Monday, June 1, 2015

புதிய கல்வி ஆண்டு

'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்.
ஞானத்தையும், நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.
பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி.
உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே.
அவை உன் தலைக்கு அணிமுடி.
உன் கழுத்துக்கு மணிமாலை!'
(நீதிமொழிகள் 1:7-9)

இன்று நம் ஊரில் புதிய கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.

இந்தப் புதிய கல்வி ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர், அவர்களை வழிநடத்தும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் இன்று செபத்தில் நினைவுகூர்ந்தேன்.

இன்று இன்னும் சிறப்பாக, என் தங்கை மகள் குட்டி ஃபிலோ முதன்முதலாகப் பள்ளி சென்றாள்.

எல்லாருக்கும் ஒரு தாய் என்றால், இவளுக்கு மட்டும் இரண்டு தாய். பிறந்தது முதல் என் அம்மாவிடம்தான் இருந்தாள். ஆக, இன்று என் தங்கை அடைந்த மகிழ்ச்சியைவிட அவர்கள் தான் மகிழ்ந்திருப்பார்கள்.

'இப்பதான் நம்ம பாப்பா பள்ளிக்கூடம் போன மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள அவளுக்கு ஒரு மகள் பிறந்து அவளும் இன்று பள்ளி செல்கிறாள்!' என்று புன்முறுவல் பூத்தார்கள்.

புதிய நோட்டு, புதிய நோட்டின் முதல் பக்கம், புதிய பேனா, புதிய புத்தகம், புதிய பை, புதிய நண்பர்கள், புதுமையான ஆசிரியர் என எல்லாம் புதியதாக இருக்கும் இன்று.

எனக்குத் தெரிய பிரிட்டோ பள்ளியில் நான் ஒவ்வொரு ஆண்டும் வகுப்பு மாறும்போதும், ஜன்னலுக்கு அருகில் நின்று பார்த்திருக்கிறேன். பழைய வகுப்பறையில் ஜன்னல் வழியே தெரியாததெல்லாம் புதிய வகுப்பறையில் தெரியும். வராண்டா, கதவு, மேசை, நாற்காலி என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். 'இந்த ஆண்டு இன்னும் நல்லா படிக்க வேண்டும்!' என்ற உற்சாகம் பிறக்கும்.

வகுப்பறைகள் தருவதெல்லாம் அறிவு மட்டும்தான். ஆனால் அறிவு மட்டும்தான் எல்லாம் என்பது கிடையாது. அதையும் தாண்டி ஒன்று இருக்கின்றது. அதுதான் ஞானம்.

அறிவியல், தொழில்நுட்பம், டச்ஸ்க்ரீன், வைஃபை என எதையும் அறியாத நம் தாத்தா, பாட்டி தங்கள் வாழ்வை மேன்மையானதாக வாழக்காரணம் இந்த ஒற்றை வார்த்தைதான் - ஞானம்!

தமிழ் தவிர வேறெந்த மொழியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தத் தமிழும் பேச மட்டும்தான் தெரியும். எழுதத் தெரியாது. கடிகாரத்தில் மணி பார்க்கக் தெரியாது. கேஸ் அடுப்பிலோ, குக்கரிலோ சமைத்தது கிடையாது. மேகி நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் காஃபி என எதுவும் இவர்களுக்குத் தெரியவில்லை. மின்சாரத்தின் முழு பயனையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனால், தினமும் வேலை செய்தார்கள். சம்பாதித்தார்கள். பேசி மகிழ்ந்தார்கள். என் அய்யாமையெல்லாம் தன் வாழ்நாளில் 30 கிமீ சுற்றுவட்டாரத்துக்கு மேல் பயணம் செய்தது இல்லை. இருந்தாலும், தங்கள் வாழ்வின் இன்னல்களைச் சமாளிக்கத் தெரிந்திருந்தார்கள். நிறைய நேரம் இருந்தது அவர்களுக்கு. விடுமுறையில் ஓய்ந்திருந்தார்கள். எங்கு படுத்தாலும் தூங்கும் பக்குவம் பெற்றிருந்தார்கள். என்ன சாப்பிட்டாலும், அடுத்த வேளையில் பசி எடுக்கும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்தது அவர்கள் உடல்.

இன்று நம் வகுப்பறைகள் கற்றுக்கொடுக்க வேண்டியது இதைத்தான் - ஞானத்தை!

இது எங்கே தொடங்குகிறது? ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில். நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்புதான் நல்ல அறநெறிக்கான அடிப்படை. இந்த அச்சம் குறையும்போதுதான் தவறுகள் தொடங்குகின்றன. அறநெறி பிறழ்கின்றது.

அடுத்ததாக, தந்தையின் நற்பயிற்சி. தாயின் அறிவுரை.

ஆக, ஆண்டவரின் அச்சம், தந்தையின் நற்பயிற்சி, தாயின் அறிவுரை - இந்த மூன்றையும் நம் பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளுக்கு நினைவூட்டினாலே போதும். இந்தக் கல்வி ஆண்டு இனிமையான ஆண்டாக இருக்கும்.


1 comment:

  1. அழகான பதிவு.Exactly the need of the hour.நீதிமொழிகள் கூறும் கருத்துக்களுக்கு வலு சேர்க்கின்றன தந்தையின் வரிகள்.உண்மைதான்...நம் முன்னோர்களுக்குக் கிடைக்காத பல விஷயங்கள் 'இந்தா எடுத்துக்கோ' என்று நம் கைகளில் திணிக்கப்பட்டுள்ளன.இதை உணர ஆரம்பித்தாலே நாமும் ஞானம் பெற்றவராகவும் விடுவோம்.நம் பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளுக்கு நினைவூட்ட வேண்டிய விஷயங்களின் பட்டியல் அருமை.அத்துடன் தந்தையின் 'தாய்மாமா' ஸ்தானத்திற்கான பெருமையும், மகிழ்ச்சியும்,பொறுப்பும் கூட அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.கொடுத்து வைத்தவள் 'குட்டி ஃபிலோ'.

    ReplyDelete