Friday, August 12, 2022

சிறு பிள்ளைகள்

இன்றைய (13ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 19:13-15)

சிறு பிள்ளைகள்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் மண உறவு, மணமுறிவு, மற்றும் மணத்துறவு பற்றி வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக, குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

எபிரேயத்தில் குழந்தையைக் குறிக்க, 'பென்,' 'யேலத்,' மற்றும் 'நஆர்' என்னும் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் 'டெக்னோன்' அல்லது 'பைதியோன்' என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் 'குழந்தை' என்ற வார்த்தை 'அஃறிணை' (அதாவது, திணையில் வராதவை, பொருந்தாதவை) வார்த்தையாகவே உள்ளது. தமிழிலும், 'குழந்தை' என்பதை 'அது' என்றே நாம் அழைக்கின்றோம். எபிரேய சமூகத்தில் 12 வயது நிரம்பும் வரை இளவல், 'குழந்தை' என்றே அழைக்கப்பட்டார். 

யூத சமூகம் குழந்தைகள் குடும்பங்களுக்கு இறைவன் வழங்கும் ஆசீர் என்று கருதியது (காண். தொநூ 15:2, 30:1, 1 சாமு 1:11, திபா 127:3, லூக் 1:7). குழந்தைகள் அதிகமாக இருப்பது பொருளாதார அடிப்படையிலும் நல்லது என்று பார்க்கப்பட்டது. ஏனெனில், விவசாய சமூகத்தில் உடனுழைப்புக்கு மனித ஆற்றல் நிறையத் தேவைப்பட்டது. மேலும், போர், வன்முறை, புலம்பெயர்தல், பாதுகாப்பற்ற இயற்கைச் சூழலில் நிறையக் குழந்தைகள் இருந்தால் அது குடும்பத்திற்கு பாதுகாப்பு என்றும், இனவிருத்திக்கு உதவி என்றும் மக்கள் நம்பினர். ஒரு பெண் குழந்தை பெற இயலாமல் போனால், இன்னொரு பெண்ணின் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள யூத சமூகம் அனுமதித்தது. ஒவ்வொரு யூதப் பெண்ணும் தன் மகன் ஒருவேளை மெசியாவாக வருவான் என்ற எண்ணத்திலேயே குழந்தைகள் பெற்றெடுத்தனர். குடும்பத்தலைவர் மகப்பேறின்றி இறந்து போனால், அவருடைய தம்பி தன் அண்ணனின் மனைவியை மணந்து குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கடமையும் இருந்தது. 

குழந்தைகள் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டனர் (காண். 1 சாமு 1:11). குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் முக்கியமானதாகக் கருதப்பட்டன: மோசே (விப 2:10), சாமுவேல் (1 சாமு 1:20). தலைப்பேறு ஆண்டவருக்கு உரியது என்று வழங்கப்பட்டது (காண். எண் 3:44). குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிநிலையும் குடும்ப மற்றும் சமூக விழாவாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தாயிடம் வளர்ந்தனர். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. உயர்குடி மக்கள் தங்கள் இல்லங்களிலேயே ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தினர் என்ற வரலாற்று ஆசிரியர் யோசேபு எழுதுகின்றார். 

இயேசுவின் சமகாலத்தில் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் இருந்தன. வாசிக்கவும், எழுதவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. தோரா வாசிப்பு, விவசாயம், திறன்கள் வளர்த்தல் ஆகியவற்றுக்கும் பயிற்சி தரப்பட்டது. ஒரு குழந்தை பேசத் தொடங்கியவுடன் (4 வயதில்) சமயக் கல்வி வழங்கப்பட்டது. குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஓய்வுநாள் மற்றும் பாஸ்கா போன்ற திருவிழாக்களில் பங்கேற்றனர். குழந்தைகள் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பெற்றோர்களுக்கு அளிக்கும் மதிப்பும் கீழ்ப்படிதலும் நல்லொழுக்கமாகக் கருதப்பட்டது.

ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்களை தன் குழந்தைகள் என்று கொண்டாடுகின்றார். ஒரு தந்தை தன் குழந்தையைத் தூக்கி வளர்ப்பதுபோல, அதற்கு நடை பயிற்றுவிப்பது போல தான் இஸ்ரயேலுக்குச் செய்ததாக உச்சி முகர்கின்றார்.

இன்று குழந்தைகளைப் பற்றிய பார்வை மிகவும் மாறிவிட்டது. ஒருபக்கம், குழந்தைகள் தொழிலாளர்கள், குழந்தைகள்மேல் வன்முறை, வல்லுறவு ஆகியவை திணிக்கப்படுகின்றன. குழந்தைகள் வலுவற்றவர்களாக இருக்கின்றனர். இன்று வலுவற்ற இவர்களைக் குறிவைத்து கார்பரேட்கள் தங்கள் வன்முறையை காணொலி விளையாட்டுகள் வழியாகவும், வலைத்தளங்கள் வழியாகவும் திணிக்கின்றனர்.

இன்னொரு பக்கம், 'ஆன்ட்டி நேடலிசம்' (குழந்தை மறுப்பு மனநிலை) வேகமாக வளர்கின்றது. திருமண நாளன்று, மணமக்கள், 'நமக்கு குழந்தை வேண்டுமா? நாய்க்குட்டி வேண்டுமா?' என்று திட்டமிடுகின்றனர். 'நான் படும் கஷ்டத்தை என் பிள்ளையும் பட வேண்டுமா?' என்ற நினைப்பில் குழந்தைகள் வேண்டாம் என்று மணமக்கள் முடிவெடுக்கின்றனர். மேலும், கருத்தடை, கருக்கலைப்பு, சிசுக்கொலை என்று குழந்தைகள் பிறக்குமுன்னரே, அல்லது பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர்.


இந்தப் பின்புலத்தில், இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வைக் காண்போம்.


குழந்தைகளை எபிரேயக் குடும்பங்கள் கொண்டாடினாலும், அவர்கள் 'ஆள் கணக்கில் சேராதவர்களாகவே' சமூகத்தில் பார்க்கப்பட்டனர். ஆகையால்தான், மத்தேயு தவிர மற்ற நற்செய்தியாளர்கள், 'அப்பம் உண்ட ஆண்கள் தொகை ஐயாயிரம்' எனப் பதிவு செய்கின்றனர். குழந்தைகளும் பெண்களும் எண்ணிக்கையில் கொள்ளத் தகுதியற்றவர்கள். இந்த மனநிலை சீடர்களுக்கும் இருக்கிறது. ஆகையால்தான், குழந்தைகள் இயேசுவிடம் வருவதை அவர்கள் கண்டிக்கின்றனர். இன்னொரு பக்கம், ரபி ஒருவரிடம் குழந்தைகள் பொதுவில் அமரக் கூடாது என்ற விதியும் இருந்தது. ஆனால், குழந்தைகளின் பெற்றோர், இயேசுவிடம் கடவுளையே காண்பதால், ஆசீர்வதிக்கப்படுமாறு தங்கள் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். இயேசுவும் ஆசீர்வதிக்கின்றார்.

மேலும், 'விண்ணரசு இத்தகையோருக்கு' என்கிறார்.

அதாவது, 'திருச்சட்டமே இவர்களுக்கு இல்லை' என்ற நம்பிக்கை நிலவிய இடத்தில், 'விண்ணரசு இவர்களுக்கு' என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் புதுமையாகவும் புரட்சியாகவும் இருந்திருக்கும்.

எதையும் பற்றிக்கொள்ளாத மனநிலையே குழந்தை மனநிலை. இந்தக் குழந்தை மனநிலை வந்தால் சிலைகளை நம்மால் அகற்றவும், நம் உடனிருப்பவருக்காகத் தியாகம் செய்யவும், இவ்வாறு விண்ணரசை உரிமையாக்கவும் முடியும்.