Sunday, January 31, 2021

கல்லறைகளே உறைவிடம்

இன்றைய (1 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 5:1-20)

கல்லறைகளே உறைவிடம்

மாற்கு நற்செய்தியாளரின் நூல் சிறிய அளவில் இருந்தாலும், பல நிகழ்வுகளை மிக அழகாக வடித்திருக்கின்றார். அதாவது, சின்னஞ்சிறிய தகவல்களையும் பதிவு செய்வதில் அவர் வல்லவர். அவருடைய இலக்கியத் திறத்திற்குச் சான்றாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்ததுண்டு:

'பேய் பிடித்திருந்த அந்த நபர் ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அச்சமுற்றார்கள்.'

இந்த வாக்கியத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

யார் அந்த நபர்?

அவர் தான் தீய ஆவி பிடித்தவர். இலேகியோன் பிடித்திருந்ததாக அவரே சொல்கிறார். 'இலேகியோன்' என்றால் உரோமைப் படையின் 6000 வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. ஆக, ஏறக்குறைய 6000 பேய்கள் ஒரே நபரைப் பிடித்திருக்கின்றன. பாவம் அந்த மனிதர்! 'கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்' - ஆக, வாழும்போதே இறந்தவராகக் கருதப்பட்டுள்ளார். அல்லது ஊரை விட்டு அவரை விரட்டியடித்திருப்பார்கள். அவரின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் அவரைச் சங்கிலிகளால் பிணைக்க முயன்றாலும் அவர் அவற்றை உடைந்தெறிந்துவிடுகின்றார். மேலும், கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டே, கற்களால் தன்னைக் கிழித்துக் கொள்கின்றார்.

என்ன ஓர் அலைக்கழிப்பு! அந்தப் பேய்கள் அவரைத் தூங்கவும் விடவில்லை, அமரவும் விடவில்லை. மிகவும் இரக்கத்துக்குரியவர் அவர்! அதே நிலையில் நாம் இருந்தால் எப்படி இருக்கும்! இந்த நிலை நம் எதிரிக்கும் வரக்கூடாது. 

ஆனால், அந்த ஊர் மனிதர்களுக்கு அது பழக்கமாகிவிட்டது. அதாவது, தங்களைப் போல உள்ள ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறதே என்ற வருத்தம் ஊரார் யாருக்கும் இல்லை. 'அவன் பேய் பிடித்தவன். அவன் அப்படித்தான் இருப்பான்' என்று முத்திரை குத்து அதற்குப் பழகிவிட்டார்கள். அதனால்தான், அவனுடைய கூச்சலையும் கொடிய உருவத்தையும் வன்முறையையும் கண்டு அஞ்சாத மக்கள், அவர் ஆடையணிந்து அறிவுத்தெளிவுடன் இருப்பதைக் கண்டு அஞ்சுகின்றனர்.

அதாவது, நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் பொருத்தவரையில், நாம் அவர்களுடைய எண்ணங்கள்போல இருக்கும் வரை அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சற்றே மாறிவிட்டோம் என்றால், அவர்கள் நம்மைப் பார்த்து அச்சம் கொள்கிறார்கள். நம்மை அழித்துவிட முனைகிறார்கள். 

என்னுடைய மாற்றம் எனக்கு அடுத்திருப்பவருக்கு அச்சம் தருகிறது.

இயேசு தீய ஆவியை விரட்டும் நிகழ்வு மூன்று நிலைகளாக நடக்கிறது:

முதலில், 'தீய ஆவியே, இந்த மனிதரை விட்டு வெளியே போ!' என்று இயேசு தீய ஆவிக்குக் கட்டளையிடுகிறார்.

இரண்டாவதாக, தீய ஆவி பிடித்த நபர், 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று இயேசுவிடம் கேட்கின்றார். இயேசுவின் திருமுன்னிலை அவருக்கு அச்சம் தருகின்றது.

மூன்றாவதாக, தீய ஆவி பிடித்த நபருடன் உரையாடுகின்ற இயேசு, நபரின் வேண்டுகோளுக்கிணங்க, அதை அல்லது அவற்றைப் பன்றிக் கூட்டத்துக்குள் அனுப்பி விடுகிறார்.

பன்றிகள் கடலில் விழுந்து மடிகின்றன. பன்றி என்பது தீட்டான விலங்கு. தீட்டுக்குள் நுழைகின்ற தீய ஆவி, தனது இருப்பிடமான கடலுக்குச் செல்கிறது. 

அந்த நபர் விடுதலை பெறுகின்றார்.

இதற்கிடையில், பன்றி மேய்த்தவர்களின் சொல் கேட்டுக் கூடிய மக்கள், தங்கள் நகரை விட்டு அகலுமாறு இயேசுவை வேண்டிக்கொள்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பார்வையில் குணமான அந்த நபரை விட, கடலில் விழுந்து இறந்த பன்றிகள் மதிப்புள்ளதாகத் தெரிந்தன.

நிகழ்வு அத்தோடு முடியவில்லை.

இயேசு படகில் ஏறும்போது, 'நானும் உம்மோடு வருகிறேன்!' என இயேசுவைப் பின்தொடர விரும்புகிறார் அந்த நபர். ஆனால், இயேசு, அதற்கு இசையவில்லை.

அவர் அழைத்தாலன்றி அவரோடு யாரும் இருக்க முடியாது.

ஆனால், அவரிடம், 'உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்' என்கிறார் இயேசு.

இங்கே இயேசுவின் தாய்மை மற்றும் தந்தைமையைப் பார்க்கிறோம்.

இவ்வளவு நாள்களாக அந்த நபருக்கு கல்லறையே வீடாக இருந்தது.

தீய ஆவிகளே உறவினர்களாக இருந்தன.

ஆனால் இன்று, அவரை மீண்டும் ஊரின், வீட்டின், உறவினர்களின் நடுவில் அனுப்புகிறார் இயேசு. ஆண்டவரின் இரக்கத்தை அவர் அறிவிக்க வேண்டும்.

இந்த நிகழ்வு நமக்குப் பல வாழ்வியல் கேள்விகளை முன்வைக்கின்றன:

(அ) என்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்மைக்காக மாறும்போது அவர்களைப் பற்றி நான் அச்சம் கொள்கின்றேனா? எனக்கு அடுத்திருப்பவரின் அறிவுத்தெளிவு எனக்கு அச்சம் தருகின்றதா?

(ஆ) 'அவன் பேய்பிடித்தவன்', 'அவள் பேய்பிடித்தவள்' என்று நான் மற்றவர்களுக்கு முத்திரை இடுகின்றேனா?

(இ) என்னைப் பிடித்திருக்கும் தீய ஆவி எது? அல்லது நான் பிடித்திருக்கும் தீய ஆவி எது?

(ஈ) ஆண்டவர் என் வாழ்வில் காட்டிய இரக்கத்தை நான் அறிக்கையிடுகிறேனா?

(உ) எனக்கு அடுத்திருப்பவரை விட, என் பன்றிக் கூட்டம் எனக்கு முக்கியமானதாகத் தெரிகின்றதா?

(ஊ) என் வாழ்வை விட்டு அகலுமாறு நானும் இயேசுவிடம் சொல்லி, அவரை விரட்ட முயல்கின்றேனா?

Saturday, January 30, 2021

அதிகாரத்தின் ஊற்றும் பணியும்

ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

I. இணைச்சட்டம் 18:15-20 II. 1 கொரிந்தியர் 7:32-35 III. மாற்கு 1:21-28

அதிகாரத்தின் ஊற்றும் பணியும்

ஒரு சாதாரண தாள். பத்திரம் எழுதுமிடத்தில் கையெழுத்து வைக்கப்பட்டு, முத்திரை இடப்பட்டவுடன் சொத்து என்று ஆகிவிடுகிறது.

ஒரு சாதாரண தாள். ஆளுநரின் கையொப்பம் இருந்தால் அது பணம் என்றாகிவிடுகிறது.

முன்பின் தெரியாத இருவர். திருமண நிகழ்வு. மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அல்லது மோதிரம் அணிவிக்க, ஒருவர் மற்றவர்மேல் அதிகாரம் கொண்டவர்களாக மாறுகின்றனர். ஒருவர் மற்றவர்மேல் உரிமை கொண்டுகின்றனர்.

எளிய பின்புலத்திலிருந்து வரும் ஒருவர். அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றவுடன் அவர் தன் ஆயருக்குக் கீழ் மறைமாவட்டத்தின் பங்கு அல்லது நிறுவனத்தில் அதிகாரம் பெற்றவராக மாறுகின்றார்.

பேருந்து ஓட்டுநருக்கு பேருந்தின் மேல் அதிகாரம். நடத்துனருக்குப் பயணிகள் மேல் அதிகாரம். மருத்துவமனையில் மருத்துவருக்கு நோயுற்றவர்கள்மேல் அதிகாரம். நாட்டின் தலைவருக்கு அந்நாட்டு மக்கள்மேல் அதிகாரம் என எல்லா நிலைகளிலும் அதிகாரத்தின் இருப்பும் இயக்கமும் இருப்பதை நாம் காண்கிறோம்.

சில அதிகாரங்களைக் கண்டு நாம் அஞ்சுகின்றோம்.

சில அதிகாரங்களை நாம் வெறுக்கிறோம்.

சில அதிகாரங்களை நாம் விரும்பி ஏற்றுக்கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு அதிகாரத்தோடு போதிக்கின்றார், அதிகாரத்தோடு தீய ஆவிகளுக்குக் கட்டளை இடுகின்றார். இவை இரண்டையும் கேட்கின்ற, காண்கின்ற மக்கள் திரள் வியக்கிறது. 

தீய ஆவி தொழுகைக்கூடத்தில் இருக்கிறது. 'நீர் யாரென்று எனக்குத் தெரியும்' என்று இயேசுவை நோக்கிச் சொல்வதோடு, 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கேட்கிறது.

உண்மையில், 'உனக்கு இங்கு என்ன வேலை?' என்று இயேசுதான் தீய ஆவியிடம் கேட்டிருக்க வேண்டும்.

மக்கள் கூடி இறைவேண்டல் செய்யும் இடத்தில் தீய ஆவி எப்படி வந்தது?

மக்கள் வாரந்தோறும் தொழுகைக்கூடத்திற்கு வந்தார்களோ இல்லையா, தீய ஆவி ரெகுலராக வந்தது. தீய ஆவி வந்து செல்லும் அளவுக்குத்தான் தொழுகைக்கூடத்தின் இயக்கம் இருந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. தீய ஆவிக்கு தொழுகைக்கூடம் பிடித்திருந்தது.

தீய ஆவியின் அதிகாரத்திற்குள் இருந்த ஒரு நபரை இயேசு விடுவிக்கின்றார். ஆக, உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது இந்த நிகழ்வின் வழியாகத் தெளிவாகிறது.

இஸ்ரயேல் மக்கள் அதிகாரத்தை இரண்டு நிலைகளில் பார்த்தனர்: ஒன்று, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் அதிகாரம். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள்மேல் கொண்டுள்ள அதிகாரம், ஓர் அரசன் தன் மக்கள்மேல் கொண்டிருந்த அதிகாரம், மறைநூல் அறிஞர்கள் தங்கள் விளக்கங்களை வழங்கத் தாங்கள் சார்ந்திருந்த பள்ளியின் வழியாகப் பெற்ற அதிகாரம், ஆலயத்தில் குருக்கள் பெற்றிருந்த அதிகாரம் போன்றவை. இது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒருவர் அதிகாரம் செலுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, நான் பெற்றோர் என்பதற்காக எனக்கு அடுத்திருக்கும் வீட்டில் உள்ள குழந்தையின்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. இரண்டு, இறைவன் அல்லது கடவுள் மக்களுக்கு வழங்கும் அதிகாரம். இது பற்றிய கேள்வியை இயேசு பரிசேயர்களிடம் கேட்கின்றார்: 'திருமுழுக்கு யோவானுக்கு, திருமுழுக்கு கொடுக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? மண்ணிலிருந்தா? விண்ணிலிருந்தா?' இயேசுவின் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலிறுக்க மறுக்கின்றனர். மேலும், இயேசுவின் பணிக்காலம் முழுவதும், அவருடைய எதிரிகள், 'பாவங்களை மன்னிக்க இவர் யார்?' 'நீர் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கின்றீர்?' என அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கின்றனர். தன் பாடுகளுக்கு முன் இயேசு விசாரிக்கப்படும் நிகழ்வில்கூட, 'உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' எனப் பிலாத்து இயேசுவிடம் கேட்க, இயேசு, 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்கிறார் (காண். யோவா 19:10-11).

மேலிருந்து வரும் அதிகாரம் அல்லது இறைவன் தரும் அதிகாரம் என்றால் என்ன?

இதைப் புரிந்துகொள்ள இன்றைய முதல் வாசகம் (காண். இச 18:15-20) உதவுகிறது. இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டுக்குள் நுழையுமுன் அவர்களோடு உரையாற்றும் மோசே, 'உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார்' என்கிறார். இந்த இறைவாக்கினர் யார்? என்ற கேள்வி யூத இலக்கியங்கள் பலவற்றில் எழுகின்றது. அதிகமான இலக்கியங்கள், 'பொதுவான இறைவாக்கினர் பற்றிய பதிவு இது' என்றும், சில, 'இது இறைவாக்கினர் எரேமியாவைக் குறிக்கிறது' என்றும் சொல்கின்றனர். ஆனால், நற்செய்தியாளர்களைப் பொருத்தவரையில், 'இது இயேசுவையே குறிக்கிறது.' ஏனெனில், இந்த இறைவாக்கினர் பெற்றிருக்கும் மூன்று பண்புகளை இயேசு பெற்றிருக்கின்றார்.

அவை எவை?

(அ) ஆண்டவர் தாமே அந்த இறைவாக்கினரை மக்கள் நடுவினின்று ஏற்படுத்துவார்

(ஆ) ஆண்டவர் தம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பார்.

(இ) ஆண்டவர் கட்டளையிடுவது அனைத்தையும் அந்த இறைவாக்கினர் பேசுவார்.

ஆக, இறைவாக்கினர் என்பவர் வரவிருப்பவற்றை முன்குறித்துச் சொல்லும் குறிசொல்பவர் அல்லது சோதிடக்காரர் என்ற நிலை மாறி, அவர்கள் மக்கள் முன் இறைவன் சார்பாகவும், இறைவன் முன் மக்கள் சார்பாகவும் பேசுபவர் என்ற புரிதல் உருவாகிறது. அந்த நிலையில் இயேசுவின் இறையாட்சிப் பணி என்பது ஓர் இறைவாக்கினர் பணியாக இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிக்கின்றார், வல்ல செயல்கள் செய்கின்றார்.

இயேசு இரண்டு நிலைகளில் தனக்கு முந்தைய இறைவாக்கினர்கள் மற்றும் தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்களைவிட மேன்மையானவராக இருக்கிறார்:

(அ) மற்ற இறைவாக்கினர்கள் எல்லாம் இறைவாக்குரைக்கும்போது, 'ஆண்டவர் கூறுகிறார்' என ஆண்டவரின் அதிகாரத்தின்கீழ் இறைவாக்கு உரைத்தனர். ஆனால், இயேசுவோ, 'நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்து நட!' என்று தன் வார்த்தைகளின் அதிகாரத்தை தனக்குள்ளே கொண்டிருக்கின்றார்.

(ஆ) மற்ற மறைநூல் அறிஞர்கள் மறைநூல் பகுதிகளை விளக்கிச் சொல்லும்போது, தங்களுடைய விளக்கவுரைகளை தங்களுக்கு முன்சென்ற மறைநூல் அறிஞர்கள் மற்றும் தாங்கள் சார்ந்திருந்த பள்ளிகளின் கருத்துகளை ஒட்டி விளக்கம் தந்தனர். எடுத்துக்காட்டாக, ஒரு ரபி இன்னொரு ரபியின் விளக்கத்தை ஒட்டியே தன் விளக்கத்தையும் அளிப்பார். ஆனால் இயேசு, தொழுகைக்கூடத்தில் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை வாசித்தவுடன், அதற்கு விளக்கம் தருவதற்குப் பதிலா, 'நீங்கள் கேட்ட இந்த இறைவாக்கு இன்று நிறைவேறிற்று!' என்கிறார் (காண். லூக் 4). தானே இறைவாக்கு நூல்களின் நிறைவு எனத் தன்னை முன்மொழிகிறார் இயேசு.

இந்த இரண்டும் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நடந்தேறுகிறது.

முதலில், இயேசு அதிகாரம் கொண்டவராகப் போதிக்கின்றார்.

இரண்டு, தீய ஆவி மேல் அதிகாரம் கொண்டு தீய ஆவியைத் தன் சொல்லால், தன் அதிகாரத்தால் விரட்டுகின்றார்.

இந்தப் பின்புலத்தில்தான், எம்மாவு சீடர்கள் எருசலேமிலிருந்து வழிநடந்தபோது, தங்களோடு மறைவாக வழிநடந்த இயேசுவிடம், 'நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகிறோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்' (காண். லூக் 24:19) எனப் பதிவு செய்கின்றார்.

மாற்கு நற்செய்தியில், இயேசு தன் முதற்சீடர்களை அழைத்த பின்னர், பதிவு செய்யப்படும் முதல் நிகழ்வே அவருடைய போதனை மற்றும் வல்ல செயலின் இயல்பை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இவ்வாறாக, மாற்கு, மக்களும் தீய ஆவிகளும் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதாகப் பதிவு செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:32-35), மணத்துறவு பற்றித் தொடர்ந்து பேசுகின்றார் பவுல். திருமண உறவில் கணவன் மனைவி மேலும், மனைவி கணவன் மேலும் கொண்டிருக்கும் அதிகாரத்தில் உரிமை இருப்பதோடு, கவலையும் இருப்பதாகச் சொல்கின்றார் பவுல். ஏனெனில், அங்கே ஒருவர் அடுத்திருப்பவருக்கு உகந்ததைச் செய்யும்போதே அங்கே அதிகாரம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, கணவர் தன் மனைவிமேல் அதிகாரம் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு உகந்ததைச் செய்ய வேண்டும். பல நேரங்களில் அடுத்தவருக்கு உகந்தது என்று அறிந்துகொள்வதே பெரிய போராட்டமாக அங்கு இருக்கிறது. ஆனால், மணமாகாதவர் ஆண்டவருக்கு உகந்ததை நிறைவேற்றுவதால் அவர் ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கிறார். ஆண்டவரின் பொருட்டு தன் அதிகாரத்தை இழக்க முன் வருகின்றார்.

ஆக,

முதல் வாசகத்தில், மோசே, இறைவாக்கினரின் அதிகாரம் இறைவனில் ஊற்றெடுக்கிறது என முன்மொழிகிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு, இறைவனின் மகனாக, தானே அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் அவருடைய போதனை மற்றும் வல்ல செயலில் வெளிப்படுகிறது.

இரண்டாம் வாசகத்தில், மணவுறவின் அதிகாரத்தையும் தாண்டி, மணத்துறவின் அதிகாரம் ஒருவரைக் கவலையின்றி இருக்கவும், ஆண்டவர்மேல் பற்றுக்கொண்டிருக்கவும் செய்கிறது என்கிறார் பவுல்.

அதிகாரம் இன்று எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறது. அதிகாரம் பல நேரங்களில் வன்முறையால் பிறழ்வுபடுகிறது. அல்லது அதிகாரம் சில நேரங்களில் வலுவற்றவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டு, வலுவற்றவர்களை இன்னும் நொறுக்குகிறது.

நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமக்கென்று ஓர் அதிகாரம் இருக்கவே செய்கிறது. ஒரு குழந்தையும் கூட தான் வைத்திருக்கும் தன் பொம்மையின்மேல் தன் அதிகாரத்தைக் காட்ட விழைகிறது. 

இன்று நம் அதிகாரத்தின் ஊற்றும் பணியும் எப்படி இருக்க வேண்டும்?

(அ) இறைமைய அதிகாரம்

இறைவன் ஒருவரே நம் அதிகாரத்தின் ஊற்று என எண்ண வேண்டும். இப்படி எண்ணுவதால் நம் அதிகாரத்தின் வரையறையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் எனக்கு அளிக்கும் அதிகாரம் நான் நன்மை - தீமையைத் தெரிவு செய்யப் பயன்படுகிறது. அந்த அடிப்படை அதிகாரத்தையே நான் தவறாகப் பயன்படுத்தினேன் என்றால், மற்ற அதிகாரத்தையும் நான் தவறாகவே பயன்படுத்துவேன். நான் எந்த நிலையில் அதிகாரம் கொண்டிருந்தாலும் என் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்று இருக்க வேண்டும். புனித பவுல் அப்படி நினைத்ததால்தான், மணத்துறவு பற்றிய அறிவுரையை அவரால் வழங்க இயலுகிறது.

(ஆ) அதிகாரம் பணி செய்வதற்கே

இயேசுவின் அதிகாரம் போதிப்பதிலும், வல்ல செயல் செய்வதிலும் வெளிப்படுகிறது. ஆக, சொல்லும் செயலும் ஒருவரின் அதிகாரத்திலிருந்து புறப்படுகின்றன. அப்படிப் புறப்படும் சொல்லும் செயலும் மற்றவருக்கு நன்மை செய்ய வேண்டுமே அன்றி, ஒருபோதும் தீமை செய்தல் கூடாது. இன்று, அதிகாரப் பிறழ்வுகள் சொல் மற்றும் செயல் என்னும் இரண்டு நிலைகளில்தாம் நடந்தேறுகின்றன. அடுத்தவர் வாழ்வு பெறுகிறார் என்பதோடு, அங்கே நாமும் வாழ்வு பெற வேண்டும். என் அதிகாரத்தால் தீமை அகல வேண்டும்.

(இ) ஆண்டவருக்கு உகந்தது

ஆண்டவருக்கு உகந்ததை நாடுபவர்கள் கவலையின்றி இருப்பார்கள் எனச் சொல்கிறார் பவுல். ஒருவர் தன் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்பதை உணர்ந்தால், அவர் மற்றவருக்குத் தன் சொல்லாலும் செயலாலும் நன்மைகள் செய்தால் அவர் ஆண்டவருக்கு உகந்ததையே செய்கின்றார். ஆக, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், எனக்கு உகந்ததை நாடாது, ஆண்டவருக்கு உகந்ததை நாட நான் முயற்சி செய்ய வேண்டும். பல நேரங்களில் எனக்கு உகந்தது எது என்பதை அறிந்துகொள்ளவே எனக்குக் குழப்பமாக இருக்க, ஆண்டவருக்கு உகந்ததை நான் எப்படிக் கண்டறிவது என்ற கேள்வி எழலாம்? ரொம்ப எளிதான விடயம். எனக்கு உகந்ததை நான் செய்யும்போது அங்கே கவலை பிறக்கிறது. ஆண்டவருக்கு உரியதை நான் செய்யும் போது கவலைகள் அகல்கின்றன. இதுவே அளவுகோல்.

Friday, January 29, 2021

அழைத்தவர் உறங்குகிறார்

இன்றைய (30 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 4:35-41)

அழைத்தவர் உறங்குகிறார்

இயேசு தன் சீடர்களோடு தனிமையாக இருந்ததோடு, அவர்களோடு படகில் பயணம் செய்யவும் விரும்பினார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை, 'அக்கரைக்குச் செல்வோம்! வாருங்கள்!' என அழைத்து அனைவரையும் படகில் ஏற்றுகின்றார். படகை அவர்கள் முன்னால் செலுத்த, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்குகின்றார். இயேசுவின் தூக்கம் பயணக் களைப்பினாலோ, அல்லது படகின் ஓட்டத்தினாலோ வந்த தூக்கம் அல்ல. மாறாக, தானே விரும்பி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தூங்கும் தூக்கம். பேருந்தில் தூங்குபவர்கள் தலையணை வைத்தா தூங்குகிறார்கள்? போகிற போக்கில் தூங்கி எழுவார்கள் பயணிகள். ஆனால், இவரோ ஏறக்குறைய விமானத்தில் பயணம் செய்வதுபோல, சீட் பெல்ட் போட்டு, காலணிகளைக் கழற்றிவிட்டு, ஆடைகளைச் சற்றே தளர்த்திவிட்டு, 'டு நாட் டிஸ்டர்ப்' லைட்டைத் தனக்கு மேலே 'ஆன்' செய்துவிட்டு, தன் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, போர்வையால் நன்றாகப் போர்த்திக்கொண்டு தூங்குவதுபோலத் தூங்குகின்றார். 

வேறு படகுகளும் அவர்களோடு செல்கின்றனர். வந்திருந்தவர்கள் அனைவரும் மீன்பிடி அல்லது கடல்தொழில் செய்பவர்கள். கடலில் புயல் எழுந்தது கண்டு அவர்கள் பயப்பட, தச்சரோ தூங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு அதிசயமும், சிரிப்பும், கோபமும் ஒருசேர வந்திருக்கும்.

கடலின் இரைச்சலுக்கு மேல் இருக்கிறது அவர்களுடைய இரைச்சல்: 'போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?' 

வாழ்வு கொடுக்க வந்தவரிடம், 'நாம் சாகப்போகிறோம்' என்று அவரையும் தங்களோடு இணைத்துக்கொள்கின்றனர். எழுந்த இயேசு, இரைந்த அவர்களைக் கடிந்துகொள்ளாமல், இரையும் கடலைக் கடிந்துகொள்கின்றார். 

'காற்று அடங்கியது. மிகுந்த அமைதி உண்டாயிற்று'

இரண்டே வாக்கியங்களில் ஒட்டுமொத்த விளைவையும் சுருக்கிவிடுகின்றார் மாற்கு.

ஆனால், சீடர்களின் மனத்தில் அப்போதுதான் காற்று அடிக்கத் தொடங்குகிறது.

'நம்மோடு இருப்பவர் யார்? காற்றும் கடலும் கீழ்ப்படிகின்றனவே? தீமையின் ஆதிக்கம் இவருடைய ஒற்றைச் சொல்லுக்குக் கீழ்ப்படிகின்றதே இவர் யார்?' 

'போதகர்' என்ற நிலையில்தான் இயேசுவைக் கண்டார்கள் அவர்கள்.

போதகரை இறைமகன் எனக் காண வேண்டுமெனில் அவர்கள் மூன்று விடயங்களைச் செய்ய வேண்டும்:

ஒன்று, அச்சம் அகற்ற வேண்டும்.

இரண்டு, நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மூன்று, அக்கரைக்குச் செல்ல வேண்டும்.

ஆனால், அக்கரைக்கு அவரோடு செல்வதில் ஆபத்தும் இருக்கின்றது. பாதுகாப்பும் இருக்கின்றது. நம்மை அழைக்கின்ற அவர் தூங்கிவிடுகிறார் பல நேரங்களில்.

Thursday, January 28, 2021

தனிமையாக இருந்தபோது

இன்றைய (29 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 4:26-34)

தனிமையாக இருந்தபோது

மாற்கு நற்செய்தியாளர், இயேசுவின் சீடர்களை அறிமுகம் செய்யும்போதெல்லாம், அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பவர்களாகவும், அல்லது தவறாகப் புரிந்துகொள்பவர்களாகவும், அல்லது இயேசுவுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவுமே முன்வைக்கின்றார்.

அதே நேரத்தில், இயேசுவின் பக்கத்திலிருந்து இன்னொரு முக்கியமான விடயத்தையும் கூறுகின்றார். இயேசு அவர்களை ஒருபோதும் தள்ளிவிடவே இல்லை.

தான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல் உரிமை கொண்டாடுகிறார் இயேசு. அல்லது அவர் ஒருபோதும் தன்னுடையவர்களைத் தள்ளிவிடவே இல்லை.

'தெரிவு என்னும் முரண்' (The Paradox of Choice: Why More is Less, by Barry Schwartz) என்ற புத்தக மதிப்புரை கேட்டேன்.

நம் வாழ்க்கையில் நம் முன் நிறைய தெரிவுகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் நாம் கடைக்குச் சென்று, 'கலர்' என்று கேட்டால், 'காளி மார்க் கலர்' ஒன்றைக் கொடுப்பார்கள். நாம் உடனே வாங்கிக் கொண்டு வந்தோம். கொஞ்ச நாள்கள் கழித்து, ஃப்ரிட்ஜ் வந்தவுடன், 'கூலிங்கா வேணுமா? கூலிங் இல்லாம வேணுமா?' என்று கேட்டார் கடைக்காரார். பின் 'பெப்ஸியா? கோக்-கா? காளி மார்க்கா?' என்று மூன்று தெரிவுகள் வந்தன. இன்று நாம் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றால் நம் முன் ஏறக்குறைய 300 வகையான கலர்கள் உள்ளன. இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து, நாம் குடிப்பதற்கு நேரம் விரயமாகிறது. குடித்தபின், 'வேறு ஏதாவது தெரிவு செய்திருக்கலாமே!' என்ற கவலை தொற்றிக்கொள்கிறது. 

குறைவான தெரிவுகள் நிறைவான மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்றால் இரண்டு விடயங்கள் அவசியம்:

ஒன்று, எனக்கு எது தேவை என்ன என்பதை உணர வேண்டும். ஒரு ஃபோன் வாங்கக் கடைக்குப் போகிறேன் என்றால், அங்கு சென்று, அங்குள்ள ஃபோன்களை அடுக்கி நான் ஒப்பீடு செய்துகொண்டிருக்கக் கூடாது. மாறாக, எனக்கு என்ன தேவைகள் இருக்கின்றன என்பதை முதலில் வரையறுத்து, நெறிப்படுத்தி நான் செல்ல வேண்டும்.

இரண்டு, நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கும். அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல தேர்ந்தெடுக்காமல் விட்ட எதுவும் குறையில்லாதது என நான் எண்ணுதல் கூடாது. அதை வாங்கினாலும் அதிலும் ஏதோ ஒரு குறை இருக்கும்.

இயேசு தன் பணிக்கு யார் தேவை என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்.

தான் தேர்ந்தெடுத்தவர்களில் குறை இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டார். 

'இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?' என்று அவர் சலித்துக்கொள்ளவே இல்லை.

இது வாழ்க்கைக்கும், மனித வள மேலாண்மைக்கும் நல்ல பாடம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு செய்யும் ஒரு செயல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது: 'உவமைகள் இன்றி அவர் மக்களிடம் பேசவில்லை. தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.'

தனிமையில் இயேசு தன் சீடர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தாலே வியப்பாக இருக்கிறது.

இயேசு பேசிக்கொண்டிருக்க, ஒருவர் காய்கறி வெட்டிக்கொண்டிருப்பார். யூதாசு பணம் எண்ணி வரவு-செலவு பார்த்துக்கொண்டிருப்பார். பேதுரு வெளியில் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பார். ஒருவர் விறகுகள் தறித்துக்கொண்டிருப்பார். ஒருவர் ரொட்டிக்கு மாவு பிசைந்துகொண்டிருப்பார். ஒருவர் வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருப்பார். ஒருவர் தன் துணிகளைத் தண்ணீரில் ஊற வைத்துக்கொண்டிருப்பார். 

இப்படியாக, எதார்த்தமாக நடந்தேறுகிறது இயேசுவின் போதனை.

இயேசுவுக்குத் தன் சீடர்கள்தாம் உலகம் என்றானது. அவர்களுக்கு இயேசுவே உலகம் என்றானது.

இயேசுவின் போதனை போலவே எதார்த்தமாக, எளிமையாக, யாரும் அறியாமல் நடந்தேறுகிறது விதையின் வளர்ச்சி, கடுகுவிதையின் உயர்வு.

இரண்டு கேள்விகள்:

இன்று, 'குறைவில்தான் நிறைவு' என என்பதை உணர்ந்து, நான் தெரிந்துகொண்ட வாழ்க்கையில், வேலையில், உறவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?

இரண்டு, வாழ்வின் எதார்த்தங்கள் புரியாத போது, அவற்றை விளக்கிச் சொல்லுமாறு நான் எதார்த்தமாக இயேசுவிடம் வருகிறேனா?

Wednesday, January 27, 2021

பொருளும் பயனும்

இன்றைய (28 ஜனவரி 2020) நற்செய்தி (மாற் 4:21-25)

பொருளும் பயனும்

'பேனா எதற்குப் பயன்படுகிறது?' - என்று ஒரு கேள்வி நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்டது.

'எழுத' - என்று பதிலளித்தார் கேட்கப்பட்டவர்.

'வேறு எதற்கு?' - கேள்வி நீட்டிக்கப்பட்டது.

'பரிசளிக்க'

'வகுப்பறையில் நமக்கு முன் இருப்பவரைத் தொட்டு அழைக்க'

'வாசிக்கும் பக்கத்தை நினைவில் கொள்ளும் புக்மார்க் ஆக'

'பறந்து போகும் பேப்பர் மேல் வைக்கப்படும் பேப்பர் வெயிட் ஆக'

'பணம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக' (எடுத்துக்காட்டாக, 'ச்சாஃப்பர்' பேனா)

'நமக்குப் பிடிக்காதவர் மேல் எறியும் ஆயுதமாக'

'கல்லூரியின் இறுதி நாள் அன்று அதில் உள்ள மையை மற்றவரின் சட்டையில் கொட்டி விளையாட'

என்று தொடர்ந்தார் கேட்கப்பட்டவர்.

பொருளுக்குப் பயன் ஒன்று என்றல்ல. நிறையப் பயன்கள் உண்டு.

இன்றைய நற்செய்தியில் விளக்கு என்ற ஓர் உருவகத்தை எடுத்து, அந்த விளக்கு மரக்காலின் உள்ளும், கட்டிலுக்குக் கீழேயும் வைக்கக் கூடாது என எச்சரிக்கிறார் இயேசு. மேலும், எந்த அளவையால் நாம் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கிறார். பிந்தைய வரி முந்தைய வரியின் நீட்சிதான் என நினைக்கிறேன். அதாவது, நாம் விளக்கை மரக்காலுக்குள் வைத்தால் அதற்கேற்ற வெளிச்சம் கிடைக்கும். விளக்குத் தண்டின்மேல் வைத்தால் அதற்கேற்ற ஒளி கிடைக்கும்.

ஒரு வீட்டில் மூன்று இடங்கள் உள்ளன இந்த உருவகத்தின்படி: ஒன்று, மரக்கால். இரண்டு, கட்டில், மூன்று. விளக்கத்தண்டு.

பாலஸ்தீனத்தில் விளக்கு இந்த மூன்று இடங்களிலுமே வைக்கப்பட்டது. காற்றுக் காலத்தில் விளக்கு அணைந்துவிடாமலிருக்க, அல்லது தீப்பெட்டி இல்லாத நேரத்தில் எரிகின்ற விளக்கை அப்படியே மூடி வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் நிறைய எண்ணெய் வீணாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டிலின் கீழும் விளக்குகள் வைக்கப்பட்டன. உணவுத் தானியங்களை, குறிப்பாக, கோதுமையை அவர்கள் கட்டிலின் கீழ் உலர்த்துவது வழக்கம். கோதுமைக்கு வெப்பம் கொடுக்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் - ஆனால் விளக்குக்கென்று சில பூச்சிகள் வரும் - கட்டிலின் கீழ் விளக்கை ஏற்றி வைப்பர். மூன்றாவதாக, விருந்தினர்கள் வரும்போது, இறைவேண்டல் செய்யும்போது, வீட்டில் உள்ளவர்கள் பொதுவாக அமர்ந்து உரையாடியபோது விளக்கு மரக்காலின்மேல் வைக்கப்பட்டது.

மூன்று இடங்களில் விளக்கு வைக்கப்பட்டாலும், விளக்குக்கென்று நிறையப் பயன்பாடுகள் இருந்தாலும் அதன் முதன்மையான பயன்பாடு ஒருவர் மற்றவருக்கு ஒளியூட்டுவது. அதாவது, ஒருவர் மற்றவரின் முகத்தைக் காண உதவுவது. விளக்குத் தண்டின்மேல் விளக்கு இருக்கும்போதுதான் இப்பயன் சாத்தியம்.

ஆக, முதன்மையான பயன்பாட்டை நாம் மனத்திலிருத்தி வாழ வேண்டும்.

என் வாழ்வுக்கு அல்லது என் வாழ்வால் நிறையப் பயன்கள் ஏற்படலாம். ஆனால், என் முதற்பயனை நான் வாழ்கிறேனா? என் முதற்பயனை அல்லது என் தனிப்பயனை வாழ்வது அவசியம். ஏனெனில், அதுவே எனக்குத் திரும்ப வரும்.

எடுத்துக்காட்டாக, நான் யூட்யூபில் காணொளி பார்ப்பதை என் பயன் எனக் கொள்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதையொட்டியே நான் வளர்வேன். ஆனால், என் பயன் விவிலியம் வாசிப்பது என நான் நினைத்து அதற்கு நேரம் கொடுத்தால் அது எனக்குத் திரும்பப் பயன் கொடுக்கும். நான் எந்த அளவையை எடுத்தாலும் அது எனக்குத் திரும்பக் கொடுக்கும்.

இன்னொரு பக்கம், இயேசுவின் அறிவுரைப் பகுதியின் சூழலை நாம் கருத்தில் கொண்டால், விளக்கு என்பது இறையாட்சியையும், மரக்கால் என்பது நம் அன்றாட வாழ்வியல் பரபரப்புகளையும், கட்டில் என்பது நம் ஓய்வையும் குறிக்கிறது. பரபரப்பும் ஓய்வும் இறையாட்சிப் பணியின் எதிரிகள். இவ்விரண்டுக்கும் இடையே, பொறுமையாகவும், ஓய்ந்திராமலும் இறையாட்சியை அறிவித்தலே விளக்குத்தண்டின்மேல் விளக்கை ஏற்றுதல்.

என் வாழ்வின் முதற்பயனை உணர்தலும், உணர்ந்தவுடன் அதைச் செயல்படுத்த முயல்தலும் நலம்.

நான் என்னுடைய வாழ்க்கைக்குக் கொடுக்கும்போது, வாழ்க்கை எனக்குக் கூடுதலாகக் கொடுக்கும்.

Tuesday, January 26, 2021

கொடுத்து வைத்திருக்கிறது

இன்றைய (27 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 4:1-20)

கொடுத்து வைத்திருக்கிறது

சமையல் பந்தியில் சோறு அல்லது பிரியாணி பரிமாறுபவர்களைக் கவனித்துள்ளீர்களா?

வழக்கமாக சோறு பரிமாற வீடுகளில் பயன்படுத்தும் கைக்கரண்டிக்குப் பதிலாக, ஒரு சிறிய தட்டு அல்லது மூடியை வைத்துப் பரிமாறுவார்கள். அவர்களின் கண்கள் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் பதியும். பந்தியில் அமர்ந்திருப்பவர், அவர்முன் இருக்கும் இலை, மற்றும் சோற்றுப் பாத்திரம். அந்த ஒரு நொடியில் அமர்ந்திருப்பவரைக் காண்பார், கண்டவுடன் அவர் யாரென்று தன் மனதுக்குள் திறனாய்வு செய்வார். அவரின் திறனாய்வின் முடிவைப் பொருத்தே அவருடைய கையில் உள்ள தட்டில் சோறு அள்ளப்படும். அவர் சோறு அள்ளும் முறையைப் பார்த்தே, அமர்ந்திருப்பவர் தெரிந்தவரா, தெரியாதவரா, உறவினரா, அந்நியரா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். 

பந்தி பரிமாறுவதை இயேசுவின் போதனைக்கு ஒப்பிடுவோம். இயேசு தனக்கு முன் இருக்கும் கேட்பவரைப் பொருத்து தன் பேச்சின் தொனியை மாற்றுகின்றார்.

மூவகையான மக்கள் இயேசுவின் முன் இருக்கிறார்கள்:

(அ) திரண்டிருந்த மக்கள்

இவர்களுக்கு இயேசு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றார். இவர்கள் புறம்பே உள்ளவர்கள். அதாவது, இறையாட்சிக்கு வெளியே இருக்கிறவர்கள். இவர்கள் கதைகள் வழியாகவே அனைத்தையும் புரிந்துகொள்கின்றனர். அதாவது, புரியாத ஒரு மறைபொருளை புரிகின்ற ஒரு கதை வழியாக அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, பள்ளியின் தொடக்கநிலையில் இருக்கும் குழந்தைகள். இவர்களுக்கு, 'சிங்கம் வந்தது, புலி வந்தது, மாடுகள் மேய்ந்தன' என்று சொல்லித்தான் ஒற்றுமையைப் புரிய வைக்க முடியும்.

(ஆ) சீடர்கள்

சீடர்கள் இப்போது இருக்கும் நிலையில் அவர்களுக்கு 'எல்லாம் கொடுத்து வைத்திருந்தாலும்' அதை அவர்கள் அறியவில்லை. மற்றவர்களின் நிலையிலேயே தங்களை இருத்திக் கொண்டனர். தங்கள் கால்களில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியைக் கண்டு தங்களால் உடைக்க முடியாது என எண்ணும் யானை போன்றவர்கள் அவர்கள். இவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. இருந்தாலும், இயேசு அவர்களுக்குத் துணை நிற்கின்றார். அவர்களுக்கு விளக்கம் தருகின்றார்.

(இ) கொடுத்து வைத்தவர்கள்

இந்த நிலையில்தான் இயேசு தன் சீடர்களை வைத்திருந்தார். அவர்கள் தங்களைப் பற்றி மேன்மையான எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றாலும், இயேசு அவர்களை நம்பினார். இயேசுவின் பார்வையில் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில், மற்றவர்களுக்கு மறைக்கபட்டிருந்தது அவர்களுக்கு நேரிடையாகக் கிடைத்தது. நான் உரோம் நகரில் படித்தபோது, 'திருத்தந்தைக்கு உணவு பரிமாறும் வேலை கிடைத்தால் எனக்குப் போதும்!' என நினைத்துள்ளேன். மக்கள் கூட்டம் அவரைக் காண இங்கே வெளியே அலைமோதுகிறது. ஆனால், அவருக்கு உணவு பரிமாறுபவர் எவ்வளவு நெருக்கமாக அவரைப் பார்ப்பார்? அவருடைய டம்ளரில் தண்ணீர் நிரப்புவார். டவல் கீழே விழுந்தால் ஓடி எடுத்துக் கொடுப்பார். சில நேரங்களில் காரத்தால் புரை ஏறினால் உச்சந்தலையில் மெதுவாகத் தட்டிக்கொடுப்பார். இவ்வளவு அருகில் இருக்கும் அந்த நபர் கொடுத்து வைத்தவர் என எண்ணியதுண்டு. இயேசுவின் சீடர்கள் அந்த நிலையைப் பெற்றிருந்தாலும் அதை அவர்கள் அறிய மறந்தனர். இயேசு அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்களைத் தம்மவர்கள் என ஏற்றுக்கொள்கின்றார்.

நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். 

பல நேரங்களில் நம் மேன்மையை நாம் அறியாமல் இருக்கிறோம்.

'ஆஸ்கர் ஒயில்ட்' படிக்கும் அளவுக்கு நாம் மேன்மை பெற்றிருந்தாலும், இன்னும் சிங்கம் புலி கதை கேட்கவே விரும்புகிறோம்.

Monday, January 25, 2021

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து

இன்றைய (26 ஜனவரி 2021) திருநாள்

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து

பவுலின் உடனுழைப்பாளர்களும், எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் ஆயர்களாகவும் விளங்கிய திமொத்தேயு மற்றும் தீத்து என்னும் இளவல்களின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

இவர்கள் இருவரும் வியப்பின் ஆச்சரியக் குறிகள்!

தீத்துவைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'துரோவாவில் என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே, அம்மக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்' (காண். 2 கொரி 2:13) என்றும், 'தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார்' (காண். 2 கொரி 8:23) என்றும், 'நம்பிக்கை அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை' (காண். தீத் 1:1) என்றும் முன்மொழிகின்றார்.

ஆக, ஒரே நேரத்தில் பவுலின் தம்பியும், பங்காளியும், உடன் உழைப்பாளரும், மகனுமாக இருக்கின்றார் தீத்து.

திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற பவுல், 'நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும் குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்து வா!' (காண். 2 திமொ 4:13) என்று பணிக்கின்றார். இவரை, 'அன்பார்ந்த பிள்ளை' (காண். 2 திமொ 1:1) என்று அழைக்கின்ற பவுல், 'இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன். கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்' (காண். 2 திமொ 1:3-4) என உருகுகின்றார்.

புனித பவுல் தன் உடனுழைப்பாளர்கள் அனைவரோடும் இணைந்து, நாங்கள் 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்' (காண். 2 கொரி 6:6) என்று பெருமை பாராட்டுகின்றார்.

எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் இளம் ஆயர்களாகத் திகழ்ந்த திமொத்தேயும், தீத்துவும் மேற்காணும் பண்புகளைக் கொண்டே தங்கள் மந்தையைக் கண்காணித்தனர். இவர்கள் வயதில் மிகவும் சிறியவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு எழுதப்பட்ட மடலிலிருந்து புலப்படுகிறது: 'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்' (காண். 1 திமொ 5:12)ளூ 'யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே!' (காண். தீத் 2:15).

ஆக, இவர்களோடு சேர்ந்து இன்று புனித பவுலும் கொண்டாடப்பட வேண்டியவரே.

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகியோர் இணைந்த மூவர் அணி நமக்கு, குறிப்பாக அருள்நிலையில் இருப்பவர்களுக்கு, முன்வைக்கும் சவால்கள் எவை?

(அ) என்னோடு உடனுழைப்பவரை நான் கொண்டாட வேண்டும்

'அருள்பணிநிலைப் பொறாமை' (clerical jealousy) என்பது இன்று தவிர்க்க இயலாத ஓர் உணர்வாகிவிட்டது. ஓர் அருள்பணியாளர் தன் சகஅருள்பணியாளர் பற்றி, அல்லது தனக்குப் பின் பணி ஏற்பவர் பற்றி இடறல்படுவதுதான் இந்தப் பொறாமையைத் தூண்டி எழுப்பும் தீப்பொறி. பவுல் தன் உடனுழைப்பாளர்களையும் அவர்களுடைய திறன்களையும் கொண்டாடினாரே தவிர, அவற்றைப் பற்றிப் பொறாமை கொள்ளவில்லை.

(ஆ) எனக்குப் பின் ஒரு வாரிசை ஏற்படுத்த வேண்டும்

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகியோர் வேறு வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள் என்றாலும், வௌ;வேறு சமூக, குடும்ப, மற்றும் இனப் பின்புலங்களைக் கொண்டிருந்தாலும், இயேசு என்னும் ஒற்றைப் புள்ளியில் குவிகின்றனர். தங்களை இணைக்கின்ற அந்தப் புள்ளியில் குவிந்தார்களே தவிர, தங்களை ஒருவர் மற்றவரிடமிருந்து பிரிக்கும் எந்தக் காரணியையும் அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இவ்வாறாக, பவுல் தனக்குப் பின் ஒரு வாரிசை ஏற்படுத்தினார். இன்று பல இடங்களில் மறைமாவட்டங்கள் மற்றும் துறவற சபைகளில் அழைத்தல் குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொருவரும் தனக்கென ஓர் உடனுழைப்பாளரை எடுத்து, அவரைத் தன் அருள்நிலையின் வாரிசாக ஏற்படுத்தினால் எத்துணை நலம்!

(இ) மதிப்பீடுகள்தாம் என்னை நிர்ணயிக்கின்றன

'ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல. மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம்' (காண். 2 கொரி 8:21) என்கிறார் பவுல். இன்று பல நேரங்களில் என் கண்ணியத்தை நான் மனிதர்கள் முன் இழக்கின்ற சூழல் என் அருள்பணி வாழ்வில் வந்துவிடுவது ஏன்? கடவுள் முன்னிலையில் நான் நன்றாக இருக்கிறேன் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்வது ஒரு வகையான தற்பாதுகாப்பா? பவுல் அறிக்கையிட்ட, 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு' ஆகியவை என் அடையாளங்களாக மாறுகின்றனவா?

(ஈ) போர்வையை மறக்கும் ஆன்மீகம்

'நான் விட்டுவந்த போர்வையை எடுத்து வா!' என்று பவுல் திமொத்தேயுவுக்கு எழுதும் வாக்கியம், தொடக்கத் திருஅவைப் பணியாளர்கள் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையை நமக்கு எடுத்தியம்புகிறது. அன்றாடம் அவர்கள் தங்கள் வயிற்றுக்காக உழைத்தனர். இருந்தாலும், பயணங்கள் பல செய்தனர். எழுத்துகள் பல எழுதினர். போர்வை இல்லாமல் பவுல் எவ்வளவு நாள்கள் குளிரில் வாடியிருப்பார்? தன் உடல் காக்கும் போர்வையை விட்டுவிட்டு, அதைவிட மதிப்புக்குரியது என அவர் தன்னோடு எடுத்துச் சென்றது எது? இன்று பல நேரங்களில் என் மனம் என் போர்வையிலேயே இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

(உ) திரும்பாத திடம்

நான் அடிக்கடி நினைத்ததுண்டு: பவுல் தன் மனமாற்றத்திற்காக மனம் வருந்திருப்பாரா? நல்ல படிப்பு, கைநிறைய வேலை, யாரையும் கொல்லும் அதிகாரம் எனக் குதிரையில் வலம் வந்தவரை, அவர் பணியிடத்து மக்கள், 'அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது. பேச்சும் எடுபடாது' (காண். 2 கொரி 10:10) என்று சொன்னபோது அவருடைய மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இன்று என் வாழ்வில் சில நேரங்களில் சின்னஞ்சிறு நெருடல்கள் வந்தாலும், 'திரும்புவதே நலம். வாழ்வது ஒரு வாழ்க்கை' என்று என் மூளை சொல்வது ஏன்?

(ஊ) அக்கறையற்றவனாய் இராதே

மாரியே புஸ்ஸோ அவர்கள் எழுதிய, தெ காட்ஃபாதர் என்னும் நாவலில் எனக்குப் பிடித்த பல வரிகளில் இதுவும் ஒன்று: 'நான் என் வாழ்நாள் முழுவதும் அக்கறையுடன் வாழவே முயற்சி செய்தேன். பெண்களும் குழந்தைகளும் அக்கறையின்றி இருக்கலாம். ஆனால், ஆண்கள் அக்கறையின்றி இருக்கக் கூடாது' ('I spent my life trying not to be careless; women and children can be careless, but not men") இங்கே, 'அக்கறை' என்பதை 'கவனக்குறைவு' என்றும் மொழிபெயர்க்கலாம். 'இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது, உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' (காண். 1 திமொ 5:14) என்று தன் அன்புப் பிள்ளைக்கு அறிவுறுத்துகின்றார் பவுல். அருள்பணி நிலை பற்றிய அக்கறையின்மை அல்லது கவனக்குறைவே பல நிர்வாக, நிதி, மற்றும் பாலியில் பிறழ்வுகளுக்கான காரணம் என நான் எண்ணுகின்றேன்.

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து நல்ல அருள்பணியாளர்களாய் நம்முன் நிற்கின்றனர். 

நான் அவர்கள் முன் எப்படி நிற்கின்றேன்?

Sunday, January 24, 2021

ஆண்டவரே நீர் யார்?

இன்றைய (25 ஜனவரி 2021) திருநாள்

ஆண்டவரே நீர் யார்?

இன்று புனித பவுலின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

'சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'

'ஆண்டவரே, நீர் யார்?'

'நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே'

மேற்காணும் உரையாடல் மனித வரலாற்றில் நடந்தேறிய நாள் இந்நாள்.

'சவுலே, சவுலே' என்னும் வார்த்தைகள் வானிலிருந்து கேட்டவுடன், 'ஆண்டவரே' என சவுல் (பவுல்) பதில் கொடுத்தது எப்படி?

தனக்கென்று வேறு ஆண்டவரை வைத்திருந்த சவுல், அவர்களை எல்லாம் விடுத்து இயேசுவைப் பற்றிக்கொள்ள விழைகின்றார்.

இன்று என் ஆண்டவர் யார்?

அவரைப் பற்றிக்கொள்தலே மனமாற்றம்.

Saturday, January 23, 2021

நற்செய்தி - பறைசாற்றுதலும் பதிலிறுத்தலும்

ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

I. யோனா 3:1-5,10 II. 1 கொரிந்தியர் 7:29-31 III. மாற்கு 1:14-20

நற்செய்தி - பறைசாற்றுதலும் பதிலிறுத்தலும்

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் வாட்ஸ்ஆப் செயலி புதியதொரு தனியுரிமைக் கொள்கையை அறிவித்தது. அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் செயலி பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவார்கள் என்றும், மேலும் வாட்ஸ்ஆப்பில் பெறப்படும் தரவுகள் ஃபேஸ்புக் தளத்தோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு இரு தரப்பு பதிலிறுப்புகள் தரப்பட்டன. முதல் தரப்பினர், தங்கள் தரவுகளைத் தற்காத்துக் கொள்வதற்காக வாட்ஸ்ஆப் செயலியை விடுத்து, 'சிக்னல்,' மற்றும் 'டெலிகிராம்' போன்ற செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இன்னொரு தரப்பினர், தங்கள் தரவுகளை வைத்து மார்க் என்ன செய்யப் போகிறார்? நம் பயன்பாட்டுக்கு இதுவே எளிதாக இருக்கிறது என்று வாட்ஸ்ஆப் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் பலர் தங்கள் செயலிகளைத் துறப்பதைக் கண்ட வாட்ஸ்ஆப் வேகமாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டு, பயனர்களின் தனியுரிமைக்கு தங்கள் நிறுவனம் எந்தவொரு இடையூறும் விளைவிக்காது என்று அறிவித்தது.

வாட்ஸ்ஆப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி நாம் இன்று வேகமாக நம் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றோம். ஒவ்வொரு செய்தியையும் நாம் பறைசாற்றுகிறோம், ஒவ்வொரு செய்திக்கும் பதிலிறுப்பு செய்கிறோம். நாம் பறைசாற்றுதலும், பதிலிறுப்பு செய்தலும் நமக்கும் அந்த நபர் சார்ந்தவருக்குமே என்பதை உறுதி செய்யக் கருத்தாய் இருக்கிறோம். ஆனால், இன்றைய தரவுகள் (டேட்டா) மைய உலகில் நாம் எதையும் நமக்கென வைத்துக்கொள்ள இயலாது. இன்று நாம் விரும்புகிறோமா அல்லது விரும்பவில்லையோ, நான் என்னை அறியாமல் என் தரவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

சாலையில் நான் நடந்து சென்றால் என் உருவம் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் தரவுகளாகப் பதிகிறது. நான் மதுரைக்கு வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பீட்ஸா ஆர்டர் செய்வதைக் கண்காணிக்கின்ற ஸ்விக்கி நிறுவனம், தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று, 'நீங்கள் இன்று மதுரை செல்வீர்களா? கார் வேண்டுமா? ஓட்டுநர் வேண்டுமா?' என்ற ஒரு கேள்வியோடு எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அறிவிக்கிறது. ஆக, நான் நான்கு வாரம் தொடர்ந்து மதுரைக்கு வருகிறேன் என்பதை அது பதிவு செய்து, அதில் உள்ள செயற்கை நுண்ணறிவு எனக்குத் தேவையானதைப் பரிந்துரை செய்ய முன்வருகிறது. யூட்யூப், வலைதளம், தேடுபொறி என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு கால் பரப்பிப் படுத்துக்கிடக்கிறது.

ஒரு பக்கம், நான் செய்திகளைப் பரிமாறுகிறேன். இன்னொரு பக்கம் நானே செய்தியாகப் பின்பற்றப்படுகிறேன். மேலும், செய்திகள் என்னைச் சுற்றிப் பரவிக் கிடக்கின்றன. 

செய்திகளைப் பறைசாற்றுதலும் செய்திகளுக்குப் பதிலிறுப்பு செய்தலும் இன்றியமையாத ஒன்றாக இன்று ஆகிவிட்டன.

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் நற்செய்தி பறைசாற்றவும் பதிலிறுக்கவும்படுவதை நாம் வாசிக்கின்றோம்.

'யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார்' என்று இயேசுவின் பணித் தொடக்கத்தை அறிமுகம் செய்கின்றார் மாற்கு. மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலின் தொடக்கத்தில், 'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி' (1:1) என்று சொல்கின்றார். ஆனால், இங்கே, 'கடவுளின் நற்செய்தி' என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார். அது என்ன கடவுளின் நற்செய்தி? (அ) இயேசுவே கடவுளின் நற்செய்தி, (ஆ) இயேசு மொழிவதே கடவுளின் நற்செய்தி, மற்றும் (இ) இயேசு வழியாக கடவுள் செயலாற்றும் மீட்புத் திட்டமே கடவுளின் நற்செய்தி என்று மூன்று நிலைகளில் நாம் இந்தச் சொல்லாட்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆக, இயேசுவின் நற்செய்தியின் மையமாகக் கடவுள் இருக்கின்றார். 

முதலில் நற்செய்தியைப் பொதுவாக எல்லா மக்களுக்கும் பறைசாற்றுகின்றார் இயேசு. அங்கே யாரும் பதிலிறுப்பு செய்வதாக மாற்கு குறிப்பிடவில்லை.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'என் பின்னே வாருங்கள்! நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்!' என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், அவருடைய முதற்சீடர்கள் - சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான் - அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களின் பதிலிறுப்பு இரு நிலைகளில் நடக்கிறது: ஒன்று, தங்கள் வலைகளை விட்டுவிடுகின்றனர். இரண்டு, தங்கள் தந்தை யை வேலையாள்களோடு விட்டுவிடுகின்றனர். 

இயேசுவின் செய்தி அவர்கள் வாழ்வில் உடனடியான பதிலிறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வு மூன்று நிலைகளில் நடக்கிறது: முதலில், அவர்கள் இயேசுவின் செய்தியை தாங்கள் இருக்கும் இடத்தில், தங்கள் அன்றாடப் பணியின் நடுவில் கேட்கின்றனர். இரண்டு, அவர்கள் இயேசுவின் செய்தியை முழுமையாக நம்புகிறார்கள். மூன்று, அவர்கள் தங்கள் பாதுகாப்பு வளையங்களான வலை மற்றும் உறவினர், பணியாளர்களை விட்டுவிடத் துணிகிறார்கள். 

முதல் வாசகத்தில், யோனா நினிவே நகரில் நற்செய்தி அறிவித்த நிகழ்வை வாசிக்கின்றோம். நினிவே நகரம் அசீரிய நாட்டின் தலைநகரம். அசீரியர்கள் கிமு 722இல் படையெடுத்து வடக்கு இஸ்ரயேலை அடிமைப்படுத்துகின்றனர். அது முதல், அசீரியர்கள்மேல் தீராத பகையும் கோபமும் இஸ்ரயேல் மக்களுக்கு உண்டாகிறது. இந்நிலையில் அசீரியாவை அழிக்க நினைக்கின்ற கடவுள் யோனாவை அனுப்பி அங்கே மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார். தன் சமகாலத்து இஸ்ரயேல் மக்களைப் போல யோனாவும், நினிவே எப்படியும் அழிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டவருடைய திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்து, ஆண்டவரின் திருமுன்னிலையிலிருந்து தப்பி ஓடுகின்றார். ஆனால், கப்பலிலிலிருந்து தூக்கியெறியப்பட்ட அவரை வியத்தகு முறையில் மீன் ஒன்றின் வழியாகக் காப்பாற்றுகின்றார் கடவுள். இரண்டாம் முறையாக ஆண்டவராகிய கடவுளின் வாக்கு அருளப்பட்டவுடன், ஆண்டவரின் கட்டளைப்படி நினிவேக்குச் செல்கின்றார் யோனா. யோனா என்றால் புறா என்பது பொருள். மூன்று நாள்கள் கடக்க வேண்டிய தூரத்தை ஒரே நாளில் கடந்து ஓட்டமும் நடையுமாக நற்செய்தியை அறிவிக்கின்றார். ஆனால், என்ன விந்தை! நினிவே மக்கள் உடனடியாகக் கடவுளின் செய்தியை நம்பி நோன்பிருக்கின்றனர். 

பெரியவர்கள் முதல், வலது கை எது இடது கை எது என அறியாத குழந்தைகள் வரை அனைவரும் நோன்பிருக்கின்றனர். ஆண்டவரும் தன் மனத்தை மாற்றிக்கொள்கின்றார்.

இங்கே, ஆண்டவராகிய கடவுளின் செய்தி முதலில் யோனாவுக்குப் பறைசாற்றப்படுகின்றது. முதலில் அதற்குப் பதிலிறுக்க மறுக்கும் அவர் இரண்டாம் முறை பதிலிறுக்கின்றார். ஆனால், நினிவே நகர மக்கள், யோனா வழியாகக் கடவுள் அறிவித்த செய்திக்கு உடனே பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பரத்தைமை என்ற செயல் பரவிக்கிடந்த கொரிந்து நகரத் திருஅவையினரிடம் மணத்துறவு பற்றி உரையாடுகின்ற பவுல், இந்த உலகின் நிலையாத்தன்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தாங்கள் பெற்ற நம்பிக்கைக்கு ஏற்ற பதிலிறுப்பைத் தங்கள் வாழ்வில் காட்ட அழைப்பு விடுக்கின்றார்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், யோனா கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார். நினிவே மக்கள் தங்கள் மனமாற்றத்தின் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பவுல், கடவுளின் நம்பிக்கையினால் உந்தப்படும் அறநெறி வாழ்க்கைமுறையைச் சுட்டிக்காட்டி, அதற்கேற்ற பதிலிறுப்பைக் காட்ட கொரிந்து நகர மக்களை அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுளின் செய்தியைப் பறைசாற்றுகின்றார். முதற்சீடர்கள் நால்வர் அவரைப் பின்பற்றுவதன் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

நற்செய்தியைப் பறைசாற்றுதலும், நற்செய்திக்குப் பதிலிறுத்தலும் நம் வாழ்வில் எப்படி நடைபெற வேண்டும்?

(அ) நற்செய்தியைப் பறைசாற்றுதல்

இன்று நாம் பல தளங்களில் நற்செய்தியைப் பறைசாற்றுகிறோம். பல்வேறு ஊடகங்கள் மற்றும் செயலிகள் நற்செய்திப் பறைசாற்றுதலை எளிமையாக்கி உள்ளன. ஆனால், பல நேரங்களில் மேற்காணும் பறைசாற்றுதல்கள் கடவுள் அல்ல, மாறாக, நாமே முதன்மைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு வருகிறது. நான் கொடுத்த செய்தியை எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் விரும்பினார்கள், எத்தனை பேர் பகிர்ந்துகொண்டார்கள், எத்தனை பேர் பாராட்டினார்கள் என்று நம் உள்ளத்தில் எழும் தேடல் சொல்வது என்ன? பறைசாற்றப்படுவது கடவுள் அல்ல! பறைசாற்றுபவர்தான்! யோனா முதலில் கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்ற மறுக்கக் காரணம் அவருடைய முற்சார்பு எண்ணமும், தன்மையப்படுத்தலும்தான். தன்னையும், தன் சார்ந்த இனத்தின் விருப்பு வெறுப்புகளையும் உள்வாங்கிய யோனா, அதன் பின்புலத்தில் கடவுளை அறிவிக்க மறுக்கின்றார். 

இன்று நற்செய்தியைப் பறைசாற்ற மூன்று தடைகள் இருக்கின்றன என்று நாம் சொல்ல முடியும்:

ஒன்று, தயக்கம். அதாவது, 'நான் எப்படி இதைச் செய்வது?' என்ற தயக்கம். இத்தயக்கத்தோடு வருவது, 'என்னால் இயலாது' என்ற எதிர்மறை உணர்வு.

இரண்டு, முற்சார்பு எண்ணம். 'நற்செய்தி சொல்லி என்ன ஆகப் போகிறது? இந்த உலகம் அப்படியே தான் இருக்கும். யாரும் மாறப்போவது இல்லை. எதற்கு நேரத்தை மற்றும் ஆற்றலை விரயம் செய்ய வேண்டும்?' என்ற கேள்விகளோடு நாம் பல நேரங்களில் நம் முற்சார்பு எண்ணங்களில் உறைந்துவிடுகின்றோம்.

மூன்று, தன்மையப் போக்கு. யோனாவைப் போல கடவுளின் நற்செய்தியையும் நம் செய்தியையும் ஒன்று எனப் பல நேரங்களில் குழப்பிக் கொள்கின்றோம்.

(ஆ) நற்செய்திக்குப் பதிலிறுத்தல் - எப்படி?

ஒன்று, தயார்நிலை. நினிவே மக்கள் உடனடியாகத் தவ உடை அணிந்து நோன்பிருக்கின்றனர். முதற்சீடர்கள் உடனயாக தங்கள் வலைகளையும் படகுகளையும் தந்தையையும் பணியாளர்களையும் விட்டுவிட்டு வருகின்றனர். 'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும்!' என்பது ஜென் மொழி. தயாராக இருப்பவர்கள் மட்டுமே பதிலிறுப்பு செய்ய முடியும்.

இரண்டு, வாழ்வின் நிலையாமை. இரண்டாம் வாசகத்தில் இந்த உலக வாழ்வின் நிலையாமை பற்றி எடுத்துச் சொல்கின்றார் பவுல். எதுவும் நிலையற்றதாக இருக்கும் இந்த உலகில், இந்த நொடியில் உடனடியாகக் கடவுளைப் பற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். நாளை என்பது உறுதியாக இல்லாத நிலையில் இன்றே பதிலிறுத்தல் நலம்.

மூன்று, பாதை மாற்றம். ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து இன்னொரு விளைவை எதிர்பார்த்தல் நியாயமற்றது. மீன்களைப் பிடித்துக் கொண்டே மனிதர்களைப் பிடிக்க இயலாது. பரத்தைமையில் இருந்துகொண்டே அறநெறியோடு வாழ இயலாது. பாவ நிலையில் இருந்துகொண்டே கடவுளுக்கு அருகில் வர முடியாது. பின்னையதை அடைய முன்னையதை விட வேண்டும்.

இறுதியாக,

இன்று மனிதச் செய்திகளைப் பறைசாற்றவும், அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்யவும், அவற்றில் நம் தனியுரிமை காக்கப்படவும் முயற்சிகள் எடுக்கும் நாம்,

கடவுளின் நற்செய்தி நம் வாழ்வில் பறைசாற்றப்படவும், அச்செய்தி நம்மை நோக்கி வரும்போது அதற்கேற்ற பதிலிறுப்பு செய்யவும் முயற்சி எடுத்தல் நலம்.

எனவே, 'உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்' (காண். திபா 25) என்று அவரிடம் வேண்டும். அவரின் பாதைகளை அறிதல் நற்செய்தி. அந்தப் பாதையில் வழிநடத்தல் நம் பதிலிறுப்பே.

Friday, January 22, 2021

மக்கள் பேசிக்கொண்டனர்

இன்றைய (23 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 3:20-21)

மக்கள் பேசிக்கொண்டனர்

நாசி வதை முகாமிலிருந்து வெளியேறிய விக்டர் ஃப்ராங்ள் என்ற உளவியல் அறிஞர், 'லோகோதெரபி' என்ற ஓர் உளவியல் ஆற்றுப்படுத்தும் முறையைக் கண்டறிகிறார். இதன்படி, மனிதர்கள் தங்கள் வாழ்வுக்கான பொருளை உணர்ந்தார்கள் என்றால், அவர்களால் எந்தவொரு துன்பத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.

மனிதர்கள் இரு வகை என்கிறார் அவர்:

முதல் வகையினர், தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தெரிவு செய்து வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வுக்கு முழுவதும் தாங்களே பொறுப்பேற்று வாழ்பவர்கள்.

இரண்டாம் வகையினர், மற்றவர்களைப் போல வாழ முயற்சி செய்பவர்கள். இவர்களைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதுகிறார்: 'என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உள்ளுணர்வு அவர்களுக்குச் சொல்லாது. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகையால், மற்றவர்கள் செய்வது போலச் செய்வார்கள், அல்லது மற்றவர்கள் தங்களுக்குப் பணிப்பதைச் செய்துகொண்டிருப்பார்கள்.'

'ஒத்துப்போதல்' அல்லது 'இணக்கம்' (conformism) சமூகவியலில் அதிகாகப் பேசப்படும் வார்த்தை. இந்தப் பண்புதான் மானுடத்தை ஒன்றிணைக்கிறது, மானுடம் வளர உதவுகிறது. 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' போன்ற பழமொழிகள் வழியாக, காலங்காலமாக இது நமக்குச் சொல்லப்பட்டு, நாம் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கப்படுகின்றது.

ஊரோடு ஒத்துப் போதல் நலமா? ஊரோடு நாம் எப்போதும் இணங்கியே வாழ வேண்டுமா? 

'மக்கள்'

மாற்கு நற்செய்தியில் மக்கள் பெரும்பாலும் இயேசுவின் பணிக்குத் தடையாகவே இருப்பார்கள். முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வரும்போது, மக்கள் அங்கு தடை போல அமர்ந்திருக்கின்றனர். பேய் பிடித்த சிறுவனுக்கு நலம் தரும் நிகழ்வில் மக்கள் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு விரைவில் செயலாற்றுகின்றார். இரத்தப் போக்குடைய பெண் குணமாகும் நிகழ்வில் மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்குகிறது. யாயிரின் வீட்டுக்கு வெளியே கூட்டம் அமர்ந்து ஒப்பாரி வைப்பதுடன் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு எள்ளி நகையாடவும் செய்கிறது. உணவருந்தக் கூட நேரம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் இயேசுவைச் சூழ்ந்து நிற்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் மிகக் குறுகியதாக இருந்தாலும், மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

'இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்'

தனியே இரவு முழுவது இறைவேண்டல் செய்யும் ஒருவர்,

பரிவு கொண்டு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு உணவளித்த ஒருவர்,

கடல்மீது நடந்து தன் சீடர்களை நோக்கி வந்த ஒருவர்,

புதிய மணமகனாகத் தன்னை முன்வைத்து நோன்பை ஒதுக்கிய ஒருவர்,

ஓய்வுநாளில் கை சூம்பிய ஒருவருக்கு நலம் தந்த ஒருவர்,

தன்னோடு இருக்கவும், அனுப்பப்படவும் பன்னிருவரைத் தேர்ந்துகொண்ட ஒருவர்,

மக்களின் பார்வையில் 'மதிமயங்கியவர்' என்று தெரிகின்றார்.

'மதிமயங்கி இருக்கிறார்' அல்லது 'மூளை குழம்பியுள்ளார்' அல்லது 'அப்நார்மலாக இருக்கிறார்' என்று மக்கள் பேசிக்கொண்டனர். 

மக்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள்?

இயேசு தங்களைப் போல இருக்க வேண்டும் எனவும், தங்கள் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் அல்லது இணக்கமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால், இயேசு தன் வாழ்வின் தெரிவுகளைத் தான் தேர்ந்தெடுக்கிறாரே ஒழிய, அவற்றை மற்றவர்களிடம் அவர் கொடுக்கவில்லை.

'உனக்காக இல்லடா! இத நீ ஊருக்காகச் செய்தே ஆக வேண்டும்!' என்று நம்மைச் சுற்றி மக்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் விரும்புவது போலப் பேச வேண்டிய, உண்ண வேண்டிய, நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாகிக்கொண்டே இருக்கின்றோம்.

ஊர் தனக்கென ஒரு வழக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதை மீறும் அனைவரையும் 'அப்நார்மல்' என அழைக்கிறது. அப்படி அழைத்துவிடுதல் எளிது. ஏனெனில், அவரைப் பற்றி மீண்டும் அவர்கள் அக்கறைகொள்ளத் தேவையில்லை.

இரண்டு கேள்விகள்:

(அ) மற்றவர்களின் வாழ்க்கை முறை, நடைவுடை பாவனை ஆகியவற்றைக் கண்டு, அல்லது என்னைவிட வித்தியாசமாக, அல்லது ஊராரை விட வித்தியாசமாக ஒருவர் இருக்கிறார் எனக் கண்டு, அவரை நான் 'அப்நார்மல்' என அழைக்கின்றேனா?

(ஆ) மக்கள் சொல்வதே சரி, மக்களோடு ஒத்துப் போவதே சரி, மக்களின் பேச்சுக்குப் பணிந்து செல்தலே சரி என்று நான் மக்கள் மந்தையைப் போல இருக்க முயல்கிறேனா?

இரண்டுமே தவறு.

மதிமயங்கியவர் இயேசு அல்ல.

மதிமயங்கியவர்கள் மக்களே.

தாம் விரும்பியவர்களை

இன்றைய (22 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 3:13-19)

தாம் விரும்பியவர்களை

கடந்த சில நாள்களுக்கு முன்பாக, இறையழைத்தல் பற்றிய ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடைபெறும் இறையழைத்தல் முகாம் முறை பற்றியும், அருள்பணி மற்றும் துறவற வாழ்வுப் பயிற்சிக்கான மாணவர்கள் மற்றும் மாணவியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும் பேசப்பட்டது. இக்கருத்தரங்கில் பேசியவர்களில் அனைவரும் தவறாமல் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அதாவது, வருகின்ற மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்களின் முழு விருப்பத்தோடு வர வேண்டும். ஏனெனில், கட்டாயத்தின்பேரில் வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். 

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் பன்னிரு திருத்தூதர்களை அழைக்கின்ற நிகழ்வை வாசிக்கின்றோம்.

எந்தவொரு இறையழைத்தல் முகாமும் நடத்தாமல்,

யாருடைய பரிந்துரைக் கடிதமும் இல்லாமல்,

விளையாட்டுப் போட்டிகள், எழுத்துத் தேர்வுகள் இல்லாமல்,

யாருடைய பயோ டேட்டாவும் சேகரிக்கப்படாமல்

இனிதே நிறைவேறுகிறது இயேசு நடத்திய இறையழைத்தல் முகாம்.

'மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தனர்.'

மலைமேல் இயேசு ஏறியது மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: ஒன்று, மலையில் அவர் இறைவேண்டல் செய்கின்றார். ஆக, தன் தந்தையின் துணையோடு தன் திருத்தூதர்களைத் தெரிவு செய்கின்றார். இரண்டு, மோசே மலைமேல் ஏறி நின்று இஸ்ரயேல் குலங்கள் பன்னிரண்டை ஒருங்கிணைத்தது போல, இயேசு புதிய இஸ்ரயேலின் அடித்தளத்தை உருவாக்குகின்றார். மூன்று, கீழே நின்று பார்ப்பதை விட, மலைமேல் நின்று பார்க்கும்போது பார்வை அகலமாகவும் முழுமையாகவும் இருக்கும். ஆக, இயேசு தன் திருத்தூதர்களை ஒரே முழுமையான பார்வையால் பார்க்கின்றார்.

இரு நோக்கங்களுக்காக அவர்களை அழைக்கின்றார்:

'தம்மோடு இருக்கவும், நற்செய்தி பறைசாற்ற மற்றும் தீய ஆவிகள் மேல் அதிகாரம் கொண்டிருக்க அனுப்பப்படவும்' அவர்களை அழைக்கின்றார்.

இயேசு, முதலில், தன் திருத்தூதர்களைத் தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்.

இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

'தனியாய் எவரும் சாதிப்பதில்லை' என்பதை அறிந்தவர் இயேசு என்பதை இங்கே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டபோது அவர்களுடைய உள்ளத்தில் எவ்வளவு துள்ளல் இருந்திருக்கும்?

இன்னொருவரால் நாம் விரும்பப்படுவது எவ்வளவு பெரிய பாக்கியம்?

அது நமக்கு எவ்வளவு தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் கொடுக்கிறது?

இன்று நான் கேட்கின்ற கேள்வி இதுதான்:

(அ) இயேசு விரும்பி என்னை அழைக்கும் அழைக்கும் அளவுக்கு நான் என்னையே தகுதிப்படுத்திக்கொள்கிறேனா? 'இயேசு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்ந்தெடுத்தவர்களைத் தகுதியாக்கினார்' என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், இயேசுவின் பார்வையில் இவர்கள் ஏதோ ஒரு வகையில் தகுதியானவர்களாக இருந்ததால்தான், அவர் அவர்களைத் தெரிவு செய்கின்றார்.

(ஆ) இயேசுவோடு - அவரோடு - இருப்பதுதான் அழைத்தல் வாழ்வின் முதன்மையான நோக்கம் என்றால், இன்று பல நேரங்களில் அதை நான் தவிர்ப்பது ஏன்? அவரோடு இருத்தல் என்னும் முதல் நோக்கம் நிறைவேறினால்தான், அனுப்பப்படுதல் என்னும் இரண்டாம் நோக்கம் நிறைவேறும். அவரோடு இல்லாமல் நான் புறப்பட்டுப் போகும் தளங்கள் அனைத்தும் வெற்றுத் தளங்களே.

மலைமேல் ஏறி நிற்கும் இயேசுவின் கண்களில் நானும் விருப்பமானவன்(ள்) என்றால் எத்துணை நலம்!