Monday, October 31, 2016

பால்குடி

'எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.'
(காண். திபா 131)

இன்று காலை திருப்பலியில் வாசிக்கப்பட்ட இந்த திருப்பாடல் வரிகள் என்னைத் தொட்டன.

நேற்று மாலையிலிருந்து மனத்தில் ஒரு போராட்டம். வாழ்க்கையில் என்ன சாதிச்சிட்டோம்? ஏறக்குறைய 35 வருடங்கள் வாழ்ந்தாயிற்று? இங்கிருந்து போகும்போது எதை விட்டுச் செல்வேன்? நான் போகும் பாதை சரிதானா? இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? என்னைப் பிறர் எதற்காக நினைவுகூறுவார்கள்? - இப்படி நிறைய கேள்விகள்.

இந்தக் கேள்விகளோடு தூங்கப்போன எனக்கு இன்று காலை மேற்காணும் வரிகளைக் கேட்டது இதமாக இருந்தது.

அறைக்கு வந்து இந்தப் பாடலை எபிரேயத்தில் வாசித்தேன்.

'தாய்மடி தவழும் குழந்தை' என்பதற்குப் பதிலாக அங்கே 'பால்குடி மறந்த குழந்தை' என்று இருக்கிறது.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை:

அ. பால்குடி மறப்பது (weaning)

பால்குடி மறப்பது அல்லது மறக்கச் செய்வது குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான பருவம். தாயின் வயிற்றில் தொப்புள்கொடி வழியாக தன்னை அவளோடு இணைத்துக் கொள்ளும் குழந்தை, பிறந்தவுடன் அவளின் மார்புக் காம்பு வழியாக தன்னை இணைத்துக் கொள்கிறது. பால் குடிக்கும் பருவம் வரை அது தன்னை தன் தாயின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. ஆனால், இப்படி அது தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். பால்குடி மறக்கச் செய்தல் தாயின் மிகப்பெரிய வேலை. ஏனெனில் தன்னிடமிருந்து தன் குழந்தையைப் பிரிக்கும் அந்த முயற்சி அவளுக்கும் வலிக்கும். ஆனாலும் அவள் தன் குழந்தைக்காக அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். தாயைவிட குழந்தைக்கு வலி அதிகம். இனி அது எல்லாவற்றையும் தன் சொந்த முயற்சியில் செய்ய வேண்டும். தன்னைத் தானே வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அதன் உள்ளத்தில் ஒரு போரட்டம் இருக்கும். தாயுடன் இருக்க முடியாதா? தனியாக என்ன செய்வது? என்ற கேள்விகள் எழும். மற்றொரு பக்கம் 'என்னால் எல்லாம் முடியும்' என்ற எண்ணமும் அதற்கு இருக்கும். இந்தப் போராட்டத்தில் அது தன் அமைதியை இழக்கும். அப்படி இழக்கும் அந்த குழந்தைக்கு தாய்மடி ஆறுதல் தரும்.

இத்தகையை அமைதியை இறைவன் தனக்கு தர வேண்டுகிறார் தாவீது.

ஆ. வலுவற்ற நிலை (weak)

இதுதான் மிகவும் கொடியது. தன் தாயின் மார்பும் தனக்கும் இல்லை, தன்னாலும் தன் கால்களால் நிற்க முடியாது என்ற வலுவற்ற நிலையில் குழந்தை இருக்கும். 'நான் எங்கே போவேன்?' 'எனக்கென்று யார் இருக்கா?' என்ற கேள்வி உள்ளத்தில் எழும். இந்தக் கேள்விகள் நமக்கும் எழும்போதுதான் நாம் நிறைய உறவுகளையும், பணத்தையும், புகழையும் சம்பாதிக்க நினைக்கிறோம். அவர்கள் அல்லது அவைகளில் நம் பாதுகாப்பை தேடுகிறோம். நாம் வயது வந்தவர்கள். இவற்றை சம்பாதிக்க நம்மால் முடியும். ஆனால் குழந்தைக்கு முடியுமா? இல்லை. அது மறுபடி தன் தாயின் மடியில்தான் கிடக்க வேண்டும். ஆக, எல்லாவற்றையும் அள்ளி அணைத்திட வேண்டும் என்ற அம்பிஷன் இருந்தாலும், மனம் அமைதி வேண்டுமெனில் அது இறைமடியை நாட வேண்டும்.

'எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
பால்குடி மறந்த குழந்தையென என் நெஞ்சம் அமைதியாயுள்ளது!'

Sunday, October 30, 2016

ஒரு மனத்தவராய்

நாளைய முதல் வாசகத்தில் (காண். பிலிப்பியர் 2:1-4) கிறிஸ்து பற்றிய பாடலை எழுதுவதற்கு முன் வரும் அறிவுரைப் பகுதியை வாசிக்கின்றோம்:

'அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து,
ஒரு மனத்தவராய் இருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்!'

கிரேக்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது 'ஒருமை,' 'பன்மை' சிக்கல் வருகிறது.

அதாவது, ஒருமையில் எழுதப்பட்டதை நாம் மரியாதை கருதி பன்மையில் மொழிபெயர்க்கிறோம். 'நீங்கள் செய்யுங்கள்!' என்பதை நாம் மரியாதைக்குரிய ஒருவரைப் பார்த்து ஒருமையிலும், அல்லது மொத்தமாக பன்மையிலும் பயன்படுத்துகிறோம்.

முன்நிற்பவர் யார் என்று தெரியாதபோது பொருள் மாறிவிடுகிறது.

'நீ ஒருமனத்தவராய் இரு!' என்பதுதான் மொழிபெயர்ப்பு.

அதாவது, மொத்தமான திருச்சபையை நோக்கி பவுல் பேசினாலும், அவரின் வார்த்தைகள் தனிப்பட்ட நபர்களை நோக்கியே இருக்கின்றன.

நான் எனக்குள்ளே ஒருமனத்தவராய் இருப்பது சில நேரங்களில் கஷ்டமாக இருக்கிறது.

ஏழைகளைப் பார்த்தால் இரங்க வேண்டும் என்னும் நான்

அவர்களைப் பார்த்தால் வண்டியை விட்டு இறங்குவது கூடக் கிடையாது சில நேரங்களில்.

அப்படிப்பட்ட நேரங்களில் நான் இருமனப்பட்டுத்தானே இருக்கிறேன்.

வாழ்க்கை என்பதே நாம் இருமனப்படுதலிருந்து ஒருமனப்படுதலை நோக்கி பயணம் செய்வதுதான் என நினைக்கிறேன்.

அந்த ஒருமனப்படுதல் வரும்போது நாம் அவரில் கலந்துவிடுகிறோம்.

Saturday, October 29, 2016

காட்டு அத்திமரம்

எனது காட்டு அத்திமரம் எது?


காட்டு அத்திமரம் சக்கேயுவுக்கு இயேசுவைப் பற்றி முழுமையான பார்வையை வழங்கியது. மற்ற யாரும் பார்க்க முடியாது அளவிற்கு சக்கேயு இயேசுவை முழுமையாகப் பார்க்கின்றார். மேலும் காட்டு அத்திமரம் அவரை மற்றவர்களுக்கு மேலாக உயரச் செய்கிறது. நாம் எங்கிருந்து பார்த்தால் இயேசு முழுமையாகத் தெரிகிறார்? அல்லது எனக்கும் இயேசுவுக்கும் இடையே பார்வையை மறைக்கும் தடைகள் எவை? சக்கேயு மரத்தில் இருந்து இறங்கியபோது அவர் அனைவருக்கும் கேலிப்பொருளாகத் தெரிந்திருப்பார். ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை. தன் முகத்தை மறைத்துக்கொள்ளவில்லை. 'இல்லை! வேண்டாம் இயேசுவே!' என அழைப்பை மறுக்கவில்லை. 'இன்னொரு நாளைக்கு வாருங்கள்!' என்று இயேசுவிடம் சமரசம் செய்யவுமில்லை. இயேசுவைக் கண்டுகொள்ள நான் ஏறும் அத்திமரம் எது? அல்லது மற்றவர்கள் இயேசுவைக் காண நான் ஓர் அத்திமரமாக இருந்திருக்கின்றேனா.

Friday, October 28, 2016

தீப ஒளி

'இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன்'

(காண். பிலி 1:18-26)

நாளை நாம் தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

ஒளி உண்டாகட்டும்! இன்றும் என்றும்!

நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் பிலிப்பி நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கின்றார்.

வழக்கமாக நாம் எல்லாரிடமும் நம் இறப்பு பற்றி சொல்வதில்லை. நெருக்கமானவர்களிடம் மட்டுமே சொல்கின்றார்.

அப்படித்தான் பவுலும் தன் இறப்பும் ஆதாயம் என்று தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகர மக்களிடம் சொல்கின்றார்.

வாழ வேண்டும் என்ற ஆசை ஒருபுறம். ஆண்டவரோடு இணைய வேண்டும் என்ற ஆசை மறுபுறம்.

இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள இழுபறிநிலையில் இருக்கின்றார் பவுல்.

இருதலைக்கொள்ளி எறும்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இரண்டு தலைகள் கொண்ட இந்த எறும்பின் வாழ்க்கை எப்போதும் திண்டாட்டம்தான். இரண்டு தலைகளும் தத்தம் பாதையில் நடக்க எத்தணித்தால் துன்புறுவது என்னவோ அதன் உடல்தான்.

அதுவா, இதுவா என்ற நிலை ஒழிந்து, இரண்டும் ஒன்றே என்ற ஒருங்கமைவு பிறந்தால் இழுபறி நிலை மறையும்.

அதுவே, நம் உள்ளத்தில் துலங்கும் ஒளி.

Thursday, October 27, 2016

நம்பிக்கை இழந்தோர்

நாளை புனித யூதா ததேயு திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நான் உரோமில் இருந்த பங்கின் திருநாள் நாளை.

இன்று காலை முதல் மனம் உரோம் நகரின் என் பங்கு ஆலயத்தைச் சுற்றியே வலம் வருகிறது.

ஒரு இடத்தை விட்டு போனவுடன்தான் அந்த இடத்தின் அருமை தெரிகிறது.

நம்பிக்கை இழந்தவர்களின் பாதுகாவலராக திருச்சபை அவரை முன்வைக்கிறது.

நம் வாழ்வில் உணவை இழந்தால், உறவை இழந்தால், பொருளை இழந்தால், புகழை இழந்தால் என எல்லா இழப்புகளையும் ஓரளவு நம்மால் சரிசெய்துவிட முடியும். ஆனால், நம்பிக்கை இழந்தால் எல்லாம் இழந்துவிட்ட நிலை வந்துவிடுகிறது.

நாளை நாம் கொண்டாடும் நம் புனிதர் நமக்கு நம்பிக்கை தரட்டும்.

இந்த நம்பிக்கையை நாம் மற்றவர்களுக்கும் ஊட்டுவோம்.

Wednesday, October 26, 2016

போராட்டம்

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் என்று பல நேரங்களில் நாம் கேட்டிருக்கிறோம்.

இன்னும் ஒரு படி போய் வாழும் வரை 'நீ ஒரு போராளி' என நாளைய முதல் வாசகத்தில் (எபே 6:10-20) சொல்கிறார் பவுல்.

இந்தப் போராளியின் படைக்கலன்களைப் பட்டியலிடுகின்றார் பவுல்:

அ. உண்மை - இடைக்கச்சை

ஆ. நீதி - மார்புக் கவசம்

இ. நற்செய்தி அறிவிக்கும் ஆயத்த நிலை - மிதியடி

ஈ. நம்பிக்கை - கேடயம்

உ. மீட்பு - தலைச்சீரா (ஹெல்மெட்)

ஊ. கடவுளின் வார்த்தை - போர்வாள்

நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனின் தலை, கைகள், இடுப்பு, கால்கள் எவற்றைத் தாங்கி இருக்க வேண்டும் என்று சொல்கிறது இந்தப் பட்டியல்.

இவை இருந்தால் நாம் நமக்கு மேலிருக்கும் ஆட்சியாளர்கள், அதிகாரம் செலுத்துவோரிடமும் போரிடலாம் என்கிறார் பவுல்.

ஆனால், நம் அரசு அலுவலகங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று பாருங்கள்.

இவற்றின் ஒன்றால்கூட நமக்கு பயன் இல்லையோ என்று தோன்றுகிறது.

வாழ்வின் எதார்த்தங்களும், இறைவார்த்தைகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாதது போல இருக்கின்றன.

இருந்தாலும், இப்படைக்கலன்கள்தாம் வாழ்க்கை என்ற வண்டியை ஒரு அடி முன்னால் எடுத்துச் செல்கின்றன.

முயன்றும்

'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமல்போகும்' என்று நாம் நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். 13:22-30) வாசிக்கும் சொற்கள் எனக்கு நெருடலாக இருக்கின்றன.

ஒருவர் இடுக்கமான வாயில் வழியே நுழைய முயல்கின்றார்.

ஆனால், அவரால் நுழைய முடியவில்லை.

ஆகவே, அவர் கதவைத் தட்டி தனக்கு கதவைத் திறந்துவிடுமாறு கேட்கிறார்.

அதாவது, மனிதர்கள் தங்கள் முயற்சியால் ஒன்றைச் செய்ய முற்படுகின்றனர். அது இயலாமல் போகின்றது. ஆகவே, அவர்கள் கடவுளை நோக்கி கூக்குரல் எழுப்புகின்றனர்.

ஆனால், அங்கே என்ன நடக்கிறது?

'உங்களை எனக்குத் தெரியாது!' என்று சொல்கிறார் ஆண்டவர்.

இது எதைச் சொல்கிறது?

நுழைய முயன்றும் இடுக்கமான வாயில் வழியே நுழைய முடியாமல் போனால் நம் முயற்சிகள் இன்னும் அதிகமாக வேண்டுமே தவிர, நாம் கடவுளை தேடக் கூடாது.

அப்படின்னா, கடவுளே தேவையில்லையா?

'உங்களை எனக்குத் தெரியாது!' என்று நாமும் ஏன் கடவுளைப் பார்த்துச் சொல்லக் கூடாது?

Monday, October 24, 2016

மறைபொருள்

'இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது!'

(காண். எபேசியர் 5:21-33)

கணவர்-மனைவியர் வாழ்வுமுறை குறித்து எபேசு நகரத் திருச்சபைக்கு நாளைய முதல்வாசகத்தில் அறிவுறுத்தும் பவுலடியார், திருச்சபை - கிறிஸ்து, மனைவி - கணவர் என்ற ஒப்புமையைப் பயன்படுத்தி திருச்சபையைப் பற்றிய புதிய கருதுகோளையும் முன்வைக்கின்றார்.

நாம் கொண்டாடும் ஒவ்வொரு திருப்பலியிலும், எழுந்தேற்றத்தின் பின், 'இது விசுவாசத்தின் மறைபொருள்' என்கிறோம். அதாவது, இயேசுவின் உடல் - இரத்தம் என்னும் மறைபொருளை உணர்ந்து கொள்ள விசுவாசம் அல்லது நம்பிக்கை தேவை.

அதுபோலவே, திருச்சபை - கிறிஸ்து, மனைவி - கணவர் என்ற உறவுநிலைகளை அறிந்து கொள்ளவும் நம்பிக்கை தேவை.

'மறைவாய் இருக்கும் பொருளே' மறைபொருள்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் இருக்கிறது என்பது எனக்கு மறைபொருள்.

அதாவது, நான் அங்கே சென்றதில்லை. என் கண்களால் பார்த்ததில்லை. என் கால்கள் அங்கு நடந்ததில்லை. இருந்தாலும், நான் நம்பிக்கையால் அது இருப்பதாக ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கனவே போய்-வந்தவர்கள் சொன்னதைப் பற்றியும், அங்கே வாழ்பவர்களின் பகிர்தலிலிருந்தும், கூகுள் மேப், விக்கிபீடியா சொல்வதிலிருந்தும் என நிறைய தரவுகளை நான் நம்புகிறேன்.

கபிரியேல் மார்சல் என்ற மெய்யியலாளர் 'மறைபொருள்' (mystery) என்பதற்கு புதிய விளக்கம் தருகிறார். வாழ்க்கையின் எதார்த்தங்களை 'மறைபொருள்' (mystery),  'பிரச்சினை' (problem) என இரண்டாகப் பிரிக்கிறார்.

இரண்டும் இரண்டும் நான்கு என்பது ஒரு பிரச்சினை. அது எத்தனையாக இருந்தாலும் நம்மை பாதிப்பதில்லை.

ஆனால், எனக்கும் என் நண்பனுக்கும் இடையே உள்ள நட்பு என்பது ஒரு மறைபொருள். அதாவது, நான் அதில் ஒரு உறுப்பாக இருக்கிறேன். பிறப்பு, வாழ்க்கை, இறப்பு, கடவுள், ஆன்மீகம் என்பவை எல்லாம் மறைபொருள். ஏனெனில் நான் அவற்றின் ஒரு உறுப்பாக இருக்கிறேன். என்னையே அவற்றிலிருந்து துண்டித்து நான் தள்ளி நிற்க முடியாது.

கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள உறவு, கணவன்-மனைவி என்ற உறவை ஒத்திருக்கிறது என்றால், நான் அந்த உறவுக்குள் இருக்கும்போதுதான் அதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது.

நான் அந்த உறவுக்குள் இல்லாத வரை அது எனக்கு ஒரு ப்ராப்ளம் என்ற அளவில்தான் இருக்கிறது.

ஆக, இரண்டு விடயங்கள்:

அ. நம்பிக்கை என்ற கண் கொண்டு மறைபொருளைப் பார்ப்பது
ஆ. என் வாழ்க்கையின் பொருளை அதன் உள்ளே நின்று கொண்டு பார்ப்பது

Sunday, October 23, 2016

அன்பின் இயல்பு

'கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.' (காண். எபே 4:32-5:8)

இயேசு கல்வாரியில் இறந்த 40 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட எபேசியர் திருமடல் இயேசுவின் இறப்பை எப்படி வர்ணிக்கிறது பாருங்கள்?

'நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக'

நற்செய்தி நூல்களில் நாம் இயேசுவின் இறப்பு பற்றிய நிகழ்வுகளை வாசித்தோம் என்றால் அங்கே அவர் ஆடையின்றி, வெட்ட வெளியில், எல்லார் முன்னிலையிலும் இகழப்பட்டு, தூசிக்குள், காற்றுக்குள்ளும் துவண்டுபோய் நிர்கதியினராய் இறந்து போகின்றார்.

ஆனால், அதை பவுலோ அல்லது அவரின் சீடரோ அப்படியே 'குருத்துவ' சொல்லாடலில் மாற்றிப் பதிவு செய்கின்றனர்.

ஆலயத்தில் குரு செலுத்தும் காணிக்கை அல்லது பலிப்பொருள்கள் எந்நேரமும் சாம்பிராணியின் துணை கொண்டே செய்யப்பட்டன. அதாவது, சாம்பிராணிப் புகை நறுமணம் தருவது மட்டுமல்ல. அது பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆகையால்தான் ஆடுகளுகம், மாடுகளும், பறவைகளும் வெட்டப்படும் இடத்தில் சாம்பிராணி போடப்படுகின்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது சாம்பிராணியாக நறுமணம் வீசியது அவரின் அன்பே.

'வலி மறைந்து போகும். அழகு என்றும் நிற்கும்!' என்று சொல்வார்கள்.

சிலுவையும் அதன் கொடூரமும் மறைந்துவிட்டது.

இயேசுவின் அன்பு நறுமணமாய் இருக்கிறது.

அன்பின் இயல்பும் இதுவோ!

Saturday, October 22, 2016

ஏற்புடையவர்

நாளைய நற்செய்தியை (காண். லூக் 18:9-14) வாசிக்கிறோம்.

பரிசேயர், வரிதண்டுவோர் என்ற இரண்டு கதைமாந்தர்களைப் பார்க்கின்றோம்.

பரிசேயர் சொல்கிறார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்'

வரிதண்டுபவர் சொல்கிறார்: 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்!'

இரண்டுபேருமே தன்னைப் பற்றித்தானே பேசிக்கொள்கிறார்கள்.

அப்படி இருக்க, இரண்டாமவரை மட்டும் ஏன் இயேசு 'ஏற்புடையவர்' என்கிறார்?

எந்நேரமும் 'நான் பாவி' என்று சொல்வதுதான் கடவுளின் விருப்பமா?

அப்படி நான் சொல்லிக்கொண்டே இருப்பது என்னில் இருக்கும் இறைச்சாயல் என்னும் சூரியனை கிரகணம் செய்துகொள்வது இல்லையா?

என்னைப் பொறுத்தவரையில், அந்த நேரத்தில் அமைதியாக எங்கோ நின்று கொண்டு எதையோ செய்து கொண்டு அல்லது சிந்தித்துக்கொண்டிருந்தவரே ஏற்புடையவர்!

Friday, October 21, 2016

குழந்தைகளைப் போல

'இனி நாம் குழந்தைகளைப் போல இருக்கக் கூடாது'

(காண். எபேசியர் 4:7-16)

குழந்தைகள் பற்றிய உருவகங்கள் பவுலின் மடல்களில் நிறையக் காணக்கிடக்கின்றன.

'பால் குடித்தல்,' 'திட உணவு உண்ணுதல்,' 'பிரம்பால் அடித்தல்,' 'குழந்தைகளைப் போல இருத்தல்' என நிறைய சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றார் பவுல்.

எதற்காக குழந்தைகள் போல இருக்கக் கூடாதாம்?

குழந்தைகள் யாராலும் எளிதாக திசைமாற்றப்படக்கூடியவர்கள்.

அப்படி தவறான போதனைகளால் எபேசு நகர மக்கள் திசைமாறிச் செல்லக்கூடாது என்பதுதான் பவுலின் கவலையாக இருக்கின்றது.

Thursday, October 20, 2016

கைதியாய்

'சகோதரர், சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாய் இருக்கும் நான் உங்களைக் கெஞ்சி கேட்கிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்!'

(காண். எபேசியர் 4:1-6)

இந்த நாட்களில் எபேசியர் திருமடலை வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

நாளைய முதல்வாசகத்தின் இந்த தொடக்கப் பகுதியை வாசித்தவுடன் என்னில் ஒரு கேள்வி எழுந்தது.

பவுலடியார் கைதியாய் சிறையில் கிடக்கிறார்.

சிறையில் இருந்து கொண்டு எழுதும் ஒருவர் வழக்கமாக என்ன எழுதுவார்?

'என்னை சீக்கிரம் பிணையில் எடுங்கள்'

அல்லது

'எனக்காக அந்த நீதிபதியிடம் பரிந்துரை செய்யுங்கள்'

அல்லது

'உங்களின் பணம் மற்றும் ஆள்பலம் கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள்'

அல்லது

'வீட்டில் உள்ள என் சொந்தக்காரர்களுக்கு இதைச் செய்யுங்கள்'

அல்லது

'என் சொத்துக்களை நான் வரும் வரை பார்த்துக்கொள்ளுங்கள்'

இப்படித்தானே சொல்லியிருக்க வேண்டும்? இதுதானே உலக வழக்கம்!

ஆனால், பவுலடியாரைப் பாருங்கள்.

தான் கைதியானதைக் கூட நேர்முகமாக, 'ஆண்டவருக்காக' என ஏற்றுக்கொள்கின்றார்.

மேலும், அந்த நேரத்திலும் தன் திருச்சபை பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

பவுலின் அர்ப்பணம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

எந்நேரமும் மற்றவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க மிகப்பெரிய மனம் வேண்டும்.

Saturday, October 15, 2016

ஓயாமல்

நாளைய நற்செய்தியில் (காண். லூக் 18:1-8) 'நேர்மையற்ற நடுவனும், ஏழைக் கைம்பெண்ணும்' என்ற எடுத்துக்காட்டை இயேசு சொல்கிறார்.

கடவுளுக்கும் அஞ்சாத, மனிதர்களையும் மதிக்காத ஒரு நடுவரிடம், ஏழைக் கைம்பெண் ஒருவர் நீதிகேட்டு நாடிச் செல்கின்றார்.

நடுவரைத் தேடி எத்தனை முறை போயிருப்பார் இந்தக் கைம்பெண்?

சொல்லப்படவில்லை.

இந்தக் கைம்பெண்ணின் விடாமுயற்சியை பாராட்டுகின்றார் இயேசு.

நீதி மறுக்கப்பட்டவர்கள், தனக்கென்று வேறு எதுவும் இல்லாத நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாடிச்செல்வார்கள் என்பது வரலாற்றின் சான்று.

தீண்டாமையை எதிர்த்து போரிட்ட அம்பேத்கர்.

விடுதலைக்காக போரிட்ட நம் முன்னோர்கள்.

தங்கள் இலக்கு நிறைவேறும் வரை அவர்கள் ஓயவில்லை.

இன்று என் இலக்கு என்ன?

அதை நோக்கி நான் ஓயாமல் ஓடுகின்றேனா?

அல்லது பாதியிலேயே விட்டுவிடுகிறேனா?

Friday, October 14, 2016

டீ கப்

ஒரு டீ கப்.

நாம் அமரும் டேபிள்.

நம் உணவறை.

நம் வீடு.

நம் தோட்டம்.

நம் தெரு.

நம் மாவட்டம்.

நம் நகரம்.

நம் மாநிலம்.

நம் நாடு.

நம் கண்டம்.

நம் பூமிப்பந்து.

நம் சூரிய குடும்பம்.

நம் பால்வெளி.

பால்வெளியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் டீ கப் ஒன்றுமே இல்லை. அதற்கு மதிப்பும் இல்லை.

ஆனால், காலையில் எழுந்தவுடன் நாம் தேடுவது நம் வீட்டு டீ கப்பைத்தான்.

என்னதான் பால்வெளினு அதற்கு பேர் வச்சாலும் அதுல டீயா போட்டு குடிக்க முடியும்.

ஒப்பிட்டுப் பார்க்கும்போது மதிப்பை இழக்கும் ஒவ்வொன்றுக்கும் மதிப்பும் பயன்பாடும் நிறையவே இருக்கிறது.

'உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?'

என மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (நாளைய பதிலுரைப்பாடல், திபா 8).

Thursday, October 13, 2016

கடவுள்நிலை

நாளைய நற்செய்தியில் 'சிட்டுக்குருவிகள்' பகுதியை வாசிக்கின்றோம்.

இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?

நீங்கள் சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்.

எத்தனையோ முறை இப்பகுதியை வாசித்திருந்தாலும் இன்று வாசிக்கும் போது ஒரு வரி புதிய அர்த்தத்தை கொடுத்தது.

'அக்காலத்தில் ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தபோது' என லூக்கா நிகழ்வைத் தொடங்குகின்றார்.

மேலும், 'உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன' என்றும் 'சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்' என்றும் சொல்கிறார்.

'தலைமுடி எண்ணுவது' என்பது 'ஹைபர்போல்' ('மிகைப்படுத்துதல்') என்னும் இலக்கியக்கூறு.

அதாவது, நிறையக் கூட்டத்தில் நீங்கள் ஒரு நபராக இருந்தாலும் ஒவ்வொருவரும் என் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என்ற செய்தியை இயேசு சொல்கிறார்.

கடவுளின் பார்வையில் எல்லாருக்கும் முதன்மை இடம்.

இது எப்படி சாத்தியமாகும்?

எல்லாருக்கும் முதன்மை இடம் கொடுப்பது எனக்கு பல நேரங்களில் சிரமமாக இருக்கிறது.

'நீ யாருக்கு உடனே பதில் மெசேஜ் அனுப்புகிறாயோ அவரே உனக்கு முதன்மையானவர்' என்று டுவிட்டரில் கீச்சு ஒன்றை வாசித்தேன்.

'முதன்மைப்படுத்துவது' கடினமாக இருக்கிறது.

சில நாள்களில் பணி முதன்மையானதாக இருக்கிறது.

சில நேரங்களில் உடல்நலம் முதன்மையானதாக இருக்கிறது.

சில நேரங்களில் நண்பர்கள் முதன்மையானதாக இருக்கின்றனர்.

சில நேரங்களில் பயணம் முதன்மையானதாக இருக்கிறது.

எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் முதன்மையான நிலையை கொடுப்பதுதான் கடவுள்நிலை என நினைக்கிறேன்.

காசு கொடுத்து வாங்கப்பட்ட குருவி என்றாலும் சரி, கொசுறாக வந்த குருவியானாலும் சரி இறைவனின் பார்வையில் இரண்டும் முதன்மையானவையே.

தன்அறிமுகம்

நாளைய முதல் வாசகத்தில் (காண். எபேசியர் 1:1-10) தூய பவுல் தன்னை அறிமுகம் செய்து தன் உரையைத் தொடங்குகின்றார்.

'கடவுளின் திருவுளத்தால் திருத்தூதனாய் இருக்கும் பவுல் எழுதுவது'

மிக எளிமையான தன்அறிமுகம்.

தன் பழைய வாழ்க்கை பற்றியோ, தன் தற்போதைய வெற்றிகள் பற்றியோ எதுவும் எழுதாமல், தான் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டதையும், தன் பணியையும் மட்டும் முன்னிறுத்தி தன்னை அறிமுகம் செய்கின்றார்.

ஜான் மரிய வியான்னியை நினைவுபடுத்துகிறது இந்த இறைவாக்கு.

'நான் ஓர் அருள்பணியாளர் - அதுபோதும் எனக்கு' என தன்னையே அறிமுகம் செய்தார் அவ்வளவுதான்.

நாம் எப்படி மற்றவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்கிறோம் என்பது நாம் நம்மை எப்படி புரிந்துவைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

Wednesday, October 12, 2016

இரண்டு வாழ்க்கைகள்

நாளைய முதல் வாசகமும் (கலா 5:18-25) நற்செய்தி வாசகமும் (லூக் 11:42-46) இரண்டு வாழ்க்கைகள் பற்றி பேசுகின்றன:

அ. ஊனியல்பு வழி வாழ்வு - தூய ஆவி வழி வாழ்வு
ஆ. வெளிப்புற வாழ்வு - உள்புற வாழ்வு

அ. ஊனியல்பு - தூய ஆவி

நம்மிடம் இருக்கும் இந்த இரண்டு வாழ்க்கை நிலைகளும் வௌ;வேறு கனிகளை விளைவிக்கின்றன. இந்த கனிகளைக் கொண்டே நாம் நம் இயல்பை அறிந்து கொள்கிறோம்.

ஆ. வெளிப்புறம் - உள்புறம்

பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் வாழ்ந்த இரட்டை வாழ்வை தோலுரிக்கின்றார் இயேசு.

Monday, October 10, 2016

மருந்து

நற்செய்தி நூல்களில் 'உள்புறம்,' 'வெளிப்புறம்' பற்றிய விவாதங்கள் வரும்போதெல்லாம் இயேசு பரிசேயரிடம் 'உள்புறத்தை தூய்மையாக்குங்கள்' என்று வலியுறுத்துகின்றார்.

ஆனால் நாளை நாம் வாசிக்கும் லூக்கா நற்செய்தியாளரின் பதிவு (11:37-41) சற்று வித்தியாசமாக இருக்கிறது.

'உள்புறத்தில் உள்ளவற்றை தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.'

இதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் முன்னால் வாசிக்க வேண்டும்.

'உங்கள் உள்ளத்தில் பேராசையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.'

பேராசைக்கு மருந்து தர்மம் செய்தல்.

அதாவது, எல்லாம் எனக்கு என்று வைத்துக் கொள்வதை விடுத்து, எல்லாம் உனக்கு என்று கைதிறக்கும் மனநிலை.

தர்மம் தொடங்கினால் பேராசையும் மறைந்துவிடும். தர்மத்தை தொடங்க தேவை நன்மை.

Sunday, October 9, 2016

பெரியவர்

நாளைய முதல் வாசகத்தில் (காண். கலா 4:22-5:1) தூய பவுல் ஆகார் மற்றும் சாரா என்ற இரண்டு முதல் ஏற்பாட்டுப் பெண்களை எடுத்து, 'அடிமைப் பெண்' - 'உரிமைப் பெண்' என உருவகம் செய்து, இரண்டு வகை பிறப்பு நிலை பற்றி சொல்கிறார்: 'இயல்பான முறைப்படி பிறந்தவன்' - 'வாக்குறுதியின்படி பிறந்தவன்.'

இயல்பாய் நடக்கும் எல்லா விஷயங்களும் நம் வாழ்வைக் கவர்வதில்லை.

உதாரணத்திற்கு, இயல்பாய் உதிக்கும் அல்லது மறையும் சூரியன், தோன்றி வீழும் பூக்கள்.

ஆனால், நமக்கு வாக்களிக்கப்பட்டு, நாம் எதிர்பார்த்து நின்று பார்க்கும் ஒன்று அப்படியே மனதில் பதிந்துவிடுகிறது.

உதாரணத்திற்கு, வெளிநாட்டிலிருந்து வரும் நம் நண்பர் அல்லது உறவினர்.

நாளைய நற்செய்தியில் (லூக் 11:29-32), யோனா-சாலமோன்-இயேசு என மூவர் ஒப்பீடு செய்யப்படுகின்றனர்.

யோனாவும், சாலமோனும் இயல்பு நிலை மக்கள்.

இயேசுவோ வாக்குறுதியின் மகன்.

ஆகவே அவர் மற்றவர்களைவிடப் பெரியவர்.

Saturday, October 8, 2016

He Gives More

In tomorrow's gospel reading we come across ten leprosy afflicted persons crying out to Jesus, "Jesus, take pity on us."

Something strange happens here.

What they ask of Jesus is some alms. What they receive is cure from their leprosy.

At times it is better to ask nothing from God. Just a shout is enough. He gives in such a way that our hands can't contain.

How good it would be if were gods!

Giving. And giving. Not counting the shouts.

Friday, October 7, 2016

An Unnamed Woman

You must be very careful when you are in a crowd. Anything or anyone may turn up. Crowds are always dangerous.

A woman from the crowd shouts to Jesus: "blessed is the womb that bore you and the breasts that suckled you."

Jesus encounters this unawares. Yet he handles the situation beautifully.

"Blessed more is the one who listens to the word and keeps it."

Jesus takes the unknown woman in the crowd to a second level of meaning.

Everything that exists has two meanings: surface meaning, deeper meaning.

Jesus takes the woman from surface meaning to deeper meaning.

At the surface level Mary bore Jesus in her wombs and suckled him in her bosom. At the deeper level she listened to the word and kept it.

Today we shall see each other not at the surface level, but at the deeper level.

God bless.

Thursday, October 6, 2016

பூட்டி வைக்க

'திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும்.
மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து
அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும்.
அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிட கேடுள்ளதாகும்.'
(காண். லூக்கா 11:15-26)

நாம நல்லா இருக்கணும் அப்படின்னு நினைக்கிற அன்னைக்குதான் நல்லா இருக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

விரதம் இருக்கணும்னு நினைக்கிற நாளில் பசிக்கும்.

சினிமா போகக்கூடாதுன்ன நினைக்கிற நாளில் நண்பன் சினிமாவுக்கு அழைப்பான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நாளைய நற்செய்தியில் இயேசு சொல்வதும் இப்படித்தான் இருக்கின்றது.

வீட்டைவிட்டு வெளியேறுகிறது தீய ஆவி ஒன்று.
போன ஆவி சுற்றுகிறது எல்லா இடமும்.

இதற்கிடையில் தீய ஆவி பிடித்திருந்த நபர் வேகமாக தன் வீட்டை சுத்தமாக்குகின்றார்.

ஆனால் அவர் செய்த ஒரு தப்பு என்னன்னா வீட்டை சுத்தமாக்கியவர் அப்படியே திறந்து போடுகின்றார். திறந்த வீடு கூட்டியிருப்பதைக் காண்கிறது ஓடிப்போன தீய ஆவி.

போய் தன்னைவிட பொல்லாத ஏழு ஆவிகளை அழைத்துக் கொண்டு வந்து குடியேறுகிறது.

ஆக, தீமையை நம்மிடமிருந்து வெளியேற்றுவது மட்டும் போதாது.

உடனடியாக நம் வீட்டைப் பூட்டி வைக்க வேண்டும்.

கூட்டி வைக்கும் நேரத்தில் பூட்டி வைப்பதையும் மறக்க வேண்டாமே!

Wednesday, October 5, 2016

நள்ளிரவில்

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 11:5-13) இயேசு இறைவேண்டலில் அவசியமான கூறான விடாமுயற்சி பற்றி அறிவுறுத்துகின்றார்.

நள்ளிரவில் தன் நண்பனின் கதவைத் தட்டும் நண்பனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

நட்பின் பொருட்டு எழுந்திருக்காத நண்பன் தொந்தரவின் பொருட்டு எழுந்திருக்கிறான்.

இந்த செல்ஃபோன் காலத்தில் ஒருவர் நம் ஃபோனை எடுக்கவில்லை எனில், தொடர்ந்து அவருக்கு அடித்துக் கொண்டே இருந்தால் அவர் எடுப்பார் அல்லது ஒரேயடியாக அவர் செல்ஃபோனை அணைத்துவிடுவார் என்று ஏபிசி சர்வே சொல்கிறது.

நல்லது செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, நட்பு அல்லது தோழமை. இரண்டு, தொந்தரவு.

இறைவனைப் பொறுத்தவரையில் அவர் நல்லது செய்வது முதல் காரணத்தால்தான்.

பூட்டிய கதவுக்கு உள் இருக்கும் நண்பனுக்கு என்ன பிரச்சினை?

எழுந்திருக்க வேண்டும்.

கதவைத் திறக்க வேண்டும்.

பிள்ளைகளும் தொந்தரவு செய்யப்படுவார்கள்.

கடவுளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை.

அவர் எப்போதும் எழுந்து நின்றுகொண்டே இருக்கின்றார்.

அவரின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

எந்தப் பிள்ளைக்கும் தொல்லை இல்லை.

'இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை. உறங்குவதுமில்லை!' (திபா 121)

Tuesday, October 4, 2016

மெல்லியது

நாம் நிறைய நேரங்களில் ஜென்டில்மேன்(உமன்) ஆக அல்லது டிப்ளமட்டிக்காக இருக்க விரும்புகிறோம்.

ஜென்டில்மேன் அல்லது டிப்ளமேட்டிக்காக இருப்பது என்பது யாரையும் காயப்படுத்தாமல் பேசுவது, பழகுவது என்று ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி பதிவு செய்கிறது.

யாரையும் காயப்படுத்தாமல் இருக்க முடியுமா? பழக முடியுமா?

முடியாது என்கிறது நாளைய முதல் வாசகம் (காண். கலா 2:1-2, 7-14).

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தை நாம் இந்நாள்களில் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.

தனக்கும் பேதுருவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி மனம் திறக்கின்றார் பவுல்.

பேதுருவைப் பொறுத்தவரையில் தான் செய்தது டிப்ளமட்டிக்கான செயல்.

அதாவது, யூதர்கள் இருக்கும்போது அவர்களோடு ஒன்றிணைந்து கொண்டும், புறவினத்தார் இருக்கும்போது அவர்களோடு ஒன்றிணைந்து கொண்டும் இருக்கின்றார்.

ஆனால், பவுல் மிகவும் கட் அன்ட் ரைட் ஆக இருக்கிறார்.

ஒன்று இந்தப் பக்கம். அல்லது அந்தப் பக்கம்.

டிப்ளமட்டிக்காக இருப்பதை வெளிவேடம் என்கிறார் பவுல்.

டிப்ளமட்டிக் - வெளிவேடம். இந்த இரண்டிற்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியது.

Monday, October 3, 2016

நண்பர்

'எனக்கு உதவிபுரியும்படி அவளிடம் சொல்லும்!'

(காண். லூக்கா 10:38-42)

இன்று உலக பாய்ஃபிரண்ட் தினம் என்று டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் ஓடிக்கொண்டிருக்கிறது.

பாய்ஃபிரண்ட் ஆக இருப்பது எவ்வளவு கடினம் என்று நிறையப்பேர் தங்கள் ஆதங்கத்தை கீச்சுக்கொண்டிருக்கிறார்கள்.

நாளைய நற்செய்தியில் (காண். லூக் 10:38-42) நாம் இயேசுவை ஒரு நண்பராகப் பார்க்கிறோம்.

தங்கள் குடும்ப நண்பர் இயேசுவை பெத்தானியாவின் மார்த்தாவும், மரியாவும் தங்கள் இல்லத்திற்கு வரவேற்கின்றனர்.

நண்பரின் வருகை கண்டு உவகை கொண்ட மார்த்தா சமையல்கட்டில் பரபரப்பாகிவிடுகின்றாள்.

மரியா இயேசுவின் பாதம் அமர்ந்துவிடுகின்றாள்.

இரண்டு பேரில் இயேசுவுக்கு நெருக்கமானவள் மரியாதான் என்பதற்கு இரண்டு க்ளு இருக்கின்றன.

ஒன்று, மரியா இயேசுவோடு ஒட்டிக்கொள்கின்றாள்.

இரண்டு, தன் சகோதரியை தன்னோடு வேலைக்கு அனுப்புமாறு இயேசுவிடம் கேட்கின்றாள். தன் சகோதரி மேல் தனக்கு உள்ள உரிமையை இயேசு எடுத்துக்கொள்கின்றார். அல்லது மரியாள் அந்த உரிமையை இயேசுவுக்கு கொடுத்துவிடுகின்றாள்.

'ஏட்டி மரியா இங்க வேலைக்கு வா!' என்று அவள் ஏன் தன் சகோதரியிடம் சொல்லவில்லை?

நல்ல நண்பராகத்தான் இயேசு இருக்கின்றார் மரியாளுக்கு!

நல்ல பாய்ஃபிரண்டாக இருப்பதற்கு அழகான பாடம் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.

ஒருபோதும் தன் ஃபிரண்டை விட்டுக்கொடுக்கக்கூடாது.

ஆம். மரியாளை விட்டுக்கொடுக்கவில்லை.

Sunday, October 2, 2016

நல்ல சமாரியன்

நாளைய நற்செய்தியில் (காண். 10:25-37) 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

இந்த இறைவாக்கு பகுதியை கடந்த முறை வாசித்தபோது இரண்டு விஷயங்கள் என்னைத் தொட்டன:

அ. 'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?' என்று இயேசு திருச்சட்ட அறிஞரிடம் கேட்கின்றார். திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்று பதில் தருகின்றார்.

அதாவது, 'சமாரியன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் இந்த அறிஞர். 'சமாரியன்' என்ற பெயரை பயன்படுத்துவது கூட தீட்டு என்று யூதர்கள் கருதியதை தோலுரிக்கின்றார் லூக்கா.

எனக்கு ஒரு டவுட்.

'சமாரியன்' என்ற பெயரையே பயன்படுத்த தயங்கிய இந்த அறிஞர் இந்த சமாரியன் செய்ததுபோல செய்திருப்பாரா?

ஆ. இயேசு 'நீரும் போய் அப்படியே செய்யும்' என்று கூறினார்.

ஐந்து வசனங்களுக்கு முன்னால், 'அப்படியே செய்யும். அப்போது நீர் வாழ்வீர்' என்று சொல்லும் இயேசு, இப்போது, 'நீர் வாழ்வீர்' என்ற பகுதியை விட்டுவிடுகின்றார்.

அதாவது, அடுத்தவருக்கு இரக்கம் காட்டுதல் அல்லது அன்பு காட்டுதல் என்பது அந்த இரக்கம் அல்லது அன்பு நமக்கு வாழ்வு தரும் என்பதற்காக அதைச் செய்யக் கூடாது.

இரக்கத்தை இரக்கத்திற்காக மட்டுமே காட்ட வேண்டும். அதை விடுத்து, நாம் வாழ்வு பெற இரக்கம் அல்லது அன்பு காட்டினால் நாம் அடுத்தவரை பயன்படுத்துபவராக மாறிவிடுவோம்.

மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப் பொருள்கள் அல்லர்!