Thursday, March 31, 2022

குழப்பமும் தெளிவும்

நாளின் (1 ஏப்ரல் 2022) நற்சொல்

குழப்பமும் தெளிவும்

இயேசுவின் சோதனைகள் பற்றி நாம் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வாசிக்கின்றோம். பாலைநிலத்தில் இயேசுவுக்கு எதிர்கொண்ட மூன்று சோதனைகளை இந்நற்செய்தியாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். இயேசு தன் வாழ்நாள் முழுவதும் சோதனைகளை எதிர்கொண்டார். குறிப்பாக, அவரோடு உடனிருந்தவர்களே அவரை அதிகம் சோதித்தனர். அந்த வகையில், இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், 'நீர் இவ்விடத்தை (கலிலேயாவை) விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காண முடியும். ஏனெனில், பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!' என்கின்றனர் (காண். யோவா 7:3-4). 

'உம்மை வெளிப்படுத்தும். நாங்கள் நம்புகிறோம்' என்று அவர்கள் இயேசுவைச் சோதிக்கின்றனர். 'நான்தான் மெசியா' என்று இயேசு தன்னை வெளிப்படுத்தியிருந்தால் யாரும் அவரை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். கேலி பேசிவிட்டு நகர்ந்திருப்பார்கள். 

ஒரு பெரிய புதையலைத் தன்னோடு வைத்திருப்பவர் மற்றவர்களிடம், 'என்னிடம் புதையல் இருக்கிறது' என்று சொன்னால் யாரும் அவரை நம்ப மாட்டார்கள். இல்லையா?

இயேசு மறைவாக யூதேயாவுக்கு (எருசலேம்) வருவதையும் அவரை எதிர்கொள்கின்ற மக்கள் அடைகின்ற குழப்பத்தையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 7) வாசிக்கின்றோம். 

'இவரை மெசியா என தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ!' எனக் குழம்பி நிற்கும் மக்கள், இயேசு எங்கிருந்து வருகிறார் என்று தங்களுக்குத் தெரியுமே என்று சொல்லி அதைக் குறித்து இடறல்படுகின்றனர். 

நேர்மையாளரின் இருத்தல் பொல்லாருக்கு இடறலாக இருக்கிறது என்கிறார் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர் (2:1,12-22). 

இயேசுவை நான் ஏற்றுக்கொள்வதற்கு இடறலாக இருப்பது எது?

இயேசுவைப் பற்றிய என் குழப்பங்கள் என் தனிப்பட்ட அனுபவம் வழியாகவே தீரும் எனில், அவர் அனுபவம் பெற நான் செய்யும் முயற்சிகள் எவை?


Wednesday, March 30, 2022

மோசே உங்கள்மேல்

நாளின் (31 மார்ச் 2022) நற்சொல்

மோசே உங்கள்மேல்

இயேசுவின் சமகாலத்து யூதர்கள் தங்களுடைய பழைய காலத்து மேன்மையும் மேட்டிமையும் தங்களுக்கு விடுதலையையும் மீட்பையும் பெற்றுத்தரும் என்று நம்பினர். பழைய காலத்து மேன்மை ஒருபோதும் ஆட்டோமேடிக்காக விடுதலை பெற்றுத் தராது எனக் கற்றுத் தருகின்றார் இயேசு.

விடுதலைப் பயண நூலில் இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியை வழிபடும் நிகழ்வில், மோசே ஆண்டவராகிய கடவுளிடம் பரிந்து பேசி, மக்கள்மேல் அவர் கொண்டுவரவிருந்த ஆபத்திலிருந்து அவர்களை விடுவிக்கின்றார். இந்தவொரு பின்புலத்தில் தாங்கள் எந்த நிலையில் இருந்தாலும், தாங்கள் உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாக இல்லாமல் இருந்தாலும் தங்களுக்காகப் பரிந்துபேசுவதற்காக மோசே இருக்கிறார் என நம்பினர் யூதர்கள்.

இதே பின்புலத்தில்தான் இயேசுவை நம்புவதற்குக் கடின உள்ளம் கொண்டிருப்பதுடன், மறைநூல் இயேசுவுக்குச் சான்று பகர்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவருக்கு எதிராகவும் பேசுகின்றனர்.

நம் பழைய மேன்மையும் மேட்டிமையும் ஒருபோதும் நமக்கு விடுதலை பெற்றுத் தருவதில்லை. நான் தந்தை-மகன்-தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு பெற்றுவிட்டேன். அந்தத் திருமுழுக்கே எனக்குப் போதும் எனச் சொல்லும் போது நாம் பழையை மேன்மையையே பற்றிக்கொள்கின்றோம். ஆனால், இன்று, இப்போது இயேசுவுக்கு நான் என்ன பதிலிறுப்பு செய்கிறேன் என்பதில்தான் என் விடுதலை அடங்கியுள்ளது.

Tuesday, March 29, 2022

என் விருப்பத்தை நாடாமல்

நாளின் (30 மார்ச் 2022) நற்சொல்

என் விருப்பத்தை நாடாமல்

எருசலேமின் ஆட்டு வாயிலுக்கு அருகே இருந்த பெத்சதா குளக்கரையில் உடல்நலமற்ற ஒருவருக்கு நலம் தந்த இயேசுவின் செயல் ஓய்வுநாளில் நடந்ததால் யூதர்கள் அவருக்கு எதிராக எழுகிறார்கள். அவர்களை எதிர்கொள்கின்ற இயேசு, ஓய்வுநாளை மீறியதோடல்லாமல் கடவுளைத் தன் தந்தை என அழைத்து அவர்களுடைய எதிர்ப்பை வலுப்படுத்துகின்றார்.

முதல் வாசகத்தில் (எசா 49:8-15) ஆண்டவராகிய கடவுள் தன்னை விடுதலை தருகின்றவராக முன்வைக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் அடிமைத்தனத்தின்போது கடவுள் தங்களை மறந்துவிட்டதாக எண்ணினர். ஆனால், 'பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்' என்று அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகின்றார்.

'என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்' என்னும் இயேசுவின் சொற்களிலிருந்து அவருடைய உள்ளத்தின் உறுதியை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 

இன்று நாம் இறைவிருப்பத்தைத் தெளிந்து தெரிந்து அதன்படி நடக்கிறோமா?

இறைவிருப்பத்தின்படி நடக்கிறோம் என்றால் நாம் கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்கிறோமா?


Monday, March 28, 2022

எழுந்து செல்லும்

நாளின் (29 மார்ச் 2022) நற்சொல்

எழுந்து செல்லும்

பாலஸ்தீனம் ஒரு பாலைவனப் பகுதி. பாலைநிலத்தில் வாழ்வோருக்குத் தண்ணீர் முதன்மையான தேவை. தண்ணீர் அவர்களுக்கும் அவர்களுடைய நிலத்துக்கும் உயிரும் ஊக்கமும் தருகிறது. தண்ணீர் பெருகும் இடத்தில் வாழ்வு பெருகும் என்பது அவர்களுடைய வாழ்வியல் அனுபவம்.

இந்தப் பின்புலத்தில் நாம் இன்றைய முதல் வாசகத்தை (எசே 47:1-9,12) புரிந்துகொள்ள வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோது அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய கடவுளும் நகரை விட்டு வெளியேறுகின்றார். எருசலேம் ஆலயமும் தீக்கிரையாக்கப்படுகிறது. புதிய ஆலயத்தைக் காட்சியில் காண்கின்ற எசேக்கியேல், அந்தக் காட்சியில் ஆலயத்தின் மேன்மையையும், அதில் குடியிருக்கும் கடவுளின் மாட்சியையும் காண்கின்றார். எருசலேம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு வழிந்தோடும் தண்ணீர் தான் பாயும் இடத்தில் வாழ்வையும் உயிரையும் பரப்பி அனைவருக்கும் நலம் தருகிறது.

நற்செய்தி வாசகத்தில் (யோவா 5:1-3,5-16) தண்ணீரில் இறங்கி நலம் பெறுவதற்காகக் காத்திருந்த உடல்நலமற்ற ஒருவருக்கு நலம் தருகின்றார் இயேசு. இந்த நிகழ்வு 'ஆட்டு வாயில்' எனப்படும் வாயிலுக்கு அருகே நடக்கிறது. எருசலேமைச் சுற்றி 12 வாயில்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் ஆட்டு வாயில். இறங்கிச் செல்லக் காத்திருந்த நபரிடம், 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்!' என்று சொல்வதன் வழியாக தானே வாழ்வுதரும் தண்ணீர் என மறைமுகமாக முன்மொழிகிறார் இயேசு.

வாழ்வு தரும் தண்ணீராகிய இயேசுவை அனுபவித்துணர்ந்துள்ள நாம் நலமும் வளமும் கொண்டவர்களாக வாழ்கின்றோமா?


Sunday, March 27, 2022

உம் மகன் பிழைத்திருப்பான்

நாளின் (27 மார்ச் 2022) நற்சொல் 

உம் மகன் பிழைத்திருப்பான்

சாகும் தறுவாயிலிருந்த தன் மகனுக்கு நலம் வேண்டி வருகிறார் அரச அலுவலர். 

'என் மகன் இறக்குமுன் வாரும்' என இயேசுவை அவர் அழைக்கிறார்.

மெசியாவின் வருகையின்போது வாழ்வு மட்டுமே இருக்கும் என இறைவாக்குரைக்கின்ற எசாயா இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 65:17-21), 'இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது!' என இறைவாக்குரைக்கின்றார்.

'உம் மகன் பிழைத்திருப்பான்' என்னும் இயேசுவின் சொற்களை நம்பிப் புறப்பட்டுச் செல்கின்ற அரச அலுவலர் தன் மகன் நலமாயிருக்கக் கண்டு மகிழ்கின்றார்.

இந்த நிகழ்வு நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடம் என்ன?

'என் மகன் இறக்கப் போகிறான்' என அந்த அரச அலுவலர் கூறியது போல நாமும் பல நேரங்களில், வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும், அல்லது இனி நமக்கு நல்லது எதுவும் நடக்காது என்றும், அல்லது எல்லாம் முடிந்து போகும் என்றும் சொல்லிப் பதற்றப்படுகிறோம். 

வாழ்வோரின் கடவுள் நம் நடுவில் இருக்க, நாம் இறப்பைப் பற்றி அஞ்சத் தேவையில்லை என்பதை மறந்துவிடுகின்றோம்.

நம்மைச் சுற்றி நிகழ்பவை எதிர்மறையாகத் தெரிந்தாலும் நம் நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் வரத்தை இன்றைய நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.


Saturday, March 26, 2022

அவர் இனியவர்

தவக்காலம் நான்காம் ஞாயிறு

யோசுவா 5:9அ,10-12 1 கொரிந்தியர் 5:17-21 லூக்கா 15:1-3,11-32

அவர் இனியவர்

தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றை 'தொமேனிக்கா லெயத்தாரே' ('மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு') என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: 'எருசலேமின்மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காக புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் ... நீங்கள் நிறைவடைவீர்கள் ... நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்' (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல. மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. ஆக, இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையம் இன்றைய பதிலுரைப்பாடலில் இருக்கின்றது: 'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' (திபா 34:8). தாவீது அபிமெலக்கின்முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். இந்த நேரத்தில், தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15). 

'இனிமை' - இது ஒரு வித்தியாசமான சுவை. சுவை என்பது ஒருவகை நேரடி வேதியல் உணர்வு என வரையறுக்கிறது விக்கிபீடியா. மேற்கத்தியர் சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு. தமிழர் முறைப்படி சுவை ஆறு: இனிப்பு ('கனி'), கார்ப்பு ('மிளகாய்'), கசப்பு ('பாகற்காய்'), புளிப்பு ('புளியங்காய்'), உவர்ப்பு ('உப்பு'), துவர்ப்பு ('பாக்கு'). இந்த அறுசுவைகளும் மனித உடலுக்குத் தேவை என்கிறது சித்த மருத்துவம். இந்த அறுசுவைகளில் இனிப்புக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், 'இனிப்பு' மட்டும்தான் நாம் ஒருமுறை சுவைத்தாலும், மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவை. மற்ற ஐந்து சுவைகளும் பொதுவாக ஒருமுறை மட்டுமே சுவைக்கக்கூடியவை. மேலும், 'இனிப்பு' சுவைதான் நம் உள்ளத்திற்கு நேர்முகமான உணர்வுகளையும், நம் உடலின் புன்னகைத் தசைநார்களையும் உயிர்க்கவல்லது. ஆகையால்தான், வெற்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி, சோர்வு போன்ற நேரங்களில் இனிப்பு சுவை தரப்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் - அதாவது, அடிக்கடி நாம் தேடுவதாலும், அது நமக்குப் புத்துயிர் அளிப்பதாலும் - தாவீது ஆண்டவரை, 'இனியவர்' ('இனிப்பானவர்') என்று அழைக்கின்றார். ஆக, ஆண்டவரின் இனிமையை ஒருமுறை சுவைத்தால் போதும். அவரிடமே நாம் திரும்பத் திரும்பச் செல்வோம். ஆண்டவர் தாவீதை அச்சத்தினின்று விடுவிக்கிறார், அவமானத்திலிருந்து விடுவிக்கிறார், மற்றும் நெருக்கடியினின்று விடுவிக்கிறார். 

இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9,10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின் நடந்த முதல் நிகழ்வுகளைச் சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததுதும், ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், 'இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய். அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்' எனப் பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று, யோர்தானைக் கடந்து கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி தன்னை உண்மையான கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ணத் தொடங்குகின்றனர். உண்ட மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக் 'குழந்தைகள்' நிலையிலிருந்து 'பெரியவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கே இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, அவர் பழிச்சொல் நீக்குகின்றார். இரண்டு, அவர்களுக்கு புதிய தொடக்கத்தைத் தருகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே நம்மைக் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும் நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாக கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, 'கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே' என்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், 'நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.' அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால் நம்மையும் அவரோடு இணைத்துப் புதுப்படைப்பாக்குகிறார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 15:1-3,11-32) நமக்கு மிகவும் அறிமுகமான ஓர் உவமை. 'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எனப்படும் இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். இங்கே, கவனமையம் அல்லது கவனக்குவிப்பு இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல. மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு இடறல்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தூரத்திற்குச் செல்கின்ற இளைய மகன் இல்லம் திரும்புகிறான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் இல்லம் திரும்ப மறுக்கிறான். இவ்விரண்டு கதைமாந்தர்களுக்காகவும் வீதிக்கு வருகின்றார் தந்தை: முதல் மகனை அரவணைத்துக் கொள்ளவும், இரண்டாம் மகனை அழைத்துச் செல்லவும். ஆனால், என்ன வருத்தம்! மூத்த மகன் தன்னையே அடிமை என நினைத்தான், இளைய மகன் தன்னைப் பணியாளனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். இக்கதையில் அப்பாதான் கதாநாயகன். ஏனெனில், இரண்டு மகன்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் தந்தை அங்கு இருந்தார். இளையமகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து தந்தை இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். எல்லாவற்றையும் இழந்து அவன் வரும்போது ஊரார் கேலிபேசிவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கேயே நிற்கிறார் தந்தை. இளையமகனைத் தந்தை எதிர்கொண்டது ஏதோ ஒரு விபத்தால் - சான்ஸ் - அல்ல. மாறாக, விருப்பத்தால் - சாய்ஸ். தானே, தெரிந்து, நின்று, தழுவி, அரவணைத்து, அள்ளிக்கொள்கின்றார் தந்தை. இதுதான் இந்தப் பெயரில்லாத் தந்தையின் இனிமை. இந்த இனிமை இரக்கத்தோடு காத்திருக்கிறது. தன் மகன் ஏற்படுத்திய பொருள்செலவைப் பெரிதாகப் பார்க்கவில்லை. தன் மகனைத் தீர்ப்பிடவில்லை. தன் பெயரைக் கெடுத்தாலும் அதைப் பொருட்படுத்தவில்லை. சேறு, சகதி, அழுக்கு என வந்த மகனிடம், 'நீ போய் முதலில் குளித்து வா!' என்று சொல்லவில்லை. அவன் தனக்குரியது என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனாலும், அவனுக்குரிய முதல்தர ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடியைத் தயாராக வைத்திருக்கிறது இந்த இனிமை. தன் மூத்த மகன் இல்லம் நுழைய மறுத்தாலும் அவனைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்கு விளக்கம் தந்து அவனுடைய பார்வையை அகலப்படுத்துகிறது இந்த இனிமை.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: இளைய மகனுக்கு இரக்கமாக, கனிவாக, தழுவலாக, கரிசனையாக வெளிப்படுகிறது. மூத்த மகனுக்கு, விளக்கம் சொல்லிப் புரிய வைத்து, அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறது.

இவ்வாறாக, இன்றைய முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் வாசகங்கள், திருப்பாடலோடு இணைந்து 'இறைவனின் இனிமையை' அல்லது 'அவர் இனியவர்' என்பதை நமக்குக் காட்டுகின்றன. 'அவர் இனியவர்' என்றால் 'அந்த இனிமையை' நாம் அனுபவிக்கிறோம் என்றால், அவரைப் போல, 'நாம் இனியவர்' ஆவது எப்படி?

1. பழிச்சொல் நீக்கும் இனிமை

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது அவர்கள் வெளிப்புறத்தில் அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு, உடைகள், வீடு  என எல்லாம் இருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் ஒரு நெருடல் இருக்கிறது. அதுதான் எகிப்தியரின் பழிச்சொல். அந்தப் பழிச்சொல் அவர்கள் எந்த நன்மையையும் சுவைத்து அனுபவிக்க, அவர்களின் மகிழ்ச்சியை எதிர்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவன் இந்தப் பழிச்சொல்லைத் துடைக்கின்றார். 'நீங்கள் முட்டாள்கள், ஏமாளிகள், உங்கள் கடவுள் பொய்யர், நீங்கள் அழிந்துபோவீர்கள்!' என்ற பழிச்சொல்லைத் துடைக்கின்றார். இன்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் இதுதான். இறைவன் நம்மேல் உள்ள பழிச்சொல் அனைத்தையம் துடைக்க வல்லவர். 'இதோ என் அன்பார்ந்த மகன்-மகள்' என்று அவர் உங்களையும் என்னையும் அழைக்கும் அந்த நொடியே அனைத்துப் பழிச்சொல்லையும் துடைத்துவிடுகிறார். ஊரார் நம்மை 'விலைமாதருடன் உறவு கொண்டவன்,' 'பன்றி மேய்த்தவன்,' 'பன்றியின் உணவை உண்டவன்,' 'தந்தை சொல் கேளாதவன்' என்று சொன்னாலும், சொந்த அண்ணனே, 'உம் மகன்' என்று மூன்றாம் நபராகப் பார்த்தாலும் இறைவன் பழிச்சொல்லை நீக்குகிறார். 'நான் உன் வீட்டு வேலைக்காரன்' என்று சொன்ன வாயெடுத்தவனை அதற்கு மேல் பேசவிடாமல் மகனுக்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறார். ஆக, இறைவன் என் பழிச்சொல்லை நீக்குகிறார் என்றால், நான் அவருடைய இனிமையை உணர்கிறேன் என்றால் என் நாவில் இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரக்கூடாது. இன்னா சொற்கள் விடுத்து இனிய சொற்கள் பேசும்போது நாமும் இனியவரே.

2. பழையன கழிக்கும் இனிமை

கிறிஸ்துவோடு உலகை ஒப்புரவாக்கும் இறைவன் பழையன அழித்தையும் அழிக்கின்றார். முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மன்னாவை நிறுத்துவதன் வழியாக மக்களின் பழைய சார்புநிலையை அழிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், தந்தை இரண்டு மகன்களின் பழைய இயல்பையும் அழிக்கின்றார். இளைய மகன் கடந்த நாள்களில் என்ன செய்தான் என்றோ, எவ்வளவு கையிருப்பு கொண்டுவந்துள்ளான் என்றோ, அடுத்த என்ன திட்டம் என்றோ கேட்கவில்லை. மூத்த மகன் வைத்திருந்த முற்சார்பு எண்ணத்தையும் அழிக்கிறார். ஆக, பழையது நமக்கு உற்சாகம் தந்தால் நலம். ஆனால், நம்மைக் கட்டிவைத்து நகர முடியாமல் செய்தால் அது கழிக்கப்பட வேண்டும். பழையதை மறந்து இன்றில் இப்பொழுதில் வாழும்போது இறைவனின் இனிமையை அனுபவிக்கவும் அதை மற்றவருக்கு வழங்கவும் முடியும். ஏனெனில், இறைவனுக்கு இன்று மட்டுமே உண்மை.

3. தழுவிக்கொள்ளும் இனிமை

இன்றைய நற்செய்தியில் வரும் தந்தையின் கணிதமும் லாஜிக்கும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தப்படாமல், நிகழ்வின் மொத்தத்தைப் பார்க்கிறார். 'நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்' - இதுதான் இவருடைய மிஷன் ஸ்டேட்மண்டாக இருக்கிறது. அவன் போனான், அழித்தான், திரும்பினான். அதனால் என்ன? நடந்ததைப் பற்றி என்ன செய்ய முடியும்? அடுத்து என்ன செய்வது? 'மகிழ்நது கொண்டாடு' என்று இளைய மற்றும் மூத்த மகனை ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். இது யாரால் முடியும் என்றால், இறுதியை மனத்தில் வைத்துச் சிந்திப்பவரால் மட்டும்தான். 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). இறுதியில் எல்லாம் இனிமையாகும். ஆக, நிகழ்வுகளை இந்த இறுதியோடு இணைத்துப் பார்த்தால் இறைவனின் இனிமை நமக்குச் சொந்தமாகும்.

இறுதியாக, மகிழ்ச்சியின் ஞாயிற்றைக் கொண்டாடும் நாம், இறைவனின் இனிமையை அனுபவித்து மகிழ்வுறும் நாம், அதே இனிமையை மற்றவருக்கும் வழங்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காலையில் கூட்டைவிட்டுப் புறப்படும் பறவை மாலை கூட்டிற்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையால்தான் சுற்றித் திரிகிறது. சுற்றித் திரிதல் தவறல்ல. கூடு திரும்பாமல் இருப்பதுதான் தவறு. இஸ்ரயேல் மக்கள் கானான் நாடு என்னும் கூடு திரும்பினர். கொரிந்து நகர மக்கள் ஒப்புரவு என்னும் கூடு திரும்பினர். இரு மகன்களும் தந்தையின் இல்லம் என்னும் கூடு திரும்பினர். இவர்கள் கூடு திரும்பக் காரணம் இவர்கள் அங்கே இனிமையைக் கண்டனர். இனிமையைக் காணும் இடம் நோக்கி நம் இதயம் சாயும் என்பது நம் மரபியல் ஊட்டம். அந்த இனிமை இறைவனிடம் என்றால் பயணம் இனிதாகும். ஏனெனில், அவர் இனியவர் - உங்களையும் என்னையும் போல!


Thursday, March 24, 2022

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு

இன்றைய (25 மார்ச் 2022) திருநாள்

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு மூன்று வாழ்க்கைப் பாடங்களை நமக்குத் தருகின்றது.

(அ) ஆண்டவரின் உடனிருப்பு

ஓர் எதிரியை அழிக்கு இன்னொரு எதிரியைத் தழுவிக் கொள்ள நினைத்த ஆகாசு தன்னிடம் அல்லது தன்னோடு கடவுள் இருக்கிறார் என்பதை மறந்து போகின்றார். மனுக்குலத்தோடு கடவுள் என்றும் நிற்கிறார் என்பதை நினைவுபடுத்துகிறது இத்திருநாள்.

(ஆ) உடலின் மேன்மை

இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என முன்மொழியும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு மனித உடல் எடுக்கும் நிகழ்வை ஒரு முக்கியமான கருதுகோளாகப் பார்க்கின்றார். 'நீர் எனக்கு ஓர் உடலை அமைத்துத் தந்தீர்' எனத் தன் தந்தையைப் பார்த்துச் சொல்கின்ற இயேசு, அந்த உடலைச் சரணாகதி ஆக்குகின்றார்.

(இ) பார்வையை அகலமாக்குதல்

இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டவுடன் மரியா அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். ஆனால், 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று வானதூதர் சொன்ன நொடியில் அனைத்தையும் கடவுளின் கண்கொண்டு பார்க்கின்றார் மரியா.


Tuesday, March 22, 2022

அடையாளம்

நாளின் (23 மார்ச் 2022) நற்சொல்

அடையாளம்

இன்றைய முதல் வாசகத்தில் (இச 4:1,5-9) இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற அடையாளம் என பத்துக் கட்டளைகளைக் கொண்டாடுகின்றனர். அதாவது, பத்துக் கட்டளைகள் என்பது இஸ்ரயேல் மக்கள் பெற்றிருந்த தனிப்பெரும் வாழ்க்கை நிலை என்றும், மற்ற யாருக்கும் கிடைக்காத ஒன்று இவர்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் மொழிகின்றார் மோசே.

நற்செய்தி வாசகத்தில் (மத் 5:17-19), மேற்காணும் கட்டளைகளைத் தாம் நிறைவேற்ற வந்திருப்பதாக இயேசு முன்மொழிவதுடன், கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே விண்ணரசில் ஒருவரின் நிலையை உயர்த்தும் என மொழிகின்றார்.

கட்டளைகள் பெரும்பாலும் நமக்குச் சுமையாகத் தெரிகின்றன. ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்தலில்  நமக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, சாலையில் நான் வாகனத்தில் செல்லும்போது நாற்சாலை சந்திப்பு வருகிறது. அந்தச் சந்திப்பில் நிற்கவா, செல்லவா என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது. என்னால் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால், எனக்கு முன்னே சிவப்பு விளக்கு எரிந்தால் நான் வாகனத்தை நிறுத்தி விடுவேன். எனக்கு முடிவெடுக்க வேண்டியதில் குழப்பம் வருவதில்லை. கட்டளைகள் ஒருவிதமான கட்டின்மையைத் தருகின்றன என்பதே உண்மை.

கட்டளைகளைக் கடைப்பிடித்தல் என்பது மூன்று நிலைகளில் நமக்கு அவசியமாகிறது:

ஒன்று, இது நமக்குச் சுதந்திர உணர்வைத் தருகின்றது.

இரண்டு, கட்டளைகள் பிணைப்பின் அல்லது உறவின் அடையாளமாக இருக்கின்றன. 

மூன்று, கட்டளைகள் நம் வளர்ச்சி மற்றும் மேன்மைக்கு உறுதுணையாக நிற்கின்றன.


மன்னிப்பு

நாளின் (22 மார்ச் 2022) நற்சொல்

மன்னிப்பு

மத்தேயு நற்செய்தியாளரின் குழும உரைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி வாசகம் (மத் 18:21-35) மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: (அ) எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? என்னும் பேதுருவின் கேள்வி, (ஆ) இயேசு முன்மொழியும் 'மன்னிக்க மறுத்த பணியாள்' எடுத்துக்காட்டு. (இ) இறைவேண்டலில் உள்ள இறுதி வாக்கியம்.

மன்னிப்பு என்பது இரக்கத்தின் வழியாகவே சாத்தியம்.

எப்படி?

(அ) இரக்கம் என்பது உணர்வு என்ற நிலையிலிருந்து செயல் என்ற நிலைக்கு மாற வேண்டும். ஏனெனில், 'செயல்' என்று வரும்போது நான் தேர்ந்து தெளிந்து முடிவெடுக்கிறேன்.

(ஆ) நீதி - அதாவது, அவர் இதைச் செய்ததால் நான் இதை அவருக்குக் செய்வேன் - என்ற நிலை விடுத்து, அவர் எனக்கு இத்தீங்கைச் செய்தாலும் நன்மை செய்வேன் - என்ற நிலைக்கு உயர்வது.

(இ) நான் இவருக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்பதை விடுத்து, இவருக்கு இதைச் செய்யாவிட்டால் இவருக்கு என்ன ஆகும் என்று பிறர்மையச் சிந்தனை கொண்டிருப்பது.

இஸ்ரயேல் மக்கள்மீது ஆண்டவர் பரிவு காட்டுமாறு முதல் வாசகத்தில் இறைஞ்சுகிறார் தானியேல்.


Sunday, March 20, 2022

உற்றார் எதிர்ப்பு

நாளின் (21 மார்ச் 2022) நற்சொல்

உற்றார் எதிர்ப்பு

தவக்காலப் பயணத்தின் பாதி வழியைக் கடக்க இருக்கும் வேளையில், இயேசு தன் வாழ்வில் சந்தித்த எதிர்ப்புகள் பற்றிப் பேசத் தொடங்குகின்றன இனி வரும் வாசகங்கள். 

இயேசுவின் சிலுவை, பாடுகள், மற்றும் இறப்பு என்பது ஒரே நாளில் நடந்தேறிய நிகழ்வுகள் இல்லை. தன் பிறப்பு முதல் இயேசு, சிலுவையின் நிழலில்தான் இருந்தார். 

இயேசுவை முதலில் அவருடைய உற்றார், மற்றும் சொந்த ஊரார் எதிர்க்கின்றனர். இந்த நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 4:24-30) வாசிக்கின்றோம். இயேசு தன் சொந்த ஊரில் பணியைத் தொடங்குகின்றார். தொழுகைக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டிலிருந்து வாசிக்கின்றார். அவருடைய போதனையைக் கேட்கின்ற ஊரார் முதலில் அவரைப் பாராட்டிப் புகழ்கின்றனர். ஆனால், அவருடைய எளிய பின்புலம் கண்டு அவரைக் குறித்து இடறல்படுகின்றனர். 

இதன் தொடர்ச்சியைத்தான் இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

யூதர்களின் கடவுளாகிய ஆண்டவர் யூதர்களுக்கு அல்ல, புறவினத்தாருக்கே நலன்கள் புரிந்தார், ஏனெனில், அவர்கள் அவரை நம்பினர் என்று இயேசு சொன்னதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. யூதச் சமூகம் தன்னையே தூய்மையான சமூகமாகக் கருதியது. கடவுள் தங்களுக்கு மட்டுமே அவரை வெளிப்படுத்தியதாக அவர்கள் நம்பினர். மேலும், புறவினத்தாரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

இந்த நேரத்தில், இரு எடுத்துக்காட்டுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் இயேசு: ஒன்று, சாரிபாத்து நகர் கைம்பெண். இரண்டு, தொழுநோய் பிடித்த நாமான். இவர்கள் வெறும் புறவினத்தார்கள் மட்டுமல்ல. மாறாக, புறவினத்துப் பெண்ணாகவும், கைம்பெண்ணாகவும், தொழுநோய் பீடித்தவராகவும் இருக்கின்றனர். 

இந்த எடுத்துக்காட்டுகளைக் கேட்டவுடன் கோபத்தால் ஊராரின் கண்கள் சிவக்கின்றன. புறவினத்தாரின் நம்பிக்கையைத் தங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறிவிட்டாரே என அவரைத் தங்கள் ஊரிலிருந்தும் வாழ்விலிருந்தும் வெளியேற்றத் துடிக்கின்றனர்.

முதல் வாசகத்தில் (காண். 2 அர 5:1-15) நாமான் நலம் பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

சாரிபாத்துக் கைம்பெண் எலியாவின் கடவுளை உடனடியாக நம்புகிறார்.

நாமான் தன் மனைவியுடைய பணிப்பெண் சிறுமியின் சொல் கேட்டுப் புறப்படுகின்றார்.

தூரத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை தூரத்தில் உள்ள கடவுளையும் பக்கத்தில் கொண்டு வருகின்றது.

பக்கத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையின்மை பக்கத்தில் உள்ள கடவுளையும் தூரத்துக்குத் தள்ளிவிடுகிறது.


Saturday, March 19, 2022

இல்லம் திரும்ப

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

விடுதலைப் பயணம் 3:1-8அ,13-15 1 கொரிந்தியர் 10:1-6,10-12 லூக்கா 13:1-9

பாலைநிலத்திலிருந்து இல்லம் திரும்ப

புனித இஞ்ஞாசியாரின் புகழ்பெற்ற 'ஆன்மிகப் பயிற்சிகள்' நூலில், 'தெரிதலும் தெரிவுசெய்தலும்' பற்றிச் சொல்லும்போது, இருவகை உணர்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்: 'ஆறுதல்,' 'வெறுமை.' நம் வாழ்வின் நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலச் செல்லும்போது, அல்லது நமக்கு நடக்கும் எல்லாம் நேர்முகமாகவே நடக்கும்போது, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நாம் வெற்றி பெறுகிறபோது, நம் உறவுநிலைகள் நமக்கு அமைதி தருவனவாக இருக்கும்போது, நம் உடல்நலம் நன்றாக இருக்கும்போது போன்ற சூழல்களில் நாம் 'ஆறுதல்' கொள்கிறோம். ஆனால், 'ஆறுதல்' மட்டுமே நம் வாழ்வியல் அனுபவமாக இருப்பதில்லை. சில நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்பிற்கு முரணாக நடந்தேறும். நமக்கு நடக்கும் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கும். நம் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தரும். நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி தராது. நம் உறவுநிலைகளில் அமைதி குலையும். நம் உடல்நலம் குன்றும். இச்சூழல்களில் நாம் அடையும் உணர்வின் பெயர் 'வெறுமை.'

நம் உடல் பசியால், தாகத்தால் வாடுவதுபோல, நம் மூளை புதிய சிந்தனை இல்லாமல் வறண்டு போவதுபோல, நம் இதயம் புதிய உறவுகளைத் தேடுவதுபோல, நம் உள்ளம் அல்லது ஆன்மாவும் வெறுமையை அனுபவிக்கிறது. ஆன்மாவின் ஊற்று சுரப்பது நிற்கும்போது, ஆன்மா என்னும் கிணறு வற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

தவக்காலத்தின் முதல் வாரத்தில் இயேசுவோடு புறப்பாலைவனத்தில் இருந்து, அவரோடு இணைந்து நம் நம்பிக்கையை அறிக்கையிட்டோம். கடந்த வாரம் அவரோடு உருமாற்ற மலையில் இருந்து நம் வாழ்வின் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டோம். இன்று, நம் ஆன்மிகப் பாலைநிலத்திலிருந்து திரும்புவோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 3:1-8,13-15) மோசேயின் அழைப்பு நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது. 'மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துவந்தார்' என்ற தொடக்க வசனமே மோசேயின் பாலை அனுபவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. எகிப்தின் வளம் மிக்க நைல் நதியிலிருந்து 'வெளியே எடுக்கப்பட்டு,' 'எபிரேயத் தாயே தாதியாகப் பாலூட்ட,' 'பாரவோனின் மகளின் அரவணைப்பில்' வாழ்ந்த மோசே, இப்போது, தனக்குச் சொந்தமில்லாத இடத்தில், தனக்குச் சொந்தமில்லாத ஆடுகளை, தனக்குச் சொந்தமில்லாத நிலத்தில் மேய்த்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக தனக்குத்தானே அந்நியராக நிற்கின்றார் மோசே. இந்த நேரத்தில்தான், முள்புதர் ஒன்று எரிந்துகொண்டிருப்பதையும் அது தீய்ந்துபோகாமல் இருப்பதையும் காண்கின்றார். 'இந்த மாபெரும் காட்சியைக் காண்பதற்காக நான் அப்பக்கமாகத் திரும்புவேன்' என்று மோசே முள்புதர் நோக்கித் திரும்புகின்றார். அவர் அணுகி வருவதைக் கண்டு, 'இந்த இடம் தூய்மையானது. இங்கே அணுகி வராதே. உன் மிதியடிகளை அகற்று' என எச்சரிக்கிறார் கடவுள். கடவுள் தன்னையே, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று மோசேயின் மூதாதையரின் கடவுளாகத் தன்னை முன்வைக்கின்றார். எகிப்தில் தன் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு தான் இறங்கி வந்திருப்பதாகச் சொல்கின்றார் கடவுள். 

'அவர் பெயர் என்ன?' என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என முதல் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே. மோசே தன் கடவுள் பற்றியும், தன் மூதாதையர் பற்றியும் அறியாமல் இருக்கிறார். அல்லது அவருடைய இந்த இக்கட்டான நிலையில் கடவுள் தன்னிடம் இல்லை என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். 'இருக்கின்றவாக இருக்கின்றவர் நானே' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் கடவுள். 'யிஹ்யே' என்ற இந்த எபிரேயச் சொல்லை, 'இருக்கின்றவராக இருக்கின்றவர்,' 'இருக்கின்றவற்றை இருக்கச் செய்கிறவர்' போன்று பல பொருள்களில் மொழிபெயர்க்கலாம். கடவுளின் பெயர் ஒன்றை மட்டும் நமக்குச் சொல்கிறது. 'இல்லாததை இருக்கச் செய்பவரும்,' 'இருப்பதை இருக்கச் செய்கிறவரும்' இறைவனே. மோசேயின் வெறுமையை நிரப்புகிறவரும், மக்களின் துன்பங்கள் துடைக்கிறவரும் இறைவனே. ஆக, இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்னும் பாலைநிலைத்திலிருந்து அவர்களை விடுவிக்க மோசே என்னும் வெறுமையின் பாலைநிலத்தைத் தேர்ந்துகொள்கிறார் கடவுள். எப்படி எரிகின்ற முள்புதர் தீய்ந்துபோகவில்லையோ, அப்படியே கடவுளின் இருத்தல் இஸ்ரயேல் மக்களுக்கு தீர்ந்துபோகவில்லை. இந்த அனுபவத்தையே இன்றைய திருப்பாடலில் (காண். 103) ஆசிரியர், 'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்' என்று புகழ்கின்றார்.

ஆக, 'ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசே' பாலைநிலத்திலிருந்து எகிப்திற்குத் திரும்புமாறு கடவுளால் அழைக்கப்படுகின்றார். இப்படித் திரும்பும் அவர் தன் கடவுளைக் கண்டுகொள்கின்றார். கடவுளைக் கண்டுகொண்ட அவர் கடவுள் அவருக்குத் தந்த பணியைச் செய்யப் புறப்படுகின்றார். 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 10:1-6, 10-12), சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா, வேண்டாமா என்பது பற்றிய அறிவுரையை கொரிந்து நகரத் திருச்சபைக்கு வழங்குகின்றார் பவுலடியார். கொரிந்து நகரத் திருச்சபை ஓர் அறிவுசார் திருச்சபை. எனவே, ஒரு சாரார், 'வேறு எந்தக் கடவுளும் இல்லை' (காண். 1 கொரி 8:4-6) என்ற புரிதலில், எல்லா உணவையும் - அது எந்த ஆலயத்தில் படைக்கப்பட்டாலும் - உண்ணலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மற்றொரு குழுவினர், இச்செயலைச் சிலைவழிபாடு என்று கருதி, மற்றவர்களின் இச்செயல்பாடு குறித்து இடறல்பட்டனர். இது நம்பிக்கையாளர்கள் நடுவே குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது. சிலைகள் கடவுளர்கள் அல்ல என்பதால் அவற்றுக்குப் படைக்கப்பட்ட யாவற்றையும் உண்ணலாம் என்று சொல்கின்ற பவுலடியார், அதே வேளையில், மற்ற நம்பிக்கையாளர்கள் இதைக் குறித்து இடறல் பட்டாலோ அல்லது இச்செயல் பிரிவினையை உண்டாக்கினாலோ, இச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (காண். 1 கொரி 8:7-12, 10:23-30).

இந்தப் பின்புலத்தில், தனது அறிவுரைக்கு வலுசேர்க்கும் வண்ணம், முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்தாளுகின்றார் பவுல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் கடவுள் ஆற்றிய அரும் பெரும் செயல்களை அறிந்திருந்தாலும், மேகத்தின்கீழ் வழிநடத்தப்பட்டு, கடலைக் கால் நனையாமல் கடந்து, ஒரே ஆன்மிக உணவை உண்டு, ஒரே பாறையின் தண்ணீரைக் குடித்தாலும் அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் பவுலடியார், 'இவை யாவும் நமக்கு முன்னடையாளமாய்த் திகழ்ந்தன' என்கிறார். மேலும், கொரிந்து நகர மக்களும் 'ஒரே திருமுழுக்கு பெற்றாலும்,' 'ஒரே ஆன்மிக உணவை' (நற்கருணை) உண்டாலும், சிலைவழிபாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இஸ்ரயேல் மக்களைப் போல கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர். 

ஆக, நம்பிக்கை கொண்ட கொரிந்து நகர மக்கள், சிலைவழிபாடு என்னும் தங்களின் பழைய பாலைநிலத்திலிருந்து, 'தண்ணீர் தரும் ஒரே பாறையாகிய கிறிஸ்துவை' நோக்கித் திரும்ப அவர்களை அழைக்கின்றார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 13:1-9) முதல் பகுதி இரண்டு கொடூரமான நிகழ்வுகளோடு தொடங்குகிறது: ஒன்று, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இரண்டு, சீலோவாமிலே கோபுரம் விழுந்து  அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பதினெட்டுப் பேர் இறக்கின்றனர். இப்படி இறந்தவர்கள் எல்லாருமே எதிர்பாராத விதத்தில், இறப்புக்கான எந்தவித முன்தயாரிப்புமின்றி இறக்கின்றனர். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதி, கனி தராத அத்திமரம் ஒன்று தன் தலைவரால் தான் எதிர்கொள்ளவிருக்கின்ற அழிவைப் பதிவு செய்கிறது. இந்நிகழ்வில் இயேசுவின் உருவகமாக வரும் தோட்டக்காரர், தலைவரிடம் அத்திமரத்திற்காக பரிந்து பேசி, கடைசி வாய்ப்பு ஒன்றைக் கெஞ்சிக் கேட்கின்றார். 

மேற்காணும் இரண்டு நிகழ்வுகள் வழியாகவும், காய்க்காத அத்திமரம் உருவகம் வழியாகவும் இயேசு தன் சமகாலத்தவரைத் தங்களின் 'பாலைநிலத்திலிருந்து உடனடியாக திரும்ப' அழைப்பு விடுக்கின்றார். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் இறந்தவர்களைப் பாவிகள் என்று அடையாளப்படுத்தும் போக்கை விடுத்து, தாங்கள் அந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறப்பு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் உடனடியாக மனம் மாறவும், அந்த மாற்றத்திற்கு உறுதுணையாக இயேசுவைப் பற்றிக்கொள்ளவும் வேண்டும். 

ஆக, கனிதராத வாழ்வு என்ற பாலைநிலத்திலிருந்து கனிதருதல் என்ற நிலைக்குத் திரும்ப தம் சமகாலத்தவரை அழைக்கிறார் இயேசு.

நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மிகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மிகம்சார் பாலை. முதல் மூன்றுநிலைப் பாலை அனுபவங்களை நாம் மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும். ஆனால், நான்காம் பாலை - ஆன்மிகம்சார் பாலைநிலைத்தை - வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல. மோசேக்கு கடவுளின் பெயர் தேவைப்பட்டது. கொரிந்து நகர மக்களுக்கு பவுலின் நினைவூட்டல் தேவைப்பட்டது. இயேசுவின் சமகாலத்தவருக்கு எச்சரிக்கையும் வேகமும் தேவைப்பட்டது.

இன்று நாம் உணரும் ஆன்மிகம்சார் பாலைநில அனுபவம் என்ன? அதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? அல்லது பசுமை நோக்கித் திரும்புவது? இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு மூன்று வழிகளைக் கற்பிக்கிறது:

1. இறைவனை அறிதல் வேண்டும்

மோசே இறைவனால் அழைக்கப்படுவதற்கும் அனுப்பப்படுவதற்கும் முன் இறைவனை அவர் அறிந்துகொள்கின்றார். இறைவனின் அழைப்பும் அனுப்பப்படுதலும் மோசேக்கு அவர் எதிர்பாராத இடத்தில், அவர் எதிர்பாராத நேரத்தில், அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்தபோது அருளப்படுகின்றது. இறைவனின் அழைப்பை மோசே இரண்டு நிலைகளில் கண்டுகொள்கின்றார்: ஒன்று, தன் ஆடுகளின் பக்கம் இருந்த தன் முகத்தை எரியும் முள்புதர் பக்கம் திருப்புகின்றார். இரண்டு, இறைவனின் பெயரை அறிந்துகொள்கின்றார். ஆடுகளிலிருந்து கண்களைப் முள்புதர் பக்கம் திரும்புவது எளிதன்று. ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற வேண்டும். மலை என்னும் பாதுகாப்பின்மையை நோக்கிச் செல்ல வேண்டும். தன் மிதியடிகளைக் கழற்ற வேண்டும். சில நேரங்களில் நம் மனம் பாலை அனுபவத்தில் இருக்கும்போது, விரக்தியை அனுபவிக்கும்போது, நாம் நம் ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருப்பதில்லை. நம் பாதுகாப்பின்மையை அல்லது வலுவின்மையை ஏற்றுக்கொள்ளத் தயராhக இருப்பதில்லை. அந்நேரங்களில், 'இது என்ன? வித்தியாசமாக இருக்கிறதே! எனக்குள் வெறுமையும் இருக்கிறது. அதே வேளையில் நான் உயிரோடும் இருக்கின்றேனே!' என்று நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டால் அங்கே இறைவனை அறிதல் சாத்தியமாகும். அங்கே, ஒன்றும் 'இல்லாமையில்,' 'இருக்கின்ற இறைவன்' எல்லாவற்றையும் இருக்கச் செய்வார். இழந்ததையும் திரும்ப அளிப்பார். நாம் விட்டுவிட்டு ஓடிவந்த எகிப்திற்கே நம்மை புதிய பணிக்காக அனுப்புவார்.

2. அதீத நம்பிக்கை அகற்ற வேண்டும்

பிரபலமான டைட்டானிக் கப்பல் தன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை எடுத்துக்கொள்ளவில்லை. 'இறைவன் தங்களோடு இருக்கிறார்' என்ற அதீத நம்பிக்கையே, இஸ்ரயேல் மக்களை, 'நாங்கள் என்ன செய்தாலும் ஆண்டவர் அன்பு செலுத்துவார்' என்று நினைக்கத் தூண்டியது. ஆகையால்தான், அவர்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினர். 'சிலைவழிபாட்டு உணவை விட வேண்டும்' என்ற எச்சரிக்கையையும் கொரிந்து நகர மக்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆக, ஆன்மிகப் பாலை அனுபவம் சில நேரங்களில் நம் அதீத நம்பிக்கையாலும், எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துவதாலும் வரலாம். 

3. செயல் மாற்றம் வாழ்வு மாற்றம்

சில நேரங்களில் நாம் பயம் அல்லது விரக்தி உணர்வுகளால் அல்லது எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். அந்த மாதிரியான நேரங்களில் இரண்டு விடயங்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்: (அ) இதுவரை செய்யாத ஒன்றைச் செய்வது - அத்திமரத்தை தலைவர் வெட்டப்போகிறார் என்று முடிவெடுத்தவுடன் தோட்டக்காரர் உடனடியாக மரத்திற்கு உரம் போட ஆரம்பிக்கிறார். இதுவரை செய்யாத ஒன்றை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். (ஆ) செயலை மாற்றுவதன் வழியாக உணர்வை மாற்றுவது - இது முந்தைய விடயத்தின் நீட்சியே. 

இவ்வாறாக, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நம் ஆன்மிகப் பாலைவனத்திலிருந்து நம்மை வெளியே வர அழைக்கிறது. ஆறுதலும், வெறுமையும் மாறி மாறி வரும் வாழ்வியல் அலைகள். வெறுமையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால், அங்கே 'இருக்கின்ற அவர் இருக்கின்றவராக இருப்பார்' - இன்றும் என்றும்!


Friday, March 18, 2022

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்

இன்றைய (19 மார்ச் 2022) திருநாள்

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்

யோசேப்பு நமக்குக் கற்றுத் தரும் வாழ்வியல் பாடங்களை நற்செய்தி நூல் பதிவுகளின் பின்புலத்தில் காண்போம்.

(1) எதையும் உறுதியாக்கிக் கொள்ள வேண்டாம்!

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால் அனைத்தையும் உறுதிப்படுத்த விரும்புவது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணித வாய்ப்பாடு போல வாழ்க்கையும், வாழ்க்கை நிகழ்வுகளும், நம் உறவுநிலைகளும், பணிகளும் அமைய வேண்டும் என நினைத்து அனைத்தையும் உறுதியாக்கிக் கொள்ள நினைக்கிறோம். நாம் வளர்ந்தபின் நம்மைத் தொற்றிக் கொள்ளும் நோய் இது. குழந்தைப் பருவத்தில் நாம் எதையும் உறுதியாக்கிக் கொள்ள நினைக்கவில்லை. நாம் உண்ணும் உணவு வாயின் ஓரத்தில் வழிந்து சட்டையில் வழிந்தோடினாலும் சிரித்துக் கொண்டோம். ஆனால், வாயின் ஓரத்திலும் சட்டையிலும் எந்தக் கறையும் பட்டுவிடக் கூடாது என்று இப்போது மிகக் கவனமாக இருக்கிறோம். தன் வாழ்வில் இது இப்படி, அது அப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்ற யோசேப்பு மரியாவை மறைவாக விலக்கிவிடத் திட்டம் தீட்டுகின்றார். இப்படியாக அனைத்தையும் உறுதியாக்கிக் கொள்ள நினைக்கின்றார். ஆனால், இறுதியில் தன் திட்டம் அல்ல, மாறாக இறைத்திட்டமே வெற்றி பெறுகிறது என்பதை உணர்;ந்து சரணாகதி அடைகின்றார்.

(2) சொற்கள் அல்ல, செயல்களே பேசட்டும்!

யோசேப்பு யாதொன்றும் பேசவில்லை - எப்போதும். அவர் பேசிய சொற்கள் எதையும் நற்செய்தியாளர்கள் பதிவு செய்யவில்லை. வாழ்வின் முதன்மையானவை சொற்களால் அல்ல, மாறாக, செயல்களாலேயே பேசப்படுகின்றன என்பதை யோசேப்பு அறிந்திருந்தார். கனவில் தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்குத் தன் செயலால் பதிலிறுப்பு செய்கின்றார்.

(3) வாழ்க்கை இன்னொருவருக்காகவே!

முதல் ஏற்பாட்டில் 'யோசேப்பு' என்னும் பெயர் வழங்கப்படும் இடத்தில், 'யோசேப்பு' என்றால் 'அவர் சேர்ப்பார்,' '(கடவுள்) சேர்த்துக் கொடுப்பார்' என்று பொருள் தரப்படுகின்றது. கடவுள் தன்னை இன்னொருவருக்காகக் கொடுத்தார் என்பதை நம் யோசேப்பு நன்கு உணர்ந்திருந்தார். ஆகையால்தான், ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியையும், தொடர்ந்து குழந்தையையும் ஏற்றுக்கொள்கின்றார். தனக்காக வாழ்வோர் தன் வாழ்வை இழந்துவிடுவர் என்பதன் பொருளை நன்கு அறிந்தவராக இருந்தார் யோசேப்பு. கடவுள் வாழ்க்கை என்னும் கொடையை நமக்கு சேர்த்து அளித்துள்ளார். நம்மையும் இன்னொருவருக்காக அதைச் சேர்த்து வழங்கியுள்ளார்.

(4) இரண்டாம் விழிப்பு அவசியம்!

யோசேப்பு இன்றைய நற்செய்திப் பகுதியில் (மத் 1:16-24) இரு முறை விழித்திருக்கின்றார். முதல் முறை அவர் விழித்திருக்கும்போது அவருடைய மூளை அதிகமாகச் சிந்திக்கிறது. இரண்டாம் முறை அவர் (தூக்கத்திலிருந்து) விழிக்கும்போது மூளையின் செயல்பாடு குறைந்து இதயத்தின் செயல்பாடு தொடங்குகிறது. ஆகையால்தான், அவரால் மரியாவை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இரண்டாம் விழிப்பு நம் வாழ்வில் மிக அவசியம். அகுஸ்தினார் இரண்டாம் விழிப்பு பெற்றார். மனம் மாறினார். இரண்டாம் விழிப்பு நம் வாழ்க்கைப் பாதையை மாற்றுகிறது. இரண்டாம் விழிப்பில் நாம் மூளையின் செயல்பாட்டைக் குறைத்து மனம் அல்லது இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கின்றோம்.

(5) கட்டுப்பாடு இழக்காதே!

மாற்கு அவுரேலியு, 'சிந்தனைகள்' என்னும் தன் நூலில், ஓர் ஆண்மகன் போற்ற வேண்டிய நான்கு திறன்களை முன்மொழிகின்றார்: (அ) திட்டமிடும் திறன், (ஆ) கட்டுப்பாட்டுத் திறன், (இ) உறவுத் திறன், மற்றும் (ஈ) வளம்ஈட்டும் திறன். இவற்றில், 'கட்டுப்பாட்டுத் திறன்' மிகவும் அவசியம். வாழ்வின் எந்தச் சூழலிலும் தன்னைக் குலைய விடாமல் காத்துக்கொள்ள உதவுவதே கட்டுப்பாட்டுத் திறன். இந்தத் திறன் உடையவர்கள் வெற்றி கண்டு மகிழ்வதும் இல்லை, தோல்வி கண்டு சோர்வதும் இல்லை. யோசேப்பு அனைத்து வாழ்வியல் நிகழ்வுகளிலும் தன்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தன் எதிர்பார்ப்பின் படி எதுவும் நிகழவில்லை என்றாலும், தன் உணர்வுகள் தன்னைப் பிறழ்வுபடுத்தாவண்ணம் தன்னைக் காத்துக்கொள்கின்றார். சத்திரத்தில் இடம் இல்லை என்ற சொல் கேட்டு மௌனமாக இருக்கிறார். எகிப்துக்கு ஓடு என்றால் ஓடுகிறார். திரும்பிச் செல் என்றால் செல்கிறார். 

(6) தூங்கிவிடுதல் நலம்!

வாழ்வின் நிகழ்வுகள் நம்மைக் குழப்பிக் கொண்டிருக்கும்போது தூங்கிவிடுதல் நலம். இறந்த இலாசர் உயிர்பெறும் நிகழ்வில், 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலம் பெறுவார்' எனச் சொல்கின்றனர் சீடர்கள்(காண். யோவா 11:12). தூக்கம் இறைவனின் இயங்குதளமாக இருக்கிறது. அன்பு செய்யப்படுபவர் அயர்ந்து தூங்குவார் என்பது செல்டிக் பழமொழி. தூக்கம் ஒரு பெரிய வரம். இரவில் கட்டிலில் பிணம் போல விழ வேண்டும் என்கிறார் பட்டினத்தார். பகலின் நல்ல வேலை இரவில் நல்ல தூக்கத்தைத் தருவது போல, வாழ்வில் நல்ல உழைப்பு நல்ல இறப்பைத் தருகிறது என்பது லெயோனார்டோ டாவின்சியின் வாக்கு. இன்று நமக்குத் தேவையான முக்கியமான உடற்பயிற்சி தூக்கம். நம் பிறழ்வான உணவுப் பழக்கம், அதீத சிந்தனை, கணினி, செயல்திறன் பேசிகள் இவற்றால் நம் தூக்கம் குறைந்துகொண்டே வருகின்றது. வாழ்வின் எதார்த்தங்கள் புரியாத போது, அடுத்து என்ன செய்வது என மனம் பதறும்போது தூங்கி விடுதல் நலம். தூக்கக் குறைவு என்பது உழைப்புக் குறைவே!

புனித யோசேப்பு என்றும் நமக்காகப் பரிந்து பேசுவாராக!


Thursday, March 17, 2022

வெறுப்பு வேண்டாம்!

நாளின் (18 மார்ச் 2022) நற்சொல்

வெறுப்பு வேண்டாம்!

இந்து இறையியலில் 'அரிஷத்வர்கா' என்ற கருத்துரு உண்டு. அதாவது, மூளையின் அல்லது மனத்தின் ஆறு விருப்ப நிலைகள் என முன்வைக்கப்படுபவையே அரிஷத்வர்கா. அவையாவன, 'காமம்' (இன்ப விருப்பம்), 'க்ரோதாம்' (கோபம்), 'லோபம்' (பேராசை), 'மோகம்' (பிணைப்பு), 'மதம் அல்லது அகங்காரம்' (ஆணவம்), மற்றும் 'மத்ஸர்யம்' (பொறாமை). இந்த ஆறு விருப்ப நிலைகளும் தனிமனிதரை மோட்சம் அல்லது நிர்வாணா நிலையை அடைவதற்குத் தடையாக இருக்கின்றன. மேலும், இவை கலிகாலத்தில் மேலோங்கி இருக்கும் என்றும் இறையியல் முன்வைக்கிறது.

இவற்றுக்கெல்லாம் மாற்றாக இருப்பது 'தர்மம்'. அதாவது, தர்மம் நிலைநாட்டப்படும்போது மேற்காணும் விருப்ப நிலைகள் மறைந்துவிடுகின்றன.

நாம் தவக்காலத்தில் பயன்படுத்தும் திருப்பலி தொடக்கவுரை எண் 4இல் நாம் பின்வருமாறு செபிக்கின்றோம்:

'எங்கள் உண்ணா நோன்பின் வழியாக 

நீர் எங்கள் தீய நாட்டங்களை அடக்குகின்றீர்.

மனதை மேலே எழுப்புகின்றீர்.

நற்பண்புகளையும் அவற்றுக்கான பரிசுகளையும்

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகப் பெருகச் செய்கிறீர்.'

இன்றைய நாளில் நாம் மேற்கொள்ளும் நோன்பு நம் தீய நாட்டங்களை அடக்கவும், நம் மனதை மேலே எழுப்பவும் பயன்படுவதாக.

இயேசுவின் பாடுகள் வரலாற்றை வாசிக்கும்போது, வெறுப்பு என்னும் உணர்வு நிகழ்வுகள் முழுவதும் இழையோடிக் கிடப்பதைக் காண முடிகிறது. மனிதர்கள் ஏன் தங்கள் சக மனிதர்களைக் கொல்ல வேண்டும்? கொல்லத் துணியும் அளவுக்கு ஏன் வெறுப்பு கொள்ள வேண்டும்? ஒருவர் மற்றவர்மேல் ஏன் நாம் போர்தொடுக்க வேண்டும்? 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 37:3-4,12-13,17-28) இளவல் யோசேப்பின்மேல் அவருடைய சகோதரர்கள் வெறுப்பு காட்டுகிறார்கள். விளைவு, அவர் ஏறக்குறைய சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு, அந்நியர்கள் கைகளில் விற்கப்படுகின்றார். 'விற்கப்படுதல்' என்பது ஏறக்குறைய கொல்லப்படுதலுக்குச் சமம். 

நற்செய்தி வாசகத்தில் (மத் 21:33-43,45-46) தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் எதிர்கொள்கின்ற இயேசு, பொல்லாத திராட்சைத் தோட்டக் குத்தகைதாரர்கள் எடுத்துக்காட்டின் வழியாக, அவர்கள் தன்மேல் கொண்டிருக்கின்ற வெறுப்பைத் தோலுரித்துக் காட்டுகின்றார். விளைவு, அவர்கள் இயேசுவைப் பிடிக்க வழிதேடுகின்றனர்.

நாம் கொண்டிருக்கும் வெறுப்பு கோபம், எரிச்சல், பதற்றம், பொறாமை, பழிச்சொல் எனப் பல நிலைகளில் வெளிப்படுகின்றது. வெறுப்பு ஓர் எதிர்மறை உணர்வாக இருக்கும்போதே அதை அழித்துவிடுதல் நலம். அது செயலாக மாறத் தொடங்கிவிட்டால் நிறுத்துவது கடினம். ஏனெனில், நம் செயல்களுக்கு நாமே நியாயம் கற்பிக்கத் தொடங்குவோம்.

நாம் யாரும் யாருக்கும் உயிரைக் கொடுக்க முடியாது என்பதால், யாரும் யார் உயிரையும் எடுக்கவும் கூடாது. உயிரைக் கொல்லும் வெறுப்பு உறவுகளையும் கொல்கின்றது.

Wednesday, March 16, 2022

கண்டுகொள்ளாமை

நாளின் (17 மார்ச் 2022) நற்சொல்

கண்டுகொள்ளாமை

'என்னை அன்பு செய். அல்லது என்னை வெறுத்து ஒதுக்கு. இரண்டையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், என்னைக் கண்டுகொள்ளாமல் இராதே! அன்பு செய்யும்போதும் வெறுக்கும்போதும் என்னை உனக்குச் சமமாக நடத்துகிறாய். ஆனால், கண்டுகொள்ளாமல் இருக்கும்போது என் இருத்தலை நீ ஒரு பொருட்டாகவே கருதுவது கிடையாது!'

கண்டுகொள்ளாமை ஒரு கொடிய உணர்வாக நம்மைக் காயப்படுத்துகிறது மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ளாதபோது. ஆனால், நாம் மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது நமக்கு நாமே காரணங்களை வரையறுத்துக்கொள்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 16:19-31) பரிசேயர்களை நோக்கி ஓர் எடுத்துக்காட்டைச் சொல்கின்றார் இயேசு. 'செல்வர் மற்றும் ஏழை இலாசர்' எடுத்துக்காட்டில், முந்தைய நிலை தலைகீழாக மாறுகிறது. 

செல்வர் செய்த தவறு என்ன?

அவர் தீய வழியில் பணம் சேர்க்கவில்லை.

ஏழை இலாசருக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை.

தன் பணத்தை தன் நண்பர்களுக்குச் செலவழித்தார்.

அவர் செய்த தவறு ஒன்றே ஒன்றுதான்: ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை.

கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணங்கள் மூன்று:

(அ) அவருடைய செல்வம் கண்ணாடியில் உள்ள வெள்ளிப் பூச்சுபோல அவரைத் தவிர வேறு எதையும் அவருக்குக் காட்டவில்லை.

(ஆ) நாளை பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப் போட்டார்.

(இ) இலாசர் என்னும் நபர் தன் வாழ்வில் இல்லை என நினைத்துக்கொண்டார்.

வாழ்க்கை தலைகீழாக மாறும்போது, ஆபிரகாமிடம் அவர் முறையிடுகின்ற போது, செல்வருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

முதல் வாசகத்தில் (எரே 17:5-10), மனிதரில் நம்பிக்கை வைப்போர் மற்றும் ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்னும் இரு குழுவினரைப் பற்றி இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. 

'இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது. அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்?' எனக் கலங்குகின்றார் எரேமியா.



Monday, March 14, 2022

செயல்கள்

நாளின் (15 மார்ச் 2022) நற்சொல்

செயல்கள்

நம் சொற்கள் அல்ல, மாறாக, நம் செயல்களே நம் முதன்மைகளைக் குறித்துக்காட்டுகின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் (மத் 23:1-12), செயல்கள் பற்றிய இரண்டு கருத்துகளை முன்மொழிகின்றது: ஒன்று, சொற்கள் அல்ல, மாறாக, செயல்களே முதன்மையானவை. இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தங்கள் சொற்கள் ஒன்று, செயல்கள் வேறு என்று இருந்தனர். இரண்டு, அவர்களுடைய செயல்கள் வெளிப்புற மதிப்பு மற்றும் ஏற்பு ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருந்தது. அல்லது, தங்கள் செயல்களால் வெற்று ஆடம்பரம் செய்தனர். 

இவ்விரண்டு கருத்துகளும் வேறு வேறு என்றாலும் கவனித்துப் பார்த்தால், இவை இரண்டும் ஒரே குவிமையம் கொண்டிருக்கின்றன. 

அது என்ன?

மனிதர்களின் வாழ்வில் செயல்கள் முதன்மையானவை. வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். செயல்காள சொற்கள் மிளிராத வரை அவை வெறும் சொற்களே. தங்கள் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடைவெளி உள்ளவர்கள் அதை மறைப்பதற்காக, ஆடம்பரமான மற்றும் ஆரவாரமான செயல்களில் ஈடுபட்டு மற்றவர்களின் கவனத்தைப் பெறுவர்.

இந்த நாள் தரும் செய்தி என்ன?

சொற்களுக்கும் செயல்களுக்கும் உள்ள இடைவெளி குறையும்போதுதான் ஒருவர் முதிர்ச்சி அடைகிறார், அல்லது வளர்கிறார். ஒவ்வொரு மனிதரிலும் ஒரு குழந்தை இருக்கிறார், ஒரு வளர்ந்தவர் இருக்கிறார். வெறும் சொற்களை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர் குழந்தை. செயல்களாகத் தன் சொற்களை மாற்றுகிறவரே வளர்ந்தவர்.

இன்று நான் எந்த அளவிற்கு வளர்ந்தவராக இருக்கிறேன்? என்று நம்மையே கேட்டுப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில் (எசா 1:10,16-20), 'நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார் இறைவாக்கினர் எசாயா. அதாவது, நன்மை செய்தல் என்னும் செயல் கற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அதாவது, ஒருவர் அதற்கென நேரத்தையும் ஆற்றலையும் திறனையும் செலவிட வேண்டும்.

நம் சொற்கள் செயல்களாக மாறட்டும்.

அப்படி மாறும் நம் செயல்கள் நன்மை தரட்டும்.

நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்வோம்!


Sunday, March 13, 2022

இரக்கமுள்ளவராய்

நாளின் (14 மார்ச் 2022) நற்சொல்

இரக்கமுள்ளவராய்

மத்தேயு நற்செய்தியாளரின் மலைப்பொழிவின்படி, அறிவுரைப் பகுதியில் இயேசு, 'உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள்' என மொழிகின்றார். 'நிறைவு' என்பதை 'இரக்கம்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா (காண். லூக் 6:36-38)

லூக்கா நற்செய்தியாளர் கடவுளின் முகத்தை இரக்கத்தின் முகமாகவே பதிவு செய்கின்றார். 'நிறைவு' என்று சொல்லும்போது அதில் அதிகக் கடினத்தன்மையும், எதிர்பார்ப்பும், நிறைவை அடைய இயலாத குற்றவுணர்வும், நிறைவை அடைந்து விடுவோமா என்ற பயமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், 'இரக்கம்' என்று சொல்லும்போது அங்கே எந்தவிதமான பயம், குற்றவுணர்வு ஆகியவற்றுக்கோ, எதிர்மறை உணர்வுகளுக்கோ இடமில்லை.

இரக்கம் மூன்று நிலைகளில் வெளிப்பட வேண்டும் என உரைக்கின்றார் இயேசு:

ஒன்று, 'பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்காத' மனப்பாங்கில். 'இவர் இப்படித்தான்' என்று நம் மனத்தில் தீர்ப்பு எழுதிவிட்டால் வேறு எந்தச் செயல்பாட்டுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. 

இரண்டு, 'பிறரை மன்னியுங்கள்.' நமக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை, அல்லது நமக்குத் தீங்கு நினைப்பவர்களை மன்னித்தல். நமக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு நாம் சற்றே புன்னகைத்தால், அநீதி இழைத்தவர்மேல் நமக்கு கோபம் வருவதற்குப் பதிலாக, பரிதாபம் அல்லது இரக்கமே வருகிறது. அவருடைய அறியாமை நமக்கு வியப்பாக இருக்கிறது. அறிந்துகொள்ள இயலாத அவருடைய உறைந்த உள்ளம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

மூன்று, 'கொடுங்கள்.' 'கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும்' என்பதை வியாபார நோக்கில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. காணாமல் போன மகன் எடுத்துக்காட்டில் (லூக் 15:11-32) தந்தை இரு மகன்களுக்கும் இரக்கத்தைக் கொடுக்கின்றார். அந்த இரு மகன்களும் தந்தைக்கு எதையும் கொடுக்கவில்லை என்றாலும், தந்தை தன்னகத்தே மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்கிறார். ஆக, பிறருக்குக் கொடுக்க நினைக்கும் நம் உள்ளமே நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்கிறது.

முதல் வாசகத்தில் (காண். தானி 9:4-11), இறைவாக்கினர் தானியேல் இறைவனிடம் சராணகதி அடைகின்றார். இறைவனின் இரக்கத்தைத் தன் நாட்டுக்குப் பெற்றுத்தர விழைகின்றார்.


Saturday, March 12, 2022

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளல்

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

I. தொடக்கநூல் 15:5-12,17-18,21 II. பிலிப்பியர் 3:17-4:1 III. லூக்கா 9:28-36

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளல்

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே, மனித வாழ்வில் 'உறுதியற்ற நிலையே உறுதியானது' என்பதும் உண்மையே. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போலவும், இரண்டு சதவிகித ஹைட்ரஜனும் ஒரு சதவிகித ஆக்ஸிஜனும் இணைந்தால் தண்ணீர் என்பது போலவும் உள்ள கணித மற்றும் வேதியியல் வாய்ப்பாடுகளின் உறுதித்தன்மையைப் போல வாழ்வியல் எதார்த்தங்கள் இருப்பதில்லை. 

நன்றாக உழைக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். ஆனால், வாழ்வில் முன்னேற்றம் இல்லை. எடுத்த காரியம் நிறைவேறுவது இல்லை. தினமும் ஆலயம் செல்கிறோம். நற்செயல்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்பாராத ஆபத்துக்கள் வந்தே தீருகின்றன. நம் குழந்தை நன்றாகப் படிக்கிறார். ஆனால், படிப்பிற்கேற்ற பலன் இல்லை. நம் மகன் நன்றாக வேலை செய்கிறார். ஆனால், வேலையில் அவருக்கு உயர்வே இல்லை. இம்மாதிரியான நேரங்களில், 'நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றும் நினைக்கும்' என்று சொல்லி நம்மையே தேற்றிக்கொண்டாலும், வாழ்வின் உறுதியற்ற தருணங்கள் நம் வாழ்வில் நமக்கு அச்சத்தையும், ஏக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.நாம் எப்போதும் சறுக்கலான மணலில் நடப்பதுபோலவே உணர்கிறோம். 

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ள முடியுமா? எதிர்கொள்ள வேண்டுமா? அதை எப்படி எதிர்கொள்வது?

தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த உறதியற்ற நிலைகளை ஆபிரகாம், பிலிப்பு நகரத் திருச்சபையினர், மற்றும் திருத்தூதர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 15:1-4), 'உன்னை பெரிய இனமாக மாற்றுவேன்' என்று ஆபிராமுக்கு ('ஆபிரகாம்' என்ற பெயர் மாற்றம் அடைவது 17:5ல்தான்) வாக்குறுதி கொடுக்கும் கடவுள் அவருக்குத் தோன்றுவதைப் பார்க்கிறோம். 'உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்' என்று (12:1) வாக்குறுதி கொடுத்துத் தன்னைத் தன் 'ஊரிலிருந்து' புறப்படச் செய்த இறைவன் இவ்வளவு நாள்கள் ஆகியும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாரே என்று தன் உள்ளத்தில் குழப்பமும் ஐயமும் கொள்ள ஆரம்பிக்கின்றார் ஆபிராம். இந்த நேரத்தில் ஆண்டவர் ஆபிராமை வெளியே (அவரின் கூடாரத்திற்கு வெளியேயும், அவரின் மனத்திற்கு வெளியேயும்) அழைத்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்கிறார். 'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்' என உடனே பதிவு செய்கிறார் ஆசிரியர். 'நீதி' என்பதற்கு 'மற்றவரோடு சரியான உறவில் இருப்பது' என்று பொருள். ஆக, ஆபிராம் கடவுளோடு கொள்ளும் சரியான உறவு நம்பிக்கையில் கட்டப்படுகிறது.

தொடர்ந்து, ஆண்டவர், 'இந்நாட்டை உனக்கு உரிமைச்சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே' என்கிறார். இது முந்தைய வாக்குறுதியைவிட இன்னும் அதிகம் உறுதியற்றது. நம்ம ஊர் பேருந்து நிலையத்திற்கு வெளியே சிறிய குடிசை போட்டு அமர்ந்து ஊசி பாசி பிண்ணிக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் கடவுள், 'உனக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளை உரிமைச் சொத்தாகத் தருவேன்' என்று சொன்னால் அவர் எப்படி அதிர்ச்சி அடைந்து புன்னகை பூப்பாரோ அப்படித்தான் நகைக்கின்றார் ஆபிராம். ஏனெனில், கல்தேயரின் ஊர் என்றழைக்கப்படும் கானான் அன்று ஒரு பெரிய கனவு நாடாக இருந்தது. அதன் வளமும், பலமும் பலரின் கண்களை அந்நாட்டை நோக்கித் திருப்பியது. தான் ஒரு சாதாரண நாடோடி என்பதை அறிந்திருந்த ஆபிராம், இந்த வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு, 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?' எனக் கேட்கின்றார். உடனே ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்துகொள்ள முன்வருகின்றார். உடன்படிக்கை என்பது ஓர் எழுத்துப் பத்திரம் போன்ற ஆவணம். இதில் உடன்படிக்கை செய்துகொள்ளும் இரு நபர்களின் உரிமைகளும் கடமைகளும் எழுதப்பட்டிருக்கும். மேலும், இது எழுதப்பட்டவுடன் அதன் வெளி அடையாளமாக பலி ஒன்று ஒப்புக்கொடுக்கப்படும். எபிரேயத்தில், 'உடன்படிக்கை செய்தல்' என்பதை 'உடன்படிக்கையை வெட்டுதல்' என்று சொல்கின்றனர். அதாவது, உடன்படிக்கையின்போது பலிப் பொருள்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட பலிப்பொருள்களுக்கு நடுவே உடன்படிக்கை செய்யும் இருவரும் நடந்து செல்ல வேண்டும். 'நான் உடன்படிக்கையை மீறினால் நானும் இப்படி வெட்டப்படுவேன்' என்று இருவரும் உணர்ந்துகொள்வதற்காகவே (காண். எரே 34:18) அவர்கள் இப்படி நடுவே நடப்பது வழக்கம். முதல் வாசகத்தில் கடவுளே உடன்படிக்கை செய்துகொள்ள முதலில் முன்வருகின்றார். மேலும், கடவுள் மட்டுமே தீச்சட்டி மற்றும் தீப்பந்தம் வடிவில் அந்தப் பலி கூறுகளுக்கிடையே நடக்கின்றார். இவ்வாறாக, கடவுள் நிபந்தனையற்ற நிலையில் ஆபிராமோடு தன்னை இணைத்துக்கொள்கின்றார். மேலும், தான் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற உறுதியையும் கடவுள் ஆபிராமுக்குத் தருகின்றார். காணக்கூடிய அடையாளத்தின் வாயிலாக ஆபிராமின் உறுதியற்ற நிலையையும் குழப்பத்தையும் நீக்குகின்றார் கடவுள்.

ஆக, கடவுள் தனக்கு மொழிந்த குழந்தைப் பேறு மற்றும் வாக்களிக்கபட்ட நாடு என்னும் வாக்குறுதிகள் பற்றிய உறுதியற்ற நிலையில் இருந்த ஆபிராம், கடவுளின் உடன்படிக்கைச் செயல்பாட்டால் தன் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டு, தன் நம்பிக்கையால் வெற்றியும் காண்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 3:17-4:1), பவுல், பிலிப்பி நகரத் திருஅவையில் விளங்கிய போலிப் போதனையை எதிர்கொள்கின்றார். பிலிப்பியில் பவுல் நற்செய்தி அறிவித்தபின், சில போலிப் போதகர்கள் - யூதம் தழுவியோர் - எழுந்து மாற்று நற்செய்தி ஒன்றைப் போதிக்கின்றனர். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையாளராக ஒருவர் மாறினாலும் யூதச் சட்டங்களையும், மரபுகளையும், முறைமைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், அச்செயல்களாலேயே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என்றும் போதிக்கின்றனர். இப்படியாக நம்பிக்கையாளர்கள் தங்களின் மீட்பு பற்றிய உறுதியற்ற நிலைக்கும் குழப்பத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதைக் கேள்வியுறுகின்ற பவுல் போலிப் போதகர்கள்மேல் கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றார். அவர்களை, 'நாய்கள்' என்றும், 'கெட்ட ஊழியர்கள்' என்றும், 'உறுப்பு சிதைப்போர்' என்றும் சாடுகின்றார் (காண். பிலி 3:2). மேலும்,  இன்றைய வாசகத்தில் 'வயிறே அவர்கள் தெய்வம்' என்று சொல்லும் பவுல், அவர்கள் கொடுத்த உணவு சார்ந்த மரபு முறைமைகளைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், யூத மரபில் நிறைய உணவுசார்ந்த முறைமைகள் இருந்தன. மேலும், 'மானக்கேடே அவர்கள் பெருமை' என்று சொல்லும்போது, மற்றவர்கள் பார்வையில் அருவருப்பாய் இருந்த விருத்தசேதனத்தை அவர்கள் தங்கள் பெருமையாகக் கருதியதைக் கடிந்துகொள்கின்றார். இறுதியாக, ஒட்டுமொத்தமாக, 'அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே' என்கிறார். இவ்வாறாக, யூத போலிப் போதகர்கள் இவ்வுலக வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைமைகளைப் பற்றிப் பேசுவதைச் சாடுகின்றார் பவுல். 

இந்தப் பின்புலத்தில் தன் போதனை பற்றிய சில தெளிவுகளை முன்வைக்கின்றார் பவுல். நற்செய்திக்கும் யூத முறைமைகளுக்கும் தொடர்பில்லை என்பதைச் சொல்கின்றார். ஏனெனில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர் பெறுகின்ற மீட்பு முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்ததே அன்றி செயல்கள் சார்ந்தது அல்ல என்கிறார். ஏனெனில், விருத்தசேதனம் போன்ற செயல்கள் வழியாகவும், உணவு மற்றும் உடலியல் முறைமைகளைப் பின்பற்றுவதால்தான் மீட்பு என்றால், இயேசுவின் சிலுவை மரணம் முழுமையற்றதாகப் போய்விடும். எனவே, போலிப் போதகர்களை, 'சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர்' என்றழைக்கும் பவுல், 'நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்' என்கிறார். அதாவது, 'சட்டம்தான் எல்லாம்' என்று நினைத்து சட்டத்திற்கு எதிராக இருந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தண்டிக்கச் சென்ற நான், இப்போது மனமாற்றம் பெற்று இயேசுவை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கிறேன். ஆக, 'நீங்களும் என்னைப்போல இயேசுவை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்' என்கிறார் பவுல். இந்த உலகு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை விண்ணகம் நோக்கியும், இயேசுவின் மீட்புச் செயல் நோக்கியும் திருப்புகின்றார் இயேசு. 

ஆக, போலிப் போதகத்தால் உருக்குலைந்து உறுதியற்ற மற்றும் குழப்ப நிலையில் இருந்த பிலிப்பி நகர நம்பிக்கையாளர்களை, தன் போதனையாலும் முன்மாதிரியான வாழ்வாலும் உறுதியாக்குகின்ற பவுல், 'ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்' என அறிவுரை பகர்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:28-36) இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசுவுக்கு மிக நெருக்கமான மூன்று திருத்தூதர்கள் - பேதுரு, யோவான், யாக்கோபு - இந்நிகழ்வில் இயேசுவுடன் உடனிருக்கின்றனர். மலையில் தோன்றிய மோசேயும், எலியாவும், உருமாறிய இயேசுவின் தோற்றமும் திருத்தூதர்களைக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றன. இந்தக் குழப்பத்தில்தான், 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்கிறார் பேதுரு. இப்படிச் சொல்வதன் வழியாக, (அ) பேதுரு, இயேசுவை மோசேக்கும் எலியாவுக்கும் நிகராக்குகின்றார், (ஆ) பேதுரு 'ஆண்டவரே' என அழைத்து இயேசுவின் முக்கியத்துவத்தை அறிக்கையிடுகின்றார், மற்றும் (இ) மலையிலேயே நிரந்தரமான இடத்தைத் தெரிவு செய்ய நினைக்கின்றார். 

பேதுருவும் மற்ற இரு திருத்தூதர்களும் இயேசு யார் என்ற ஒரு குழப்பத்திலும் உறுதியற்ற நிலையிலும் இருக்கின்றனர். இந்நேரத்தில் அவர்களின் குழப்பத்தை நீக்கும் வண்ணம், மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர். நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற குரலொலி கேட்கின்றது. 'மைந்தர்' என்ற நிலையில் இயேசு, மோசே மற்றும் எலியாவைவிட மேன்மையானவராகின்றார். 'தேர்ந்துகொண்டவர்' என்ற நிலையில் அவர் மெசியாவாக இருக்கிறார். மேலும், இவருக்குச் செவிகொடுக்க திருத்தூதர்கள் அழைக்கப்படுகின்றனர். 

ஆக, கடவுளின் குரலும் அவரின் கட்டளையும் திருத்தூதர்களின் உள்ளத்திலிருந்த உறுதியற்ற நிலையையும், குழப்பத்தையும் அகற்றி உறுதி தருகின்றது. இயேசு யார்? என்பது பற்றிய உறுதியை திருத்தூதர்கள் பெற்றுக்கொள்கின்றனர். 

இவ்வாறாக, கடவுள் தேர்ந்துகொண்டவர்களும், கடவுளைத் தேர்ந்துகொண்டவர்களும் - ஆபிராம், பிலிப்பு நகர நம்பிக்கையாளர்கள், திருத்தூதர்கள் - உறதியற்ற நிலையையும், குழப்பத்தையும் எதிர்கொள்கின்றனர். எதிர்கொண்ட அவர்கள் கடவுளின் உடன்படிக்கையால், வாக்குறுதியால், போதனையால், கட்டளையால் உறுதியும் பெறுகின்றனர். இதையே இன்றைய திருப்பாடல் ஆசிரியரும் (காண். திபா 27), தன் உறுதியற்ற நிலையிலும், தன் குழப்பத்திலும், 'ஆண்டவரே என் ஒளி' என்று கண்டுகொள்கின்றார்.

வாழ்வின் உறுதியற்ற நிலையை எப்படி எதிர்கொள்வது?

1. நம்பிக்கை

'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்' என்ற சொல்கிறது இன்றைய முதல் வாசகம். 'நம்பிக்கை' என்பது ஐயமற்ற நிலை. உயரம் தாண்டும் விளையாட்டு வீரர் ஓடிக்கொண்டே இருக்கும்போது, தனக்கு முன் இருக்கும் அந்தக் குச்சியின் உயரத்தைத் தான் தாண்டிவிடுவேன் என்ற உறுதியில் ஐயமற்று இருக்க வேண்டும். 'தாண்டிவிடுவேனா?' என்ற ஐயம் சிறுதுளி வந்துவிட்டாலே அவரால் உயரே எழ முடியாமல் போய்விடலாம். 'அக்கா, ஒரு பென்சில் வாங்குங்க. அண்ணா, ஒரு பேனா வாங்குங்க!' என்று சொல்லி பேருந்தைச் சுற்றி சுற்றி வரும் சின்னக் குழந்தைகளின் கண்களில் இருந்து நம்பிக்கையை நாம் கற்றுக்கொள்ளலாம். 'இன்று மாலைக்குள் எல்லாப் பேனாக்களும், பென்சில்களும் விற்றுவிடும். நாம் மாலையில் நன்றாக உணவருந்தி உறங்கலாம்!' என்ற நம்பிக்கையே அவர்களை ஒவ்வொரு பேருந்தினுள்ளும் ஏறி இறங்க அவர்களை உந்தித் தள்ளுகிறது. நம்பிக்கை என்ற அந்த நெருப்புத்துளி நம் உள்ளத்தில் இருக்கும்போது, ஒரு கதவு அடைக்கப்பட்டாலும், மறுகதவு நோக்கி நம் கால்கள் தாமாகவே நகர்ந்து செல்லும்.

2. உடனடி ரிசல்ட் வேண்டாம்

பிலிப்பி நகர மக்கள் தங்களின் மீட்புக்கு உடனே பரிசு கிடைக்க வேண்டும் என்று பொறுமையற்ற நிலையில் இருக்கின்றனர். பொறுமையற்ற நிலையில்தான் நாம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் நம்ப ஆரம்பிப்போம். 'விண்ணகமே நம் தாய்நாடு', எனவே பொறுத்திருங்கள் என அறிவுரை பகர்கின்றார் பவுல். நம் வாழ்வில் உறுதியற்ற நிலையும் குழப்பமும் வரக் காரணம் நம்முடைய பொறுமையின்மையே. ஆக, அதைக் களைதல் அவசியம். 

3. சலனமற்ற மனம்

உருமாற்ற மலையில் சஞ்சலத்தோடு பேசிய திருத்தூதர்கள் மலைக்குக் கீழே வந்தவுடன் அமைதி காக்கின்றனர். சலனம் மறைந்து அமைதி பிறக்கும்போது வாழ்வில் பல தெளிவுகள் பிறக்கும். இந்த அமைதியில்தான் இயேசுவை யார் என்று அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

இறுதியாக, நம் நம்பிக்கை வாழ்விலும், அன்றாட நல்வாழ்விலும் உறுதியற்ற நிலைகளும் குழப்பங்களும் தவிர்க்க முடியாதவை. ஆனால், நம்பிக்கை, பொறுமை, அமைதி நம் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் - இன்றும் என்றும்.

Friday, March 11, 2022

நிறைவுள்ளவராய்

நாளின் (12 மார்ச் 2022) நற்சொல்

நிறைவுள்ளவராய்

மலைப்பொழிவின் சுருக்கமாக இயேசு தன் சீடர்களுக்கு வழங்கும் அறிவுரை நிறைவுள்ளவர் ஆதல் (காண். மத் 5:43-48). 'விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள்' என அறிவுறுத்துகிறார் இயேசு. உங்கள் செயல்களைப் பொருத்து உங்கள் இலக்குகளை இறக்கிக் கொள்வதற்குப் பதிலாக, இலக்கை உயர்;த்திக் கொண்டு உங்கள் செயல்களையும் உயர்த்துங்கள் என்பது இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.

பகைவரிடமும் அன்பு கூர்வதும், துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல் செய்வதும் விண்ணகத் தந்தையின் மக்களாக சீடர்களை மாற்றுகிறது. 

மற்றவர்களின் இருத்தல் மற்றும் இயக்கத்தைப் பொருத்து கதிரவனும் மழையும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை. எல்லார் மேலும் அடிக்கும் வெயிலாக, எல்லார்க்கும் பெய்யும் மழையாகக் கடவுள் நம் மேல் கடந்து செல்கின்றார்.

அப்படி இருக்க, நம் அன்பு மட்டும் ஏன் மற்றவர்களின் இருத்தல் மற்றும் இயக்கத்தைப் பொருத்து அமைய வேண்டும்?

பாகுபாடு காட்டாத, பகுத்துப் பார்க்காத, தீர்ப்பிடாத அன்பு இருந்தால் எத்துணை நலம்.

'நிறைவு' என்னும் பதத்தை 'தூய்மை' என மொழிகிறார் மோசே (காண். முதல் வாசகம், இச 26:16-19). ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள் அவரால் உயர்த்தப்படுவர் என்பது மோசேயின் ஆறுதல் மொழியாக இருக்கிறது. 


Thursday, March 10, 2022

சிறந்த நெறி

நாளின் (11 மார்ச் 2022) நற்சொல்

சிறந்த நெறி 

தன் சீடர்களின் நெறி மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களின் நெறியை விடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என முன்மொழியும் இயேசு, முதல் ஏற்பாட்டுச் சட்டம் ஒன்றை எடுத்து அதன் அறத்தை நீட்டுகின்றார். கொலை என்ற செயலை மையமாக வைத்திருந்த சட்டத்தின் பின்புலத்தில் கோபம் கொள்தலை அறவே தவிர்க்குமாறும், எந்நிலையிலும் உறவைத் தக்க வைக்குமாறும் அறிவுறுத்துகின்றார். 

வெளிப்புறத்தில் காணும் செயலை மட்டும் காண்பதை விடுத்து, அதைத் தூண்டுகின்ற காரணி அல்லது மனப்பாங்கை ஆய்வு செய்ய அழைக்கிறது இயேசுவின் அறிவுரை.

நீதி என்னும் வழியை விடுத்து, இரக்கம் என்னும் வழியைப் பற்றிக்கொள்ள அழைக்கின்றார் இயேசு.

வாழ்வின் பல தளங்களில் நாம் நீதியின்படி நடக்க விரும்புகின்றோம். ஆனால், நீதிiயும் மிஞ்சிய இரக்கம் என்னும் அளவுகோல் நம் உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு உதவுகிறது.

இதுவே சிறந்த நெறி.

இதையே திருப்பாடல் ஆசிரியரும், 'ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ... நீரோ மன்னிப்பு அளிப்பவர் ... பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது' (திபா 130) என்று பாடுகின்றார்.

Wednesday, March 9, 2022

கேட்போர் எல்லாரும்

நாளின் (10 மார்ச் 2022) நற்சொல்

கேட்போர் எல்லாரும்

'என் செபத்தை இறைவன் கேட்பதில்லை' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நாமும் சில நேரங்களில் இதையே சொல்கின்றோம். 

'கடவுள் அவருக்கு உரிய நேரத்தில் அதைக் கொடுப்பார்' அல்லது 'கடவுள் காலம் தாழ்த்துகிறார் எனில் அது நம் நன்மைக்காகவே' அல்லது 'கடவுள் உன் நற்செயல்களுக்கு ஏற்றாற்போல்தான் உன் செபத்தைக் கேட்பார்' என்று நிறைய பதில்களையும் நாம் கேட்கின்றோம்.

'கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மிகவும் உறுதியாகக் கூறுகின்றார். 

'கேட்டல்' என்பது 'வேண்டுதல்' அல்ல, மாறாக, 'செவிகொடுத்தல்' என்று சிலர் இதற்கு விளக்கம் தருவதுண்டு.

இயேசுவின் இக்கூற்றை எப்படிப் புரிந்துகொள்வது?

(அ) எது வேண்டும் என்ற தெளிவு உள்ளவர்தான் கேட்க முடியும். அல்லது நாம் ஒன்றை வரையறுத்துக் கேட்கின்ற போது அதைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. எனக்கு எது வேண்டும் என்ற வரையறையும் தெளிவும் இல்லாத போது நான் எப்படி இறைவேண்டல் செய்ய முடியும்?

(ஆ) கடவுள் என் தந்தை என்றும், நான் அவருடைய மகன் அல்லது மகள் என்ற நிலையிலும் கேட்க வேண்டும். ஆக, என் உறவுநிலை சரியாக இருக்க வேண்டும்.

(இ) கடவுளின் நன்மைத்தனம் மனிதர்களின் நற்குணத்தை விட மேலானது என்பதை உறுதியுடன் ஏற்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் இளவரசி எஸ்தர் ஆண்டவராகிய கடவுளை நோக்கி மன்றாடுகின்றார். கடவுளும் அவருடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்கின்றார்.

இறைவனிடம் கேட்போம்! இறைவனைக் கேட்போம்! இறைவன்சொல் கேட்போம்! இறைவேண்டலில்!


Sunday, March 6, 2022

சின்னஞ்சிறியோரின் கடவுள்

நாளின் (7 மார்ச் 2022) நற்சொல்

சின்னஞ்சிறியோரின் கடவுள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், மத்தேயு நற்செய்தியாளர் எழுதியபடி இறுதிநாள்கள் நிகழ்வுகளை வாசிக்கின்றோம். 

பசித்திருக்கும், தாகம்கொண்டுள்ள, அந்நியராய் நிற்கும், ஆடை இல்லாத, நோயுற்றிருக்கும், சிறையில் இருக்கும் சின்னஞ்சிறியவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றார் இயேசு. 

இவ்வாறாக, கடவுள் நம் வலுவின்மையில் பங்கேற்கின்றார். வலுவின்மையில் இருப்பவர்களுடன் நம் உடனிருப்பைக் காட்டுமாறு நம்மைத் தூண்டுகின்றார்.

முதல் வாசகத்தில், தூயோராய் இருக்குமாறு இஸ்ரயேல் மக்களை அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள்.

தூய்மை என்பது வலுவற்றவர்களைத் தாங்கி நிற்பதே.


Saturday, March 5, 2022

செயல் என்பதே சொல்

தவக்காலம் முதல் ஞாயிறு

இணைச்சட்ட நூல் 26:4-10 உரோமையர் 10:8-13 லூக்கா 4:1-13

செயல் என்பதே சொல்

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனில் புதிய செயலி (ஆப்) ஒன்றை நிறுவும்போது, கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் நமக்கு ஒரு ஃபார்மைத் தந்து, 'ஏற்றுக்கொள்கிறேன்' அல்லது 'நிராகரிக்கிறேன்' என்ற தெரிவுகளை முன்வைக்கிறது. 'ஏற்றுக்கொள்கிறேன்' என்று டச் செய்தவுடன் செயலி நம் ஃபோனுக்குள் வருகிறது. புதிய மின்னஞ்சல் முகவரி, புதிய டுவிட்டர் அல்லது வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கும்போதும் நாம் இத்தகைய ஃபார்ம்களை வாசிக்காமல் 'ஏற்றுக்கொள்கிறோம்.' எல்லாம் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையால்தான். இல்லையா? வங்கியில் நாம் இடும் கையெழுத்து, புதிய கணக்கு அல்லது புதிய வைப்பு நிதி, அல்லது வரி விலக்கு படிவங்களில் நாம் இடும் கையெழுத்துக்கள் அனைத்தும் நம்பிக்கையால்தான்!

திருமணத்தில் கணவனும், மனைவியும், 'இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து' என்று சொல்லும் வாக்குறுதியும், அருள்பணி நிலை ஏற்கும் இனியவர், 'இதோ! வருகிறேன்!' என்று சொல்லும் முன்வருதலும், 'இறைவனின் துணையால் விரும்புகிறேன்' என்று சொல்வதும், 'வாக்களிக்கிறேன்' என்று வாக்குறுதி கூறுவதும் நம்பிக்கையால்தான்.

ஆக, நம் அன்றாட வாழ்வில் சாதாரண செயலியை பதிவிறக்கம் செய்வதிலிருந்து, வாழ்க்கைத் தெரிவுகள் வரை நிறைய நிலைகளில் நாம் 'ஆம்' என்று அறிக்கை செய்கின்றோம். இந்த ஆம் என்ற வார்த்தையின் பின்னால் இருப்பது 'நம்பிக்கை' என்ற அந்த ஒற்றைச் சொல். மேலும், இவ்வாக்குறுதிகள் பெரும்பானவற்றை நாம் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். நாம் 'ஆம். ஏற்றுக்கொள்கிறேன்' என்று அறிக்கையிடும்போது, அந்த அறிக்கை நமக்கு சில உரிமைகளைப் பெற்றுத்தருகிறது. செயலியைப் பயன்படுத்தி எல்லாரோடும் உரையாடுவதே அவ்வுரிமை. அதே போல, திருமணத்திலும், துறவறத்திலும் உரிமைகள் உண்டு. உரிமைகளோடு சேர்ந்து கடமைகள் இருந்தாலும், உரிமைகள் இவ்வறிக்கை வழியாக நமக்குக் கொடையாகக் கிடைக்கின்றன. 

ஆக, மனிதர்கள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகளே நமக்கு இவ்வளவு உரிமைகளைப் பெற்றுத்தருகிறது என்றால், கடவுள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகள் நமக்கு இன்னும் உரிமைகளைப் பெற்றுத்தரும் என்ற செய்தியைத் தருகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. நம்பிக்கையால் நாம் அறிக்கையிடும்போது நம் நம்பிக்கை தொடர் வலுப்பெறுகிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். இச 26:4-10), இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற வாரங்களின் திருவிழா அல்லது முதற்கனிகள் திருவிழாவின் பின்புலத்தில் அமைந்திருக்கிறது. இந்த நாளில்தான் இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களுக்குக் கொடையாக வழங்கிய நிலத்திற்காகவும், அவரின் சட்டத்திற்காகவும், சீனாய் மலையில் அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்காகவும் நன்றிகூறுகின்றனர். தன் நிலத்தின் பலன்களையும் கனிகளையும் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வருகின்ற இனியவர் ஆலயத்தின் முகப்பில் அவற்றை வைக்க வேண்டும். ஆலயத்தில் இருக்கும் குரு அக்கூடையை எடுத்துக்கொண்டு போய் பீடத்தின்முன் வைப்பார். அந்த நேரத்தில், இந்த இனியவர் பின்வரும் நம்பிக்கை அறிக்கையைச் செய்ய வேண்டும்: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு ... இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்.' கடவுள் இஸ்ரயேல் மக்களை ஓர் இனமாக, நாடாக உருவாக்கிய மூன்று நிகழ்வுகள் இந்த அறிக்கையில் அடிக்கோடிடப்படுகின்றன: ஒன்று, 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை' அல்லது 'நாடோடியான தந்தை' - இது ஆபிரகாமையும் மற்ற குலமுதுவர்களையும் குறிக்கிறது. இவர்கள் நாடோடிகளாக இருந்தனர். இவர்களைக் கடவுள் தெரிந்துகொள்கிறார். இரண்டு, விடுதலைப் பயணம். எகிப்தில் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் கடவுள், பல அருஞ்செயல்களை நிகழ்த்தி, தம் வலிய புயத்தால் அவர்களை வழிநடத்துகின்றார். மூன்று, பாலும் தேனும் பொழியும் நாடு. இஸ்ரயேல் மக்களின் மூதாதையருக்கு நிலத்தை வாக்களித்த கடவுள், பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் குடியேற்றுகின்றார். 

ஆக, முதற்கனிகளை ஆண்டவராகிய கடவுளுக்கு அர்ப்பணிக்க அவரின் இல்லம் வரும் இனியவர் இந்த நம்பிக்கை அறிக்கையைச் சொல்லும்போது, அல்லது கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, தன் இருப்பும், தன் இயக்கமும் கடவுளின் கொடை அல்லது கடவுள்தந்த உரிமை என்பதை அறிக்கையிடுகிறார். ஆக, சாதாரண நாடோடி இனத்தை ஓர் இனமாக, நாடாகக் கட்டி எழுப்பியது ஆண்டவரின் அருளே. அவரின் அருளே இவர்களைத் தெரிவு செய்து, விடுதலை செய்து, நாட்டில் குடியமர்த்தியது. எனவே, முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து இவ்வறிக்கை செய்தனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 10:8-13), 'மீட்பு எல்லாருக்கும் உரியது' என்று பவுல் இறையியலாக்கம் செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் எப்படி மீட்பு பெறுகிறார்? என்ற கேள்விக்கு பவுல் இரண்டு வழிகளைச் சொல்கின்றார். ஒன்று, 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இரண்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நம்புதல். இங்கே, வாயார அறிக்கையிடுதலும், உள்ளார நம்புவதலும் இணைந்தே செல்கின்றன. 

முதலில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இதைப் பவுலின் சமகாலத்துச் சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவின் சமகாலத்தவரைப் பொருத்தமட்டில், குறிப்பாக அவரை எதிர்த்தவர்களைப் பொருத்தமட்டில், அவர் ஒரு தோல்வி. உரோமையர்களால் சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஒரு குற்றவாளி. இந்தப் பின்புலத்தில், 'இயேசுவே ஆண்டவர்' என பொதுவான இடத்தில் அறிக்கையிடுவது நம்பிக்கையாளருக்கு அவ்வளவு எளிய காரியம் அல்ல. ஏனெனில், 'குற்றவாளி' எனக் கருதப்படும் ஒருவரை, 'ஆண்டவர்' (அதாவது, 'கடவுள்') என எப்படி அறிக்கையிட முடியும்? யூதர்கள் தங்களுக்கு யாவே தவிர வேறு ஆண்டவர் இல்லை என நம்பினர். ஆக, அவர்கள் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். புறவினத்தார்கள் - குறிப்பாக, உரோமையர்கள் - தங்களுக்கு சீசரே ஆண்டவர் என நம்பினர். அவர்களும் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். இவ்வாறாக, அறிக்கையிடும் நம்பிக்கையாளர் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும். இந்த அறிக்கைக்காக அவர் தண்டிக்கவும் கொலைசெய்யவும் படலாம். துணிச்சல் கொண்டிருக்கும் ஒருவரே இவ்வறிக்கை செய்ய முடியும். இரண்டாவதாக, இறந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என மனதார நம்புதல். மனது என்பது மூளை செயலாற்றும் இடம் என்றும், மனிதர்கள் முடிவுகளையும், தெரிவுகளையும் எடுக்கும் இடம் என்று கருதப்பட்டது. ஆக, ஒருவர் தன் முழு அறிவாற்றலோடு இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டும். மேலும், அவரின் இத்தெரிவு அவரின் வாழ்க்கையின் போக்கையும் மாற்ற வேண்டும். 

இவ்வாறாக, இயேசுவை நம்பி, அந்த நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும்போது, மீட்பு என்னும் உரிமையைப் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 4:1-13), இயேசுவின் சோதனைகளை லூக்கா பதிவின்படி வாசிக்கின்றோம். யோர்தானில் திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் நிரப்பப் பெற்ற இயேசு, அதே தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்திற்கு முன் இந்த இரண்டு முக்கியான நிகழ்வுகள் அவரின் வாழ்வில் நடக்கின்றன: ஒன்று, அவரின் திருமுழுக்கு. இரண்டு, அவரின் பாலைவனச் சோதனைகள். திருமுழுக்கு நிகழ்வில், வானத்திலிருந்து (கடவுளின்) குரல், 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (காண். லூக் 3:22) என்று ஒலிக்கிறது. இவ்வாறாக, தான் யார் என்பதையும், தன்னுடன் கடவுள் என்னும் தன் தந்தை இருக்கிறார் என்பதையும் இயேசு இந்த நிகழ்வில் அனுபவிக்கிறார். இந்த அனுபவத்தை அவர் நம்பிக்கை அறிக்கை செய்ய வேண்டும். அல்லது தன் தந்தையாகிய கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒரு அறிக்கை செய்ய வேண்டும். 

இயேசுவின் நம்பிக்கை அறிக்கையைத்தான் நாம் அவரின் பாலைவனச் சோதனைகள் நிகழ்வில் வாசிக்கிறோம். கடவுளின் திட்டங்களையும் நோக்கங்களையும் சீர்குலைக்க நினைக்கும் அலகை மூன்று நிலைகளில் இயேசுவைச் சோதிக்கிறது. கடவுளின் பணிகளை இயேசுவைச் செய்யவிடாமல் தடுக்கும் அலகையின் முயற்சியே இது.

முதலில், அலகை, 'கல் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்று இயேசுவுக்குச் சவால்விடுகிறது. ஒருவேளை இயேசு கல்லை அப்பமாக்கியிருந்தால், தன் பசியைத் தீர்த்துக்கொள்ள, அல்லது தன்னலத்திற்காக கடவுளின் வல்லசெயலாற்றும் கொடையைப் பயன்படுத்தியதுபோல ஆகிவிடும். 'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல ...' (காண். இச 8:3) என்று மறைநூல் வாக்கைச் சுட்டிக்காட்டி, இயேசு சவாலை மறுக்கிறார். இவ்வாறாக, இயேசு, தன்னுடைய ஆற்றலைக் கடவுளின் திருவுளத்திற்காகவும், கடவுளின் நோக்கங்களுக்காகவுமே பயன்படுத்துவேன் என்று தெளிவாக அறிக்கையிடுகின்றார்.

இரண்டாவது சோதனையில், அலகை, இயேசு தன்னை வணங்கினால் உலகின்மேல் முழு அதிகாரத்தையும் வழங்குவதாகச் சொல்கிறது. இங்கே, இயேசு தன் தலைவர் யார் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும் - அலகையா? கடவுளா? யாருக்குப் பணிவது? மறைநூலை மறுபடி மேற்கோள் காட்டும் இயேசு - 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக!' (காண். இச 6:13) - அவரின் தெரிவு கடவுள் மட்டுமே என்று அறிக்கையிடுகின்றார்.

இறுதிச் சோதனை கடவுளின் பெயர் தங்கியிருக்கும் எருசலேம் ஆலயத்தின் உச்சியில் நடைபெறுகிறது. அலகை, இப்போது தானே மறைநூலை மேற்கோள் காட்டி - 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு ... அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்' (காண். திபா 91:11-12) - இயேசு, கடவுள் மேல் உள்ள நம்பிக்கையைச் சோதிக்கும் பொருட்டு, அவரை உச்சியிலிருந்து கீழே குதிக்குமாறு சோதிக்கிறது. மறைநூலில் தான் சொன்ன வார்த்தைக்குக்குக் கடவுள் பிரமாணிக்கமாக இருக்கிறாரா என்று பார்! என்று இயேசுவிடம் சொல்வதாக அமைகிறது இச்சோதனை. இயேசுவின் மனத்தில் சந்தேகத் துளியை விதைக்க நினைக்கிறது அலகை. ஏனெனில், இந்த நம்பிக்கையால்தான் இயேசு தன் வாழ்வின் பணி, பாடுகள், மற்றும் இறப்பை எதிர்கொள்ளவேண்டும். 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' (காண். இச 6:16) என்று சொல்லி, கடவுள்மேல் தான் கொண்டுள்ள நம்பிக்கையில் சந்தேகம் இல்லை என்றும் உறுதிகூறுகிறார் இயேசு.

இம்மூன்று சோதனைகள் வழியாக, இயேசு, கடவுளின் பணியைச் செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தது அலகை. ஆனால், கடவுள் மேல் தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில், தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகிறார் இயேசு. இவற்றின் வழியாக இயேசு தன் நம்பிக்கை, அர்ப்பணம், மற்றும் மனவுறுதியைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் இந்த நம்பிக்கை அறிக்கை அவரின் பொதுவாழ்வைத் தொடங்க உரிமையளிக்கிறது. இயேசுவும் தன் பணியை உடனே தொடங்குகிறார் (காண். லூக் 4:14-15).

இவ்வாறாக, முதல் வாசகத்தில், இஸ்ரயேலர் இனியவர் ஒருவர், முதற்கனிகள் திருநாளில் கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் தான் பெற்ற கொடைகளுக்காக அவர்மேல் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார். இரண்டாம் வாசகத்தில், ஒருவர் இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையால் செய்யும் அறிக்கை அவருக்குக் கடவுளின் மீட்பைப் பெற்றுத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் தந்தையின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகின்றார். ஆக, நம்பிக்கை அறிக்கையும், நம்பிக்கையால் அறிக்கையிடுதலும் இம்மூன்று வாசகங்களிலும் இணைந்தே செல்கின்றன.

நாம் இன்று நம் நம்பிக்கையை அல்லது நம் நம்பிக்கையால் எப்படி அறிக்கையிடுவது?

1. ஒரே மனநிலை - கூடை நிறையும்போதும், வயிறு பசிக்கும்போதும்

இன்றைய இறைவார்த்தை வழிபாடு இரண்டு வகை மனநிலைகளைப் பிரதிபலிக்கிறது. நாம் முதல் வாசகத்தில் சந்திக்கும் இஸ்ரயேலர் இனியவர் பெரிய கூடையில் முதற்கனிகள் நிறையக் கடவுளின் முன்னிலையில் நிற்கிறார். நற்செய்தி வாசகத்தில் ஒன்றுமே இல்லாத பாலைநிலை வெறுமையில் பசித்த வயிறாய் இயேசு இருக்கிறார். இந்த இரண்டுபேருமே கடவுளை நம்புகின்றனர். அந்த நம்பிக்கையில் அவரைப் பற்றியும், அவரின் அருஞ்செயல்கள் பற்றியும் அறிக்கையிடுகின்றனர்.  ஆக, நம் கைகள் நிறைய விளைச்சலும், நிலத்தின் பலனும் இருந்தாலும், அல்லது வயிறு பசித்திருந்தாலும் நம் மனநிலை ஒன்றாக இருக்க வேண்டும். அந்த மனநிலை நம் நம்பிக்கையால் வடிவம் பெற வேண்டும். நம் கைகள் நிறையப் பலன் இருக்கும்போது கடவுளை நம்புவதும், அவரைப் பற்றி அறிக்கையிடுவதும் எளிது. ஆனால், வயிறு பசித்திருக்கும்போது மிகக் கடினம். 

2. ஒரே மனநிலை - ஆலயத்திலும் பாலைவனத்திலும்

முதல் வாசகத்தில் அறிக்கை ஆலயத்திலும், நற்செய்தி வாசகத்தில் அறிக்கை பாலைவனத்திலும் நடக்கிறது. ஆலயத்தில் எல்லாம் இனிமையாக இருக்கும். நம் மனம் ஒருமுகப்படும். அமைதியாக இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் நல்லதே நினைப்பார்கள். எல்லாரும் அருகிருப்பார்கள். ஆனால், பாலைவனம் அப்படியல்ல. அங்கே தனிமை இருக்கும். நம் மனம் அலைபாயும். நம்மைச் சுற்றி அலகை மட்டுமே இருக்கும். நம் வீழ்ச்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் அலகை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நம்பிக்கை அறிக்கை அவசியம்.

3. ஒரே மனநிலை - நம் வேர்களை நினைக்கும்போதும் நம் கிளையைப் பரப்பும்போதும்

முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் இனியவர் தன் வேர்களை நினைத்துப் பார்க்கிறார். தன் தந்தை ஒரு நாடோடி என்று சொல்வதன் வழியாக, இருக்க இடமற்ற, உண்ண உணவற்ற, உடுக்க உடையற்ற தன் நொறுங்குநிலையை ஒரே நொடியில் நினைத்துப்பார்க்கிறார். ஆக, இன்று கனிகள் கைகளை நிறைத்தாலும் ஒரு காலத்தில் தான் ஒரு வெறுமையே என்று உணர்கிறார். அதே போல, இயேசுவும் தான் பெற்ற திருமுழுக்கில் தன் வேர்களைப் பதித்து, இறையாட்சி என்ற இலக்கை நோக்கிக் கிளைபரப்புகிறார். இந்த இரண்டு நிலைகளிலும் நம்பிக்கை அறிக்கை நடந்தேறுகிறது.

இறுதியாக, இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வதுபோல, நாம் அறிக்கையிடும் எல்லா வார்த்தைகளும் - அது கடவுள்முன் என்றாலும், ஒருவர் மற்றவர்முன் என்றாலும், எனக்கு நானே என்றாலும் - செயல்வடிவம் பெற வேண்டும். நிறைவேற வேண்டும். அந்தச் செயலின் ஊற்று நம்பிக்கை. நம்பிக்கையே செயலாகும்போது, நம்பிக்கை என்ற சொல்லின் பொருள் புரியும். ஏனெனில், 'செயல்' என்பதே 'சொல்.'