Thursday, December 31, 2015

இரண்டு மகன்கள்

இரண்டு மகன்கள்.

31 டிசம்பர். ஆண்டின் இறுதிநாள்.

மூத்தவன் எழுந்தான். குளித்தான். அறையில் மெழுகுதிரி ஏற்றினான். தன் செப புத்தகத்தை எடுத்து விரித்தான். செபம் முடித்தான். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தான்.

'இறைவா, உனக்கு நன்றி!' என தலைப்பிட்டான்.

1. எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்தேன்
2. என் அப்பாவுக்கு கீழ்ப்படிந்தேன்
3. கடினமாக உழைத்தேன்
4. புதிய நிலம் வாங்கினேன்
5. புதிய பட்டம் பெற்றேன்
6. எனக்கு கீழிருப்பவரை நன்றாக நடத்தினேன்
7. கோவிலுக்கு தவறாமல் சென்றேன்
8. என் சம்பளத்தில் தேவைக்கு போக மற்றதை சேமித்து வைத்தேன்
9. என் உறவினர்களோடு நெருக்கமாக இருந்தேன்
10. என் நண்பர்களோடு விருந்துண்டேன்

'இந்த ஆண்டு செய்யக்கூடியது' என மற்றொரு தலைப்பிட்டான்.

1. புதிய ஊருக்குப் பயணம் செய்வது
2. புதிய நண்பர்களைத் தேடுவது
3. புதிதாக எதையாவது கற்றுக்கொள்வது

எழுதியும், முடிக்காமலும் தந்தையின் குரல் கேட்டு கீழே ஓடினான்...

இளையவன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். தான் அயர்ந்து கிடந்த இடத்தின் பன்றிகள் எழுப்பிய அரவம் கேட்டு எழுந்தேன். கண்களை கசக்கினான். பசி வயிற்றைக் கிள்ளியது. கையை எட்டி தூரத்தில் இருந்த பானையை சாய்த்துப் பார்த்தான். தண்ணீர் இல்லை. தன் இடுப்பில் கட்டிய ஒற்றைத் துண்டை சரி செய்து, குச்சியால் பன்றிகளை விலக்கி மெதுவாக நடந்தான். நடக்க முடியவில்லை. அப்படியே ஒரு மரத்தின் நிழலில் சாய்ந்தான். சூரியன் தலைக்குமேல் மின்னிக் கொண்டிருந்தான். அவனுக்கு வேலை கொடுத்த வீட்டுக்காரனின் வீட்டிற்குள் சலசலப்பு. 'புதுவருடம்', 'புதுவருடம்' என்று ஏதோ பேசக் கேட்டான். 'ஓ புதிய ஆண்டு பிறக்கப்போகிறதா!' என்று நினைத்துக் கொண்டு, தன் வீட்டில் தான் கடந்த ஆண்டு கொண்டாடிய புத்தாண்டை நினைத்துப் பார்த்தான். இந்த ஓர் ஆண்டிற்குள் எவ்வளவோ நடந்துவிட்டது.

இந்த ஆண்டு நான் என்ன செய்தேன்...

தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்...

1. என் அப்பாவுடன் சண்டை போட்டேன்
2. சொத்தைப் பிரித்து வீட்டைவிட்டு வெளியேறினேன்
3. சீட்டாடினேன்
4. நன்றாக குடித்தேன்
5. நண்பர்களுடன் சண்டை போட்டேன்
6. கிடைக்கும் பெண்களையெல்லாம் தழுவினேன்
7. எதையும் சேமித்து வைக்கவில்லை
8. பசியால் வாடினேன்
9. ஆடையின்றி அவமானப்பட்டேன்
10. பன்றிகள் மேய்க்கும் நிலைக்கு வந்தேன்

புத்தாண்டில் ஏதாவது செய்யலாமே என நினைத்தவன்...

ஒன்றே ஒன்றை மட்டும் நினைத்தான். உறுதி செய்தான். புறப்பட்டான்.

ஆம், என் தந்தையின் இல்லத்திற்குப் போவேன்...

மற்றதெல்லாம் தந்தை பார்த்துக்கொள்வார்.



Wednesday, December 30, 2015

புத்தாண்டு ஆசி செபம்


உன் திருமுன் நான் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
உன் காலடியில் என் கண்களைப் பணிக்கிறேன்
இந்தப் பணிவில்
உன் காலடிகளில் நான் என்னையே அர்ப்பணிக்கிறேன்...

இந்த ஆண்டு நான் கண்ட முகங்கள்
நான் கேட்ட குரல்கள்
நான் பேசிய வார்த்தைகள்
நான் குலுக்கிய கரங்கள்
நான் நடந்த பயணங்கள்
நான் செய்த சேவைகள்
நான் பகிர்ந்த மகிழ்ச்சிகள்
நான் அதிர்ந்த துன்பங்கள்

அனைத்தையும் உன் காலடிகளில் படைக்கிறேன்
என் தலையை உன் திருமுன் பணிகிறேன்
என் தலையை நீயே தாங்குவாய்...

இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா

நாங்கள் செய்த தவறுகளை மன்னியும்
நாங்கள் காட்டிய ஆணவத்தை மன்னியும்
பிறரைக் காயப்படுத்திய எம் வார்த்தைகளை மன்னியும்
இந்த இரவில் நாங்கள் உள்ளம்நிறை அமைதியுடன் உறங்கி,
உம் திருவுளம் நிறைவேற்ற புதிய நாளில் புதிய ஆண்டில் 
புத்துணர்ச்சியுடன் எழுவோமாக...

இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா

அமைதியின் இறைவன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் மகன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் ஆவி இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
இந்த இரவும்...
எல்லா இரவுகளும்...

(அயர்லாந்து நாட்டு புத்தாண்டு ஆசி செபம்)

ஆங்கிலத்தில்: பவுலோ கோயலோ


Tuesday, December 29, 2015

அன்னா பானுவேலின் மகள்

நாளைய நற்செய்தியில் எருசலேம் ஆலயத்தில் நாம் சந்திக்கும் நபர் அன்னா.

லூக்கா தன் நற்செய்தியில் பயன்படுத்தும் ஒரு இலக்கிய பண்பு: 'இணைத்தல்' - அதாவது இரண்டு நிகழ்வுகளை ஒன்றுபோல பதிவு செய்தல். எ.கா. சக்கரியாவுக்கு காட்சி - மரியாளுக்கு காட்சி, யோவானின் பிறப்பு - இயேசுவின் பிறப்பு.

இயேசுவை எருசலேம் ஆலயத்தில் அவர்களின் பெற்றோர்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வில் இரண்டு வகை இணைதலை நாம் பார்க்கிறோம்:

ஒன்று, ஆண்-பெண். அதாவது, சிமியோன்-அன்னா. இயேசு முதன்முதலாக எருசலேமுக்குள் நுழையும் இந்த நிகழ்வில் ஆண்கள் சார்பாக ஒருவர். பெண்கள் சார்பாக ஒருவர்.

இரண்டு, ஆண்-பெண்கள். சீமோன்-எருசலேம் மகளிர். இயேசு இறுதியாக எருசலேமை  விட்டு நீங்கும் நிகழ்வில், ஆண்கள் சார்பாக ஒருவர். பெண்கள் சார்பாக சிலர்.

சிமியோன் - சீமோன்.

அன்னா - மகளிர்.

இப்படியாக முதல் நிகழ்வை இறுதி நிகழ்வோடு இணைக்கிறார் லூக்கா.

அன்னா ஆலயத்திலேயே இருக்கிறார். அன்னா குழந்தையைக் கையில் ஏந்தவில்லை. அன்னா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

அன்னா பானுவேலின் மகள். 'பானுவேல்' என்றால் 'கடவுளின் முகம்' என்று பொருள்.

ஏழு ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்தார்.

அவரின் வயது 84. அதாவது, 7 பெருக்கல் 12. முழுமையையும், முழுமைiயும் பெருக்கினால் வரும் எண் 84.

இவர் குழந்தையைப் பற்றி எல்லாரிடமும் சொல்கிறார்.

இதைத்தான் நம்ம ஊர் கிராமங்களில் பாட்டிமார்களும் சொல்வார்கள்.

இவர்கள் செய்தித்தாள் வாசிப்பதில்லை. டிவி பார்ப்பதில்லை. ஆனால், எல்லா விவரமும் இவர்களுக்குத் தெரியும். உலக விவகாரங்கள் இவர்களுக்கு முக்கியமல்ல. ஊரில் உள்ள பிறப்பு, இறப்பு, இழப்பு என அனைத்தையும் இவர்கள் அறிவார்கள்.

பிறந்த குழந்தையை இவர்களிடம் காட்டினால் வாய்நிறைய வாழ்த்துவார்கள்.

Monday, December 28, 2015

சிமியோன்

நாளைய நற்செய்தியில் இயேசுவை அவரது பெற்றோர்கள் கோவிலில் அர்ப்பணிக்கச் செல்ல, அங்கே சிமியோன் வருவதை வாசிக்கின்றோம்.

இரண்டு விடயங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை:

1. சிமியோன் தானாகவே வருகின்றார். நம்ம எல்லாருக்கும் சப்கான்சியஸ் மைன்ட் என்று ஒன்று இருக்கிறது. இதுதான் நம் பிரபஞ்சத்தின் ஆற்றலோடு நம்மை நினைக்கிறது. அதாவது, அடுத்து நடக்கப்போவது என்ன என்பது சில நேரங்களில் நமக்கு முன்னதாகவே தெரியும். இன்று மாலை யாரோ வரப்போகிறார் என்பது போல இருக்கும். அன்று மாலையே அந்த நபர் வந்து நிற்பார். ஒரு சின்ன உதாரணம். என் ஆலயத்தில் மாலை திருப்பலிக்கு உதவி செய்ய வயதான தாத்தா ஒருவர் வருவார். நற்கருணை கொடுத்து முடிந்ததும், அவர்தான் நற்கருணைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய், பேழையில் வைப்பார். ஒருநாள் அவரிடம் கொண்டு போகச் சொல்லிக் கொடுத்த போது, 'இன்று இவர் இதை கீழே போடுவார்!' என எனக்குத் தோன்றியது. நான்கு வருடங்களாக அவர்தான் இதைச் செய்கிறார். என்றும் எனக்குத் தோன்றாத ஒன்று அன்றி தோன்றியது. அவர் போன கொஞ்ச நேரத்தில் 'டமார்' என்ற சத்தம். பாத்திரம் விழுந்தது. நல்லவேளை எதுவும் கொட்டவில்லை. அப்படியே நேராக கீழே விழுந்ததால் மூடி மட்டும் கழன்று விழுந்தது. அவரின் அங்கி பேழையின் அருகிலிருந்த ஓர் ஆணியில் சிக்கியதால் இப்படி நடந்தது.

இயேசுவை அவர் பெற்றோர்கள் தூக்கிவர, இவ்வளவு நாள் காத்திருந்த சிமியோன் தானாகவே வருகிறார். ஆக, நம் சப்கான்சியஸ் மைன்ட்டோடு நாம் தொடர்பில் இருந்தால், நம் எண்ணங்கள், ஏக்கங்கள் எல்லாம் நிறைவேறும் நாள் தெளிவாகத் தெரியும்.

2. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார். ஏதாவது ஒன்றை நன்றாகச் செய்தால் 'கை வந்த கலை' என்கிறோம். குழந்தையை கையில் ஏந்துவதும் ஒரு கலைதான். சிலர் கை பட்டவுடன் குழந்தை அழும். சிலர் கை பட்டால் சிரிக்கும். மென்மையான உடல் குழந்தையின் உடல். சின்ன அசௌகரியமும் அதன் முகத்தில் சுளிப்பை வரவைத்துவிடும். சிமியோனுக்கு குழந்தையை ஏந்தும் கலை தெரிந்தது. வாழ்வை முழுமையாக வாழ்ந்த ஒருவருக்கு வாழ்வை இப்போதுதான் வாழத் தொடங்க அரும்பியிருக்கும் குழந்தையை கையில் தூக்கியது கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

மாசில்லாக் குழந்தைகள்

யோசேப்பும், மரியாளும் தன் குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடிய அந்த இரவில், என் வீடு பட பட என தட்டப்படும் சத்தம். வேகமாக ஓடி வந்தேன் வெளியே. எனக்கு பிரசவம் பார்த்த என் பக்கத்து வீட்டு அம்மா நின்றிருந்தாள். அவளுடன் சில படைவீரர்கள் கையில் நீண்ட வாளுடன் நின்றிருந்தனர். குழந்தை பிறந்த வீட்டை அடையாளப்படுத்துவதற்காக அவளை உடன் அழைத்து வந்திருந்தார்கள். அவளும் முன்னுக்குப் பின்னாக பதில் சொல்ல படைவீரர்களை திசைதிருப்பப் பார்த்தாள். ஆனால் அவர்கள் அவளை விடுவதாயில்லை. என்னை நோக்கி அவளின் கை நீண்டது. 'உன் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே வா!' அதட்டியது ஒரு சிப்பாய் குரல். 'முடியாது!' என்றேன். விருட்டென்று உள்ளே நுழைந்த வீரன் ஒருவன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த என் குழந்தையை எடுத்து தலைகீழாய்ப் பிடித்து என் முன்னே அறுத்தெறிந்தான். நான் அப்படியே மயங்கி விழுந்தேன்.

மயக்கம் தெளிந்த மூன்றாம் நாள், சோர்ந்து திண்ணையில் அமர்ந்திருந்தேன். என் வீட்டில் மட்டுமல்ல. எல்லார் வீட்டிலும் இதேதான் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.

வழக்கமாக பெற்றோரை இழந்த குழந்தைகள்தாம் அநாதைகளாகி நிற்பர். ஆனால் அன்று குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அநாதைகளாக நின்றனர்.

'யாரோ ஒரு அரசன் பிறந்திருக்கானாம்! அவனை கொல்லணும்னு நினைச்ச நம்ம ஏரோது நரி அரசன் இப்படி எல்லார் குழந்தையும் கொன்னுபுட்டனே!' என்று அழுகையோடு அழுகையாய் காரணத்தைக் கொட்டினாள் பெண்ணொருத்தி.

எனக்கு கோபம் வந்தது.

முதலில் பிறந்திருக்கும் அந்த அரசன் மேல். பிறந்த அந்த அரசன் இங்கு வந்துதான் பிறந்திருக்க வேண்டுமா?

இரண்டாவது, இந்த அரசனைத் தேடி வந்த ஞானியர்கள்மேல்! ஞானியர்களாம் ஞானியர்கள்! மடையர்கள்! 'அரசனிடமே போய் இன்னொரு அரசன் பிறந்திருக்கிறான்' என்று சொல்வது ஞானமா? மடையர்கள்!

மூன்றாவது, ஏரோது மேல். ஏன்டா உனக்கு அரசன்மேல கோபம்னா, அவனைப் போய் பார்த்து, அவனோட சண்டை போடணும்! அதை விட்டுட்டு சும்மா தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைப் போய் கொலை செய்து...வெட்கமாயில்லை உனக்கு...அப்படி என்னடா உனக்கு அதிகாரத்தின் மேல பிடிப்பு. நீ என்னைக்கும் உயிரோடவாடா இருக்கப் போற!

ஐயோ! இப்படி புலம்புறேனே! இப்படி புலம்புவதால் என் மகன் உயிரோடு வந்துவிடுவானா?

நிற்க!

நாளை மாசில்லாக் குழந்தைகள் தினம்.

ஏரோது குழந்தைகளைப் படுகொலை செய்தது வரலாற்று நிகழ்வா? அவன் பலரை படுகொலை செய்திருக்கிறான். ஆக, இவர்களையும் செய்திருக்கலாம். குழந்தைகள் கொல்லப்பட்டது பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்ற கணக்கும் நமக்கு வேண்டாம்.

இந்த நிகழ்வு நடந்ததாகவே வைத்துக்கொள்வோம்.

ஏரோது செய்தது தவறு. ஆனால் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களின் விவிலியத்தில் பாரவோன் மன்னன் எகிப்தில் (விப 1-3) இப்படித்தான் செய்தது என்று அவன் அறிந்திருந்தான். 'நான் நல்லாயிருக்கணும்னா யாரையும் அழிக்கலாம்!' என்ற சித்தாந்தத்தில் வளர்க்கப்பட்டவன் அவன். 'பவர்' இருக்கும் வரைதான் நம்மை மதிப்பார்கள் என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். ஆக, அந்த பவரை அவன் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. தன் கோபத்தை பாவம் எல்லா பிஞ்சுக்குழந்தைகள்மேலும் காட்டிவிடுகிறான்.

பாவம்...

ஊமையாக இருப்பவர்களும், வலுவிழந்தவர்களும் தான் அழிக்கப்படுவார்கள் என்பது வரலாற்று நியதிபோல!

'அரசே! நீ செய்வது சரியல்ல!' என்று சுட்டிக்காட்ட ஒரு மந்திரிக்கும் தைரியமில்லையா?

கொலை செய்ய சென்ற போர்வீரர்களுக்கும் குழந்தைகள் இருந்திருக்குமே! எப்படி தங்கள் மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவர்கள் இந்த இரத்தப்பழியில் பங்கேற்றார்கள்?

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கடையில் காஃபி குடித்துக்கொண்டிருந்தபோது, வெளியே கண்ணாடிவழி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணாடி வழியாக என்னைப் பார்த்த ஒரு தாத்தா தன் மகளுடன் உள்ளே வந்தார். 'என்ன பார்க்குறீங்க?' என்று கேட்டார். 'அலங்காரங்களை!' என்றேன்.

'இந்த உலகத்துக்கு நாம வர்றதே பார்க்குறதுக்குத்தான். நல்லா பாருங்க!' என்றவர் தொடர்ந்து,

'வருகிறோம். பார்க்கிறோம். செல்கிறோம்! நாம வர்றதுக்கு முன்னால இந்த உலகம் இருந்துச்சு! நாம போன பின்னாலயும் இந்த உலகம் இருக்கும்!' என்றார்.

அவரின் மகள் குறுக்கிட்டு, 'வருகிறோம். பார்க்கிறோம். ஆனால் கொஞ்சம்தான் பார்க்கிறோம். நான் பார்ப்பதுதான் சரி என்று சண்டை போடுகிறோம். அப்புறம் பார்த்தும் பார்க்காமலும், செல்கிறோம்!' என்றார்.

இவர்களின் வார்த்தைகள் எனக்கு ஆச்சர்யமாவர் இருந்தன. மிக எளிதாக வாழ்வைப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.
ஏரோது என்ன சாகாவரம் பெற்றவனா? அவனும் அழிந்தானே!

நாம் வாழும் இந்த கொஞ்ச நாட்களில், நாம் பார்க்கும் அனைத்தையும் அப்படியே இரசித்துவிட்டு, அடுத்தவர் பார்ப்பதையும், 'ஆகா' என தட்டிக்கொடுத்து, கடந்து சென்றால்,

நாமும் மாசில்லாக் குழந்தைகளே!

நாம் எல்லாருமே மாசில்லாக் குழந்தைகள்தாம்... வாழ்த்துக்கள்.


Saturday, December 26, 2015

கொண்டாட்டம்

'நதாலே கொன் இ துவோய்!' (Natale con i tuoi!)
'பாஸ்க்வா கொன் கி வோய்!' (Pasqua con chi vuoi!)
என்பது இத்தாலிய சொலவடை.

அதாவது, கிறிஸ்துபிறப்பு (கொண்டாட்டம்) உன் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்களோடு. உயிர்ப்பு (கொண்டாட்டம்) நீ விரும்புபவர்களோடு!

இத்தாலியனில் கிறிஸ்துமஸ் என்பது ஆண்பால். உயிர்ப்பு பெருநாள் என்பது பெண்பால்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா இல்லக் கொண்டாட்டத்தில் இங்கு முதன்மையானது உணவு:

24 டிசம்பர் மாலை 7 மணி. இந்த நேரத்தில் உண்ணும் உணவிற்குப் பெயர் 'செனோனி' (அதாவது, பெரிய இரவு உணவு). இந்த விருந்தில் முதன்மையாக இருப்பது மீன். குடும்பத்தினர் ஒரே மேசையில் அமர்ந்து இதை உண்பர். இந்த விருந்திற்கு பெரும்பாலும் மற்றவர்கள் அழைக்கப்படுவதில்லை.

25 டிசம்பர் மதியம் 1 மணி. இதுதான் முதன்மையான உணவு. இங்கே வீட்டில் உள்ளவர்களும், அழைக்கப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் இணைந்து உண்பர். இது ஏறக்குறைய 5 மணி வரை நீடிக்கும்.

26 டிசம்பர் மதியம் 1 மணி. 'சாந்தோ ஸ்தேஃபனோ' என்றழைக்கப்படும் இந்த நாளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் உண்பர்.

சிகப்பு - கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகளில், விருந்துகளில், இல்லத்தின் அலங்காரங்களில் சிகப்பு நிறம் மேலோங்கி நிற்கும். கடந்த தலைமுறையினர் இந்த நாளில் சிகப்பு நிற மேலாடை, உள்ளாடைகளும் அணிவார்களாம்.
நட்சத்திர பூ. நட்சத்திர பூக்கள் என்றழைக்கப்படும், சிகப்பு மற்றும் பச்சை கலந்த செடிகள் வீடு முழுவதும் வைக்கப்படும்.

பரிசுகள். இந்த நாட்களில் குழந்தைகளும், பெரியவர்களும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். குழந்தைகளுக்கு பெரியவர்கள் கிறிஸ்து பிறப்பு நாளில் 'சாந்தா கிளாஸ் கிப்ட்' என்றும், திருக்காட்சி நாளில் 'ஞானியர் கிப்ட்' என்றும் பரிசுகள் வழங்குவர்.

பானத்தோனே. பந்தோரோ. இந்த இரண்டும் இந்த நாட்களில் உண்ணப்படும் கேக் வகை. இவற்றோடு ஸ்புமாந்த்தே (அதாவது, ஷேம்ப்பைன்) அருந்துவர்.

குடில். எல்லா வீடுகளிலும் குடில் அமைத்திருப்பர். குடில் டிசம்பர் 8 அன்று அமைக்கப்பட்டு ஜனவரி 6 அன்று கலைக்கப்படும். வீட்டிற்கு உள்ளே, வெளியே நட்சத்திரங்கள் கட்டுவது கிடையாது. ஆனால் நட்சத்திரங்கள் கட்டுவது நம் ஊரில் அதிகம்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மதிய உணவிற்கு என் பங்குத்தந்தையின் சித்தி வீட்டிற்குச் சென்றோம். இனிய கொண்டாட்டம்.


வளனார்


ரோமில் கடந்த வாரம் நடைபெற்ற குடில் கண்காட்சிக்கு சென்றேன்.

40ஆம் ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உலகின் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 100 குடில்களை வைத்திருந்தார்கள்.

அதில் ஒரு குடில் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது (படத்தில் காண்பது).

வளனார் குழந்தை இயேசுவை கையில் தூக்கி வைத்திருக்க, மரியா களைத்துப் போய் உறங்கிக் கொண்டிருப்பார்.

நல்ல கற்பனை.

கிறிஸ்து பிறப்பு காலத்தில் மரியாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வளனாருக்கு அவ்வளவாக கொடுக்கப்படுவதில்லை.

ஆண்கள், என்னதான் வல்லவர்கள் என்றாலும், பிறப்பைக் காணும்போது, இறப்பைக் காணும்போது அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது. கையைப் பிசைந்து கொண்டு நிற்பார்கள்.
சத்திரத்தில் இடம் இல்லை! என்று சொல்லப்பட்டதே.

சத்திரத்தில் இடம் கேட்டவர் வளனாகத்தானே இருக்கும்.

மாட்டுக்கொட்டிலை கண்டுபிடித்தது யாராக இருக்கும்?

அதாவது, சாதாரண மக்களின் மனதில் இடம் பிடிக்க சாதாரண மனிதர்களால்தான் முடியும். பெரிய மனிதர்களின் பிரசன்னம் சாதாரண மனிதர்களுக்குப் பயமாக இருக்கும்.

வளனார் சாதாரண மனிதராக இருந்ததால் தான் என்னவோ, எளிதில் மாட்டுக்கொட்டிலில் இடம் வாங்கிவிட்டார்.

இயேசு பிறந்த அந்த இரவுப்பொழுதில் வளனார் அடைந்த அங்கலாய்ப்பு அளவில்லாமல்தான் இருந்திருக்கும்.

நிறைய குழப்பமும் இருந்திருக்கும்.

இது கடவுளின் மகனா? கடவுளின் மகன் என்றால் ஏன் இடம் கிடைக்கவில்லை? கடவுள் எல்லார் கனவுலயும் தூதரை அனுப்பியவர், இந்த சத்திரக்காரன் கனவுலயும் ஒரு தூதரை அனுப்பியிருக்கலாமே? அல்லது கடவுள் தூதரை அனுப்பியிருக்க, இந்த சத்திரக்காரன் அதை கண்டுகொள்ளவில்லையா?

யார் இந்த இடையர்கள்? ஏன் இந்த நட்சத்திரம்?

என நிறைய கேள்விகள் கேட்டிருப்பார்.

ஒருவேளை இவரின் எல்லாக் கேள்விகளுக்கும் கடவுள் அவரது கனவில் பதில் தந்திருக்கலாம். அதை நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாமல் விட்டிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், வளன் என்றும் ஆச்சர்யமே!


Friday, December 25, 2015

கடவுள்-நம்மோடு

'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்.
அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால்...
அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும்
அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் வல்லமையை அளித்தார்...'
(யோவான் 1:11-12)

கிறிஸ்து பிறப்பின் நோக்கம் யோவானின் இந்த இறுதி வரைதான்...

'நான் கடவுளின் பிள்ளை' என்ற அடையாளத்தை நமக்கு தந்தது இயேசுவின் பிறப்பு...

இந்த அடையாளத்தை நம் அன்றாட வாழ்வாக்கினால்...

இந்த ஒரு கிறிஸ்து பிறப்பே போதும்...

அவர் நம் உதடுகளில் சிரித்தார்...
அவர் நம் கண்களில் அழுதார்...
அவர்தான் கடவுள்-நம்மோடு...இம்மானுவேல்

கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்!

Wednesday, December 23, 2015

டீயை விட கப்பு

தாவீது அரசர் எப்பவெல்லாம் தன் அரண்மனையின் மேல்தளத்திற்கு செல்கிறாரோ, அப்பவெல்லாம் ஏதாவது ஒரு பாவம் செய்து விடுகின்றார்.

தூரத்தில் குளித்துக் கொண்டிருந்த பெத்சேபாவைப் பார்த்தவுடன், அவரை தன்வசமாக்கிக் கொள்ள விரும்பினார்.

நாளைய முதல் வாசகத்தில் மீண்டும் ஒருமுறை மேல்தளத்திற்கு செல்கிறார் தாவீது.

இப்போது அவர் கண்ணில் படுவது ஆண்டவரின் பேழை.

பரவாயில்லை. ஆண்டவர் இருக்கும் பக்கம் கொஞ்சம் கண்களைத் திருப்பியிருக்கிறார்.

ஆனால், ஆண்டவரின் இல்லத்தைப் பார்த்துவிட்டு, இறைவாக்கினர் நாத்தானைக் கூப்பிட்டு அவர் சொல்லும் வார்த்தைகள் தாம் யோசிக்க வேண்டியவை. அப்படி என்ன சொல்கிறார் அவர்?

'பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது.'

அதாவது, நான் வெயில், மழை படாத இடத்தில் இருக்கிறேன். ஆனால் ஆண்டவர் காய்ந்து கொண்டும், நனைந்து கொண்டும் இருக்கிறார்.

தாவீதின் இந்த வார்த்தைகள் கடவுளின் இல்லத்தின் மேலுள்ள அக்கறையைக் காட்டுகிறதா? இல்லை. அவரின் அக்கறையின்மையையே காட்டுகிறது. அதாவது, அரசனின் முதன்மையான பணி ஆலயத்தைப் பேணுதல். ஆனால், தாவீது அதை மறந்துவிட்டு, தன் அரண்மனையைப் பேணுவதில்தான் அக்கறை காட்டுகின்றார்.

தாவீது போட்ட பிட்டை அப்படியே திருப்பிப் போடுகின்றார் கடவுள்:

'நான் தங்குவதற்கு நீ கோவில் கட்டவா?
ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை அழைத்து அரசனாக்கியது யார்?
உன் உடனிருந்து உன்னை வழிநடத்துவது யார்?
உன் எதிரிகளை அழித்தது யார்?
உன்னைப் புகழுறச் செய்தது யார்?
நான்தான்...'

'உன் வாழ்நாள் முடிந்து நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது,
உன் இமை மூடுபவன் நானே.
நானே உனக்கு ஒரு கோவில் கட்டுவேன்.'

கடவுளின் இந்த வார்த்தைகள் சொல்வது என்ன?

'நான்தான்,' 'நான்தான்' என்று சொல்கிறாயே...உன்னால் எதுவும் செய்ய முடியாது. அனைத்தையும் உன்வழியாகச் செய்பவன் நானே என்று தாவீதுக்கு நினைவூட்டுகிறார் கடவுள்.
ஆக, செயலாற்றுவது நாமாக இருந்தாலும், நம்மில் செயலாற்றுவது கடவுளே.

தாவீதின் செயல்பாட்டை நம்ம ஊர் பக்கம், 'டீயை விட கப்பு சூடா இருக்கு!' என்று சொல்வார்கள்.

தாவீதுக்கு சொன்னதுபோலவே அழியாத வீட்டை இறைவன் இயேசுவின் வழியாகக் கட்டுகின்றார்.

'எல்லாம் என்னால்' என்ற நிலை விடுத்து,
'எல்லாம் அவரே!' என்று பற்றுவதே
நாளைய வாழ்க்கைப் பாடம்.


Tuesday, December 22, 2015

சுற்றமும் நட்பும்

'வீரபத்திரன் துணை...நிகழும் மங்களகரமான...'
என்று தொடங்கும் திருமண பத்திரிக்கை ('அழைப்பிதழ்' என்பது புது வார்த்தை)
எல்லாம் பெரும்பாலும்,
'தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து' என்று நிறைவடையும்.

ஒரு பேச்சுக்குத்தான், இல்லை ஒரு எழுத்துக்குத்தான், அப்படி எழுதுகிறார்கள். இதற்காக, நம் ஃபேஸ்புக் நண்பர்கள் 2000 பேரையும் கூட்டிக்கொண்டு போனால் என்ன ஆகும்?

எலிசபெத்தின் சுற்றமும், நட்பும்தான் நாளைய நற்செய்தி வாசகத்தின் மையம்.

'அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். 'மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என் மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்' என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.' (லூக்கா 1:24-25)

கபிரியேல் தூதர் செக்கரியாவுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றி முன்னுரைத்ததும், எலிசபெத்தைப் பற்றி லூக்கா இப்படித்தான் எழுதுகிறார். இதில் இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியவை:

அ. எலிசபெத்தின் வெட்கம் அல்லது கூச்சம். அதாவது, வயது முதிர்ந்த தனக்கு வளைகாப்பும், பேறுகாலமுமா என்ற கூச்சம். இதை அடுத்தவர்கள் கேள்விப்பட்டால் கேலி பேசுவார்களே எனப் பயந்து, தயங்கி, ஐந்து மாதங்கள் வீட்டிற்குள் இருக்கின்றார். (ஆனால், எலிசபெத்து மேடம், முதல் ஐந்து மாதங்கள் உடலில் காணத்தக்க மாற்றங்கள் இருக்காதே! நீங்க கடைசி ஐந்து மாதம்தானே யார் கண்ணில் படாமலிருக்க வேண்டும்! - ஏன் லூக்கா மாற்றி எழுதுகிறார்? எவ்வளவோ பேருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் லூக்காவுக்கு இந்த சின்ன மேட்டர் கூட தெரியாதா? தெரியும். பின் ஏன் மாற்றுகிறார்? அதுதான் இரண்டாவுது விடயம்.)

ஆ. 'அருள்கூர்ந்து இந்நாளில் ஆண்டவர் செய்தார்.' அதாவது, பிறக்கப்போகும் குழந்தையின் பெயர் அருளப்பர் (யோகான்னாஸ் - யோவான்). ஒரு குழந்தை கருவில் உருவாகும்போது அதன் முதல் ஐந்து மாதங்கள் மிக முக்கியமானவை. முதல் ஐந்து மாதங்களிலேயே குழந்தையின் மூளை மற்றும் உணர்வுகள் வடிவம் பெறத் தொடங்கிவிடுகின்றன. இந்த முக்கியமான பொழுதில் தன் ஒரே கடமையாக எலிசபெத்து செய்வது என்னவென்றால், தான் பெற்ற அருளை அப்படியே கருவில் இருக்கும் குழந்தைக்கு முழுமையாகக் கொடுக்கின்றார்.

அடுத்த நான்கு மாதங்கள் கண்டிப்பாக இவர் தன் சுற்றத்தோடு இருந்திருப்பார்.

ஆக, எலிசபெத்தின் தயக்கம் பயத்தினாலோ, கூச்சத்தாலோ வந்ததல்ல. மாறாக, தன் குழந்தைக்கு அருள் கொடுக்கும், தன் குழந்தை என்னும் மொபைலை ரீசார்ஜ் செய்யும் காலமாகத்தான் இருந்தது.

நாளைய நற்செய்தியில் வரும் எலிசபெத்தின் சுற்றத்தார்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறார்கள்.

அ. குழந்தை பிறந்தவுடன் தாயுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்
ஆ. 'என்ன பெயர் வைக்கலாம்?' என ஆர்வம் காட்டுகின்றனர்
இ. 'இந்த குழந்தை எப்படிப்பட்டதா இருக்குமோ?' என ஆச்சர்யப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சுற்றத்தார் அமைவது மிக அபூர்வம். ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு குடும்பம் எப்படி அவசியமோ, அதேபோலத்தான் சுற்றமும் அவசியம். தன் சுற்றத்தில், அக்கம் பக்கத்தில் தன் குழந்தைகளுக்கு வகுப்பு தோழர்கள் அல்லது தோழிகள் இருந்ததால், தங்களின் வெளியூர் வேலைக்கு 'நோ' சொன்ன பெற்றோர்களை அறிவேன்.

மற்றொரு எக்ஸ்ட்ரீம் என்னவென்றால், சில வீடுகளில் ஒரு குறிப்பிட்ட ஜன்னலைத் திறக்கவே மாட்டார்கள். ஏன்? திறந்தால் அடுத்த வீட்டுக்காரரின் முகம் தெரியும். அல்லது குரல் கேட்கும். இப்படியாக நாம் அறவே வெறுக்கும் சுற்றத்தார்களும் இருக்கிறார்கள்.

இது நம் மாநிலத்திற்கும், நம் நாட்டிற்கும் கூட பொருந்தும். நம் சுற்றத்து மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை. நம் சுற்றத்து நாடுகள் எந்நேரம் நமக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

சுற்றமும், நட்பும் - என்னைப் பொறுத்தவரையில் - நாம் சாப்பாட்டில் போடும் உப்பு மாதிரி.
உப்பு போடாமலும் சாப்பிடலாம்.
உப்பு சரியான அளவில் இருந்தால் தான் அது ருசி.
இல்லையென்றால் அது சாப்பாட்டையே கெடுத்துவிடும்.

எலிசபெத்துக்கு அமைந்தது நல்ல சுற்றமும், நட்பும்.

அவரின் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா அமைந்தது.

இவ்வளவு நாள் 'சைலண்ட்' மோட்ல இருந்ந நம்ம சக்கரியாவும் பேச ஆரம்பிச்சிட்டாரே!

வாழ்த்துக்கள் சக்கரி, எலிசா!


Monday, December 21, 2015

அன்னா

நாளைய முதல்வாசகத்தின் கதாநாயகி சாமுவேலின் அம்மா அன்னா.

முதல் ஏற்பாட்டு அன்னா எனக்கு என்றும் ஆச்சர்யம் தரக்கூடிய கதாபாத்திரம்.

எதற்காக?

'இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவரின் சக்களத்தி அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.' (1 சாமு 1:7)

அன்னாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதை ஒரு குறையாகச் சொல்லி அவளின் சக்களத்தி அவளைத் துன்புறுத்துகிறாள்.

இந்தக் கண்ணீரை ஆண்டவரிடம் முறையிட வருகிறார் அன்னா.

அங்கு என்ன நடக்கிறது?

ஏலி அவரை நோக்கி, 'எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து' என்றார். அதற்கு அன்னா, 'இல்லை! என் தலைவரே! நான் உள்ளம் நொந்த பெண்...ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறேன்.'

கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்க ரெண்டு கொடும அவுத்துபோட்டு ஆடுச்சாம் என்கிற கதையா, சக்களத்தி கொடுமையை கடவுளிடம் முறையிடப்போன அன்னாவுக்கு, குடிகாரி என்ற பட்டம் கிடைக்கிறது.

ஆனால், இங்கே எனக்கு அன்னாவிடம் பிடிச்சது என்னவென்றால், அவரின் திடமான உள்ளம். 'யார் என்ன சொன்னாலும், யார் என்னை எப்படிப் புரிந்து கொண்டாலும், என்னைப் பற்றி எனக்குத் தெரியும். என் அருமை எனக்குத் தெரியும். என் குறை எனக்குத் தெரியும்' என துணிவாக நிற்கிறார்.

இது எனக்கு நல்ல பாடம். என் அருமையை அடுத்தவரின் பாராட்டில் அல்லது தட்டிக்கொடுத்தலில் அல்லது உற்சாகப்படுத்துதலில் கட்டி வைக்காமல், நானே உணர்வதற்கு அன்னா என்னைத் தூண்டுகிறார்.

இரண்டாவதாக,

'இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன்.' (1 சாமு 1:27-28)

ரொம்ப வருஷமா குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அப்படி பிறந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்? தன்னைக் கேலி செய்த எல்லாரையும் கூப்பிட்டு, 'ஏன்டி, என்னயவா கிண்டல் பண்றீங்க? இங்க பாருங்க லட்டு மாதிரி ஒரு பையன் எனக்கு பிறந்திருக்கான்' என்று காட்டுவாள். அல்லது அவனைத் தன்னுடனே வைத்திருந்து, 'நீ தவமிருந்து பெற்ற மகன்' என்று அவனைப் பார்க்கும்போதெல்லாம், உள்ளம் குளிர்ந்திருப்பாள்.

ஆனால், அன்னா இப்படிச் செய்யவில்லை.

ஆண்டவருக்கு அர்ப்பணித்து விடுகிறார்.

இதை இவர் செய்ய இரண்டு காரணங்கள் இருந்திருக்க வேண்டும்:

அ. 'நான் என்னையே யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை.' அதாவது, கேலி பேசியவர்களின் கேலிப் பேச்சை ஒரு பொருட்டாகவே அவர் கருதவே இல்லை. தன் வாழ்வை தான் தேர்ந்து கொண்ட வழியில் வாழ்கிறார். நம்ம வாழ்க்கை பல நேரங்களில் நம்மை அடுத்தவர்களுக்கு 'ப்ரூவ்' பண்ணுவதிலேயே கழிந்துவிடுகிறது. இல்லையா? 'நான் படித்தவன், பட்டம் பெற்றவன், பணம் படைத்தவன், செல்வாக்கு படைத்தவன்' என ஒவ்வொரு நொடியும் அடுத்தவர்கள் முன் நம்மை நிரூபிக்க நினைக்கிறோம். அல்லது அடுத்தவர்களின் கேலிப் பேச்சை பொய்யாக்க நினைக்கிறோம். இந்த முயற்சியில் நமக்கு மிஞ்சியதெல்லாம் களைப்பும், இளைப்புமே. 

ஆ. 'தான் அதிகம் அன்பு செய்கின்ற ஒன்றை கடவுளுக்கு கொடுப்பது.' தான் பயன்படுத்தியதையோ, அல்லது தனக்கு தேவையில்லாததையோ கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதை விடுத்து, தன் உயிர், ஆவி என நினைக்கின்ற உயரிய தன் குழந்தையை கொடுத்து விடுகிறார். இது என் அர்ப்பண வாழ்வுக்கு அன்னா விடுக்கும் அழைப்பாகவே பார்க்கிறேன். கடவுளுக்குக் கொடுத்துவிட்ட ஒன்றோடு நான் சமரசம் செய்து கொள்ளவே கூடாது. வருத்தப்படவும் கூடாது. அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடாது.


Sunday, December 20, 2015

மெய்ப்பொருள்

தலைவி கூற்று:

என் காதலர் குரல் கேட்கின்றது.
இதோ, அவர் வந்துவிட்டார்.
மலைகள்மேல் தாவி வருகின்றார்.
குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.

என் காதலர் கலைமானுக்கு
அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.

இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்.
பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்.
பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.

என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:
'விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.
இதோ, கார்காலம் கடந்துவிட்டது.
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன.
பாடிமகிழும் பருவம் வந்துற்றது.
காட்டுப்புறா கூவும் குரலதுவோ
நாட்டினில் நமக்குக் கேட்கின்றது.
அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன.
திராட்சை மலர்கள் மணம் தருகின்றன.
விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.'

தலைவன் கூற்று:
பாறைப் பிளவுகளில் இருப்பவளே,
குன்றின் வெடிப்புகளில் இருக்கும்
என் வெண்புறாவே,
காட்டிடு உன் முகத்தை.
எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.
உன் குரல் இனிது!
உன் முகம் எழிலே!

நாளைய முதல் வாசகத்தில் (இபா 2:8-14) நாம் வாசிக்கும் இரண்டு பாடல்களே இவை. விவிலியத்தில் இன்னும் மறைபொருளாக உள்ள மூன்று நூல்களில் (யோபு, சபை உரையாளர், இனிமைமிகு பாடல்) ஒன்று இந்த நூல்.

யார், யாருக்காக இதை எழுதியது என்பது பற்றி நிறைய கருத்துக்கள் உள்ளன. ஆனால், இன்னும் மெய்ப்பொருள் காணவில்லை யாரும்.

நிற்க.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதல் மேன்மையாகக் கருதப்பட்ட, மக்கள் இயற்கையோடு ஒத்து வாழ்ந்த, ஓர் வாழ்வியல் சூழலில், ஒரு அவளும், ஒரு அண்ணலும் தங்கள் மனஓட்டங்களில் எண்ணியவை இப்பாடல்கள்.

இன்று நகரின் வெளியே அடுக்குமாடிக்குடியிருப்பின் 9வது மாடி குடியிருப்பின் ஒரு அவளும், கொஞ்சம் தூரத்தில், நகரின் இரைச்சலுக்கும், கூட்டத்திற்கும் நடுவில், நானும் இங்கே கொஞ்சம் இருந்துக்கிறேன் என, மற்ற வீடுகள் கொஞ்சம் நெளிந்து கொடுக்க, அந்த இடுக்கில் கட்டப்பட்ட லைன் வீடுகளின், கடைசி வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒரு அண்ணலும் பாடினால் எப்படி இருக்கும்?

அவள் கூற்று:

என் காதலரின் பைக் சத்தம் கேட்கிறது.
இதோ, அவர் வந்துவிட்டார்.
டிராபிக் சிக்னல் தாவி வருகின்றார்.
ரயில்வே கேட், வேகத்தடை, டெலிஃபோன் லிங்க் குழிகள் தாண்டி வருகின்றார்.

என் காதலர் பைக் ரேசில் கலக்கும் அஜித்துக்கு
அல்லது வேகமாய்ப் பறக்கும் சூர்யாவுக்கு ஒப்பானவர்.

இதோ, என் தரைதள பார்க்கிங்கில் தன் வண்டிக்கு சைட் ஸ்டேண்ட் போடுகின்றார்.
தன் ஹெல்மெட்டின் வைசர் ஊடே என்னைப் பார்க்கின்றார்.
தன் வண்டியின் 'ரேர் மிரர்' திருப்பி என் ஜன்னலைப் பார்க்கின்றார்.

என் காதலர் எனக்கு டெக்ஸ்ட் செய்கிறார்:
'இன்னும் எழுந்திருக்கலயா எரும மாடு (செல்லமாய்!)!
இதோ, ஊரே விடிஞ்சிடுச்சு.
பள்ளிக்கூட வேன்கள் எல்லாம் கடந்துவிட்டன.
கடைசிக் குடத்தையும் நிரப்பிய
உன் அப்பார்ட்மென்ட் தண்ணி லாரி கடந்துவிட்டது.
நைட் டியூட்டி பார்த்த வாட்ச் மேன் போய் புது ஷிப்ட் தொடங்கிவிட்டது.
எங்கோ ஆம்புலன்ஸ் வேகமாக அலறிக் கொண்டு போகும் சத்தம் கேட்கிறது.
எதிர்த் தெருவில் சுடச்சுட விற்கப்படும் பனியாரத்தின் நெய் மணக்கிறது.
வேப்பமர பிள்ளையார் கோவில் சூடம், ஊதுபத்தியின் நறுமணம் காற்றில் கலக்கிறது.
சீக்கிரம் வா! உன் இருட்டி உடை மாற்றி!
உன் அறையின் ஏசி ஆஃப் பண்ணி!
லிப்ட் எடுத்து தரைதளம் வா!'

அண்ணல் கூற்று:

கதவின் பின் நிற்பவளே,
கதவின் லென்ஸ் வழி என் முகம் பார்ப்பவளே,
காட்டிடு உன் முகத்தை.
கொஞ்சம் சிணுங்கு.
உன் வாய்ஸ் நல்லா இருக்கு!
உன் ஃபேஸ்கட் சூப்பரா இருக்கு!

காதலிலும் காத்திருத்தல் உள்ளதால்,
கடவுளுக்காய் காத்திருக்கும் இக்காலத்தில்
நாம் வாசிக்கின்றோம் இந்தக் கவிதையை!

ஆர்மீக்காரன்

நேற்று காலை நூலகத்திற்குச் செல்ல மெட்ரோ ஏறுவதற்குச் சென்றேன்.

நவம்பர் 13ஆம் தேதி பாரிசு தீவிரவாத தாக்குதலுக்குப் பின் உரோமையின் எல்லா மெட்ரோ ஸ்டேஷன்களிலும், இரண்டு இராணுவ வீரர்களை நியமித்திருக்கிறார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை வேறா. தீவிரவாத தாக்குதல்கள் வெள்ளிக்கிழமைகளில்தாம் அதிகம் நடத்தப்படுவதால், நேற்று இன்னும் அலர்ட்டாக இருந்தார்கள்.

டிக்கெட் சென்சாரில் என் டிக்கெட்டை வைத்து உள்நுழைந்தவுடன், இரண்டு இராணுவ வீரர்களில் வேகமாக வந்து, 'ஃபெர்மாத்தி!' (நில்!) என்றார். நானும் நின்றேன். இத்தனைக்கும் நேற்று என் பங்கைச் சார்ந்த ஒரு தாத்தாவோடு பேசிக்கொண்டேதான் உள்ளே சென்றேன். என்னை நிற்கச் சொன்ன ஆர்மீக்காரன் அந்த தாத்தாவை விட்டுவிட்டான்.

'ஆப்ரி இல் துவோ ஸைனோ எ ஜாக்கா!' (உன் பையைiயும், மேல் கோட்டையும் திற!' என்றான்.

'எதற்கு?' என்றேன்.

நான் கேட்ட கேள்வி எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

சற்று நேரத்தில் என் பின்னால் வந்த இன்னொரு இளைஞனையும் நிறுத்தி, நான் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அவன் தன் பேக்கைத் திறந்து காட்டிக் கொண்டிருந்தான்.

'உனக்கு சந்தேகம் இருந்தால் நீ திற! நான் திறக்க மாட்டேன்! ஆனால், திறந்து உள்ளே ஒன்றுமில்லையொன்றால், நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில், என்னை எல்லார் முன்னாலும் நீ சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்திருக்கிறாய்!' என்றேன்.

அவன் மற்றவனுக்கு சைகை செய்து மற்ற ஆர்மிக்காரனும் வந்தான்.

இவனுக்கு அவன் மேலதிகாரி என நினைக்கிறேன்.

'பேக்கைத் திறக்க மறுக்கிறான்!' என்று என்னைப் பார்த்து அவனிடம் சொன்னான்.

'திறங்க!' என்று நக்கலான மரியாதையுடன் சொன்னான்.

'முடியாது! வேண்டுமானால் நீங்க திறங்க!' என்றேன்.

அவன் திறக்க மாட்டான் என எனக்குத் தெரியும். ஏனெனில் ஜிப்பைத் திறந்தால் வெடிக்கும் குண்டுகள் இருக்கின்றன அல்லவா. அவன் எச்சரிக்கையாகவே இருந்தான்.

இதற்கிடையில் என் நிறத்தை ஒத்த பலர் ஆர்மிக்காரர்கள் நிறுத்தப்பட்டு தங்கள் பைகளை திறந்துகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

'ஏன் வெள்ளை நிறத்தவரை நீங்கள் நிறுத்துவதில்லை?' என்று அவனிடம் அடுத்த கேள்வி கேட்டேன். மேலும்,

'என்னை நிறுத்தும் உன் அடையாள அட்டையைக் காட்டு!' என்றேன்.

'நான் ஆர்மீக்காரன்!' என்றான்.

'நீ அணிந்திருக்கும் இந்த உடையை யாரும் அணியலாம். 100 யூரோக்கு கிடைக்கும்!' என்றேன்.

'நீ அட்டையைக் காட்டினால்தான் நான் பேக்கைத் திறப்பேன்!' என்றேன்.

அவன் தன் அட்டையை நீட்டினான்.

நான் பேக்கைத் திறந்து காட்டினேன். உள்ளே லேப்டாப், புத்தகம், வாட்டர் பாட்டில் இருந்தது.

'மன்னிக்கவும்! போகலாம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்!' என்றான்.

எனக்கு ஒரு பக்கம் அவமானமாக இருந்தது.

கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. துடைத்தும் துடைக்காமலும் வந்து நின்ற இரயிலை நோக்கி ஓடினேன். கடைசி பெட்டியில்தான் இடம் கிடைத்தது. ஏறி, அப்படியே யாரையும் பார்க்காமல் ஜன்னலை நோக்கித் திரும்பிக் கொண்டேன். கத்தி அழவேண்டும் போல இருந்தது.

'இதுல அவமானம் என்ன இருக்கு! பாதுகாப்பு காரணத்துக்காகத்தானே செக் பண்ணுனாங்க!'

என மூளை சொன்னது.

'அப்படி பாதுகாப்பு காரணம்னா, எல்லாரையும்ல செக் பண்ணணும். ஏன் என்னய மட்டும்? நான் என்ன தீவிரவாதி மாதிரியா இருக்கேன்? என் கலர இவனுக சந்தேகப்பட்டா, இந்தக் கலருக்கு நானா பொறுப்பு? வெள்ளையா இருக்கிறவன் குண்டு வைக்கமாட்டான்னு யார் இந்த நாய்களுக்கு சொன்னா? பாரிசு குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவன் எல்லாம் வெள்ளைத் தோல்க்காரன்தானே!'
என்று மனம் மற்றொரு பக்கம் புலம்பிக் கொண்டிருந்தது.

நான் இறங்க வேண்டிய இடம் வந்து இறங்கினேன்.

வெளியே பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைத்து,

'கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!' என எழுதியிருந்தது.

'போங்கடா நொன்னைகளா! உங்க வாழ்த்தை நீங்க உட்காரும் நாற்காலியில் வைத்து அதன் மேல் உட்கார்ந்துகொள்ளுங்கள்!' என்று சொல்லிவிட்டு வழிநடந்தேன்.

மனமெல்லாம் ஒரே யோசனை.

'ஒருவேளை இந்த இயேசு கொஞ்சம் கறுப்பா பொறந்திருந்தா,
நாமெல்லாம் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடுவோமா?'



Friday, December 18, 2015

புது நம்பர்

நேற்று மாலை ரொம்ப சீரியஸா படித்துக்கொண்டிருந்தபோது, அலைபேசியில் டிங் என்று ஒரு சத்தம். மெசஜ் வந்திருக்கு. கையை நீட்டி எட்டி எடுத்து, ஸ்கீரினை ஸ்லைட் பண்ணாமல் அப்படியே என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.

புதிய எண். அதன் முன் இத்தாலி நாட்டின் கோட் 39 என்று இருந்தது.

'ஹாய்' என்று மட்டும் இருந்தது.

'ஸ்லைட் டு அன்லாக்' என்பதை ஸ்லைட் செய்து திறந்தால்,

'ஹாய்! ஐ லவ் யூ சோ மச்!'

என்று இருந்தது.

புது நம்பரா இருக்கிறதே என்றாலும்,

'இது ஏதோ நம்ம பயபுள்ளையோட விளையாட்டுதான்' என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இன்று காலை கல்லூரிக்கு வந்தவுடன், என்னுடன் படிக்கும் அருட்தந்தை, 'டேய்! புது நம்பர்ல இருந்து மெசேஜ் அனுப்புனா பதில் அனுப்ப மாட்டாயா?' என்றார்.

'புது நம்பர் யாராக இருக்கும்' என்ற கிளுகிளுப்பு சட்டென்று அடங்கியது.

நிற்க.

நாளைய முதல் வாசகத்தில் சிம்சோனின் அம்மாவுக்கும், நாளைய நற்செய்தியில் எலிசபெத்தின் வீட்டுக்காரர் சக்கரியாவுக்கும், புது நம்பரிலிருந்து மெசேஜ் வருவதை வாசிக்கின்றோம்.

சக்கரியாவின் நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.

ஆலயத்தில் தூபம் காட்டிக் கொண்டிருந்தவருக்கு அடிக்கிறது ஜாக்பாட். அங்கு வந்த வானதூதர், 'உனக்கொரு மகன் பிறப்பான்...அவன் உன்னைப் போலவே இருப்பான்' என்று பாடுகிறார்.

இவருக்கு தலையும் புரியல, காலும் புரியல.

பதட்டத்தில், 'இது எப்படி எசமான் ஆகும்?' என்று கேட்டுவிடுகிறார்.

'நான் கடவுள் முன்னிலையில் நிற்கும் கபிரியேல் தூதர். நான் சொல்றதையே நீ நம்பலயா?' என்று சொன்னவர், அப்படியே ரிமோட் கன்ட்ரோலை சக்கரியாவை நோக்கி நீட்டி, 'ம்யூட்' பட்டனை அமுக்கி விடுகிறார்.

'ஏன்யா கேள்வி கேட்டது குத்தமா?' என்று நினைத்துக்கொண்டு வெளியே வருகிறார் சக்கரியா.

ஒரு ஆறு மாதம் கழித்து இதே வானதூதர் நாசரேத்துக்குப் போறார்.

அங்கே மரியாவுக்குத் தோன்றுகிறார். இதே மாதிரி, 'உனக்கொரு மகன் பிறப்பான்...அவன் கடவுளைப் போல இருப்பான்...' என்று பாடுகிறார்.

அங்கேயும் அதே கேள்வி, 'இது எப்படி எசமான் ஆகும்?'

ஆனால், நம்ம கபிரி ம்யூட் பட்டன் போடல. 'இது இப்படித்தான் ஆகும்' என்று விலாவாரியாக பதில் சொல்கின்றார்.

இப்ப நம்ம கேள்வி இதுதான்:

'ஏம்ப்பா கபிரி...சக்கரியா கேட்டா  ம்யூட் பண்றீங்க! மரியா கேட்டா விளக்கம் சொல்றீங்க!'

'ஆம்பளைக்கு ஒரு நியாயம்...பொம்பளைக்கு ஒரு நியாயமா?'

ஆனா, பொண்ணுங்க என்ன சொன்னாலும், மனசு இளசாகிவிடும் என்பது உண்மைதான்.

இரண்டு வாரங்களாக ஜெயா மேலிருந்த கோபம், இரண்டு நாட்களுக்கு முன் அவரின் வாட்ஸ்ஆப் பேட்டியை யுடியூபில் கேட்டவுடன், அவர்மேல் கொஞ்சம் இரக்கம் வந்துவிட்டது.

எதற்காக கபிரியேல் தூதர் சக்கரியா மேல் கோபப்படுகிறார்? அவரின் கோபம் நியாயமானதா?

நியாயமானதே.

எப்படி?

சக்கரியா ஒரு அருட்பணியாளர். திருச்சட்டம் கற்றவர். ஆலயத்தில் பணியாற்றுபவர்.

ஆக, அப்படிப்பட்ட ஒருவர் கடவுளின் செய்தியை நம்பாமல் இருக்கலாமா?

மரியா பாவம். கிராமத்துப் பொண்ணு. கடவள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆக, கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் அவரின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், ஆபத்து அதிகம். ஆனால், பல நேரங்களில் அருகில் இருப்பவர்கள்தாம் கடவுளின் செய்தியை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.

இல்லையா?


Thursday, December 17, 2015

மரியம் - யசப்

நாளைய நற்செய்தியில் மரியா, யோசேப்பு என்ற இரண்டு பெயர்களை வாசிக்கின்றோம்.

இந்தப் பெயர்களை வைத்து இன்று சிந்திப்போம்.

'மரியா' என்பதை எபிரேயத்தில் 'மரியம்' என்றும், 'யோசேப்பு' என்பதை 'யசப்' என்றும் எழுதுவர்.

எபிரேயத்தில் 'ம' (mēm) என்ற எழுத்துக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. வார்த்தையின் தொடக்கத்தில் அல்லது இடையில் வந்தால் அதை 'מ' என்றும், வார்த்தையின் இறுதியில் வந்தால் 'ם' என்றும் எழுதுவர். முதலில் வரும் 'מ'ல் கீழ்ப்பகுதி விரிந்து இருக்கும். இறுதியில் வரும் 'ם'ல் எல்லாம் முழுமையாக இருக்கும். மேலும் முதல் 'מ' பேறுகாலப் பெண்ணின் வயிறு போன்றும், இறுதி 'ם' மூடிய வட்டம் போலவும் இருக்கும் என்றும் சொல்லலாம்.

'மரியம்' என்ற வார்த்தையில் இந்த இரண்டு 'ம' (מ...ם) வருவது ஆச்சர்யம். முதல் 'מ' போல மரியாள் இயேசுவைச் சுமந்து இந்த உலகிற்கு தருகிறாள். இரண்டாம் 'ם' போல பாவம் இல்லாமல் வந்து, பாவமில்லாமலேயே மறைந்து போகிறார்.

'யசப்' என்ற வார்த்தையின் முதல் எழுத்து 'yōd'. இதுதான் எபிரேய எழுத்துருக்களில் மிகவும் சிறிய வடிவம் பெற்றது. 'இறைவார்த்தையின் ஒரு யோத்தாவும் கூட அழியாது' என்று இயேசு சொன்னபோது, அவர் சுட்டிக்காட்டியது இந்த எழுத்தைத்தான். 'யாவே' என்ற கடவுளின் பெயரை எழுத, '׳' என்ற இந்த எழுத்தைத்தான் இரண்டுமுறை எழுதுவர். இந்த எழுத்துக்கு 'கை' என்ற பொருளும் உண்டு. ஆக, இது வல்லமை அல்லது ஆற்றலைக் குறிக்கும். என்ன ஒரு முரண் பார்த்தீர்களா? இருப்பதிலேயே வலுவற்ற எழுத்துதான் வலிமையைக் குறிக்கப் பயன்படுத்துகிறது. மேலும், இந்த எழுத்து எண் எபிரேய எண் வரிசையில் 10ஐக் குறிக்கிறது. இன்றும் கூட கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுக்களில் சிறந்தவரே 10 எண் கொண்ட டிசர்ட் அணிய முடியும் - டெண்டுல்கரின் டிசர்ட் எண் 10. மேலும், எபிரேயத்தில் தொடக்கத்தில் உயிர் எழுத்துக்கள் இல்லாதபோது, இந்த எழுத்தே எல்லா உயிரெழுத்தின் இடத்திலும் பயன்படுத்தப்பட்டது.

இத்தணை குணங்கள் கொண்ட 'yōd' என்ற எழுத்தைக் கொண்டுதான் இரண்டாம் ஏற்பாட்டு நாயகன் இயேசுவின் பெயரும் தொடங்குகிறது.

மரியாவின் 'מ...ם' மற்றும் யோசேப்பின் '׳' (yōd) சேர்த்து எழுதினால் வரும் வார்த்தை 'מ׳ם' (மயிம்).

இந்த வார்த்தைக்கு 'கடல்' அல்லது 'தண்ணீர்' என்று பொருள்.

ஆம், மரியாவும், யோசேப்பும் கடல். அளந்து பார்க்க நினைத்தாலும் முடியாது.

அவர்கள் தண்ணீர். பிடித்துப் பார்க்க நினைத்தாலும் விரலிடுக்குகளில் நழுவி விடுவர்.

இவர்கள் வழியாகவே, இயேசு என்னும் ஊற்று மனுக்குலத்தின் தாகம் தீர்க்க வந்தது.

Wednesday, December 16, 2015

நிலா உள்ள வரையில்

'நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
கதிரவன் உள்ள வரையில் அவரது பெயர் நிலைப்பதாக.'
(திபா 72:7, 17)

இன்று காலை சாப்பிட்டுக் கொண்டே ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு வெளியே 3 சிட்டுக்குருவிகள் நின்றுகொண்டிருந்தன. இந்தக் குளிரில் இந்த சிட்டுக் குருவிகள் எப்படி ஒய்யாராமாக உட்கார்ந்திருக்கின்றன என்று ஆச்சர்யப்பட்டேன். ஜன்னலைத் திறந்து ஏதாவது சாப்பிடுவதற்கு போட்டால், ஒருவேளை அவைகள் பறந்துவிடும் என நினைத்து ஜன்னலைத் திறக்காமலே இருந்தேன்.

வீட்டுக்கூரையில் காக்கா இருக்கிறது என்றால் உறவினர்கள் வருவதாகச் சொல்வார்கள்.

சிட்டுக்குருவிகள் தூரத்திலிருப்பவர்கள் தரும் செய்தியை நமக்கு கொண்டுவரும் என்பது என் நம்பிக்கை. இந்தக் காரணத்திற்காகத்தான் செல்ஃபோன்களின் வருகைக்குப் பின் ஒட்டுமொத்தமாக சிட்டுக்குருவிகள், 'நாங்கள் எதற்கு இனி?' என நினைத்து தற்கொலை செய்துகொண்டன போல.

சிட்டுக்குருவிகள் கடல் கடந்து செய்திகளைக் கொண்டு செல்லுமா என்று தெரியவில்லை. ஆனால், அவைகள் எப்படியோ நாம் அனுப்பும் செய்திகளைக் கொண்டு சேர்த்துவிடுகின்றன.

இந்த ஆண்டு வேடந்தாங்கலில் நிறைய தண்ணீர். மழை பெய்த சில நாட்களில் வெளிநாட்டுப் பறவைகள் எல்லாம் வந்துவிட்டன. கடந்து ஆண்டு வராத பறவைகள் இந்த ஆண்டு வந்தது எப்படி? அல்லது இந்த நாட்களில் மழை பெய்யும், நாம் அதற்குள் புறப்படுவோம் என்று மூன்று, நான்கு மாதங்கள் பயணம் செய்து இந்தப் பறவைகள் எப்படி சென்னைக்கு வந்தன? அவைகளுக்கும் ஏதோ ஒரு இண்டர்நெட் இருக்கிறதல்லவா!

நாளைய திருப்பாடலில் வரும் இரண்டு உருவங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன: 'நிலா', 'கதிரவன்.'

'அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் இதே நிலா' என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா?

அன்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது, இயேசு, நம்ம தாத்தா, பாட்டி பார்த்த நிலா மற்றும் சூரியனைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். இல்லையா?

அல்லது

அன்று ஆபிரகாமை, ஈசாக்கை, யாக்கோபை, மோசேயை, தாவீதை, இயேசுவை, நம்ம தாத்தா, பாட்டியை பார்த்த நிலா மற்றும் சூரியன்தான் இன்று நம்மைப் பார்க்கின்றன.

ஆக, ஏதோ நாம் இறந்தாலும், ஏதோ ஒரு வகையில் இருக்க முடியும்.

தூரமாய் இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் நெருக்க முடியும்.

Tuesday, December 15, 2015

நீர்தாமா

'வரவிருப்பவர் நீர்தாமா?
அல்லது
வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?'
(காண்க. லூக்கா 7:19-23)

இயேசு தன்னை மெசியா என்று நேரிடையாகச் சொல்லாமல், மேற்காணும் கேள்விகளுக்குச் சுற்றி வளைத்து பதில் தருவது போல இருக்கிறது:

'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்.
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்.
தொழுநோயாளர் நலமடைகின்றனர்.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்.'

அதாவது, பழையவை மறைந்து எங்கே புதியவை தோன்றுகின்றனவோ,
அல்லது குறையானதொன்று நிறைவாக மாறுகிறதோ,
அங்கே இறைவன் இருக்கின்றார்.

அல்லது

இறைவன் இருக்கும் இடத்தில்
பழையவை மறைந்து புதியவை தோன்றும்,
குறையானது மறைந்து நிறைவானதாக மாறும்.



Monday, December 14, 2015

ஒரு அப்பாவும், இரண்டு மகன்களும்

'ஒரு அப்பா, இரண்டு மகன்கள்' இலக்கிய நடை விவிலியத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலக்கிய நடைகளில் ஒன்று: 'ஆதாம் - காயின், ஆபேல்,' 'ஆபிரகாம் - இஸ்மயேல், ஈசாக்கு,' 'ஈசாக்கு - ஏசா, யாக்கோபு,' 'யாக்கோபு - 11 மகன்கள், யோசேப்பு,' 'தந்தை - மூத்த மகன், ஊதாரி மகன்'. இந்த நிகழ்வுகளில் இளையவர் தந்தைக்கு ஏற்புடையவராவார். மூத்தவர் தள்ளிவைக்கப்படுவார்.

ஆனால் நாம் நாளைய நற்செய்தியில் காணும் நிகழ்வு சற்று வித்தியாசமாக இருக்கிறது. மூத்தவர் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். இரண்டாமவர் தள்ளிவிடப்படுகிறார்.

'வேலைக்குப் போ!' என்ற தந்தையின் கட்டளைக்கு, 'போக மாட்டேன்' என சொல்லிவிட்டு பின் போகிறார் மூத்தவர். 'போகிறேன்' எனச் சொல்லிவிட்டு போக மறுக்கிறார் இளையவர்.

இந்த இரண்டு வார்த்தைகளையும் உவமையிலிருந்து விலக்கி அப்படியே நம் வாழ்க்கைக்குக் கொண்டுவருவோhம். எப்படி?

இந்த இரண்டு சகோதரர்களுமே நம்மில் குடியிருக்கிறார்கள். எப்போது?

அ. நெடிய பயணம் செய்து வீட்டுக்கு நான் போகிறேன் என வைத்துக்கொள்வோம். வீட்டில் ஃப்ரீயா இருக்கலாம் என்று நினைத்து நான் போக, அங்கே என் உறவினர்கள் குடும்பம் ஒன்று வந்திருக்கிறது. அவர்களைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிடுகிறது. வந்தவர்கள் ஒரு வாரமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் கோபம் இன்னும் அதிகமாகிவிடுகிறது. உடனே நான் என்ன செய்கிறேன்? எனக்குள் முணங்குகிறேன். அல்லது அவர்கள்முன் என் அம்மாவை ஜாடையாகக் கடிந்து கொள்கிறேன். அல்லது அவர்களிடம் நேருக்கு நேர் கோபத்தைக் காட்டுகிறேன். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அப்படியே மனம் மாறி, அம்மாவிடம், 'அவங்க சாப்பிட்டாங்களா?' எனக் கேட்கிறேன். என் கோபம் எப்படி கரிசணையாக மாறியது? இப்படி நான் கனிவாக மாறுவேன் என்றால், எதற்காக நான் கோபப்பட்டிருக்க வேண்டும்? ஏன் இந்த விதண்டா வாதம்? யாரிடம் என்னை நிரூபிக்க இந்த கோபம்?

'அன்பு செய்ய மாட்டேன்' என்று சொல்லிவிட்டு 'அன்பு செய்வதும்', 'போக மாட்டேன்' என்று சொல்லிவிட்டு, பின் தோட்டத்திற்குப் 'போவதும்' ஒன்றுதானே.

ஆ.என்னிடம் ஒரு இ-புத்தக ரீடர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். ரொம்ப நாளாக நான் பயன்படுத்தாமல் இருக்கிறேன். 'என்ன இது சும்மாவே இருக்கிறது!' என நினைத்துக்கொண்ட நான் அதை எடுத்து நான் என் நண்பனுக்குக் கொடுத்துவிடுகிறேன். அவன் அதற்கு கவர் போட்டு, பஸ், ட்ரெயின் என எல்லா இடங்களிலும் புத்தகம் வாசித்துக்கொண்டே இருக்கிறான். சில மாதங்கள் கழித்து எனக்கு ஒரு புத்தகம் வாசிக்க வேண்டிய சூழல். அதை என்னால் எலக்ட்ரானிக் சாதனத்தில் தான் வாசிக்க முடியும். 'நான் கொடுத்ததை திரும்ப கொடு! நான் உனக்கு சும்மாதான் வாசிக்க கொடுத்தேன்! நீ வைத்துக்கொள்வதற்கு அல்ல!' என்று நண்பனிடம் வெட்கத்தைவிட்டு சொல்லி அதை நான் திரும்ப வாங்கிவிடுகிறேன்.

'வைத்துக்கொள்' என்று சொல்லி கொடுத்துவிட்டு, 'திரும்ப கொடு' என்று சொல்வதும், போகிறேன்' என்று சொல்லிவிட்டு 'போகாமல் இருப்பதும்' ஒன்றுதானே.

இந்த இரண்டு சகோதரர்களிடம் உள்ள பிரச்சினை என்ன?

எடுக்கின்ற முடிவில் உறுதியாக இல்லாமல் இருப்பது!

நாம் ஒரு முடிவு எடுத்தால், அது தவறோ, சரியோ, அதில் நிலையாயிருந்தால்தான் வெற்றிபெற முடியும். இல்லையா?

குரலும், வார்த்தையும்

இன்று காலை கட்டளை செபத்தின் இரண்டாம் வாசகமாக, தூய அகுஸ்தினாரின் கட்டுரை ஒன்றிலிருந்து ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்தது.

'குரலும், வார்த்தையும்'

இதுதான் வாசகத்தின் தலைப்பு.

என் நினைவில் பதிந்ததை அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறேன்:

'திருமுழுக்கு யோவான் குரல். இயேசுவே வார்த்தை.

குரல் மாறக் கூடியது. வார்த்தை மாறாதது.

குரல் அழியக் கூடியது. வார்த்தை அழியாதது.

நாம் அன்றாடம் ஒருவர் மற்றவரோடு உரையாடுகிறோம். குரலை எழுப்பி உரையாடுகிறோம். உரையாடல் முடிந்தவுடன் நம் நினைவில் குரல் தங்குவதில்லை. வார்த்தைதான் தங்குகிறது.

குரலிலிருந்து வார்த்தையைப் பிரித்துவிட்டால் அது வெறும் சத்தமே.

வார்த்தை தங்குவதற்குப் பதிலாக குரல் தங்கிவிட்டால் எப்படி இருக்கும்? நம்மால் பொருள் எதுவும் புரிந்து கொள்ள முடியாது.

ஆகையால்தான் யோவான் எப்போதும், 'நான் குறைய வேண்டும். அவர் வளர வேண்டும்' என்று சொன்னார். அதாவது, குரல் குறைய வேண்டும். வார்த்தை நிறைய வேண்டும்.'

நிற்க.

'குரல், வார்த்தை' என இரண்டு சொற்களை மட்டும் வைத்து இரண்டு பக்கங்கள் எழுதியிருக்கும் அகுஸ்தினார் ஓர் அறிவுக்கடல்.

நாளைய முதல் வாசகத்தில் பிலயாம் என்ற இறைவாக்கினரைச் சந்திக்கிறோம்.

இஸ்ராயேல் மக்களை சபிப்பதற்கு அழைத்து வரப்படுகின்றார் இவர். ஆனால், இஸ்ரயேல் மக்களைப் பார்த்தவுடன், ஆண்டவரின் ஆவி இவர்மேல் இறங்க, சபிப்பதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கின்றார்.

அவரின் குரல் ஒன்றுதான். ஆனால் வார்த்தை வேறாகிவிடுகிறது.

இந்த நாட்களில் நாம் அதிகமாக பரிசுப்பொருட்களை கொடுப்போம். வாங்குவோம். அவற்றை பெரும்பாலும் கலர் கலரான பேப்பரில் சுற்றிக் கொடுப்போம்.

நாம் வெறும் பேப்பரை மட்டும் வைத்துக்கொண்டு, பொருட்களை தூக்கி எறிவோமோ?

இல்லை.

ஏன்? பேப்பரைவிட பொருளே சிறப்பானது. மேலும், பேப்பர் எந்த விதத்திலும் பொருளின் மதிப்பை கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை.

அப்படியே, வார்த்தையைத் தழுவிக்கொள்வோம். குரலை விட்டுவிடுவோம்.


Sunday, December 13, 2015

நல்ல பாடம்தானே!

இன்று காலை திருப்பலி முடிந்தவுடன் எங்கள் கோவிலின் எதிரில் இருக்கும் ஒரு காஃபி பாருக்கு கார்மேலாவுடன் சென்றேன். காஃபி குடித்துக் கொண்டிருந்தபோது ருமேனிய நாட்டுப் பெண் ஒருவர் பாரின் உள்ளே வந்தார். வயது அவருக்கு 20 முதல் 25 இருக்கும். அழகாக இருந்தார். கையில் ஒரு வண்டிபோல இருக்கும் பெரிய பையைப் பிடித்திருந்தார். ருமேனிய நாட்டுப் பெண்கள் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் என்ற பேச்சு பரவலாக இருப்பதால், அவர்களை யாரும் பாருக்குள் அனுமதிப்பதில்லை. ஆனாலும், இவர் உள்ளே வந்தவர் நேராக கல்லாவில் இருக்கும் பார் ஓனரிடம் சென்றார். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார் ஓனரை நானும் இன்றுதான் பார்க்கிறேன். நம்ம ஊர் ஜெமினி கணேசனுக்கு கண்ணாடி போட்டது மாதிரி இருப்பார். அவ்வளவு உருவ ஒற்றுமை. நேரே அவரிடம் சென்ற அந்தப் பெண், 'இந்த பாரின் பாத்ரூமை கொஞ்சம் பயன்படுத்தலாமா?' என்று கேட்டார். வழக்கமாக இந்தப் பெண்கள் அடாவடியாக உள்ளே நுழைவார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் அனுமதி கேட்பது ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. ஓனர் என்ன சொல்வார் எனக் காத்துக்கொண்டே இருந்தேன். ஒரு நொடி மௌனமாக இருந்த அவர் தலையை அசைத்து 'சரி' என அனுமதி கொடுத்தார். 'நன்றி' என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே பெண் நகர்ந்தார்.

'ஒரு பெண்ணை மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த சமூகத்தின் கலாச்சார வளர்ச்சி இருக்கிறது' என்பார் எனக்கு எபிரேயம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்.

இந்த பார் ஓனர் இத்தாலிய நாட்டு உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பருக்கை சோறு போல தெரிந்தார்.

கடந்த ஒரு வாரமாக நம்ம ஊரில் நம்ம அனிருத் மற்றும் சிம்பு க்ரூப் ஒரு 'பீப் சாங்க்' வெளியிட்டிருக்கிறார்கள். 'பீப் சாங்' என்றால் மாட்டுக்கறி சாங் என்று நான் நினைத்தேன். ஆனால், கேட்கக் கூடாத வார்த்தைகள் வரும் இடத்தில் 'பீப்' என்ற சத்தம் நிரப்பப்பட்டு வரும் பாடலே 'பீப் சாங்' என பின் கண்டேன். காதலில் தோல்வி அடைந்த ஆண்களைப் பார்த்து பாடுகிறார் சிம்பு. மிக மோசமான வார்த்தைகள். இது தன் சொந்தப் பாடல் என்று வேறு சொல்கிறார். சொந்தப் பாடல் என்றால் அதை சொந்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. நேற்று நாம் பிறந்த நாள் கொண்டாடிய பாரதியின் மண்ணில், இன்று இந்த ஃபேஸ்புக், யுடியூப் கவிஞர்களால் பெண்கள் இழிவுபடுத்தப்படும்போது, நாம் கலாச்சாரத்தில் பின்நோக்கி போய்க்கொண்டிருக்கிறோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நிற்க.

'சென்னை வெள்ளம் படித்தவர்களையும், படிக்காதவர்களையும், வசதியானவர்களையும், வசதிக்குறைவானவர்களையும் வரிசையில் நிற்க வைத்துவிட்டது' என்று ஒரு வாசகர் இந்த வாரம் ஆனந்தவிகடனில் புலம்பியிருக்கிறார்.

இதற்கு பதில் தரும் மற்றொரு வாசகர், 'வரிசையில் நிற்பதை ஏன் கேவலமாகப் பார்க்க வேண்டும்? ஜப்பானில் சுனாமி வந்தபோது வரிசையில் நின்று அவர்கள் உதவி பெறவில்லையா? நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும், எதற்காக இந்த வறட்டு கவுரவம்? உதவி வேண்டி நிற்பது தவறில்லை. வரிசையில் நிற்பது தவறில்லை. கால்கடுக்க ரேஷனில் நின்று அரிசி வாங்கும் பெயர் தெரியாத ஒரு கிராமத்தானும் மனிதன்தான். வரிசையில் நிற்கிறான் என்பதற்காக அவன் தாழ்வானவன் அல்ல' என எழுதியிருந்தார்.

மதுரையில் நான் அருட்பணியாளராக இருந்தபோது, வங்கிக்குச் சென்றாலும், ரயில் நிலையம் டிக்கெட் முன்பதிவு என சென்றாலும், ஓட்டலில் ஆர்டர் கொடுத்துவிட்டு பார்சல் வாங்க காத்திருந்தாலும், நான் வரிசையில் நின்றதில்லை. அங்கு வேலை செய்யும் நண்பர்கள் இருப்பதால் நேரிடையாக அவர்களிடம் சென்று வேலையை முடித்துவிடுவேன். வெளியே வரும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் வரிசையைப் பார்த்தவுடன் எனக்குள் பெருமிதமாக இருக்கும். ஆனால், நான் செய்தது தவறு என்றே உணர்கிறேன். நான் என் நண்பரைப் பயன்படுத்தி என் வேலையை சீக்கிரம் முடித்தாலும், என் வேலை அடுத்தவரின் காத்திருப்பை இன்னும் அதிகரித்திருக்கிறதே. அவசரமாக நான் செல்ல வேண்டும் என்று நான் எனக்கே ஆறுதல் சொன்னாலும், மற்றவருக்கும் அவசரம் இருக்கத்தானே செய்யும். வரிசையில் நிற்பதை வெட்கம் என நானும் நினைத்ததற்கு வருந்துகிறேன்.

வரிசையில் நிற்பது எனக்கு எந்த அளவுக்குப் பிடிக்காதோ, அதே போல மற்றவர்களிடம் உதவி பெறுவதும் எனக்குப் பிடிக்காது. இதுவும் தவறு என்றே உணர்கின்றேன்.

எப்படி?

நான் திருமணம், புதுநன்மை என நண்பர்களின் குடும்ப நிகழ்வுகளுக்கு அழைக்கப்படும்போதெல்லாம் வெறுங்கையாய் செல்வதில்லை. ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வேன். என் அருட்பணி நண்பர்கள்கூட, 'இந்தா வாரான்யா கிப்ட் கடை' என்று கிண்டல் செய்வார்கள். அதாவது, ஒருவர் அழைக்கிறார் என்றால், அந்த அழைப்பிற்கு அல்லது அவர் செய்ததற்கு உடனடியாக பதில் அன்பு செய்துவிட வேண்டும் என்பதுதான் என் செயலின் பின்புலம். இதுகூட ஒருவகை ஆணவம்தான். அதாவது, யாருக்கும் நான் கடன்படக்கூடாது என்று நினைப்பது.

என் பிறந்த நாள் அன்று ரோசாப்பாட்டி விருந்துக்கு அழைத்தார். விருந்துக்குச் செல்லும்போது கையில் ஒயின் அல்லது கேக் கொண்டு செல்ல வேண்டும் என்பது இங்கே மரபு. இந்த மரபு எதற்காக? அதாவது அவர்கள் அளிக்கும் விருந்திற்கு பதில் விருந்தின் அடையாளமே இது. முந்தின நாளே நானும் இவை இரண்டையும் வாங்கி வைத்துவிட்டேன்.

ஆனால் விருந்துக்குச் செல்லுமுன் எனக்குள் உணர்வு. 'இன்று கையில் எதுவும் கொண்டு போகாமல் போவோம். என்ன நடக்கிறது?' எனப் பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டேன். வெறுங்கையோடு போனேன். வீட்டிற்குள் நுழையும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இருந்தாலும் அந்த உணர்வை அப்படியே ஏற்றுக்கொண்டேன்.

விருந்து ரொம்ப விமரிசையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு, அதை அப்படியே சமைத்து வைத்திருந்தார் பாட்டி. விருந்து என்றால் ஏழு ப்ளேட் வகை இருக்கும்: (0) அப்படைசர், (1) பாஸ்தா, (2) இறைச்சி (நான் முட்டை எடுத்தேன்), (3) சாலட், (4) பழம், (5) கேக் மற்றும் சாம்பைன், (6) ஐஸ்க்ரீம், (7) காஃபி. இவற்றில் ஐஸ்க்ரீம் தவிர நான் எல்லாம் எடுத்தேன்.

திகட்ட திகட்ட கவனித்தார் பாட்டி. அவரின் ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் வந்திருந்தனர். 'எங்கே அமர வேண்டும்' என்று இடத்தைக் காட்டியதிலிருந்து, 'கதவை வந்து திறந்துவிடும்வரை' கூடவே இருந்தார் பாட்டி. இந்தப் பாட்டிக்கு மற்றொரு பழக்கம் இருக்கிறது. செல்டிக் நாகரீகத்தின் பழக்கம் இது. அதாவது, வீட்டிற்கு வரும் விருந்தினர் தானே கதவு திறந்து செல்லக் கூடாது. அப்படி அவர் சென்றால் அவர் திரும்ப அந்த வீட்டிற்கு வரமாட்டாராம். ஆகையால் வீட்டின் உரிமையாளர்தான் கதவைத் திறந்து, விருந்தினரை வெளியனுப்ப வேண்டும். ஆக, யார் இந்த வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் உள்ளவர்கள்தாம் இறுதியிலும் கதவைத் திறந்து அனுப்புவார்கள்.

அன்று இரவு நான் கற்ற நல்ல பிறந்தநாள் பாடம் இதுதான்:

'வாழ்வில் நாம் அனுபவிக்கும் எல்லாவற்றிற்கும், நாம் திரும்ப கைம்மாறு செய்துவிட முடியாது. அப்படி செய்துவிட நினைக்கவும் கூடாது. நம் அன்பிற்குரியவர்கள் அள்ளிக் கொடுக்கும் கொடைகளை ஏந்த கைகளை விரிக்கவும் ஒரு மனப்பக்கவம் மற்றும் திறந்த உள்ளம் வேண்டும். இந்த உலகிற்கு நம்மை அனுப்பிய கடவுள் நம்மை வெறுங்கையாகத்தானே அனுப்பினார். 'நீ போ, அங்க உன் பெற்றோர்கள் இருப்பாங்க! உன் டாக்டர் இருப்பாங்க! இந்தா, இந்த கிப்ட் அவர்களுக்கு கொண்டு போ' என்று சொல்லி நம் கைகளில் ஒன்றும் கொடுத்துவிடவில்லையே. பெறுவதற்கு இதுதான் நமக்கு நேரம் என்றால் பெறுவோம். ஏனெனில் கொடுப்பதற்கு நேரம் வரும். அந்த நேரம் வரும்போது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.'

நல்ல பாடம்தானே!



Friday, December 11, 2015

எலியா

'எலியாதான் முதலில் வர வேண்டும்!'

நாளைய முதல் மற்றும் நற்செய்தி வாசகத்தின் மையமாக இருப்பவர் எலியா.

எலியா என்றவுடன் எனக்கு நினைவிற்கு வருவது இரண்டு:

ஒன்று, பவுலோ கோயலோ அவர்கள் எழுதிய 'ஐந்தாம் மலை' என்ற நாவல்.

இரண்டு, புனித நாடுகளுக்குச் சென்றபோது நான் பார்த்த கார்மேல் மலை.

கார்மேல் மலையில் இன்றும் எலியா கோபத்தோடு நிற்கின்றார்.

எலியாவிடம் நான் கற்றுக்கொள்ளும் பண்பு ஒன்று. அது என்ன?

தன் பணியில் நிறைவு காணாமல் அல்லது காண முடியாமல், தன் எதிரிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஓடும் எலியா, ஒரு கட்டத்தில் இறைவனிடம் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முறையிடுவார்.

இவர் ஒரு பெரிய இறைவாக்கினர்.

இவர் பெய் என்றால் மழை பெய்யும்.

வேண்டாம் என்றால் வானம் அடைத்துக் கொள்ளும்.

பாகாலுக்கு பலி செலுத்திய இறைவாக்கினர்களையும் கொன்றழித்துவிட்டார்.

தான் செல்லும் இடத்தில் எல்லாம் நன்மை செய்தார்.

இப்படி இருந்த ஒருவருக்கு ஏன் தற்கொலை எண்ணம் வர வேண்டும்?

இறைவன் ரொம்ப கூலாக ஒரு பதில் சொல்வார்.

'எல்லாவற்றையும் நீ செய்தாய்...நீ செய்தாய்... என சொல்லுகிறாயே...நீயா இவற்றையெல்லாம் செய்தாய்...உன்னிலிருந்து செய்தது நானல்லவா?'

இந்த வரிகளைப் போலவே மகாபாரதத்தில் கண்ணனின் சொற்களும் இருக்கும். கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்துச் சொல்வார்:

'நான் கொல்கிறேன்...நான் கொல்கிறேன்' எனச் சொல்கிறாயே? உண்மையில் நீயா கொல்கிறாய்? உன்னிலிருந்து கொல்வது நானல்லவா...

'புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே சாட்டினான், கண்ணனே காட்டினான்
கண்ணனே கொலை செய்கின்றான்...காண்டீபம் எழுக...உன் கைவன்மை எழுக'

எலியாவை நினைக்கும்போதெல்லாம் இதை நினைவில் கொள்வோம்: நம் செயல்களில் நாம் முதன்மையாக நின்றால் நமக்கு விரக்தி வந்துவிடலாம். இறைவனை நிற்க வைத்துவிடுவோம்...

Thursday, December 10, 2015

நீங்கள் ஆடவில்லை

இன்று காலை மின்னஞ்சலைத் திறந்தவுடன், பேராயர் இல்லத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. எனக்கு மட்டும் வந்த கடிதம் அல்ல. எல்லா அருட்பணியாளர்களுக்கும் பேராயர் அவர்கள் எழுதியிருக்கிறார்.எல்லாருக்கும் வந்த கடிதம் என்பதால் இதன் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

கடிதம் ஒரு நினைவூட்டல்.

நேரம் தவறாமை வேண்டும்.
செபம் செய்ய வேண்டும்.
அக்கவுண்ட் கீப் அப் பண்ண வேண்டும்.
டெய்லி பங்கு டைரி எழுத வேண்டும்.
ஆண்டு தியானம் செய்ய வேண்டும்.
மாதாந்திர தியானம் செய்ய வேண்டும்.
மறைமாவட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும்.
ப்ராஜக்ட் எழுதி கட்டடம் கட்டினால் உடனடியாக ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்.

இதை வாசித்தவுடன்,
'நான் இவற்றையெல்லாம் இளமைப்பருவமுதல் செய்து வருகிறேனே!'
என்று சொல்லணும்போல இருந்தது.

இன்று மதியம் நான் பணியாற்றும் உரோமை மறைமாவட்டத்தின் பொறுப்பு ஆயர் அவர்களிடமிருந்து ஒரு கடிதம். எல்லா ஆயர்களும் இன்றுதான் கடிதம் எழுதுவார்களோ என்னவோ! இதுவும் நினைவூட்டல் கடிதமே. இதுவும் எல்லாருக்கும் எழுதப்பட்டதே.

அப்படி இதில் என்ன எழுதியிருந்தது?

பங்கு அருட்பணியாளர்களின் மொழி - அன்றாட உரையாடலிலும், மறையுரையிலும் - புதிய கருத்தை முன்வைப்பதாக, உற்சாகப்படுத்துவதாக, ஆறுதல் படுத்தவதாக, எலக்ட்ரானிஃபைட் ஆக இருக்க வேண்டும்.

அருட்பணியாளர்கள் புதியவற்றை கற்றுக்கொள்ள திறந்த மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தங்கள் பங்குத்தளங்களில் உள்ள பொதுநிலையினரின் திறன்களைக் கண்டறிந்து அவற்றை உற்சாகப்படுத்த வேண்டும்.

குடும்பம்தான் ஒரு பங்கின் அடிப்படை அலகு. குடும்பம் சீராக இருந்தால் பங்கு சீராக இருக்கும். பங்குப்பணியாளரே ஒவ்வொரு குடும்பத்தின் ஆன்மீகத்தந்தை என்பதை நினைவில் நிறுத்தி, தன் மந்தையை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் கொண்டிருக்க வேண்டும்.

பிறரன்புச் செயல்கள். நம் கதவுகளைத் தட்டும் அனைவருக்கும் ஏதாவது ஒன்று கொடுத்து அனுப்ப வேண்டும். பொருட்கள் மட்டுமல்ல, அன்பான வார்த்தைகளைக் கூறுவதும், அறிவுரை வழங்குவதும்கூட பிறரன்புப் பணியே.

ஒருங்கமைவு. அருட்பணியாளர்கள் ஒருவர் மற்றவரை உடன்பிறந்த சகோதரர்கள் போல கண்டுபாவித்து, இந்த சகோதரக் குழுமத்தின் தந்தை ஆயர் என்பதை உணர்ந்து, ஒட்டு மொத்த மறைமாவட்டத்தின் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட வேண்டும். மறைமாவட்டம் வளராமல் ஒரு சில அருட்பணியாளர்கள் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல. அது வீக்கம். வீக்கம் என்றும் ஆபத்தானது.

இந்த இரண்டு மடல்களையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது,

'இன்னும் என்னில் ஏதோ குறைவுபடுகிறதோ?'

என்றே எண்ணத் தோன்றுகிறது.

'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் ஆடவில்லை' என்று ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருப்பதைவிடுத்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபட்டால் அதுவே சால்பு.


Wednesday, December 9, 2015

மென்மை வன்மை

'யாக்கோபு என்னும் புழுவே,
இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு!
நான் உனக்குத் துணையாக இருப்பேன்.'

(காண்க. எசாயா 41:13-20)

மெசியாவின் வருகை செய்யும் மற்றொரு மாற்றம் மென்மையானவை வன்மையாகும்.

மென்மைக்கு உருவகமாக புழுவும், வன்மைக்கு உருவகாக போரடிக்கும் கருவியும் சொல்லப்படுகிறது.

புழு - நெளியக் கூடியது. ஏனென்றால் அதற்கு முதுகெலும்பு அல்லது எலும்பு இல்லை. திடமானது எதுவும் அதில் கிடையாது. நாம் எலும்பு இல்லாமல் வெறும் சதையாக இருந்தால் எப்படி இருக்கும்? நம்மைக் கொடியில்தான் தொங்கவிட வேண்டும். நம்மால் உட்கார, நிற்க முடியாது.

இப்படிப்பட்ட மென்மையான ஒன்றை இறைவன் எப்படி மாற்றுகிறார் என்றால் போரடிக்கும் கருவியாக.

கிராமங்களில் தட்டைப்பயிறு, பாசிப்பயிறு போன்றவற்றை போரடிப்பதற்காக சாலைகளில் பரப்பி வைத்திருப்பார்கள். அவற்றின் மேல் செல்லும் வாகனங்களின் வன்மை அவற்றை உடைத்து பிரித்துவிடும். நெல்லைப் போரடிக்க, பயிறைப் போரடிக்க சில நேரங்களில் நீண்ட குச்சி அல்லது கம்பியையும் சிலர் பயன்படுத்துவதுண்டு. இதன் தன்மை எப்படி இருக்க வேண்டுமென்றால் வளைந்து போகாததாக, உடையாததாக, நெளியாததாக இருக்க வேண்டும். சிறிய நெளிவு இருந்தாலும் முழுமையான பலன் கிடைக்காது.

முழுமையான மென்மையை முழுமையான வன்மையாக மாற்றுகிறார் இறைவன்.

இப்படி வன்மையாக மாற்றியது நெளியாது என்பதற்கு இறைவாக்கினர் இன்னும் ஒரு உருவகம் தருகின்றார். இந்த போரடிக்கும் கருவியை வைத்து எதை அடிப்பார்களாம்? மலைகளையும், குன்றுகளையும். கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவிற்கு இருக்கிறது இறைவாக்கினரின் கற்பனை.

Tuesday, December 8, 2015

புதிய ஆற்றல்

'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.
கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்.
அவர்கள் ஓடுவர். களைப்படையார்.
நடந்து செல்வர். சோர்வடையார்.'
(காண். எசாயா 40:25-31)

யூபிலி ஆண்டு தொடங்கியாயிற்று.

யூபிலி ஆண்டில் முதல் நாள் இருக்கும் மகிழ்ச்சி, துள்ளல், புத்துணர்ச்சி ஆண்டு முழுவதும் தொடர வேண்டும். இல்லையா?

அதாவது, இன்று நாம் ஓடும் ஓட்டம் களைப்படையாமலும், நாம் நடக்கும் நடை சோர்வடையாமலும் இருக்க வேண்டும்.

களைப்பும், சோர்வும் இராது என்கிறது நாளைய முதல் வாசகம்.

நேற்று இரவு பட்டினத்தாரின் உடல்கூற்றுவண்ணம் பாடலைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். மனித வாழ்க்கை சுழற்சியை 12 நிகழ்வுகளாகப் பதிவு செய்கின்றார். இந்த 12க்கும் தொடர்பாக மேலைநாட்டு உளவியிலில் ஏதாவது கருத்து இருக்கிறதா என்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, எர்னஸ்ட் பெக்கர் அவர்கள் எழுதிய 'The Denial of Death' (1973) என்ற புத்தகம் கண்ணில் பட்டது.

நாம் இரண்டு உலகில் வாழ்கின்றோம். ஒரு உலகம் உடல் சார்ந்த உலகம். மற்ற உலகம் உள்ளம் சார்ந்த உலகம். இந்த உடல் சார்ந்த உலகம் அழிந்துவிடும். ஆகையால் இந்த அழிவை நாம் எதிர்கொள்ள உள்ளம் சார்ந்த உலகத்தில் ஏதாவது சாதிக்க நினைக்கிறோம். 'நான் ஒரு பெரிய ஹீரோ ஆக வேண்டும்', அல்லது 'என் தனிப்பெரும் இருப்பைக் காட்ட வேண்டும்' என அன்றாடம் முயற்சி செய்கின்றோம்.

இவருடைய மாணவர் ஒருவர் (Mark Manson) நம் வாழ்க்கை நிலையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கின்றார்: Mimicry, Self-Discovery, Commitment, Legacy.

நிலை 1 Mimicry (Age 0 to 19): இந்த நிலையில் நாம் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்களோ, அதை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறோம். நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உணவுப்பழக்கம், மொழி, கலாச்சாரம், உடை என அனைத்தையும் நாம் அடுத்தவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறோம்.

நிலை 2 Self-Discovery (Age 20 to 34): இந்த நிலையில் நாம் நம் வரையறைகளைக் கண்டுபிடிக்கிறோம். இவைகள் என்னால் முடியும். இவைகள் என்னால் முடியாது. இதுதான் நான் என முடிவெடுப்பது இந்த நிலையில்தான்.

நிலை 3 Commitment (Age 35 to 60): நாம் வாழ்கின்ற இந்த குறுகிய ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது. எல்லா நாடுகளுக்கும் செல்ல முடியாது. எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. ஆனால் என்னில் சிறந்தது எது என்று நான் நிலை 2ல் தேர்ந்துள்ளதை இந்த நிலையில் நான் செயல்படுத்த வேண்டும். ஆசிரியராக நான் முடிவெடுத்திருக்கிறேன் என்றால், ஐயோ, டாக்டர் ஆகலையே என வருத்தப்படக் கூடாது. எடுத்த நிலையில் நன்றாக செயல்பட வேண்டும்.

நிலை 4 Legacy (Age 61 to 0): இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த நிலை கடந்துவிடும். நடந்த அனைத்திற்கும் நன்றி கூற வேண்டிய நிலை இந்த நிலை. முடிந்தவரையில் நமக்கு கீழ் இருக்கும் இளம் தலைமுறையை உந்தித்தள்ளுவதும், அவர்களை உற்சாகப்படுத்துவதும் இந்த நிலையில் அவசியம்.

நான் இந்த நிலைகளை என்னில் வைத்துப் பார்த்தபோது, நிலை 2 முடிந்து, நிலை 3க்குள் நுழைகிறேன். இதுதான் நான் என்று என்னையே அறியும் நிலை முடிந்துவிட்டது. என் கைக்கு அகப்படாத ஒன்றைத் தேடுவதும், அதை அடைய முயல்வதும் மடமை. 'இதுதான் என் தனித்தன்மை' என்று கண்டுவிட்ட ஒன்றை நான் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். 'அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்!', 'அந்த ஊருக்குப் போய் அந்த வேலை செய்தால் நன்றாக இருக்கும்' என்று நான் இன்னும் கொண்டிருப்பது 'Peter Pan Syndrome' (அதாவது, எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம்).

இந்த நிலைகள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் நாம் ஏதாவது விபத்து அல்லது இழப்பின் வழியாக ஒரே நிலையில் தங்கிவிடலாம். அல்லது அந்த நிலை நம்மைப் பின்னோக்கி இழுக்கலாம். மேலும், ஒரு நிலையிலிருந்து மற்ற நிலைக்கு கடந்து செல்வது, ஏதோ இரவில் தூங்கி காலையில் எழுவது போல இருப்பதன்று. கொஞ்சம், கொஞ்சமாக நடக்கும் நிகழ்வே இந்த மாற்றம். இந்த மாற்றம் நிகழ நாம் சிலவற்றை இழக்க வேண்டும். சிலவற்றை பிடித்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், நாம் எவ்வளவு பெரியநிலையில் நம் தனித்தன்மையை நிலைநிறுத்தினாலும், காலச்சக்கரம் சுற்றி வரும்போது, நம் சாதனைகள், நம் இருப்பு எல்லாம் மறக்கப்படும்.

இதுதான் வாழ்க்கை.

ஆனால், இதுதான் வாழ்க்கை என்பதற்காக, 'இப்படித்தான் நான் இருப்பேன்' என நம்மையே கூட்டுக்குள் அடைத்துக்கொள்ளலாமா? நோ பாஸ்.

நாம் ஒவ்வொருவரும் இருக்கும் வாழ்க்கை நிலையில் நாம் கழுககள் போல புத்துயிர்பெற்ற பறக்க இறைவன் இந்த யூபிலி ஆண்டில் அருள்கூர்வாராக.

Monday, December 7, 2015

யூபிலி ஆண்டு

நாளை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை தொடங்குகிறோம்.

நாளை தொடங்கும் இந்த யூபிலி ஆண்டு 20 nov, 2016ல் நிறைவு பெறும்.

இது இறைஇரக்கத்தின் ஆண்டு அல்ல. அதாவது, மதியம் 3 மணிக்கு நாம் சொல்லும் இறை இரக்கத்தின் செபமாலை அல்லது வழிபாட்டை ஊக்குவிப்பதற்கான ஆண்டு அல்ல.

'தந்தையைப் போல இரக்கமுள்ளவர்களாய்' என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டாடப்படும் இந்த ஆண்டில், நாம் இறைவனின் இரக்கத்தைப் பெறவும், அதை மற்றவர்களுக்கு வழங்கவும் அழைப்பு பெறுகிறோம்.

உரோம் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சாலைகள் எல்லாம் தண்ணீர் ஊற்றிக் கழுவப்படுகின்றன.

டிவி, பத்திரிக்கை எல்லாவற்றிலும் யூபிலி பற்றிய செய்திகள்தாம் இருக்கின்றன.

இதற்கு முந்தைய யூபிலி ஆண்டு 2000ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

காணமுடியாத இறைவனின் காணக்கூடிய முகமாக வந்த இயேசுவை, அமல உற்பவி மரியாள் பெற்றெடுத்தார்.

தொடக்கப் பாவத்திற்கு எதிர்வினையாக கடவுள் தண்டனைக்குப் பதிலாக, தன் இரக்கத்தால் பதில் தந்தார்.

இறைவன் தரும் இரக்கம் நம் இதயங்களில் கனி தருவதாக!

இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைவதாக!


Sunday, December 6, 2015

நெடுஞ்சாலை

அங்கே நெடுஞ்சாலை ஒன்று இருக்கும். அது 'தூய வழி' என்று பெயர் பெறும்.தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார். அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.

(காண் எசாயா 35:1-10)

கடவுளின் மீட்பு பற்றி நாளைய முதல் வாசகம் பேசுகின்றது.

கடவுளின் மீட்பு என்பது ஒரு கொடை என்றுதான் நினைக்கிறோம்.

ஆனால், நன்றாகப் பார்த்தால் அர்த்தம் கொஞ்சம் மாறுபடுகிறது.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் கைகளில் திணிக்கப்படுவது அல்ல மீட்பு. அதை நாம் தான் கைகளை விரித்துப் பெற வேண்டும். மேலும் கைகளை விரித்துப் பெறுவதற்கும் பக்குவம் வேண்டும். ஆக மீட்பு என்பது கொடை மட்டுமல்ல. அது நம் கடமை அல்லது பொறுப்பும் கூட.

இந்தக் கருத்தை சாலை என்ற உருவகம் வழியாகப் பதிவு செய்கிறார் எசாயா.

'தூய வழி' என்றழைக்கப்படும் இந்த நெடுஞ்சாலையில் கடந்து செல்ல தூய்மை அவசியம். எந்த வகை தூய்மை என்பது பற்றி குறிப்பு இல்லை.

ஆனால், தீட்டுப்பட்டோர் இதில் கடந்து செல்ல முடியாது.

மேலும், பாதை தவறி கூட இதில் நுழைந்துவிட முடியாது.

ஒருவர் தானாக முடிவெடுத்து, அதற்கான தயாரிப்புகள் செய்து இந்த சாலையில் நுழைய வேண்டும். இல்லையா?


Saturday, December 5, 2015

பெயரற்ற மனிதன்

யோசேப்பு புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு,
'என்ன தேடுகிறாய்?' என்று அவரைக் கேட்டான்.
யோசேப்பு, 'என் சகோதரர்களைத் தேடுகிறேன்.
அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்' என்றார்.
அதற்கு அம்மனிதன், 'அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள்.
தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக்கொண்டதை நான் கேட்டேன்'
என்று பதிலளித்தான்.

(தொநூ 37:15-17)

ஹெரால்ட் குஷ்னர் அவர்கள் எழுதிய, 'Living a Life that Matters' என்ற புத்தகத்தை கடந்த வாரம் வாசித்தேன்.

முதல் ஏற்பாட்டு யாக்கோபின் வாழ்வை மிக அழகாக எடுத்துச்சொல்கின்றார்.

மேற்காணும் நிகழ்வை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

தன் சகோதரர்களைத் தேடி அலையும் யோசேப்பு வழிதவறி அலைவதைக் கண்டு ஒரு மனிதன் விசாரிக்கிறான்.

விவிலியம் வார்த்தைகளை வீணாக்குவதில்லை.

இந்த மனிதனைப் பற்றி எதற்காக ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.

இந்த மனிதன் யார்?

இந்த மனிதன் ஒரு வானதூதர் என்கின்றனர் யூத ரபிக்கள்.

இந்த மனிதன் மட்டும் யோசேப்பைப் பார்க்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?

'யோசேப்பு தன் சகோதரர்களைச் சந்தித்திருக்க மாட்டார்.
அவர்கள் அவரை மிதியானியர்களிடம் விற்றிருக்க மாட்டார்கள்.
அவர் எகிப்துக்கு சென்றிருக்க மாட்டார்.
பாரவோனின் அரண்மனையில் ஆளுநராக இருந்திருக்க மாட்டார்.
பெரிய பஞ்சத்தில் எகிப்து அழிந்திருக்கும்.
இஸ்ரயேலர்கள் யாரும் எகிப்தைத் தேடிப் போயிருக்க மாட்டார்கள்.
பாரவோன் அவர்களை அடிமைப் படுத்தியிருக்க முடியாது.
கடவுள் இறங்கி வந்து அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியாது.
மோசே, யோசுவா, தாவீது, சாலமோன்
என யாரும் வந்திருக்க மாட்டார்கள்.
நாம் கையில் வைத்திருக்கும் விவிலியமும் இருந்திருக்காது!'

நான் ஒற்றை மனிதனால் வாழ்வில் என்ன செய்ய முடியும்?

என் வாழ்வால் யாருக்கு என்ன பலன்?

இந்தக் கேள்விகள் எழும்போதெல்லாம்

இந்தப் பெயரற்ற மனிதனை எண்ணிக்கொள்ளலாமே.

நாம் சின்னவராக இருந்தாலும், கொஞ்ச வார்த்தைகள் பேசினாலும், அது வரலாற்றின் போக்கையே மாற்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

Friday, December 4, 2015

இதுதான் வழி

நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.

(காண். எசாயா 20:19-21, 23-26)

எப்பவெல்லாம் நம்ம பேட்டரி ட்ரையா இருக்கோ, அப்போதெல்லாம் திருவருகைக்கால வாசகங்களை எடுத்து வாசிக்கலாம்.

வீட்டுல ஒன்னுமே இல்லை. யாரும் கண்டுக்கவே மாட்றாங்க. நல்ல வேலை இல்லை. படிப்பு இல்லை. இன்னும் திருமணம் ஆகல. இருந்தா என்ன இறந்த என்ன. இப்படி புலம்பிக் கொண்டு கையில் கிடைத்த மஞ்சள்பையில் ஒரு சட்டையும், பேண்டும் எடுத்து வைச்சிகிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி வரும் இளைஞன், அங்கிருக்கும் கிளி ஜோசியக்காரனின் கிளி மேல் இரக்கப்பட்டு, அவன் முன் அமர, அந்த கிளி எடுத்து தந்த சீட்டை வைத்து, 'நீ அப்படி இருப்ப, இப்படி இருப்ப!' என்று பக்கம் பக்கமாக சொல்லுவானே அந்த பாசக்கார பயபுள்ள, அப்படி ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றன இன்றைய நாட்களில் நாம் வாசிக்கும் வாசகங்கள்.

'வழி'

இதைக் கண்டுபிடிக்க முடியாமல் சில நேரங்களில் நம் வாழ்வே முடிந்துவிடுகிறது.

நாம் வந்த வழி சரிதானா, போகும் வழி சரிதானா, வழியில் நாம் சந்திப்பவர்கள் சரிதானா என்று நாம் வழியைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

அவனை மாதிரி நாம அந்த வழியில போயிருக்கலாமே என்றும், ஐயோ இந்த வழியில வந்துட்டோமே என்றும் கூட புலம்புகிறோம்.

நேர்வழி. குறுக்கு வழி. தனி வழி. பொது வழி. மாற்று வழி. சுற்று வழி.

என வழிகள் ஏராளம்.

எந்த வழி செல்ல? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, எல்லா வழியும் அறிந்த இறைவன்தாமே வழிகாட்டுவார் என்கிறது நாளைய முதல் வாசகம்.

இன்று கூகுள் மேப்ஸ், நோக்கியா மேப்ஸ் என கையடக்கக் கருவிகள் நமக்கு வழி காட்டக் காத்திருக்கின்றன. இவை நம் வெளிப்பயணத்திற்கு வழி காட்டுகின்றன.

ஆனால், மனிதன் தன் வாழ்வில் செல்லும் மிக நீண்ட வழியான உள்பயணத்திற்கு யார் வழிகாட்டுவார்?

'நானே!' என்கிறார் இறைவன்.


Thursday, December 3, 2015

கண்ணீரும், தண்ணீரும்

மழை வெள்ளம் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்ததால், வீட்டைக் காலி செய்து வேறொரு வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த தன் மகளைக் காண வந்திருந்தாள் அவளின் தாய்.

மகளின் கோலம் கண்டவள் வெளியே சென்றாள். நகரின் மேலான இடம் எது என்று தேடினாள். வீடு ஒன்று வாடகைக்கு தயாராக இருக்கக் கண்டாள்.

தன் மகளின் வீட்டுக்கு மீண்டும் ஓடியவள், ஒரு 'குட்டியானையைப்' பிடித்து விறுவிறுவென்று எல்லாவற்றையும் ஏற்றி, முன்னிருக்கையில் தான், தன் மகள், மகளின் இரு குழந்தைகள் என அமர்ந்து புதிய வீட்டுக்குப் பயணமானாள்.

புதிய வீட்டின் பிரமிப்பு கண்டு, 'அப்பாடா' என ஆச்சர்யப்பட்டாள் மகள்.

'ஆச்சி, நீ மட்டும் வரலைன்னா அம்மா இன்னும் அழுதுகிட்டே அந்த வீட்டுல இருந்திருப்பா' என்றாள் மகள்.

'உன் அம்மாவின் கண்ணீரும் அப்போ அந்தத் தண்ணீரில் சேர்ந்து இன்னும் நம்மை ஆழ்த்தியிருக்கும்' என்றாள் ஆச்சி.

சென்னை மற்றும் கடலோர நகரங்கள் இன்று தண்ணீரில் மிதக்கின்றன.

'நெருப்பு, தண்ணீர்' - இந்த இரண்டும் எந்தப் பொருளில் பட்டாலும் ஆபத்து பொருளுக்கே.

நிறைய இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட சென்னைக்கு மட்டும் ஏன் இத்தனை கூப்பாடு? என்றான் என் நண்பன்.

சென்னை என்பது ஒரு டைட்டானிக் கப்பல் போல. இது தங்கள் வாழ்வை மேம்படுத்தும் என்று இங்கே தொங்கிய கயிற்றையவாது பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தங்கள் ஊர்களை விட்டு வந்து இங்கே குடியேறியவர்கள் பலர். ஆiகாயல்தான் இதன் பெயர் வந்தாரை வாழ வைக்கும் சென்னை. சென்னைக்குப் போனா எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்வார்கள். இது பொய் இல்லை. உண்மைதான். எனக்கும் சென்னைமேல் தீராத காதல் உண்டு. வாழ்ந்தால் சென்னையில்தான் வாழணும் என நினைத்திருக்கிறேன். டைட்டானிக்கில் எல்லா வசதிகளும் இருந்தும் அது மூழ்கிவிட்டது. இதற்கான காரணங்கள் மூன்று:

அ. 'கடவுளே நினைத்தாலும் இதைக் கவிழ்க்க முடியாது' என்று டைட்டானிக் நிறுவனம் விளம்பரம் செய்தது. இந்த நம்பிக்கையில்தான் தேவையான மீட்பு கருவிகள்கூட அவர்கள் கொண்டு செல்லவில்லை. சென்னை வாழ் மக்களும், அரசும் இதுவரை அப்படித்தான் நினைத்திருந்தது.

ஆ. தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை டைட்டானிக் ஏற்கவில்லை. 'பனிப்பாறை இருக்கிறது. வேறு பாதையில் செல்லுங்கள்' என்ற படகின் எச்சரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை டைட்டானிக். வானிலை எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை சென்னை.

இ. வாழ்க்கைப் படகுகள் குறைவாக இருந்தன டைட்டானிக்கில். இதே நிலைதான் சென்னையிலும்.

நேற்று காலை முதல் சமூக வலைத்தளங்கள் வழியாக உதவிகள் கேட்கப்படுகின்றன, வழங்கப்படுகின்றன.

அதில் ஒருவரின் டுவிட்டர் எனக்குப் பிடித்தது:

'உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யணும்னா சொல்லுங்க. நான் செய்றேன். என்னால் முடிந்த அளவு!'

மற்றொரு இடத்தில், 'எங்களுக்கு உணவு போதும், அடுத்த வீட்டில் கொடுங்கள்' என்று தன் பசி பொறுத்து அடுத்தவருக்கு உதவுகிறாள் ஒரு மாடிவீட்டுப்பெண்.

தியேட்டர்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள், கூடங்கள் அனைத்தும் மக்களுக்காக திறந்துவிடப்படுகின்றன.

வீட்டை இவர்கள் விட்டுவிட்டு வந்தாலும் இவர்கள் எண்ணம் தங்கள் வீட்டின்மேல்தானே இருக்கும்.

சின்னக் குழந்தைகள் ஆசையாய் சுவரில் தீட்டிய பென்சில் ஓவியங்கள்,

நடுத்தர வர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வாங்கிய டிவி, பிரிட்ஜ், அடுப்பு, பைக்,

பாடப்புத்தகம், சான்றிதழ், ரேஷன் கார்டு,

நாய்க்குட்டி, கன்று, ஆடு, மாடு, வீட்டிற்கு வெளியே கழற்றிப்போட்ட செருப்பு, விலக்குமாறு,

போர்வை, பாய் எல்லாவற்றையும் வாரி அணைத்துக் கொண்டது தண்ணீர்.

இந்தத் தண்ணீரால் சிறு குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் பாடும் பாட்டை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஆபத்து என்றாலும் ஆம்புலன்ஸ் வராது.

இறந்து போனாலும் புதைக்க முடியாது, எரிக்க முடியாது.

சாலை, இருப்புப்பாதை, வான்வழி - எல்லாம் அடைபட்டுவிட்டது.

எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்பதுபோல அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கின்றன. 'மாதம் மும்மாரி பொழிகிறதா' என்று அந்தக் காலத்து அரசன் கேட்பது போல அடிக்கடி நிலவரம் கேட்டுக்கொள்கிறார் அம்மா.

வானம் தன் கண்களை மூடட்டும்.

நோவா காலத்துப் பெருவெள்ளம் போல இருக்கும் இந்த நிலையில்,

இந்த நோவாக்கள் அனுப்பும் புறாக்கள் விரைவில் ஒலிவக் கிளையோடு கூடு திரும்பட்டும்.

கண்ணீரும்,

தண்ணீரும்

காயட்டும்.


Wednesday, December 2, 2015

பெரிய தகப்பன்

நாளைய தூய சவேரியாரின் திருநாள்.

தூத்துக்குடி மற்றும் கோட்டாறு போன்ற கடலோர நகரங்களில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அழைக்கப்பெற்று, இன்றும் கோவாவில் அழியா உடலோடு துயில் கொண்டிருக்கிறார் இவர்.

நான் பயின்ற புனே பாப்பிறை பாசறையின் பாதுகாவலரும் இவரே.

நாளைய கட்டளை செபத்தில் இவர் இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடல் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் நான் இரசித்தவற்றை இன்று பதிவு செய்கிறேன்:

1. கடிதத்தின் தலைப்பு: 'நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு!'

2. தென் இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து இதை எழுதுகிறார். நாள், இடம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

3. 'இங்கு வந்த நாளிலிருந்து நான் ஓய்வெடுக்கவேயில்லை. கிராமங்கள்தோறும் சென்றேன். 'வலது எது இடது எது' என தெரியாத குழந்தைகளும், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளும் என்னைச் சுற்றியே இருக்கின்றார்கள். எனக்கு கட்டளை செபம் சொல்லக் கூட முடியவில்லை.

இதில் இரண்டு விடயங்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று, நற்செய்திப் பணி அல்லது பங்கின் மேய்ப்புப் பணி குழந்தைகளிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். குழந்தைகள் வந்துவிட்டால் வளர்ந்தவர்களும் உடன் வந்துவிடுவார்கள். இரண்டு, தன் வேலையை செபத்தோடு இவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. 'நான் செய்யும் வேலையே என் செபம்' என சில அருட்பணியாளர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னதான் நாம் மக்களுக்காக வேலை செய்தாலும், அவை நம் செபத்தோடு சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கக் கூடாது.

4. 'நல்ல அறிவாளிகளையும் நான் கண்டேன்.' அதாவது, தான் பணியாற்றும் இடத்தில் தனக்குக் கீழ் இருப்பவர்களும், தன்னால் பயன்பெறுபவர்களும் அறிவற்றவர்கள் அல்லர், மாறாக, அறிவாளிகள் என்கிறார். அதாவது, மற்றவர்களின் திறனை மதிக்கின்றார். என் பணித்தளத்திலும் கூட, என்னைவிட அறிவாளிகள், திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறனை நான் மதிப்பதே சால்பு.

5. 'என்னை எங்கு வேண்டுமாலும் அனுப்பும்!' - இது இவரின் செபம்.

இந்தக் கடிதத்தில் புதிய இடத்தில் தான் அனுபவிக்கும் வெயில், குளிர், மழை, பாதுகாப்பின்மை, நோய், வசதிக்குறைவு எதைப்பற்றியும் ஒரு வார்த்தைகூட இல்லை.

'நான் விரும்பித்தானே வந்தேன்!' என்று எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் படைத்த ஒருவரால்தான் இப்படி குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்க முடியும்.

சவேரியாரின் வாழ்வியல் விருதுவாக்கு: 'மேன்மை' (Excellence)

நாம் செய்யும் எல்லாவற்றிலும் இந்த மேன்மை இருக்க இவர் நம்மைத் தூண்டுவாராக.