Sunday, August 31, 2014

இவர் யோசேப்பின் மகன் அல்லவா?

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். (லூக்கா 4:22)

லூக்கா நற்செய்தியின் படி இயேசு தன் பணிவாழ்வை தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் உள்ள ஒரு தொழுகைக் கூடத்தில் தொடங்குகிறார். தொழுகைக் கூடத்தில் அவரின் அருள்மொழிகளைக் கேட்டு அங்குக் குழுமியிருந்த மக்கள் சொன்ன வார்த்தைகளே 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'

இதே நிகழ்வு மத்தேயு (13:53-58) மற்றும் மாற்கு நற்செய்திகளும் (6:1-6) இருந்தாலும் ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றது.

மத்தேயு நற்செய்தியில் இதே நிகழ்வு இயேசுவின் பணிவாழ்வின் நடுவில் இருக்கின்றது. அங்கே மக்களின் பேச்சும் வியப்பும் வித்தியாசமாக இருக்கின்றது:

'இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கேபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர்கள் அல்லவா?

மாற்கு நற்செய்தியில் மக்களின் கேள்வி நேரடியாகவே இருக்கின்றது: 'இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர்கள் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?' என்றார்கள்.

மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தியில் வரும் 'சகோதர' 'சகோதரிகள்' கத்தோலிக்கரல்லாத கிறித்தவர்களுக்கு நெருடலாக இருக்கும். இதை வைத்துத்தான் அன்னை மரியாள் 'எப்போதும் கன்னி' என்ற கொள்கைளை மறுக்கின்றனர். கிரேக்க மொழியில் உடன்பிறந்தவர்களை மட்டுமல்லாமல், மாமன், மச்சானின் குழந்தைகளையும் சகோதர, சகோதரிகள் என்றே அழைப்பர். இயேசுவுக்கு உண்;மையிலேயே உடன்பிறப்புகள் இருந்திருக்கலாம் என்பதும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனால் இயேசுவுக்கு எந்த விதத்திலும் மகிமை குறையப்போவதில்லையே. 'பெண்ணிடம் பிறந்தவராக' மெசியா வருவார் என்று இருக்கிறதே தவிர, பெண்ணிடம் பிறந்த ஒற்றைக் குழந்தையாக இருப்பார் என்று இறைவாக்குகள் இல்லையே!

லூக்கா நற்செய்தியில் மரியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. யோசேப்பின் பெயர் மட்டுமே உள்ளது.

'இன்னாருடைய மகன் இப்படித்தான் இருக்க வேண்டும்!' என்ற முற்சார்பு எண்ணத்தின் எதிரொலியே இந்தக் கேள்வி.

இவர்களின் கேள்விக்குக் காரணங்கள் மூன்று:

அ. அவர்களின் சிம்பிள் லாஜிக். அவர்களுடைய பேச்சில் உள்ள லாஜிக் இதுதான்: மாமரத்தில் இருந்து மாமரம் தான் வரும். தென்னை மரத்தில் இருந்து தேங்காய் தான் வரும்.

ஆ. பழகப் பழக பாலும் புளிக்கும். ஆங்கிலத்தில் 'familiarity breeds contempt' என்பார்கள். ஒரு பொருள் அல்லது நபர் நம்மோடு நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் அவரின் அருமை நமக்குத் தெரிவதில்லை. எங்கு பார்த்தாலும் மண் இருக்கிறது. அதை நாம் அலமாரியில் பூட்டி வைப்பதில்லை. ஆனால் பொன் எங்கு பார்த்தாலும் இருப்பதில்லை. அதைப் பூட்டி வைக்கிறோம். இப்போ இருக்கிற விலைவாசியில இன்னும் கொஞ்ச நாளில் மண்ணையும் பூட்டி வைக்க வேண்டி வரும்.

இ. ஒருவரின் அடையாளம் அவரின் பின்புலம் என மதிப்பிடுவது. இது ஏறக்குறைய 'அ' வைப் போல. ஒருவரின் பாலினம், நிறம், மொழி, நாடு, இனம் இவற்றால் ஒருவரின் இயல்பு கூடுவதோ, குறைவதோ இல்லை. ஆனால் வெளியே தெரியும் இந்த அடையாளங்களை ஒருவரின் இயல்போடு சேர்த்துப் பார்ப்பது.

மனிதர்களுக்கு அதிகம் வலி தருவது இந்த முற்சார்பு எண்ணம் தான். முற்சார்பு எண்ணம் நம் கண்களுக்கு முன் திரையிட்டு விடுகிறது. அந்தத் திரையை விலக்கி நம்மால் இறுதிவரை பார்க்க முடியாமலேயே போய்விடுகிறது.

இன்றைய நாளில் அருட்பணி நிலையில் இருப்பவர்கள் புதிய பணித்தளங்களுக்குச் செல்லும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் இந்த முற்சார்பு எண்ணம் தான். புதிய அருள்பணியாளர் பணியிடத்திற்குப் போகுமுன் அவரைப் பற்றிய எல்லா விஷயங்களும் அந்த ஊருக்குச் சென்றுவிடும்: அவரின் குடும்ப பின்புலம், சாதி, படிப்பு, நண்பர்கள் வட்டாரம், அவரின் பலவீனங்கள். அவரின் உள்ளாடை அளவைத் தவிர ஏறக்குறைய எல்லா விஷயங்களும் மக்களின் உரையாடல் பொருளாக வந்து விடும்.

இந்தத் திரையை அவர் உடைக்க வேண்டுமானால் முதலில் தன் பின்புலத்தை முழுமையாக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆமாம் நான் இப்படித்தான்! நான் இந்த சாதிதான்! எனக்கு இந்தப் பலவீனங்கள் இருக்கின்றன தான்! ஆனால் அவைகள் மட்டும் நான் கிடையாது. அவைகளையும் தாண்டி நான் வித்தியாசமானவன் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும்.

இரண்டாவதாக, நம் முற்சார்பு எண்ணங்களைக் களைய வேண்டும். 'நான் யோசேப்பின் மகன் தான்!' நீ யார்னு தெரியாதா? 'நீ அருளப்பன் மகன் தானே!' 'நீ கோவிந்தன் மகன் தானே!' என்று எதிர்கேள்வி கேட்டால் இரண்டு பார்வையற்றவர்கள் வானவில்லின் வர்ணங்களை வருணிப்பது போல இருக்கும்.

முற்சார்பு எண்ணத்தை மஞ்சள் காமாலை நோய்க்கு ஒப்பிடுவார்கள் - பார்ப்பதெல்லாம் மஞ்சளாய்த் தெரியும்.

இன்னைக்கு புதுசா நாம ஒருத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டால் அல்லது பார்த்தால்,
'ஆமா...நீங்க...நீங்க தான!' என்று சொல்லிப் பார்க்கலாமே.


Saturday, August 30, 2014

அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத்தேயு 16:26)

தூய இஞ்ஞாசியார் அவர்கள் தூய சவேரியாருக்கு அடிக்கடி இந்த இறைவார்த்தையைச் சொல்லி, ஒருநாள் திடீரென்று இதன் அர்த்தம் உணர்ந்து தான் ஆற்றிய பேராசிரியப் பணியை விடுத்து மறைப்பணி செய்ய சவேரியார் புறப்பட்டார் என்பது வரலாறு.

இந்த இறைவார்த்தையைக் கேட்டு அவர் அவரது ஊரிலேயே இருந்து தன் பேராசிரிய வேலையைப் பார்த்திருந்தால் நம் இந்திய மண்ணில் மதமாற்றம் என்ற பேரில் நம் முன்னோர்கள் கண்ணீருக்கும், செந்நீருக்கும் ஆளானதும், 'பேய்களின் கோவில்கள்' என்று நம் இந்திய மண்ணின் முன்னோர்கள் எழுப்பிய கடவுளின் ஆலயங்களும் மண்ணில் புதையுண்டு போகாமல் இருந்திருக்கும்.

கிறிஸ்தவ மதம் வந்ததால் தான் இந்தியாவில் கல்வியறிவு வந்தது என்றும், நல்ல மருத்துவ வசதிகள் வந்தது என்றும் போர்க்கொடி தூக்காதீர்கள். 4000 ஆண்டுகளுக்கு முன் வந்த வேதங்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் வந்த திருக்குறளும் கல்வியறிவு இல்லாமலா வந்தது? சித்தா, ஆயுர்வேதா என்ற இன்று வெளியே இருந்து எல்லாரும் இங்கே ஓடிவருகிறார்களே. நம் மருத்துவம் என்ன பின்தங்கியா இருந்தது? மேற்கத்திய கல்விக்காகவும், மருத்துவத்திற்காவும் நாம் கொடுத்த விலை ஏராளம். பால்பவுடருக்கும், கோதுமைக்கும் விலைபோன நம் முன்னோரின் ஏழ்மை, வறுமை, இயலாமையை நினைக்கும் போது கண்களில் வியர்க்கிறது.

தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் எவ்வளவோ பரவாயில்லை. மறைபரப்புப் பணியாளர்களால் இன்று அவர்கள் தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் இழந்த நிற்கின்றனர். கொலோம்பியாவின் ஒரு அருட்பணியாளரிடம் உங்கள் தாய் மொழி என்ன என்றால் 'இஸ்பானியம்' என்கிறார். சென்டரல் ரிபப்ளிக் ஆஃப் ஆப்ரிக்கா அருட்சகோதரி தன் தாய்மொழி 'பிரெஞ்சு' என்கிறார். என்ன ஒரு பரிதாபம்!

இந்த மறைபரப்புப் பிண்ணனியில் பார்க்கும் போது எந்த ஒரு விவிலிய வார்த்தையும் ரொம்பக் கவனமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 'உலகெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்' என்று இயேசு சொன்னதால் நாங்கள் எல்லா நாடுகளுக்கும் புறப்பட்டுப் போனோம் என்கிறார்கள் காலனியவாதிகள். அதே இயேசுதான் 'நான் சிதறுண்ட இஸ்ரயேல் மக்களுக்காக மட்டும் அனுப்பப்பட்டேன்' என்கிறார். அப்படியென்றால் எருசலேமோடு நின்றிருக்க வேண்டியதுதானே. எண்ணெய் வளம் மற்றும் செல்வம் கொழித்த மத்திய கிழக்கு நாடுகளில் ஐரோப்பாவின் பருப்பு வேகவில்லை. ஆகையால் வரிந்து கட்டிக் கொண்டு நம்ம ஊருக்கு வந்தார்கள். இந்தக் காலனியாக்க பிண்ணனியில் பார்க்கும் போது நானும் என் தாய் மதத்திற்குத் திரும்பிவிடலாமோ என்றே பல நேரங்களில் தோன்றுகிறது.

சரி ... ரெலிஜியஸ் பாலிடிக்ஸ் பேசுவதை விட்டு மேட்டருக்கு வருவோம்!

சவேரியாரின் உள்ளத்தில் மறைபரப்புத் தீ மூட்டும் அளவிற்கு அப்படி என்ன இந்த வசனத்தில் இருக்கிறது?

பழைய மொழிபெயர்ப்பில் 'வாழ்வு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஆன்மா' என்ற வார்த்தை இருக்கிறது.

மனிதர்
உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும்
வாழ்வை இழந்தால்
வரும் பயன் என்ன?

வாழ்வுக்கு ஈடாக அவர் எதைக் கொடுக்க முடியும்?

இந்த இறைவாக்குப் பகுதியில் இரண்டு வகையான duality இருக்கின்றது: உலகம் மற்றும் வாழ்வு, இழப்பது மற்றும் பெறுவது.

உலகம் மற்றும் வாழ்வு
இரண்டு உலகம் இருக்கிறது. ஒன்று வெளியில் இருக்கிறது. மற்றொன்று உள்ளே இருக்கிறது. வெளியே உள்ள உலகத்திற்குப் பெயர் உலகம். உள்ளே உள்ள உலகத்திற்குப் பெயர் ஆன்மா அல்லது வாழ்வு. வெளியே உள்ள உலகத்தை ஒருவர் தமதாக்கிக் கொண்டாலும், உள்ளே உள்ள உலகம் தமதாக்கப்படவில்லையென்றால் அவருக்கு இழப்பு தானே. அந்த இழப்புக்கு ஈடாக தான் வெளியில் பெற்ற எதையும் அவரால் கொடுக்க முடியாது.

மாயன் நாகரீகக் கதை ஒன்றில் மனிதர்களின் உள்ளத்தில் ஒரு ஓட்டை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஓட்டையை எதைக் கொண்டு அடைத்தாலும் நிரப்ப முடியாது. அந்த ஏக்கத்திலேயே மனிதர் இறந்து போகின்றனர் எனவும் அது சொல்கின்றது. இயேசு குறிப்பிடுவதும் இந்த வெற்றிடத்தைப் பற்றிதான்.

மனிதர் தன் வாழ்வில் செல்லும் மிக நீண்ட பயணம் தன் உள்மனப் பயணம்தான். வெளியே தேடும் தேடல் அவருக்கு நிறைவு தருவதேயில்லை. ஒன்று கிடைக்க மற்றொன்றின் மேல் ஆசை வந்துவிடுகிறது. பொருளின் மேல் ஆசை. பின் பொருளைப் பாதுகாக்க ஆசை. பாதுகாத்த பொருளை அனுபவிக்க ஆசை. ஆசை வளர்ந்து கொண்டே போகிறது. பின்னாலேயே நிழல்போல வெற்றிடமும் தொடர்ந்து கொண்டே வருகின்றது.

மகிழ்ச்சி என்பதும் வாழ்வு என்பதும் ஒரு உள்மன வேலை. அதை வெளியே எதிர்பார்ப்பதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நம்மிடம் இழக்க ஒன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் எதைக் குறித்தும் பயப்படமாட்டார்கள்.

மறுபடி சவேரியாருக்கே வருவோம். இந்த வார்த்தைகள் அவரின் மனதைப் பாதித்தால் ஏன் உலகம் சுற்றப் புறப்பட வேண்டும்? ஒருவேளை அது உண்மையா என்று பார்க்கப் புறப்பட்டிருப்பாரோ? ஆனால் இழப்பு என்னவோ அவருக்கும், நமக்கும் தான்!

அலெக்சாண்டர் தி கிரேட் உலகையெல்லாம் தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து விட்டதாக தத்தவ ஞானிகள் முன் உரையாற்றிக் கொண்டிருந்தாராம். கூட்டத்தில் இருந்த ஒருவர் அரசரைப் பார்த்து கையாட்டினாராம். 'என் முன்னே கையை ஆட்டுகிறீரா?' என்று கோபம் கொண்ட அலெக்சாண்டர் வாளை எடுத்துக் கொண்டு அவர் மேல் பாய்ந்தாராம். கொஞ்சமும் பயப்படாமல் ஞானி சொன்னாராம்: 'கொஞ்சம் தள்ளி நில். சூரிய ஒளியை மறைக்காதே!' ஞானம் பெற்றார் அரசர்.

நம் உள் இருக்கும் ஒளியை நம்மேல் படவிடுவதே வாழ்வைப் பெற்றுக் கொள்வது!


Friday, August 29, 2014

வினைதீர்ப்பான் விநாயகன்!

இன்று நம் இந்து சகோதர, சகோதரிகள் விநாயகர் சதூர்த்தி என்னும் திருநாளைக் கொண்டாடுகின்றனர். இன்றுதான் வேளாங்கண்ணி அன்னை திருத்தலத்தில் கொடியேற்றம். 'கொடியேற்றம்' என்பது நாம் இந்திய மண்ணிலிருந்து தழுவிக் கொண்ட ஒன்று. மேற்கத்திய நாடுகளில் ஆலயங்களில் கொடிமரம் அல்லது திருவிழாவில் கொடியேற்றம் என்பதே கிடையாது.

வெளிநாட்டு சாமிகளுக்கும், புனிதர்களுக்கும் நாம் நம் மண்ணில் விழா எடுக்கும் இந்நாளில் நம் மண்ணின் சாமியாம் விநாயகர் என்றால் யார் என்று சிந்திப்போம்.

விநாயகர். கணபதி, பிள்ளையார், ஆனைமுகத்தான், வேழமுகத்தான் (வேழம் என்றால் யானை), தும்பிக்கையான், வினைதீர்ப்பான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இவர் யார்?

சிவனின் சக்தியாம் பார்வதி குளித்துக் கொண்டிருந்தபோது தான் குளிப்பதை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக தான் குளிக்கப் பயன்படுத்திய சந்தனத்தில் ஒரு உருவம் செய்து அதை தோட்டத்திற்கு வெளியே காவலுக்கு நிறுத்துகிறார். வெளியே சென்று விட்டு வீடு திரும்புகிற சிவபெருமான் உள்நுழைய அனுமதி மறுக்கிறார் இந்த சந்தன உருவ மனிதர். சிவனுக்கு அவரை யாரென்று தெரியாது. அவருக்கும் சிவனை யாரென்று தெரியாது. இருவருக்கும் சண்டை. சண்டை இந்திரலோகம் வரை எட்டுகின்றது. சண்டையின் இறுதியில் சிவன் சந்தன உருவத்தின் தலையை வெட்டிவிடுகிறார். பதறி அடித்து வரும் பார்வதி நடந்ததைச் சொல்ல தலையைத் தேடி அலைகின்றனர். இறுதியில் ஒரு யானையின் தலையே கிடக்கக் காண்கின்றனர். சிவபெருமான் அதை சந்தன உருவத்தின் உடலில் பொருத்த ஆனைமுகத்தான் வருகின்றார். சிவபெருமானின் படையான 'கணா' என்று படைவீரர் குழாமை வென்றதால் 'கண ஈசன்', 'கணேசன்' என அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதூர்த்தி திருவிழா 9 நாட்கள் அல்லது 11 நாட்கள் நடைபெறும் ஒரு நிகழ்வு. இன்று தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகரைச் சிலையாகச் செய்து அலங்கரிப்பார்கள். ஆனந்த சதூர்த்தி என்னும் இறுதி நாளில் அதை பவனியாக எடுத்துச் சென்று தண்ணீர் தடாகத்தில் கரைப்பர். இந்த விழா முதன்முதலில் உருவாகக் காரணமாக இருந்தவர் சத்ரபதி சிவாஜி என்பர். ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது லோக்மாணிய திலக் இந்த விழாவை சுதந்திரத்திற்கான ஒரு வேட்கையாக, கூடி வருதலாக உருவாக்குகின்றார்.

விநாயகர் ஒரு சைவக் கடவுள். சிவ பெருமானின் மூத்த மகன். முருகனின் அண்ணன்.

மனித உருவம், விலங்கின் தலை அல்லது விலங்கின் உருவம், மனிதத் தலை கொண்ட தெய்வங்கள் எகிப்திலும், கிரேக்க நாட்டிலும், அக்காடிய, உகாரித் சமூகங்களிலும் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இந்த விநாயகர் நமக்குச் சொல்லும் பாடங்கள் மூன்று:

அ. விநாயகர் தொடக்கத்தின் கடவுள். எந்தவொரு செயலையும் தொடங்கும் போது நாம் 'சிலுவைக் குறியிட்டு' தொடங்குவது போல, சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் 'உ' என்று குறியிட்டு தொடங்குவர். இதற்கு பிள்ளையார் சுழி என்றும் பெயர். 'உ' என்றால் 'உமையவள்' (அதாவது பார்வதி!) என்று பொருளாக இருக்கலாம் என நினைக்கிறேன். முருகனின் வேலில் 'அ' என்ற எழுத்து இருப்பதையும் நினைவில் கொள்வோம். நல்ல தொடக்கம் பாதி முடிவு என்பார்கள். வாழ்க்கையில் பல நேரங்களில் நமக்குத் தடையாக இருப்பது இதுதான். எங்கே, எப்போது தொடங்க வேண்டும் என்று நமக்குத் தெரிவதில்லை.

ஆ. பிரம்மச்சாரி. முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்க, விநாயகர் 'பேச்சிலராக'வே இருந்து விட்டார். சில சமய ஆய்வாளர்கள் விநாயகருக்கு மூன்று மனைவியர் இருந்தனர் என்றும் சொல்கின்றனர்: புத்தி (அறிவு), சித்தி (ஆன்மீகம்) மற்றும் ரித்தி (வளமை). கலைவாணி சரஸ்வதியும், செல்வத்திருமகள் மகாலட்சுமியும் இவரின் மனைவியர் என்பதும் ஒருசிலரின் கருத்து. 'யாமிருக்கும் இடத்தில் செல்வம் கற்பக விருட்சமாய் வளரும்' என்று சொல்வதற்கும், தன் ஒரு தந்தத்தை எழுதுகோலாகப் பயன்படுத்துவதாலும் இந்தக் கருத்து வந்திருக்கலாம். பிரம்மச்சாரி என்றால் திருமணம் முடிக்காமல் இருப்பது என்பது பொருள் அல்ல. 'ஒருமுகப்பட்டவர்களே' பிரம்மச்சாரிகள். மனதை ஒருமுகப்படுத்தி ஆண்டு நடத்தும் ஒருவரே பிரம்மச்சாரி.

இ. நிறைவு. நிறைவான வயிறும், கட்டான உடலும் ஞானத்தின் அடையாளம் என்கின்றனர் சிலர். 'ஞானத்தைத் தேடுவதே நிறைவைக் கொடுக்கும்' என சீராக் நூலும் நமக்குச் சொல்கிறது. ஞானம் என்பது பயன்பாட்டு அறிவு. நாம் அறிவதை நம் சமுதாயம் வளரப் பயன்படுத்துவதே ஞானம்.

விநாயகரை கணிணி பயன்படுத்துவோரின் பாதுகாவலர் என்று சொல்லலாம். ஏன்? ஏன்னா இவரிடம் தான் 'மவுஸ்' இருக்கின்றதே.


Thursday, August 28, 2014

என்றும் இளமையே! என்றும் புதுமையே!

பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். (உரோ 13:13-14)

மேற்காணும் உரோமையர் திருமுகப் பகுதிதான் இன்று நாம் புனிதராகக் கொண்டாடும் தூய அகுஸ்தினாரின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. 354ஆம் ஆண்டு முதல் 430ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் மிகப்பெரும் இறையியல் வல்லுநராக, நல்வழிப் போதகராக, மிலான் நகரின் ஆயராகத் திகழ்ந்தார். தன் 14ஆம் வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையான நிலையில் இருந்தாலும் பின் தன் நிலையை இறைவன் பக்கம் மட்டும் திருப்பிக் கொண்டவர்.

'உமக்காகப் படைக்கப்பட்ட எங்களின் ஆன்மா உம்மை அடையும் வரை நிறைவு காண்பதில்லை' என்ற இனிய சொற்களுக்குச் சொந்தமானவர் இவர். உண்மையான மகிழ்ச்சியை உடலில், உலகில், பொருளில், புகழில், பெயரில் தேடி எங்கும் காண முடியாமல் போனவர்.

கிரேக்க மெய்யிலாளர் பிளேட்டோவின் கருத்துக்களால் கவரப்பட்டு அதே மெய்யியலை இறையியலுக்குள் புகுத்தியவர் இவர். ஆதிப்பெற்றோர் செய்த பாவம் நம்மை துரத்துகிறது என்றும், நம் உடலுக்கும் மனதுக்கும் எந்நேரமும் போராட்டம் நடக்கிறது, உடல் கெட்டது, மனம் தூயது எனவும் அன்று இவர் சொல்லி வைத்துப் போனது இன்றும் கத்தோலிக்கத் திருஅவையின் கொள்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

'பாவசங்கீர்த்தனங்கள்' என்று இவர் எழுதிய நூல் இவர் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் தான் போராடியதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. நம் மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் போலவே தன் பலவீனங்களையும் மிக எதார்த்தமாக எடுத்துச் சொல்லி 'இவ்வளவு தான் நான்!' என தன்னையே துணிவோடு வெளிப்படுத்தியவர் இவர்.

இவரது சுயசரிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவைதாம். இத்தாலியன் மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முனைந்திருக்கிறேன்.

உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
ஓ அழகே!
என்றும் பழமையான, என்றும் புதுமையான அழகே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
நீ என்னுள் இருந்தாய்.
ஆனால் நான் வெளியே இருந்தேன்.
எனக்கு வெளியே நான் உன்னைத் தேடினேன்.
அன்பு செய்யத் தெரியாததால்
கண்ணுக்குத் தெரிந்த உன் படைப்புக்களை
அன்பு செய்வதில் மும்முரமாயிருந்தேன்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் நான் உன்னோடு இல்லை.
படைக்கப்பட்டவை உன்னிடமிருந்து என்னைப் பிரித்து விட்டன.
ஆனால் அவைகளிலும் நீ இருந்தாய்.
ஏனெனில் நீ இன்றி எவையும் இல்லையே.
நீ என்னை அழைத்தாய்.
நீ என்னை நோக்கிக் கத்தி என் செவிட்டுக்காதில் உன் குரல் விழச் செய்தாய்.
நீ மின்னலாய் ஒளிர்ந்து என் இருள் போக்கினாய்.
உன் நறுமணத்தால் என்னை நனைத்தாய்.
உன்னை நான் சுவாசித்தேன்.
இப்போது உனக்காக மட்டுமே நான் ஏங்குகிறேன்.
உன்னை நான் ருசித்தேன்.
இப்போது உனக்காகவே நான் பசித்திருக்கிறேன்.
நீ என்னைத் தொட்டாய்.
உன் அமைதியால் நான் எரிந்தேன்.
ஓ அழகே!
என்றும் இளமையே! என்றும் புதுமையே!
உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.


Please click on the link below to listen to this song in English:

O Beauty So Ancient Yet New

Wednesday, August 27, 2014

ஏன் நோன்பு இருப்பதில்லை?

பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, 'நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, 'மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என்றார். (மத்தேயு 9:14-15)

'ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்ற கேள்வியைக் கேட்கின்றனர் இயேசுவிடம்.

அதற்கு இயேசு தரும் பதில் உருவகமாக இருக்கின்றது. மணமகன் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும் என்று மேலோட்டாமப் பொருள் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் வேறு அர்த்தமும் புலப்படும்.

நோன்பு என்பது துக்கம் எனவும், விருந்து என்பது மகிழ்ச்சி எனவும் சொல்ல இயேசு விரும்பவில்லை. ஏனெனில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த எஸ்ஸீன்கள் நோன்பை மகிழ்ச்சி எனவும், விருந்தை துன்பம் எனவும் கருதினர்.

மணமகன் இருக்கும் போது நோன்பு என்பது 'அவட் ஆஃப் ப்ளேஸ்' (out of place). எப்படி பழைய துணியில் புதிய துணி பொருந்தாத ஒன்றோ, பழைய தோற்பையில் புதிய திராட்சை ரசம் பொருந்தாத ஒன்றோ அது போலவே திருமண விருந்து நடக்கும் இடத்தில் நோன்பு பற்றி யோசிப்பது. எதை எப்போது செய்ய வேண்டுமோ, அதை அப்போது செய்ய வேண்டும். இதுதான் இயேசுவின் உருவகத்தின் ஆழ்ந்த அர்த்தம்.

ஒவ்வொரு உருவகத்திற்கும் இரண்டு அர்த்தங்கள் உண்டு: மேலான அர்த்தம் மற்றும் ஆழ்ந்த அர்த்தம். நம் தமிழ்மொழியில் இந்த உருவகங்களின் விளையாட்டு மிகவும் ருசியானது.

உதாரணத்திற்கு ஒன்றை எடுப்போம்:

'மேலோர் நினைப்பர், கீழோர் மறப்பர்'

இந்த வாக்கியத்தின் பொருள் என்ன?

நல்ல எண்ணங்களை அல்லது குணங்களை உடையவர் தங்களுக்கு மற்றவர் செய்த உதவிகளையும், நன்றியையும் மறக்க மாட்டார்கள். ஆனால் கீழான குணங்களையும், இயல்பையும் உடையவர்கள் செய்ந்நன்றி மறந்து விடுவர்.

இதுவும் இதன் அர்த்தம் தான். ஆனால் இதையும் தாண்டி ஒரு பொருளை இங்கே வைத்திருக்கின்றார் புலவர்.

அதாவது, தொலைநாட்டிற்கு வாணிபம் செய்வதற்காகச் செல்கின்ற தலைவன் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வருகின்றான். அவனை வாயில் வரை வழியனுப்ப வந்து தலைவி வாயில் நிலை பிடித்து நிற்கிறாள். முன்னே நடந்து செல்கின்ற தலைவன் தலைவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்கிறான். அப்போது தலைவி தனக்குள் பேசிக்கொள்கிறாள்: 'என் தலைவனின் பாதங்களுக்கு நான் எவ்வளவு முறை பணிவிடைகள் செய்திருக்கிறேன். ஆனால் அவைகள் அதையெல்லாம் மறந்து வேகமாக நடக்கின்றன. ஆனால் தலைவனின் கண்களுக்கு நான் ஒரு பணிவிடையும் செய்ததில்லை. இருந்தாலும் அவைகள் என்னை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே இருக்கின்றன. கீழோர் (கீழ் இருக்கும் பாதங்கள்!) மறப்பர்! மேலோர் (மேலிருக்கும் கண்கள்) நினைப்பர்!

வாழ்வில் நாமும் உருவகங்கள் தாம். நம்மை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு நாம் ஒரு அர்த்தம் தருவோம். நம்மை நெருக்கமாய்ப் பார்ப்பவர்களுக்கு வேறு அர்த்தம் தருவோம்.

உருவகங்களே வாழ்வு!


மருத்துவருக்கு எல்லாரும் தேவை!

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும், பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், 'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை' என்பதன் கருத்தை நீங்கள் போய் கற்றுக்கொள்ளுங்கள் என்றார். (மத்தேயு 9:11-12)

இயேசுவின் வாழ்வில் தன் சக மனிதர்களால் அவருக்கு வந்த முதல் பிரச்சினை இதுதான்: '... சேர்ந்து உண்பது ஏன்?'

'நீ யாருடன் சேர்ந்து குடிக்கிறாயோ அவரைப் பற்றிக் கவனமாயிரு!' என்பது ஒரு பழமொழி. நாம் எல்லாரும் எல்லாரோடும் பேசுகிறோம், சிரிக்கிறோம், நடக்கிறோம், வாழ்கிறோம். ஆனால் நாம் எல்லாரும் எல்லாரோடும் சாப்பிடுவது கிடையாது. மனிதர்கள் சாப்பிடுவதற்கும், விலங்குகள், தாவரங்கள் சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசங்களில் இதுவும் ஒன்று தான். ஒரே தெருவில் உள்ள அடுத்தடுத்த திருமண மண்டபங்களில் ஒரே நேரத்தில் விருந்து நடந்தாலும் நாம் அழைக்கப்பட்ட இடத்திற்கு மட்டுமே சென்று உண்கிறோம். ஆனால் வெளியே சுற்றித் திரியும் நாய்க்குட்டிகளும், கன்றுக்குட்டிகளும் அப்படி 'செலக்ட்' செய்வதில்லை. அவைகளுக்கு இரண்டு விருந்தும் ஒன்றுதான்.

'ஏம்ப்பா...உங்க போதகர் தராதரம் பார்த்து சாப்பிட மாட்டாரா?' என்ற தொனியில் இருக்கிறது பரிசேயர்களின் கேள்வி. சீடர்களிடம் தான் அவர்கள் கேட்டாலும் இயேசு தான் அவர்களுக்குப் பதில் சொல்கின்றார்.

'வரிதண்டுபவர்களையும், பாவிகளையும் நண்பர்களாக்கிக் கொண்டால் அவர்களோடு உண்பதில்' எந்தச் சிக்கலும் இருப்பதில்லை என்ற பின்புலத்தில் இயேசு பதில் சொல்கின்றார்.

'நோயற்றவருக்கு அல்ல. நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை!' - என்ற பழமொழியின் வழியாக அவர்கள் தேவையில் இருப்பவர்கள் எனவும், தான் அவர்களின் அன்புத் தேவையை, சமத்துவத் தேவையை நிறைவேற்ற வந்தவன் எனவும் ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றார்.

இன்று பழமொழியை கொஞ்சம் மாற்றித்தான் விட்டோம்: 'மருத்துவருக்கு இன்று நோயற்றவரும் தேவை, நோயுற்றவரும் தேவை!'

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையின் ஒரு பிரபல மருத்துவமனையில் மாஸ்டர் செக்-அப் செய்யச் சென்றேன். ரிப்போர்ட்டை இறுதியாக மருத்துவர் பார்வையிட்டு அறிவுரை கூறும் அறையில் நின்று கொண்டிருந்தேன். 'உங்களுக்கு சுகர் இல்லை, உப்பு இல்லை, பிரஷர் இல்லை. நன்றாக இருக்கிறீர்கள்' என்று சொன்னவர் இப்படியே மெயின்ட்டெய்ன் செய்ய ஒரு கோர்ஸ் மருந்து இருக்கிறது. ஒன்பது நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி என்னை பார்மஸிக்கு அனுப்பிவிட்டார். அங்கே எனக்கு முன் சென்றவர் சுகர் மாத்திரை வாங்கிக் கொண்டிருந்தார். நான் சீட்டை நீட்டி 'இதற்கு எவ்வளவு ஆகும்!' என்று மட்டும் கேட்டேன். மூவாயிரத்து சொச்சம் என்று அவர் சொன்ன நேரம் எனக்கு முன்னால் இருந்தவர் வெறும் நாற்பது ரூபாய் பில் கட்டிக் கொண்டிருந்தார். இன்று மருத்துவர்கள் எல்லாருக்கும் தேவையோ, இல்லையோ மருத்துவர்களுக்கு எல்லாம் தேவை.

நேற்று டென்டிஸ்ட் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன். டென்டிஸ்டின் பில் நமக்குப் பார்க்கும் வைத்தியத்திற்கு மட்டுமல்ல. நாம் மல்லாந்து படுக்கும் நாற்காலி, அப்போது நாம் வெறிக்க பார்க்கும் மருத்துவமனையின் அழகுபடுத்தப்பட்ட மேல்கூரை, வெறும் பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் முடித்துவிட்டு ஏதோ சர்ஜன் ரேஞ்சில் கேள்விகள் கேட்கும் வரவேற்பறைப் பெண், அவருக்கு மேலே எல்.சி.டி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ஆதித்யா சேனல், 'இங்கு கலனிகளை விடவும்' என்று அரைகுறை தமிழில் வாசலை அலங்கரிக்கும் போர்டு என அனைத்திற்கும் தான்.

ஆகையால், இனி பழமொழியை மாற்றிப் படிப்போம்!

மருத்துவருக்கு எல்லாரும் தேவை!

இயேசுவுக்கும் எல்லாரும் தேவை!


Tuesday, August 26, 2014

ஏன் அஞ்சுகிறீர்கள்?

ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, 'ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். இயேசு அவர்களை நோக்கி, 'நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார். (மத்தேயு 8:25-26)

'அஞ்சாதீர்கள்' என்ற வார்த்தை விவிலியத்தில் 365 முறை உள்ளதாகவும், அது எதற்காக என்றால், வருடத்திற்கு 365 நாட்களாம், ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மைப் பார்த்து அஞ்சாதீர்கள் என்று சொல்கிறாராம். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வருடத்திற்கு 365 நாட்கள் என்று கணிக்கும் சோலார் காலண்டர் கிபி 4ஆம் நூற்றாண்டில் தான் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. அதற்கான வித்து கிமு 750ல் உரோம் நகரம் நிறுவப்பட்டபோது விதைக்கப்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

கிமு, கிபி பற்றி எழுதும்போது நேற்று இத்தாலிய சேனல் ஒன்றில் பார்த்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. நிகழ்ச்சியை நடத்துபவர் ரொம்ப பில்ட் அப்போடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். நிகழ்ச்சியின் தலைப்பு 'பெயர்'. தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்! என்று காத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் 'போப்பாண்டவரின் பெயர்' என்று அதை விளக்கிச் சொன்னர்கள். அதாவது, திருத்தந்தையாகும் போது கர்தினாலின் பெயர் மாற்றப்படுகிறது. ராட்சிங்கர் 16ஆம் பெனடிக்ட் என மாறினார். கோர்கே மாரியோ பிரான்சிஸ் என மாறினார். ஏன் கோர்கே மாரியோ பிரான்சிஸ் என மாறினார் என்ற ஆராய்ச்சி தான் நிகழ்ச்சியே. இத்தாலிய சேனல்களின் சீரியஸ்னஸ் இவ்வளவு தான். வந்திருந்த ஒரு பல்கலைக்கழக ஆசிரியரைப் பார்த்து நிகழ்ச்சியாளர் கேட்கிறார்: 'புரபெஸோரே! திருத்தந்தையர்கள் புதிதாகப் பெயர் எடுக்கும் வழக்கம் எப்போது வந்தது?' கொஞ்ச நேரம் தலையைச் சொரிந்த அவரும், '1450 தோப்போ கிறிஸ்தோ!' என்றார். அதாவது கிபி 1450ஆம். இதில் கிபி என்பது தேவையற்றது. கிறிஸ்துவிற்கு முன் போப்பாண்டவரே கிடையாதே. அப்புறம் எதுக்கு கிபி? வெள்ளையா இருக்குறவன்லாம் அறிவாளின்னு நம்ம நினைச்சிடக் கூடாது! இதே தொலைக்காட்சியில் வந்த மற்றொரு செய்தி, 'கொசுக்கள் இந்தியாவில் உற்பத்தியாகி உலகம் முழுவதும் செல்கின்றனவாம். ஆகையால் அவை இந்தியர்களைக் கடிக்காதாம்!' இதையெல்லாம் பார்க்கும் போது எப்படா ஊருக்கு வருவோம்னு தோணுது.
நிற்க!

'அஞ்சாதீர்கள்!' அல்லது 'ஏன் அஞ்சுகிறீர்கள்?' என்று இயேசு தம் சீடர்களைப் பார்த்துக் கேட்கிறார். கேட்கும் இடம் படகு. கேட்கும் சூழல் புயல்.

இயேசு மட்டும் தூங்குகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியை வைத்து மறையுரை வைத்தபோது நான் கிளாடியேட்டர் திரைப்படத்தின் ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டேன். அதாவது மார்க்கு அவுரேலியுவின் பேரன் தூங்கிக் கொண்டிருப்பான். ஆனால் மகன் தூக்கமில்லாமல் நடந்து கொண்டிருப்பான். தூங்கிக் கொண்டிருக்கும் தன் அக்காவின் மகனைப் பற்றி அக்காவிடம் சொல்வார்: 'அவன் ஏன் நன்றாகத் தூங்குகிறான் தெரியுமா? ஏனெனில், அவன் அன்பு செய்யப்படுகிறான்!'

அன்பு செய்யப்படுபவர்களே நன்றாகத் தூங்குவார்கள். இயேசு தன் தந்தையின் பாதுகாப்பை உணர்ந்ததால் அவரால் நன்றாகத் தூங்க முடிந்தது. சீடர்கள் அந்தப் பாதுகாப்பினை உணராததால் பயந்து நடுங்குகின்றனர்.

'இயேசுவின் தூக்கத்தை' கடவுளின் இல்லாமை என்று சொல்லலாம். நம் வாழ்விலும் சில நேரங்களில் கடவுள் தூங்குவது போல இருக்கும். நாம் செய்யும் எதுவுமே சரிப்பட்டு வராது. நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகள் கூட நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

சில நேரங்களில் தூக்கமே நல்ல மருந்து. மனம் வலித்தால், கெட்ட செய்தி நம் காதுக்கு வந்தால், கட்டுக்கடங்காத கோபம் இருந்தால், பசி வந்து சாப்பிட ஒன்றும் இல்லையென்றால், படிக்க போரடித்தால், செய்வதையே செய்வது போல இருந்தால் உடனே தூங்கிவிட வேண்டும்.

அஞ்சாமல் இருப்பதற்கு கடவுளை எழுப்புவதற்குப் பதில் கொஞ்ச நேரம் தூங்கிவிடுவது நல்லது!


Sunday, August 24, 2014

ஏனெனில் அவர் கடவுள்!

இயேசு தம் சீடரை நோக்கி, 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார்...ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார். (மத்தேயு 16:13-17)

இரண்டு கேள்விகள்:

'மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'

'நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?'

இந்த நற்செய்திப்பகுதி மாற்கு (8:27-30) மற்றும் லூக்கா (9:18-21) நற்செய்திகளிலும் உள்ளது. ஆனால் அவைகளுக்கும், மத்தேயுவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது:

'நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று மற்ற நற்செய்தியாளர்கள் சொல்ல, மத்தேயு மட்டும் 'மானிடமகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். மேலும் பேதுருவின் பதில் மாற்கு நற்செய்தியில் 'நீர் மெசியா' என்றும், லூக்காவில் 'நீர் கடவுளின் மெசியா' என்றும் உள்ளது. மத்தேயுவில் 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று இரண்டையும் சேர்த்திருப்பதாக உள்ளது.

இயேசு என்னதான் கேட்டார்? பேதுரு என்னதான் சொன்னார்? - இவைகளை நாம் உறுதியாகச் சொல்ல முடியவில்லையென்றாலும், மத்தேயு சொல்கிறபடியே இருப்பதாக எடுத்துக்கொள்வோம்.

'மானிடமகன்' என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் தானியேல் மற்றும் எசேக்கியேல் நூல்களை முழுவதுமாகப் படிக்கவேண்டும். அது நம் தேடலை அதிகமாக்கிவிடும். ஆகவே, மானிடமகன் என்பதற்குப் பதில் நமக்குத் தெரிந்த 'கடவுள்' என்ற ஒரு வார்த்தையைப் போட்டு கேள்வியை மாற்றிக்கொள்வோம்:

'கடவுள் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'

நாம் இதற்கு என்ன பதில் சொல்வோம்? சிலர் சிவன் என்றும், சிலர் பெருமாள் என்றும், சிலர் புத்தர் என்றும், சிலர் மகாவீரர் என்றும், சிலர் காளி என்றும், சிலர் அல்லா என்றும், சிலர் இயேசு என்றும், சிலர் இயற்கை என்றும், சிலர் அப்படி யாரும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

கேள்வி இப்போது நம் பக்கம் திரும்புகிறது:
'நான் யாரென்று, அதாவது கடவுள் யாரென்று நீங்கள் சொல்கிறீர்கள்?'

இப்போது நாம் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் முதற்கேள்விக்கான பதிலை 'கூட்டத்தோடு கோவிந்தா' என்ற அடிப்படையில் சீடர்கள் சொல்கிறார்கள். இரண்டாம் கேள்விக்கு பேதுரு மட்டுமே பதிலளிக்கத் துணிகிறார்.

இன்றைக்கு எல்லாருமே கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள். அல்லது கடவுள் இல்லை என்று பேசுகிறார்கள். கடவுளைப் பற்றிப் பேசுவதுதான் இன்றைய ஃபேஷன். ஏனெனில், எல்லாவற்றையும் பற்றி நாம் பேசி முடித்துவிட்டோம். இனி அவர் ஒருவர் தான் பாக்கி. எல்லார் சொல்வதும் சரியாக இருப்பது போல நமக்குத் தெரிவதுதான் அதிலுள்ள வேடிக்கையே. ஒருவர் மற்றவரோடு போட்டி போட்டுக் கொண்டு சத்தம் போடுவதால் நாமும் 'பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நானும் ஒன்று' என்ற தொனியில் எல்லாரோடும் சேர்ந்து கொள்கிறோம்.

மெய்யியலில் 'மாஸ்டர்ஸ் ஆஃப் சஸ்பிஷன்' என்று மூன்று பேரைக் குறிப்பிடுவார்கள்: சிக்மண்ட் பிராய்ட், ஃப்ரையிட்ரிக் நீட்சே மற்றும் காரல் மார்க்ஸ். கடவுள் என்பவரை 'சஸ்பிஷன்' கொண்டு இவர்கள் பார்த்ததால் இந்தப் பெயர் இவர்களுக்கு. இந்த மேற்கத்திய குழுவோடு நம்ம ஊர் ஈ.வே. ராமசாமி (பெரியார்) அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அப்படி அவர்கள் என்னதான் சொன்னார்கள்?

பிராய்ட்: மதம் என்பது ஒரு மாயை. மனித உளவியல் பிறழ்வுகளில் மிக முக்கியமானது மதம். மதம் என்பது நாம் விடமுடியாமல் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு நியூரோஸிஸ்.

நீட்சே: கடவுள் இறந்துவிட்டார். கடவுள் இறந்தவராகவே இருக்கிறார். அவரை நாம் கொன்றுவிட்டோம்.

மார்க்ஸ்: மதம் என்பது ஒடுக்கப்பட்டோர் விடும் பெருமூச்சு. இதயமில்லாத உலகின் இதயம். ஆன்மா இல்லாமல் வாழும் வாழ்க்கை நிலையின் ஆன்மா. மக்களின் போதை மருந்து.

இந்த மூவரும் மதங்கள் முன் வைத்த கடவுளைத் தான் இப்படிச் சொன்னார்களே தவிர, தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையைக் கண்டிக்கவில்லை.

இப்படி எல்லாரும் கடவுளைப் பற்றிச் சொல்கிறார்கள்.

நானும், நீங்களும் என்ன சொல்கிறோம்?

தாகூர் சொல்வது போல அவர் இன்னும் நம்மிடையே வந்து கொண்டுதான் இருக்கின்றார். அந்த மெல்லிய காலடி ஓசைகளை நாம் தான் கேட்டு அவருக்குப் பெயர் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கின்ற பெயராகவே அவர் மாறிவிடுகிறார்! ஏனெனில் அவர் கடவுள்!


அவரைத் தான் தேடுவேன்!

இன்று மதியம் ஒரு புத்தகக் கடைக்குச் செல்வதற்காக மெட்ரோவில் சென்றேன். நான் ஏறிய நிறுத்தத்தின் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ஒருவர் சற்று வித்தியாசமாக இருந்தார். 'வித்தியாசமாக' என்றால் ஏறும்போதே தனக்குத் தான் பேசிக் கொண்டே வந்தார். விடுமுறைக்காலம் என்பதாலும், நான் இருந்தது மெட்ரோவின் முதல் பெட்டி என்பதாலும் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன. எனக்கு நேரெதிரே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார். எனக்கருகில் இருந்தவர்கள் எங்கே அவரின் பார்வை தங்கள் மேல் பட்டுவிடுமோ என்று அவசர அவசரமாக தங்கள் புத்தகங்களிலும், அலைபேசிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினர். அவர் என்னைப் பார்த்துக்கொண்டே என்னைப் பார்க்காதது போல தனக்குத் தானே பேசிக்கொண்டார்.

அ. எங்க பார்த்தாலும் இத்தாலியில் டிஸ்ஓக்குபாஷியோனே! (disoccupazione) எனச் சொல்கிறார்கள். இங்கே இவ்வளவு இருக்கைகள் காலியாக இருக்கின்றதே! - என்று அவர் சொல்லி முடிக்க எனக்கருகில் இருந்தவர்கள் முகம் சுளித்தார்கள். எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. அவரின் மொழியுணர்வை அறிந்து வியந்தேன். ஏனெனில் 'டிஸ்ஓக்குபாஷியோனே' (disoccupazione) என்பதற்கு 'வேலையில்லாத் திண்டாட்டம்' என்றும் பொருள், 'காலியான இருக்கை' என்றும் பொருள். ஒரு பக்கம் எங்களுக்கு அலுவலகத்தில் காலி இருக்கைகள் இல்லை எனப் வீதிகளில் போராட்டம் தொடுக்கும் மக்கள். மற்றொரு பக்கம் இவ்வளவு காலி இருக்கைகள் (மெட்ரோவில்!).

ஆ. இவர் சொன்னதை உடனடியாகக் குறித்துக் கொள்ளவேண்டும் என்று என் பையில் கை விட்டு அலைபேசி எடுத்தேன். உடனே அவர் இரண்டாவதாக ஒன்று சொன்னார்: 'இந்த உலகத்தின் மகிழ்ச்சியாக இருக்கும் நபர் அலைபேசி இல்லாதவர்தான்!'

எனக்கு சுருக்கென்றது. மறுபடியும் லேசாகச் சிரித்துக் கொண்டேன். இவர் சொல்வதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கவே செய்கின்றது. எத்தனை பேர் நம்மை அழைத்தார்கள் என்று பார்த்தும், எத்தனை பேர் நம்மை அழைக்கிறார்கள் என்று பார்த்தும் தான் பல நேரங்களில் நம் மகிழ்ச்சியின் அளவுகோல் உள்ளது.

இ. மெட்ரோ அடுத்தடுத்த நிறுத்தம் கடந்து கொண்டிருக்க ஒரு நிறுத்தத்தில் ஒரு அல்பேனிய பெண்ணும் (ஏறக்குறைய 21 வயது) அவரது சிறு பெண் குழந்தையும் (ஏறக்குறைய 3 வயது) ஏறினர். அல்பேனிய பெண் பாட்டுப் பாடிக் கொண்டே செல்ல அந்தக் குழந்தை பிச்சை கேட்டுக்கொண்டே வந்தது. அம்மா வேகமாக முன்னால் போக இந்தக் குழந்தை மெதுவாக ஒவ்வொருவராகத் தொட்டு பிச்சை கேட்டுக்கொண்டே வந்தது. நிறையப்பேர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு சிலருக்கு தன் உதட்டிற்கெட்டிய தூரத்தில் முத்தமும் கொடுத்தது. எனக்கு அடுத்த வரிசையில் இருந்த ஒரு சீனப்பெண்ணை அந்தக் குழந்தை தொட்டவுடன் அவர் வேகமாக அந்தக் குழந்தையை நோக்கி கையை ஓங்கினார். எல்லாரும் அதைப் பார்த்தார்கள். ஆனால் இந்த மனிதர் மட்டுமே குரல் கொடுத்தார். அதிகம் பேசவில்லை. ஒரே ஒரு வாக்கியம்: 'அது குழந்தை என்பதனால் தானே எளிதாகக் கையை ஓங்குகிறாய்! அவள் அம்மாவை நோக்கி ஓங்கு பார்ப்போம் உன் வீரத்தை!'

நமக்கு கீழ் ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பு தானே நம் வார்த்தைகள் தடிப்பதற்கும், கைகள் ஓங்குவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கின்றது.

புலம்பிக் கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச் சென்று விட்டார்.

இன்று அவரிடம் கேட்ட இந்த மூன்று வாக்கியங்கள் ஏதோ பெரிய இலக்கியம் படித்தது போல இருந்தது. அடுத்த நிறுத்தத்தில் நானும் இறங்கி மெட்ரோ லைன் மாறி புத்தகக் கடை செல்லாமலே வீடு திரும்பினேன்.

இனியும் நான் மெட்ரோவில் ஏறினால் அவரைத் தான் தேடுவேன்!

Friday, August 22, 2014

'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் அவர்களோடு'!

அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். (லூக்கா 1:27-28)

'ஆண்டவர் உம்மோடு!', 'கடவுள் நம்மோடு!' என்ற இரண்டு வார்த்தைகளை மையமாக வைத்து இன்று திருப்பலியில் மறையுரை நிறைவேற்றிவிட்டு இருக்கையில் அமர்ந்த போது திடீரென உள்ளத்தில் ஒரு நெருடல். அந்த நெருடலை இன்றைய வலைப்பதிவாக எழுத விழைகிறேன்.

'கடவுள் நம்மோடு' என்ற வார்த்தைகளோடு தொடங்குவோம். பழைய ஏற்பாட்டில் சிரியா நாட்டோடு அண்டை நாடுகள் எல்லாம் உடன்படிக்கை செய்து கொண்டுவிட்டன. இனியும் தான் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளாவிட்டால் எருசலேம் அழிந்துவிடும் என அஞ்சுகின்ற ஆகாசு அரசன் எசாயா இறைவாக்கினர் வழியாக யாவே இறைவனிடம் அறிகுறி ஒன்று கேட்கின்றார். அப்போது அவருக்குத் தரப்படும் அடையாளமே 'இம்மானுவேல்!' என்னும் மகன். 'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு' என்பது பொருள். பழைய ஏற்பாட்டில் இம்மானுவேல் என்பது ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கும். புதிய ஏற்பாட்டில் இது இயேசுவுக்குப் பொருந்துவதாக மாற்றிக் கொண்டார்கள்.

'கடவுள் நம்மோடு!'

தமிழில் ஆட்களைப் பற்றிப் பேசும் போது மூவிடங்களையும், இரண்டு எண்களையும் பயன்படுத்துகின்றோம்: மூவிடங்கள் என்பவை தன்மை, முன்னிலை, படர்க்கை. எண்கள் என்பவை ஒருமை எண், பன்மை எண்.
'நம்மோடு' என்பது தன்மை பன்மை. பன்மையை இன்னும் விரித்துப் பார்த்தால் 'உங்களோடு', 'அவர்களோடு' என இழுக்கலாம்.

ஆக, கடவுள் நம்மோடு, கடவுள் உங்களோடு, கடவுள் அவர்களோடு.

தன்மை பன்மையில் தமிழில் மட்டும் ஒரு வேறுபாடு வருகின்றது. 'எங்களோடு' என்பதும் தன்மை பன்மையே. ஆனால் பொருளில் வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, நமக்கு முன்னால் இருக்கும் நபரையும் சேர்க்காமல் பேசும்போது 'எங்களோடு' என்றும், சேர்த்துப் பேசும் போது 'நம்மோடு' என்றும் சொல்கின்றோம். உதாரணத்திற்கு, குழந்தைகள் 'எங்களுக்கு' பசிக்கிறது என்று தாயிடம் சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மட்டும் பசிக்கிறது என்று பொருள். தாயின் பசி குறித்து இங்கு நாம் பேசுவதில்லை. ஆனால் குழந்தைகள் 'நம்மோடு' சாப்பிட யார் வருகிறார்கள் என்று கேட்டால் அங்கே குழந்தைகள் தங்களை மட்டுமல்ல, தங்கள் தாயையும் தங்கள் குழுவோடு இணைத்துப் பேசுகிறார்கள்.

ஆங்கிலத்தில் 'எங்களோடு' மற்றும் 'நம்மோடு' என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் '...' என்ற ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது. எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இலத்தீனிலும் கூட ஒரு சொல்தான் உள்ளது. தமிழ் இதில் வேறுபட்டு நிற்கிறது.

இப்போது, கடவுள் நம்மோடு என்று சொல்லும் போது நாம் இரண்டு வகை தவறைச் செய்கிறோம்:

அ. அடுத்தவர்களுக்காக நாம் பேசுகிறோம். இங்கு இத்தாலியில் நின்று கொண்டு 'நம் இந்தியா!' என நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். அது ஆணவமாக அல்லது இத்தாலியர்களை அவமதிப்பதாகக் கருதப்படும். என்னைச் சாராத ஒருவரை நான் வம்படியாக என்னோடு இழுக்க நினைப்பது தனிமனித சுதந்திரத்தையும் உரிமையையும் அவமதிப்பதாகும். நம்மூரில் ஒரு கிறிஸ்துமஸ் விழா நடக்கிறது என வைத்துக்கொள்வோம். அங்கே இசுலாமிய, இந்து, பௌத்த, ஜைன, எம்மதம் சாராத சகோதர, சகோதரிகள் உடன் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் 'இயேசு என்றால் இம்மானுவேல். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு' என நான் சொன்னால், அது அவர்களின் மனதைப் புண்படுத்துவதாகும். அவர்களை எப்படி இயேசு என்ற என் கடவுளுக்குள் இழுக்க முடியும்?

ஆ. 'கடவுள் நம்மோடு' என்று சொல்லும் போது அது மற்ற இரண்டு இடங்களையும் நிராகரிக்கிறது. அதாவது 'கடவுள் உங்களோடு இல்லை!' எனவும், 'கடவுள் அவர்களோடு இல்லை!' எனவும் 'கடவுள் எங்களோடு!' எனவும் பொருள் தருகிறது. இது நம்மையறியாமலேயே மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் எனச் சிந்திக்கவும், மற்றவர்கள் இருக்கவே தகுதியற்றவர்கள் எனவும் நம் மூளை சிந்திப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடக்கும் சண்டையின் கருத்தியல் இதுதான். 'கடவுள் எங்களோடு' என்று மார்தட்டும் இஸ்ரேல் யூதர்கள், 'கடவுள் உங்களோடு இல்லை!' என்று பாலஸ்தீன இசுலாமியர்களை நோக்கி விரலை நீட்டுகின்றனர்.

நாம் நம்மையறியாமல் அன்றாடம் ஏற்றுக்கொள்ளும் விவிலிய உண்மைகள் நாம் விடுதலையடைவதற்குப் பதிலாக, நம்மை அடிமைகளாக்கவும் செய்து விடுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. Religion can be oppressive as much as it is liberative.

'ஆண்டவர் உமக்காக!' என்று விடுதலைப்பயண நூலில் (14:13) தம்மை வெளிப்படுத்தும் இறைவன், நீதித்தலைவர்கள் நூலில் (6:12) தான் 'ஆண்டவர் உங்களோடு' என்று மாறுகின்றார். கிதியோனைப் பார்த்து முதன் முதலாக வானதூதர் சொல்வதும் ஒரு போரின் பின்புலம்தான். 'ஆண்டவர் உங்களோடு!' என்று சொல்கிறீர்களே, 'ஆண்டவர் எங்களோடு இருந்தால் நாங்கள் ஏன் இப்படி அடிமைகளாக இருக்கிறோம்!' என்று எகத்தாளமாகக் கேட்பார்.

அன்று வானதூதர் கிதியோனிடம் சொன்ன வார்த்தைகளை கபிரியேல் தூதர் மரியாவிடம் சொல்கிறார். இன்றும் அதை நாம் திருப்பலி மற்றும் அருட்சாதனக் கொண்டாட்ட நிகழ்வுகளில் சொல்கிறோம்.

'ஆண்டவர் உங்களோடு!' என்றால் 'ஆண்டவர் எங்களோடு!' அல்லது 'ஆண்டவர் அவர்களோடு!' என்பது பொய்யா?

ஆண்டவர் என்றால் அவர் எல்லாருக்கும் தானே! ஏன் நமக்கு மட்டும் அல்லது நம்மோடு மட்டும் எனச் சொல்ல வேண்டும்?

'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு!' என்பது பொருள்...!


துன்பத்தால் மன உறுதி - 2

தகைமையின் தொடர்ச்சியாக தூய பவுலடியார் முன்வைக்கும் மதிப்பீடு எதிர்நோக்கு. எதிர்நோக்குக்கு அடிப்படை நம்பிக்கை. எடுத்துக்காட்டாக, காலை 10:00 மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வரும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடு 9:50லிருந்து அல்லது 9:55லிருந்து காத்திருப்பது எதிர்நோக்கு. 10:00 மணிக்கு பேருந்து வராது என்று நாம் நம்பினால் நாம் அதற்காக காத்திருக்கப் போவதில்லை. நம்பிக்கையும், எதிர்நோக்கும் கைகோர்த்து நிற்பவை. எதிர்நோக்கில் ஒரு காத்திருத்தல் ஒளிந்திருக்கிறது. தூய பவுலடியார் குறிப்பிடும் எதிர்நோக்கு விண்ணகம் சார்ந்தது. எதிர்நோக்கை மண்ணகம் சார்ந்து புரிந்து கொள்ள முடியுமா? நம் வாழ்வில் நம்மை முன்னோக்கிக் கொண்டு செல்லக் காரணம் இந்த எதிர்நோக்குதான். நம்பிக்கை உள்ள மனிதர்கள் வாழ்வார்கள். எதிர்நோக்கு உள்ள மனிதர்கள் முன்னோக்கிச் செல்வார்கள். எதிர்நோக்கு குறையும் போது வாழ்வில் தேக்க நிலை வந்து விடுகிறது. 'என்ன படிச்சு என்ன ஆகப்போது!' 'என்ன வேலை செஞ்சாலும் நான் அப்படியே தான் இருக்கப் போகிறேன்!' என்ற புலம்பல்கள் வரும்போது நம் எதிர்நோக்கை பூஸ்ட் செய்வது அவசியம்.

துன்பம், மன உறுதி, தகைமை, எதிர்நோக்கு என அடுக்கிக் கொண்டு போகும் பவுலடியார் துன்பம் என்ற வாழ்வியல் எதார்த்தம் தரும் மூன்று மதிப்பீடுகளைச் சொல்கின்றார்.

வாழ்வின் எதார்த்தங்கள் ஒவ்வொன்றும் நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கத்திலிருந்து நாம் எந்த மதிப்பீட்டை கடைந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்வியல் அமைந்திருக்கின்றது. எதார்த்தங்கள் மதிப்பீட்டைத் தருகின்றது. மதிப்பீடுகள் எதார்த்தங்களை மாற்றுப் பார்வையோடு பார்க்க நமக்குக் கற்றுத் தருகின்றன.

Wednesday, August 20, 2014

துன்பத்தால் மன உறுதி - 1

ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும்,
மன உறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும்
என அறிந்திருக்கிறோம்.
(உரோமையர் 5:3-4)

நேற்றைய தினம் திருச்சபையின் திருப்புகழ்மாலையில் மன்றாட்டுக்களுக்கு முன்னுரையாக மேற்காணும் இறைவாக்கு இருந்தது. கடந்த ஆண்டு உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் கிரேக்கக் கட்டமைப்பைப் படித்த போது என்னைத் தொடாத இந்த வாக்கு நேற்று காலை முதல் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அ. துன்பம், மன உறுதி, தகைமை, எதிர்நோக்கு - நான்கு வார்த்தைகள்.

ஆ. துன்பத்திலிருந்து மன உறுதி, மன உறுதியிலிருந்து தகைமை, தகைமையிலிருந்து எதிர்நோக்கு - மூன்று தொடர்புகள்.

இ. துன்பம் என்னும் எதார்த்தம், மன உறுதி, தகைமை, எதிர்நோக்கு என்னும் மதிப்பீடுகள் - இரண்டு படிநிலை உண்மைகள்.

நான்கு, மூன்று, இரண்டு என அழகாக கிரேக்கக் கட்டமைப்பு இருக்கின்றது.

அ. நான்கு வார்த்தைகளின் பொருள் என்ன?

துன்பம் என்றால் 'கஷ்டம்' என வைத்துக் கொள்வொம். இந்த அதிகாரத்தில் 'துன்பம்' என்ற வார்த்தையை பவுலடியார் ஏன் கொண்டு வருகிறார்? 'கடவுளுக்கு ஏற்புடையவராதல்' என்பது இந்தப் பகுதியின் தலைப்பு. 'கடவுளுக்கு ஏற்புடையவராக' இருப்பதில் இருக்கும் சிக்கல்கள் அல்லது துன்பங்கள் என வைத்துக்கொள்ளலாம். ஏற்புடையவராக இல்லாமல் இருப்பது சிக்கல் இல்லை. ஏற்புடையவராக இருத்தலில் தான் நிறைய சிக்கல்கள் அல்லது துன்பங்கள் இருக்கின்றன. 'ஏற்புடையவராதல்' என்பது பவுலடியாரின் மிகப்பெரிய இறையியல். நாம் கடவுளின் அருளால் ஏற்புடையவராகிறோமா அல்லது நம் செயல்களால் ஏற்புடையவராகிறோமா? அருளா? நம்பிக்கையா? என கேள்விகள் வளர்ந்து லூத்தர் அவர்கள் பிரிந்து போகக் காரணமாக இருந்ததும் இந்த ஏற்புடையவரதால் கருத்தியல்தான்.

இன்னைக்கு நமக்குத் துன்பமே வரக்கூடாது என நினைக்கின்றோம். நாம் அன்றாடம் வாசிக்கும் திருட்டு சம்பவங்கள், வன்முறை, கொலை அனைத்திற்கும் பின்னால் இருப்பதும் இதே சிந்தனை தான். 'கஷ்டப்படாம எல்லாமே கிடைக்கணும்!'

இந்த சிந்தனை ஆன்மீகத்திலும் சில நேரங்களில் வந்து விடுகிறது. 'கஷ்டப்படாம மோட்சத்துக்குப் போகணும்!' நான் என்ன செஞ்சாலும் கடவுள் தான் மன்னித்துவிடுவாரே என்று சொல்லியே நாம் செய்யும் தவறுகளையும் நியாயப்படுத்துகிறோம். கடவுளின் மன்னிப்பு ஒரு குறுக்குவழி ஆன்மீகமாக மாறிவிடுகிறது. பவுலடியாரின் இந்த ஏற்புடையவராதலில் குறுக்கு வழிக்கே இடமில்லை. ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்புடையவரானார் என்று சொல்லும் போது அவர் குறிப்பிடுவது, ஆபிரகாமை கடவுள் அழைத்தபோது அவர் அனைத்தையும் விட்டுவிட்டு 'தான் எங்கு செல்கிறோம் என்று தெரியாமலேயே புறப்பட்டுச் சென்றார்!' என்று சொல்கின்றார். இப்படிச் செல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். 'என்ன நடந்தாலும் பரவாயில்லை!' என்ற திடம் வேண்டும். இது ஒரு துன்பமயமான பாதை.

இரண்டாவதாக, மன உறுதி. 'காம்ப்ரமைஸ்' செய்யாத ஒரு மனநிலை. ஆல்கஹாலிக் அனானிமஸ் புரோகிராமிலும், போதை மருந்து எடுத்தல், பாலியல் பிறழ்வு போன்ற விடமுடியாத பழக்கவழக்கங்களிலும் இருப்போரை நேரிய வழிக்குக் கொண்டுவரும்போது அவர்கள் அதிக கஷ்டப்படுவது இந்த மனஉறுதியில்தான். 'இன்னைக்கு ஒரு நாளைக்கு குடிக்கிறேனே! நாளை விட்டுவிடுகிறேன்!' என்று சொல்பவர் ஒருநாளும் குடிபோதையை நிறுத்த மாட்டார். 'இன்று மட்டும் நான் சுயஇன்பம் பெறுகிறேன்! நாளை நிறுத்திவிடுகிறேன்!' என்ற சொல்பவரும் நிறுத்துவதேயில்லை. ஒருநாள் நல்லவராக இருப்பது எளிது. என்றுமே நல்லவராக இருப்பதற்கு நிறைய மனஉறுதி தேவை. ஆனால் துன்பங்கள் வர வர மனஉறுதி தானாக வந்துவிடும். காலையில 5 மணிக்கு எழுவதோ, குடிக்காமல் இருப்பதோ ஒரு சில நாட்கள் துன்பமாக தெரியும். ஆனால் தொடர்ந்து இந்தத் துன்பங்களை ஏற்க பழகிவிட்டால், நம் மனம் நம்மேல் நம்பிக்கை வைக்கும்: 'குட் பாய்! இவனுக்கு 5 மணி என்றால் 5 மணி! ஆம் என்றால் ஆம்! இல்லை என்றால் இல்லை!' நம் மனம் நம்மை நம்பினால் போதும். இந்த உலகமே நம்மை நம்பவில்லையானாலும் நாம் சாதித்துவிடலாம். ஆனால் உலகமே நம்மை நம்பி, நம் மனம் நம்மை நம்பவில்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த உற்சாக நிலைதான் மூன்றாவதாக வரும் தகைமை. அழகான தமிழ் வார்த்தை. நேர்மை என்றும் கண்ணியம் என்றும் கூட மொழி பெயர்க்கலாம். ஆங்கிலத்தில் 'கேரக்டர்' என மொழிபெயர்க்கின்றனர். 'அவன் கேரக்டர் சரியில்லையே!' என்று நாம் சொல்லும் போது பயன்படுத்தும் 'கேரக்டர்'.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
என்ற 405வது குறளில் 'தகைமை' என்பது ஒருவரின் கேரக்டர் என்ற பொருளில் உள்ளது.

அபிராமி அந்தாதியிலும் (எண் 46) தகைமை பற்றிய அழகான பாடல் உண்டு:
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே - புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவேனே.

'தகைமைகள்' என்று பன்மையில் வருமிடத்தில் இதன் பொருள் செயல். 'தகைமை' என்று ஒருமையில் வருமிடத்தில் இதன் பொருள் 'கடவுளின் மேன்மை'.

தகைமையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தங்கம் - தக தகவென இருப்பதால்தான் அது தங்கம். ஒன்றின் உண்மை இயல்பாக இருப்பதே தகைமை.

நெருப்பு என்றால் சுட வேண்டும். பூமி என்றால் சுற்ற வேண்டும். மனிதர் என்றால் போராட வேண்டும் - இது கவிப்பேரரசு வைரமுத்து சொல்லும் தகைமை!

இன்னும் சொல்வேன்...

Tuesday, August 19, 2014

ஐஃபோனில் கூகுள் ஸ்டோர் பயன்படுத்த முடியுமா?

முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும். (மத்தேயு 7:16-17)

அப்பம் - கல், மீன் - பாம்பு போல மீண்டும் இரண்டு எதிர்ப்பதங்களை உருவகங்களாக முன்வைக்கின்றார் இயேசு: முட்செடிகள் - திராட்சைப் பழம், முட்பூண்டுகள் - அத்திப் பழங்கள்.

இயேசுவின் இன்றைய போதனை போலி இறைவாக்கினர்களைக் கடிந்து கொள்ளும் பின்புலத்தில் உள்ளது.

நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

1. விளைவிற்கு (effect) முன்பாகவே காரணம் (cause) இருக்க வேண்டும். (கனிக்கு முன்பாகவே மரம் இருக்க வேண்டும்)

2. காரணத்திற்கும், விளைவிற்கும் நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும். (மரத்தின் உள்ளிருக்கும் சுவை கனியில் வெளிப்பட வேண்டும்!) ஆனால் வேப்ப மரம் கசக்க, வேப்பம் பழம் எப்படி இனிக்கிறது?

3. ஒரே காரணம், ஒரே விளைவையே ஏற்படுத்திறது.

4. காரணத்தின் மாற்று உருவமே விளைவு. (அதாவது, மண்ணின் மாற்று உருவமே பானை)

மேற்காணும் டேவிட் க்யூம் அவர்களின் காரணம் - விளைவுக் கோட்பாட்டினை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் இயேசு. இயேசுவுக்கு முன் கிரேக்க நாட்டு மேதை அரிஸ்டாடிலும் சொல்லிவிட்டார் என்பதையும் நினைவில் கொள்வோம்.

நம் இயல்பு நாம் தரும் கனிகளில், அதாவது நாம் செய்யும் செயல்களில் வெளிப்படுகிறது. நம் செயல்களும், நம் இயல்பும் ஒன்றே. உள்ளத்தில் ஒன்றும், வெளியில் வேறொன்றும் இருந்தால் அது பொய் அல்லது போலி என ஆகிவிடுகிறது.

உள்ளுக்குள்ளே சைனா மெடிரியலும், வெளியில் பெயர் மட்டும் 'மெய்ட் இன் ஜப்பான்' என எழுதியிருந்தால் அதை நாம் போலி என்கிறோம். காரணமும், விளைவும் ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்.

'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்பது பழமொழி. அதாவது பாத்திரத்தில் இருக்கும் ஒன்றே கரண்டியில் வரும். பாத்திரத்தில் தண்ணீர் இருந்து கரண்டியில் அதை நாம் எடுத்தால் தண்ணீர் தான் வருமே தவிர தேன் வராது.

இந்தப் பழமொழி உண்மையில் ஒரு மரூஉ என்கின்றனர் சிலர். இதன் மூலப் பழமொழி என்ன தெரியுமா?

'சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்'

சஷ்டி என்றால் சைவ சமய இந்துக்களின் ஸகந்த சஷ்டி பண்டிகை. இந்த சஷ்டியில் பெண்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம். இந்த பண்டிகை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒருநாள் கொண்டாடப்படும். புதிதாக திருமணம் முடிந்த மணப்பெண்கள் இந்தக் காலத்தில் விரதம் இருந்து தன் ஆணோடு கூடினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே இப்பழமொழியின் பொருள். இதையொட்டிய மற்றொரு செய்தி: ஆடி மாதத்தில் கணவன் - மனைவியை பிரித்து வைக்கும் பழக்கம் இன்னும் ஒருசில சைவக் குடும்பங்களில் உண்டு. ஏன் தெரியுமா? ஆடியில் மணமக்கள் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரையில் நம் நித்திரை கலைத்து அடிக்கும் அக்னி நட்சத்திர வெயில் பிறந்த குழந்தைக்கு ஒவ்வாது. புதிதாய்ப் பிறக்கும் குழந்தையின் நலன் கருதி ஆடி மாதம் பிரித்து வைக்கின்றனர் மணமக்களை. ஆடி-ஆவணி முடிந்து புரட்டாசி, ஐப்பசிகளில் வரும் திருநாளே சஷ்டித் திருநாள். அருட்பணியாளர்களுக்கு எல்லா மாதமும் ஆடி மாதமே!

சரி பழமொழிக்கு வருவோம்.

சஷ்டி என்றால் சஷ்டி விரதம், அகப்பை என்றால் அகத்தில் இருக்கும் பை, அதாவது, கருப்பை. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை வைரும். விரதத்தையும், குழந்தையும் நீக்கிவிட்டால், சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும். இதை வேகமாக சொல்லிப் பாருங்களேன்!

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்! என மாறிவிடும்.

என் கருத்து என்னவென்றால் 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பது நம் தமிழர்களின் உண்மையான பழமொழி. காலங்காலமாக புழக்கத்தில் இருந்த ஒரு பழமொழியை சைவ சமயம் தமிழ் மண்ணில் பிறந்த போது தன்னகத்தே எடுத்துக்கொண்டு அதை தங்களின் பண்டிகைக்கு பொருந்தும் ஒன்றாக மாற்றிக்கொண்டது. சைவ சமயத்தில் புழங்கும் 'ஷ' என்பது நம் தமிழ்மொழியின் எழுத்துருவோ, அல்லது சொல்லுருவோ அல்லவே.

தமிழர்கள் இயல்பாகவே எந்த கடவுளையும் வழிபடாதவர்கள். இந்த மக்களை நோக்கி வருகின்ற பல்வேறு மதங்கள் தங்களுக்கேற்றவாறு தமிழை மாற்றிக்கொண்டு, தங்கள் கடவுளையும் அதில் இணைத்து விட்டனர்.

உதாரணத்திற்கு, முருகனை தமிழ்க்கடவுள் என்று அழைத்தனர். தமிழர்களின் மற்றொரு அடையாளம் சேவல். இதை முருகனோடு எப்படி இணைப்பது? முருகனுக்குத் தான் மயில் என்ற பறவை வாகனமாக இருக்கிறதே. யோசித்தவர்கள் என்ன செய்கிறார்கள்? முருகனின் கையில் ஒரு கொடியைக் கொடுத்து அந்தக் கொடியில் சேவலைப் பொறித்து விடுகிறார்கள். முருகனுக்கு இதனால் தான் 'சேவற்கொடியான்!' என்ற பெயரும் வந்தது.

கோழியில் இருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற ரேஞ்சுக்கு பிரச்சினை வளர்கிறது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்வோம்.

முட்செடிகளில் திராட்சைப் பழங்களைப் பறிக்க முடியுமா?

ஆண்ட்ராய்ட் ஃபோனில் ஃபேஸ் டைம் பயன்படுத்த முடியுமா?

ஐஃபோனில் கூகுள் ஸ்டோர் பயன்படுத்த முடியுமா?


Monday, August 18, 2014

மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! (மத்தேயு 7:9-11)

அப்பம் கேட்டால் கல்லைக் கொடுப்பாரா?

மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

மொழியில் உருவகங்கள் பல வகை. அவைகளில் ஒன்று தான் எதிர்ப்பதம். ஒன்றின் அர்த்தத்தை அதன் எதிர்ப்பதம் கொண்டு புரிந்து கொள்வது.
அப்பம் - கல், மீன் - பாம்பு என்ற இரண்டு உருவகங்கள் மட்டும் தான் வெளிப்படையாகத் தெரிந்தாலும், மற்ற இரண்டு உருவகங்கள் மறைந்திருக்கின்றன: பிள்ளைகள் - தந்தை, தீயோர்கள் - நன்மை.

வானகத் தந்தையின் மேன்மையைப் புரிந்து கொள்ள மண்ணுலகின் தந்தையர்களை முன் வைக்கின்றார் இயேசு. மண்ணுலகின் தந்தையர்களை ஏன் தீயோர்கள் என அழைக்கின்றார்? என்பது நம் முதல் கேள்வி. 'தீயோர்கள்' என்பது 'தீமை செய்பவர்கள்' என்று குறிப்பிடுவது அல்ல. கடவுள் தன்மையை விட குறைந்த தன்மைக்குத் தான் 'தீமை' என்று சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, குறைவுடையவர்களே நிறைவான செயல்களைச் செய்யும் போது, நிறையுடையவர் இன்னும் எவ்வளவு நிறைவான செயல்களைச் செய்வார் என்பதே பாடம்.

அப்பமும், கல்லும் அளவில் ஒன்றாகத் தான் இருக்கும். அதுபோல மீனும், பாம்பும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுதான். இருளில் இருந்து பார்த்தால் கல் அப்பம் போலவும், பாம்பு மீன் போலவும் தான் இருக்கும். மீன் பிடிக்கப் போகிறேன் என்று சொல்லி குட்டித் தண்ணீர் பாம்புகளை பிடித்து வந்த நிகழ்வு என் சிறுவயதில் நடந்திருக்கிறது. மண்ணுலகின் தந்தையர் இப்படி தம் பிள்ளைகளை ஏமாற்றுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அவர்கள் தங்கள் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக ஏமாற்றுவதில்லை. தீமை செய்வதற்கான வாய்ப்பைக் கொண்ட தீயவர்களாக இருந்தாலும் அவர்கள் நன்மை செய்யவே துணிகிறார்கள். ஆனால் கடவுளைப் பொறுத்தவரையில் தீமை என்பதற்கே வாய்ப்பில்லை. அவரால் நன்மை மட்டுமே செய்ய முடியும்.

இந்தக் கேள்வி நமக்கு வைக்கும் பாடங்கள் மூன்று:

1. கடவுள் நன்மைத் தனம். 'கடவுள் எனக்குத் தீமை அனுப்பிவிட்டார்' என்று புலம்புவது தவறு. 'எண்ணம் தனக்கே!' என்பது முதியோர் வாக்கு. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா!' என்பது பூங்குன்றனாரின் மொழி.

2. அவரிடம் கேட்பவருக்கு! 'கேளுங்கள். கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இந்தப் பகுதி அமைந்திருக்கின்றது. 'கேட்பவரே!' பெறுகிறார். 'வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்!' என்பதுன் மூலமொழியும் இதுதான்.

3. 'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி' என்பார் கண்ணதாசன். அப்பம் என்றால் அப்பத்தையும், மீன் என்றால் மீனையும் சொல்வதும், அதன் படி செய்வதும் தான் மேன்மை குணம்.

அப்பம் கேட்டால் கல்லை, மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?


உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?

உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம். 'உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? (மத்தேயு 7:3-4)

உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?

அடுத்தவரிடம் இருக்கும் சிறிய குறைகளைச் சரி செய்ய நாம் முயற்சி செய்யுமுன் நம்மிடம் இருக்கும் (பெரிய) குறைகளைக் கவனிக்க வேண்டும் என்பதும் களைய வேண்டும் என்பதே இன்றைய கேள்வி சொல்லும் பாடம்.

நம்மை நல்லவர்கள் என்று காட்டுவதற்கு இலகுவான வழி அடுத்தவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்லி விடுவது. இந்த இலகுவான வழியை விடுக்கவும் இன்றைய கேள்வி அழைப்பு விடுக்கின்றது.

வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை!


Sunday, August 17, 2014

எதை உண்போம்? எதை அணிவோம்?

ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்...உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். (மத்தேயு 6:31-32)

எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்?

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என இன்று கருதப்படுபவை மூன்று: உணவு, உடை, இருப்பிடம். இயேசுவின் காலத்தில் உணவும், உடையும் மட்டுமே இன்றியமையாதவை என கருதப்பட்டது. இயேசுவின் காலத்தவர் அன்றும் நிலையான இருப்பிடம் இல்லாதவர்களாகத் தான் இருந்தனர்.

உணவைப் பற்றிக் கவலை வேண்டாம் என்பதற்கு வானத்துப் பறவைகளை எடுத்துக்காட்டாக வைத்த இயேசு, உடையைப் பற்றிக் கவலை வேண்டாம் என்பதற்கு காட்டுமலர்ச் செடிகளை எடுத்துக்காட்டாக வைக்கின்றார்.

காட்டு மலர்ச் செடிகள் அல்லது லீலிப் பூக்களின் நேர்த்தியான வடிவமைப்பும், வர்ணங்களின் கலவையும் அரண்மனையில் ஆடை வடிவப்பராலும் செய்ய முடியாது என்பதைக் காட்டவே 'சாலமோன் கூட அப்படி உடுத்தியதில்லை' என முன்வைக்கின்றார்.
பறவைகள், பூச்செடிகள் - இந்த இரண்டோடும் மனித இனத்தை ஒப்பிடும் போது மனிதர்கள் நாம் விதைக்கிறோம், அறுவடை செய்கிறோம், களஞ்சியங்கள் கட்டி சேர்த்து வைக்கிறோம், ஆடை நெய்கிறோம், தைக்கிறோம், சாயம் போடுகின்றோம். இவைகளில் எதுவுமே இல்லாத பறவைகளும், பூக்களும் மகிழ்ச்சியாக இருக்க, இவ்வளவு இருந்தும் ஏன் நாம் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க இயேசு அழைக்கிறார்.

நாம் சின்னக் குழந்தைகளாக இருந்த போது நம்மை யாராவது அழ வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்று நாம் வளர்ந்த பிறகு நம்மை யாராவது மகிழ்ச்சியாக வைக்க ஜோக் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. சின்னக் குழந்தையாக இருந்த போது நம்மில் தழும்பி வழிந்த மகிழ்ச்சி, நாம் வளரத் தொடங்கியவுடன், குறைந்து வருத்தமாக, கவலையாக மாறிவிடுகிறது.

மகிழ்ச்சி குறைவுக்குக் காரணம் நம்பிக்கைக் குறைவு. மகிழ்ச்சி நம்மில் குறைந்தவுடன் அந்த மகிழ்ச்சியை நாம் வெளியே தேட ஆரம்பிக்கிறோம்.

சத்குரு ஒரு அழகிய உருவகம் சொல்வார். கொஞ்சம் க்ரூடாக இருக்கும்!

ஒரு தோட்டத்தில் ஒரு எருது மேய்ந்து கொண்டிருந்தது. மேய்ந்து கொண்டிருந்த எருது அங்கே ஒரு கொக்கு சோகமாக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறது. 'ஏய் கொக்கே! ஏன் இவ்வளவு சோகம்?' என்று கேட்க, கொக்கு சொல்கிறது: 'கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக நான் இளமையாக இருந்த போது அதோ தெரிகிறதே அந்த மரத்தின் உச்சியில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தேன். இன்று வயதாகிவிட்டது. மரத்தின் முதல் கிளையைக் கூட என்னால் ஏற முடியவில்லை. என் இறகுகளிலும் வலுவில்லை. அதை நினைத்து வருத்தமாயிருக்கிறேன்!' எருது சொன்னது: 'நான் போடும் சாணியில் தினமும் கொஞ்சம் சாப்பிடு! நீ வலிமை பெறுவாய்!'. கொக்கு, 'இல்லை! நீ ஏமாற்றுகிறாய். அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை!' என்றது. பின் ஒரு நாள் கொக்கும் 'சரி தின்றுதான் பார்ப்போமே!' என்று தின்றும் பார்த்தது. கொஞ்சம் வலிமை வந்தது போல இருந்தது. இப்படியாக தினம் ஒரு வாய் சாணி ஒரு கிளை உயரம் என ஒரு நாள் மரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது. அங்கே ஒய்யாரமாக அது அமர்ந்திருப்பதை தூரத்தில் பார்க்கிறார் ஒரு பால்கனியில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக் காரன். உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்து குறிபார்த்து அந்த கொக்கைச் சுட அது மடிந்து விழுந்து விட்டது.

சத்குரு இப்படி நிறைவு செய்கிறார்: இந்தக் கதையின் மாரல் இதுதான்: "any bullshit can make you reach height, but it won't let you stay there long".

நாம் அன்றாடம் ஓடித் தேடும் படிப்பு, வேலை, பயணம், உணவு, நாகரீகம், மது, போதை இவையெல்லாம் நம்மை மரத்தின் உச்சிக்கு இட்டுச் செல்லும். ஆனால் அங்கே நாம் நீடித்திருக்க முடிவதில்லை.

வெளியே தேடுவதை விடுத்து கொஞ்சம் உள்ளே தேடினால் கிடைக்குமே!

'ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33)


Saturday, August 16, 2014

எவர் ஒரு முழம் கூட்ட முடியும்?

வானத்துப் பறவைகளை நோக்குங்கள். அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? (மத்தேயு 6:26-27)

'எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?'

இந்தக் கேள்வியை 'எவர் தமது ஆயுளோடு ஒரு நாளைக் கூட்ட முடியும்?' எனவும் மொழிபெயர்க்கலாம்.

இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு அங்கமாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. 'கவலைப்பட வேண்டாம்' என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருக்கும் இயேசு, கவலைப்படுவதன் காரணம் என்ன என்பதையும், கவலைப்படாமல் இருப்பதற்கு உதாரணம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்.

கவலை ஏற்படுவதன் காரணம் என்ன?

'இயற்கையின் போக்க மாற்ற நினைப்பது'

உதாரணம் என்ன?
'வானத்துப் பறவை'

வானத்துப் பறவை செய்யாத ஒன்றை மனித இனம் செய்வதாகச் சொல்கின்றார் இயேசு.

மனிதர்கள் விதைக்கிறார்கள்.
மனிதர்கள் அறுக்கிறார்கள்.
மனிதர்கள் சேர்த்து வைக்கிறார்கள்.

இந்த மூன்றையும் வானத்துப் பறவைகள் செய்வதில்லை.

இந்த மூன்றிலுமே மனிதர்கள் இயற்கையின் போக்கை மாற்ற நினைக்கிறார்கள் தாம். எங்கே விதைக்கிறார்கள்? 'தனக்கென்று உள்ள நிலத்தில்!' எவரும் அடுத்தவர் நிலத்தில் விதைப்பதில்லை. 'தனக்கென்று' ஒன்று வந்தவுடனே அங்கே கவலை வந்து விடுகிறது. 'எனக்கென்று' இருப்பது போதவில்லையே! எனக்கென்று இருப்பது நன்றாக இல்லையே! என்று தொடங்கும் புலம்பல் 'அவனுக்கு நிறைய இருக்கிறதே! அவனிடம் இருப்பது நன்றாக இருக்கிறதே!' என பொறாமையாக மாறிவிடுகிறது. அறுவடையிலும், களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதிலும் தன்னலம் இன்னும் ஆழமாக மனித மனதில் பதிந்து விடுகிறது.

'உங்கள் உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியுமா?' என்று கேட்கிறார் இயேசு. நிலம், அறுவடை என்று இயற்கையின் போக்கை மாற்றும் மனித இனம் எல்லாவற்றிலும் மாற்ற முடியாது எனவும் எச்சரிக்கை செய்கின்றார். இன்றைய ஜெனிடிக் என்ஜினியரிங் மற்றும் பயோடெக்னாலஜி வளர்ச்சியில் உயரத்தோடு ஒரு முழம் கூட்டுவது ஓரளவுக்கு சாத்தியமாகக் கூடியதுதான். மனித ஆயுளின் ஒருநாளைக் கூட்டுவதும் இந்த மருத்துவ உலகில் சாத்தியம்தான். இயேசுவின் கேள்வியை இன்றைய நிலையில் நாம் பொய்யாக்கி விடலாம் தான்.

ஆனால், வானத்துப் பறவை நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கவே செய்கிறது.

'சரி! விதைக்க வேண்டாம்! அறுக்க வேண்டாம்! களஞ்சியத்தில் சேர்க்க வேண்டாம்!' இப்படி வாளாவிருந்தால் நம் தட்டிற்குச் சோறு வந்து விடுமா என்ன?

எந்தப் பறவைக்கும் கடவுள் கூட்டிற்குக் கொண்டு போய் உணவை ஊட்டிவிடுவதில்லை. பறவைக்குத் தேடுதலைக் கொடுத்திருக்கிறார். அந்தத் தேடுதலைப் பயன்படுத்துகின்ற பறவை பசியாறுகிறது. நமக்கென்று இன்றைய அரிசி எங்கேயோ இருக்கும்! அதைத் தேடுவோம் என்ற கூட்டைவிட்டுப் புறப்படுகிறது பறவை.
நம் மனித இயல்புக்குரியவற்றை நாம் செய்யவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அண்மையில் அருட்தந்தை சிவன், சே.ச., அவர்கள் ஒரு கதை சொல்லக் கேட்டேன்:

'ஒரு மரத்தின் கூட்டில் உள்ள இரண்டு குருவிகள் பேசிக்கொண்டனவாம்.

ஒரு குருவி சொன்னதாம்! 'இந்த மனிதர்கள் ஏன் இவ்வளவு பரபரப்பாக இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்?'

மற்ற பறவை கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு பதில் சொன்னதாம்: 'நம்மைப் பார்த்துக்கொள்ள ஒரு அப்பா இருப்பது போல அவர்களைப் பார்த்துக்கொள்ள அப்பா இல்லை போலும்!'

நம்மைப் பார்த்துக் கொள்ள ஒரு அப்பா இருக்கிறார் என்ற உணர்வு ஒன்றே நம் பசியாற்றும்!


Friday, August 15, 2014

உயர்ந்தவை அல்லவா?

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா?
(மத்தேயு 6:25)

விவிலியத்தின் ஒரு சில கேள்விகளுக்கு 'ரெட்டரிக்' (rhetoric) கேள்வி என்று பெயர். இந்தக் கேள்விகளுக்குப் பதில் கேள்வியிலேயே இருக்கும்.

'உணவை விட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா?' என்ற கேள்விக்குப் பதில்: 'உணவை விட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவை!'

இந்தக் கேள்வியில் இரண்டு முதன்மைப்படுத்துதலை இயேசு முன்வைக்கின்றார்:

அ. உணவை விட உயிர்
ஆ. உடையை விட உடல்

உயிரும், உடலும் இறைவனின் கொடைகள். உணவும், உடையும் மனிதரின் கண்டுபிடிப்புக்கள். மனுக்குலம் முழுவதற்கும் உயிரும், உடலும் ஒன்றுதான். இந்தியாவில் இருக்கும் இந்து ஒருவருக்கும், இத்தாலியில் இருக்கும் கிறித்தவர் ஒருவருக்கும், ஈராக்கின் இஸ்லாமியர் ஒருவருக்கும் உயிர் ஒன்றுதான், உடல் ஒன்றுதான். தட்பவெட்ப நிலை காரணமாக உடலின் தோலின் நிறம் வேண்டுமானால் மாறுபடுமே தவிர உடல் அமைப்பு மாறுவதில்லை. இந்தியருக்கு வாய் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் இத்தாலியருக்கும் வாய் இருக்கிறது. உறுப்புகளின் எண்ணிக்கையும் ஒரே போலத்தான் இருக்கின்றது. இத்தாலியர்கள் அதிகம் பேசுவார்கள் என்பதற்காக அவர்களுக்கு இரண்டு நாக்குகள் எல்லாம் கிடையாது.

ஆனால் உணவிலும், உடையிலும் எத்தனை மாற்றங்கள். நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம். இனத்திற்கு இனம் உணவுப் பழக்கவழக்கமும், உடைப் பழக்கவழக்கமும் மாறுகிறது. நம் ஒரே இந்தியாவில் வடக்கேயும், தெற்கேயும் உணவுப்பழக்கவழக்கங்கள் வேறுபடுகின்றன. நம் தமிழகத்திலேயே மதுரையின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், நாகர்கோவிலின் உணவுப்பழக்கத்திற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன?

உயிரும், உடலும் எசன்ஷியல்ஸ் (essentials). உணவும், உடையும் ஆக்ஸிடன்டல்ஸ் (accidentals).

சின்ன உதாரணம், ரப்பர் பந்து ஒன்று இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இதில் ரப்பர் என்ற மெட்டீரியலும், உருண்டை என்ற வடிவமும் அதன் எசன்ஸியல்ஸ். எசென்ஸியல்ஸ் மாறினால் அதன் முழுக்குணமும் மாறிவிடும். ரப்பருக்கு பதில் இரும்பு இருந்தால் அதை நாம் ரப்பர் பந்து என்று அழைப்பதில்லை. உருண்டையாக இருப்பதற்குப் பதில் கனசதுரமாக இருந்தாலும் நாம் ரப்பர் பந்து என்று அழைப்பதில்லை. ரப்பர் பந்தின் நிறம் என்பது ஆக்ஸிடன்டல். ஆக்ஸிடன்டல்ஸ் பந்தின் குணத்தை மாற்றுவதில்லை. பச்சையாக இருந்தாலும் அது ரப்பர் பந்துதான். மஞ்சளாக இருந்தாலும் அது ரப்பர் பந்துதான்.

இன்று இயேசுவின் குட்டிப் பாடம் இதுதான்:

ஆக்ஸிடன்டல்ஸின் மேல் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக எசன்ஸியல்ஸின் மேல் கவனம் செலுத்துங்கள்.

ஆக்ஸிடன்டல்ஸ்தான் நம்மை ஒப்பீட்டுக்கும், வேறுபாட்டிற்கும் தூண்டுகின்றன.

ஊதாவை விட பச்சை நன்றாக இருக்கிறது என்று ஒப்பீடு செய்யவும், என்னிடம் மஞ்சள் இருக்கிறது, உன்னிடம் வெள்ளை இருக்கிறது என்று வேறுபடுத்திப் பார்க்கவும் நம்மைத் தூண்டுபவை அவைதாம். இந்த ஒப்பீடுகளால் தேவையற்ற மனக்குழப்பமும், நேரவிரக்தியும், மனத்துயரமும் தான் வருகின்றது.

நாம் துணியெடுக்க ஜவுளி கடைக்குப் போய் துணியும் எடுத்து வந்து விட்டு, வீட்டுக்கு வந்து அவற்றை விரித்துப் பார்த்து, 'சே! அந்தக் கலர் வாங்கியிருக்கலாமே!' என்று எத்துனை முறை புலம்பியிருப்போம். ஓட்டலில் ஒரு உணவை ஆர்டர் செய்து விட்டு, அது நம்மிடம் கொண்டுவரப்பட்டு நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பக்கத்து மேசையில் ஒருவர் சாப்பிடும் குழிப்பணியாரம், 'சே! நாம் பணியாரம் ஆர்டர் பண்ணியிருக்கலாமே!' என்று நினைக்கத் தூண்டுகிறதே. நாம் பயன்படுத்தும் செல்ஃபோன், செருப்பு, பைக், கார் என எல்லாவற்றிலும் ஆக்ஸிடன்டல்ஸ்தான் நம் மகிழ்ச்சியைக் குலைக்கின்றன.

மகிழ்ச்சிக்கு இயேசு வைக்கும் ஒரு வழி: treat essentials as essentials and accidentals as accidentals.

Thursday, August 14, 2014

யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். (மத்தேயு 2:1-2)

யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?

இந்தக் கேள்வியை கீழ்த்திசை ஞானியர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை ஏரோதைப் பார்த்து அவர்கள் கேட்பதாக விவிலியத்தில் இல்லை. இவ்வளவு நாள் இதை ஏரோதைப் பார்த்து அவர்கள் கேட்டார்கள் என எண்ணிக் கொண்டிருந்தேன். நெருக்கமாக வாசித்தால் இந்தக் கேள்வியை அவர்கள் எல்லாரையும் பார்த்துக் கேட்பதாக நற்செய்தியாளர் எழுதுகிறார். இந்தக் கேள்வி ஏரோது அரசனோடு முடிவடையக் கூடியது அல்ல. ஒவ்வொருவரும் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே நற்செய்தியாளரின் எழுத்து நுட்பம் நமக்குக் காட்டுகிறது.

முதன் முதலாக இயேசுவை அரசராக்கியவர்கள் இவர்கள் தாம். யூதர்களின் அரசன் ஏரோது இருக்கும் இடத்திற்கே போய் 'யூதர்களின் அரசன் எங்கே?' என்று கேட்டால் அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல். இதில் ஒரு 'ஐரனி' இருப்பதை நாம் பார்க்கின்றோம். ஏற்கனவே அரசாண்டு கொண்டிருக்கும் ஏரோதுவையும் அவனது ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளாத துணிவையும் இது காட்டுகிறது. நம்ம திருவாளர் மோடிகிட்டேயே போய், அல்லது நம்ம செல்வி லேடி கிட்டேயே போய், 'இந்தியாவின் பிரதமர் எங்கே?' என்றோ, 'தமிழகத்தின் முதல்வர் எங்கே?' என்று சொன்னால் எப்படி இருக்கும்?

இயேசுவின் பிறப்பு அன்னை மரியாளுக்கும், வளனாருக்குமன்றி, இடையர்களுக்கும், ஞானியர்களுக்கும் முன்னறிவிக்கப்படுகிறது.

நம்ம சொந்தக்காரங்களுக்கும் குழந்தை பிறந்திருக்கும் போது, அந்தக் குழந்தையைப் பார்க்க வருபவர்கள் அந்தக் குழந்தையைப் பற்றி ஆருடம் கணிப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சில குழந்தைகள் பிறப்பதற்கு முன்னதாகவே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரு சிலர் கணித்தும் சொல்வார்கள்.

எங்க அம்மா என் தங்கையைக் கருத்தாங்கியிருந்த போது ஒரு மதிய வேளை நான் தொட்டிலில் படுத்திருந்தேனாம். திடீர்னு, 'நமக்கு பாப்பா தான் பிறக்கும்! அதுக்கு அனுஞ்சகாயமேரி (அருள் சகாய மேரி)னு பேரு வைக்கணும்!' அப்படின்னா நான் புலம்பினதாகவும், அதன்படியே தங்கை பிறந்ததாகவும் எங்க அம்மா சொல்வாங்க. நான் சொன்னதா எனக்கு ஞாபகமில்லை!

ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் சப்கான்சியஸ் மைன்ட் எப்படியோ நம்மிடம் நம் அன்பிற்குரியவர்கள் குறித்துச் சொல்லிவிடுகிறது. இதை டெலிபதி, இஎஸ்பி என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஞானிகள் இயேசு பிறந்தவுடன் அவரைக் குறித்து தெரிந்து கொள்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த யுனிவர்சல் சப்கான்சியஸ் மைன்ட் தான். இதனுடன் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் முன்னாலே அறிந்து கொள்வார்கள்.

இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் நம்மோடு ஒரு தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது தான். இதையே நம்ம சத்குரு 'இன்னர் என்ஜினியரிங்' என அழைக்கிறார். அதாவது, இப்ப நம்ம உட்கார்ந்திருக்கிற ரூமில் எவ்வளவு டிகிரி குளிரோ, வெப்பமோ இருக்க வேண்டும் என நாம் அவுட்டர் என்ஜினியரிங் செய்து ஏசியாகப் பொருத்தியுள்ளோம். இந்த ஏசி நம்ம ரூமின் தட்பவெட்ப நிலையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. நம்ம மூளை என்னும் ரூமின் இயக்கமும் நம் கட்டுக்குள் இருந்தால்  நாம் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ள முடியும். நாம் ஒரு வாழ்க்கைத் துண்டு. எல்லாமே நம்ம மைன்ட்ல தான் இருக்கு.

உதாரணத்திற்கு, காலையில நம்ம கேட்டைத் திறந்து வெளியே வருகிறோம் என வைத்துக் கொள்வோம். தெருவில் நமக்கு பிடிக்காத ஒருவர் சைக்கிளில் போகிறார். போகும் போது அவர் சைக்கிள் பெல் அடித்ததை நாம் கேட்டுவிட்டோம். அல்லது பார்த்துவிட்டோம். உடனடியாக நம் மூளை என்ன சொல்லும்: 'அவனுக்கு எவ்வளவு திமிரு பார்த்தியா? யாரும் இல்லாத ரோட்டுல நம்மள பார்த்தவுடனே பெல் அடிக்கிறான்!' இந்த சிந்தனை அப்படியே நம் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இந்த செயல்பாட்டிற்கு அந்த நபரோ, சைக்கிள் பெல்லோ காரணமல்ல. நம் மூளை நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அது தன்பாட்டுக்குச் சிந்திக்கிறது. கான்சியஸாக இருப்பவர்கள் மட்டும் தான் சப்கான்சியஸோடு தொடர்பு கொள்ள முடியும். அன்கான்சியஸாக மூளை செல்லும் பாதையில் எல்லாம் சென்றால் நமக்குத் துன்பமே மிஞ்சும்.

இன்னைக்கு ஒவ்வொரு பொழுதும் நம் மூளையின் இயக்கத்தை என்ஜினியரிங் செய்து பார்க்கலாமே.

சத்குருவின் இன்னர் என்ஜினியரிங் பற்றிய காணொளிக்கு இங்கே சொடுக்கவும்:

What is Inner Engineering?


Tuesday, August 12, 2014

எனக்கு என்ன தருவீர்கள்?

பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 'இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். (மத்தேயு 26:14-15)

நேற்றைய பேதுருவின் கேள்வியைத் தொடர்ந்து இன்று யூதாசின் கேள்வியைப் பார்ப்போம்: 'எனக்கு என்ன தருவீர்கள்?' பேதுருவின் கேள்வியில் ஒரு பன்மை ஒளிந்திருந்தாலும், யூதாசின் கேள்வியில் 'நான், எனக்கு, எனது!' என்னும் தனிப்பட்ட சுதந்திரமும், பொறுப்புணர்வும் இருக்கிறது. யாரையும் கூட்டுச் சேர்க்கவில்லை.

'எனக்கு என்ன தருவீர்கள்?' - இங்கே யூதாசுக்கும் தலைமைக் குருவுக்கும் இடையே வணிகப் பரிமாற்றம் நடக்கின்றது. தன்னிடமுள்ள ஒன்றை விற்கத் துணிகின்றார் யூதாசு. செக்கரியா இறைவாக்கினர் தான் செய்த இறைவாக்குப் பணிக்காக 30 வெள்ளிக் காசுகள் கூலி பெறுகிறார். அதை அவரே குயவனின் நிலத்தில் தூக்கி எறிகின்றார் (11:12-13:30). விடுதலைப்பயணம் 21:32ன் படி 30 வெள்ளிக்காசுகள் என்பது ஒரு அடிமையின் விலை. தன் தலைவரை ஒரு அடிமையின் விலைக்கு விற்கத் துணிகின்றார் யூதாசு.

இயேசு என்ற கதையும், கலாச்சாரமும் யூதாசுக்கும், தலைமைக்குருவுக்கும் பிடிக்கவில்லை. தலைமைக் குருவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் இருக்கின்றது. ஆனால், பாவம்! யூதாசுக்கு ஏன் பிடிக்கவில்லை?

நாம் எல்லோருமே ஏதோ ஒரு கதையைத் தான் வாழ்கின்றோம். ஒரு கதையைக் கேட்கிறோம். அதையே நாம் வாழ்வாக்கத் துணிகிறோம். கதையென்றால் கட்டுக்கதை என்று நினைக்க வேண்டாம். ஒரு கதையாடல் என வைத்துக்கொள்வோம்.

ஒன்றை ஆக்கவோ, அழிக்கவோ வேண்டுமெனில் ஒரு கதையாடலை உருவாக்கினால் போதும். முடிவு தானாகவே வந்துவிடும். யூதர்களை அழிக்க நினைத்த ஹிட்லர் பயன்படுத்தியது ஒரு கதை. அதாவது, தன் ஆரிய இனம் தான் தூய இனம் என்றும், விவிலியத்தில் தன்னையே தூய இனமாகக் கருதும் யூத இனம் தூய்மையற்றது என்றும், அது இருக்கவே தகுதி அற்றது என்றும் ஒரு கதையை உருவாக்குகின்றார். விளைவு யூத இனம் அழிக்கப்படுகின்றது. இந்த யூதர்கள் 'இஸ்ரேல்' என்று நாடு தங்களுக்குக் கடவுள் வழங்கியது எனவும், தங்கள் மாபெரும் அரசன் தாவீது வாழ்ந்த பாலஸ்தீனமும், எருசலேமும் தங்களுக்கு உரியது என்றும் ஒரு கதையை வைத்துக்கொண்டு பாலஸ்தீனத்தில் குடியிருக்கும் இஸ்லாமியர்களை அழிக்கின்றனர். இந்த இஸ்லாமியர்கள் ஜிகாத் என்ற கொள்கையை கதையாக வைத்துக்கொண்டு ஈராக்கில் கிறித்தவர்களை அழிக்கின்றனர். இந்த கிறித்தவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் கிறித்தவம் என்ற கதையை வைத்துக்கொண்டு எல்லா நாடுகளிலும் காலனி ஆதிக்கம் செய்தனர். அடிமை வணிகம் செய்தனர்.

எல்லாமே கதைதான். ஒரு கதை நம் சிந்தனையையே முடமாக்கிவிடலாம்.

நேற்று ஒரு அருட்பணியாளர் ஒரு கதையை எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். ஏற்கனவே படித்ததுதான். நீங்களும் படித்திருப்பீர்கள். இமெயில், ஃபேஸ்புக், பிளாக் என வலம்வரும் கதை.

சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் தன் மகன் ஜேக்கை விளையாட விட்டு பார்த்துக்கொண்டிருப்பார் அவனது தந்தை. மாலை மங்கும் வேளையில், 'ஜேக் வா! நேரமாயிடுச்சு போகலாம்!' ஆனால் சிறுவனோ, 'அப்பா! அஞ்சு நிமிஷம்!' என்று விளையாடிக் கொண்டே இருப்பான். மறுபடியும் தந்தை அழைக்க மறுபடியும் 'அஞ்சு நிமிஷம்' என்பான். தந்தையும் அமைதியாக அமர்ந்திருப்பார். இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்து பெஞ்சு பெண்மணி, 'நீங்க ஒரு பொறுமைசாலி அப்பா!' என்பார். அந்த நேரம் அப்பா ஒரு பிளாஷ்பேக் சொல்வார். தனக்கு மற்றொரு மகன் இருந்ததாகவும், அவன் பெயர் ஜான் என்றும், அவன் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டான் எனவும், அவனோடு தான் அதிக நேரம் செலவிடவில்லை எனவும், கேக்கோடு நேரம் செலவிடுவதே  தன் இலக்கு என நிர்ணயித்துக் கொண்டதாகவும், இப்போது கூட ஜேக்கை மேலும் 5 நிமிடங்கள் விளையாட அனுமதிப்பதால் தனக்குத்தான் ஜேக்குடன் இருக்கும் சந்தோஷம் கிடைப்பதாகவும் சொல்வார்.

தெ மாரல் ஆஃப் தெ ஸ்டோரி என இரண்டு வரிகள்:

Life is not a race. Life is all about making Priorities. What are your priorities? Give someone you love, 5 more minutes of your time no matter how busy and you will have no regret forever.

Once you have lost it, shall be lost Forever.... Life can only be understood backwards; But it must be Lived forwards. LIVE LIFE BEFORE YOU LEAVE LIFE...!

இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு முதலில் சரி நானும் என் அன்பிற்குரியவர்களோடு நேரம் செலவழிப்பேன் என்று சொல்லி ஃபோனை எடுத்து எண்களை சுழற்றினேன். முதல் அன்பிற்குரியவர் ஃபோனை எடுக்கவில்லை. பின் சொன்னார் கோவிலுக்குப் போயிருந்தாராம். இரண்டாம் அன்பிற்குரியவர் ஃபோனை எடுத்தார். ஆனால் 'அப்பா வருகிறார்!' என்று பாதியிலேயே வைத்து விட்டார். மூன்றாம் அன்பிற்குரியவர் ஃபோனை எடுத்தவுடன், 'ஏன்டா! இவ்ளோ நாள் ஃபோன் பண்ணல என கோபித்துக்கொண்டார்'. நான்காம் அன்பிற்குரியவர் ரொம்ப நேரம் பேசினார். ஆனால் பேச்சின் நிறைவு சண்டையாக முடிந்தது.

ஒரு கதையில் வரும் ஒரு சின்ன வரியை நடைமுறைப்படுத்தினாலே இவ்வளவு சிக்கல் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம்:

'பிரிண்ட் செய்யப்பட்ட எல்லாத்தையுமே நம்பக் கூடாது!'

ஒரு அமெரிக்கக் கதை தமிழன் ஒருவனுக்கு அப்ளிகேஷன் செய்து பார்க்க வேண்டும் என்று மனதைத் தூண்டுகிறது என்றால் அதுதான் மிகப்பெரிய கலாச்சார சீரழிவு. கோக், பெப்சி, பர்கர், பீட்சா, ஃபேஸ்புக் என அமெரிக்காவின் குப்பையை நம் முதல் உணவாக எடுத்துக்கொண்ட நாம் இன்று நம்மையறியாமலேயே அவர்கள் சொல்லும் கதையையும் வாழ்வாக்கப் பார்க்கிறோம். சாப்பாடு செரித்துவிடும்! கதை செரிக்குமா?

ஜேக் கதையை வாசித்தவுடன் 'இப்படி இருக்க வேண்டும்' என்று முதலில் தோன்றினாலும், உடனடியாக 'ஐயோ! என் அப்பா அம்மா இப்படி இல்லையே!' என்று அவர்களை குற்றத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையும் வருகிறது. என் அப்பா, அம்மாவும், உங்கள் அப்பா, அம்மாவும் மேனேஜ்மென்ட் புக்குகள் படித்தும், குழந்தைவ வளர்ப்பு செமினார் போயும் நம்மை வளர்க்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் விடிந்தால் வேலை, அடைந்தால் வீடு. சனி, ஞாயிறு விடுமுறை என்ற வசதி வாய்ப்புக்களை அறியாதவர்கள். தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல், எஸ்எம்எஸ், கேபிள் டிவி என எதன் வழியாகவும் தங்களை உலகத்தோடு இணைத்துக் கொள்ளாதவர்கள். ஜேக் அப்பா மாதிரி நம்மைப் பார்க்கிற்குக் கூட்டிட்டுப் போய் 'இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்!' நம்மை விளையாடவிட்டுப் பார்க்காமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் வாரம் முழுவதும் நம்மோடுதானே இருந்தார்கள். 7 நாட்கள் 24 மணி நேரங்கள் என நம் மரபில் நம் குழந்தைகளோடு பெற்றோர்கள் இணைந்திருக்கவே செய்கிறார்கள்.

இப்படி ஏதாவது கதையை வாசித்து இந்தக் கதை நமக்கு ஏதோ சொல்ல வருகிறது என்று நாம் நினைத்தால், ஒரு நிமிஷம் யோசிக்கணும்!

ஒவ்வொரு கதையும் ஒரு யூதாசு. நம்முன் நின்று 'எனக்கு என்ன தருவீர்கள்?' என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறது. கதவைத் திற! காற்று வரட்டும்தான்! ஆனால் இங்கு குப்பைகள் வருகிறதே?


எங்களுக்கு என்ன கிடைக்கும்?

சங்க இலக்கியத் தமிழையும், விவிலிய எபிரேயத்தையும் ஒப்பீடு செய்து எழுதும் முயற்சி இரண்டாம் நாளே பெரிய சவாலாகத் தெரிகிறது. 'ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்!' என உள்மனம் எச்சரிக்கிறது. இன்னும் கரையில் நின்று கடலைச் சரியாகப் பார்க்கும் பக்குவமே இல்லாமல் கடலுக்குள் இறங்கி முத்துக்குளிப்பது மலைப்பாகத் தெரிகிறது.

ஆகையால், பழைய ஏற்பாட்டில் நாம் சில மாதங்களுக்கு முன் பார்த்த சில கேள்விகளைப் போல புதிய ஏற்பாட்டிலும் கேள்விகள் இருக்கின்றன. அவைகளைக் கொஞ்சம் கேள்விக்குறிகளாவும், ஆச்சர்யக்குறிகளாகவும் பார்ப்போம். மன்னித்தருள்க!

அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, 'நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே. எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டார். (மத்தேயு 19:27)

எங்களுக்கு என்ன கிடைக்கும்? இன்னும் சுருக்கினால் 'என்ன கிடைக்கும்?' இதே கேள்வியை தலைமைக்குருவிடம் சென்று யூதாசும், 'இயேசுவைக் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்கின்றார். இந்த இரண்டு கேள்விகளையும் அருகருகில் வைத்து கொஞ்சம் 'ஃபார்மல் லாஜிக்' (formal logic) வைத்து சிந்தித்தால் அர்த்தம் மிகவும் சவாலாக மாறுகிறது:

"உங்களைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும்?"
"காட்டிக் கொடுத்தால் என்ன கிடைக்கும்?"

இந்த இரண்டு கேள்விகளிலும் 'என்ன கிடைக்கும்' என்பதை நீக்கிவிட்டால், 'இயேசுவைப் பின்பற்றுவதும்,' 'அவரைக் காட்டிக் கொடுப்பதும்' ஒன்று என ஆகிவிடுகிறது. இயேசுவைப் பின்பற்றுவது எதற்காக என்று என்னையே சுயஆய்வு செய்து பார்க்கவும் தூண்டுகிறது.

பேதுருவின் கேள்வியை மட்டும் எடுத்துக்கொள்வோம். 'உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்று இறந்தகாலத்தில் பேசுகின்றார் பேதுரு. இந்த இடத்தில் தான் நமக்கு டவுட்டு வருகிறது. இயேசுவின் பதில் அந்த டவுட்டை இன்னும் ஆழமாக்குகிறது: 'புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள்...என் பெயரின் பொருட்டு வீட்டையோ...நூறு மடங்காகப் பெறுவர்'.

இயேசுவின் பதிலில் சீடர்கள் அரசர்களாக இருப்பர் எனவும், அவர்கள் நூறு மடங்கு நிலபுலன்கள் பெற்றிருப்பர் எனவும் சொல்லப்படுகிறது.

இப்போது என் கேள்வி இதுதான்: 'மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை' என்றும் 'என் வலப்புறமோ, இடப்புறமோ அமர்வது நான் முடிவு செய்வதல்ல' என்று சொல்கிற இயேசு எப்படி தன் சீடர்கள் நூறு மடங்கு பெற்றிருக்கவும், தன்னோடு ஆட்சி செய்யவும் விரும்புவார். இதன் கிரேக்கப் பாடத்தைப் பார்த்தால் அந்தியோக்கு நகரம் சார்ந்த படிவங்களில் மட்டுமே இந்தப் பகுதி உள்ளது. அந்தியோக்குப் பகுதியில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயர்களும், குருக்களும் நிலபுலன்கள் பெற்று அரசர்கள்போல இருந்தனர். இதை நியாயப்படுத்துவதற்காக இயேசுவே சொல்லியிருப்பதாக அவர்கள் தங்கள் விவிலியத்தில் திணித்திருக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தப்பகுதி இந்த நற்செய்தியில் மட்டுமே பேதுரு கேட்பதாகவும், இயேசு பதில் சொல்வதாகவும் உள்ளது. அனைத்து ஆயர்கள், குருக்களின் பதிலாளியாக பேதுரு கேட்பதாகவே இது இருக்கின்றது.

சீடத்துவம் என்பதை தன் பற்றுக்களை விடுத்து இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொள்வது. அப்படியிருக்கு ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு சகோதரன், ஒரு சகோதரி என ஒன்றையே இழப்பது இயேசுவைப் பற்றிக்கொள்ளவா அல்லது நூறு தந்தை, தாய், சகோதரன், சகோதரியைப் பற்றிக்கொள்ளவா? மேலும் எல்லா உறவுகளையும் ஏன் 'பிள்ளை உறவையே' குறிப்பிடுகின்ற இந்தப் பகுதியில் 'மனைவி' பற்றி குறிப்பிடவில்லை. அதெப்படி பாஸ்? பிள்ளைகளை விட்டுவிட்டு பின்தொடர்வாராம்! ஆனால் மனைவியை விட மாட்டாராம்! மூன்றாம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆயர்களும், குருக்களும் திருமணம் முடித்தவர்கள் என்பது நினைவுகூறப்பட வேண்டியது. மணத்துறவு என்பது 15ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்தது. மூன்றாம் நூற்றாண்டிலும் மணத்துறவு கொண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் மனநலம் சரியில்லாதவர்களாக இருந்தார்கள் என்பதும் வரலாற்றின் எச்சம்.

இன்று இயேசு தரும் 'நூறு பெறுவீர்கள்!' என்ற வார்த்தைகளை வாசிக்கும் போது நான் துறக்காமல் வைத்துக்கொண்டிருக்கும் அனைத்தையும் நியாயப்படுத்திக்கொள்ள எனக்கு வசதியாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு குடும்பத்தை விடுத்ததால் இன்று நூறு குடும்பங்களோடு உறவு கொள்ள முடியும். ஒரு ஊரை விடுத்ததால் நூறு ஊருக்குப் பயணம் செய்ய முடியும். ஆனால் இந்த உறவுகள், ஊர்கள் அனைத்தையும் பற்றிக்கொள்ளத் துணியும் நான் பல நேரங்களில் பேதுருவின் கேள்வியின் முதல் பகுதியை மறந்து விடுகிறேன்: 'நாங்கள் உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!'

'துறவைத் துறந்த துறவு' என்பார் வைரமுத்து. நம் இந்திய மரபின் படி 'சந்நியாசம்' என்பது மனித வாழ்வின் நான்காம், அதாவது, இறுதிநிலை. இந்த நிலையில்தான் எல்லாப் பற்றுக்களையும் விடுத்த ஒருவர் 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என இறைவனைப் பற்றிக் கொள்கின்றார். இறைவனைப் பற்றுவதும் ஒரு பற்றுதானே! என்றும் கேட்கத் தோன்றுகிறது.

கையை மூடிக்கொண்டே பிறக்கும் நாம் வாழ்வின் இறுதிவரை எதையாவது பற்றிக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. கையை முதன் முதலாக விரிக்கும் போது வருகின்ற பாதுகாப்பின்மையில் நாம் நம் உறவு, மண், மனைவி, பிள்ளை, வேலை, பதவி, பெயர், பொருள், ஃபோன் என பற்றிக்கொண்டே இருக்கின்றோம். பற்றிக்கொண்டிருத்தல் தவறல்ல. பற்றுக்களை விடும்போது வரும் வெற்றிடத்தை நிரப்ப இறைவன் வருதல் நலம்!


Monday, August 11, 2014

மொழி என்றால்...!

அ. மொழி என்றால் உதவி:

உதவி கேட்பது இரண்டு வகை: சிறிய உதவி, பெரிய உதவி. உதவி சிறியதா அல்லது பெரியதா என்பதை ஒருவர் அதைக் கேட்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனத்தை வைத்து அளந்து விடலாம். சிறிய உதவி என்றால் சிறிய மௌனம். 'எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? அந்தப் பென்சிலைக் கொடுங்களேன்!' இதில் மௌனமே இல்லை.

பெரிய உதவி என்றால், 'எனக்கு ஒரு உதவி செய்யணும்!....எட்டு நொடிகள் கடந்து விட்டன... 'என்ன? என்ன உதவி?' '...அது வந்து...' மௌனமும், வார்த்தை இடைவெளியும் அதிகமாக, அதிகமாக உதவியின் கனமும், அது தரும் வலியும் அதிகமாகிறது.

உயிரினங்களிலேயே மனித இனம் ஒன்றுதான் உதவி கேட்கக் கூடியது. விலங்குகள் உதவி கேட்பதும் இல்லை. உதவி செய்வதும் இல்லை. சுவரில் இருக்கும் பல்லி அது குறி வைக்கும் கரப்பான் பூச்சியிடம் போய், 'எனக்கு ஒரு உதவி செய்வியா? அசையாமல் நிற்கிறியா, நான் உன்னைச் சாப்பிடப்போகிறேன்!' என்று கேட்பதில்லை. உண்மையில் இதுதான் பெரிய உதவி...எந்தவொரு மௌனமும் இல்லாமல்!

வெறும் வார்த்தைகள் மட்டும் மொழியை அலங்கரிப்பதில்லை. வார்த்தைகளுக்கு இடையே உள்ள மௌனமும் மொழியின் அலங்காரமே!

ஆ. மொழி என்றால் மரியாதை:

'அந்த பேப்பரைக் கொடு!'
'அந்த பேப்பரைக் கொடுங்கள்!'
'தயுவு செய்து அந்த பேப்பரைக் கொடுங்கள்!'

- இந்த மூன்று வாக்கியங்களையும் நாம் ஒரே நபரை நோக்கிப் பயன்படுத்துவதில்லை. மரியாதை என்பது முகம் சார்ந்தது. ஒருவரின் முகத்தைப் பொறுத்தே நாம் அவரை அழைக்கும் விதமும், அணுகும் விதமும் அமைகிறது.

இ. மொழி என்றால் 'கொஞ்சம்! கொஞ்சம்!'

கணவன்: ஃபோன் அடிக்குது.
மனைவி: நான் குளிச்சுட்டு இருக்கேன்.
கணவன்: ஓ.கே.

இந்த உரையாடலில் அர்த்தம் முழுமை பெறுகிறதா? இந்த உரையாடலில்

கணவன் ஃபோன் எடுக்கச் சொல்லி தன் மனைவியிடம் உதவி கேட்கிறான்.
மனைவி தன் இயலாமையைச் சொல்கிறாள்.
கணவனே அந்த வேலையைச் செய்கிறான்.

மொழியில் பாதிப் பாதி சொற்கள் இருந்தாலே நம்மால் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். நம் உரையாடலின் அர்த்தம் நாம் பரிமாறும் வார்த்தைகள் மட்டும் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. உரையாடுபவர்களைப் பொறுத்தும் அர்த்தம் அமைகின்றது.


Sunday, August 10, 2014

என்னை வெறுக்கத்தான் செய்கிறீர்!

தமிழ் மொழியின் சங்க இலக்கியங்களையும், எபிரேய விவிலியத்தையும் சொல், எழுத்து, பொருள் என்னும் மூன்று நிலைகளில் ஒப்புமை செய்து பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. அந்தக் கனவு கொஞ்சமாவது நனவாக வேண்டும் என்று இன்று முதல் அந்த முன்னெடுப்பைத் தொடங்குகிறேன்.

மொழி ஒரு ஊடகம். மொழி உருவான வரலாறு மிகவும் சுவராஸ்யமானது. முதலில் வெறும் ஓசைகளை மட்டும் எழுப்பி ஒருவர் மற்றவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட குகை மனிதர்கள், அடுத்த நிலையாக சைகைகளும், சமிக்ஞைகளும் காட்டத் தொடங்கினர். பின் தாங்கள் கையால் காட்டியதை வரைந்து காட்டத் தொடங்கினர். 'மரத்தில் ஏறு!' என்று சொல்வதற்கு, மரத்தையும், மரத்தில் மேல் ஒருவர் அமர்ந்திருப்பதையும் கோட்டு ஓவியங்களாக வரைந்தனர். கோட்டு ஓவியங்கள் வெளிப்புற உலகைத்தான் அடையாளப்படுத்தியனவே தவிர அவைகளால் மனிதரின் உள்ளத்து உணர்வுகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தத் தவிப்பில் உருவானதே மொழி. மொழி உருவாகப் பலர் பல காரணங்கள் சொல்கின்றனர்.

மொழி கடவுளின் கொடை என்று சிலரும், சமூகத்தின் வளர்ச்சி என்று சிலரும், உடலியில் கூறு என்று சிலரும் சொல்கின்றனர். இப்படி மனுக்குலம் பேசத் தொடங்கிய மொழிக்கு காலப்போக்கில் இலக்கணம் உருவானது. இலக்கணம் உருவாக்கப்பட்டு பேசப்படும் மொழிகள் மிகவும் சொற்பம். பிந்தைய காலங்களில் வந்த மொழிகளே அப்படி உருவாகின்றன. மிகவும் தொன்மையான மொழிகள் முதலில் பேசப்பட்டு, பயன்பாட்டில் இருந்து, பின்பு இலக்கணங்களால் நெறிப்படுத்தப்பட்டன.

எபிரேயத்தையும், விவிலியத்தையும் ஒப்பீடு செய்ய முடியுமா? எபிரேயமும், விவிலியமும் மிகத் தொன்மையான மொழிகள் தாம். ஆனால் அவைகள் இரண்டும் வௌ;வேறு எழுத்துருக்களை கொண்டவை. முக்கியமான வேறுபாடு தமிழை நாம் இடப்புறமிருந்து வலப்புறம் எழுதுகிறோம். ஆனால் எபிரேயம் வலப்புறமிருந்து இடப்புறம் எழுதப்படுகிறது. பண்டைக்கால எபிரேயத்திற்கும், தற்கால எபிரேயத்திற்கும் உயிரெழுத்துக்கள் கிடையாது. இடைக்கால எபிரேயத்தில் மட்டுமே உயிரெழுத்துக்கள் உண்டு. ஆனால் தமிழில் உயிரெழுத்துக்களே மொழிக்கு உயிர் தருபவை. இப்படி அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும் மனித மனமும். சிந்தனையும் ஒன்றுதானே.

வேறு வேறு கண்டங்களில், வேறு வேறு காலங்களில் மக்கள் பேசியிருந்தாலும் அது இன்றும் நமக்குப் புரிகிறது என்றால் மொழி, இனம், காலம், இடம் அனைத்தையும் கடந்து ஏதோ ஒன்று நம்மை இணைக்கிறது என்றுதானே அர்த்தம்.

சின்ன உதாரணம். கொஞ்சம் நக்கலான உதாரணம்தான். நீதித்தலைவர்கள் நூலில் வரும் சிம்சோனுக்கும், திம்னா நகரத்துப் பெண்ணுக்குமான உரையாடல். சிம்சோனின் புதிருக்குப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன செய்தும் தோல்விறும் அப்பெண் சிம்சோனைப் பார்த்துச் சொல்வார்: 'நீர் என்னை அன்பு செய்வதில்லை. என்னை வெறுக்கத்தான் செய்கிறீர். என் உறவினருக்கு நீர் சொன்ன புதிரின் விடையை மறைப்பது ஏன்?' இன்றைக்கும் நாம் அன்பு செய்யும் பொண்ணுகிட்ட ஏதாவது தெரிஞ்சோ, தெரியாமலோ சொல்ல மறந்து, அல்லது மறைத்து அதை அவர்கள் கேள்விப்பட்டால், அறிந்து கொண்டால் சொல்லும் வார்த்தைகளும் இதுதான்: 'நீ என்னை அன்பு செய்யவில்லை!' (மறைத்தல் என்பது ஒரு செயல் என எடுத்துக்கொள்ளாமல் அதை ஒரு மனிதரின் ஒட்டு மொத்த அடையாளமாக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்! இது சரியா! தவறா! எனத் தெரியவில்லை!) ஏறக்குறைய 3000 ஆண்டுகள் ஆனாலும் சிம்சோன் காலத்துப் பெண்களைப் போலவே நம் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் நமக்கு அர்த்தமுள்ளதாகிறது என்றால் அதற்குக் காரணமும் மனிதருக்குள் இருக்கும் தொடர்ச்சி தான்.

மற்றொரு உதாரணம், நீதித்தலைவர்கள் நூல் 19வது அதிகாரம் தான் மிகவம் சோகமான அதிகாரம். ஒரு மலைக்கிராமம். கணவனும், மனைவியும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஒருநாள் சின்ன வாக்குவாதம். மனைவி தன் தந்தைவீடு சென்று விடுகிறாள். அவளை அழைத்துச் செல்ல கணவன் செல்கிறான். விருந்து. ஒயின். உபசரிப்பு. மாலையாகிறது. இன்னொரு நாள் போகலாம், இன்னொரு நாள் போகலாம் என்று தள்ளிப் போய் கடைசியில் ஒரு நாள் மாலை தங்கள் ஊர் திரும்புகிறார்கள். இருட்டி விடுகிறது. வழியில் ஒரு ஊரில் தங்குகிறார்கள். யாரும் இடம் தராததால் மரத்தடியில் தங்குகிறார்கள். ஒரு முதியவர் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த ஊரின் ஆண்கள் இணைந்து அவரின் 'மனைவியை' அவமானப்படுத்துகிறார்கள் (அப்படித்தான் பைபிள் சொல்கிறது!). காலையில் எழுந்து பார்க்கிறான் கணவன். மனைவி இறந்து கிடக்கிறாள். கோபத்தில் தன் ஊர் திரும்பி அவளின் உடலை 12 பாகங்களாக அறுத்து 12 குலங்களுக்கும் அனுப்புகிறான். பென்யமீன் குலம் தீக்கிரையாகி அழிகிறது.

இதை வாசித்தவுடன் சிலப்பதிகாரம் நினைவிற்கு வருகிறதா? கண்ணகி - கோவலன். பெண் தன் தந்தைவிடு செல்வது போல கோவலன் மாதவி வீடு செல்கிறான். கணவனை மீட்டெடுத்த கண்ணகி அவனை மதுரைக்கு அழைத்துச் செல்கிறாள். சிலம்பு. இரவு. பொற்கொல்லன். கோவலன் கொல்லப்படுகிறான். கோபம் கொண்ட கண்ணகி தன் மார்பை அறுத்தெரிய மதுரை தீக்கிரையாகி அழிகிறது.

இரவின் கொடுமை - அவமானம் - ஏமாற்றுதல் - சூழ்ச்சி - பழிவாங்குதல்: இந்த ஐந்தும் தான் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இருக்கின்றன.

இவைகளில் ஏதேனும் ஒன்று நமது வாழ்க்கை இலக்கியத்திலும் இருக்கலாம் அல்லவா?

Saturday, August 9, 2014

Jesus on The Road Less Traveled

Recently I happened to read the famous book by Scott Peck, ‘The Road Less Traveled’. Many people have talked of it. I just wanted to read it myself. Today let me reflect on Jesus as the person who has traveled on the road less traveled. He never chose to take the trodden path. 

The first attitude of a person who travels on a road less traveled is ‘delaying the gratification’. To delay the gratification means to postpone the pleasure of life for something more valuable. To delay the gratification means to give priority to ‘what the heart sees’. What we see with the eyes, for example, money, job, education, car, jewels, property, etc., give us a gratification. A gratification that we feel we are greater than the other. But ‘what the heart sees’ is equal to all of humanity – birth, love, life, death, poverty, compassion, hunger, justice, cruelty. Jesus always saw with his heart. He understood, ‘there is more to seeing than what meets the eye’. When the people saw a widow in the temple, Jesus saw in her an attitude of generosity. When the people saw the twelve men as fishermen, tax collectors, good-for-nothing fellows, he saw them as men who are dynamic and will change the world with their courageous faith. When the people saw sickness, death, impurity as curses from God, Jesus saw them as the grounds for working wonders. He never gratified himself with immediate glory. When Satan offered on the mountain an easy of becoming a Messiah he delayed the gratification and embraced the cross. When the satisfied people wanted to make him a king he delayed the gratification until he accepted the thief at the side of the cross acknowledged, ‘when you come in glory remember me’. The heart of Jesus saw everything differently. It always delayed the gratification. The first lesson that the heart of Jesus teaches us is ‘to delay the gratification’.

The second attitude is to ‘be responsible’. The first sin of humanity was ‘to disown responsibility’. Adam blamed Eve. Eve blamed the serpent. The serpent blamed God. Nobody took responsibility in the beginning. Cain took no responsibility for his brother Abel. Joseph’s 11 brothers took no responsibility when they sold him in the hands of Ishmaelites traveling down to Egypt. The only sin of the Israel that the prophets condemned was that the people never were responsible. To be responsible means ‘to own one’s decisions, one’s words, one’s actions in relation to the other’. Jesus always felt himself responsible for the other. Theologically speaking his very incarnation-crucifixion-resurrection is that he felt responsible for the sins of the humanity. Each moment of his life we can see this virtue in Jesus. When the wine ran short in the wedding at Cana he felt responsible. When the people were hungry in the desert he felt responsible. When the widow’s only son was carried dead in the streets of Nain he felt responsible. To be responsible is to do the necessary and required action. Many relationships fail. Many commitments break. Many withdraw. Because they have no courage to say ‘I did it’. This attitude makes us ‘respond’. We are called today to be responsible.

Thirdly, the commitment to truth. It is this commitment that boosts our responsibility. At all costs remain committed to the truth. In the movie Passion of the Christ, Pilate asks his wife Claudia, ‘what is truth? Do you see it? Can you make me see it?’ Claudia responds, ‘if you do not see by yourself nobody could show it to you’. Truth is what we are. That is why the Indian philosophical systems rightly correlate Sat-Cit-Ananda. Our being, our consciousness, our bliss all are united in truth. Jesus’ being, consciousness, bliss was always on truth. ‘I came to testify to the truth’, he firmly told it before Pilate who asked the million-dollar question, ‘Quid est veritas?’ ‘What is truth?’. ‘Be true to your own self. That must follow as the night follows the day. You will not be false to anyone’, says Shakespeare. 

The fourth quality of a person who walks in the road less traveled is ‘being balanced’. ‘Virtue stands in the middle,’ says Aristotle. The greatest fault of our generation is ‘we are never balanced’. Anything we do, we do extremely. When we love we love so much that we end hurting each other. When we talk, we talk so much that it loses all meaning. When we drink, we drink too much. When we eat, we eat too much till we get sick. We make one suffer at the cost of the other. The balanced people never sacrifice one at the cost of the other. Jesus was balanced. He knew the joy of a relationship of . He knew the pain of loneliness of a desert. He could strike the balance at all moments of his life. 

Jesus is the embodiment ‘traveling on the road less traveled’: ‘delaying the gratification, taking responsibility, being committed to truth and being balanced’. We, who are close to his heart, shall give it a try. The road which everybody travels is easy but does not make us unique. Let us remember, ‘the winner stands alone’.

Two roads diverged in a wood,
And I, I took the one less traveled by,
And that has made all the difference.
(Robert Frost)