உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி.
உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு.
உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா?
உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
(நீதிமொழிகள் 5:15-16)
இன்று கிரேக்க மொழி தேர்வு இருந்தது. தேர்வில் படிக்க வேண்டிய பகுதிகளுள் ஒன்று ரூத்து நூல். ரூத்து நூலை கடந்த ஆண்டு எபிரேய மொழியில் படித்தோம். இந்த ஆண்டு அதே நூல் கிரேக்க மொழிபெயர்ப்பில் எப்படி வித்தியாசப்படுகிறது என்பதைப் பார்ப்பதற்காக இந்த நூலை எடுத்துப் படித்தோம்.
எபிரேய மொழியின் பதிப்பிற்கும், கிரேக்க மொழியின் பதிப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு, 'எலிமேலக்' என்னும் பெயர் எபிரேய பதிப்பிலும், 'அபிமேலக்' என்னும் பெயர் கிரேக்க பதிப்பிலும் இருக்கிறது. 'எலிமேலக்' என்றால் 'என் கடவுள் என் அரசர்' என்றும், 'அபிமேலக்' என்றால் 'என் அப்பா என் அரசர்' என்றும் பொருள். இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே. இப்படி நிறைய சொல், வாக்கிய அமைப்பு மாற்றங்கள் இருக்கின்றன.
மேலும், ரூத்து நூலை எபிரேயத்தில் எழுதப்பட்ட ஒரு erotic literature (இன்பம்தரும் இலக்கியம் - இப்படி மொழிபெயர்க்கலாமா?) என்று பலர் கருதுகின்றனர். நிறைய இடங்களில் இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன:
'நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார்' (1:21) என்று நகோமி தன் ஊர் மக்களிடம் சொல்கின்றார். நகோமி பெத்லகேமை விட்டுச்சென்றதே இங்கு ஒன்றுமில்லாமல் இருந்ததால்தான். பெத்லகேமில் பஞ்சம் நிலவியதால், மோவாபு நாட்டிற்குப் பஞ்சம் பிழைக்கச் செல்கின்றார். அப்படியிருக்க அவர் 'நிறைவுடன் சென்றேன்' என எப்படிச் சொல்ல முடியும்? பதில் ரொம்ப சிம்பிள் தான். நகோமி மோவாபு நாட்டில் குடியேறும்போது அவருக்கு இரண்டு மகன்கள் பிறக்கின்றனர். பின் கொஞ்ச நாட்களில் இறந்து விடுகின்றார்கள். இதைத்தான் நாசூக்காக ஆசிரியர் எழுதுகின்றார்: 'நான் நிறைவயிறாய் (கர்ப்பமாய்) இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் வெறுமையாய் (மகன்கள் எல்லாம் இறந்து போய்) திரும்பிவரச் செய்தார்' எனச் சொல்வதாக எழுதுகின்றார்.
'அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு, அங்கேயே படுத்துக்கொள்' (3:4) என நகோமி தன் மருமகளிடம் சொல்லி அனுப்புகின்றார். தமிழில் அடக்க ஒடுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். உண்மையில் எப்படி இருந்திருக்க வேண்டும் மொழிபெயர்ப்பு? 'அவர் உறங்கியதும். நீ சென்று அவரின் பாதங்களை விலக்கி, அவரின் போர்வைக்குள் படுத்துக்கொள்!' 'பாதம்' என்பது 'ஆண்குறிக்கான' euphemism. Euphemism என்றால் தெரியும்தானே! பொதுவில் சொல்ல கூடாத ஒன்றை அல்லது சொல்வதற்கு அமங்கலமான ஒன்றை மங்கலமாகச் சொல்வது: 'அவர் இறந்தார்' என்று சொல்வதற்கு பதிலாக 'அவர் இயற்கை எய்தினார்' என்று சொல்வதும் ஒரு யுஃபமிசம்தான். ஆக, பாதம் என்பது யுஃபமிசம் என்றால் ரூத்து என்ன செய்திருப்பார் அல்லது என்ன செய்திருக்க வேண்டும் என்பதை நாமே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.
எல்லாத்துக்கும் இப்படி sexist அர்த்தம் கொடுக்குறீங்களே எனச் சொல்ல வேண்டாம்.
விவிலியம் ஒரு இலக்கியமாக பார்க்கப்படும்போது இலக்கியக்கூறுகள் அங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதையும் நாம் இரசிக்க வேண்டும். வெறும் ஆன்மீக அர்த்தம் கொடுத்தால் ரொம்ப ட்ரையாக இருக்கும்.
இன்று நாம் எடுத்துள்ள நீதிமொழிகள் நூல் பகுதியிலும் உருவகம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக வாசித்தால் நம் குடத்தில் உள்ள நீரை மட்டும் பருக வேண்டும் என்று ஆசிரியர் சொல்வதாக நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கே நீர்த்தொட்டி என்பது 'பெண்ணையும்', 'ஊற்றுநீர்' அல்லது 'வாய்க்கால்' என்பது 'ஆணையும்' குறிக்கின்றது. இந்த உருவகங்கள் எந்த அளவிற்கு இந்த ஆசிரியர்கள் அறிவியல் அறிவையும் பெற்றிருந்தார்கள் என்றும் குறிக்கின்றது. நீர்த்தொட்டி எப்போதும் தண்ணீர் கொண்டிருப்பதில்லை. மேலும், ஆண்குறி ஆண்களின் கழிவுநீர் வெளியேற்றும் வாய்க்காலும்கூட. ஆக, விவிலியத்தை இலக்கியமாகப் பார்க்கும்போது, இதை எழுதியவர்களின் உலக அறிவும் நமக்குத் தெளிவாகிறது.
Hello Father! சிலசமயங்களில் சில விஷயங்கள் ட்ரையா இருந்தால்தான் அவற்றால் பயன் கிடைக்கும்.இலைமறை காய்மறையாக இருக்க வேண்டிய விஷயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டினால் அவை சந்தைப்பொருளாகிவிடும்.இக்காரணத்தினாலேயே நம் பெண்களும்,பிள்ளைகளும் பழைய ஏற்பாட்டைக்கூட சிலசமயம் புறம் தள்ளுகின்றனர்.நீங்கள் சொல்லும் 'sexist' சம்பந்தப்பட்ட விஷயங்களைக்கூற மூலைக்கு ஒருவர் இருக்கின்றனர்.தாங்கள் கொடுப்பது போன்ற 'rare commodities'ஐக் கொடுக்க தங்களைப் போன்ற 'வெகு' சிலரே உள்ளனர். ஆகவே நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நம் அன்றாட வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்ட 'ஆன்மீகம்.' தங்களைப் போன்ற வெகு சிலருக்குத்தான் இது சாத்தியம்.ஆகவே கொடுப்பதைத் தாராளமாய் அள்ளிக்கொடுங்கள். இறைவன் அருள் என்றென்றும் உங்களோடு தங்கட்டும்.....
ReplyDelete