பணிவாழ்வைத் தொடங்குகிறார் இயேசு. இயேசுவின் வருகைதான் இறையரசு என்றால், இயேசுவும் ஆள்வோரின் பார்வையில் ஒரு தோல்வியாக இறந்து போகின்றார். இப்போது இயேசு அரசராக மீண்டும் வருவார் என்று காத்திருக்கத் தொடங்கிவிட்டோம்.

கடவுளின் அன்பை உணர்ந்து, அந்த அன்பை மற்றவருக்குத் தரத் தயாராக இருக்கும் ஒரு இளைஞரை இன்று இயேசு, 'நீ இறையாட்சிக்குத் தூரமாய் இல்லை!' என்கிறார். இன்னும் நெருக்கமாக வர என்ன செய்ய வேண்டும்?

அன்பு செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!'


Wednesday, March 11, 2015

கடின இதயம்!

சகாய மாதா நவநாட்களிலோ, அல்லது செபஸ்தியார் நவநாட்களிலோ நீங்கள் பங்கேற்றிருக்கிறீர்களா?

இந்த நவநாள் செபங்களில் தொடக்கமாக இருப்பது திருப்பாடல் 95. பழைய மொழிபெயர்ப்பில் இதன் எண் 94.

இதுதான் நாளை நாம் வாசிக்கவிருக்கும் திருப்பாடல்.

'வாருங்கள்! ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்!
அவரே நம் கடவுள்! நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்.
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.'

வாருங்கள்...புகழ்வோம் என்று வெற்றி ஆர்ப்பரிப்போடு தொடங்கும் பாடல், உங்கள் இதயங்களை நீங்கள் கடினப்படுத்திக் கொண்டதால் 'நான் அளிக்கும் இளைப்பாற்றியை அடைய மாட்டீர்கள்!' என்று சோகத்தோடு முடிவடையும்.

இந்தப் பாடலும், நாளைய எரேமியா நூல் முதல் வாசகமும் சொல்வது இதுதான்: ஆண்டவர் தன் மக்களை தன் சொந்தம் என உரிமை கொண்டாடினாலும், அவர்கள் அவரின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ள மறுத்துவிடுகின்றனர்.

நம்ம கடவுள் தான! நம்மள என்ன செஞ்சிடப் போறார்? - என்ற மனநிலையா?

அல்லது

கடவுள் நெருங்கி வந்துவிட்டதால் மிகச் சாதாரணமாகிப் போனாரா?

'உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்!' என்கிறார் ஆண்டவர்.

'கடின இதயம்!' - விவிலியத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல் இது. இதை 'இறுகிய சிந்தனை!' என்றும் மொழிபெயர்க்கலாம். ஏனெனில் இதயம்தான் சிந்தனைகளைக் கொண்டுள்ளது என்பது பழைய ஏற்பாட்டுப் புரிதல்.

நம் சிந்தனை இறுகிவிடும்போது நம்மால் கடவுளையும் முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. மற்றவர்களையும் முழுமையாகப் பார்க்க முடிவதில்லை.


Tuesday, March 10, 2015

வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

'மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?'
(இணைச்சட்டம் 4:7-8)

நாம் வாழும் இந்த உலகம் அடையாளங்களைக் கொண்டாடுகின்ற உலகம்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு அடையாம் இருக்க வேண்டும். அடையாளங்களே நினைவில் நிற்கின்றன. 

இணைச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்கள் தங்களை இரண்டு அடையாளங்களோடு ஒன்றிணைத்துப் பார்க்கின்றனர்:

அ. எங்கள் கடவுள் எங்களுக்கு மிகவும் நெருங்கியவர்.

ஆ. எங்களுக்கென்று சட்டங்கள் இருக்கின்றன.

இவற்றில் 'அ' என்பது மேல்நோக்கிய அடையாளம். 'ஆ' என்பது கீழ்நோக்கிய அடையாளம். எங்களுக்கு மேல் இருக்கும் கடவுளோடும் நாங்கள் இணைந்திருக்கிறோம். எங்களோடு இருக்கும் எம் சகோதர, சகோதரிகளோடும் நாங்கள் இணைந்திருக்கின்றோம்.

மேல் நோக்கி எங்களை இணைப்பது கடவுளின் நெருக்கம். கீழ்நோக்கி எங்களை இணைப்பது சட்டதிட்டங்கள்.

கிறிஸ்தவ மதமும் இந்த இரண்டு அடையாளங்களில் யூத மதத்தை ஒத்துப் போகிறது.

உதாரணத்திற்கு, கத்தோலிக்கத் திருஅவையில் 'மனுவுருவாதல்' நிகழ்வில் கடவுள் நம்மோடு என இறங்கி வந்திருக்கிறார் எனக் கொண்டாடும் நாம், நமக்கென்று சட்டதிட்டங்களும் (திருச்சபைச் சட்டம்) வைத்திருக்கின்றோம். 

ஆக, கடவுளின் நெருக்கமும், சட்டதிட்டங்களும் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகின்றன.

இந்தப் பிரித்துக் காட்டுதல் நாம் மற்றவர்களைவிட பெரியவர்கள் அல்லது மேலானவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காகவா? இல்லை. அடையாளங்கள் நம் உள்அடையாளங்களாக மாறி நம் வாழ்வை மாற்ற வேண்டும்.

தவக்காலத்தில் நாம் மையமாக வைத்திருக்கும் சிலுவைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன: மேல் நோக்கி செல்லும் மரம் கடவுளுக்கும், நமக்கும் உள்ள நெருக்கத்தையும், குறுக்கே செல்லும் மரம் நமக்கும், பிறருக்கும் உள்ள பொறுப்புணர்வைத்தானே காட்டுகிறது?


Monday, March 9, 2015

நீயும் உன் உடன் பணியாளருக்கு!

'நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல
நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?'

(காண்க மத்தேயு 18:23-35)

தனக்கு எதிராகக் குற்றம் செய்யும் சகோதரர் ஒருவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? - ஏழு முறையா, எழுபது முறையா? - எனக்கேட்கும் தூய பேதுருவுக்குப் பதில் மொழியாக இயேசு கூறும் உருவகமே நாளைய நற்செய்தி வாசகம்.

இந்த உருவகம் விண்ணரசைப் பற்றிய உருவகம் என்று தொடங்கினாலும், மன்னிப்பு என்ற கருத்தோடுதான் நிறைவடைகிறது.

இந்த உருவகத்தில் வருபவர்கள் மூன்று பேர்:
1. அரசன்
2. பணியாளர் ஒன்று (10000 தாலந்து கடன்பட்டவர்)
3. பணியாளர் இரண்டு (100 தெனாரியம் கடன்பட்டவர்)

அரசனுக்குக் கீழ்தான் இந்த இரண்டு பணியாளர்களும் இருக்கின்றனர். இரண்டாம் பணியாளர் முதல் பணியாளரின் உடன்பணியாளர்.

தாலந்து என்பதுதான் உச்சகட்ட கரன்சி (நம்;ம ஊர் ஆயிரம் ரூபாய்த்தாள் போல!). ஒரு தாலந்து என்பது 20.4 கிலோ வெள்ளிக்குச் சமம். அல்லது ஒரு தாலந்து என்பது 6000 திராக்மாக்கள். அல்லது ஒரு தாலந்து என்பது ஒரு சாதாரண கூலிக்காரரின் 15 வருட சம்பளத்தின் மொத்தம். ஒரு தாலந்தே இவ்வளவு என்றால் பத்தாயிரம் தாலந்து எவ்வளவு இருக்கும் என நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் இதற்கு மேல் எண்ணே இல்லை. இதுதான் எண்ணின் உச்சம். ஆக, முதல் பணியாளர் பட்ட கடன் மிக, மிக, மிகப் பெரியது. கணக்கில் அடங்காதது. பணியாளரால் திரும்ப அடைக்க முடியாத அளவிற்கு பெரியது. இந்த நிலையில் தன் தலைவனாம் அரசனிடம மன்னிப்பு கேட்க, அரசனும் மன்னித்து விடுகின்றார். இந்த மன்னிப்பால் அரசனுக்கு எவ்வளவு பெரிய வருவாய் இழப்பு இருந்திருக்கும்? (இந்தப் பணத்தை வைத்து அந்தக் காலத்தில் சிரியா, பொனிசியா, யூதேயா மற்றும் சமாரியா என்ற நான்கு நாடுகள் ஓர் ஆண்டிற்கு ரோமிற்கு வரியாக இதைக் கட்டியிருக்க முடியும்!)

தெனாரியம் ஒன்பது ஒருநாள் கூலி. 100 தெனாரியம் என்பது 100 நாள் கூலி. உடன்பணியாளனின் கடன் முதல் பணியளானின் கடனில் ஆறுலட்சத்தில் ஒரு பகுதிதான் (1/600,000). இரண்டாம் பணியாளனும் இரக்கம் வேண்டி நிற்கிறான். ஆனால் இரக்கம் காட்ட மறுக்கிறான் முதல் பணியாளன்.

உருவகத்தின் நோக்கம் யார் அதிகம் மன்னித்தார் அல்லது யார் குறைவாக மன்னித்தார் என்பதல்ல.

வேறு என்ன?

நாம் இரக்கத்தை கடவுளிடமிருந்து பெறுகிறோம் என்றால் அதே இரக்கத்தை நமக்குக் கீழிருப்பவர்கள் மேலும் காட்ட வேண்டும்.

ஆக, இரக்கம் என்பது ஒருவழிப் பாதை அல்ல. இருவழிப்பாதை. ஒன்றை நாம் பெறும்போது, மற்றவருக்கு அதைக் கொடுக்க வேண்டும்.

'கடன் கொடுக்காதே! கடன் வாங்காதே!
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும்! நண்பனும் போய்விடுவான்!'
என்பார் ஷேக்ஸ்பியர்.

'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்.
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தவேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்!'
(உரோமையர் 13:8)


Sunday, March 8, 2015

சிறு பிள்ளையின் உடல் போல

'சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபோது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறு பிள்ளையைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர்.'

'எனவே, நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப்போல மாறினது.'

(காண்க. 2 அரசர்கள் 5:1-15)

இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் தொழுநோய் பிடித்திருந்த சிரியா நாட்டுப் படைத்தலைவர் நாமான் நலம் பெறுவதே நாளைய முதல் வாசகம்.

இந்தப் பகுதியில் முதலாகவும், இறுதியாகவும் நின்று, இந்தப் பகுதியை பிரித்துக் காட்டும் ஒரு சொல்: 'சிறு பிள்ளை'. 'என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?' என்று நாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். இந்த நிகழ்வின் நாயகன் எலிசா அல்லது நாமான் என்று சொன்னாலும், உண்மையான நாயகி இந்தச் சிறு பிள்ளைதான்.

தான் தன் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டிருந்தாலும், தன் நாட்டில் நலம் தரக்கூடிய இறைவாக்கினர் ஒருவர் இருக்கிறார் என்று தைரியமாகத் தன் தலைவியிடம் சொல்கின்றார். என்னே! இந்த இளவலின் நாட்டுப்பற்றும், கடவுள் நம்பிக்கையும்!

ஒரு சிறு குழந்தை தானே சொல்கிறது என்று அதை ரொம்ப சாதாரணமாக எடுக்காமல், 'நீ சொல்றதயும் செஞ்சு பார்ப்போமே!' என்று பயணம் மேற்கொள்ளத் தயாராகின்றார் நாமான். அந்த சிறு பிள்ளையின் வார்த்தையே நம்பும்போதே நாமான் உள்ளத்தளவில் குணமடைந்து விடுகிறார்.

நலம் பெறுவதற்கு வெள்ளி, பொன், பட்டாடை என பரிசுப்பொருட்களோடு கிளம்பும் நாமான் நம்பிக்கைக்குப் பாடம். அதாவது, நாம வேளாங்கண்ணிக்கு ஏதோ வேண்டுதல்க்கு போகும்போது எப்படிப் போறோம்? முதலில் போய் வேண்டுகிறோம். வேண்டியது கிடைத்தபின் ஓராண்டு கழித்து நாம் நேர்ந்து கொண்டதைச் செலுத்தப் போகிறோம். இங்கே நாமானின் நம்பிக்கை நம் நம்பிக்கையைவிட ஒருபடி மேல். முதலில் போவோம். தொழுநோய் சரியாயிடுச்சுனா யார்கிட்டயாவது 'கிப்ட்' கொடுத்தனுப்புவோம் என்று இராமல், கண்டிப்பாக நலம் கிடைக்கும், அதற்கான பரிசை நாம் உடனே கொடுக்க வேண்டும் என்று உடன் எடுத்துச் செல்கின்றார் நாமான். வாழ்வியல் மேலாண்மையில் இது ஒரு நல்ல பாடம். வாழ்க்கை நமக்கு அடுத்த நிமிடம் எதை நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, அந்தந்த நேரத்துக் கடமையை அந்தந்த நிமிடம் நிறைவேற்றிவிடுதல் நலம்தானே.

எலிசா பெரிய மாய மந்திரங்கள் எல்லாம் சொல்லி நலம் தருவார் என்று நாமான் நினைத்திருக்க, 'நீர் போய் யோர்தான் நதியில் குளியும்!' என்று எலியா தன் பணியாளனிடம் சொல்லி அனுப்புகின்றார்.

இந்த இடத்தில் எலியாவின் மனத்திடத்தைப் பாராட்ட வேண்டும். 'காசுக்கு விலைபோகாதவர் எலியா!' சிரியா நாட்டுப் படைத்தலைவன். பெரிய ஆள். அவரை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டும். நாளைப்பின்ன நமக்கு ஏதாவது தேவை இருந்தா இவரது சிபாரிசு தேவைப்படும். இந்த நினைப்பெல்லாம் இல்லை இந்தக் கடவுளின் மனிதனுக்கு. கடவுளின் அருளையும், என்னையும் உன் காசால் வாங்க முடியாது என உறுதியாக இருக்கின்றார் எலியா.

எலியாவின் கண்டுகொள்ளாத்தனம் கொஞ்சம் எரிச்சல் தரவே, கோபமாக வீடு திரும்புகிறார் நாமான். அங்கேயும் ஒரு பணியாள் தலையிடுகிறார். 'சும்மா குளிச்சுதான் பார்ப்போமே!' - குளிக்கிறார். நலம் பெறுகிறார்.

'சிறு பிள்ளையின் உடல் போல' ஆகிறது அவரது தொழுநோய் பிடித்த உடல்.

முதலில் உள்ளத்தில் சிறுபிள்ளையாய் இருந்த நாமான், உடலிலும் சிறுபிள்ளையாக மாறுகின்றார்.

நம் வாழ்க்கைப் பயணமும் கூட சிறுபிள்ளையிலிருந்து, சிறுபிள்ளையை நோக்கித்தானே செல்கின்றது. நம் முதிர்வயதில் நிற்க, நடக்க, சாப்பிட என எல்லா இயக்கங்களுக்கும் நாம் பிறரைச் சார்ந்திருக்கத் தொடங்குவதால் ஷேக்ஸ்பியர் முதிர்பருவத்தை இரண்டாம் குழந்தை நிலை என்றே அழைக்கின்றார். நம் உடல் முதிர்ச்சி அடைந்தாலும் உள்ளம் ஏனோ சின்னக் குழந்தையின் உள்ளம் போல ஆகிவிடுகிறது. எல்லாம் புதிதாகத் தெரிய ஆரம்பிக்கிறது.

ஆக, ஒவ்வொரு நாளும் 'காம்ப்ளான்காரன்' சொல்வது போல வேவவவவவகமாக வளராமல், கொஞ்சம் கொஞ்சமாக சிறுபிள்ளையாகக் குறையலாமே!


(இன்று நம் வலைப்பதிவை அலங்கரிக்கும் இளவல் என் தங்(க)கை (மரு)மகள் ஃபிலோ டேன்யா)


எருசலேம் ஆலயமும் இந்தியாவின் மகளும்

'ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.' (யோவான் 2:21)

2012 டிசம்பர் 16ஆம் தேதி நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த கூட்டுக் கற்பழிப்பில் பலியான ஜோதி சிங் (1989-2012) அவர்களை மையமாக வைத்து இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் இயக்கத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' (India's Daughter) என்ற ஆவணப்படம் பார்த்தேன் இன்று. இந்தியாவில் ஒவ்வொருவரும் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய காணொளி, நம் நாட்டு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இன்றுவரை யுடியூபிலும் இருக்கிறது. நம் நாட்டில் ஒருவேளை யுடியூபிலும் தடைசெய்யப்பட்டிருக்கலாம்.

தடை பற்றிய செய்திகளுக்கு பின்னால் வருவோம்.

முதலில் இந்தக் காணொளி சொல்வது என்ன என்று பார்ப்போம்?

ஜோதி சிங் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி. இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தவர். 2012 டிசம்பர் 16 இரவு 9:30 மணிக்கு தன் தோழனுடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஒரு பேருந்தில் ஏறுகின்றார். அந்தப் பயணமே அவரின் இறுதிப் பயணமாக இருக்கின்றது. அவர் பயணம் செய்த பேருந்து பயணிகள் செல்லும் பொது பேருந்து கிடையாது. ஆக, அதில் அவர்கள் ஏறியிருக்கவே தேவையில்லை. டெல்லியின் போக்குவரத்து வசதி பற்றி தெரியாததால் அவர் பேருந்தில் ஏறியதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது.

ஐந்து பேர் (அதில் ஒருவருக்கு 17 வயது! ஒருவர் திருமணம் ஆனவர்!) சேர்ந்து செய்த ஒரு கற்பழிப்பு. கற்பழித்துவிட்டு (மிகக் கொடூரமாக!) சாலையில் குற்றுயிராய் எறிந்து விட்டுச் செல்கின்றனர். உடனடி சிகி;ச்சை அளிக்கப்பட்டு, மேற்படி சிகிச்சைக்காக சிங்கப்பூர் எடுத்துச் செல்லப்பட்டாலும் ஒரு வாரத்தில் பரிதாபமாக இறந்து விடுகின்றார்.

படத்தின் இயக்குனர் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் (இப்போது இருப்பது நால்வர் தாம். ஒருவர் தற்கொலை செய்து விட்டார்!), அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஜோதியின் பெற்றோர், தோழன், குற்றவாளிகளுக்காக வாதிடுபவர், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் இருவர், காவல்துறை உயர் அதிகாரி, இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவர்களில் இரண்டு பேர் என மொத்தம் 21பேரை நேர்காணல் செய்திருக்கின்றார்.

'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை ஐந்து முக்கியமான இடங்களில் பயன்படுத்தி, இறுதியாக 'மகிழ்ச்சி சில அடிகளுக்கு அப்பால்' இருந்தாலும் சோகமே மிஞ்சுகிறது எனப் பதிவு செய்திருக்கின்றார். 'ஜோதி' எல்லா இருளையும் அகற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு காணொளி நிறைவடைகிறது.

மிகவும் சிரத்தை எடுத்து நேர்காணல்கள் செய்தது, கருத்துக் கோர்வை, ஆட்கள் தெரிவு. இடம் தெரிவு, படப்பிடிப்பு. நேர்காணல் மொழிபெயர்ப்பு என எல்லாமே அருமை. இடையிடையே வரும் மனவியல் நிபுணர் மனித மனத்தில் இருக்கும் வன்முறை, சமூகத்தின் மேலுள்ள கோபம் பற்றி சொல்வது முத்தாய்ப்பு.

அப்புறம் எதுக்கு தடை அப்படிங்கிறீங்களா?

குற்றவாளி முகேஷ் சிங்கின் நேர்காணலில் அவர் சொல்லும் சில வாக்கியங்களும், அவரின் வழக்கறிஞர்கள் சொல்லும் வார்த்தைகளும், ப்ரயாஸ் என்ற என்.ஜி.ஓ மேலாளர் சொல்லும் கருத்தும் முகம் சுளிக்க வைக்கிறது. அப்படி என்ன சொன்னார்கள்?

'அவள் (ஜோதி) கொஞ்சம் ஒத்துழைத்து அமைதியாக கற்பழிக்க அனுமதித்திருந்தால் நாங்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டோம்!'

'ஒரு கை மட்டும் ஓசை எழுப்ப முடியுமா? இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒரு பெண்ணுக்கு ரோட்டில் என்ன வேலை? அவளே விரும்பிதான் பேருந்தில் ஏறினாள்!'

'பெண் என்றால் பூ. ஆண் என்றால் முள். முள்ளின் இயல்பு குத்துவதுதான்!'

'இந்தியக் கலாச்சாரத்தில் பெண்ணுக்கு இடமே இல்லை. ஆணைச் சார்ந்தவளே பெண்.'

'பெண்ணை வைரம் என்று சொல்கிறீர்களே. வைரத்தை பூட்டித்தான் வைக்க வேண்டும். ரோட்டில் வைத்தால் நாய்கள் கடிக்கத்தான் செய்யும்.'

'எல்லாரும் கற்பழிக்கிறார்கள். கற்பழிப்பு வழக்கு உள்ள 250 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு எதற்காக எங்கள் நால்வரை மட்டும் கைது செய்ய வேண்டும்.'

'இந்தியா ஒரு ஏழை நாடு. 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். காசுள்ளவன் காசு கொடுத்து பெண்ணிடம் போகிறான். காசு இல்லாதவன் தன் வன்முறையால் பெண்ணிடம் போகிறான்!'

இதை வாசிக்கும் போது எந்தவொரு சாமானியனுக்கும் கோபம் வரவே செய்யும். மேலும் இந்த முகேஷ் சிங் மற்றும் அவருக்காக வாதிடும் வக்கீல்களுக்கும் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை விடுவிக்கப்பட்டால் அவர்கள் தொடர்ந்து கற்பழிப்புகள் நடத்துவார்கள் என்பதும் தெரிகிறது.

எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள்:

1. இந்தக் காணொளி முழுவதும் நேர்காணல் வழங்கிய ஜோதியின் பெற்றோர் எதற்காக இப்போது பிபிசி நிறுவனத்தின் மேலும், இயக்குநர் மேலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்? நேர்காணல் வெளிவரும் என்று கண்டிப்பாக அவர்களுக்குத் தெரிந்திருக்கும். நேர்காணல் எடுத்தவர்களும் சட்டதிட்டப்படி தான் செய்திருப்பார்கள்.

2. குற்றவாளியை எப்படி அவர் பேட்டி கண்டார் என்று திகார் ஜெயில் அதிகாரிகளும், அரசாங்கமும் கொந்தளிக்கின்றது. இந்தக் காணொளியைப் பார்த்தால் இது ஒரு நாள் அல்லது இருநாளில் எடுக்கப்பட்டது அல்ல. ஆக, அடிக்கடி நேர்காணல் செய்திருப்பார்கள். இப்படி ஒரு வெளிநாட்டவர் நம் நாட்டின் முக்கிய சிறைச்சாலையான திகார் சிறைக்குள் எளிதாக நுழைந்துவிட முடியுமா? அப்போது இந்த அதிகாரிகள் எங்கு போனார்கள்?

எனக்கு இரண்டு கோபங்கள்:

1. இந்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் நம்ம ஊர் மீடியாக்காரர்கள். குறிப்பாக நம்ம என்டிடிவி மற்றும் சிஎன்என் க்ரூப். இதற்குக் காரணம் வியாபாரப் போட்டி. இந்தக் காணொளியை வைத்து தங்கள் சேனல் டிஆர்பி ரேட்டிங் ஏறாது எனவும், பிபிசி ரொம்ப ஈஸியா பெயர் சம்பாதிச்சுடும் என்பதும் அவர்கள் ஆதங்கம். ஆக, இந்தப் படத்தைப் பற்றிய பார்வையை மாற்றுகிறார்கள்.

2. இந்தக் காணொளியின் பின்புலத்தில் எனக்கு தோன்றுவது என்னவென்றால் இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் கையில்தான் இருக்கின்றோமோ என்ற நினைப்புதான். இங்கிலாந்துக்காரர் ஒருவர் நம்ம ஊரின் தீமை பற்றி எப்படி படம் எடுக்கலாம்? 'நல்லது யார் சொன்னாலும் ஏத்துக்கணும்!' அப்படின்னு நீங்க சொல்லலாம். ஆனா, லண்டன் மாநகரத்தில் ஒரு இந்திய ஆண் அல்லது பெண் அனுபவிக்கும் நிறப் பாகுபாட்டை பற்றி நாம் அங்கே போய் நேர்காணல் செய்து படம் எடுத்துவிட முடியுமா? உன்கிட்ட காசும், மீடியாவும், கேமராவும் இருக்கிறது என்பதற்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஏன் உன் கேமராவை எடுத்துகிட்டு சிரியாவுக்குப் போய் அங்க ஈசிஸ் என்ன செய்றாங்கணு எடு! அல்லது அமெரிக்கா போய் கறுப்பு-வெள்ளை சண்டைகளை எடு! 'பேச்சுரிமை இல்லை இந்தியாவில்!' அப்படின்னு கொதிக்கிறார் இயக்குநர். ஏம்மா! பேச்சுரிமை இல்லாமதான் நீங்க இவ்ளோ பேரை இண்டர்வியு பண்ணுனீங்களா? எனக்குத் தெரிந்த ஒரு அருட்பணியாளரைப் பற்றிச் சொல்லும்போது, 'அவர் ஏழைகளை வைத்து பணக்காரர் ஆனவர்!' என்று சொல்வார்கள். இந்த இயக்குநர் செய்ததும் அப்படித்தான். தான் நேர்காணலில் சந்தித்த எல்லா நிர்கதியற்றவர்களையும் வைத்து அவர் ஃபேமஸாகிக் கொண்டார்.

சரி! ரொம்ப கோபப்பட வேண்டாம்!

என் தனிப்பட்ட அனுபவமாக நான் சொல்வது இதுதான். இந்த ஆணவப் படம்! அல்லது ஆவணப் படம் ஒரு ஆத்ம சோதனையாக எனக்கு இருந்தது. எனக்கு உடல் கொடுத்த என் தாய், என் உடன்பிறந்த என் சகோதரி, சகோதரியின் மகள் என என் வீட்டில் உள்ள பெண்களையோ, என் நட்பு வட்டம், பணி வட்டம் என நான் பழகுகின்ற பெண்களையோ, வழியில், பயணத்தில் போகிற போக்கில் பார்க்கும் பெண்களையோ பார்க்கும் போது என் உள்ளத்தில் நிகழும் மாற்றம் என்ன? அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? வன்முறை என்பது செயலில் மட்டும் அல்ல, சொல்லிலும், சிந்தனையிலும் கூட இருக்கலாம். ஆக, எந்த நிலையிலும் வன்முறை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொருவருக்குள்ள எல்லையை மதிக்க வேண்டும் என்றும் நான் அறிந்தோ, அறியாமலோ மேற்கொண்ட வன்முறைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தியது இந்தக் காணொளி.

நாளைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மையாக்கும் நிகழ்வை வாசிக்கிறோம். 'தன் உடலையே கோவில்' என்று சொல்கிறார் இயேசு. மனித உடல் - ஆணோ, பெண்ணோ - ஒரு கோவில். கோவிலுக்குரிய மதிப்பையும், மாண்பையும் கொடுப்பது நம் கடமை.

பெண்கள் தின வாழ்த்துகள்! பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!

'இந்தியாவின் மகள்' ஆவணப் படத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்:

India's Daughter


Friday, March 6, 2015

உமக்கு நிகரான இறைவன் யார்?

'உமக்கு நிகரான இறைவன் யார்?'

(மீக்கா 7:18-20)

"Only thing man is proud of having small is cellphone!"'

மொபைல்போனைத் தவிர மற்ற எல்லாமே நாம் பெரிதாகவே வைத்துக்கொள்ள விரும்புகிறோம்: பெரிய வீடு, பெரிய கடை, பெரிய மனிதர், பெரிய க்ரவுண்ட், பெரிய டிவி என்று பெரிய, பெரிய என விரும்பும் நாம், நாம் கும்பிடும் கடவுளும் பெரிதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். கடவுள் 'பெரிதாக' இருந்தால் மட்டும் போதாது. 'எல்லாரையும் விட பெரியவராக இருக்க வேண்டும்!' - இதுவே நம் விருப்பம். இதுவே நம் வெறி. இதற்காக நாம் எதையும் செய்வோம். யாரையும் கொல்வோம்.

ஒரே கடவுள் தான் இருக்கின்றாரா, அல்லது நிறையக் கடவுளர்கள் இருக்கிறார்களா? நிறையக் கடவுளர்கள் இருக்கிறார்கள் என்றால் எந்தக் கடவுள் உண்மையானவர்? எல்லாக் கடவுளர்களும் உண்மையானவர்கள் என்றால் எந்தக் கடவுள் பெரியவர்?

விவிலியத்தில் கடவுளர்களின் பிரசன்னம் குறித்து இரண்டு வகை கருத்தியல்கள் உள்ளன:

1. மோனோதெயிசம் (ஒருகடவுள் கொள்கை). இந்தக் கொள்கையின்படி 'கடவுள் ஒருவரே. அவர் தான் யாவே இறைவன்!'. இதன் படி வேறு கடவுள் இருக்கிறார் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

2. மோனோலேட்ரி (ஒருவழிபாட்டுக் கொள்கை). இந்தக் கொள்கையின்படி நிறையக் கடவுள்கள் இருக்கிறார்கள். அல்லது இருக்கலாம். ஆனால், ஒரே ஒரு இறைவனை அல்லது கடவுளை மட்டுமே வழிபட வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிரபலமான 'சிகாகோ உரையை' வாசித்துக் கொண்டிருந்தேன். இந்தியத்திருநாடு எல்லா மதங்களுக்கும் தன் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாகவும், இந்து மதம் எத்தனை மதங்கள் வந்தாலும் தன் இயல்பை இழக்காமல் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் எனவும், மறைப்போதகம் இல்லாமல் உலகின் பல நாடுகளில் வேரூன்றி நிற்கும் மதமும் இந்து மதம் எனவும் அழகாகப் பேசியுள்ளார். ஆனால், இன்று புழக்கத்தில் இருக்கும் இந்துத்துவம் விவேகானந்தரின் கனவைவிட பிறழ்வுபட்டே நிற்கிறது.

நேற்று பாஸ்கா மந்திரிப்புக்காக ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். கிறிஸ்தவர் வீடுதான். கதவைத் திறந்தவரும் கிறிஸ்தவர் தான். 'இப்போ என்ன ப்ளஸ்ஸிங்?' என்று கேட்டார். 'பாஸ்கா!' என்றேன். 'ஓ! தவக்காலம் தொடங்கிவிட்டதா? பாஸ்கா வந்துவிட்டதா?' என்று கேட்டார். போப்பாண்டவர் ஆயராக இருக்கும் ரோம் நகரத்தில் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிபிசி ஐரோப்பிய நாடுகளில் சர்வே ஒன்றை எடுத்தது. மக்கள் கண்களில் படும் அடையாளங்களை எடுத்து எது மக்கள் மனதில் பதிந்திருக்கிறது, எதன் அர்த்தம் மக்களுக்குப் புரிந்திருக்கிறது என்பதுதான் ஆய்வின் மையம். 'எம்' என்றால் மெக்டொனால்டு என்பதுதான் முதலிடம் பெற்றது. 'சிலுவை' என்றால் கிறிஸ்தவம் என்பது எட்டாம் இடம் பெற்றது. ஆக, சிலுவையையே பார்த்திராத அல்லது கோவிலுக்கே வராத 'கிறிஸ்தவர்கள்' நிறையப்பேர் இருக்கவே செய்கிறார்கள்.

ஒருபக்கம் கடவுளைப் பற்றிய அக்கறையில்லாத நிலை. மறுபக்கம் கடவுளைச் சண்டைப்பொருளாக்கும் நிலை.

'உமக்கு நிகரான இறைவன் யார்?' என்று கேட்பதற்கு காலத்திற்குட்பட்ட பதில் ஒன்றும் இல்லை.


Thursday, March 5, 2015

அவன் என்னைப் போல இல்லை!

ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாக இருக்கிறான்!

(காண் தொடக்கநூல் 37:3-4,12-13,17-28)

கடந்த ஞாயிறன்று ஈசாக்கையும், இயேசுவையும் உருவகப்படுத்திப் பார்த்து அவர்களிருவருக்குமிடையே ஏழு ஒற்றுமைகளைக் கண்டுபிடித்தோம். ஈசாக்கைத் தொடர்ந்து முதல் ஏற்பாட்டில் நாம் காணும் இயேசுவுக்கான மற்றொரு உருவகம் யாக்கோபின் மகன் யோசேப்பு. யோசேப்புக்கும், இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?

1. தன் தந்தையால் மிகவும் அன்பு செய்யப்பட்ட மகன் யோசேப்பு - வானகத் தந்தையினால் மிகவும் அன்பு செய்யப்பட்ட ஒரே மகன் இயேசு.

2. யாக்கோபு தன் மகன் யோசேப்புக்கு அழகு வேலைப்பாடுகள் மிகுந்த ஓர் அங்கியைச் செய்து கொடுக்கிறார் - வானகத் தந்தை தன் மகன் இயேசுவுக்கு 'மனித உடல்' என்னும் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியைச் செய்து கொடுக்கிறார்.

3. தங்கள் தொழிலே கதி என்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன் சகோதரர்களைத் தேடிச் செல்கின்றார் யோசேப்பு - பாவமே கதி என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த மானிட சகோதரர்களைத் தேடி வருகின்றார் இயேசு.

4. தன் சொந்த சகோதரர்களின் பொறாமைக்கு ஆளாகின்றார் யோசேப்பு - தன்னுடன் வாழ்ந்த தன் சொந்த மக்களின் பொறாமைக்கு ஆளாகின்றார் இயேசு.

5. தன்னோடு உண்டு, உறங்கிய சகோதரர்களே யோசேப்பை இஸ்மயேலரிடம் விற்கத் துணிகின்றனர் - இயேசுவோடு உண்டு, உறங்கிய யூதாசே அவரைத் தலைமைக் குருக்களிடம் விற்கத் துணிகின்றார்.

6. யோசேப்புக்கு பேசப்பட்ட விலை இருபது வெள்ளிக்காசுகள் - இயேசுவுக்கு பேசப்பட்ட விலை முப்பது வெள்ளிக்காசுகள்.

7. யோசேப்பின் ரத்தம் என்று காட்டுவதற்காக ஓர் ஆட்டைக் கொல்கின்றனர் சகோதரர்கள் - இயேசு இறக்கும் நேரம் பாஸ்காப்பலிக்கான ஆடுகளைக் கொல்கின்றனர் ஆலயக் குருக்கள்.

8. 'இவன் கதை முடிந்தது' என்று நினைத்தவர்களுக்கு, யோசேப்பு 'எகிப்தின் ஆளுநராவார்' என்று தெரியவில்லை. 'இவன் கதை முடிந்தது' என்று நினைத்தவர்களுக்கு இயேசு 'உயிர்த்தெழுந்து வானகம் ஏறிச்செல்வார்' என்று தெரியவில்லை.

நாளைய முதல் வாசகத்தைப் பாருங்களேன்.

விறுவிறுப்பு, குழப்பம் - இந்த இரண்டு செயல்கள் தான் யோசேப்பின் சகோதரர்களிடம் மேலோங்கி இருக்கின்றன.

யோசேப்பு தூரத்தில் வருவதைக் கண்டவுடன், அவர்களின் மூளை பல்வேறு யோசனைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறது:

'இவன் கனவு காண்பவன்'

'இவனைத் தீர்த்துக் கட்ட வேண்டும்'

'இவனைக் கொல்வோம்'

'வேண்டாம். குழியில் தள்ளுவோம்'

'இல்லை. இப்போது சாப்பிடப் போவோம்'

'அங்க பாரு! ஒரு ஒட்டகக் கூட்டம் வருது!'

'ஆமா! வாங்க அவனைக் குழியிலிருந்து தூக்கி வந்து இவங்களுக்கு வித்துடுவோம்!'

'இவனுக்கு எவ்வளவு தருவீங்க!'

'இருபது வெள்ளிக்காசுகள்!

'இந்தாங்க! இவன வச்சிக்கோங்க!'

'டே...டே...அவன் சட்டையைக் கழத்துங்கடா....அதுல ஏதாவது ரத்தத்தைச் சிந்தி நம்ம அப்பன், அந்தக் கிழவன்ட்ட போய்க் காட்டுவோம்...'

'ஆமான்டா...நல்ல ஐடியா...டேய்...ஒட்டகத்துல இருந்து கீழே இறங்குடா...சட்டையக் கழத்துடா...'

இப்படி விறுவிறுப்பான சிந்தனைகள், குழப்பமான செயல்கள் என யோசேப்பின் சகாப்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றனர் சகோதரர்கள்.

இடையில யூதாவின் கரிசணை வேறு: 'இவன் நம்மைப் போல ஒருவன்!'

இதுதான் இந்தக் கதையின் திருப்புமுனை. 'இவனும் என்னைப் போல ஒருவன்!' என்பது அவர்களின் வெற்றுச்சொல்லாக மட்டுமே இருந்தது. ஆனால், ஆழ்மனதில் 'இவன் என்னைப் போல இருப்பதில்லையே!' என்று பொறாமையும், கோபமும்தான் இருந்தது.

நம் குடும்ப உறவில் தொடங்கும் வன்முறையிலிருந்து, உலக வன்முறை அனைத்திற்கும் காரணம் ஒன்றுதான்: 'அவன் நம்மைப் போல இல்லை!'

ஒருவன் மாறுபட்டு சிந்தித்தால், மாறுபட்டு செயல்பட்டால் நம் மனம் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உடனடியாக அவரைத் தீர்த்துக்கட்டி விட்டால் அவர் நம் கண்களை உறுத்துவதில்லை. தீர்த்துக்கட்ட முடியாதபோது நாம் வெறும் வாய்ச்சண்டையோ, அல்லது மௌனமோ காத்து அவரிடமிருந்து தொடர்பைத் துண்டித்துக்கொள்கிறோம். அல்லது அவருக்கு எதிராக ஒரு கூட்டத்தை நாமாகக் கூட்டிக்கொண்டு அவருக்குத் தொந்தரவுகள் கொடுத்து அவரின் மன அமைதியைக் கெடுத்து அவரை ஒரு நடைபிணமாக ஆக்கிவிடுகிறோம்.

இதற்கு ஒரே மாற்று: 'பரந்த குணம்!'

'எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியுமா? அவனுக்கு எல்லாம் இருந்தால் இருக்கட்டும். அவன் அனுபவிக்கட்டும். மகிழ்ந்திருக்கட்டும். என்னால் முடிந்தால் நானும் அவரைப் போல ஆவேன். அல்லது அமைதி காப்பேன்!' என கொஞ்சம் பெரிய மனதிருந்தால் போதும். எல்லாம் நலமாகிவிடும்.