'இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார்.' (யோவான் 13:23)
'ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும், தண்ணீரும் வடிந்தன.' (யோவான் 20:34)
'பின்னர் இயேசு தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு.' என்றார்.' (யோவான் 20:27)
நாளை இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
மனித உருவில் இறங்கி வந்து கடவுளின் இதயத்தை நமக்குக் காட்டிய இயேசுவுக்கு நாம் எடுக்கும் விழா இது.
மூளைதான் மனித சிந்தனை, உணர்வு என அனைத்துக்கும் காரணம் என்று இன்று அறிவியல் சொன்னாலும், இதயம் என்பது வெறும் இரத்தத்தை சுத்திகரிக்கும் எந்திரம் என்று சொன்னாலும், இதயம் உணர்வுகளின் உறைவிடமாகவே கருதப்படுகிறது.
இதயம் அன்பிற்கு அடையாளமாகவும், அன்பில்லாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் அல்லது கடினமான இதயம் கொண்டவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
மேற்சொல்லப்பட்ட மூன்று இறைவார்த்தைப் பகுதிகளைக் கவனித்தீர்களா? மூன்றுமே யோவான் நற்செய்தியாளரால் எழுதப்பட்டவைதாம். மனிதர்கள் இயேசுவின் இதயத்தை நெருங்குவதை மூன்று படிகளாக இங்கே நாம் காணலாம். முதலில், இயேசுவின் நெஞ்சில் சாய்தல். இரண்டாவது, அவரின் இதயத்தை மற்றொரு பொருளால் (ஈட்டியால் தொடுதல்). மூன்றாவது, அவரின் இதயத்தை விரலால் தொடுதல். இந்த மூன்றுமே நாம் கடவுளை நெருங்கிச்சென்றுவிட்டோம் என்றே காட்டுகிறது.
ஆக, இயேசுவின் இதயத்தை நாம் கொண்டாடுகிறோம் என்றால் இந்த மூன்று படிகளில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று நம்மையே கேட்பது அவசியம்.
எபேசு நகரத்திருச்சபைக்கு பவுலடியார் மிக அழகாக வலியுறுத்துகின்றார்:
'... கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!' (எபேசியர் 3:18)
கண்டிப்பாக மற்ற உறுப்புகள் போலன்றி 'இதயம்' என்ற சொல்லே நமக்கு உணர்த்துவது 'அன்பு 'என்ற ஒன்றைத்தான்.அதிலும் மனிதப் பண்புள்ள அத்தனை பேருக்குமே இன்னும் இந்த சொல் உணர்த்துவது 'இயேசுவின் அன்பை'.தன்னையே இரத்தமாய்,சதையாய் தந்த இந்த அன்புக்கு நாம் காட்டும் பதிலன்பு எப்படி? நம் அறிவுக்கெட்டாத அவருடைய அன்பை அறிந்து,சுவைத்து அதைப் பிறருக்குக் கொடுப்பதுதான்.அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!!!
ReplyDelete