Saturday, February 28, 2015

திரும்பி வராத ஈசாக்கு!

விவிலிய விளக்கங்களுக்குப் பயன்படும் பல செயல்முறைகளில் ஒன்றின் பெயர் 'உருவகப்படுத்துதல்' (allegorizing). ஒன்றின் அர்த்தத்தை மற்றொன்றின் வழியாக அறிந்து கொள்வது. எ.கா. நோவாவின் தண்ணீர் திருமுழுக்கின் உருவகம் என்று சொல்வது. பழைய செயல் ஒன்றை புதிய செயலோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொருள் கொள்வது. இது மிகவும் எளிதானது. இதன் வழியாக எதையும் யாருக்கும் எளிதாகப் புரிய வைத்துவிட முடியும். ஆனால், இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இல்லாத ஒரு அர்த்தத்தை நாம் இங்கே புகுத்துகிறோம். நோவாவிற்கு அவர் அனுபவித்த வெள்ளம் பிற்காலத்தில் திருமுழுக்காக மாறும் என்று தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. மேலும், இந்த அர்த்தம் ரொம்ப 'சிம்ப்ளிஸ்டிக்காகவும்' (simplistic) மாறிவிடுகிறது.

நாளை நாம் வாசிக்கவிருக்கும் முதல் வாசகம் 'ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும்(!) நிகழ்வு' (தொநூ 22). இந்த நிகழ்வை பல நேரங்களில் இயேசுவின் கல்வாரிப் பலியோடு உருவகப்படுத்திப் பார்க்கிறோம்:

1. ஆபிரகாம் - வானகத் தந்தை.
2. ஈசாக்கு - இயேசு
3. பணியாளர்கள் - சீடர்கள்
4. விறகுக்கட்டை - சிலுவை மரம்
5. மோரியா மலை - கல்வாரி மலை
6. மூன்று நாள் பயணம் - மூன்று நாள் பாடுகள், இறப்பு

இந்த ஆறு ஒப்புமைகள் வழியாக இயேசுவையும், ஈசாக்கையும் உருவகப்படுத்துதல் வழக்கம். ஆனால், இந்த ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், பணியாளர்களுக்கும் இயேசு என்று ஒருவர் பிற்காலத்தில் வருவார் என்றும் தாங்கள் அவரின் முன்னோடிகள் என்றும் தெரியுமா? தெரிந்திருக்கும் வாய்ப்பு மிக மிக மிக குறைவு.

இந்த உருவகப்படுத்துதலில் ஏழாவது ஒன்றும் இருக்கின்றது. அதுதான் இயேசுவுக்கு அதிகம் பொருத்தமானது. அது என்னவென்றால், எப்படி ஈசாக்கு மொரியா மலையிலிருந்து வீடு திரும்பவில்லையோ, அப்படியே இயேசுவும் கல்வாரி மலையிலிருந்து தன் வீடு திரும்பவில்லை.

ஆபிரகாம் ஆட்டைத் தானே பலியாகக் கொடுத்தார். ஈசாக்கு இறக்கவில்லையே? என்று சொல்றீங்களா?

வாங்க தொநூ 22ஐப் பார்ப்போம்.

'மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, 'நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்' என்றார்' (தொநூ 22:4-5)

'பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்சேபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.' (தொநூ 22:19)

தொநூ 22:5ல் தானும் தன் மகனும் திரும்பி வருவோம் என்று வேலைக்காரர்களிடம் சொல்லிவிட்டுச் சென்ற ஆபிரகாம் தான் மட்டுமே திரும்பி வருகின்றார். ஆபிரகாம் மட்டுமே திரும்பி வந்ததை மூன்று வாக்கியங்களாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்: 'திரும்பி வந்தார்', 'திரும்பிச் சென்றார்கள்', 'வாழ்ந்து வந்தார்'. ஈசாக்கு என்ன ஆனார்? (ஈசாக்கு இறக்கவில்லைதான். ஏனெனில் தொநூ 24ல் ஈசாக்கின் திருமண நிகழ்வு நடைபெறுகிறது) பின் எதற்காக இந்தக் கதையின் ஆசிரியர் ஈசாக்கு திரும்பி வருதலை எழுதவில்லை?

இந்தக் கதாசிரியர் மிகச் சிறந்த ஞானியாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கதையின் நோக்கம் என்ன? இந்தக் கதை ஆபிரகாமுக்கான சோதனை என்று சொல்வதை விட, கடவுளுக்கான சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த நிகழ்வில் அல்லது இந்தச் சோதனையில் ஈசாக்கு ஒருவேளை இறந்துவிட்டால் கடவுள்தான் வாக்குத்தவறியவராக அல்லது பொய்யராக மாறிவிடுவார். கடவுள்தான் 'உன் சந்ததி என்றென்றும் இருக்கும்!' (தொநூ 12:1-3) என்று வாக்குக் கொடுத்திருக்கிறாரே. ஈசாக்கு இறந்து விட்டால் சந்ததி எப்படி இருக்கும்? ஆக, கடவுள் கண்டிப்பாக ஈசாக்கைப் பலியிட அனுமதித்திருக்க மாட்டார்.

இந்த நிகழ்வின் வழியாக நான் கற்றுக்கொள்வது இரண்டு:

அ. கடவுள் ஆபிரகாமிற்குக் கொடுத்த தன் வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டார். ஆனால், ஆபிரகாம் வேலைக்காரர்களுக்குக் கொடுத்த தன் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. 'நாங்கள் இருவரும் திரும்பி வருவோம்' என்று சொன்னவர் தான் மட்டுமே திரும்பி வருகின்றார். ஆக, நம் கடவுள் தான் கொடுக்கும் வாக்குறுதியில் ஒருபோதும் தவறுவதேயில்லை. கடவுளின் இந்த நிலையான தன்மையைக் குறிக்கத்தான் அவரை முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் 'பாறை' என அழைக்கிறார்கள் (இச 32:4,13,30-31, திபா 18:2). நாம் தான் பல நேரங்களில் நாம் வாக்குறுதிகளில் தவறிவிடுகிறோம். கடவுள் நாம் பொக்கிசமாய்ப் பாதுகாக்கும் நம் அன்பு மகனை பலியாகக் கேட்டாலும், கண்டிப்பாக அவர் மலையின் அந்தப்பக்கமிருந்து ஒரு ஆட்டுக்குட்டியை ஏற்றிக்கொண்டு வருவார். இது இன்று என் அருட்பணி வாக்குறுதியையும் ஆய்வு செய்து பார்க்க அழைக்கிறது. இந்த நாட்களில் எங்கள் பங்கில் வீடுகளை சந்தித்து ஆசீர் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு வீட்டின் 'பெட்ரூமில்' தீர்த்தம் தெளிக்கச் செல்லும் போதும், 'ச்சே! நமக்கு வாழ்க்கை ஃபுல்லா சிங்கிள் கட்டில்தான்! டபுள் காட் சான்சே இல்லை!' என்று தோன்றும். (மதுரைக்கு வந்தவுடன் சும்மாவாவது ஒரு டபுள் காட் வாங்கணும்!). ஆனால், இந்த வாசகம் நான் கொடுத்த வாக்குறுதிக்கு வலுசேர்க்கிறது. கடவுளின் பிரசன்னத்தில் ஒன்றை இழக்கத் துணியும் போது அதை மிகவும் வியப்பான விதத்தில் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்தானே!

ஆ. ஈசாக்கு உயிரோடு இருக்கிறார் என்று ஆபிரகாமிற்குத் தெரியும். ஆனால் வேலைக்காரர்களுக்குத் தெரியாது. ஆபிரகாமும், வேலைக்காரர்களும் இரண்டு வகை விசுவாசத்தைக் குறிக்கிறார்கள். ஆபிரகாம் விசுவாசம் அசையாத விசுவாசம். வேலைக்கார விசுவாசம் 'பேய்மெண்ட்' விசுவாசம், அதாவது 'கூலிக்கு மாரடிக்கும் விசுவாசம்!'. ஆபிரகாம் போல விசுவாசம் இருந்தால்தான் நமக்கு ஈசாக்கும் கண்ணுக்குத் தெரிவார், அவர் குறிக்கும் இயேசுவும் கண்ணுக்குத் தெரிவார். வேலைக்காரர் போல விசுவாசம் இருந்தால் நமக்கு ஈசாக்கும் தெரிவதில்லை, இயேசுவும் தெரிவதில்லை. இந்த விசுவாசம் நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஆபிரகாம் போல நான் இருந்தேனென்றால் எல்லாவற்றிலும் என் கடவுளை நம்புவேன். வேலைக்காரர் போல இருந்தேனென்றால் எப்பப் பார்த்தாலும் முணுமுணுத்துக்கொண்டு, என்னிடம் இல்லாததைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன். ஆபிரகாமைப் பாருங்களேன். தன் முழுமையான கையறு நிலையில் இருக்கிறார். ஈசாக்கும் ஒருவேளை இறந்துவிட்டால், தன்னால் அடுத்த குழந்தையை உருவாக்க முடியுமா? சாராவுக்கு என்ன பதில் சொல்வார்? இவ்வளவு துன்பத்திலும் அமைதி காக்கிறார். வேலைக்கார மனநிலை அப்படியல்ல. 'கூலி தந்தால் வேலை!' அவ்வளவுதான். இந்த மனநிலையில் நான் இருக்கும்போது என் செயல் ஒவ்வொன்றிலும், 'இதில் என்ன கிடைக்கும்!' என்ற மனநிலை பிறந்துவிடும். பின் என் செயல்பாடுகளில் என் படைப்புத்திறனும் குறைந்துவிடும். விசுவாசத்தில் இந்த நிலை மிகவும் ஆபத்தானது. நான் வேண்டியது கிடைத்தால் செபிப்பேன். அல்லது 'நோ!' சொல்லிவிடுவேன்.

'திரும்பி வராத ஈசாக்கு!' வீடு திரும்புவதும், திரும்பாததும் நம் கையில்!


Friday, February 27, 2015

வாயில் வெள்ளிக்கரண்டியோடு!

'நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய்' (இணைச்சட்டம் 26:18)

'வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறப்பது!' (to be born with a silver spoon) என்ற ஆங்கிலச் சொல்லாடலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிறப்பிலேயே ஒருவர் பெரிய பணக்காரராக இருப்பதைக் குறிப்பதுதான் இந்தச் சொல்லாடல்.

நாம் ஒருவேளை பிறந்தபோது கையில் விரலோடுதான் பிறந்திருப்போம். சரி. பரவாயில்லை. உண்மையிலேயே கரண்டியோடு பிறந்தால் எவ்வளவு அசௌகரியமாக இருக்கும்?

நீங்கள் பிறக்கும் போது எப்படி இருந்தாலும், உங்களுக்கு அருகில் இருக்கும் நபர்களைக் காட்டிலும் நீங்கள் சிறியவர்களாக இருந்தாலும், நீங்கள் என் பார்வையில் மதிப்பு பெற்றவர்கள் என்கிறார் யாவே இறைவன்.

இத்தாலியில் ஒருவர் மற்றவரைக் கூப்பிடும்போது பயன்படுத்தும் பல வார்த்தைகளில் ஒன்று எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அந்த வார்த்தை என்னவென்றால் 'தெசோரோ மியோ!' - அதாவது, 'என் புதையலே!'

புதையல் என்றால் மூன்று அர்த்தங்கள்:

அ. நம் எதிர்பார்ப்பு இல்லாமல் வருவது.
ஆ. மிகவும் மதிப்பு வாய்ந்தது. (சில நேரங்களில் கவுண்டமணி-செந்தில் கண்டுபிடிக்கும் புதையல் போல நமக்கு வெறும் செப்புக்காசுகளும் கிடைப்பதுண்டு!)
இ. மிகவும் அரியது.

இந்த மூன்றையும் இவர்கள் உணர்ந்து சொல்கிறார்களோ இல்லையோ இந்த வார்த்தையில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன.

யாவே இறைவன் நாளைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் இது: 'நீங்களே என் புதையல்!'

இது கடவுளிடமிருந்து வரும் கொடையாக இருந்தாலும், இதோடு சேர்ந்து ஒரு கடமையும் வருகிறது. அதாவது, கடவுளை அன்பு செய்து, அவரின் வழிகளில் நடப்பது.

கடவுள் இஸ்ரயேல் மக்களை மட்டுமல்ல, நம்மைப் பார்த்துச் சொல்லும் வார்த்தையும் இதுவே.

கடவுளின் பார்வையில் நாம் அரிதானவர்கள், மதிப்பு மிகுந்தவர்கள். அப்படியென்றால் அதற்கேற்ற முறையில் நாம் நடந்து கொள்வதும் அவசியம்.

பொற்கிண்ணத்தை வைத்து குப்பை அள்ளினால் எப்படி இருக்கும்?

பொற்கிண்ணம் ஆலயத்தின் பலிபீடத்தில் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதையே தூய பவுலடியார் திமோத்தேயுவுக்கு எழுதும் இரண்டாம் திருமுகத்தில் அழகாகச் சொல்வார்:

'ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை. சில மதிப்பற்றவை. ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார். தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்!' (2:20-21)

நாம் கடவுளின் பார்வையில் புதையல்கள் என்றால், நம் நண்பர்களையும் அப்படிக் கூப்பிடலாம்தானே!

ஏனெனில், நம் நண்பர்களும் நாம் எதிர்பாராமல் நம் வாழ்வில் வந்தவர்கள்தாம்! மதிப்பிற்குரியவர்கள்தாம்! அரிதானவர்கள்தாம்!


Thursday, February 26, 2015

இதுல கொஞ்சம், அதுல கொஞ்சம்

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு:

"Either you are 'pregnant' or 'not pregnant'. There is no 'little pregnant'."

நாளைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் வழியாகக் கடவுள் கூறுவதும் இதுவே.

இரண்டு வகையான மக்கள்:

அ. பொல்லார். எப்பவுமே கெட்டது செய்றவங்க. ஆனா, ஒரே ஒரு நல்லது செஞ்சாலும் கடவுள் அவர்களை ஏற்றுக்கொள்வார்.

ஆ. நேரியவர். எப்பவுமே நல்லது செய்றவங்க. ஆனா, ஒரே ஒரு கெட்டது செஞ்சாலும் கடவுள் அவர்களைத் தண்டித்துவிடுவார்.

கடவுள் பொல்லாரிடம் தம் இரக்கத்தையும், நேரியவரிடம் தம் நீதியையும் காட்டுகின்றார்.

இதுல நாம எந்த வகை?

ஒரு குடம் முழுவதும் இருக்கின்ற பால் ஒரு சொட்டு அழுக்கு இருந்தாலும் கெட்டுவிடுகிறது. அந்த ஒரு சொட்டு அழுக்கை நாம் பாலிலிருந்தோ, அல்லது பாலை அழுக்கிலிருந்தோ பிரிக்க முடிவதில்லை.

ஆக, இன்று கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது 100 சதவிகித நன்மைத்தனம்.

ஒன்று முழுமையான நல்லவராக இருக்க வேண்டும். அல்லது முழுமையான கெட்டவராக இருக்க வேண்டும் (நம்ம தெரியாம செய்ற நல்ல செயல் ஒன்று கூட இந்த இடத்துல நம்மள காப்பாத்திடும்!).

இதுல கொஞ்சம், அதுல கொஞ்சம் என்று இருப்பது ஆபத்தே!


Wednesday, February 25, 2015

எஸ்தர்

நாளைய முதல் வாசகத்தை அலங்கரிப்பவர் எஸ்தர்.

எஸ்தர் நூலில் சில பகுதிகள் எபிரேயத்திலும், சில பகுதிகள் அரமேயத்திலும் மற்றும் சில பகுதிகள் கிரேக்க மொழியிலும் இருக்கின்றன. ஆக, இந்த நூலை முழுமையாக வாசிக்கும் போது கூட அதன் கோர்வை நமக்குப் பிடிபடுவதில்லை.

புத்தகத்தோட கான்செப்ட் சிம்பிள்: 'ஜீரோவா இருந்து ஹீரோவான கதை!'

யூத குலத்தையே சதி செய்த ஆமானிமிருந்து தன் மக்களை மீட்க எஸ்தர் என்ற அரசி மேற்கொள்ளும் 'இனக்காப்பு முயற்சியே' இந்த நூலின் சாரம்.

'சிங்கத்தின்முன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்!'

இதுதான் எஸ்தரின் செபம்.

பல நேரங்களில் சமூகத்தின் கீழ்தட்டு மக்களைத் தான் கடவுள் தன் பணிக்குத் தேர்ந்தெடுப்பார் என்று நாம் நினைக்கிறோம். இல்லை. கடவுளின் தெரிவு எல்லா மக்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. எஸ்தர் அரசவையில் இருந்தாலும் கடவுளின் பணிக்காக அழைக்கப்படுகின்றார். தன் பணியைச் செய்கின்றார்.

ஆக, அழைப்பு நாம் எங்கிருந்தாலும் வரும்.

அதற்கேற்ற பதிலை நாம் தயாரா என்பதுதான் கேள்வி!


Tuesday, February 24, 2015

போகிற போக்கில்...

'ஏய்...தம்பி...உன்னைத்தான்...அப்படிப் போகிற போக்கில் அந்த கேட்டைச் சாத்திவிட்டுப் போயேன்!'

'மெடிக்கல்ஸ்கா போறீங்க...அப்படியே ஒரு பேராசெட்டமாலும் வாங்கிட்டு வந்திடுங்க!'

'வெளியில போனா, அப்படியே என் மொபைலுக்கு டாப்-அப் பண்ணிடுங்களேன்!'

'பேங்குக்குப் போனா அப்படியே இந்த பாஸ்புக்லயும் என்ட்ரி போட்றுங்களேன்!'

'யுனிவர்சிட்டி போனா அப்படியே நோட்டிஸ் போர்டுல ரிசல்ட் போட்றுக்காங்களான்னு பார்த்துட்டு வந்துடுங்களேன்!'

'பெட்ரேலா...இப்பவா, அப்பறம் அங்கிட்டுப் போகும்போது போட்டுக்கலாம்டா!'

இப்படி நிறையப் பேர் நம்மிடம் சொல்லியிருப்பார்கள். அல்லது நாம் மற்றவர்களிடம் சொல்லியிருப்போம். அல்லது யாராவது பேசிக்கொண்டிருக்கக் கேட்டிருப்போம்.

'போகிற போக்கில்' என்பது நாம் அரைக்கிலோ தக்காளி வாங்கிட்டு கடைக்காரரிடம் கேட்கும் கறிவேப்பிலை கொசுறு போன்றது. தக்காளிக்கு மட்டும்தான் காசு கொடுக்கிறோம். ஆனால் கூடவே கறிவேப்பிலையும் கிடைத்து விடுகிறது.

'போகிற போக்கில்' என்ற செயலில் ஒரு நிறுத்தம் இருக்கின்றது.

அதாவது, நான் 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கும் செல்ல வேண்டும் என வைத்துக்கொள்வோம். 5:30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுகிறேன். என் பயணம் கோவிலை நோக்கியதாக இருந்தாலும் 'போகிற போக்கில்' எனக்குக் கொடுக்கப்பட்ட 'ரீசார்ஜ்' வேலைக்காக 'சத்யா மொபைல்ஸ்ல்' நான் 5:50க்கு நுழைகிறேன். ஆக. என் முப்பது நிமிடப் பயணமானது, 20-10 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிடுகிறது. இப்படிப் பிரிக்கப்பட்டதால் ஒருவேளை கோவிலுக்கு நான் 6:05க்குத் தான் செல்ல முடியும். அல்லது என் பைக்கின் வேகத்தைக் கூட்டித் தாமதத்தை ஈடு செய்ய வேண்டும். ஆக, தாமதம் அல்லது வேகம் என்ற இரண்டு காரணிகளின் மூலமாக நாம் செய்கிற இந்த வேலைக்கு ஈடு கட்ட வேண்டும்.

பைக் பார்க்கிங் செய்ய கடைமுன் இடமில்லாமல், எங்கோயோ நிறுத்திவிட்ட நடந்து வந்து, ரீசார்ஜ் கடையின் கூட்டத்தையும் சமாளித்து, 'போகிற போக்கில்' ரீசார்ஜ்ம் செய்து, சரியாக 6 மணிக்கு நான் கோவிலை அடைந்துவிட்டேன் என்றால் என்னால் 30 நிமிடங்களுக்குள் நான்கு வேலைகளைச் செய்துவிட முடிகிறது: 'கோவிலுக்குப் பயணம், பார்க்கிங், கூட்டம் சமாளிப்பு, ரீசாஜ்'. ஆக, நமக்குச் செயல்திறன் அதிகம் இருந்தாலும் அதை நாம் பயன்படுத்துவதில்லை என்று நம்மையே ஆராய்ந்து பார்க்கவும் இந்த 'போகிற போக்கில்' காரியம் உதவுகிறது.

மேலும், 'போகிற போக்கில்' இதைச் செய் என்று சொல்லப்படும் வேலைகளுக்கு நாம் கணக்குக் கொடுக்கத் தேவையில்லை. எளிதாக சாக்குப் போக்கு சொல்லிடலாம். 'என்னடா டாப்-அப் பண்ணச் சொன்னேன்ல!' என்ற என்கொயரிக்கு எளிதாக, 'கடை பூட்டியிருந்துச்சுமா!' என்று சொல்லி விடலாம். இதற்காக நமக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.

ஆக, நம்ம வாழ்க்கையில சில காரியங்களை போகிற போக்கில் செய்யலாம். அல்லது போகிற போக்கில் செய்வது போல செய்யலாம் - அதாவது, அக்கறை இல்லாமல், சாக்குப் போக்கு சொல்லி!'

சரி! ஏன் இப்படிப் போகிற போக்கில் சொல்லிக்கிட்டே போறீங்க அப்படின்னு கேட்கறீங்களா?

நாளைய முதல் வாசகத்தின் நாயகர் இறைவாக்கினர் 'யோனா'. 'யோனா' என்றால் புறாக்குஞ்சு அல்லது புறா என்று அர்த்தம்.

வழக்கமா கடவுள் கூப்பிட்டா விழுந்தடிச்சு ஓடி வர்ற சாமுவேல், எலியா, எலிசா, நாத்தான், எசாயா, எரேமியா இறைவாக்கினர்களைத் தான் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், இவர் ஒரு வித்தியாசமான இறைவாக்கினர். கடவுளுக்கே டேக்கா கொடுக்குற இறைவாக்கினர். கடவுளின் அழைப்பை கண்டுகொள்ளாத ஒருவர். இதுல என்ன சிறப்புனா, கடவுள் இதுக்காக அவரைத் தண்டிப்பதும் கிடையாது. கடவுளும், யோனாவும் ஒருவருக்கொருவர் கண்ணாமூச்சிதான் விளையாடிக் கொள்கின்றனர். அதமாதரி, கடல்ல புயல் வந்து, அதுக்குக் காரணம் தான் எனத் தெரிந்தாலும், துணிந்து, 'என்னைத் தூக்கிக் கடல்ல பேடுங்க! எல்லாம் சரியாயிடும்!' என்று நெஞ்சை நிமிர்த்தியவர் - அந்த நேரம் அவர் என்ன நினைச்சிருப்பார் - 'பார்த்திப்போம்! நானா! கடவுளான்னு! சும்மா தூக்கிப் போடுங்கடா!' அல்லது 'இவர் குடுக்குற வேலையை செய்றதுக்குக் கடல்ல குதிச்சி சாகலாம்!' னு கூட நினைச்சிருப்பார்.

அப்படி தூக்கியெறியப்பட்டு மீன் ஒன்றின் வயிற்றில் மூன்று பகலும், மூன்று இரவும் இருந்து கரையொதுங்கிய நம்ம யோனா நினிவேயில் மனமாறுங்கள் என்ற செய்தியை அறிவிக்கும் படலம்தான் நாளைய முதல் வாசகம்.

'யோனா' என்பவர் ஒரு வரலாற்று நபர் அல்ல என்பதும், அவர் ஒரு இலக்கிய உருவகம் என்பதும் இன்று பல ஆய்வாளர்களின் கருத்து.

யோனா என்ன செய்றார் பாத்தீங்களா?

மூன்று நாள் நடந்தால் தான் ஒரு எல்லையிலிருந்து அடுத்த எல்லைக்குச் செல்ல முடியும் என்கிற தூரத்தை ஒரே நாளில் நடந்து கடக்கின்றார். அப்படின்னா, ரொம்ப வேகமா நடந்திருப்பார். அல்லது ஓடியிருப்பார். இப்படியான ஓட்டத்தில் 'மனம்மாறுங்கள்!' அப்படின்னு சொல்லிட்டுப் போயிடுறார். என் கடமை முடிஞ்சுடுச்சுனு நினைக்கிறார். ஆனா, நினிவே மக்களைப் பாருங்களேன். ரொம்ப புத்திசாலிகள். சொன்னது யாரென்று பார்க்கல! சொன்னது எப்படியென்று பார்க்கல! ஆனா, யோனா சொன்னத அப்படியே கடவுளின் வார்த்தையா எடுத்து - அரசன் முதல் ஆடுமாடுகள் வரை சாப்பிடாமல் நோன்பிருந்து மனம் மாற்றத்தைக் காட்டுகிறார்கள்.

ஆக, போற போக்குல நாம செய்ற ஒரு காரியம் கூட கடவுளிடம் இருந்து வருகிறதென்றால் அது மிகப்பெரிய பயனைத் தர முடியும்.

ஆக, இன்னைக்கு நாம விரும்பிச் செய்ற எதுன்னாலும், போற போக்குல செய்ய எதுன்னாலும் அதுவும் பலன்கொடுக்கும் என்று நினைத்துச் செய்யலாமே!


Monday, February 23, 2015

இறைவேண்டல்

'நீங்கள் அவ்வாறு செபிக்க வேண்டாம்...
ஏனெனில்...உங்களுக்கு என்ன தேவையென்று உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
ஆகவே,
நீங்கள் இவ்வாறு செபியுங்கள்...'
(காண்க மத்தேயு 6:7-15)

செபம். புதிய மொழிபெயர்ப்பில் இறைவேண்டல்.

நம்மையறியாமலேயே நாம் கற்றுக்கொண்ட பல பழக்கங்களில் ஒன்று செபித்தல்.

செபம் என்பது அடிப்படையில் ஒரு தகவல் பரிமாற்றம். கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரை நோக்கி தன் தேவைக்காகத் தகவல் பரிமாற்றம் செய்வது செபம் அல்லது மன்றாட்டு.

ஆக, இங்கே இருவர் இருக்கின்றனர். ஒருவர், தேவையில் இருப்பவர். மற்றவர், தேவையைப் பூர்த்தி செய்பவர். மன்றாட்டு எப்பொழுதும் கீழிருந்து மேல்நோக்கி செல்கின்றது.

செபம் பற்றியும், செபத்தில் தேவையான விடாமுயற்சி பற்றியும் நற்செய்தி நூல்களும், புதிய ஏற்பாட்டு கடிதங்களும் நிறையவே சொல்கின்றன.

மேலும் செபத்தில் தேவையான நம்பிக்கை, மனவுறுதி ஆகியவையும் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றன.

நாளைய நற்செய்தி வாசகத்தில இயேசு புறவினத்தாரின் செபம் போல உங்கள் செபம் இருக்கக் கூடாது என்று தன் சீடர்களுக்கு வலியுறுத்துகின்ற இயேசு, ஒரு முன்மாதிரியான செபத்தையும் தருகின்றார்.

அப்படி இருக்கக் கூடாது, ஆனால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இயேசு இடையில் சொல்வது, 'உங்களுக்கு இவையெல்லாம் தேவையென்று உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்!'

தவக்காலத்தின் முதல் நாளில் 'உங்கள் தந்தை' என்று நாம் சிந்தித்தோம். இந்த வாசகப் பகுதியில் நாம் காணும் வார்த்தை 'வானகத் தந்தை'. ஆக, இந்த வார்த்தை முன்னிறுத்துவது என்ன? நம் தந்தை வானகத்தில் இருக்கிறார். நாம் கீழே, பூமியில் இருக்கிறோம். செபம் கீழேயிருந்து, மேல் நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.
இப்ப நம்ம கேள்வி என்னன்னா, 'அவருக்குத்தான் நம் தேவை என்ன என்று தெரியுமே!' அப்படியிருக்க நாம் ஏன் அதைக் கேட்க வேண்டும்?

தினமும் காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கு நாம் ரிமைன்டர் கொடுக்க வேண்டுமா என்ன? இன்னைக்கு நான் இதச் செய்யப்போறேன், அவங்களப் பார்க்கப் போறேன், நீண்ட பயணம் போறேன் - நீதான் பார்த்துக்கணும்! அப்படின்னு சொல்லனுமா?

செபம் கடவுளுக்குத் தேவை என்பதல்ல. அது நமக்குத் தேவை. இந்தச் செபம் தான் கடவுளின் உடனிருப்பை நமக்கு நினைவுபடுத்துகின்றது.

நமக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். எதற்காக அவர்களோடு உரையாட நாம் பிரியப்படுகிறோம்? பேசாவிட்டால் உறவு முறிந்து விடும் என்பதற்காகவா. இல்லை. நம் உரையாடலில் நாம் ஒருவர் மற்றவரோடு இருக்கின்ற உடனிருப்பை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக்கொள்கின்றோம். ஆனால், கடவுளுக்கு இந்த நினைவுபடுத்தல் தேவையில்லை. நமக்குத் தேவையாக இருக்கிறதே!

ஆகவே, செபம் என்பது ஒரு நினைவூட்டல். யாருக்கு? நமக்கு! யாரைப் பற்றி? கடவுளைப் பற்றி!

பல நேரங்களில் செபம் என்பது நமக்கு ஒரு 'விஷ் லிஸ்ட்' போலத்தான் இருக்கிறது. 'இது வேண்டும்! அது வேண்டும்! நான் நல்லாப் படிக்கணும்! என் மகனுக்கு நல்ல வரன் அமையணும்!' இப்படி விண்ணப்பங்கள் தான் அதிகம் இருக்கிறது.

ஒருசிலர் சொல்வார்கள்: முதலில் புகழ்ச்சி, இரண்டு மன்னிப்பு, மூன்று நன்றி, நான்கு விண்ணப்பம் என நம் செபம் இருக்கவேண்டும். இது எப்படி இருக்கிறது என்றால் முதலில் உள்ள மூன்றும் கடவுளின் தலையில் 'ஐஸ்கட்டி' வைப்பது போலத்தான் இருக்கின்றது.

செபம் என்பது ஒரு உறவு. அதற்கு வார்த்தைகள் தேவையில்லை. மௌனம் கூட செபம்தான். நம் உள்ளத்தின் உள்ளறையில் இருக்கின்ற இறைவனோடு நாம் ஏற்படுத்தும் உறவே செபம்.


Sunday, February 22, 2015

டு நாட் காஸ்ஸிப்!

'உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே!' (லேவியர் 19:16)

டு நாட் காஸ்ஸிப்!

'காஸ்ஸிப்' என்னும் ஆங்கில வார்த்தையை விக்கிபீடியா மொழிபெயர்க்கிறது: 'ஒருவரின் தனிப்பட்ட மற்றும் சொந்தமான உணர்வுகள் பற்றிய அடுத்தவரின் பயனற்ற பேச்சு அல்லது வதந்தி!'

உளவியிலிலும் சமூகவியிலிலும் மிகவும் ஆராயப்படும் ஒன்று 'காஸ்ஸிப்'. 'எனக்கு யாரோ சொன்னாங்க! அதை நான் உனக்குச் சொல்றேன்!' - இதுதான் காஸ்ஸிப்பின் எழுதப்படாத சூத்திரம். 'காஸ்ஸிப்' ஒருவகையில் சமூகத்தை இணைக்கவும் செய்கிறது. அதாவது ஒருவரைப் பற்றி பேசப்படும் 'காஸ்ஸிப்' பேசுபவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திவிடுகிறது. உதாரணத்திற்கு, ஒரு பங்கு அருட்பணியாளரைப் பற்றி அந்தப் பங்கைச் சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்றால், தங்களையறியாமலேலே - தாங்கள் சண்டைக்காரர்களாக இருந்தாலும்! - ஒரே குழுவாக இணைந்துவிடுகின்றனர். இது ஒரு 'சப்கான்சியஸ்' ப்ராசஸ்.

'காஸ்ஸிப்' (gossip) என்ற வார்த்தை 'காட்' (god), 'சிப்' (sibb or sebb)  என்ற இரு வார்த்தைகளின் இணைப்பு. அதாவது, 'காட்' (god), 'சிப்ளிங்' (sibling) - இதிலிருந்து தான் 'காட் சைல்ட்' (godchild) - அதாவது, திருமுழுக்கின் போது ஞானப்பெற்றோர் கைகளில் ஏந்தி நிற்கும் 'ஞானக்குழந்தை!'.

இதன் உருவாக்கம் வந்தது எப்படி? மருத்துவம் இன்னும் முன்னேறாமல் இருந்த நேரம் பெண்கள் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்டனர். அப்படி வீட்டிலேயே பேறுகாலம் நடக்கும் அறையில் அந்தப் பெண், மருத்துவச்சி மற்றும் அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இருப்பது வழக்கமாம். குழந்தை பிறந்தவுடன் இந்த உறவினர் அல்லது நண்பர் தான் வெளியே வந்து அங்கே காத்திருப்பவர்களிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் 'என்ன குழந்தை!' 'எந்நேரம் பிறந்தது!' (godparent) என்றெல்லாம் சொல்வாரம். இவரே பின்னர் குழந்தையின் 'காட்-பேரன்டாகவும்' இருப்பாராம். இவரை காட்-பேரண்ட்டாக நியமிக்க காரணம் என்ன? பிரசவம் நடக்கும் பெண்ணிற்கும், மருத்துவச்சிக்கும் இடையே சாட்சியாக, கடவுளின் பிரதிநிதியாக இருப்பவர் இந்தப் பெண். இந்தப் பழக்கம் இன்னும் வெளிநாடுகளில் இருக்கின்றது - அதாவது, மருத்துவமனைகளில் பிரசவம் நடக்கும் போது பெண்ணின் தாய் அல்லது உறவினர் அல்லது நண்பர் உடனிருக்கிறார். அவரே பின்னர் 'காட்-பேரன்ட்டாகவும்' மாறுகிறார். மருத்துவச்சியோடு சேர்ந்து குழந்தையை முதன்முதலில் பார்க்கும் பேறு இவருக்குத்தான் கிடைக்கின்றது.

இப்படி ஒரு 'காட்-சிப்ளிங்கைப்' பற்றி 'காட்-பேரண்ட்' உற்றார், உறவினர்களிடம் சொல்லும் தகவல் பரிமாற்றம், ஒருவர் மற்றவரைப் பற்றி பேசும் பேச்சுக்கான 'காஸ்ஸிப்' என மாறிவிட்டது. 'டு காஸ்ஸிப்!' - என்று இதை வினைச்சொல்லாக முதன்முதலில் பயன்படுத்தியவர் ஷேக்ஸ்பியர்.

பெயர் ஆராய்ச்சி விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது இப்படி 'தண்டவாளத்தில் எலுமிச்சம் பழம் வைக்கும் வேலை' பார்க்கலாம் என நினைக்கிறேன்!

நாம் ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசுவது அல்லது ஒருவரின் சொந்த உணர்வுகளை, உறவுகளைப் பற்றிப் பேசுவது தவறு என்று தெரிந்தாலும் நாம் ஏன் அப்படிப் பேசுகிறோம்?

அதற்குக் காரணங்கள் இரண்டு (நிறைய இருக்கலாம்!):

அ. ரிவார்ட். நாம் அடுத்தவரைப் பற்றிப் பேசும்போது நமக்குள்ளேயும் வெளியேயும் ஒரு ரிவார்ட் கிடைக்கிறது. உள்ளுக்குள் கிடைக்கும் ரிவார்ட் என்ன? 'நான் அவனை விட அல்லது அவளை விட பெரியவன் அல்லது பெரியவள்', 'அவனிடம் அல்லது அவளிடம் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது!' என்னும் உணர்வு. வெளியிலிருந்து கிடைக்கும் ரிவார்ட் என்ன? நம்மிடம் புறங்கூறுபவருக்கும், நமக்கும் ஏற்படுகின்ற ஒரு 'கெமிஸ்ட்ரி!' வீட்டுல நல்லா பாருங்களேன். பக்கத்து வீட்டு அக்கா வந்து உட்கார்ந்துட்டா, 'என்ன இவ இந்நேரம் இங்க வர்றா! வேலையைக் கெடுக்குறாளே!' ஒரு சீரியல் நிம்மதியா பார்க்க முடியுதா!' என்று புலம்புவோம். அந்த அக்கா ஊர் விஷயங்களைப் பேசப் பேச நாம் அவங்களோட நம்மையறியாமலே நெருங்கி விடுறோம். 'இந்தாக்கா கொஞ்சம் காஃபி குடி!' என்று காஃபி போடுவோம். அல்லது நம்ம பையனைப் பார்த்து, 'டேய்! எந்நேரமும் டிவி தானடா? கொஞ்சம் வால்யூமைக் குறைக்கலாம்ல! நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல! - இவ்வளவு நேரம் டிவி பார்த்தவங்க இவங்கதான்! இப்படியாக, உள்ளுக்குள் ஒரு 'தேவையற்ற' மகிழ்ச்சி. வெளியிலிருந்து கிடைக்கும் அங்கீகாரம்.

ஆ. ரெஃபரென்ஸ். 'புறங்கூறுதல்' வழியாக நாம் பெறும் செய்தி ஒரு ரெஃபரென்ஸ் பாய்ன்டாக மாறிவிடுகிறது. 'உங்க வீட்டுக்கு அந்த மாணிக்கம் அடிக்கடி வந்துட்டுப் போறான் போல!' அப்படின்னு நம்மகிட்ட யாரோ சொல்றாங்கன்னு வையுங்க. இந்த மாணிக்கம் நம்ம ஆஃபிசில இருந்து சும்மா லீவ் போட்டாலும், 'இவன் ஒருவேளை நம்ம வீட்டுக்குத்தான் லீவு போட்டுட்டுப் போறானோ?' என மனம் பதைத்துக் கொண்டே இருக்கும். ஆக, ஒரு செய்தி ஒருவரின் நடத்தைக்கான ஒப்பீட்டுப் புள்ளியாக மாறி விடுகிறது. சில நேரங்களில் காஸிப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அதாவது நம்ம பக்கத்து வீட்டுக்காரர் தனக்கு இமெயிலில் ஒரு கோடி விழுந்ததா நம்பி அஞ்சு லட்சத்தை பேங்க்ல போட்டு ஏமாந்துட்டார்னு வைங்க. அந்தச் செய்தியை நாம் 'காஸ்ஸிப்பாக' கேட்கும் போது, நாம் அந்த மாதிரி மின்னஞ்சல் வந்தா கவனமாக இருக்க, நம் மூளையில் ஒரு 'ரெஃபரென்ஸ்' பாய்ன்டாகவும் பதிந்து விடுகிறது.

புறங்கூறுதல் நம் நேரத்;தையும், ஆற்றலையும் விரயமாக்கும் ஒரு பெரிய காரணி. இன்று சமூக வலைத்தளங்கள் இந்த 'புறங்கூறுதலை' இன்னும் வேகமாக்குகின்றன. ஒரு காலத்தில் கடிதத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, இன்று 'க்ளிங்' என்ற ஒரு சத்தத்தில் கைக்குத் தகவல் வந்துவிடுகிறது. ஆக, நாம் இப்போதுதான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் யாரையாவது பற்றிப் புறங்கூறுமுன் மூன்று சின்னக் கேள்விகளைக் கேட்கலாம்:

அ. இஸ் இட் ட்ரூ?

ஆ. இஸ் இட் கைன்ட்?

இ. இஸ் இட் நெசஸரி?

மற்றொரு விஷயம். நம்மிடம் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுபவர்கள், நம்மையும் பற்றி அடுத்தவர்களிடம் பேசுவார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்றே சொல்வோம். அதை நன்றே சொல்வோம். அதைச் சொல்ல வேண்டியவரிடம் சொல்வோம்!

இன்றும் - என்றும்!


Saturday, February 21, 2015

மனம் என்னும் பாலை

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று நம் ஆண்டவராகிய இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வு நற்செய்திப் பகுதியாகத் தரப்படுகின்றது. இந்ந நிகழ்வை நாம் மத்தேயு (4:1-11), மாற்கு (1:12-13) மற்றும் லூக்கா (4:1-13) நற்செய்திகளில் வாசிக்கின்றோம். இந்த மூவரும் இந்த நிகழ்வைப் பற்றி எழுதுவதில் ஒருவருக்கொருவர் அதிகமாகவே மாறுபடுகின்றனர்.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் சாத்தான் இயேசுவை மூன்று வகைச் சோதனைக்கு உட்படுத்துவதாக எழுதுகின்றனர் (மத்தேயு 1-2-3 என்றும் லூக்கா 1-3-2 என்றும் வரிசையையும் மாற்றுகின்றனர்!). ஆனால் இன்று நாம் பார்க்கும் மாற்கு சாத்தான் செய்த சோதனைகளையும், இயேசுவோடு நிகழ்த்திய உரையாடல்களையும் பதிவு செய்யாமல், வெறுமனே இயேசு சோதிக்கப்பட்டார் என ஒரேமூச்சில் முடித்துவிடுகின்றார்.

அ. தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆ. அங்கே அவர் நாற்பது நாள்கள் இருந்தார். அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்.

இ. அங்கு காட்டு விலங்குகளிடையே அவர் இருந்தார்.

ஈ. வானதூதர் அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.

(மாற்கு 1:12-13)

இந்த நற்செய்திப் பகுதியை அ, ஆ, இ, ஈ என பிரித்து எழுதினால் பொருள் எளிதாக விளங்குகிறது.
இவற்றில் அ-வும், இ-யும், ஆ-வும் ஈ-யும் முரண்படுகின்றன: எப்படி? பாலைநிலம் - காட்டுவிலங்குகள். சாத்தான் - வானதூதர். 

பாலைநிலம் என்றவுடன் வாசகருக்கு நினைவிற்கு வருவது இஸ்ராயேல் மக்கள். 40 நாட்கள் என்றவுடன் நினைவிற்கு வருவது அவர்களின் 40 ஆண்டு பயணங்கள். காட்டுவிலங்குகள் ஆதாமை நினைவுபடுத்துகின்றன. சாத்தானுக்கும் ஆதாமின் மனைவி ஏவாளுக்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்ததே. வானதூதர்கள் ஆதாம் இறந்தவுடன் அவரை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர் என்பது யூத நம்பிக்கை. ஆக, முதல் இஸ்ரயேலையும், முதல் ஆதாமையும் நினைவுபடுத்துகிறது இந்த நிகழ்வு. முதல் இஸ்ரயேல் யாவே இறைவனுக்கு எதிராக முணுமுணுத்தனர். ஆனால் இரண்டாம் இஸ்ரயேலாகிய இயேசு தன்னையே தாழ்த்திக் கொண்டார். முதல் ஆதாம் கீழ்ப்படியாமையால் பாவத்திற்குக் காரணமானார். ஆனால் இரண்டாம் ஆதாம் கீழ்ப்படிதலால் பாவத்தைக் போக்க வழிசெய்தார். ஆக, இந்த நிகழ்வு எழுதப்படுவதற்குக் காரணம் இயேசு புதிய ஆதாம் என்றும், புதிய இஸ்ராயேல் என்றும் காட்டுவதற்காகத்தான்.

இந்த நற்செய்தி நமக்குச் சொல்வது என்ன?

'பாலை'

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு நிலங்களை வகுக்கின்ற தமிழர் இந்த நான்கின் குணம் அற்ற நிலப்பகுதிக்கு பாலை என்று பெயர் வைத்து ஐந்து நிலங்களாகக் குறிப்பிடுகின்றனர். ஆக, 'ஒன்றும் இல்லாத நிலை'யே 'பாலை'.

நாம ஒருசில நேரங்களில் 'ஒரு மாதிரி இருக்கு!' என்று சொல்வோமே, அதுதான் 'பாலை'. ஒருவித தனிமையுணர்வு, வெறுமை இவையெல்லாம் இந்த உணர்வின் வெளிப்பாடுகள்தாம். தாமஸ் க்ரீன் என்பவர் 'வென் தெ வெல் ரன்ஸ் ட்ரை' (கிணறு வற்றும்போது!) என அழகாக எழுதுகின்றார். எல்லா நேரமும் நம் கிணற்றில் தண்ணீர் இருக்கும் என்றும், நம்மைச் சுற்றி மக்கள் இருந்து நம்மால் பயனடைவார்கள் என்றும், நம் அருகில் வந்து நிற்பார்கள் என்றும் நினைக்க முடியாதுதானே. கிணற்றில் தண்ணீர் இல்லையென்றால் அதைச் சீண்டுவார் எவருமில்லை. இப்படி உள்ளம் பாலைநிலம் போல வறண்டு இருக்கும் போது நாம் நினைத்துக்கொள்ள வேண்டியது இதுதான். என்ன? அங்கே வானதூதர்கள் நமக்குப் பணிவிடை புரிவார்கள். நம்மாலும் நமக்கு உதவியில்லை. நமக்கு அருகில் இருப்பவரும் நம்மைக் கண்டுகொள்வதில்லை. இந்த நேரத்தில் உதவி தருபவர் வானதூதர். இவர் ஒரு ஆளாக இருக்கலாம், நாம் எடுத்திருக்கும் வாழ்க்கை மதிப்பீடாக இருக்கலாம். அந்த நேரத்தில் 'டிங்' என அடிக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜாக இருக்கலாம். ஆதித்யாவில் வரும் காமெடி க்ளிப்பாக இருக்கலாம். ஒரே நொடியில் வாழ்க்கை மறுபடியும் இயல்பு நிலைக்குத் தொடங்கிவிடும். அன்று நண்பி ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்: வாழ்க்கையில நமக்கு வர்ற பிரச்சினையெல்லாம் நாம முடிவெட்டுன முதல் நாள் போலத்தான். முதல் நாள் ரொம்ப வித்தியாசமா இருக்கும். ஆனா, நாலு நாளையில எல்லாம் பழகிடும்.
'பிசாசு'

இன்றைக்கு அலகை, சாத்தான் என்றெல்லாம் எழுதினால் புரியுமா என்று தெரியவில்லை. பேய், பிசாசு நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அதுவும் இன்றைக்கு பேய்கள் குறித்த கருத்தியலில் ஒரு பெரிய புரட்சியை சினிமா ஏற்படுத்தியுள்ளது. என்ன புரட்சி? 'சந்திரமுகி' வரை மற்றவர்களை அழிப்பவராக மட்டுமே இருந்த பேய். 'முனி' 'காஞ்சனா' மற்றும் 'அரண்மணை'யில் கொஞ்சம் ந்யூட்ரலாகிறது - அதாவது கெட்டவர்களை மட்டும் பழிவாங்கும் பேயாக மாறுகிறது. இன்று இன்னும் ஒருபடி போய், 'பிசாசு', 'டார்லிங்' என நல்லது செய்யும் பேயாக, காப்பாற்றும் பேயாக, ஏன் காதலிக்கின்ற பேயாக மாறிவிட்டது. பேயைப் பத்திச் சொல்லணும்னா, நம்ம எஸ்.ஜே. சூர்யா மாதிரி தான் சொல்லணும் - 'இருக்கு ஆனா இல்ல!'

'என்னை அறிந்தால்' அஜித் குமார் வார்த்தையில சொல்லணும்னா - 'ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப்பக்கம் இருந்தால் பேய். கோட்டுக்கு இந்தப்பக்கம் இருந்தால் வானதூதர்'. இந்தக் கோடு எவ்வளவு மெல்லிசு அப்படிங்கிறதுலதான் சிக்கல் இருக்கு. இந்த இரண்டு பக்கங்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றன. 

'டார்லிங்'ல வர்ற நல்ல பேயாகவும், இயேசுவுக்குப் பணிபுரியும் நல்ல வானதூதராகவும் நாம இருக்கலாமே!



Friday, February 20, 2015

நுகம்

வேடிக்கையான கதை ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ஏழைக்குடியானவன் தன் பண்ணையாரின் தோட்டத்தில் விறகு பொறுக்கச் செல்கின்றான். தனக்குரிய வேலையை முடித்துவிட்டு, விறகுகளும் பொறுக்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். விறகுக்கட்டு அழுத்திக் கொண்டே வருகிறது. விறகுக்கட்டையின் சுமையோடு அவன் தள்ளாடவும் செய்கிறான். சற்று நேரத்தில் அவன் பின்னாலயே ஒரு டிராக்டர் வரும் சப்தம். சற்றே திரும்பிப் பார்க்க அது தன் பண்ணையாரின் டிராக்டர் என்றதும் சந்தோஷம். தன்னையும் அதில் ஏற்றுக்கொள்ளுமாறு பண்ணையாரிடம் கேட்கின்றார். பண்ணையாரும் அவனை ஏற்றிக்கொள்கின்றார். சற்று தூரம் போனதும் பண்ணையார் திரும்பிப் பார்க்க, இவன் விறகுக்கட்டைத் தலையில் வைத்தவாறே நின்று கொண்டு பயணம் செய்வதைப் பார்க்கின்றார். 'ஏம்ப்பா! அதைக் கொஞ்சம் கீழே இறக்கி வைச்சுட்டு சுகமா வரலாம்ல!' என்கிறார். 'இல்லயா! எனக்கு நீங்க டிராக்டர்ல இடம் கொடுத்ததே சந்தோஷம். என் சுமை என்னோட போகட்டும்! இதையும் இறக்கி வச்சி நான் உங்களுக்குக் கஷ்டம் கொடுக்க வேணாம்!' என்று பதில் சொல்கிறான்.

'உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு...' (எசாயா 58:9)

நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியே நாளைய முதல் வாசகமும். நேற்றைய வாசகத்திலும் 'நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ... ... எவ்வகை நுகத்தையும் உடைப்பதன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு' (எசாயா 58:6) என்று நாம் வாசித்தோம்.

இந்த ஏழைக்குடியானவனைப் போல வாழ்க்கை என்ற டிராக்டர் பயணத்தில் நாம் இறக்கி வைக்காமல் சுமந்து கொண்டு வரும் சுமைகள் நிறையவே இருக்கின்றன.

'நுகம்!'

இந்த வார்த்தை உழவு உலகின் வார்த்தை. ஏர் பிடித்து உழும்போது ஏரை மாடுகளோடு இணைக்கும் குறுக்குக் கம்பும், மாட்டு வண்டியின் வண்டிப்பகுதியை மாடுகளின் மேல், அல்லது ஒற்றை மாட்டின் மேல் இணைக்கும் குறுக்குக் கம்பும் தான் நுகம்.

நுகம் ஒரு மரக்கட்டை. மாடுகளையும் ஏரையும், மாடுகளையும் வண்டியையும் பிணைக்கும் ஒரு இணைப்புக் கோடு. மாடுகளுக்கும், வண்டிக்கும் தொடர்பை ஏற்படுத்தக் கூடியது நுகம் தான். சமஸ்கிருத வார்த்தையான 'யோகா'விற்கும் 'நுகம்' என்றே பொருள். அதாவது, யோகா தான் நம் உடலில் உள்ள ஆன்மாவையும், உடலுக்கு வெளியே இருக்கும் பெரிய ஆன்மாவான 'பிரம்மாவையும்' இணைக்கிறது.

இந்த மாடுகள் என்ன நினைக்குமாம்? அன்றாடம் நுகத்தை தங்கள் கழுத்தில் வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டு, இந்த நுகங்களும் தங்களின் கழுத்தின் ஒரு பகுதி போல என்று நினைக்குமாம்! (மாடு நினைக்கிறது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்காதீங்க!) அண்மையில் டிவியில் நாய்க்கான உணவு விளம்பரம் பார்த்தேன். அந்த விளம்பரத்தின் இறுதியில் - 'இன்னும் மேம்படுத்தப்பட்ட சுவையோடு!' என்று போட்டார்கள். எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்: 'மேம்படுத்தப்பட்ட சுவைன்னு யார் டேஸ்ட் பண்ணியிருப்பா?' - அத மாதிரிதான் இதுவும்! சரியா?

மாடுகளை எஜமானன் அல்லது அதன் உரிமையாளன் அடிமைப்படுத்தித் தன் வேலைக்குப் பயன்படுத்தும் ஒரு உபகரணமே நுகம். ஆக, நுகம் என்பது அடிமைத்தனத்தின் அடையாளம். செதேக்கிய அரசன் காலத்தில் பாபிலோனியா அடிமைப்படுத்தப்படும் என்பதை எரேமியா இறைவாக்கினர் கழுத்தில் நுகத்தைச் சுமந்து கொண்டு இறைவாக்கு உரைக்கும் நிகழ்வை நாம் அறிவோம் (காண்க. எரேமியா 27).

நுகம் இணைக்கிறது அப்படின்னு சொல்றோம்! பின் எப்படி இது அடிமைத்தனம் ஆகலாம்?

இதுதான் இன்றைய சிந்தனை.

மனிதர்கள் தங்களிலே நிறைவு இல்லாதவர்கள். ஏதாவது ஒன்றோடு அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டிருத்தலில் தான் தங்களின் நிறைவை அவர்கள் காண்கிறார்கள். நம் உள்ளத்தில் எப்போதும் ஒரு அநாதை உணர்வும், பாதுகாப்பற்ற உணர்வும் நீங்காமல் நிலைகொண்டுள்ளது. அதனால் தான் நாம் மற்றவர்களைத் தேடுகிறோம். மற்றவைகளோடு நம்மையே இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

தாயின் கருவறையில் நம்மைத் தாயோடு இணைக்கும் தொப்புள் கொடியும் ஒரு நுகம் தான். அதாவது, அது நம்மைத் தாயோடு இணைக்கிறது. ஆனால், அந்த நுகம் இருந்து கொண்டே இருந்தால் நல்லா இருக்குமா? சரியான நேரத்தில் தொப்புள் கொடி அறுக்கப்படவில்லையென்றால் அது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தாக மாறிவிடுகின்றது. இந்த இணைப்பு அறுந்து வெளியே வரும்போது நாம் முதல் பாதுகாப்பற்ற உணர்வை அனுபவிக்கின்றோம். இந்த உணர்வின் வெளிப்பாடே கண்ணீர். இந்த உலகிற்குப் பயத்தோடே நாம் வெளியே வருவதால் தான் நாம் நம் கைகளைக் கூடி இறுக்க மூடிக்கொண்டு பிறக்கின்றோம். (இது ஒரு அதிசயம் தான்! ஏனெனில் கையை விரித்துக்கொண்டு பிறந்தால் நம் பிஞ்சு நகம் நம் பிறப்பின் குழாயைச் சேதப்படுத்தும் வாய்ப்பும் உண்டு!) பிறந்தபின் கைகளை விரிக்கும் நாம் எதையாவது பற்றிக்கொள்ளவே விரும்புகிறோம் - படிப்பு, பெயர், பணம், பொருள், புகழ், பக்தி, உறவு - ஒன்றை விட்டு மற்றொன்றை நாம் பிடித்து அவற்றோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். அப்படி இருக்கும் இணைப்பு காலப்போக்கில் அடிமைத்தனமாகவும் மாறும்போதுதான் அது ஆபத்தாகி நம் மகிழ்வைக் குலைக்க ஆரம்பிக்கிறது.

எந்த நுகம் நம்மை இணைக்கிறதோ, அதே நுகம் நம்மை அடிமைப்படுத்தவும் செய்கிறது.

இதில் பிரச்சினை என்னன்னா? எந்த நுகம் நம்மை இணைக்கிறது, எந்த நுகம் நம்மை அடிமைப்படுத்துகிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில நேரங்களில் இணைக்கும் நுகத்தை அடிமைத்தனம் எனவும், அடிமைத்தனத்தை நல்ல நுகம் என்று கூட நாம் நினைத்துவிடத் தொடங்குகிறோம்.

நுகம் நமக்கு வெளியில் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. நமக்கு உள்ளேயும் இருக்கலாம். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை உணர்வுகள், பயம், சின்னச் சின்ன இன்பங்களின் பின்னால் போகும் நிலையற்ற மனப்பக்குவம் என்று நம் உள்ளுக்குள்ளும் நுகங்கள் இருக்கலாம்.

இந்த நுகங்களை நாம் அடையாளம் காணுதலே அவைகளை அகற்றுவதற்கான முதல் படி.

இப்படி இருக்கும் நுகங்களை நாம் அகற்றிவிட்டால் அதன் பலன் என்ன என்பதை தொடர்ந்து எசாயா எழுதுகின்றார்:

'இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.
ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்.
வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்.
உன் எலும்புகளை வலிமையாக்குவார்.
நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும்,
ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்.'
(எசாயா 58:10ஆ-11)



Thursday, February 19, 2015

நான் விரும்பும் நோன்பு!

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும்
தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்
உடையற்றோரைக் காணும் போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ
நான் விரும்பும் நோன்பு!
(எசாயா 58:7)

நாம் வாசிக்கும் பைபிள் கடவுளின் வார்த்தை என்பது எந்த அளவிற்கு உண்மையோ (!), அதே அளவிற்கு அது ஒரு இலக்கியம் என்பதும் உண்மை.

இரண்டாம் ஏற்பாட்டு எழுத்தாளர்கள் பெரும்பாலும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளையே எடுத்து, இரண்டாம் ஏற்பாட்டு நாயகன் இயேசுவுக்குப் பொருத்தி விடுகின்றனர். ஆக, இயேசு என்ற வரலாற்று நபர் கிறிஸ்து என்ற ஒரு நம்பிக்கை நபராக மாறுவதற்குக் காரணம் இந்த நற்செய்தியாளர்களும், மற்ற நூல்களை எழுதிய இயேசுவின் சீடர்களும் தான். அப்படியென்றால் இயேசு கடவுள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்! இதற்கு பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும்!

நேற்றைய தினம் நாம் 'வாழ்வு', 'சாவு' என்று நமக்கு முன் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பார்த்தோம்.

இரண்டாம் ஏற்பாட்டு நற்செய்தியாளர்கள் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளை அப்படியே திரும்ப எழுதியிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு இரண்டு உதாரணங்கள்:

அ. தொடக்கநூலும் யோவான் நற்செய்தியும்
தொநூ 1:1 - தொடக்கத்தில் கடவுள் ... ... அசைந்தாடிக் கொண்டிருந்தது.
யோவான் 1:1 - தொடக்கத்தில் வாக்கு இருந்தது... ... கடவுளோடு இருந்தார்.

இச 30:20 - அவரே உனது வாழ்வு. அவரே உனது நீடிய வாழ்வு.
யோவான் 1:4 - அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

இச 30:16 - இப்படி இரு...அப்படி இரு...அப்போது நீ வாழ்வாய்.
யோவான் 21:31 - நம்பி அவர் பெயரால் நீங்கள் வாழ்வு பெறுவதற்காகவும் ... ...

ஆ. எசாயாவும் மத்தேயுவும்
எசாயா 58:7 - பசிக்கு உணவு, தங்குவதற்கு இடம், உடையற்றவருக்க உடை,

மத்தேயு 25:31-46 - பசியாய் இருந்தேன் உணவு கொடுத்தீர்கள். ஆடையின்றி இருந்தேன். நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள். அன்னியனாக இருந்தேன். என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

இரண்டாம் ஏற்பாட்டு நற்செய்தியாளர்கள் அடிப்படையில் தங்கள் விவிலியமான எபிரேய விவிலியத்தை நன்றாக அறிந்தவர்கள். ஆகையால் தான் அவர்கள் அவற்றோடு இயேசுவையும், அவரின் போதனைகளையும் இணைக்கின்றனர்.

ஆகவே, விவிலியம் படிக்கும் போது நாம் அது ஒரு மனித இலக்கியம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எல்லாமே பழசோட ரீமேக்கிங் அப்படின்னா, இறுதித் தீர்ப்பு இருக்காதா, நம்மள வலப்பக்கம், இடப்பக்கம் பிரிக்க மாட்டாங்களா அப்படியெல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா, இதெல்லாம் இல்லன்னாலும் நாம தான் 'இதை நம்புகிறேன்!' அப்படின்னு சொல்லிட்டோம்ல. அதனால, அதை நம்பிக்கையாகவே வைத்துக்கொள்வோம்.

சரி. இன்றைய சிந்தனைக்கு வருவோம்.

'நோன்பு'

இதைப் புரிந்து கொள்ளப் பயன்படும் இன்னொரு வார்த்தை 'விரதம்'. 'விரதம்' என்னும் சொல்லின் மூலம் 'வ்ரதா' என்னும் சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம், 'ஆன்மீக வாக்குறுதி'. என் நண்பர் ஒருவரின் பெயர் வரன் வரதன். இன்றுதான் அவரது பெயரின் இரண்டாம் பகுதி புரிகிறது - 'ஆன்மீக வாக்குறுதியின் வரம்' அந்தப் பெயரின் பொருளாக இருக்க முடியும். 'வ்ரதா' என்பதை இன்னும் தோண்டிப் பார்த்தால் அதன் மூலம் 'வ்ர்ன்' என்னும் மூன்று எழுத்துகள். இதன் பொருள் - நான் தெரிவு செய்கிறேன். திருமண வரம் அல்லது வரன் என்பதும் இதிலிருந்துதான் வருகிறது. (அப்படின்னா நம்ம நண்பரோட பெயர் ஒரே பொருளைக் கொண்ட அடுத்தடுத்த இரண்டு வார்த்தைகள் தாம் போல. அவரிடமே சீக்கிரம் கேட்டு விடுவோம்!)

விரதம் என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சடங்கை தன்னார்வமாக, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குச் செய்வது. இதைச் செய்யக் காரணம் இப்படிச் செய்வதன் வழியாக ஒருவரின் இஷ்ட தெய்வத்தைத் திருப்திப்படுத்தி, அவரிடமிருந்து விரதமிருப்பவர் தான் வேண்டுவதைப் பெற்றுக்கொள்வது.

நம் இந்தியப் புராணங்களில் கூட 'காயிக வ்ரதா' (உடல் சார்ந்தது), 'வாச்சிக வ்ரதா' (வார்த்தை சார்ந்தது) மற்றும 'மானச வ்ரதா' (மனம் சார்ந்தது) என்று விரதங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

விரதத்தில் முக்கியம் தூய்மை. அதாவது, எந்த உணவும் உள்செல்லாமல் நாம் நம்மில் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதுதான் விரதம்.

முதல் ஏற்பாட்டு எசாயா கடவுளுக்கு இந்த விரதம் பிடிக்கவில்லை என எழுதுகிறார். 'நீ உன்னையே பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதில் உன் அருகில் இருப்பவரைப் பார்! அதுதான் நான் விரும்பும் விரதம்' என்கிறார் அவர்.

இதை வரலாற்றுப் பிண்ணனியோடு புரிந்து கொள்வோம். எசாயா 58 எழுதப்பட்ட ஆண்டு பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின். அடிமைத்தனத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல் தெருக்களில் அலைந்து திரிகின்றனர். இவர்களுக்கு யார் உணவும், உடையும், இடமும் கொடுக்க வேண்டும்? ஏற்கனவே இவைகளையெல்லாம் வைத்திருக்கும் எருசலேம் வாசிகள் தான்! 'நீ குடுன்னா' யாராவது சும்மா குடுப்பாங்களா? இல்லை. சாமி கண்ணக்குத்தும், ரத்தம் கக்கிச் சாவ! அப்படின்னு பயமுறுத்துனாதான் குடுப்பாங்க. ஆகையால்தான் ஒரு சமூக மாற்றத்திற்கான விதையை விதைக்க எசாயா 'கடவுளைப்' பயன்படுத்திக்கொள்கின்றார்.

இன்றும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பியவர்கள் போல் தான் நம்ம ஊரும், நம்ம உலகமும் இருக்கின்றது. நாம் நோன்பு இருப்பது நமக்குப் பயன்தர வேண்டும், கேட்டது கிடைக்க வேண்டும் என்று மட்டும் இல்லாமல் தேவையில் இருக்கும் நம் சகோதர, சகோதரியைப் பார்த்து 'என்னப்பா நல்லா இருக்கிறியா?' என்று கேட்டாலே தவக்காலம் அருளின் காலம் தான்.



உன் கையை நீட்டி

'வாழ்வையும், சாவையும் உனக்கு முன்பாக வைக்கிறேன்!' (இச 30:15)

'உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும், சாபத்தையும் வைக்கிறேன்' (இச 30:19)

'உனக்கு முன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார். உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்!' (சீஞா 15:16)

நாளைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில் வரும் 'வாழ்வு, சாவு' என்ற வார்த்தைகள் மேற்காணும் மூன்று இடங்களில் விவிலியத்தில் வருகின்றன.

நேற்று நாம் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம். 'உங்கள் தந்தை' என்ற இரண்டு வார்த்தைகளை நாம் சிந்தித்தோம். கடவுளை நம் தந்தை என அழைப்பதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன:

அ. உருவகம். விவிலியத்தில் உள்ள உருவகங்களை நாம் பயன்படுத்தும்போதும், மற்றவர்களுக்குச் சொல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லா உருவகங்களும் எல்லாருக்கும் பொதுவானவையாக்க முடியாது. எடுத்துக்காட்டாக, என் அப்பா ஒரு குடிகாரர் என வைத்துக்கொள்வோம். தினமும் குடித்துவிட்டு வந்து என் அம்மாவையும், என்னையும் அடித்து, எந்தவொரு வேலைக்கும் சொல்லாமல், என் குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல், கண்ட இடங்களில் கடன் வாங்கிக்கொண்டு, வம்பை இழுத்துக்கொண்டு இருக்கிறார் எனவும் வைத்துக்கொள்வோம். இப்போது யாராவது ஒருவர் கடவுள் 'உன் தந்தை' என்று என்னிடம் சொன்னால் உடனடியாக என் மனது 'என் தந்தையைத்தான்' நினைத்து, அதோடு கடவுளை ஒப்பிட்டுப் பார்த்கத் தொடங்கும். ஆக, கடவுள் என் தந்தை என்பது கடவுளைக்குறித்த எதிர்மறை எண்ணத்தைக் கூட என்னில் விதைக்கலாம். ஒருவேளை கடவுள் 'உங்கள் தாய்' என்ற உருவகம் எனக்குச் சிறப்பாகப் பொருந்தலாம். ஆகவே, உருவகங்களை மிகக் கவனமாக நாம் உபயோகிக்க வேண்டும்.

ஆ. சுதந்திரம். கடவுள் என் தந்தை என்றால், என் சுதந்திரம் அதில் எந்த அளவு இருக்கிறது? கடவுளே என் வாழ்வின் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாரா? அவரது இஷ்டப்படிதான் எல்லாம் நடக்குமா? எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவையா? நான் என் தந்தை ஆட்டுவிக்கும் ஒரு பொம்மையா? எனது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடமில்லையா? என்றெல்லாம் நாம் கேட்க முடியும்.

இந்த 'ஆ' விற்கு விடையாக வருவதுதான் இன்றைய நம் சிந்தனைப்பகுதி:

'வாழ்வையும், சாவையும் உன் முன் வைக்கிறேன். நீ கைநீட்டி தேர்ந்துகொள்!'

கடவுள் நம் தந்தை நமக்கு 'சாய்ஸ்' கொடுக்கிறார். 'இது' அல்லது 'அது' என்று நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். ஆக, கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில் 'பொறுப்புணர்வோடு கூடிய சுதந்திரம்' இருக்கின்றது. எல்லாம் விதி! என்று சொல்வதற்கு இடமில்லை. மதிக்கும் அங்கே நிறைய இடம் இருக்கிறது.

வாழ்வு என்றால் என்ன?

முதல் ஏற்பாட்டில் வாழ்வு என்பதற்கான அர்த்தம் மூன்று வகைகளில் முன்னேறுகிறது:

அ. கட்டளைகளைக் கடைப்பிடிப்பது. 'தோரா' என்று சொல்லப்படும் முதல் ஐந்து நூல்கள் 'பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதை' வாழ்வு என்று முன்வைக்கின்றன. யாரெல்லாம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் வாழ்வைத் தெரிந்து கொள்கிறார்கள். யாரெல்லாம் கடைப்பிடிக்கவில்லையே அவர்கள் சாவைத் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆ. சமூக நீதி. 'நெவிம்' என்று சொல்லப்படும் இறைவாக்கு நூல்களில் 'சமூக நீதி' என்பது வாழ்வு என முன்னிறுத்தப்படுகிறது. யாரெல்லாம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முயல்கிறார்களோ, யாரெல்லாம் தங்கள் சகோதர, சகோதரிகளை நீதியோடு நடத்துகிறார்களோ அவர்கள் வாழ்வைத் தெரிந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் சாவைத் தெரிந்து கொள்கிறார்கள்.

இ. மாசற்ற கையும், தூய இதயமும். 'கத்துவிம்' எனப்படும் எழுத்து நூல்கள் (திருப்பாடல்கள், யோபு உள்ளிட்டவை) ஒருவரின் தனி மனித நாணயத்தையும், ஒழுக்கத்தையும் வாழ்வின் அளவுகோலாக முன்வைக்கின்றன.

இரண்டாம் ஏற்பாட்டில், இந்த மூன்றையும் தாண்டி இயேசு தன் புதிய கட்டளையின் வழியாக 'வாழ்வு' என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுக்கின்றார்:

'நான் உங்களை அன்பு செய்தது போல, நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்!'

ஆக, அன்பு என்ற ஒன்றையொட்டிய அனைத்தும் வாழ்வு. அதிலிருந்து நீங்கும் அனைத்தும் சாவு.

நம் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து ஒரு சின்ன புன்முறுவல் செய்யும் போது,

'நய்-நய்'னு சொல்லிக்கிட்டிருக்கும் நம்ம குழந்தைக்கு அருகில் அமர்ந்து அது சொல்ல வருவதைக் காதுகொடுத்துக் கேட்கும்போது,

தேவையில் இருக்கும் ஒருவருக்கு நாம் உதவிக்கரம் நீட்டும்போது,

பிறரைப் பற்றி இல்லாத பொல்லாதது பேசாமல் மௌனமாக இருக்கும்போது,

நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளைக் குறித்து 'இது ஏன்?' என்று நாம் கேட்கும்போது,

'நான் வேண்டுவது எதுவும் கிடைக்கவில்லையென்றாலும்' கடவுள் மேல் கோபப்படாமல் 'என் தந்தை' என்று அவரை அழைக்கும் போது,

இப்படி நாம் தினமும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றோம். தொடர்ந்து வாழ்வை மட்டுமே தேர்ந்து கொள்வோம்.


Wednesday, February 18, 2015

உங்கள் தந்தை

நாளை திருநீற்றுப் புதன்.

நெற்றியில் சாம்பல் அணிந்து தவக்காலத்தைத் தொடங்குகிறோம்.

நாற்பது நாளைக்கு அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாது அல்லது அது செய்யணும், இது செய்யணும் அப்படின்னு சில முடிவுகளும் எடுத்திருப்போம்.

நான் ஒவ்வொரு வருடமும் இப்படி எடுக்குற முடிவுகள் விரலைக் கொண்டு ஈ ஓட்டுற மாதிரி விரலுக்கும் பயனில்லாம, ஈயையும் விரட்டாமல் தான் இருக்கும். ஆனாலும் இந்த வருடம் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றை விடலாம் என்று காலையில் இருந்து தோணுது. ஆனா, எதைச் செய்ய, எதை விட என்றுதான் இன்னும் தெரியல. இன்னும் விடியலைல. விடியறுத்துக்குள்ள பாத்துக்குடுவோம்.

ஒவ்வொரு வருடம் திருநீற்றுப் புதன் அன்றும் நாம் திருப்பலியில் வாசிக்கும் நற்செய்திப் பகுதி மத்தேயு 6:2-18. தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல் மற்றும் நோன்பு இருத்தல் பற்றிய இயேசுவின் மலைப்பொழிவு போதனையின் மையப்பகுதி தான் இது. தவக்காலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஏன் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கடமைகளாக இந்த மூன்றும் இருந்தால் சால்பு.

இறைவேண்டலின் வழியாக நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவிலும்,

தர்மம் செய்தலின் வழியாக நமக்கும் பிறருக்கும் உள்ள உறவிலும்,

நோன்பிருத்தல் வழியாக நமக்கும் நமக்குமான உறவிலும் வளர்கிறோம்.

நான் தவக்காலத்தில் என் மனதுக்குள் வைத்துக்கொள்ள நினைத்துக் கொள்ளும் ஒரே சிந்தனை இதுதான்:

'உங்கள் தந்தை!'

இன்று நாம் வாசிக்கும் நற்செய்திப் பகுதியில் இந்த இரண்டு வார்த்தைகளும் ஏழுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1. உங்கள் தந்தை உங்களுக்கு கைம்மாறு அளிப்பார் (6:4)
2. மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி (6:6)
3. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:6)
4. உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (6:8)
5. மன்னியாவிடில் உங்கள் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் (6:15)
6. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும் (6:18)
7. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:18)

மேலும் 'விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தை' என்று 6:9லும், 'உங்கள் விண்ணகத் தந்தை' என்று 6:14லிம் வாசிக்கிறோம். 'விண்ணகத்தில்' அப்படிங்கிற வார்த்தை குறுக்க நிற்கிறதுனால இந்த இரண்டு இடங்களையும் தவிர்த்து விடுவோம்.

இந்த 'உங்கள் தந்தை' யார்?

முதல் ஏற்பாட்டில் யாரும் கடவுளை 'தந்தை' என்று அழைத்ததில்லை. கடவுள் எட்டாதவராகவும், மிக மதிப்பிற்குரியவராகவும் கருதப்பட்டதால் யாரும் கடவுளை அப்படி அழைக்கவும் துணியவில்லை. ஒரு சில இடங்களில் கடவுள் இஸ்ராயேல் மக்களின் தந்தையாக தன்னையே உருவகப்படுத்துகின்றார். உதாரணத்திற்கு, 'தந்தை தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பது போல உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்' (இச 8:5). இந்த இடத்தில் கூட கடவுள் தன்னை 'உடல்ரீதியான' தந்தையாக அல்லாமல், 'மீட்புரீதியான' தந்தையாகவே தன்னை முன்னிறுத்துகின்றார்.

இரண்டாம் ஏற்பாட்டில் கடவுளுக்கு தந்தை என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் சொல்லாடலை அதிகம் பயன்படுத்துபவர் யோவான் நற்செய்தியாளர் (109 முறை). மத்தேயு நற்செய்தியாளர் மொத்தம் 44 முறை பயன்படுத்துகிறார். இவற்றில் 21 இடங்களில் கடவுளை இயேசு தன் சீடர்களுக்கும், கடவுளுக்குமான உறவில் 'உங்கள் தந்தை' என முன்வைக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் கடவுளை சீடர்கள் மட்டும் தான் 'தந்தை' என்று அழைக்க முடியும்.

கடவுள் எல்லா மனிதர்களுக்கும் தந்தை என்றாலும், இந்த 'தந்தைக்குரிய' நிலையை அவர் எல்லாருக்கும் தருவதில்லை. 'மகளுக்குரிய' அல்லது 'மகனுக்குரிய' நிலையில் யார் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே கடவுளை 'தந்தை' என அழைக்க முடியும்.

முதல் ஏற்பாட்டில் தூரமாய் ஒளிந்திருந்த கடவுள் இரண்டாம் ஏற்பாட்டில் தொட்டு 'அப்பா' என்று அழைக்கக் கூடிய தூரத்திற்கு நெருங்கி வருகின்றார்.

இந்தத் தவக்காலத்தில் நமக்கிருக்க வேண்டிய (அட்லீஸ்ட் எனக்கு இருக்க வேண்டிய!) நம்பிக்கை இதுதான்: 'உங்கள் தந்தை' உன்னோடு இருக்கிறார்!

சின்ன வயதுல குழந்தை தன் தந்தையைப் போல இந்த உலகத்தில் வீரன் யாருமேயில்லை என்று நினைக்குமாம். தன் தந்தையை மட்டும் அது ஹீரோவாகப் பார்க்குமாம்.

அந்தக் குழந்தை மனது இன்று நமக்கு இருந்தால் போதும். இன்று நம்மை அலைக்கழிக்கும் கவலை. மனத்துயரம், வெறுமை, நாளை என்ன நடக்கும் என்ற படபடப்பு, அடுத்த வருஷம் என்ன செய்யலாம் என்ற வெற்று மன ஓட்டம் எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அடிக்கடி 'நம் தந்தை' இருக்கிறார் என்பதை மறந்தவிடுவதுதான்.
இந்த ஒரு எண்ணம் மட்டும் நமக்கு ஆழ்மனதில் பதிந்துவிட்டால் போதும். வெற்றியோ, தோல்வியோ, வறுமையோ, செல்வமோ, துன்பமோ, இன்பமோ எல்லாம் ஒன்றுபோலத் தெரிய ஆரம்பிக்கும்.

இந்த உலகில் யாரும் நம்மைப் பார்க்கவில்லையென்றாலும், நாம் செய்வதைப் பாராட்டவில்லையென்றாலும், நம் செயல்கள். சொற்கள் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் மனதில் கலக்கம் தேவையில்லை.

ஏனெனில், உங்கள் தந்தை உங்களோடு!

இந்தத் தவக்காலம் உங்களுக்கு அருளின் காலமாக அமையட்டும்!



Tuesday, February 17, 2015

கடவுளின் கண்ணீர்

மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்.
அவரது உள்ளம் துயரமடைந்தது.
(தொடக்கநூல் 6:6)

இந்த வசனத்தில் என்னவொரு சோகம் பாருங்க!

'மனம்' என்று முதலில் பயன்படுத்தும் வார்த்தையை, தொடர்ந்து 'உள்ளம்' என்றும், 'வருத்தம்' என்பதை, மீண்டும் 'துயரம்' என்று சொல்வதன் வழியாகவும் இந்தப் பகுதியை எழுதியவர் கடவுளின் உள்ளக்கிடக்கையை ஆழமாகப் பதிவு செய்கின்றார்.

கடவுளின் இந்தத் துயரத்திற்குக் காரணங்கள் இரண்டு:

அ. காயின் சிந்திய ஆபேலின் இரத்தம் (தொநூ 4:1-12)
ஆ. மனிதர்கள் தெய்வப்புதல்வர்களோடு (அரக்கர்களோடு) திருமண உறவு வைத்துக் கொண்டது (தொநூ 6:1-4)

ஆக, வன்முறை மற்றும் கூடாஒழுக்கம் கடவுளின் பார்வையில் தீயதாகப்படுகின்றது.

நம் சமூத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு 'ரோல்' உண்டு. ஒரு சில நேரங்களில் ஒரே நபர் பல 'ரோல்களையும்' கொண்டிருக்கின்றோம்: வீட்டில் மகள், பள்ளியில் மாணவி, அலுவலகத்தில் ஊழியர், பேருந்தில் பயணி எனச் சொல்லலாம். ஒரே நபர் பல 'ரோல்களில்' செயல்படும்போது அதுவே அவருக்கு மனஅழுத்தமாகவும் மாறிவிடுவதுண்டு. மற்றொரு பக்கம் 'ரோல்'-பிறழ்வு - அதாவது. தான் மேற்கொள்ளும் 'ரோலுக்கு' ஏற்றவாறு செயல்படாமல் இருப்பது, அல்லது பிறழ்வுபட்டுச் செயல்படுவது.

இப்படியாக அன்றாடம் மனிதர்கள் செய்யும் பல்வேறு செயல்பாடுகள் தாம் சமூகத்தை முன்னேற்றிச் செல்கின்றது.

இந்தச் சமூகம் எப்படி முன்னேறுகிறது என்று பார்க்கும் போது மூன்று பேரின் கூற்றுக்களை நாம் கருத்தில் கொள்ளலாம்:

அ. எமில் டெர்க்கைம் - இவரைப் பொறுத்தவரையில் சமூகம் ஒரு உடல். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு செயல்பாட்டைச் செய்து உடலின் இயக்கத்தைச் சீராக வைத்திருப்பது போல சமூகத்தின் ஒவ்வொருவரும் தத்தம் 'ரோலை' சரியாக செய்வதன் வழியாக ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகின்றனர். இது ஒருவேளை இவருக்கு தூய பவுலடியாரின் கடிதத்தின் உந்துதலாகக் கூட இருக்கலாம். இதன் பெயர் 'ஆர்கானிக் மாடல்'.

ஆ. காரல் மார்க்ஸ் - சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் 'டென்ஷன்' - இருப்பவருக்கும், இல்லாதவருக்கும் இடையேயான டென்ஷன்தான் சமூகத்தின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. சமூகத்தில் இரண்டு பாகங்கள் உண்டு: ஒன்று அடிப்பாகம் (பேஸ் ஸ்டரக்சர்) - பொருளாதாரம். மற்றொன்று மேற்பாகம் (சூப்பர் ஸ்டரக்சர்) - மதம், கலை, படிப்பு, பயணம், பொழுதுபோக்கு எல்லாம். ஒருவரின் பொருளாதாரத் தேவைகள் முழுமையடைந்தால் தான் அவர் கடவுளைப் பற்றியோ, கலை பற்றியோ, கவிதை பற்றியோ சிந்திக்க முடியும். மேலும் முதலாளி, தொழிலாளி என்ற இரண்டு பேருக்குமான டென்ஷன் தான் சமூகத்தை மாற்றிக் கொண்டே போகிறது. இதன் பெயர் 'கான்ஃப்ளிக்ட் மாடல்'.

இ. மேக்ஸ் வேபர் - ஏறக்குறைய முதல் மாடல் போலத்தான். ஆனால், ஒருவர் மற்றவரோடு ஒருங்கிணைந்து நடப்பது ஏதோ மெக்கானிக்காக இல்லாமல் முழு மனதோடு நடப்பது. இதன் பெயர் 'சிம்பாலிக் இன்டராக்சனிசம் மாடல்'.

கடவுள் படைத்த இந்த உலகத்தில் வாழும் மனித சமூகம் இப்படித்தான் ஒரு கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்குக் கடந்து செல்கிறது.

காயின் ஆபேலின் மேல் வன்முறையை உபயோகிக்கும் போதும், மண்ணுலகினர் தெய்வப்புதல்வர்களோடு கூடாஒழுக்கம் கொள்ளும்போதும் இந்த 'ஒர்க்கிங் மாடலில்' பிரச்சினை வருகின்றது. அங்கே சமூகம் முன்னேறுவதற்குப் பதில் பின்னடைவு பெறுகிறது.

எகிப்தின் மின்யாவுக்கு அருகில் எல்-ஆவூர் என்ற கிராமத்தில் செபம் செய்து கொண்டிருந்த 21 பேரை பிணைக்கைதிகளாக எடுத்துச் சென்றவர்களை, திரிபோலியில் ஒரு கடற்கரையில் வரிசையாக மண்டியிடச் செய்து தலைகளை வெட்டிப் படுகொலை செய்தனர் ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஸ்டேட் குழுவினர். ஒன்று, இரண்டு என அரங்கேறிக்கொண்டிருந்து இன்று பத்து, இருபது என மாறிவிட்டது.

தான் சிந்திய ஒருவனின் இரத்தித்திற்கே காயின் கொடுமையான தண்டனை அனுபவிக்க நேர்ந்தது என்றால், இவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு என்ன விலை கொடுப்பார்கள்?

அப்படியென்ன தங்கள் மதத்தின் மேல் இப்படி ஒரு வெறி? ஒரு மனிதனை சமைத்துப் பதப்பத்துவதால்தான் அதற்கு 'சமயம்' என்று பெயர் வந்தது. அதுவே அவனுக்கு மதம் பிடிக்கச் செய்வதால் தான் அதை மதம் என்றும் அழைக்கின்றோம்.

'உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது' (யோவான் 16:2) என்று இயேசு தன் சீடர்களைப் பார்த்து இறைவாக்காகச் சொன்னது இன்று நிறைவேறுகிறது போல!

ஆயுதம் ஏந்தி நிற்கும் ஒரு மிருகத்தின் முன்னால் நிராயுதபாணியாய் முழந்தாள்படியிட்டு நின்ற அந்த 21 பேரைப் பார்க்கும் போது கண்கள் கசிந்துவிட்டன. அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களின் கண்ணீருக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? மனைவியருக்கு? பிள்ளைகளுக்கு? நண்பர்களுக்கு? இறந்தவர்களின் உள்ளங்களில் எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? மானிடருக்கு இறப்பே பெரிய சாபம். அதிலும் இந்தப் படுகொலை. பாவம் இந்த அப்பாவிகள்!

வன்முறையின் குழந்தை வன்முறைதான்! தீவிரவாதத்தின் பிள்ளை தீவிரவாதம்தான்!

நம்மை உருவாக்கியதற்காகக் கடவுள் இன்றும் அழத்தான் செய்கிறார்!


Monday, February 16, 2015

கல்ச்சர் மிக முக்கியம் அமைச்சரே!

'நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ, கிரேக்கருக்கோ, கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்...நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.' (1கொரிந்தியர் 10:31-11:1)

நீங்க என்னைக்காவது மெக்டொனால்ட்ஸ்ல அல்லது கேஎப்சில அல்லது மேரி ப்ரவுன்ல சாப்பிட்டுருக்கீங்களா? அடுத்தமுறை சாப்பிடப் போன உங்களையே நீங்க என்ன செய்றீங்கனு அப்சர்வ் பண்ணிப் பாருங்க.

நாமாகவே கதவைத் திறப்போம். பெரும்பாலும் ஏசி வசதியோடு இருப்பதால் கண்ணாடிக் கதவுகள் மூடித்தான் இருக்கும் (ரயில்நிலையம், விமானநிலையம் தவிர!). உள்ளே போவோம். வரிசையில் நிற்போம். வரிசையில் இருக்கும் போதே மேலே எழுதியிருக்கும் மெனு கார்டில் ஒன்றை மனதுக்குள் செலக்ட் செய்வோம். நம் முறை வந்ததும், தடுப்பிற்கு அந்தப்பக்கம் இருக்கும் பையனிடம் அல்லது பெண்ணிடம் நம் ஆர்டரைச் சொல்லுவோம். கரன்சியை எடுத்து நீட்டுவோம் (ஏன்னா! காசுக்கே இங்க மெனு இல்ல!) அல்லது கார்டை எடுத்து நீட்டுவோம். பின் நம்பரை அடிப்போம். பில்லை வாங்குவோம். நமக்கான டிரே ரெடியானவுடன் அதை எடுத்துக்கொண்டு வரிசையில் நிற்பவர்களை இடிக்காமல் அப்படியே ரெண்டு கையிலயும் தூக்கிக் கொண்டு ஏதாவது காலியிடம் இருக்கிறதா என்று தேடுவோம். கிடைத்த இடத்தில் அமர்ந்து அந்த டிரேயில் வைக்கப்பட்டிருக்கும் அட்வர்டிஸ்மண்ட் பேப்பரைப் படித்துக் கொண்டே சாப்பிடுவோம் (தனியாகச் சென்றால்!). பின் நாம் சாப்பிட்ட இடத்தை நாமே துடைத்துவிட்டு குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறது என்று பார்த்து நாமே குப்பையைக் கொட்டிவிட்டு, குப்பைடித்தொட்டிக்கு அருகில் டிரேயை வைத்துவிட்டு நாமே கதவைத் திறந்து வெளியே வந்துவிடுவோம். (இப்ப நம்ம ஊர் மேரி ப்ரவுன்ல ஒரு ஹாரன் வச்சிருக்காங்க. சாப்பாடு நல்லா இருந்துச்சுனு நினைச்சா அதை ரெண்டு தடவை அடிச்சிட்டு வரணுமாம்! இதைப் பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம்!)

இந்த நடைமுறைதான் உலகத்தின் எந்த ஃபாஸ்ட்புட் செண்டருக்குப் போனாலும் நாம கடைப்பிடிக்க வேண்டியது. இதை நமக்கு யார் சொல்லிக்கொடுத்தா? யாரும் சொல்லிக்கொடுக்கல. ஆனா, உலகம் ஃபுல்லா எப்படி இந்த நடைமுறை வந்தது?

ஃபோன் பண்ணி ஆர்டர் கொடுப்பதும், டேபிளில் உட்கார்ந்து கொண்டு, 'தம்பி, ஒரு இலையப் போடுப்பா!' என்று கேட்பதோ, சர்வரிடம் என்ன இருக்கிறது என்று கேட்பதும், சாப்பிட்டு முடிந்தவுடன் கல்லாப்பெட்டியில் உள்ளவரிடம் பில்லைக் கொடுத்துவிட்டு, சீரகம் சோம்பு தேடிக்கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு, குச்சியை எடுத்துக்கொண்டு பல்லைக் குத்திக் கொண்டே வெளியே வருவதும் நாம் மேக்டொனல்ட்ஸில் செய்வதில்லை. ஏன்?

இந்த ஃபாஸ்ட்புட் கல்ச்சர் (fastfood culture) எப்படி எல்லாராலும் சுலபமா கற்றுக்கொள்ள முடிகிறது என்பதைப் பற்றி எம்.பி.ஏவின் ஆர்கனைசேஷனில் பிஹேவியரில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதர்கள் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு சில கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலாச்சாராங்களை நமக்கு மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அல்லது நாமாகவே மற்றவர்களை இமிடேட் செய்து கற்றுக்கொள்கிறோம்.

'கல்ச்சர்' (கலாச்சாரம்) - ஆனால் நம் பதிவில் 'கல்ச்சர்' என்றே வைத்துக்கொள்வோம். கல்ச்சர் நம் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தவொரு கல்ச்சருக்கும் இரண்டு பரிமாணங்கள் உண்டு: ஒன்று, வேல்யூ. மற்றொன்று, பிலிஃப். அதாவது, நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நாம் கடினமாக உழைப்பது ஒரு மதிப்பீடு. இந்த மதிப்பீட்டிற்கு ஊன்றுகோலாக இருக்கும் நம்பிக்கை என்னவென்றால், 'பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், அல்லது நலமாக இருக்கலாம், அல்லது அந்தஸ்தோடு இருக்கலாம்'. ஆக, மதிப்பீடும், நம்பிக்கையும் ஒரு கலாச்சாரத்தில் இணைந்தே செல்கின்றன.

கலாச்சாரம் என்று சொல்லும் போது அங்கே நாம் மூன்று வகையில் செயல்படுகின்றோம்: ஒன்று, எத்னோசென்ட்ரிசம் (ethnocentrism) - அதாவது என் கல்ச்சர் தான் சிறந்தது என்று நினைத்துக்கொண்டு மற்ற கல்ச்சர்களை மதிக்காமல் இருப்பது. இரண்டு, செனோசென்ரிசம் (xenocentrism) - அதாவது அடுத்தவரின் கல்ச்சர் தான் சிறந்தது என நினைத்து தன் கல்ச்சரைத் தரம் தாழ்த்துவது. மூன்று, கல்ச்சுரல் ரெலடிவிசம் (cultural relativism) - இருக்கின்ற இடத்தில் உள்ள கல்ச்சரை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதை மதித்துப் பின்பற்றுவது.

இதை அப்படியே மெக்டொனால்ட்ஸில் ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படிச் சொல்லலாம்: முதல் குழுவினர் என்ன செய்வார்கள்? 'என்னப்பா ஒரே வரிசையா இருக்கு! இது என்ன ஓட்டல்! வந்தமா ஆர்டர் பண்ணோமா, சாப்பிட்டோமா, பில் கட்டுனுமானு இல்லாம!' அப்படிப்பாங்க. இரண்டாம் குழுவினர், 'அப்பப்பா என்ன ஒரு அழகான ஏற்பாடு! இப்படியில இருக்கணும். நம்ம வசந்த பவனையும், சரவணபவனையும் பாரு! என்ன கூட்டம்! தண்ணியில சுத்தமில்லை! டேபிளை சரியா துடைக்க மாட்டாங்க! டிப்ஸ் கொடுத்தாதான் சர்வரே வருவான்!' என்று புலம்புவார்கள். மூன்றாம் குழுவினர் மெக்டொனால்ட்ஸையும் மதிப்பார்கள், சரவணபவனையும் மதிப்பார்கள். போகின்ற இடத்திற்கு ஏற்றாற்போல தங்களையே மாற்றிக்கொள்வார்கள்.

சரி இந்த பில்ட்அப் எதுக்குனு கேக்குறீங்களா?

இன்றைக்கு நாம் வாசித்த இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கொரிந்து நகரத் திருச்சபையில சந்தித்த கல்ச்சர் பிரச்சினைக்கு அழகான தீர்வு சொல்றார். பிரச்சினை இதுதான். கொரிந்து நகரம் - ஏதன்ஸ்கு அடுத்தபடியாக கலாச்சாரத்தில் வளர்ந்து கிரேக்க நகரம். இங்கேயிருந்து கிறிஸ்தவங்க ஆனவங்களுக்கு, தலையும் புரியல காலும் புரியல. 'நாம கிறிஸ்தவரா ஆயிட்டா நம்மள யூதர்னு சொல்வாங்களா? அல்லது கிரேக்கர்னு சொல்வாங்களா? அல்லது கிறிஸ்தவர்னு சொல்வாங்களா? நாம எந்தக் கல்ச்சரை ஃபாலோ பண்ணுவது? இந்த மூணுல எது பெரியது? யாரு பெரியவங்க?' - இப்படி நிறைய கேள்விகளோட இருக்காங்க.

இது ஒரு சமூகவியல் பிரச்சினை. பவுல் இத ரொம்ப கேர்ஃபுல்லாதான் ஹேண்டில் பண்ணனும். அப்படி இல்லனா இதயத்திற்கு மாவுக்கட்டு போடும் அளவுக்கு கண்டவுங்க கண்ட மாதிரி பேச ஆரம்பிச்சுடுவாங்கள!

எத்னோசென்ட்ரிசமும் வேண்டாம். செனோசென்ரிசமும் வேண்டாம். கல்ச்சுரல் ரெலடிவிசம் போதும்! - இதுதான் பவுலின் பதில்!

'எதைச் செய்தாலும் கடவுளுக்காக செய்றோம்' அப்படின்னு நினைச்சிட்டு, 'அனைவருக்கும் பயன்தருவதை நாடுங்க!' அப்படின்னு முடிக்கிறார்.

கல்ச்சர் மிக முக்கியம் அமைச்சரே!




Sunday, February 15, 2015

நீர் விரும்பினால்

'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்!'

'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!'

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்!'

'ஆனால் அவர் இந்தச் செய்தியை எல்லாரிடமும் சொன்னார்!'

(காண்க மாற்கு 1:40-45)

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று அழைக்கப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா என்னும் மூன்று நற்செய்தியாளர்களும் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவை நாடி நலம் நாடும் நிகழ்வை எழுதுகின்றனர்.

'குணமளிக்கும் நிகழ்வு' பற்றி எழுத சற்று தயக்கமாகவே உள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இசுலாமிய அமைப்பு ஒன்று திரு. உமா சங்கர் அவர்களுக்கு எதிராக சென்னையில் 'குணம் தந்தால் ஒரு கோடி! உயிர் தந்தால் ஒரு கோடி!' என்று சுவரொட்டி ஒன்றை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மிரகிள் ஸ்டோரிஸ்' என்று சொல்லப்படும் 'அற்புதங்கள் அல்லது அறிகுறிகள்' இயேசுவின் வாழ்விலும் அவரது பணியிலும் மிக முக்கியமானதொன்றாக இருக்கிறது. ஒருவர் மற்றவருக்கு நலம் கொடுக்க முடியுமா? நலம் கொடுப்பவர் யார்? மருத்துவரா? போதகரா? கடவுளா? என நாம் எதிர் கேள்விகளையும் எழுப்பலாம். 'நலம் கொடுப்பது' என்பது இயேசு மட்டும் செய்த நிகழ்வு அல்ல. இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த பலரும் நலம் கொடுக்கும் கொடை பெற்றிருந்ததாக வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

கடைசியில் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை தான்!

ஒரு சில செபக்கூட்டங்களின் இறுதியில் போதகர்கள் இத்தனை பேர் இந்த வியாதியிலிருந்து இன்று விடுதலை பெற்றிருக்கிறார்கள். இத்தனை பேரின் உடல் வாதை, உள்ள வாதை ஆறுகின்றது என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவருக்கே அப்படி குணமானதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை நிரூபிக்க முடியுமா என்றும் தெரியவில்லை! இது எப்படி நடக்கிறது என்றும் புரியவில்லை.

ஆக, இந்த மூளை சார்ந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு நாளைய நற்செய்தியை பார்க்க விழைவோம்.

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். லேவியர் நூலின் பரிந்துரைப்படி தொழுநோயாளர்கள் இருக்க வேண்டிய இடம் ஊருக்கு வெளியே. இயேசுவைச் சந்திக்கிறார் என்றால் ஒன்று இயேசு ஊருக்கு வெளியே இருந்திருக்க வேண்டும். அல்லது இயேசுவைச் சுற்றி யாரும் இல்லாத நேரத்தில் இயேசுவை அணுகி வந்திருக்க வேண்டும். இயேசுவின் பணிவாழ்வில் அவர் தனியாக இருந்தது என்னவோ செபிக்கும் வேளையில் மட்டும் தான். எது எப்படியோ, நம்ம நண்பர் இயேசுவைத் தனியாகப் பார்த்துவிட்டார். சந்தித்தும் விட்டார்.

'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்!'

நம் நண்பரின் அப்பீல் கொஞ்சம் யோசிச்க வைக்கிறது. 'என் நோயைக் குணமாக்குங்க!' என்று கேட்டிருக்கலாம். அல்லது, 'என் மேல் இரக்கம் வையும்!' என்று கேட்டிருக்கலாம்.

இரண்டு modal verbs பயன்படுத்துகின்றார் நண்பர்: 'Do you will? or Do you wish to?' 'If you will, you can!'

இறையியலில் தியோடிசி என்று ஒரு ஏரியா உண்டு. அதாவது கடவுளுக்காக வாதிடுவது. அங்கே கடவுளைப் பற்றி வைக்கப்படும் கேள்வி இதுதான்: கடவுள் எல்லாம் வல்லவராயிருந்தால் எதற்காக அவரால் தீமையை அழிக்க முடியவில்லை? கடவுள் நிறைவான அன்பானவராயிருந்தால் எதற்காக தீமையை நமக்குத் தர விரும்புகிறார்? முதல் கேள்வியில் 'கேன்', இரண்டாவது கேள்வியில் 'வில்' அடங்கியுள்ளது.

'விருப்பம்' என்பதற்காக மாற்கு பயன்படுத்தும் 'தெலோ' என்ற சொல் அவருடைய நற்செய்தியில் மூன்று இடங்களில் உள்ளது: ஒன்று, தொழுநோயாளர் இயேசுவிடம் கேட்பது, இரண்டு, ஏரோது நடனமாடிய சலோமியிடம் கேட்பது, மூன்று, இயேசு கெத்சமேனித் தோட்டத்தில் தன் தந்தையிடம் கேட்பது.

இயேசுவின் வார்த்தை தொழுநோயாளர் சொன்ன வார்த்தைகளின் மறு வாக்கிய அமைப்பாக இல்லை. 'நான் விரும்புகிறேன். என்னால் உன்னைக் குணமாக்க முடியும்!' என்று சொல்லாமல், 'விரும்புகிறேன்! குணமாகு!' என்கிறார்.

இயேசுவின் செயலும் இங்கே கவனிக்கத்தக்கது:

பரிவு கொண்டு, கையை நீட்டி, தொட்டு என்று மூன்று வார்த்தைகளில் வர்ணிக்கின்றார் மாற்கு.

உள்ளத்தில் தொடரும் இரக்கம், கை வழியே நீண்டு நம் நண்பரைத் தொடுகிறது.

'கையை நீட்டுதல்' என்பதற்கு விவிலியத்தில் 'தன் வலிமையைக் காட்டுதல்' என்பது பொருள். 'உம்மால் முடியும்' என்ற நம் நண்பரின் வார்த்தையை வெறும் கையை நீட்டி உறுதி செய்கின்றார் இயேசு. மோசே கையை நீட்ட செங்கடல் பிரிகின்றது. யோசுவா கையை நீட்ட போரில் வெற்றி கிடைக்கிறது. இயேசு கையை நீட்ட தொழுநோய் நீங்குகிறது.

'நீ இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே!' என்று நண்பரிடம் சொல்கின்றார் இயேசு. கிரேக்கத்தில் இந்த இடத்தில் கட்டளையைக் காட்டும் 'imperative' பயன்படுத்தப்படவில்லை. மாறாக, subjunctive பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, இந்த சப்ஜங்டிவை வைத்தே வாசகர் சொல்லி விடலாம். நம் நண்பர் இயேசுவின் கட்டளையை மீறப்போகின்றார் என்று.

இந்த இடத்தில் குணமளிக்கும் கூட்டத்தினர் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 'யாரிடமும் சொல்லாதே!' என்று இயேசு கட்டளையிடுகின்றார். ஆனால் இந்தக் கூட்டங்களில் 'சாட்சியம்' என்ற பெயரில் எல்லாரிடமும் சொல்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கடவுள் கூட தன்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார் போல. ஆனா, இன்னைக்கு நாம தான் கடவுளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கடவுள் என்ற கோட்பாடு 'concept', 'institution' என்ற இரண்டில் அடங்கியுள்ளது.  தனிப்பட்ட நம்பிக்கை என்பது கான்செப்ட். ஆனால், நான் சார்ந்திருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை என்பது நிறுவனம். சில நேரங்களில் நிறுவனம் தன் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்காக, 'கான்செப்டில்' கூட மாற்றம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. இன்று ஒரு மதத்திற்கும், மற்ற மதத்திற்கும் சண்டை என்றாலோ, அல்லது ஒரே மதத்திற்குள் இருக்கும் குழுக்களுக்குள் சண்டை என்றாலோ அங்கே 'கான்செப்ட்கள்' மோதிக்கொள்வதில்லை. நிறுவனங்களே மோதிக் கொள்கின்றன.

'வேண்டாம்!' என்று சொன்னாதான் நம்ம ஆட்கள் செய்வாங்க என்பதுமாதிரி, நம்ம நண்பரும் போய் எல்லாரிடமும் சொல்லி விடுகின்றார்.

கடைசியில் வருவதுதான் டுவிஸ்ட்.

அதாவது தொழுநோயாளராய் இருந்த நண்பர் கடைசியில் இயேசுவைத் தொழுநோயாளராக்கிவிட்டார். அதாவது, ஊருக்குள் நுழைய முடியாதபடி செய்துவிட்டார்.

எல்லாருக்கும் தன்னைப் பற்றி தெரிந்தால் நல்லதுதானே. எதற்காக இயேசு இந்த எளிதான பப்ளிசிட்டியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை? எல்லாரும் நலம் பெற்றால் நல்லது தானே! எல்லாருக்கும் அவர் நலம் கொடுத்திருக்கலாமே?

கடவுளைப் போல இந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை!


Saturday, February 14, 2015

வெள்ளை நிறத்தில் ஒரு காதல்

இந்தத் தலைப்பு சில வருடங்களுக்கு முன் நான் படித்து ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் 'காவி நிறத்தில் ஒரு காதல்' என்பதன் தழுவல். தலைப்பு மட்டும் தான்! மேட்டர் சொந்தமானது! சரியா?

நாளை காதலர் தினம்.

வழக்கமாக காதலர் தினத்திற்கு சொல்லப்படும் ஒரு துணுக்கு என்ன தெரியுமா?

'பிப்ரவரி 14 காதலர் தினம் அன்று ரொம்ப ஆட்டம் போடாதீங்க. ஏன்னா இன்னையிலயிருந்து சரியா 10 மாசத்துல குழந்தைகள் தினம் வந்துடும் (நவம்பர் 14)!'

இந்த ஆண்டு வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் இதையொட்டிய துணுக்கு:

'ஜனவரி 14 பொண்ணுங்க பசங்களுக்கு பொங்கல் குடுப்பாங்க.
பிப்ரவரி 14 பொண்ணுங்க அதே பசங்களுக்கு அல்வா கொடுப்பாங்க!'

நாளைக்கு நம்ம ஊருல பார்க், பீச்சுனு நம்ம காவி கட்சிக்காரங்க தாலியோட திரிவாங்க. லவ்வர்ஸை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பார்கள். அல்லது கழுதைக்கும் யாருக்குமாவது திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவர்கள். அவங்களோட ஆர்க்யுமென்ட் என்னன்னா, வலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாம்.

'காதலர் தினம்' வேண்டுமானால் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், காதல் இறக்குமதி இல்லையே. இராமன் சீதையின் மேலிருந்த காதலால் தானே வில்லை முறித்து அவளை மணந்து கொண்டார். காதல் இல்லாமலா திருவள்ளுவர் 'காமத்துப்பால்' என்று தன் திருக்குறளில் பெரிய இடத்தை ஒதுக்கினார்? அல்லது காதல் இல்லாமல் தான் 'அகநானூறு' வந்ததா? நம் மண்ணின் இலக்கியங்கள் மட்டுமல்ல, அனைத்து இலக்கியங்களையும், ஓவியங்களையும், நாடகங்களையும், சமய நூல்களையும் அலங்கரிக்கும் ஒரு வார்த்தை 'காதல்'. பைபிளின் 'இனிமைமிகு பாடலும்' காதலின் உச்சம்.

வெளிநாட்டு தயாரிப்போ, நம்ம மோடி சொல்ற மாதிரி 'மேக் இன் இந்தியா' தயாரிப்போ, நாளை காதலர் தினம். அவ்வளவுதான்!

காதல் அப்படின்னாலே சிலர் முகம் சுளிப்பார்கள். 'ஏன் ஃபாதர் இதப்பத்தியெல்லாம் பாதர் பண்றார்?' என்று கூட கேட்பார்கள். காவிநிறத்தில் காதல் இருக்க முடியுமென்றால், நான் அணியும் வெள்ளை நிறத்திலும் காதல் இருக்க முடியும் என்பதே என் வாதம்.

என் காதலைத் தேடுவதற்கு முன், காதல் பற்றிய சில புரிதல்களைப் பார்க்கலாம்.

காதலைப் பற்றி நமக்கு நேரடியான பாடத்தைத் தருவது சினிமா. இதுவரை வந்திருக்கிற தமிழ் சினிமாக்களை எடுத்துப் பார்த்தால் 99.9 சதவிகம் காதல் பற்றியவைதான்: திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்குப் பின் காதல், இணைந்த காதல், பிரிந்த காதல், நட்பில் தொடங்கி காதலில் கனியும் காதல், காதலில் தொடங்கி நட்பாய் மாறும் காதல், கள்ளக்காதல், நல்ல காதல், ஒருதலைக் காதல், பொருந்தாக் காதல், ஒரு காதல் தோற்றால் மறு காதல், காதலினால் வரும் மோதல், கண்டதும் காதல், காணாமலே காதல், கடிதவழி காதல், அண்ணி மேல் காதல், கொழுந்தன் மேல் காதல், வெளிநாட்டுக் காதல் என ஏறக்குறைய காதலின் எல்லாப் பரிமாணங்களையும் வைத்து விட்டார்கள்.

இந்தச் சினிமா காதலைப் பற்றி நமக்குத் தந்திருக்கும் தவறான புரிதல்கள் மூன்று:

அ. ஐ லவ் யூ. நாம யாரையாவது பார்த்து 'ஐ லவ் யு' அப்படின்னு சொன்னா அது காதல் என்றும், அல்லது காதலர்கள் மட்டும்தான் இந்த 'ஐ லவ் யு' சொல்ல முடியும் என்றும், 'ஐ லவ் யு' சொல்லிவிட்டால் உடனே திருமணம் எனவும் பலர் நினைக்கின்றனர். இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. 'ஐ லவ் யு' சொல்லாமலும் காதல் இருக்கலாம். காதல் இல்லாமல் இருக்கும் இடத்திலும் 'ஐ லவ் யு' சொல்லலாம். நான் இப்பொழுதெல்லாம் யாரிடமும் தொலைபேசி உரையாடலை நிறைவு செய்யும் போது 'லவ் யு' என்றே சொல்லி முடிக்கின்றேன். இது என் அமெரிக்க அம்மாவிடம் நான் கற்றது. அதாவது நாம் ஃபோன் பேசுவதே அன்பின் வெளிப்பாடுதான் என்றாலும் அந்த அன்பை நிறைவாக்கி இரண்டே வார்த்தைகளில் நிறைவு செய்யத்தான் இந்த 'லவ் யு'. இப்படி 'லவ் யு' சொன்னதால் 'அப்புறம் எதுக்கு எனக்கு 'ஐ லவ் யு' சொன்னீங்க?' என்று நான் ஒரு பொண்ணிடம் மாட்டிக் கொண்ட நிகழ்வும் உண்டு.

ஆ. காதல் செய்தால் திருமணம் செய்ய வேண்டும். இது இரண்டாவது மித். அதாவது காதலிக்கும் எல்லாரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நம்ம ஊருல நட்புக்கும் காதலுக்கும் உள்ள கோடு மிகவும் மெல்லியது. அதிலும் ஒரு பையன் மற்றொரு பெண்ணிடம் பேசினால், பழகினால், சிரித்தால், முத்தமிட்டால் அதை இன்னும் நாம் காதல் என்று மட்டும்தான் பார்க்கப் பழகியிருக்கிறோம். இதுல 'சொல்வதெல்லாம் உண்மை' போன்ற டிவி பஞ்சாயத்து நிகழ்வுகளைப் பார்க்கும் போது, 'பழக்கம்' என்ற ஒரு நல்ல உணர்வை 'கள்ளக்காதல்' என்று கொச்சைப்படுத்துகிறார்கள் இந்த பஞ்சாயத்துக்காரர்கள். 'நீ எனிய லவ் பண்றீல! அப்ப என்னயக் கல்யாணம் பண்ணிக்கோ!' என்று ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்விக்கு பெரும்பாலும் மௌனமே பதிலே இருக்கிறது. திருமணத்தில் முடியாத காதல் அனைத்தும் தோல்வி என்றே சொல்லப்படுகிறது இந்தச் சினிமாவில். திருமணத்தில் முடியாமல் வாழ்நாள் முழுவதும் வெற்றியோடு இருக்கும் சக்தியும் காதலுக்கு உண்டு.

இ. காதல் வேறு. காமம் வேறு. என்னைப் பொறுத்தவரையில் காதலும், காமமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. காதல் உயிர் என்றால் காமம் உடல். நாமெல்லாரும் வானதூதர்களோ, தேவதைகளோ அல்லர். நமக்கென்று உடல்கள் இருக்கின்றன. இந்த உடலின் சுரப்பிதான் காதல் என்ற உணர்விற்கே காரணம். ஆக, உடலை அன்பு செய்யாமல் உள்ளத்தை மட்டும் அன்பு செய்வது என்பது இயலாதது. ஆக, காதல் இருந்தால் காமம் இல்லை என்று சொல்வதும், காமம் இருந்தால் அங்கே காதல் இருப்பதில்லை என்று சொல்வதும் பொய்.

சரி! என்னதான் சரியான புரிதல்?

காதலின் மையமாக இருப்பது 'அடுத்தவரின் நலனை விரும்புவது!'. இது எந்த உறவில் இருந்தாலும் அது காதல் தான். ஆக, அம்மா மகனையும், அப்பா மகளையும், சகோதரன், சகோதரியையும், தலைவன் தொண்டனையும், கடவுள் பக்தனையும், பக்தன் கடவுளையும், நண்பன் நண்பியையும், குழந்தை பெற்றோரையும், ஆசிரியர் மாணவரையும் காதலிக்க முடியும் - அதாவது, அடுத்தவரின் நலனை விரும்ப முடியும். ஆக, இந்த நாள் இளைஞர்-இளைஞிகளுக்கான அல்லது பதின்பருவத்தினருக்கான நாள் மட்டுமல்ல. இது காதலர் திருநாள் என்று சொல்வதை விட காதல் திருநாள் என்றே நான் சொல்வேன்.

இப்படிக் காதலை மொத்தமாக 'நலம் விரும்புதல்' அல்லது 'அன்பு' என்று சொன்னாலும், காதலின் அர்த்தம் 'அதையும் தாண்டிப் புனிதமானதாகவே' இருக்கின்றது.

காதல் என்ற உணர்வு தனிநபர் சார்ந்தது. அதை நாம் வெளியடையாளங்களை வைத்துத் தீர்மானிக்க முடிவதில்லை. அந்த உறவின் வெளியே நிற்கும் ஒருவருக்கும் அது புரிவதில்லை.

உங்க முதல் காதல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

எனக்கு நல்லா நினைவிருக்கிறது.

அப்போது எனக்கு வயது பதினென்று. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். சத்திரப்பட்டியில் உள்ள அரசினர் மேனிலைப்பள்ளி. இருபாலர் பள்ளி. பள்ளித் தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்து எங்களுக்கு புதிய சயன்ஸ் டீச்சர். அவங்க பேரு எஸ்தர் கமலா. அவங்க ரெண்டாவது மகள் 'டயானா டாரதி'. டீச்சரும் மகளும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்தவங்க. எல்லாரும் சடையும் ரிப்பனுமாய் வரும்போது இந்த டயானா மட்டும் பாப் கட்டிங்கும், ரீத்துமாய் வந்து நின்றாள். ரொம்ப நீளமும் இல்லாமல், ரொம்பக் குட்டையும் இல்லாமல் பச்சை கலர் ஸ்கர்ட், ஒருநாள் ஸ்டார் நெக், ஒரு நாள் பாய்ஸ் நெக், ஒரு நாள் ரௌன்ட் நெக் என்று வெள்ளை வெளேரென்று சட்டை. அந்தச் சட்டையின் ஓரத்தில் அவளின் உடலைக் காயப்படுத்திவிடக்கூடாது என்று கவனாமாய் இருக்கும் 'லேஸ்'. கொஞ்சம் முடியை முன்னால் விட்டு, சைடு வகிடு எடுத்து தலை சீவி, ஒரு நாள் பட்டையாய், ஒரு நாள் மெல்லிய இழையாய் பொருந்தி நிற்கும் கறுப்பு ரீத். இந்த ரீத்து தலைமுடியைத் தாங்குகிறதா, அல்லது தலைமுடி ரீத்தைத் தாங்குகிறதா என்று பார்ப்பவர்களையே குழப்பி விடுவாள் இந்த டயானா. இரண்டு மாதங்கள் லேட்டாக வந்ததால் என் எல்லா பாட நோட்டுக்களையும் அவளிடம் கொடுக்கச் சொல்லி 'காப்பி பண்ணச்' சொன்னாங்க எங்க பழனியம்மா டீச்சர். அந்த நேரத்தில் உருவான ஒருவிதமான ஈர்ப்பு. இதைக் காதல் என்று சொன்னால் தாஜ்மகால் கூட நம்பாதுதான்! இருந்தாலும் 'லைட் எரிஞ்சி, மணி அடிச்சது' மாதிரி இருந்துச்சு. இன்டர்வெல்லில் மிட்டாய் கொடுப்பது, அவள் பேசினால் மட்டும் போர்டில் பெயரை எழுதாமல் இருப்பது, அவளின் பேனாவிற்கு இங்க் அடைத்துக் கொடுப்பது, அவளின் புத்தகங்களுக்கு ப்ரவுன் ஷீட் போட்டுக் கொடுப்பது என்று என் காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தது. அவளின் ரீத்தை நான் நிறைய முறை தொடவும் முயற்சித்திருக்கிறேன். ஒருவேளை அந்த வயதில் இதுவும் காமம் தான். அவள் சி.எஸ்.ஐ என்பதால் நான் ஆறு மாதங்கள் என் அத்தையோடு அவள் போகும் கோவிலுக்குத் தான் போனேன். ஆறாம் வகுப்பில் லேட்டாய் சேர்ந்தவள், ஏழாம் வகுப்பில் சீக்கிரமாய் டி.சி. வாங்கிட்டு சிங்கப்பூர் போயிட்டா. இன்றும் ராஜபாளையும்-சத்திரப்பட்டி சாலையில் பஸ்சில் செல்லும் போதெல்லாம், வேலாயுதபுரத்தில் இருக்கும் 'அன்பகம்' என்ற அவள் இருந்த வாடகை வீட்டின் பக்கம் கண்கள் செல்லவே செல்கின்றன.

அந்தக் காதலுக்குப் பின் இன்று எத்தனை காதல்கள் வந்தாலும் மனம் அந்த அனைவரிலும் டயானாவைத் தான் பார்க்கிறது.

நாம் மனிதர்களைத் தான் காதல் செய்ய வேண்டும் என்பதல்ல. ராமானுஜத்திற்கு கணிதத்தின் மேல் காதல். ஐன்ஸ்டீனுக்கு இயற்பியின் மேல் காதல், டார்வினுக்கு பூச்சிகளின் மேல் காதல், டாவின்சி ஓவியத்தின் மேல் காதல். மைக்கேலாஞ்சலோவிற்கு சிற்பத்தின் மேல் காதல். ஷேக்ஸ்பியருக்கு நாடகத்தின் மேல் காதல். காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு. அடுத்தவரின் நலனை மட்டும் தேடும் உணர்வு.

ஆதலினால் காதல் செய்வீர்!

வெள்ளை நிறத்தில் ஒரு காதல் - அன்றும், இன்றும், என்றும்!


Thursday, February 12, 2015

சின்னச் சின்ன ஆசைகள்

மூன்றாம் வருடத்தின் முதல் செமஸ்டர் முடிந்து விட்டது.

இரண்டாம் செமஸ்டர் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. இப்பதான் வந்த மாதிரி இருக்கு. இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன. மதுரையில் சிரிப்பும், கண்ணீருமாய் அவனியாபுரம் ஏர்போர்ட்டில் நண்பர்கள் பிரியாவிடை தந்தது இன்னும் கண்முன்னே நிற்கின்றது. 'நல்லா போய்ட்டு சாதிச்சுட்டு வா!' என்று வந்திருந்தவர்கள் சொன்னார்கள். அந்த சாதனையை நோக்கித் தான் போய்க்கொண்டிருக்கிறேனா என்ற கேள்வி என்னுள் இன்று.

கடந்த இரண்டரை ஆண்டுகளையும், கடந்த ஐந்து செமஸ்டர்களையும் வைத்து ஒரு சின்ன ரிவிய்யூ செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன்.

இந்த முறை ஸ்வோட் அனாலிசிஸ் செய்து பார்க்கலாமே என்று நினைத்தேன்.

ஸ்வோட் அனாலிசிஸ் (SWOT analysis) என்பது Strengths, Weaknesses, Opportunities, Threats என்ற நான்கு வார்த்தைகளின் முதல் எழுத்துகள் இணைந்து உருவாகும் வார்த்தை.

நம்முடைய வலிமைகள், பலவீனங்கள், சந்தர்ப்பங்கள், எதிர்ப்புகள் - இந்த மொழிபெயர்ப்பு ஏறக்குறைய ஆங்கில வார்த்தைகளின் நெருக்கம் என நினைக்கிறேன்!

சில நேரங்களில் நம்மைப் பற்றி ஆய்வு செய்து பார்க்கும் போது அது நமக்கு பயமாகவே இருக்கிறது. அதனால் தான் நம்மைப் பற்றி நினைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருக்கிறோம்.

புதிய மேகம், புதிய ஊர், புதிய நபர், புதிய சாலை என்று நான் பயணம் செய்யும் போதெல்லாம் என்னைப் பற்றிய உணர்வு புதியதாக மலர்வதாகவே எனக்குத் தோன்றும்.

புதிய இடத்தில் நாம் ஒரு நிர்வாணம். அந்தப் புதிய இடத்தில் உள்ளவர்களுக்கு நம்மைப் பற்றி எதுவும் தெரியாது - நம் பெயர், ஊர், மொழி, கடவுள், கொள்கை, கற்பு, கீழ்ப்படிதல், அருட்பணி நிலை - எதைப்பற்றியும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. எதையும் அவர்கள் கேட்கவும் விழைவதில்லை. ரயிலில் ஏறினால் நாம் ஒரு பயணி. கடைக்குச் சென்றால் நாம் ஒரு வாடிக்கையாளர். அவ்வளவுதான். இந்த மாதிரியான நேரங்களில் தான் என் கூடு திறப்பது போல இருக்கும்.

அப்படி இப்படின்னு நாலஞ்சி பேப்பர் வேஸ்ட் பண்ணி எனக்குத் தெரிந்ததையெல்லாம் இந்த நான்கு கட்டங்களில் நிரப்பியும் விட்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு ரொம்ப அம்பிஷன்ஸ் இருந்துச்சு. அப்படியாகனும். இப்படியாகனும். நிறைய சாதிக்கணும். அப்படி இப்படி நிறைய தோணும். அம்பிஷன் தப்பா ரைட்டானு இப்ப கேட்டா நான் தப்பு என்றே சொல்வேன். வாழ்க்கயோட நோக்கம் நாம முழு மனிதரா மாறுவதா அல்லது மற்றவர்களை முழு மனிதர்களாக மாற்றுவதா என்ற கேள்வி என்னுள் நிறையவே இருக்கிறது.

ஒரு சிலர் சொல்வாங்க, 'நம்ம வாழ்க்கையோட நோக்கம் நாம நமது முழுத் திறன்களைக் கண்டு கொள்வதில் தான் இருக்கிறது!'

மற்றும் சிலர் சொல்வாங்க, 'இல்ல. இல்ல. நம்ம வாழ்க்கையோட அர்த்தம் மற்றவர்களுக்கு நல்லது செய்வதிலும், மற்றவர்களை முன்னேற்றுவதிலும் தான் இருக்கிறது'.

இந்த ரெண்டுல எது ரைட்டுனும் என்னால் சொல்ல முடியல.

ஆனா, இந்தப் புதிய செமஸ்டர்ல முழுக்க முழுக்க ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும் என்பது என் முதல் குறிக்கோள்.

பயம் இல்லாமல் வாழணும்.

ஏதாவது ஒன்னை அல்லது ஏதாவது ஒரு கடவுளை முழுசா நம்பணும்.

எளிதாக மன்னிக்கணும்.

டெய்லி சிரிக்கணும்.

நல்ல நண்பனா இருக்கணும்.

ரிஸ்க் எடுக்கணும்.

ஐ மஸ்ட் ஃபாலோ மை ட்ரீம்ஸ்.

ஏதாவது ஒன்னு மேல பைத்தியம் பிடிச்ச மாதிரி அதையே செய்யணும்.

எனக்கு நானே நல்லா இருக்கணும்.

ரொம்ப ட்ராவல் பண்ணணும்.

என் சந்தோஷத்தை நானே உருவாக்கிக்கணும்.

நான் விரும்பும் மாற்றத்தை என்னிடத்தில் தொடங்கணும்.

என்ற சின்னச் சின்ன ஆசைகள் இந்த புதிய செமஸ்டரில்.



இதற்கிடையில் நாம்!

'ஆம் ஆத்மி காரங்க வீட்டுக்;கு ஓட்டு கேட்டு வந்தாங்க.
அவங்க ஏதோ விளக்கமாறு விக்கிறவறங்கனு நினைச்சி
எங்க அம்மா 'போய்ட்டு அடுத்த வாரம் வாங்க!'னு சொல்லிட்டாங்க!'

இது கடந்த தமிழகத் தேர்தலின் போது ஆனந்தவிகடனில் வெளிவந்த ஒரு துணுக்கு.

இன்றைக்கு டெல்லியில் இந்த விளக்கமாறு சின்னம் தான் 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது. ஏற்கனவே முதல்வர் பதவிக்கு தெரிவானாலும் அதை அந்தத் தலைவர் ராஜினாமா செய்ததால் தான் இப்போது அடுத்த தேர்தல். இந்தக் கட்சியின் இந்த மாபெரும் வெற்றியை இந்தியாவே வியந்து பார்க்கிறது. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, ஆம் ஆத்மி கட்சியினர் அடுத்த கட்சியினரை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தங்கள் கட்சியினரின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளை மட்டும் முன்னிறுத்தி வாக்கு சேகரித்தனர். இது நம் நாகரீக வளர்ச்சியின் நல்ல அடையாளம்.

மோடி அலை, மோடி அலை என்ற சொன்னவர்கள் மத்தியில் இன்று சுனாமி வந்துவிட்டது என வர்ணக்கிறது மீடியா.

கொஞ்ச நாளாவே பாஜக செய்து வரும் காவி அரசியல். டெல்லியில் கிறித்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டது, ஒபாமா வருகையின் போது மோடி தச்ச பெயர் போட்ட சட்டை என எல்லாம் சேர்ந்து அவர்கள் பக்கமே திரும்பி விட்டது.

ஆக, அதிகாரம் என்றும் ஆட்சி செய்வதில்லை என்பதுதான் டெல்லி தரும் பாடம்.

நம்ம ஊரு பக்கம் நாளை மறுநாள் சிரிரங்கத்தில் இடைத்தேர்தல். தான் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் தன் கார்டனை விட்டு வெளியே வராத ஜெயா கடிதம் வழியாக வாக்கு சேகரிப்பதும், நம் தமிழகத்தின் ஒட்டு மொத்த அமைச்சர்கள் இங்கு முகாமிட்டுக் கிடப்பதும், ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரைச் சாடியும், பணத்தை வாரி இறைத்தும் வாக்குகள் சேகரிப்பதைப் பார்க்கும் போது நாம் நாகரீகத்தில் பின்னோக்கிப் போகிறோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அதிகாரத்திற்காக படும் பாட்டை நம் ஊரின் முன்னேற்றத்திற்காகப் படுவதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் இன்னொரு பக்கம் சட்டக் கல்லூரி மாணவர்களின் பிரச்சினை. ஆளும் கட்சியை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காலங்காலமாகப் பயன்படுத்தும் ஒரு எளிய ஆனால் பெரிய ஆயுதம் தான் மாணவர்கள். இதில் எல்லா மாணவர்களும் ஆதரவு என்ற அடிப்படையில் சாலையில் தான் தவம் கிடக்கின்றனர். மாணவப் பருவத்தின் ஆற்றலை இப்படிப் போராடும் குணமாக மாற்றுவதில் எதிர்க்கட்சிகள் போட்டி போடுகின்றன.

ஆட்சிக்கு வருபவர்கள் தாங்கள் போட்ட காசை எடுத்து விடலாம் எனப் பார்க்கின்றனர்.

அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கே காலை முதல் மாலை வரை சுட்டும் வெயிலில் தவிக்கும் மக்கள் ஒருபுறம். ஆயிரம், இரண்டாயிரம், ஐந்தாயிரம் என உடனடி ஆசை காட்டி மக்களை வளைக்கும் கட்சிகள் மறுபுறம். இந்தக் கட்சிகள் பின்னால் செல்லும் கூட்டத்தைப் பார்க்கும் போதும் பரிதாபமாக வே இருக்கிறது.

நாம் நாட்டைப் பற்றி சிந்தித்து விடக் கூடாது என்று நம்மை பிஸியாகவே வைத்திருக்கின்றன நம்முடைய தொலைக்காட்சிகள்.

ஒரு நாளில் மூன்று முறை டிரஸ் மாற்றும், தன் பெயரையே தன் சட்டையில் போட்டுப் பெருமைப் பட்டுக் கொள்ளும் மோடி ஒரு பக்கம், தானும் செயல்பட முடியாமல், மற்றவர்களையும் செயல்பட விடாமல் செய்து கொண்டிருக்கும் ஜெயா மறுபக்கம்.

இதற்கிடையில் நாம்!

எங்கே போகின்றோம் நாம்?


Wednesday, February 11, 2015

மரக்காலின் கீழ் வைக்காதீங்க!

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை.
மாறாக, விளக்குத் தண்டின் மீதே வைப்பர்.
அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க!
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையை போற்றிப் புகழ்வார்கள்.
(மத்தேயு 5:15-16)

மர்லின் மன்றோ அவர்களின் வாழ்க்கை வரலாறைப் படித்துக் கொண்டிருந்தேன்.

1962களில் அமெரிக்காவின் கனவுக்கன்னி என்று பலரின் தூக்கத்தைக் கலைத்த மர்லின் மன்றோவின் வாழ்க்கை தொடங்கியது என்னவோ தோல்வியில் தான்.

ஒரு பாரில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண் சினிமா, ஆல்பம் என்று கலக்கிக் கொண்டிருந்தாலும், பணம் மற்றும் புகழுடன் இலவச இணைப்பாக அவருக்கு சோகமும் வந்து கொண்டே இருந்தது. அவர் செய்தது கொலையா? அல்லது தற்கொலையா? என்றும் கூட தெரியவில்லை.

சரிப்பா! மர்லின் மன்றோவுக்கும் விளக்குக்கும் என்ன சம்பந்தம்?

ராத்திரிக்கும் விளக்குத் திரிக்கும் என்ன சம்பந்தம்? அப்படின்னு கேட்குறீங்களா?

சம்பந்தம் இருக்கு.

இன்று காலையுடன் பருவத்தேர்வுகள் முடிந்தன. இந்தத் தேர்வுக்கு ஒரு பகுதியாக இருந்தது தான் மேற்காணும் இறைவாக்குகள். நாம் அடிக்கடி கேட்ட இறைவாக்குகள் தாம்.

அவற்றில் நாம் இன்று சிந்திக்கவிருப்பது இரண்டே வார்த்தைகள் தாம்: மரக்கால் மற்றும் விளக்குத்தண்டு.

இரண்டையும் தொடர்புபடுத்தக் கூடிய வார்த்தை விளக்கு. விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைக்கக் கூடாது. ஆனால் விளக்குத்தண்டின் மேல் வைக்க வேண்டும்.

விளக்குத்தண்டு என்பது யூத மரபில் ஒரு குச்சி. அந்தக் குச்சியின் மேல் விளக்கை (அகல் விளக்கு - வழக்கமாக ஒலிவ எண்ணெயில் எரியும் விளக்கு) ஏற்றி வைப்பார்கள். மரக்கால் நம்ம ஊர்ல அந்தக் காலத்துல புழக்கத்தில் இருந்த நாளி, ஒழக்கு போன்ற ஒரு அளவை. ஏறக்குறைய 8.75 லிட்டர் அளக்கக் கூடிய ஒரு அளவை. அந்த அளவையைக் கவுத்திப் போட்டு அதுக்குள்ள விளக்கு வைக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

இயேசுவின் கூற்றுப்படி பார்த்தால் இரண்டு விஷயங்கள்:

அ. எது எது எந்த எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அது அது அந்த அந்த இடத்தில் இருக்க வேண்டும்.

ஆ. எது எது எந்த எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ அது அது அந்த அந்த வேலையைச் செய்ய வேண்டும்.

இப்ப பிரச்சினை என்னன்னா மெட்டீரியல் ரியாலிட்டி அப்படிங்கிற வகையில இதை நாம ஏத்துக்கலாம். சரியா செஞ்சிடலாம்.

ஆனா, இதை வாழ்க்கைனு வரும்போது எப்படி பொருத்திப் பார்ப்பது?

மர்லின் மன்றோ தான் விளக்குத்தண்டு என்று நினைத்த ஒன்று அவருக்கே மரக்காலாய் மாறிவிட்டதோ.

அண்மையில் வயதான அருட்தந்தை ஒருவருக்கு மருத்;துவமனையில் நோயிற்பூசுதல் அருளடையாளம் கொடுக்கச் சென்றிருந்தேன். அவர் ரோமில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சொந்த ஊர் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு ஊர். அவர் அருட்பணியாளரான போது முதல் பணியாக அனுப்பப்பட்டது தென் அமெரிக்காவிலுள்ள பெரு என்ற நாட்டிற்கு. அங்கு போய் மொழி கற்று அவர்களோடு தன்னையே ஒன்றித்து பணி செய்து கொண்டிருந்தபோது திருச்சபைச் சட்டம் படிக்கச் செல்லுமாறு ரோமிற்கு அனுப்பப்படுகிறார். ரோமிற்கு அன்று வந்தவர் தான் இன்று வரை இருக்கிறார். ஆனால், பேச்சுக்குப் பேச்சு பெரு நாட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். 'நான் பெருவிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது!' என்று முடிவாகச் சொன்னார். ஏறக்குறைய முப்பது வருடங்கள் கல்விப்பணி செய்ததும், அருட்பணியாளர்களுக்கும். குருமாணவர்களுக்கும், அருட்செல்வியர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்ததும், பல்வேறு கூட்டங்களில் பேசுவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றதும் தனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று சொன்னாலும் அவைகளை தான் மிகுந்த அர்ப்பணத்தோடு செய்ததாகவே சொன்னார்.

தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தபோது இந்த அருட்பணியாளர் நினைவு தான் அதிகம் வந்தது. ஏனெனில் நேற்று இரவு அவர் இறந்து விட்டார்.

நம்ம வாழ்க்கையில நாம விளக்குத்தண்டு அப்படின்னு நினைக்கிறதே ஒருவேளை மரக்காலா ஆயிடுச்சுன்னா நம்ம வாழ்க்கை எப்படி ஆயிடும்?

நம்ம வாழ்க்கையில இதுதான் விளக்குத்தண்டு அல்லது இதுதான் மரக்கால் என்று நாம் எதை வைத்து முடிவெடுப்பது? பணம் சம்பாதிப்பதை வைத்தா, பட்டம் பெறுவதை வைத்தா, நிறைய உறவுகளைச் சம்பாதிப்பதை வைத்தா?

மரக்காலின் கீழ் வைக்காதீங்க! விளக்குத்தண்டின் மேல் வைங்க! என்று சொன்ன இயேசு இவைகளை எப்படித் தீர்மானிப்பது என்பதைச் சொல்லவில்லையே?

நம்ம மர்லினுக்கும், இந்த அருட்பணியாளருக்கும் வாழ்க்கை இன்னும் ஒரு முறை வாழக் கிடைத்தால் எங்கே தங்கள் விளக்குகளை ஏற்றுவார்கள்?


Tuesday, February 10, 2015

படைப்பு வரலாறு

இன்றும் நாளையும் திருப்பலியில் நாம் வாசிக்கும் முதல் வாசகங்கள் தொடக்கநூல் முதல் பிரிவில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த வாசகத்தை நாம் பாஸ்காத் திருவிழிப்பு திருப்பலியிலும் முதல் வாசகமாக வாசிக்கின்றோம்.

தொநூ 1ல் உள்ளதுபோலத்தான் உலகம் படைக்கப்பட்டதா? இல்லை!

அல்லது 'பெரிய வெடிப்பு' என்று சொல்லப்படும் பிங் பேங் கோட்பாடு சொல்வது போல படைக்கப்பட்டதா?

பைபளின் கதையின் நோக்கம் உலகம் எப்படிப் படைக்கப்பட்டது என்று சொல்வதற்கு அல்ல. எதற்காகப் படைக்கப்பட்டது என்று சொல்வதற்காகத் தான்.

மேலும், பைபிளில் படைப்பு வரலாறு இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டிற்குமே நிறைய வித்தியாசங்களும் இருக்கின்றன.

இன்று ஒரு சில டிவி சேனல்களைத் திருப்பி ஒரு சில போதகர்களின் விவிலியப் போதனையைக் கேட்டால் கோபமாகத் தான் வருகிறது. பைபிளை அவர்கள் இஷ்டத்திற்கு அர்த்தம் கொடுக்கப் பயன்படுத்துகின்றனர். அர்த்தம் கொடுத்தால் பரவாயில்லை. அதை வைத்து மக்களைப் பயமுறுத்தவும், தேவையில்லாத 'பாவம்' என்ற சிந்தனையை உருவாக்குவதிலும் குறியாக இருக்கின்றனர். பயமுறுத்தும், பாவத்தை முன்னிறுத்தும் யாரும் கடவுளாக என்ன மனிதனாகக் கூட இருக்கத் தகுதியில்லை என்றே நான் சொல்வேன்.

படைப்பு வரலாறு குறித்து இன்னும் நாளை பார்ப்போம்.

Sunday, February 8, 2015

தறியின் ஓடுகட்டையினும்!

என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு
என்னைவிட்டு அகற்றப்படுகிறது.
நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன்.
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்.
(எசாயா 38:12)

வாழ்வு மற்றும் இறப்பு பற்றிய உருவகங்கள் விவிலியத்தில் ஏறக்குறைய 60 இருக்கின்றன. அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த உருவகங்கள் மேற்காணும் இரண்டு: மேய்ப்பனின் கூடாரம், நெசவாளனின் பாவு - தறி.

இன்று நாம் திருப்பலியில் வாசித்த முதல் வாசகத்திலும் 'தறி' என்ற உருவகம் வருகிறது:

'என் நாள்கள் தறியின் ஓடு;கட்டையினும் விரைந்தோடுகின்றன' (யோபு 7:6). நேரமிருந்தால் யோபு 7 முழுவதையும் வாசியுங்கள். கொஞ்சம் பயமாக இருக்கும். ஆனால், வாழ்வின் எதார்த்தத்தை மிக அருமையாக பதிவு செய்திருக்கின்றார் ஆசிரியர்.

யோபு நூலின் 'தறி'க்கும் எசாயா நூலின் 'தறிக்கும்' வித்தியாசம் இருந்தாலும், வாழ்நாள்களில் ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு தறியை கடவுள் அறுத்தெறிகின்றார் என இரண்டையும் நாம் இணைத்துப் பார்க்கலாம்.

தறி பார்த்திருக்கீங்களா? தறி பார்க்க வேண்டுமென்றால் இராஜபாளையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் உள்ள சத்திரப்பட்டி என்ற ஊருக்குச் செல்லுங்கள். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், சரியாகத் தெரியவில்லை. தறியில் இரண்டு வகை உண்டு: ஒன்று, கைத்தறி. மற்றொன்று விசைத்தறி. எங்க அப்பா கூட பிறந்த சித்தப்பாவின் வீடு சத்திரப்பட்டியில் தான் இருந்தது. அவர்கள் வீட்டிற்கு முன்புறம் இருந்த வீட்டில் தறி ஒன்று இருந்தது. நான் சின்ன வயதில் விடுமுறைக்கு அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் அந்த தறி வைத்திருப்பவர்களின் வீட்டிற்குச் சென்று வேடிக்கை பார்ப்பது வழக்கம். விசைத்தறியை நான் முதன் முதலாக பார்த்தபோது எனக்கு வயது பத்து. ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்புக்குக் கடந்து போகும் மே மாதம் (1991-92) விடுமுறை நாட்களில் எனக்கும், என் நண்பன் கடற்கரைக்கும் ஒரு ஆசை. இந்த லீவுல வேலை பார்க்கலாமே! சம்பளம் வாங்கும் காசுல புத்தகம் வாங்கலாமே! சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற கம்பெனியைத் தேர்ந்தெடுத்தோம். ராஜபாளையம் பக்கம் டெக்ஸ்டைல்ஸ் என்றால் ரெண்டு அர்த்தம் உண்டு: ஒன்று, துணிக்கடை. அதாவது நாம் பயன்படுத்தும் ஆடைகளைத் தைப்பதற்கான துணிகள் வாங்கும் இடம். இரண்டு, பேண்டேஜ், துண்டு, காடாத்துணி போன்றவைகளை உற்பத்தி செய்யும் இடம். நான் வேலைக்குச் சேர்ந்த இடம் இரண்டாம் வகை. உயரம் கம்மியாக இருந்ததால் எனக்கு தினக்கூலி 3 ரூபாய் என்றும், கடற்கரைக்கு 4 ரூபாய் என்றும் சொன்னார்கள். சேர்த்த இரண்டாவது நாளே கடற்கரையை வேறு ஓர் கம்பெனிக்கு மாற்றி விட்டார்கள். இந்தக் கம்பெனியில் நான் பார்த்த வேலை மூன்று: ஒன்று, பேக்கிங் சாக்குகளை பிரித்து அடுக்குவது, பேண்டேஜ் பாக்கெட்டுகளுக்கு லேபிள் ஒட்டுவது. மூன்று, லாரியில் ஏற்றப்படும் பேண்டேஜ் மூட்டைகளின் மேல் முகவரி எழுதுவது. இன்றும் இந்த டெக்ஸ்டைல்ஸ் இருக்கின்றது. ஆனால், ஆறுமுகா க்ரூப்ஸ் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். இங்கே ரோமில் மருத்துவமனை சர்வீஸ் போன போது குவிக்கப்பட்டிருந்த பேண்டேஜ்களில் செந்தில் முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். ஆக, இன்றும் அங்கே யாரோ லேபிள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பேண்டேஜ், சீசன் துண்டு (சிலர் குற்றாலத் துண்டு என்றும் சொல்வார்கள்!) மற்றும் காடாத்துணி செய்யப்படும் முறை இதுதான். பாவு என்று சொல்லப்படும் பெரிய இரும்பு ரோலில் நூல் இருக்கும். இந்த நூல் நெடுக்கு வசமான நூல். இந்த நெடுக்கு வச நூலிற்குள் நுழைந்து குறுக்கு வச நூலைக் கொடுப்பதுதான் நம் தறியின் ஓடுகட்டையின் வேலை. எந்தக் கலரில் நமக்கு குறுக்கு வச நூல் வேண்டுமோ அந்தக் கலர் நூலை தறியின் ஓடுகட்டையில் ஏற்றி ஓட விட வேண்டும். தறியின் ஓடுகட்டைக்குத் தேவை நல்ல ஓட்டம். நல்ல ஓட்டத்திற்குத் தேவை பலமான சக்கரம். ஓடவும் வேண்டும். நூலும் அறுந்துவிடக் கூடாது. மிக முக்கியமான வேலையைத் தான் இந்தத் தறியின் ஓடுகட்டை செய்கிறது.

'தறியின் ஓடுகட்டையை' எசாயா மற்றும் யோபு நூலின் ஆசிரியர்கள் உருவகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் தறியின் பயன்பாடு கிறிஸ்து பிறப்புக்கு முன் ஏறக்குறைய 700 வது ஆண்டிலேயே இருந்திருக்கின்றது. ரொம்ப ஆச்சர்யமா இருக்குல!

இந்தத் தறியின் ஓடுகட்டை நம் வாழ்க்கைக்குச் சொல்லும் பாடம் மூன்று. அதுவே வாழ்க்கையின் எதார்த்தமும் கூட.

அ. ஓடுகட்டைக்கென்று ஒரு எல்லை உண்டு. ஒரு கட்டுப்பாடு உண்டு. எனக்கு சர்க்கரம் இருக்கிறது என்பதற்காக ஆது எல்லா இடத்திற்கும் ஓட முடியாது. அப்படி ஓடினால் தையல் சரியாக விழாது. அதன் ஓட்டம் நாலு இன்ச்சும், 4 அடியும் உள்ள கட்டையின் மேல் தான் இருக்க வேண்டும். நம் வாழ்க்கையிலும் பாருங்களேன். நமக்கென்று ஒரு எல்கை இருக்கும். அந்த எல்கைக்குள் தாம் இருக்க முடியும். காலம் மற்றும் இடம் என்ற இரண்டு முக்கிய இயற்கை விதிகளால் நாம் கட்டப்பட்டிருக்கிறோம். 1981 லிருந்து 2031 வரை என் ஓடுகட்டை ஓட வேண்டுமென்றால், அவ்வளவு தான் ஓட முடியும். இந்த ஆண்டுகளில் இந்தந்த இடங்களில் தான் நான் இருக்க முடியும் என்றால் இங்கு மட்டும் தான் இருக்க முடியும். தான் ஆசைப்படும் இடம் ஓடுகட்டைக்குக் கிடைக்காவிட்டாலும் அது அங்குதான் ஓட வேண்டும்.

ஆ. ஓடுகட்டையின் ஓட்டம் முன்னும் பின்னும். முன்னும் பின்னும் ஓடுவது எனக்கு போரடிக்கிறதோ என்று நிற்கவோ, நான் நேர போகிறேன் என்ற பாய்ந்து சுவரில் முட்டவோ செய்தால் ஆபத்து கட்டைக்குத் தான். நம்ம வாழ்விலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்புறம் பாருங்களேன் நாமளும் சபை உரையாளர் மாதிரி சொல்ல ஆரம்பிச்சுடுவோம்: 'இந்த உலகில் புதியது என்று எதுவும் இல்லை!' ஆம் நான் இன்று பார்த்ததைத் தான் நாளை பார்ப்போம். ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் நாம் அனுபவித்த ஒன்றைத் தான் வேறு ஒன்றாகப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு, தமிழ் சீரியலை பாருங்களேன். 'சித்தி' என்ற மெகாதொடர் கதைதான் 'தெய்வம் தந்த வீடு'. கொஞ்சம் பேக்ரவுண்ட், கேரக்டர்ஸ் சேன்ஜ் அவ்வளவு தான். அல்லது விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாருங்களேன்: பாட்டும், பாடுபவரும் மட்டும் தான் வேறு. மற்றபடி கான்செப்ட் ஒன்றுதான். அன்னைக்கு நம்ம கையில டெலிஃபோன் இருந்துச்சு. இன்னைக்கு செல்ஃபோன் இருக்கு. ஆனா, ரெண்டுலயும் காசு இருந்தா தான் பேச முடியும். பிறந்தப்ப பேபி சேர்ல போனோம், படிக்கிறப்ப சைக்கிள்ல போனோம், அன்னைக்கு பைக்ல போனோம். இன்னைக்கு கார்ல போறோம் - எல்லாம் சக்கரம் தான், ஸ்டரக்சர் தான் வேற.

இ. ஓடுகட்டையின் ஓட்டம் நெசவாளன் கையில். ஓடுகட்டை ஒரு இன்ஸ்டுருமென்ட். அவ்வளவுதான். அதைப் பயன்படுத்துபவர் நெசவாளன் தான். நெசவாளன் தான் அதன் ஓட்டத்தை கூட்டவோ, குறைக்கவோ, நிறுத்தவோ முடியும். இவ்வளவு பாவை நான் நெய்திருக்கிறேன். நானே என் ஓட்டத்தை முடிவு செய்து கொள்கிறேன் என்று தறியால் சொல்ல முடியாது. நம் வாழ்விலும் நாம் எல்லா முடிவுகளையும் எடுத்தாலும், நம் உடல், வளர்ச்சி, நோய் போன்ற முடிவுகளை நம்மால் எடுக்க முடிவதில்லையே. எனக்கு இந்த வாரம் சனிக்கிழமை காய்ச்சல் வரும் என்று நம்மால் சொல்ல முடியுமா? நான் அடுத்த முறை ஷாம்பு போட்டு குளிக்கும் போது ஐந்து முடிகள் கொட்டும் என்று நம்மால் சொல்ல முடியுமா? 'ஒவ்வொரு முறை நாம் நம் டைரியில் ட்டு-டு லிஸ்ட் எழுதும் போதும், டைரியில் அப்பாய்ன்ட்மெண்ட் குறிக்கும் போதும் கடவுள் சிரிப்பார்!' என்று சொல்வார்கள். என்ன தான் எழுதினாலும் நம் ஓட்டம் நின்றுவிட்டால் எந்த அப்பாய்ண்;ட்மென்டிற்கு நாம் போக முடியும்? ஓடுகட்டையின் தேவை முடிந்தால் அந்தத் தறிக்கு பாவில் இடமில்லை. என் கலர் நல்லா தான இருக்கு. இன்னும் கொஞ்சம் சிகப்புலயே நெய்தா நல்லா தான இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. சிகப்பு நூல் இவ்வளவு தான் ஓட வேண்டும். பச்சை நூல் இவ்வளவு தான் ஓட வேண்டும். அப்படியிருந்தால் தான் நெசவாளன் நினைத்த டிசைன் பாவில் வரமுடியும்.

ஆக, ஓடுவது எவ்வளவு நாளோ! ஓடும் வரை நம் கோட்டில் சரியாக ஓடினால் போதும். நம் கோடு, நாம் வந்த பாதை என இறுக்கம், சோர்வு வந்தாலும் நாம் எதற்காக பாவில் ஏறினோமோ அந்த வேலையை முடித்து விடுவோம்.

'என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன!'