Sunday, June 28, 2015

என் அவசரம் அவருக்கு அவசரமல்ல!

யாயிர் ஒரு செபக்கூடத் தலைவர். அவர் தான் இவ்வுலகில் மிகவும் சிறந்ததாய் கருதிய படைப்பாகிய தன் பன்னிரண்டு வயது மகள் திடீரென காய்ச்சலால் வாடியது அவருக்கு மிகவும் கவலை தந்தது. 'எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் ஏதென்ஸிலிருந்து வந்திருக்கிறார், அவரை வீட்டிற்கு அழைத்து வரலாமா?' எனக் கேட்கிறார் அவரின் நண்பர். யாயிரின் மனைவி தான் நாசரேத்தூர் இயேசு என்ற ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டதாகவும், அவரை அழைத்து வரலாம் எனவும் ஆலோசனை தருகிறார். 'நானும்கூட அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்!' என்று சொன்னவர் உடனே குதிரை ஏறி, இயேசுவைத் தேடி விரைகின்றார். 'நீ அடிக்கடி வேலைக்காரர்களை என்னிடம் அனுப்பி நம் மகளின் உடல்நலம் பற்றி எனக்குச் சொல்!' என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, வேகமாக குதிரை ஏறுகின்றார். அவரின் உள்ளம் தன் மகளுக்கும், நாசசேரத்தூர் இயேசுவுக்கும் இடையே ஊசலாடுகின்றது. 'அவரை எங்கே தேடுவது?' 'கூப்பிட்டவுடன் வருவாரா?' 'அவரை எப்படி அழைத்துச் செல்வது?' 'ஏன் மகளுக்கு திடீரென்று காய்ச்சல் கூடிற்று?' 'இந்த காற்று ஒத்துக்கொள்ளவில்லையோ?' என்று மனம் சிந்தனை செய்துகொண்டே இருக்கின்றது. யூதேயாவிலிருந்து கலிலேயா எவ்வளவு தூரம் என பார்த்துக்கொண்டே குதிரையை வேகமாக விரட்டுகின்றார். 'அதோ கலிலேயாக் கடல்!' 'கலிலேயாவை நெருங்கிவிட்டோம்!' என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, கதிரவன் கடலில் மறைந்து மூழ்குகிறான். அருகிலிருக்கும் சத்திரத்தில் இடம் கேட்டு இரவைக் கழிக்க உள்ளே நுழைகிறார்.

'உங்க ஏரியாவுல இயேசு என்று ஒருத்தர் இருக்காரே! அவர் வீடு எங்க இருக்கு?' என சத்திரக்காரனிடம் பேச்சுக்கொடுத்து பார்க்கின்றார். 'அவருக்கு வீடு, வாசல் எதுவும் கிடையாது! எங்கயாவது மலை, மரத்தடி, கடற்கரை, அவருடைய நண்பர்களின் வீடு என்று பொழுதைக் கழிப்பார்! இன்றைக்கு சாயங்காலம் கூட இங்கே பெரிய கூட்டம்! ஐந்து அப்பங்களை வந்திருந்த எல்லாத்துக்கும் பகிர்ந்து கொடுத்தார். ஆனா, சாயங்காலம் படகேறி அடுத்த கரைக்கு போய்ட்டாரே!' என தனக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் அவசரமாகச் சொல்லி முடித்துவிட்டு தன் சத்திரத்தின் கணக்குப் புத்தகத்தில் தன்னைப் புதைத்துக்கொள்கிறான் சத்திரக்காரன். இரவு மிக நீண்டதாக இருக்கின்றது யாயிருக்கு. 'விடியும்முன் பரிசல் ஒன்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்றுவிட வேண்டும். குதிரையை இங்கேயே விட்டுவிடுவோம். வேலைக்காரரை அனுப்பி அப்புறம் எடுத்துக்கொள்வோம்.' என்று முடிவெடுத்தவாறு தூங்கிப் போகிறார் யாயிர்.

மறுகரைக்குப் போய் ஆயிற்று. காலையிலேயே கரையில் கூட்டம். 'என்ன கூட்டம்?' என்று கேட்க, 'நாசரேத்தூர் இயேசு வருகிறார். அதோ அது அவரின் படகுதான்!' என்று தூரத்தில் ஒன்றை அடையாளம் காட்டுகிறான் கூட்டத்தில் ஒருவன். 'அவர் வந்தவுடன் என்ன கேட்பது? யாரிடமாவது சிபாரிசு கடிதம் கொண்டுவந்திருக்கலாமோ? 'உன்னைத் தெரியாது' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?' இவன் மனம் கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்க, அவனின் தோளில் ஒரு கை. உற்றுப்பார்த்தால் இயேசு. தன்னையறியாமல் மண்டியிடுகிறார் யாயிர். 'என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்!' என்று மன்றாடுகிறார். 'வாரும்! போகலாம்!' புன்னகைக்கிறார் இயேசு. ஏதோ மந்திரத்தால் கட்டப்பட்டவர் போல இயேசுவைப் பின் தொடர்கின்றார் யாயிர். 'என்னை யாருன்னே கேட்கலயா? வீடு எங்கன்னு கேட்கலயே? இவருக்கு ஒருவேளை எல்லாம் தெரியுமோ!' என்று மனதில் குழம்பிக்கொண்டே, நடையில் தெளிவாக இருக்கின்றார் யாயிர்.

'எல்லாம் நல்லபடியா நடக்குது! நாம செஞ்ச புண்ணியம்தான் இயேசுவே நம்முடன் வருகிறார்! கண்டிப்பா மகள் பிழைச்சுடுவா!' என்று நம்பிக்கை ஒளி உதித்துக்கொண்டிருக்க, அதை ஊதித் தள்ளிவிடுகிறாள் ஒரு பெண். திடீரென கூட்டத்தை கிழித்துக்கொண்டு வந்த அவள் தன்னை உரசிக்கொண்டு இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொடுகிறாள். 'யாரு இவா! இப்படி வர்றது! அன்எசுகேடட் லேடி!' என மனதுக்குள் சாடுகின்றார். நடந்து கொண்டிருக்கும் இயேசு திடீரென நிற்கின்றார்.

'என்ன ஆண்டவரே நின்னுட்டீங்க! இன்னும் நிறைய தூரம் போகணும். சீக்கிரம் நடங்க. நீங்க சும்மாவே அன்னநடை போடுறீங்க! இதுல 'ஸ்டாப்' வேறயா?' என யாயிரின் வாய் முணுமுணுக்கிறது. 'என்னைத் தொட்டது யார்?' என்கிறார் இயேசு. 'இவ்வளவு கூட்டம் இருக்கு! இதுல போய் தொட்டது யாருன்னு கேட்குறீங்களே!' என்று சிரிக்கின்றனர் சீடர்கள். யாயிருக்கு அவர்கள் அடித்த ஜோக்கிற்கு சிரிப்பு வரவில்லை. இரண்டு காரணங்கள்: ஒன்று, தன் மகளின் கவலைக்கிடமான உடல்நிலையால் மனிதருக்கு சிரிப்பு மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு, யாயிருக்குத் தெரியும் இயேசுவைத் தொட்டது யாரென்று! 'சொல்லிக்கொடுத்துவிடலாமா? இதோ இவள்தான்!' என்று வாயெடுக்க, வார்த்தை தொண்டையிலேயே சிக்கிக்கொள்கிறது. 'என்னிடமிருந்து பவர் வெளியேறுச்சு!' இயேசு தொடர்கிறார். 'ஐயோ! ஆண்டவரே! சீக்கிரம் நடங்க! சும்மா நின்னுகிட்டு, 'பவர் வெளியேறுச்சு! டவர் வெளியேறுச்சுனு சொல்லிக்கிட்டு இருக்கீங்க!' மறுபடியும் மனக்குமுறல். இயேசுவின் தாமதம் யாயிரின் இதயத்துடிப்பை கூட்டுகின்றது. இப்போது தொட்ட பெண்ணும் உண்மையை ஒத்துக்கொள்கிறாள். தனக்கு நடந்ததை சொல்கிறாள். 'இங்க பாருடி இவள்தான் தொட்டாலாம்! என்ன தைரியம் இந்தப் பொம்பளைக்கு!' என பாராட்டுவதுபோல சாடுகின்றனர் கூட்டத்தில் சில பெண்கள். 'என்ன இரத்தப்போக்குடையவள் தொட்டாலா! ஐயோ! தீட்டு! தீட்டு!' எனக் கத்துகிறது மறைநூல் படித்த கூட்டம். 'என்ன நடக்கிறது இங்க! இப்படி தாமதிக்கிறார் இயேசு!' என நினைத்த யாயிர், 'ஆண்டவரே! கொஞ்சம் சீக்கிரம் போகலாமே!' என்கிறார். அவருக்குப் பதில் தருவதற்குப் பதிலாக அந்தப் பெண்ணுடன் பேசத் தொடங்குகிறார் இயேசு.

பின்னால் யாரோ தன் அங்கியை இழுப்பது போல இருக்கின்றது. 'என் அங்கிய யாருடா தொடுறது!' என திரும்பிப் பார்த்தவர் இரண்டு பரிச்சயமான முகங்களைப் பார்க்கிறார். தன் வேலைக்காரர்கள். 'என்ன பாப்பா நல்லா இருக்கா!' என்கிறார் யாயிர். 'ஐயா! பாப்பா இறந்துடுச்சு! இன்னும் போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர். வாங்க! நம்ம குதிரையிலயே போயிடலாம்! சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க! ஆக வேண்டியதைச் செய்வோம்!' பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாலும், இயேசுவின் காதுகளில் வேலைக்காரர்களின் வார்த்தைகள் விழுகின்றன. யாயிரை சாந்தமாகத் தொடுகின்றார் இயேசு. 'அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்கிறார். 'என்னய்யா பெரிய நம்பிக்கை! காலையிலயே உங்களை நான் வீட்டுக்கு கூப்பிட, நீங்களும் 'வர்றேன்'னு சொல்லிட்டு, இப்படி பொடிநடை நடந்து வந்துட்டு இருக்கீங்க! ஐயோ என் மகளோட முகத்தை இன்னும் ஒரு முறை பார்த்திருக்கலாமே! நான் வீட்டுல இருந்தாவது அவ கையப்பிடிச்சுட்டு இருந்திருப்பேனே! அந்த ஏதென்ஸ் மருத்துவரையாவது வரச் சொல்லியிருக்கலாமே! நீங்கதான் ஆண்டவரே என் மகளை கொன்னுட்டீங்க! நீங்கதான் கொன்னுட்டீங்க!' என இயேசுவைச் சாடுகின்றார் யாயிர். மௌனமாக வழிநடக்கிறார் இயேசு. இப்போ கொஞ்சம் வேகமாகவும் நடக்கிறார். யாயிரின் வீடு வருகிறது. ஒரே அமளி. அழுகை. பந்தல் வேலை நடந்து கொண்டிருக்கிறது. 'பாப்பாவுக்கு ரொம்ப நாளா உடம்பு சரியில்லையா? எப்போ இறந்துச்சு? கூட யாரு இருந்தா?' என யாரோ, யாரிடமோ விசாரித்துக் கொண்டிருந்தது இயேசுவின் காதிலும், யாயிரின் காதிலும் விழுகின்றது. உடனே இயேசு நின்றுவிடுகிறார். 'ஐயோ! மறுபடியும் நின்னுட்டாரே! நடங்க ஆண்டவரே!' என அவசரப்படுத்துகிறார் யாயிர். இப்போதும் யாயிருக்குப் பதில் சொல்லாமல் இறப்பு வீட்டிற்கு வந்தவர்களிடம் பேசத் தொடங்குகிறார் இயேசு, 'ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை. உறங்குகிறாள்!'

உடனே உரைக்கின்றது யாயிருக்கு. 'என்னது இறப்பு என்பது வெறும் உறக்கமா? அப்படின்னா என் மகளை எழுப்பிவிடலாமே!' என்று சின்னதாய் வெளிச்சம் மின்னுகிறது. இயேசுவுக்கு முன் வேகமாக தன் மகளைக் கிடத்தியிருந்த இடத்திற்கு ஓடுகின்றார். தன் ஆசை மகள் உயிரற்றுக் கிடப்பதைக் காணச் சகிக்காமல் அவளின் உடலில் தன் முகம் புதைத்து அழுகிறார். 'தலித்தாகூம்!' என்று ஒரு குரல் தூரத்தில் கேட்பது போல பக்கத்தில் கேட்டது. சிறுமியின் உடல் அசைவை தன் முகத்தில் உணர்கிறார் யாயிர்.

'என் வழி இவரின் வழி அல்ல! என் அவசரம் இவருக்கு அவசரமல்ல!' என தனக்குள் சொல்லிக்கொள்கின்றார் யாயிர்.



1 comment:

  1. சுவையான கற்பனை.ஒருவேளை இப்படிக் கொஞ்சம் கற்பனை மசாலா சேர்த்து விவிலியத்தைப் புகட்டினால் நம்மக்கள் இன்னும் கொஞ்சம் ஈர்க்கப்படலாம் என்று தோன்றுகிறது.ஆனாலும் பாவம் அந்த யாயீரை இயேசு இப்படி அலைக்கழித்திருக்க வேண்டாம்.ஏதோ தெருவில் ஒரு நிகழ்வை வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவது போன்ற ஒரு ஃபீலில் இருக்கும்போது திடீரென்று யாரோ மண்டையில் அடித்துச் சொல்கிறார்கள்....ஆமாம் " என் வழி இவரின் வழி அல்ல! என் அவசரம் இவருக்கு அவசரமல்ல." ...ஒரு ஓரத்தில் அமர்ந்து நிதானமாக யோசிக்க வேண்டிய " வார்த்தைகள்.".....!!!

    ReplyDelete