Tuesday, June 2, 2015

உன்னைத் தான் தம்பி!

'பிள்ளாய்! தீயவர்கள் உன்னை கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்.
நீ அவர்களுடன் போக இணங்காதே!
பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே!
... ... ...'
(நீதிமொழிகள் 1:10-19)

'தம்பி!
உன்னைத் தான் தம்பி!
அண்ணா அழைக்கின்றேன்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
இது தமிழினத்தைக் காக்கும் தாரக மந்திரம்.
பொதுவாக, தம்பி,
மந்திரங்கள் மனிதர்களை மூடப்பழக்கத்திற்குள் மூழ்கடித்துக்கொண்டிருந்தபோது,
ஒரு இனத்தையே எழுச்சி பெறச்செய்த ஒப்பற்ற மந்திரம்தான்,
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!
Duty, Dignity and Discipline!...'

இது அறிஞர் அண்ணாவின் ஒரு அரசியல் உரையின் ஒரு பகுதி.

'தம்பி' என அழைத்து உரையாற்றுகிறார் அறிஞர் அண்ணா. 'பிள்ளாய்' என அழைத்து உரையாற்றுகிறார் நீதிமொழிகள் நூலின் ஆசிரியர்.

சின்ன பிள்ளைங்க பேசும்போது பெரியவர்கள் 'என்னடா, மொட்டை மொட்டையா பேசுற!' என்று சொல்வார்கள். அதாவது, முன்னிருப்பவரை அழைத்துப் பேசாமல் சும்மா பேசுவது:

'தம்பி, நல்லா இருக்கீங்களா?' என்று கேட்டால், 'அண்ணன், நல்லா இருக்கேன்!' என்று சொல்வதற்குப் பதிலாக, சும்மா, 'நல்லா இருக்கேன்!' என்று சொல்வது. வயது வந்தவர்களும் சில நேரங்களில் இப்படி பேசுவதுண்டு. நம்ம ஊருல சிலரை சித்தப்பானு சொல்லணுமா, அல்லது மாமான்னு சொல்லணுமா என்று தெரியாதபோது நானும் இப்படி மொட்டை மொட்டையாகப் பேசியிருக்கிறேன்.

நீதிமொழிகள் நூலின் ஆசிரியர் தன் வாசகரை 'பிள்ளாய்!' என அழைத்து புத்திமதி சொல்கின்றார். இந்த நடையை யோவான் நற்செய்தியாளரும் தன் திருமுகங்களில் பயன்படுத்தியிருக்கின்றார்.

புத்திமதி சொல்லும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். எனக்கு அடுத்தவர்கள் புத்திமதி சொன்னாலே பிடிக்காது. புத்திமதி என்ன சின்ன அட்வைஸ் கொடுத்தாலே சில நேரங்களில் கோபம் வந்துவிடும்.

மற்றொரு பக்கம் பார்த்தால், இலவசமாக கிடைப்பது அட்வைஸ் மட்டும்தான். சும்மா பஸ்ல உங்க பக்கத்துல இருக்கிறவர்கிட்ட, 'எனக்கு தலைவலிக்குது!' என்று சொல்லிப் பாருங்களேன். உடனடியாக அட்வைஸ் மழையில் உங்களை நனைத்துவிடுவார்:

'தலைவலிக்குதா! எந்நேரமும் மொபைலைப் பார்த்துக்கொண்டே இருந்தால் இப்படித்தான்!
மாத்திரை எடுத்தீங்களா?
ஒரு அனாசின் அல்லது மெட்டாசின் போடலாம்ல!
சூடா ஒரு டீ குடிச்சா சரியாயிடும்!
வாசிக்கும்போது தலைவலிக்குதா?
இந்தக் காலத்து மருந்தெல்லாம் எங்க கேக்குது?
உடனடியா டாக்டரைப் பார்த்து ஏதாவது ஸ்கேன் எடுங்க. இப்படித்தான் எங்க சித்தப்பா பையன். உங்க வயசுதான் இருக்கும். தலைவலிதானன்னு மாத்திரை எடுத்துகிட்டே இருந்தான். ஆனா, தலையில பெரிய கட்டி இருந்து அதக் கவனிக்காம, அவன் இறந்தே போனான்!....'

என்று பேசியே நமக்கு கிலியை உண்டாக்கிவிடுவார்கள்.

இதுக்கு தலைவலியே போதும்போல என்றாகிவிடும்.

ஒருவருக்கு புத்திமதி சொல்வதற்கு முன் அவரோடு தாய்-பிள்ளை அல்லது தந்தை-பிள்ளை உறவை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். மேலும், நீதிமொழிகள் ஆசிரியர் தன்னையே கடவுளின் இடத்தில் அமர்த்தி நற்போதனை வழங்குகின்றார்.

இரண்டு வாரங்களாக மேகி நூடுல்ஸ் கம்பெனி ரொம்பவே நொந்து நூடுல்ஸாகிக்கொண்டிருக்கிறது. கம்பெனி மட்டுமல்ல. அந்த கம்பெனிக்கு விளம்பரம் செய்த நடிகர்களும் அகப்பட்டுக்கொண்டார்கள். அனுமதிக்கப்பட்ட அளவைவிட மோனோசோடியம் அதிகமாக இருப்பதாலும், நிறமிகள் கலக்கப்பட்டிருப்பதாலும், நூடுல்சுக்கு தடைவிதிக்க மத்திய அரச தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த விளம்பரங்கள்ல வர்றவங்களும், 'பிள்ளாய்! இதை வாங்கி சாப்பிடுங்க!' என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வது பொய். ஆக, 'பிள்ளாய்' என்று இவர்கள் அழைப்பது வெறும் வியாபாரத்திற்காக.

சரி! என்னதான் செய்ய! ஒருவரையொருவர் பிள்ளையாய் பார்க்கும் பக்குவம் பெறலாம்!


1 comment:

  1. கண்டிப்பாக நாம் நமக்குத் தெரியாதவர்களானாலும் கூட அவர்களுடன் முறை ஏற்படுத்தி அழைத்துப் பேசுவது என்பது நல்ல நட்பையோ, உறவையோ கொண்டுவரும்.அண்ணாவின் மனப்பாங்கில் ஒருவரைப் பார்த்து 'பிள்ளாய்' என அழைக்க ஒரு தனி மனது வேண்டும். அப்படி மனது இருக்கும் பட்சத்தில் புத்திமதி கூறுவதில் தவறு இல்லை.அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்களா,பிடித்திருக்கிறதா அது...அவர்கள் பிரச்சனை.அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும் தப்பு.நீதிமொழியின் ஆசிரியரிடமிருந்து மட்டுமல்ல..அண்ணாமார்கள்,அம்மாமார்களிடமிருந்தும் நல்லவை வரலாம்.கேட்டுக்கொள்வதில் தப்பில்லை.

    ReplyDelete