Tuesday, June 30, 2015

நாம் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா?

இன்று நடந்த மூன்று நிகழ்வுகளில் என் மனம் ரொம்பவே பதிந்துவிட்டது. அவைகள் இதோ!

1. இன்று தூய பேதுரு, பவுல் திருநாள். இன்றைய நாளில்தான் உரோமை கத்தோலிக்கத் திருஅவையில் புதிதாக பேராயர்களாக நியமனம் பெற்றவர்கள் திருத்தந்தையிடமிருந்து 'பாலியம்' (Pallium) (ஆட்டு உரோமத்தால் நெய்யப்பட்ட பட்டை - உரோமை, உரோமம் நல்லா இருக்குல!) அணிவிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு முதல் திருத்தந்தை இதை அணிவிப்பதில்லை என்பதால், அவைகளைப் புனிதப்படுத்தும் நிகழ்வும், பேராயர்கள் தங்கள் கீழ்ப்படிதலை திருத்தந்தைக்கு தரும் நிகழ்வும் (இந்தக் கீழ்ப்படிதலை கடவுளுக்குக் கூட அருட்பணியாளர்கள் கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்டான கீழ்ப்படிதலை உரோம் தன் பேராயர்களிடம் எதிர்பார்க்கிறது. இந்த பயம் இருந்தா சரி!) நடைபெற்றது. திருத்தந்தை அவர்கள் திருப்பலி நிறைவேற்றும் பீடத்திற்குப் பின்புறம்தான் அமர்வதற்கு இடம் கிடைத்தது. ஆனால், இந்தப் பின்புறம்தான் நிறைய முக்கியமான விடயங்கள் இருக்கின்றன என்பதை நான் கண்டுபிடித்தேன். வழக்கமாக கேமராக்களில் திருத்தந்தையும், திருத்தந்தையின் உடன் இருப்பவர்களும், அவர்களின் ஆடைகளும், அவர்கள் பயன்படுத்தும் பொன்நிற பாத்திரங்களும்தான் மின்னுகின்றன. ஆனால், இந்த மின்னுதலுக்குப் பின், அல்லது இந்த ஆடம்பரத்திற்குப் பின் நிறைய முகங்கள் தங்களை மறைத்துக்கொள்கின்றன. அந்த மறைந்த முகங்கள்தான் இவ்வளவு ஆடம்பரத்தையும் திருத்தந்தைக்கும், அவர் உடன்  இருப்பவர்களுக்கும் சாத்தியமாக்குகின்றன. அந்த முகங்கள் யாருடையவை? பீடத்தைத் துடைத்து ஒழுங்குபடுத்தும் ஒரு முகங்களில் வரிகள் கொண்ட ஒரு வயதான அருட்சகோதரி, மெழுகுதிரி ஏற்றும் ஒரு வயதான அருட்சகோதரர், தூபத்தின் புகையை உள்வாங்கிக்கொண்டு அதைப் பக்குவமாக ஊதி, சரியான புகையைக் கொடுக்க அதை தயார்படுத்தும் அவரின் உதவியாளர், திருப்பலியின் இடையில் மணியடிக்கும் அவரின் மற்றொரு உதவியாளர், புன்முறுவலோடு இவற்றை மேற்பார்வை செய்யும் ஒரு தாத்தா சாமி, மின்சாரம் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மின்சாரமாற்றியின் அருகில் காத்திருக்கும் ஒரு அண்ணன், திருத்தந்தைக்கு ஒருவேளை ஏதாவது ஆகிவிட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஒரு ஸ்ட்ரெச்சர், உதவியாளர், மருத்துவர், திருத்தந்தையின் இரத்தவகை பாட்டிலை ஏந்திய தாதியர், தண்ணீர் பாட்டில், ஆடியோ-வீடியோ கண்காணிப்பாளர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, மற்றும் இன்னும் பலர். ஆக, பெரிய ஆடம்பரத்திற்கு முன் மறைந்திருக்கும் எளிய முகங்கள் வெளிச்சத்திற்கும், கேமராவிற்கு முன்னும் வருவதில்லை. ஆனால், இவர்கள் இருளில் இருப்பதால்தான் மற்றவர்கள் ஒளியில் மின்ன முடிகிறது.

2. இன்று சென்னையில் மெட்ரோ ரயில் தன் கன்னிப்பயணத்தைத் தொடங்கியது. 'வெளிநாட்டு ரயில் போல இருக்கு!', 'ஏஸி, ஜில்லுனு இருக்கு!', 'வானத்துல ஒரு வெள்ளைக் காக்கா தலைகீழா பறப்பது போல இருக்கு!' என்று நிறைய சிந்தனைத் தூறல்கள் மின்னித் தெறிக்கின்றன. ஆனால், இந்த மெட்ரோவுக்கு நாம் கொடுத்த விலை ஏராளம். பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்துள்ளனர். ஒரு சிலர் நீதி கேட்டு நீதிமன்றங்களின் படிகளில் ஏறியுள்ளனர். இந்தத் திட்ட வேலைகளுக்கு மாற்றி விடப்பட்ட போக்குவரத்து, தூசி, மழை, மேடுபள்ளங்கள், விபத்து, பாலம் இடிந்து விபத்து, கம்பங்கள் விழுந்து விபத்து என நிறைய உயிர்கள், உறவுகள், உடைமைகளின் விலைதான் இன்று ஜொலிக்கும் மெட்ரோ. இதை ஓட்டும் பாக்கியம் பெற்றது ப்ரீத்தி என்னும் 28 வயது இளவல். மெட்ரோவின் கலர் அடர்நீலம். நல்ல வேளை - ஜெயாவுக்கு பிடிக்கும் என்று பச்சை அடிக்காமல் விட்டார்கள். அப்படி அவர்கள் பச்சை அடித்தால், நம்ம திமுக க்ரூப் மஞ்சள் அடிக்கும். (நம்ம ஊர் மினி பஸ் மற்றும் சாலையோர பெயர்ப்பலகைகளுக்கு அப்படித்தான் நடந்தது!) 'நாங்கதான் தொடங்குனோம்!' என கருணாநிதி, 'நாங்கதான் முடித்தோம்!' என ஜெயா வீரப்பேச்சு. 'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!' 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது!' என்று கீதையின் கண்ணன்போல எடுத்துக்கொள்வோம். இன்று நாம் தலைநிமிர்ந்து இந்த மெட்ரோவைப் பார்க்கும்போதும், தலைகுனிந்து உள்ளே ஏறி பயணம் செய்யும் போதும், இந்த இழப்புகளை ஒரு நிமிடம் நன்றியோடு நினைத்துப் பார்க்கலாமே!

3. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நாடான கிரேக்கம் இன்று திவாலாகிவிட்டது. அது உலக வங்கிக்குத் தர வேண்டிய கடனை கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஏறக்குறைய கைகழுவி விட்டது (இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை!). சில ஐரோப்பிய நாடுகள் கிரேக்கத்திற்கு உதவி செய்ய விழைகின்றன. மற்ற நாடுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. 'நானாவா வந்தேன்! நீதான கூப்பிட்ட!' என்று எதிர்கேள்வி கேட்கிறது கிரேக்கம். உலகத்திற்கே 'ரிபப்ளிக்' தந்து அதன்வழியாக புதிய அரசியலுக்கு வித்திட்ட பிளேட்டோ பிறந்த ஊரில், சில அரசியல்வாதிகளின் சுயநலத்தால், ஊழலால், தவறான நிர்வாகத்தால் இன்று முடங்கிக் கிடக்கிறது கிரேக்கம். உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லிக்கொடுத்தவர்கள் இன்று தன்னிடம் கற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். இதில் பாதிக்கப்படப்போவது அன்றாடங்காய்ச்சிகளும், அடித்தள மக்களும்தான். அரசியல்வாதிகள் வேறு நாடுகளுக்குள் குடிபெயர்ந்து கொள்வார்கள். யூரோ நாணயமும் அவர்களிடமிருந்து பறிக்கப்படும் அபாயம். 'நமக்கு நடக்கும்வரை நடப்பதெல்லாம் வேடிக்கைதான்' என கண்ணதாசன் சொல்வது போல, எல்லா நாடுகளும் இன்று கிரேக்கத்தை வேடிக்கைதான் பார்க்கின்றன. அவர்களுக்காக செபம் செய்வோம் என்கிறார் திருத்தந்தை (ஆனால், 'முத்தமிட்டு எப்படி பசியாற முடியாதோ, அப்படித்தான் செபமாலை சொல்லி பசியாற முடியாது!').

இறுதியாக, பேதுருவோடு முடிப்போம்.

'மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்?' - இதுதான் இயேசுவின் கேள்வி.

சீடர்களும் பதில்களைச் சொல்லுகின்றனர்.

'நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?' - மீண்டும் கேட்கிறார் இயேசு.

'நீர் மெசியா - வாழும் கடவுளின் மகன்!' என்கிறார் சீமோன் பேதுரு.

'நீ பேறுபெற்றவன். தந்தை உனக்கு அறிவிக்காவிடில் இது உனக்குத் தெரியாது....' என இயேசு சீமோனை வாழ்த்துகின்றார்.

ஆக, எப்படி சீடர்களின் பதில்மொழி 'ஒரிஜினல்' இல்லையோ, சீமோனின் பதிலும் 'ஒரிஜினல்' இல்லை (ஏன்னா! கடவுள்தானே சீமோனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்). அப்படியென்றால் இயேசு ஏன் சீமோனை மட்டும் வாழ்த்த வேண்டும்?

அங்கதான் இருக்கிறது டுவிஸ்ட்.

'நாம் யாருடைய வார்த்தையை அல்லது குரலை கேட்க வேண்டும்?' - மக்களின் குரலையா, கடவுளின் குரலையா?

தன்னைச் சுற்றி எவ்வளவோ சத்தங்கள் கேட்டாலும், சீமோன் தன் உள்ளத்தில் கேட்கும் கடவுளின் சத்தத்தை மட்டும்தான் கேட்கிறார். இன்று நம்மைச் சுற்றி நடக்கும் திருப்பலிகள், நாம் கேட்கும் மறையுரைகள், வாசிக்கும் புத்தகங்கள், மறைக்கல்வி எல்லாமே மற்றவர்கள் போடும் சத்தங்கள்தான். உண்மையான விசுவாச அறிக்கை நம் உள்ளத்தில் கேட்கும் கடவுளின் குரலுக்கு செவிகொடுத்தால்தான் நாம் செய்ய முடியும்.

நாம் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பது நாம் யாருக்கு செவிகொடுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.


1 comment:

  1. ஒரு சிறிய குப்பிக்குள் எத்தனை மேக்ஸிம்ம் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தவிட வேண்டும் என்னும் பேராசை தந்தைக்கு. பாராட்டுகிறேன் தங்களின் சுற்றுப்புறத்தில் நடக்கும் விஷயங்களை உள் வாங்கி, ஜீரணித்து, மனத்தின் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்துத் தேவைப்படும்போது எடுத்துக்கொடுக்கும் வித்தையை.வத்திக்கான் திருப்பலி பற்றிக் குறிப்பிடும்போது " இவர்கள் இருளில் இருப்பதால்தான் மற்றவர்கள் ஒளியில் மின்ன முடிகிறது".... அருமை.நம்மூரின் மெட்ரோ, கிரேக்க நாட்டின் அவலம் எல்லாம் சரிதான்...ஆனால் அந்த இறுதி வரிகள்..மண்டைக்குள் யாரோ ஆணிஅடித்தாற் ஒலிக்கின்றன.நம்மைச்சுற்றி நடக்கும் பக்திமுயற்சிகள் எனும் ஆரவாரத்தை விடுத்து 'நம் உள்ளத்துள் உறையும் இறைவனுக்கு செவிகொடுத்தலே உண்மையான விசுவாச அறிக்கை'.....மாத்த்தின் இறுதி நாளை முடிக்கத் தகுதியான வார்த்தைகள்! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete