Saturday, June 6, 2015

நலமே சென்று வருக!

அதற்கு தோபியா, 'அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும்?
நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்.
ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்.
என் மனைவியை நலம் பெறச் செய்தார்.
பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்.
உங்களுக்கு நலம் அளித்தார்.
இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்?'
என்று கேட்டார்.
தோபித்து அவரிடம், 'மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைப் பெறுவதற்கு
அவருக்கு தகுதி உள்ளது' என்றார்.
பின்னர் இரபேலை அழைத்து, 'நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக!' என்று கூறினார்.
(தோபித்து 12:2-5)

தோபித்து கதையை நாம் நிறைய நேரங்களில் வாசித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம். இன்று மேற்காணும் பகுதியை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம்.

தோபியோ தன்னோடு உடன் வந்த ஒரு மனிதருக்கு (இரபேல் இன்னும் வானதூதர் என்று அவருக்குத் தெரியாது!) செய்ய வேண்டிய கடனைச் செய்கிறார்.
அவரின் உடனிருப்பால் தனக்கு நிகழ்ந்த அனைத்தையும் பட்டியலிடுகின்றார்.
அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என தன் அப்பாவிடம் கேட்கிறார்.
பாதியை எடுத்துக்கொண்டு சென்று வருக என்று கூறுகின்றார்.

இந்தப் பகுதியை உன்னிப்பாகக் கவனித்தால், கதையாசிரியரின் புலமை வெளிப்படுகிறது. எப்படி? இவ்வளவு நாட்களாக பார்வையிற்றிருந்த தோபித்து, பார்வை பெற்றுவிட்டார். ஆனால், தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிற தோபியா கண்ணிருந்தும், தனக்கு முன்னிருப்பவர் தூதர் என்பதை கண்டுகொள்ள மறுக்கிறார். அல்லது இயலாமல் இருக்கிறார்.

இவ்வளவு காரியங்களையும் சாதாரண ஒரு நபர் செய்ய முடியுமா? தோபியாவுக்கு ஏன் தோன்றவில்லை இது கடவுளின் தூதர்தான் என்று? கடவுளின் தூதரின் வேலைக்கு சம்பளம் பேசுவதோடு மட்டுமல்லாமல், 'சென்று வருக!' என்றும் சொல்லயனுப்புகின்றார்.

நம் காவல்தூதர்கள் நம்மோடு உடன் வருகிறார்கள் என்று நமக்கு சின்ன வயதில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

ஆனால், இதை நாம் எந்த அளவிற்கு நம்புகின்றோம்? அல்லது உணர்கின்றோம்?

இன்றைய வாசகம் எனக்கு இரண்டு சவால்களை வைக்கின்றது:

அ. வானதூதரின் பிரசன்னத்தை என் வாழ்வில் கண்டுகொள்வது. வானதூதர் என்றால் இரண்டு இறக்கைகள் வைத்துக்கொண்டு, வெள்ளைக் கலரில் பறந்து என் முன்னும், என் பின்னும் வருவார் என்பது பொருளல்ல. என்னைச் சுற்றிலும் அவர்கள் நடமாடிக்கொண்டே இருக்கின்றார்கள். எனக்கு உணவு தயாரிப்பவர், என் அறையை சுத்தம் செய்பவர், எனக்கு வாகனம் ஓட்டுபவர், எனக்கு பாடம் நடத்துபவர், என்னைப் பார்த்து புன்னகை செய்பவர், என் தோல்வியில் உடன் நிற்பவர், என் வெற்றியில் மகிழ்பவர் - இவர்கள் எல்லாருமே இரபேல்கள் தான்.

ஆ. 'உனக்குடையதைப் பெற்றுக்கொண்டு சென்று வருக!' - என் வேலை முடிந்தவுடன் பல நேரங்களில் வாழ்க்கைப் பயணத்தில் என் உடன் வருபவருக்கு நான் சொல்வது இதுதான். 'உனக்குரியதைத் தான் நான் கொடுக்கிறேனே!' என்று தராசில் வைத்துப் பார்ப்பதும், 'உன் பிரசன்னம் போதும்! சென்று வரலாம்!' என்று சொல்வதும் தவறுதானே. தோபியாவுக்குத் தெரியாதா வாழ்வின் சவால்கள் இன்னும் வருமென்று? அப்படியிருக்க, இரபேலைப் பார்த்து 'எங்களோடு தங்கும்!' என்று சொல்லியிருக்கலாமே! 'இவ்வளவு நன்மைகள் செய்த இரபேல் இனி இடைஞ்சலாகவா இருக்கப் போகிறார்?'


1 comment:

  1. எத்துணை முறை கேட்டிருப்போம்; வாசித்திருப்போம்...தோபித்தின் கதையை? அதற்குள் ஒளிந்து கிடக்கும் இத்துணை அழகான செய்தி ( message) ஒருநாளும் எனக்குத் தோன்றவில்லையே! கண்டிப்பாக தோபித்து இரபேலை வாழ்நாள் நண்பனாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.அவரோடு கூடத் தங்கச் சொல்லியிருக்க வேண்டும். நம்மைச்சுற்றி மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருப்பவர்களிலும் வான தூதரைக்கண்டுகொள்ள வேண்டுமென்பதும், நமக்கு மற்றவர் செய்யும் நற்செயல்கள் அனைத்தையுமே பணத்தால், பொருளால் சம்ப்படுத்த ( equate) பண்ண முடியாதென்பதும் நான் கற்றுக்கொண்ட பாடம்.பார்க்கும் அனைத்தையுமே பாசிட்டிவாக மாற்ற முயலும் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete