Sunday, June 14, 2015

குடியிருந்தாலும், குடிபெயர்ந்தாலும்

'குடியிருந்தாலும், குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்!' (2 கொரிந்தியர் 5:9) (நாளைய இரண்டாம் வாசகம்)

உடலின் உயிர்ப்பு பற்றியும், இறுதித் தீர்ப்பு பற்றியும் கொரிந்த நகரத் திருச்சபைக்குப் போதிக்கும் பவுலடியார் 'குடியிருத்தல்', 'குடிபெயர்தல்' என்ற இரண்டு உருவகங்களைப் பயன்படுத்திகின்றார். ஒரு ஆறு ஓடுவதாக வைத்துக்கொள்வோம். ஆற்றிற்கு இந்தப் பக்கம் உடல். அந்தப் பக்கம் ஆண்டவர். 'உயிர்' உலகில் இருக்கும்போது, உடலில் 'குடியிருக்கின்றது'. இறந்தபின் ஆண்டவரில் குடிபெயர்கின்றது.

'அன்பிற்கும், அன்பிற்கும் இடையே இருக்கும் மெல்லிய வேலிதான் இறப்பு' என்பார்கள். அதாவது, நாம் அன்பு செய்பவர்களிடமிருந்து, நாம் அன்பு செய்தவர்கள் பக்கம் இந்த இறப்பு என்னும் வேலியின் வழியாக கடந்து செல்கின்றோம்.

பவுலடியாரின் இந்த இறைவாக்குப்பகுதிதான் 'இறந்தோர்க்கான திருப்பலியின் முதல் தொடக்கவுரையாக' இருக்கின்றது: 'ஏனெனில் ஆண்டவரே, உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை. இந்த மண்ணக வாழ்வின் உறைவிடம் (அதாவது 'உடல்'), விண்ணகத்தில் நிலையான வீடு (அதாவது 'ஆண்டவர்') ஆயத்தமாயிருக்கின்றது'.

இடம்பெயர்தல் அல்லது குடிபெயர்தல் நமக்கு அவ்வளவு எளிதானதல்ல. ஒரு செடியை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று நடும்போது, அந்தச் செடியின் வேரோடு சேர்த்து கொஞ்சம் மண்ணும் கொண்டு செல்வதுபோல, வீடு மாறிச் செல்லும்போதும், பணிக்காக, படிப்புக்காக நாடுகடந்து செல்லும்போதும் அந்த மண்ணைப்போல பெட்டி நிறைய நாம் பயன்படுத்திய துணிமணி, பணம், புத்தகம் என கொண்டுவருகின்றோம். பழையதை விடுவது நமக்குக் கடினமாக இருக்கிறது. 'இதை மட்டுமாவது என்னோடு கொண்டு போகிறேனே!' என எதையாவது நாம் இறுகப்பிடித்துக்கொள்கிறோம். ஆனால், இந்த குடிபெயர்தலில் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அது என்னவென்றால், நாம் எங்கிருந்தாலும் நான் நான்தான். எனது இயல்பிற்கு ஒன்றும் கூட்டுவதுமில்லை. குறைப்பதுமில்லை. என் மகிழ்ச்சி, என் உணர்வு நான் எங்கிருந்தாலும் மாறப்போவதில்லை. இதை உணர்ந்தவர்கள் எளிதாக எந்த இடத்திலும் இருந்து விடுவார்கள்.

நாம் முதல் வாசகத்தில் பார்த்த நுனிக்கிளை தன் தாய் மரத்தை விட்டு வர மறுத்தால் அது புதிய மரமாக வளர்ந்து, வலிமை பெற முடியுமா. ஆக, பிரிவும், வலியும் வளர்ச்சிக்கு அவசியம். நம் உயிர் நம் உடலைப் பிரிந்து செல்லும்போது வலி இருக்கின்றது (நமக்கு வலி இருக்குமா என்று தெரியாது! ஆனால் நமக்கு நெருக்கமானவர்களுக்கு வலி இருக்கும்). ஆனால் இந்த வலியை வெற்றிகொள்ளும்போதுதான் நிலையான வீடு என்னும் ஆண்டவர் கிடைக்கின்றார்.

1. இது எப்படி நடக்கும்? பவுலடியாரே பதிலும் தருகின்றார்: 'நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. நம்பிக்கையின் அடிப்படையிலேயே!' (5:7). ஆக, கண்ணுக்குத் தெரிவது மட்டும் நிஜம். தெரியாதது நிஜமல்ல என்பதல்ல. கண்ணுக்குத் தெரிவதைப் போலவே கண்ணுக்குத் தெரியாததும் நிஜமே. நிதர்சனமான உண்மையே.

2. 'உகந்தவராய் இருப்பது'. யாருக்கு? ஆண்டவருக்கு! நாம் உடலில் இருந்தாலும், ஆண்டவரில் இருந்தாலும் நாம் அவருக்கு ஏற்றவர்களாக இருக்க வேண்டும். இது நாம வைத்திருக்கும் பாஸ்போர்ட் அல்லது விசா போல. நாம் எங்கிருந்தாலும் இவை இரண்டும் இருந்தால், அந்த நாடு நமக்கு உரிமைகளைத் தருகின்றது. ஆக, வாழ்வில் நமக்கு உரிமைகள் வருவது நாம் ஆண்டவருக்கு உகந்தவராய் இருப்பதிலிருந்தே.

3. நன்மை தீமைகளுக்குக் கைம்மாறு. ஆண்டவரில் குடிபெயர்ந்தவுடன், நம் நன்மை, தீமைகளுக்கு கணக்கு கேட்கப்பட்டு, கைம்மாறு செய்யப்படும் என்று இறதியில் நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் ('புளியைக் கரைப்பது' என்பதும் ஒரு உருவகம்!) பவுலடியார். ஆனால், நாம் ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தால் இந்த கைம்மாறு பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. சிம்பிள் லாஜிக் இதுதான்: 'இறப்பிற்கு முன் உள்ள வாழ்வு இனிமையாக, இறைவனுக்கு உகந்ததாக இருந்தால், இறப்பிற்கு பின் உள்ள வாழ்வு பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை!' 'உடலில்' உகந்தவராக வாழ்பவருக்கு, 'ஆண்டவரில்' உகந்தவராக வாழ்வது எளிதுதானே!

1 comment:

  1. நிறைய உவமானம்,உருவங்களுடன் இன்றையப் பகுதி காணப்பட்டாலும் சிம்பிள் லாஜிக் என இரு வரிகளில் தந்தை எடுத்துரைத்திருப்பது தான் நம் மனத்தில் நிற்க வேண்டியது என நினைக்கிறேன்..." இறப்பிற்கு முன் உள்ள வாழ்வு இனிமையாக,இறைவனுக்கு உகந்ததாக இருந்தால்,இறப்பிற்குப்பின் உள்ள வாழ்வு பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை." உண்மைதான்..முன்னதை நாம் பார்த்துக்கொண்டால் பின்னது தானே தன்னைப் பார்த்துக் கொள்ளும்.ரொம்பவே சீரியஸான, நம்மை யோசிக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete