Monday, August 31, 2020

வாயை மூடு

இன்றைய (1 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 4:31-37)

வாயை மூடு

தொலைக்காட்சியில் 'சென்டர் ஃப்ரெஷ்' என்ற சவ்வு மிட்டாய்க்கு வரும் விளம்பரத்தில், 'வாய்க்கு போடும் பூட்டு' என்ற வரிகள் வருவதுண்டு.

வாய்க்குப் பூட்டுப் போடுதல் நலமே என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இயேசு நாசரேத்திலிருந்து கப்பர்நாகூம் வருகின்றார். அவருடைய முதல் அறிகுறி தீய ஆவியை விரட்டுவதாக இருக்கிறது. 

இந்த நிகழ்வில், 'பேச்சும்' 'அமைதியும்' மாறி மாறி வருகிறது.

இயேசுவைப் பார்க்கின்ற தீய ஆவி, 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' எனப் பேசுகிறது.

அதைக் கேட்ட இயேசு பேசுகிறார். 'பேசாதே!' எனப் பேசுகின்றார்.

தீய ஆவி வெளியேறுகிறது.

அங்கிருந்த எல்லாரும், 'எப்படிப் பேசுகிறார் பாருங்கள்!' என்று பேசுகின்றனர்.

பின்னர், இயேசுவைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவுகின்றது.

இந்த நிகழ்வில் இயேசு தீய ஆவியின்மேல் அதிகாரம் கொண்டவராக விளங்கினார் என்பது தெளிவாகிறது.

'வெளியே போ!' என்றவுடன் தீய ஆவி வெளியேறுகிறது.

ஏன் இயேசு தீய ஆவியை வெளியேற்ற வேண்டும்?

தீய ஆவி சரியாகத்தானே பேசியது: 'நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.'

இயேசுவின் சொந்த ஊரார்கூட இப்படிப் பேசவில்லையே?

இதில் ஒன்று தெளிவாகிறது. அதாவது, பேய்கூட நம்பிக்கை அறிக்கை செய்கிறது. அல்லது நம்பிக்கை அறிக்கை செய்தாலும் ஒருவர் பேயாக இருக்க முடியும்.

இயேசு தன்னைப் பற்றிய அடையாளம் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்பதால் பேயைக் கடிந்து கொள்கிறாரா அல்லது பேயின் அறிக்கை வெற்று அறிக்கை என்பதால் அதைக் கடிந்துகொள்கிறாரா என்பது தெரியவில்லை.

இந்த நிகழ்வை நம் வாழ்க்கைக்கான பாடம் என்ற அடிப்படையில் பார்த்தால் மூன்று விடயங்கள் புரிகின்றன:

(அ) நான் எவ்வளவு பெரிய உண்மையை அறிந்திருந்தாலும், நான் யார் என்பதைப் பொருத்தே அந்த உண்மைக்கு வலிமை இருக்கிறது. இயேசு கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்ற உண்மை பேய்க்குத் தெரிந்திருந்தது. ஆனால், அது பேய் என்பதால் அது சொன்ன உண்மைக்கு வலிமை இல்லை. ஏனெனில், 'என்ன அழகாகப் பேசுகிறது!' என்று பேயை யாரும் வியந்து பாராட்டவில்லை.

(ஆ) எனக்கு மிகப்பெரிய உண்மை தெரிந்திருந்தாலும், தேவையற்ற இடத்தில் அதை நான் பேசினால் நான் வெளியேற்றப்படுவேன். அல்லது அவமதிக்கப்படுவேன். மொத்தத்தில், நான் வாயை மூடக் கற்றுக்கொள்வது மிக அவசியம். பேய் தன் வாயை மூடியிருந்தால் அது ஒருவேளை தப்பித்திருக்கும்.

(இ) வார்த்தைக்கு அதிகாரம் உண்டு என்பதால், நான் வார்த்தையை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது. 'நான் பல நேரங்களில் என் வார்த்தையை நினைத்து வருந்தியிருக்கிறேனே தவிர, என் மௌனத்தை நினைத்து ஒருபோதும் வருந்தியதில்லை' என்கிறார் அறிஞர் ஒருவர். 

வாயை மூடுதல் ஒரு கலை.

அந்தக் கலையை நாமே கற்றுக்கொள்ளாத போது, வாழ்க்கை, நம் தலையில் குட்டு வைத்துக் கற்றுக்கொடுக்கிறது.

Sunday, August 30, 2020

ஏவலரிடம் கொடுத்துவிட்டு

இன்றைய (31 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (லூக் 4:16-30)

ஏவலரிடம் கொடுத்துவிட்டு

இன்று முதல் நாம் லூக்கா நற்செய்தியிலிருந்து வாசிக்கவிருக்கிறோம். இயேசு தன் பணியை நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்திலிருந்து தொடங்குகிறார். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா!' என ஆச்சரியப்படுகின்ற மக்கள்திரள், கொஞ்ச நேரத்தில், இயேசுவின் மேல் சீற்றம் கொண்டு அவரைக் கொன்றுவிட முடிவெடுக்கின்றனர்.

'தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன!' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.

எல்லாருடைய கண்களும் நம்மைப் பார்த்தல் நம்மில் இருவகை உணர்வுகளை ஏற்படுத்தும்: ஒன்று, பெருமிதம், இரண்டு, வெட்கம்.

எடுத்துக்காட்டாக, நான் ஒரு பள்ளியின் தலைமையாசிரியையாக இருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். ஆண்டு விழா அன்று, அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வில், பள்ளி முழுவதும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் நிரம்பி வழிய, நாம் மைக் அருகில் சென்றவுடன், அனைவரின் கண்களும் நம்மேல் பதியும். அங்கே நமக்குப் பெருமித உணர்வு வரும். ஆனால், அதே வேளையில், நாம் ஏதாவது தவறு செய்தாலும், அல்லது வித்தியாசமாகச் செய்தாலும் எல்லாருடைய கண்களும் என்மேல் படும். அங்கே, எனக்குள் ஒருவகையான வெட்க உணர்வு வரும். இயேசுவுக்கு, தன் சொந்த ஊரில் இவ்விரு உணர்வுகளும் கலந்து எழ வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், சொந்த ஊருக்குச் செல்கின்ற எந்த அருள்பணியாளரும் இவ்விருவகை உணர்வுகளையும் பெறுவார்.

இயேசுவின் மேல் கண்கள் ஏன் பதிந்தன?

அவர் இறைவார்த்தையை வாசித்ததால் இருக்கலாம். அதாவது, அவர் எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருக்கிறார். அதனால் அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

அல்லது, அவர் வாசித்த இறைவார்த்தைப் பகுதி வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். திருச்சட்டம் அல்லது திருப்பாடலைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, இறைவாக்குப் பகுதியைத் தெரிவு செய்கிறார். அல்லது அவருக்கு அது எதார்த்தமாகக் கொடுக்கப்படுகிறது.

இதைவிட முக்கியமான காரணம் ஒன்றை லூக்கா பதிவு செய்கிறார்:

'(வாசித்த) பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்'

இயேசுவின் இச்செயல் நம் கவனத்தையும் ஈர்க்கிறது.

யார் இந்த ஏவலர்?

இயேசு யாரிடமிருந்து ஏட்டை வாங்கினார் என்பதை லூக்கா பதிவுசெய்யவில்லை. ஏனெனில், அதை அவருக்கு வழங்கியவர் அங்குள்ள ரபி அல்லது போதகராகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ரபி மட்டுமே திருச்சட்டத்தை வலப்புறத்திலிருந்து எடுத்து வந்து கொடுக்க முடியும் என மோசேயின் சட்டம் சொல்கிறது (காண். இச 33:2).

ஏவலர் அச்சுருளைத் துடைத்து வைப்பவராக அல்லது அதற்கு மேல் துணி போர்த்தி வைப்பவராக, அல்லது அதை ஒழுங்குபடுத்துபவராக இருக்கலாம். மேலும், தொழுகைக்கூடத்தைத் திறப்பதும், தூய்மைப்படுத்துவதும், இருக்கைகளை ஒழுங்குபடுத்துவதுமே அவருடைய வேலையாக இருந்திருக்கலாம். ஆக, திருச்சட்டத்தை அவர் துடைப்பதற்கன்றி வேறு எதற்கும் தொட முடியாதவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரின் கைகளில் இயேசு ஏட்டுச்சுருளைக் கொடுக்கிறார். இயேசுவின் இந்தச் செயல் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் மக்கள் நடுவில் ஏற்படுத்தியிருக்கும்.

ஏனெனில், இயேசு மற்றவர்கள்போல் செயல்படவில்லை!

அல்லது அவர் பாரம்பரியத்தையும் மரபையும் மீறி விடுகிறார்!

'ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று இயேசு சொன்ன அடுத்த நிமிடமே, 'நற்செய்தியை' ஏவலரிடம் கொடுக்கிறார். ஏவலர் பணத்தில் ஏழையாக இருக்கத் தேவையில்லை. ஆனால், அதிகாரம் என்ற ஏழ்மையில் இருக்கிறார் அவர். அவரை ஆற்றல்படுத்துகிறார் இயேசு.

தான் பேசியதை உடனே வாழ்ந்து காட்டுகிறார் இயேசு.

இயேசுவின்மேல் பதிந்த கண்கள் கண்டிப்பாக அந்த ஏவலர்மேலும் பதிந்திருக்கும்.

ஏனெனில், அதுவரை அவரை ஒரு 'அதுவாக' மட்டுமே பார்த்திருந்தனர்.

கண்கள் பதிய வேண்டுமெனில், கண்கள் திறக்கப்பட வேண்டும்.

இரண்டு கேள்விகள்:

(அ) இன்று என் கண்கள் இயேசுவின் மேல் பதிகின்றனவா?

(ஆ) என்னருகில் இருக்கும் வலுவற்றவர்களை என்னால் ஆற்றல்படுத்த முடிகிறது?


Saturday, August 29, 2020

கடவுளை 'unfriend' செய்வது


ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

I. எரேமியா 20:7-9 II. உரோமையர் 12:1-2 III. மத்தேயு 16:21-27

கடவுளை 'unfriend' செய்வது

நண்பர்களை நீக்குதல் - இன்று மிக எளிதான செயல்!

நம் கைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் நண்பர்களை நீக்குவதை எளிதாக்கியதுடன், 'நண்பர்களை நீக்கிவிடவா?' என்று நம்மிடம் அடிக்கடி கேட்கின்றன. நமக்கு வரும் மின்னஞ்சல்கள், அழைப்புகள், குறுஞ்செய்திகள், அறிவிப்புகள் என அனைத்தையும் நாம் 'ப்ளாக்' செய்வதுடன், அப்படி அனுப்புபவர்களை நாம் 'அன்ஃப்ரண்ட்' செய்யவும் முடியும். 

நீண்டகால அர்ப்பணமும் அந்த அர்ப்பணத்தோடு வரும் தியாகமும் இன்றைய உலகத்திற்குப் பிடிக்காத ஒன்றாகிவிட்டது.

தன்மேம்பாடு பற்றிப் பேசுகின்ற உளவியல் மற்றும் மேலாண்மையியல் காணொளிகள், 'அடுத்தவரை நம் வாழ்விலிருந்து நீக்குவதையும், அடுத்தவர்கள் நமக்குச் சுமையாக மாறிவிட்டால் அவர்களை அகற்றிவிடுவதையும், இந்த ஒரே வாழ்க்கையை நாம் தனியாக, இன்பமாக வாழ வேண்டும்' என்றும் கற்றுக்கொடுக்கின்றன. இத்தகைய தன்மையப் போக்கினால் இன்று நட்பு வட்டங்கள் மட்டுமல்ல, குடும்ப உறவுகளும் மிகவே சுருங்கிவிட்டன. உறவினர்கள் இணைந்து உருவாக்கும் வாட்ஸ்ஆப் குழுவிலும், ஒருவர் மற்றவரை, 'ப்ளாக்' செய்துவைக்கும் வழக்கம் பல இடங்களில் இருக்கிறது. 

இன்னொரு பக்கம், இந்த உலகம் நமக்கு நிறையத் தெரிவுகளை (choices) முன்வைக்கிறது. ஒரு சூப்பர் மார்க்கெட் சென்று குளிர்பானம் வாங்க நினைத்தால், ஏறக்குறைய ஒரு நீண்ட அறை முழுவதும் குளிர்பானங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எதை வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இன்று நான் விரும்புவதையே நாளை நான் வாங்க வேண்டும் என்றல்ல. என் ரசனைக்கு ஏற்றவாறு நான் மாற்றிக் கொள்ளலாம். இதே மனப்பாங்கு என் வாழ்க்கையிலும் தொடர்கிறது. உறவுகளில் புதுமை விரும்பியும், புதிய அனுபவங்களை விரும்பியும் இன்று நிறைய தம்பதியினர் ஒருவர் மற்றவரை விட்டுப் பிரிந்து இன்னொருவருடன் செல்கின்றனர். கத்தோலிக்கத் திருஅவையினரையும் இது விட்டுவைக்கவில்லை. இந்தச் சபையிலிருந்து அந்தச் சபை, அதிலிருந்து இன்னொன்று என 'ஆன்மீகச் சுற்றுலா' செல்லும் கிறிஸ்தவர்களும் இன்று நிறைய உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

அர்ப்பணம், பிரமாணிக்கம், தியாகம் - இந்த மூன்றுக்கும் நாம் தயாராக இல்லாதபோது, நம் மனித உறவுநிலைகளில் மட்டுமல்ல, கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையிலிருந்தும் தப்பி ஓடவே செய்கிறோம்.

கடவுளை நாம் நம் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிடவும், அவரிடமிருந்து தப்பி ஓடவும் விரும்புகின்றோம்.

நாம் புனிதர்கள் மற்றும் மேன்மையானவர்கள் என வணக்கம் செய்யும் அனைவரும் ஒரு பக்கம் கடவுளோடு இணைந்து, அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்ததோடு, இன்னொரு பக்கம், அவர்கள் சந்தேகங்களாலும், சோதனைகளாலும் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் தங்கள் துன்பங்களை எப்படிக் கையாண்டார்கள் என்பது பற்றியும், கடவுளிடமிருந்து தப்பி ஓட விரும்பிய அவர்கள் கடவுளோடு எப்படி மீண்டும் இணைந்தார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய முதல் வாசகப் பகுதி (காண். எரே 20:7-9), 'எரேமியாவின் கெத்சமனி' என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பஸ்கூர் என்ற குருவுக்கும் எரேமியாவுக்கும் எழும் வாக்குவாதத்தில், பஸ்கூர், எரேமியாவைத் தாக்கிச் சிறையில் அடைக்கின்றார் (காண். எரே 20:1-2). எரேமியா எருசலேமுக்கும் அதன் ஆலயத்திற்கு எதிராக இறைவாக்கு உரைத்ததற்காகவும் பஸ்கூர் அவரைத் தண்டிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பிரமாணிக்கமின்மையாலும், உடன்படிக்கை மீறுதலாலும் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதாலேயே எரேமியா அவ்வாறு இறைவாக்குரைக்கின்றார். ஆனால், அதை பஸ்கூர் விரும்பவில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கருதி அன்பு செய்த நகரமும் ஆலயமும் அழிந்துபோகும் என்ற செய்தியை, தெய்வநிந்தனையாகவும், நாட்டிற்கு எதிரான சதியாகவும் கருதினார் பஸ்கூர். தான் பிறந்த ஊருக்கு எதிராக தானே இறைவாக்குரைக்கின்ற நிலைக்கு ஆளான எரேமியா, தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ளாததோடு தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதையும் உணர்ந்து, ஆண்டவராகிய கடவுளிடம் முறையிடுகின்றார்: 'ஆண்டவரே, நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்! நானும் ஏமாந்து போனேன்!'

எருசலேம் நகரையும், நகரின் மக்களையும், ஆலயத்தையும் எரேமியா மிகவே விரும்பினார். ஆனால், தன் மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராக சிலைவழிபாடு செய்து, உடன்படிக்கையை மீறியதால் வந்த தீங்கைத் தடுக்க அவர் இயலவில்லை. மாறாக, அந்தத் தீங்கை அவரே அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றார். நகரின் அழிவைச் சொன்னாலாவது மக்கள் மனம் மாறுவார்கள் என நினைக்கிறார் எரேமியா. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவருடைய பணி தோல்வியில் முடிவதோடு, அவர் நிந்தைக்கும், அவமானத்திற்கும், சிறைத்தண்டனைக்கும், மரண தண்டனைக்கும் ஆளாகின்றார். இந்தத் தோல்வியில்தான் ஆண்டவராகிய கடவுள்முன் முறையிடுகின்றார் எரேமியா.

சிறு பிள்ளையாக இருந்தபோதே, எரேமியாவைத் தன் பணிக்கெனத் தெரிவு செய்கிறார் கடவுள். ஆனால், இளவலாக இருக்கின்ற எரேமியாவுக்கு இறைவாக்குப் பணி இப்போது கடினமாக இருக்கிறது: 'நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.' 'அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்' என்று இறைவாக்குப் பணியைத் துறக்க நினைக்கின்றார். ஆனால், அவருடைய கிணறு வறண்டுபோன அந்தப் பொழுதில் தன் உள்ளத்தில் எழும் போராட்டத்தைக் கண்டுகொள்கின்றார்: 'உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கி வைத்துச் சோர்ந்து போனேன். இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.'

ஆக, வலியும் துன்பமும், ஏமாற்றமும், சோர்வும், விரக்தியும் தன்னைச் சூழ்ந்தாலும், தன் இறைவாக்குப் பணியைத் தொடரவே விரும்புகிறார் எரேமியா.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 12:1-2), உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடலின் இறுதிப் பகுதியான அறிவுரைப் பகுதி தொடங்குகிறது. அறிவுரைப் பகுதியின் தொடக்கமாக, பவுல் இரண்டு வகை வாழ்க்கை நிலைகளை ஒப்பிட்டு, நம்பிக்கையாளர்கள் மேன்மையானதைத் தெரிவு செய்ய அழைப்பு விடுக்கின்றார். உலகப் போக்கிலான ஒழுக்கம் ஒருவகை, உடலைப் பலியாகப் படைத்தல் இன்னொரு வகை. 'உங்களைக் கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்' என்கிறார் பவுல். 'பலியாதல்' என்பது மிக முக்கியமான வார்த்தை. பலியாகின்ற ஒன்று தனக்கென எதையும் வைத்துக்கொள்ள இயலாது. பலியாக்கப்பட்ட ஒன்றை நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆக, செல்வம், பெருமை, புகழ் என உரோமை அலைந்து திரிந்த அந்தக் காலத்தில், அவற்றுக்கு மாறாக, 'பலியிடுதல்' என்னும் செயலை முன்வைக்கிறார் பவுல். மேலும், தூய்மை அல்லது புனிதத்தில் வளர்வது என்பது, தானாகவே நடக்கிற ஒரு செயல் அல்ல, மாறாக, ஒருவர் தானே தெரிவு செய்து மேற்கொள்ள வேண்டிய ஒன்று என்பது பவுலின் கருத்து. இப்படி, ஒருவர் தன்னையே பலியாகத் தருவதன் வழியாகவே, அல்லது துன்பம் ஏற்பதன் வழியாகவே, அல்லது கடவுளிடமிருந்து தப்பி ஓடாமல் இருப்பதன் வழியாகவே, 'உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைந்து, எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதை' அறிந்துகொள்ள இயலும்.

நற்செய்தி வாசகம் (காண். மத் 16:21-27) கடந்த வார வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கிறது. இயேசுவை மெசியா என அறிக்கையிட்ட பேதுரு, அந்த மெசியா நிலையானது துன்பத்தின் வழியாகவே வரும் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். 'ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்! இது உமக்கு நடக்கவே கூடாது' என ஆண்டவரிடமிருந்து விலகிக்கொள்ள நினைக்கின்றார். இந்த நேரத்தில் அவர் அப்படி இருந்தாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின், தலைமைச் சங்கத்தில் துணிந்து அனைவரையும் எதிர்கொள்கின்றார். துன்பத்திலிருந்து விலகத் துடிக்கும் பேதுருவுக்கு, துன்பத்தின் வழியாகவே சீடத்துவம் சாத்தியம் என எடுத்துரைக்கின்றார் இயேசு. 

மனித வாழ்வில் நாம் ஒருவர் மற்றவர்மேல் காட்டும் அர்ப்பணம் எந்த அளவுக்கு விலைமதிப்புள்ளதோ, அதே அளவுக்கு விலைமதிப்புள்ளது கடவுள்மேல் காட்டும் அர்ப்பணம். அல்லது அர்ப்பணத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு விலையைக் கொடுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் அர்ப்பணம் எனில், அந்த அர்ப்பணத்திற்காக நான் என் நேரம், ஆற்றல் என்னும் விலையைக் கொடுக்க வேண்டும். அல்லது என் நேரம் மற்றும் ஆற்றலை இழப்பதற்கு என்னையே கையளிக்க வேண்டும். இந்த இழப்பு தரும் துன்பத்திலிருந்து நான் விலகி நின்றால் அர்ப்பணம் எனக்குச் சாத்தியம் அல்ல.

மனித உறவுநிலைகளிலும் ஒருவர் மற்றவருக்கு இடையே உரசல் ஏற்படும்போது, அந்த வலியிலிருந்து உடனே தப்பித்து ஓடிவிட நினைக்காமல், அந்த அர்ப்பணத்தைச் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். 'நீ ஏமாற்றிவிட்டாய்! நானும் ஏமாந்துபோனேன்!' என்ற எரேமியாவின் புலம்பல் நம் உதடுகளிலும் ஒலித்தாலும், கொஞ்சம் பொறுமையோடு இறைவனின் குரலைக் கேட்பது நலம்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு விடுக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. இன்று நான் எதிலிருந்து ஓடுகிறேன்?

எனக்குத் துன்பம் தருவது எது? அல்லது நான் எதிலிருந்து என்னையே நீக்கிக்கொள்ள நினைக்கிறேன்? எனக்குத் தீங்கிழைக்க நினைக்கும் உறவு அல்லது என் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற உறவு நிலையிலிருந்து நான் விலகி நிற்பது நலம். அது அர்ப்பணத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, அது தேவையான ஒன்று. ஆனால், வலி மற்றும் துன்பத்தின் காரணமாக நான் ஒன்றிலிருந்து தப்பி ஓடினால் அது தவறு. நம் மனம் பல நேரங்களில், சரியானவற்றை விட, இன்பம் தருபவற்றையே தெரிவு செய்ய விரும்புகிறது. 

2. வலியே மாற்றத்தைக் கொண்டுவருகிறது

நம் சமூக மற்றும் அரசியல் தளங்களில், வலி அல்லது துன்பம் ஏற்றல்தான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. நம் நாட்டின் விடுதலைப் போராட்டம் அல்லது அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் போராட்டம் என அனைத்திலும், வலியே மாற்றத்தின் வினையாற்றியாக இருக்கிறது. வலி ஏற்றல் நல்லது.

3. கடவுளைப் பற்றிக் கொள்வது

'கடவுளா? அல்லது மக்களா?' என்ற உள்ளப் போராட்டம் எரேமியாவின் உள்ளத்திலும், 'உலகம் சார்ந்த செயலா? அல்லது கடவுள் சார்ந்த செயலா?' என்ற உள்ளப் போராட்டம் உரோமைத் திருஅவையினரின் உள்ளங்களிலும், 'துன்பம் வழி மெசியா நிலையா? அல்லது சிலுவையில்லாத வாழ்வியல் நிலையா?' என்ற போராட்டம் பேதுருவின் உள்ளத்திலும் எழும்போது, கடவுளை அன்ஃப்ரண்ட் செய்யும் சோதனை அவர்களில் எழவே செய்கிறது. ஆனால், அச்சோதனையை அவர்கள் வென்றெடுக்கிறார்கள் - தங்கள் பொறுமையால்!

இறுதியாக,

கடவுளிடமிருந்து நம்மையே நீக்கிக் கொள்ளும், அல்லது நம் கிணறுகள் வற்றிப் போகும் நிலை வரும்போது, இன்றைய பதிலுரைப்பாடலை (காண். திபா 63) நினைவுகூர்தல் நலம். திருப்பாடல் ஆசிரியரோடு நாமும், 'கடவுளே! நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்! உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகிறேன். நான் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டேன். உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது' எனச் சொல்ல முடிந்தால், கடவுளோடு நாம் என்றும் நண்பர்களே!


Friday, August 28, 2020

இன்றைய (29 ஆகஸ்ட் 2020) திருநாள்

இன்றைய (29 ஆகஸ்ட் 2020) திருநாள்

திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவானின் தலை வெட்டப்படும் நிகழ்வு நமக்கு அறிமுகமான நிகழ்வே. இந்நிகழ்வில் வரும் யோவான் மற்றும் ஏரோது என்னும் கதைமாந்தர்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

யோவான் ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறார்: (ஏரோதிடம்), 'உன் சகோதரன் மனைவியை நீ வைத்திருப்பது முறை அல்ல!'

எது முறை, எது முறையல்ல என்பதை அரசன்தான் தீர்மானிக்கிறான் என்பதை அறியாதவரா யோவான்? தனக்கு முறையானதைத் தானே தீர்மானிப்பதாக நினைக்கின்ற ஏரோது, யோவானைச் சிறையில் அடைக்கின்றார்.

ஏரோது ஒரு பாவப்பட்ட மனிதராகத் தெரிகின்றார். அவர் இருமணம் கொண்டவராக இருக்கின்றார். இருமனம் கொண்டிருப்பதன் ஆபத்தை அவர் நமக்கு உணர்த்துகிறார்.

(1) தன் மனைவியையும், தன் சகோதரன் மனைவியையும் தன்னோடு வைத்துக்கொள்கிறார் - திருமணத்தில் இருமனம்.

(2) யோவானைக் குறித்து ஏரோது அஞ்சிகிறார், ஆனால், சிறையில் அடைக்கிறார் - இறைவாக்கினரை ஏற்றுக்கொள்வதில் இருமனம்.

(3) யோவானின் வார்த்தைகளால் குழப்பம் அடைகிறார், ஆனால், மனமுவந்து செவிசாய்க்கிறார் - நல்ல சொல் கேட்பதில் இருமனம்.

(4) 'உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்,' என்றும், 'நீ என்னிடம் எது கேட்டாலும்' என்றும் இரு முறை வாக்குறுதி கொடுக்கின்றார் - உச்சகட்ட மகிழ்ச்சியில் உருவாகும் இருமனம்.

(5) ஏரோதியாவுக்கும், அவளுடைய மகளுக்கும் இடையே நிற்கிறார் ஏரோது - தன் கை தன் கழுத்தையே நெரிக்கும் இருமனம்.

(6) யோவானின் தலை கேட்கப்பட்டதில் தனக்கு வருத்தம் ஒரு புறம், விருந்தினர்களை மகிழ்விக்க நினைத்த உணர்வு மறு புறம் - அடுத்தவருக்காக தன் உணர்வையும் இழக்கும் இருமனம்.

இருமனம் கொண்டிருத்தலை விவிலியம் மகிவும் கண்டிக்கிறது:

'எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!' (1 அர 18:21)

'உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ, சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கி விடுவேன்' (திவெ 3:15-18)

நம் வாழ்வில் நாம் இருமனம் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் பாடுகளை அனுபவிக்கவே செய்கிறோம். இப்பாடுகளை விட ஒருமனம் கொண்டிருப்பதால் வரும் பாடுகள் மேல் - திருமுழுக்கு யோவானின் பாடுகள் போல்!


Thursday, August 27, 2020

புனித அகுஸ்தினார்

இன்றைய (28 ஆகஸ்ட் 2020) திருநாள்

புனித அகுஸ்தினார்

இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நான், இத்தாலியன் மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு மொழிபெயர்த்த, அகுஸ்தினாரின் Confessions என்னும் நூல் 'ஒப்புகைகள்' என்று கனிகிறது. இந்த நூலுக்கு அறிமுகவுரை வழங்கிய நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களுக்கும், இந்த நூலை வெளியிடுகின்ற, தமிழ் இலக்கியக் கழக இயக்குநர் பாசமிகு அருள்திரு ஜோசப் ஆரோக்கியம், சே.ச. அவர்களுக்கும் நம் நன்றிகள். இந்தப் புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள் தமிழ் இலக்கியக் கழகத்தையோ (944 34 66 276), என்னையோ (948 948 21 21) தொடர்பு கொள்ளலாம்.

நான் அகுஸ்தினாரின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அவர் என்னைப் புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் - இதுதான் எனது ஒட்டுமொத்த மொழிபெயர்ப்பு அனுபவத்தின் சுருக்கம்.

பேரிக்காய்! தன் 12ஆம் வயதில் பேரிக்காய்களைத் திருடியது தன் பசிக்காக அல்ல, மாறாக, தன் ஆசைக்காக என அறிக்கையிடும் இனியவர் ஒருவர், பசிக்கும் ஆசைக்கும், தேவைக்கும் விருப்பத்திற்கும், நன்மைக்கும் இன்பத்திற்கும் இடையே தான் பட்ட இழுபறி நிலையை எண்ணிப் பார்த்து, கட்டிலின் இன்பத்திலிருந்து தன்னாளுகைக்கும், இறுமாப்புநிறை பார்வையிலிருந்து தன்னறிவுக்கும், உலகுசார் பேரார்வங்களிலிருந்து ஆன்மீகம்சார் அமைதிக்கும் புறப்பட்டுச் செல்லும் பயணத்தின் பதிவுகளே அகுஸ்தினாரின் ஒப்புகைகள்.

அகுஸ்தினாரை மற்றும் அகுஸ்தினாரைப் பற்றி நான் வாசித்தபோது என்னைக் கவர்ந்த 33 மகாவாக்கியங்களை உங்களோடு இன்றைய நாளில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

1. கெட்டவன் ஒருவனின் அநீதியால் நீ துன்புற்றால் அவனை நீ மன்னித்துவிடு. இல்லையெனில், நீயும் அவனும் சேர்த்து இரண்டு கெட்டவர்கள் உருவாகிவிடுவார்கள்.

2. நீ மௌனமாயிருந்தாலும், பேசினாலும், அடுத்தவரைத் திருத்தினாலும், மன்னித்தாலும் அன்பே உன்னில் வேரூன்றியிருக்கட்டும்! அந்த வேரிலிருந்து நன்மை மட்டுமே வளரும். அன்பு செய்! பின்னர், நீ விரும்புவதை எல்லாம் செய்.

3. எதிர்நோக்கின் அழகிய புதல்வியர் இருவர். கோபம் மற்றும் துணிவு என்பது அவர்களது பெயர்கள். பொருள்களின் இருப்பைப் பார்ப்பதால் எழும் கோபம். அவை அப்படியே இருக்கக் கூடாது என நினைப்பதற்குத் துணிவு.

4. பயம்தான் அன்பின் எதிரி.

5. நம் நண்பர்களின் சுமைகளைச் சுமக்க நாம் நீட்டும் உதவிக்கரத்தை விட நட்பின் ஆதாரம் வேறொன்றுமில்லை. 

6. ஒழுங்கற்ற மனத்திற்கான தண்டனை அதன் ஒழுங்கற்ற தன்மையே.

7. இரக்கம் காட்டுபவர் சுதந்திரமாக இருக்கிறார். தீயவராய் இருப்பவர் அரசராக இருந்தாலும் அடிமையாகவே இருக்கிறார்.

8. நம் உள்மனத்தின் பிரதிபலிப்பே நாம் காணும் இந்த உலகம்.

9. நாம் எந்த அளவிற்கு அன்பு செய்கிறோமோ அந்த அளவிற்கு நம் அழகு வளர்கிறது. ஏனெனில், அன்பு என்பது ஆன்மாவின் அழகு.

10. நீ எந்த அளவிற்கு மேலே செல்ல விரும்புகிறாயோ, அந்த அளவிற்கு தாழ்ச்சியில் நீ கீழே செல்ல வேண்டும்.

11. உண்மைக்கு யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. அது தன்னையே தற்காத்துக்கொள்ளும்.

12. பொறுமையே ஞானத்தின் தோழன்.

13. பிறழ்வுபட்ட விருப்பத்தின் விளைவு மிகுகாமம். காமத்திற்கு (இன்பத்திற்கு) அடிமையாவதால் பழக்கம் உருவாகிறது. பழக்கம் எதிர்க்கப்படாதபோது கட்டாயத் தேவையாக மாறுகிறது.

14. நாம் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு யாருடைய புகழ்ச்சியும் தேவையில்லை. ஏனெனில், அதைச் செய்வது நம் கடமை.

15. ஒரு மனிதரின் குணத்தைக் கண்டறிய, அவர் எதை விரும்புகிறார் என்று கவனித்துப்பார்.

16. நம்பு. அப்போதுதான், நீ புரிந்துகொள்வாய்!

17. நீ காணாததை நம்புவது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பரிசாக, நீ நம்புவதைக் காண்பாய்.

18. நீ எல்லாருக்கும் நன்மை செய்ய முடியாது. ஆகையால், உனக்கு அருகில் இருப்பவர்களுக்கு நன்மை செய்.

19. மக்களின் ஏக்கங்களையும் துன்பங்களையும் கேட்கும் காதுகள் அன்புக்கு உண்டு.

20. கடவுளிடம் அன்புகூர்வதே மிகப்பெரிய காதல். கடவுளே! உன்னை அறிவதே வாழ்க்கை. உனக்குப் பணிசெய்வதே என் சுதந்திரம். உன்னைப் புகழ்வதே என் ஆன்மாவின் மகிழ்ச்சி. உம் அருளால் என்னைச் சூழ்ந்து காத்தருளும் - இங்கும் எங்கும், இப்போதும் எப்போதும்!

21. கடவுள் நம் வீட்டில்தான் இருக்கிறார். நாம்தான் வீட்டை விட்டு வெளியே சுற்றித் திரிகிறோம்.

22. கை நிறையப் பொருள்கள் இருந்தால் அங்கே கடவுளைக் கைக்கொள்ள இடம் இருக்காது.

23. யாரும் செய்யவில்லை என்றாலும், சரி என்பது சரியே.

24. காணாமற்போன ஆன்மாவுக்கு எஞ்சுவது துன்பமே.

25. மனித உறவுகள் இன்பப் பிணைப்பைத் தருகின்றன. ஆனால், அந்தப் பிணைப்புடன் இணைந்து வருவன பொறாமை, சந்தேகம், பயம், கோபம், மற்றும் சண்டை சச்சரவுகள்.

26. மலைகளின் உயரங்களைக் கண்டு வியக்கும் மானிடர்கள் தங்கள் இருத்தலைக் கண்டு வியப்பது இல்லை.

27. முழுவதுமான மறுப்பு சரியான நிதானத்தை விட எளிதானது.

28. தலைமுதல் கால் வரை 'அல்லேலூயா' என வாழ்பவனே கிறிஸ்தவன்.

29. எங்கே உன் இன்பம் இருக்கிறதோ, அங்கே உன் புதையல் இருக்கும். எங்கே உன் புதையல் இருக்கிறதோ, அங்கே உன் இதயம் இருக்கும். எங்கே உன் இதயம் இருக்கிறதோ, அங்கே உன் மகிழ்ச்சி இருக்கும்.

30. நான் விரும்பும் ஒன்று தானாக வரும் வரை நான் இருந்த நிலையில் நிறைவோடு இருக்க முடிவு செய்தேன். 

31. உடல்சார் துன்பமே மிகப் பெரிய தீமை.

32. வனப்புள்ள, மகிழ்ச்சியூட்டும் எந்தப் பொருள்களிலும் ஒருவிதமான அழகு இருக்கிறது – பொன், வெள்ளி, மற்றும் அது போன்றவற்றில் இருப்பது போல. உடல் இவ்விதமான பொருள்களைத் தொடும்போது, பொருள்களின் மதிப்பு இன்னும் கூடுகிறது. 

33. இறைவா! எம் தலைவரே! உமக்காகவே நீர் எங்களைப் படைத்ததால், உம்மில் அமைதி காணும் வரை எம் இதயம் அமைதி கொள்வதில்லை!

திருநாள் வாழ்த்துக்களும் செபங்களும்!

Wednesday, August 26, 2020

புனித மோனிக்கா

இன்றைய (27 ஆகஸ்ட் 2020) திருநாள்

புனித மோனிக்கா

புனித அகுஸ்தினாரின் தாயாகிய புனித மோனிக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவர் தன் மகன் அகுஸ்தினாரின் மகனுக்காகக் கண்ணீர் சிந்தினார் என்று மட்டுமே பல நேரங்களில் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இறைவன் முன்னும், தன் சமகாலத்து மக்கள் முன்னும் தன் உள்ளக்கிடக்கைகளை, 'ஒப்புகைகள்' என்னும் நூலில் அறிக்கையிடும் புனித அகுஸ்தினார், தன்னையும் தன் தாயையும் இணைக்கும் பகுதிகளில் எல்லாம் பின்வரும் இறைவார்த்தையைப் பயன்படுத்துகின்றார்: 'ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன். நான் உம் பணியாள். உம் அடியாளின் மகன். என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்' (காண். திபா 116:16).

தன் தாயை, 'இறைவனின் அடியவள்' என்றே அகுஸ்தினார் அறிமுகம் செய்கின்றார்.

'ஒப்புகைகள்' நூலில் அகுஸ்தினார் தனது தாயைப் பற்றி எழுதும் சில குறிப்புகளிலிருந்து மோனிக்கா என்னும் ஆளுமை எப்படிப்பட்டவர் என்று இன்று நாம் அறிந்துகொள்வோம்:

1. நம்பிக்கையாளர் மோனிக்கா

'ஆக, என் தாய் மற்றும் என் இல்லத்தார் அனைவரைப் போல – என் தந்தையைத் தவிர – நானும் ஒரு நம்பிக்கையாளராகவே இருந்தேன். என் தந்தை நம்பிக்கையைத் தழுவவில்லை என்றாலும் நான் என் தாயின் பக்திமுயற்சிகளைப் பின்பற்றுவதற்கோ, இவ்வாறாகக் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வதற்கோ அவர் குறுக்கே நிற்கவில்லை... அவரைவிட இவள் நல்லவளாக இருந்தாலும் அவருக்கே இவள் அடிபணிந்து இருந்தாள் ... எந்நேரமும் அவள் உம் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் கருத்தாயிருந்தாள்.' (புத்தகம் 1, பிரிவு 11)

2. மகனின் இலக்குத் தேர்வில் உடன் நின்ற மோனிக்கா

'என் தாய் நான் எல்லாரையும் போல இலக்கியக் கல்வி பயின்றால் அது எனக்கு எத்தீங்கும் இழைக்காது என்றும், உம்மை நோக்கிய பாதையில் அது என்னை நிலைநிறுத்தும் என்றும் நினைத்தாள். என் பெற்றோர்களின் குணம் பற்றி நினைத்துப் பார்க்கும்போது என்னில் எழும் ஊகம் இது.' (புத்தகம் 2, பிரிவு 3)

3. கண்ணீர்த் துளி மோனிக்கா

'நீர் மேலிருந்து உம் கைகளை நீட்டி ஆழத்தின் இருளிலிருந்து 'என் ஆன்மாவை மீட்டீர்' (காண். திபா 144:7). ஏனெனில், என் தாய், உம் பிரமாணிக்கமுள்ள அடியவள், எனக்காக உம் திருமுன் அழுதாள். தங்களின் இறந்த குழந்தைகளுக்காக அழும் தாய்மார்களைவிட அதிகம் அழுதாள். உம்மிடமிருந்து பெற்ற 'நம்பிக்கை மற்றும் ஆன்மீகத் தெரிவினால்' (காண். கலா 5:5), என்னைப் பற்றியிருந்த இறப்பை அவள் கண்டுணர்ந்திருந்தாள். நீரும் அவளுக்குச் செவிகொடுத்தீர், ஆண்டவரே! நீர் அவளுக்குச் செவிகொடுத்தீர்! அவள் செபித்த இடங்களில் எல்லாம் வடித்த கண்ணீர்த் துளிகளை நீர் இகழ்ச்சியுடன் நோக்கவில்லை. நீர் அவளின் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். இதனால், என்னை அவளோடு தங்க வைத்துக்கொள்ளவும், அவளோடு அமர்ந்து ஒரே மேசையில் உணவு அருந்தவும் என்னை அனுமதிக்குமாறு அவளுக்குக் கனவில் தூண்டுதல் தந்தீர். என் பிழையால் நான் செய்த தெய்வ நிந்தனைக்காக அவள் என்னை வெறுத்ததால், முதலில் அவள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் தான் ஒரு மரத்தாலான வரைகோலில் சாய்ந்திருப்பதாகக் காட்சி கண்டாள். அக்கனவில் இளைஞன் ஒருவன் வந்தான். அவன் மிகவும் அழகாகவும் புன்னகைபூத்த முகத்தோடும் நின்று துன்பத்தால் உடைந்து போயிருந்த (காண். புல 1:13) அவளின் சோகமான முகத்தைப் பார்த்தான். 'நீ ஏன் வாடியிருக்கிறாய்? கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்க காரணம் என்ன?' என்று அவன் அவளைக் கேட்டான். காட்சிகளில் வரும் இக்கேள்விகள் விடைகளைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல, விடைகளைத் தருவதற்காகவே கேட்கப்படுகின்றன. நரகம் போன்ற என் வாழ்க்கையை நினைத்து துயரப்பட்டு அங்கலாய்ப்பதாக அவள் சொன்னாள். 'இனி கவலை கொள்ள வேண்டாம்! கலக்கம் அடையவும் வேண்டாம்!' என்று அவளிடம் சொன்னவன், தொடர்ந்து அவள் எங்கே இருக்கிறாளோ அங்கேயே நானும் இருப்பதாகச் சொல்லி அதைக் கண்டுணருமாறு அவளுக்கு அறிவுறுத்தினான். அவள் பார்த்தபோது, அவளின் அருகில் அதே வரைகோலில் சாய்ந்தவாறு நான் நிற்பதைக் கண்டாள். உம் காதுகள் அவளின் இதயத்தின் அருகில் இருந்தாலொழிய இக்காட்சி அவளுக்கு எப்படி வரும்? நீர் நல்லவர். எல்லாம் வல்லவர். அனைவர்மேலும் அக்கறை காட்டுபவர். ஒவ்வொருவர்மீதும் தனித்தனியாக அக்கறை காட்டி அன்பு செய்பவர்.

... ஆண்டவரே! என் தாய்க்குக் கிடைத்த காட்சியையோ கனவையோ விட, விழிப்பான என் தாய் வழியாக நீர் எனக்குத் தந்த பதிலால் நான் வியந்து நிலைகுலைந்து போனேன் ... அதற்குப் பின் வந்த ஒன்பது ஆண்டுகள் நான் ஆழமான குழியின் சகதியிலும், பொய்யின் இருட்டிலும் புரண்டு கிடந்தேன். சில நேரங்களில் அதிலிருந்து எழ முயற்சி செய்தேன். ஆனால், எந்த அளவுக்கு எழ முயற்சி செய்தேனோ அந்த அளவுக்கு இன்னும் ஆழமாய் அமிழ்ந்து போனேன். புனிதமான, பக்தி நிறைந்த, சாந்தமான கைம்பெண்ணான அவள் - உம்மால் அன்பு செய்யப்படும் அவள் - எதிர்நோக்கால் உள்ளத்தில் அமைதி பெற்றாள். ஆனாலும், எனக்காகக் கண்ணீர் வடிப்பதிலும் இரங்கி அழுவதிலும் அவள் சோர்ந்து போகவில்லை. அவள் அழுவதை நிறுத்தவில்லை. அவளின் எல்லா இறைவேண்டல்களிலும் உம்முன் எனக்காக மாரடித்துப் புலம்பினாள். அவளின் விண்ணப்பங்கள் கேட்கப்பட்டன. இருந்தாலும் அந்த இருளில் நான் புரண்டுகொண்டிருக்கவும், அந்த இருளால் நான் விழுங்கப்படவும் என்னைத் தனியே விட்டுவிட்டீர்.' (புத்தகம் 3, பிரிவு 11)

4. பரிதவித்த தாய் மோனிக்கா

'கடவுளே, நான் ஏன் கார்த்தேஜைவிட்டு உரோமை சென்றேன் என்பதை நீர் அறிந்திருந்தீர். ஆனால், அதைப் பற்றி நீர் என்னிடமோ என் தாயிடமோ வெளிப்படுத்தவே இல்லை. என் பயணம் பற்றி வருத்தப்பட்ட என் தாய், கடல் வரை வந்து என்னை வழியனுப்பினாள். ஆனால், நான் திரும்பி வருமாறும், தானும் என்னுடன் வருவதாகவும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்ததாலும் நான் அவளை ஏமாற்றினேன். என் நண்பன் ஒருவன் இருக்கிறான் என்றும், பயணத்திற்குக் காற்று ஏற்றதாக மாறும் வரை நான் கடற்பயணம் செய்ய மாட்டேன் என்றும் சொல்லி நடித்தேன். என்னை மிகவும் அன்பு செய்த என் தாயிடம் நான் பொய் சொன்னேன். அவளைவிட்டு நான் வழுக்கி ஓடினேன். இதையும் நீர் மன்னித்தருளினீர். வெறுக்கத்தக்க அழுக்காய் இருந்த என்னைத் திருமுழுக்கில் உம் அருளின் தண்ணீரால் கழுவும் வண்ணம் என்னைக் கடலின் தண்ணீரிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தீர். திருமுழுக்குத் தண்ணீரே என்னைத் தூய்மையாக்குவதாகவும், என் தாயின் கண்களிலிருந்து வழிந்த ஆறுகளை வற்றச் செய்வதாகவும் இருந்தது. இக்கண்ணீரே அவளின் முகத்தின்முன் இருந்த மண்ணில் பாய்ந்தோடியது.

இருந்தாலும், நான் இல்லாமல் வீடு திரும்ப அவள் மறுத்ததால், அவளை மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் கப்பலுக்கு அருகில் இருந்த சிப்ரியானின் நினைவு ஆலயத்தில் தங்க வைத்தேன். ஆனால், அந்த இரவு மறைவாக நான் புறப்பட்டேன். அவள் வரவில்லை. அழுதுகொண்டும் செபித்துக்கொண்டும் ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். தனது கண்ணீர் வெள்ளத்தால் உம்மிடம் அவள் இரந்து வேண்டியதென்ன, என் கடவுளே? என் பயணத்தை நீர் தடுக்கும் அளவுக்கு அவள் உம்மிடம் என்ன கேட்டாள்? இருந்தாலும், உமது விமரிசையால் அவளது ஏக்கத்தின் சாரத்தை நீர் கண்ணுற்றீர் - அவள் விரும்பியது போல நீர் என்னை மாற்ற வேண்டும் என்று அவள் கேட்டதை நீர் உடனடியாகத் தரவில்லை என்றாலும்! காற்று அடித்து எங்களது கப்பலை நகர்த்தியது. கரை மெதுவாகக் கண்களிலிருந்து மறையத் தொடங்கியது. அதோ, விடிந்தபோது, அவள் துக்கத்தால் பைத்தியம் பிடித்தவள்போல் உம் காதுகளைத் தன் பேரழுகையால் நிரப்பினாள். ஆனால், அவளின் கூக்குரலுக்கு நீர் செவிகொடுக்கவில்லை. எனது பேரார்வங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எனது பேரார்வங்களையே பயன்படுத்தினீர். தனது இரத்தமும் சதையுமான எனக்காக அவள் ஏங்கிய ஏக்கத்தை துன்பம் என்னும் சாட்டையால் அடித்துச் சரி செய்தீர். எல்லாத் தாய்மார்களையும் போல - எல்லாத் தாய்மார்களையும்விட - என்னைத் தன்னருகே வைத்துக்கொள்ளவே அவள் விரும்பினாள். ஆனால், அவளிடமிருந்து நீர் என்னைப் பிரிப்பது அவளுக்கு மகிழ்வைக் கொண்டுவரும் மகனாக என்னை மாற்றுவதற்காகத்தான் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை. அவள் அதை அறியவும் இல்லை. ஆகையால், அவள் அழுது புலம்பினாள். அவளின் இந்தத் துன்பங்களில், 'வேதனையில் பெற்றெடுத்த தன் குழந்தையை' (காண். தொநூ 3:16) தேடிய ஏவாளின் நிழல் இருந்தது. 'நான் அவளை ஏமாற்றிவிட்டேன்,' 'நான் கல்மனம் படைத்த கொடூரன்' என்று என்னைப் பற்றி உம்முன் குற்றம் சுமத்திவிட்டு, உம்மிடம் திரும்பி எனக்காகச் செபித்தாள். தன் வீடு திரும்பினாள். அதே நேரம், நான் உரோமையை வந்தடைந்தேன்.' (புத்தகம் 5, பிரிவு 8)

5. மகளும், மனைவியும், மருமகளுமான மோனிக்கா

'ஆனால், உமது அடியாளைப் பற்றி எனது ஆன்மா அறிக்கையிடும் எதையும் நான் கடந்துபோக மாட்டேன். காலத்தின் வெளிச்சத்திற்குள் தன் உடல் வழியாக என்னைப் பிறக்க வைத்தவளும், தன் இதயத்தின் வழியாக நிரந்தரத்தின் வெளிச்சத்திற்குள் என்னைப் பிறக்க வைத்தவளும் அவளே. அவள் எனக்கு வழங்கிய கொடைகளைப் பற்றி அல்ல, நீர் அவளுக்கு வழங்கிய கொடைகளைப் பற்றியே பேசுகிறேன். அவள் தன்னையே உருவாக்கிக் கொள்ளவோ, வளர்த்தெடுக்கவோ இல்லை. நீர் அவளை உருவாக்கினீர். அவளது குணநலன் எப்படி இருக்கும் என்பதை அவளது தந்தையும் தாயும் அறிந்திலர். உமது அச்சத்தில் அவள் நெறிப்படுத்தப்பட்டாள். உமது கிறிஸ்துவால் அவள் உருவாக்கப்பட்டாள். உமது திருஅவையின் நேரிய உறுப்பினர் ஒருவரால் நம்பிக்கை தவழும் நல்வீட்டில் நன்மங்கையாய் வளர்ந்தாள் அவள். அவள் தனது தாயின் அக்கறையைப் பற்றி அல்ல, மாறாக, தன் வீட்டில் இருந்த முதிய தாதி ஒருத்தியைப் பற்றி – அவள் என் தாத்தாவையே தூக்கி வளர்த்தவள் - அவளது அக்கறை, கரிசனை, உடனிருப்பு, அவள் தனது முதுகில் தமக்கையைப் போலத் தன்னை ஏந்தி நடந்த பக்குவம் ஆகியவற்றைப் பற்றியே அதிகம் பேசியிருக்கிறாள். அவளது இந்த நீண்ட பணிக்காகவும், அவளது முதுமைக்காகவும், கிறிஸ்தவ இல்லம் ஒன்றில் வாழ்ந்த அவளது உயர்ந்த அறநெறி வாழ்வுக்காவும் அவளது தலைவர்களால் அவள் மிகவும் மதிக்கப்பெற்றாள். ஆகவே, தலைவர்களின் தவப் புதல்வியரை வளர்க்கும் பொறுப்பு அவளிடமே ஒப்படைக்கப்பட்டது. அப்பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினாள். தேவைப்படின் மிகவும் கண்டிப்பாகவும் இருந்தாள். அவர்களை வளர்க்கும் விதத்தில் அவள் மிகவும் விவேகத்துடன் நடந்து கொண்டாள். அவர்களது பெற்றோர்களோடு அமர்ந்து அவர்கள் உணவு உண்ணும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவர்கள் தாகத்தால் பற்றி எரிந்தாலும், தண்ணீர் குடிக்கக் கூட அவர்களை அனுமதிக்கவில்லை. ஏனெனில், அது தவறான பழக்கமாக மாறிவிடும் என்று சொல்லித் தடுத்தாள். அவள் ஞானத்தோடு இந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னாள்: 'திராட்சை மது கைக்கெட்டும் தூரத்தில் இன்று உங்களுக்கு இல்லை என்பதற்காக நீங்கள் தண்ணீரைத் தேடித் தேடிக் குடிக்கிறீர்கள். ஆனால், நாளை திருமணம் முடிந்து, திராட்சை மதுச் சேமிப்பறையின் சாவி உங்கள் கைக்கு வரும்போது தண்ணீர் வெறுப்பாகத் தெரியும், மதுப்பழக்கம் தவிர்க்க முடியாததாகி விடும்!' இப்படிப்பட்ட விதிமுறைகள் வழியாகவும், கட்டளைகள் வழியாகவும் பிள்ளைகளின் இளவயதுப் பேராசையைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை நெறிப்படுத்தினாள். குழந்தைகளின் தாகத்தை நிதானத்திற்குள் கொண்டுவந்து அவர்கள் பிற்காலத்தில் தொடக்கூடாதவற்றின் மேல் ஆசைப்படாதபடி அவர்களைப் பயிற்றுவித்தாள்.

இருந்தாலும், உமது அடியாள் தன் மகனிடம் சொன்னது போல, திராட்சை மதுவின் மேல் உள்ள பலவீனம் அவளைப் பலமாகப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அவள் சிறுமியாய் இருந்தபோது, திராட்சை மது வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து மதுவை எடுத்து வருமாறு அவளது பெற்றோர் அவளை அனுப்புவது வழக்கம். பீப்பாயின் மேல் உள்ள திறப்பு வழியாக ஒரு கோப்பையை உள்ளே செலுத்தி மதுவை எடுத்துப் பாட்டிலில் ஊற்ற வேண்டும். அவள் பாட்டிலில் ஊற்றுவதற்கு முன் தனது உதட்டின் நுனியில் கோப்பையை வைத்துக் கொஞ்சமாக உறிஞ்சுவாள். அதன் சுவை பிடிக்காததால் அவள் அதைவிட அதிகம் எடுப்பதில்லை. அவளை இப்படி உறிஞ்ச வைத்தது மதுவின்மேல் உள்ள ஆர்வம் அல்ல. மாறாக, இளவல்களிடம் இருக்கும் உபரியான உயிராற்றல். இது விளையாட்டுத்தனமான உணர்ச்சி வேகமாக அடிக்கடி மேலெழும்பி வருவதால் பெரியவர்கள் குழந்தைகளில் இதைப் பொதுவாக அடக்கிவைப்பர். துளித் துளியாக உறிஞ்ச ஆரம்பித்தவள் கொஞ்ச நாள்களில் கோப்பை கோப்பையாக மண்டத் தொடங்கினாள் - ஏனெனில், 'சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சியடைவர்' (காண். சீஞா 19:1). அவளது விவேகமிக்க தாதி என்ன ஆனாள்? அவள் விதித்த தடை எங்கே போனது? இந்த மறைவான நோயிலிருந்து அவள் விடுபடத் அவளது வலிமை அவளுக்குப் போதவில்லை. என் தலைவரே! உமது நலம்தரும் அக்கறை எங்கள்மேல் நிழலாடி எங்களைத் தாங்கியது. தந்தையும், தாயும், தாதியும் இல்லாத இடத்தில் நீர் இருக்கிறீர். நீர் எங்களைப் படைத்தீர், நீர் எங்களை அழைக்கிறீர், மனித அதிகாரங்களைப் பயன்படுத்தி எங்களின் ஆன்ம நலம் காக்க அவர்களை அனுப்புகிறீர். நீர் அவளைக் குணமாக்கியது எப்படி? நீர் அவளது உடல்நலத்தை மீட்டெடுத்தது எப்படி? அவளைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் இன்னொரு இனியவளை அழைத்து வந்தீர். கடுமையாகவும், கூர்மையாகவும் உள்ள மருத்துவனின் கத்தி போல வந்த அவள் வழியாக ஒரே நறுக்கலில் அவளின் அழுகலை அகற்றீனர். வீட்டில் தனித்திருந்த ஒருநாள், அவள் தன் பணிப் பெண்ணோடு மதுச் சேமிப்பறைக்குச் செல்லும் வழியில் அவர்கள் இருவருக்கும் இடையில் மழலைச் சண்டை வந்தது. சண்டை சொற்போராக வலுக்க, பணிப்பெண் இவளைப் பார்த்து, 'போடி! குடிகாரி!' என்று சொல்லிவிட்டாள். அந்த இகழ்ச்சி அவளைக் காயப்படுத்தியது. உடனடியாக அவள் தனது இழிவான மதுப்பழக்கம் என்னும் அடிமைத்தனத்தை எண்ணி வெட்கப்பட்டுத் தன்னையே கடிந்து கொண்டாள். மதுப்பழக்கத்தை உடனடியாக நிறுத்தினாள். முகப்புகழ்ச்சி செய்யும் நண்பர்கள் நம்மைக் கெடுப்பது போல, சண்டையிடும் எதிரிகள் பல நேரங்களில் நம்மைத் திருத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் நோக்கத்தின்படி நீர் கைம்மாறு செய்கிறீர். பணிப்பெண் தனது கோபத்தில் தனது சிறிய எஜமானியைக் காயப்படுத்த விரும்பினாளே தவிர, குணப்படுத்த விரும்பவில்லை. ஆகையால்தான் அவர்கள் தனித்திருக்கும்போது அவள் அந்த வார்த்தையைச் சொன்னாள் - ஒன்று, அந்த நேரத்தில், இடத்தில் யாரும் இல்லாததால் அவர்கள் தனித்திருந்திருக்கலாம். அல்லது அவள் பயந்துபோய் இவ்வளவு நாள்கள் சொல்லாமல் இருந்திருக்கலாம். 

ஆனால், நீரோ, என் தலைவரே! விண்ணையும் மண்ணையும் ஆள்பவரே! ஆழத்தின் ஓட்டங்களை உமக்கு ஏற்றாற்போல மடைதிருப்பி விடுகின்றீர். ஆண்டுகளின் ஓட்டத்தை அணியம் செய்கின்றீர். ஓர் ஆன்மாவின் கோபத்திலிருந்து கூட இன்னோர் ஆன்மாவுக்கு நலத்தைக் கொண்டு வர உம்மால் முடியும். தவறு செய்கின்றவர் ஒருவரைத் திருத்தும் எவரும் திருந்தியவருடைய மாற்றம் அவரைத் திருத்தியவரின் ஆற்றலால் வந்தது என்று சொல்ல முடியாதவாறு நீர் இப்படிச் செய்கிறீர்.' (புத்தகம் 9, பிரிவு 8)

'இப்படியாக நாணத்திலும் நிதானத்திலும் அவள் வளர்க்கப்பட்டாள். அவளது பெற்றோர் அவளை உமக்குக் கீழ்ப்படியச் செய்ததை விட, நீர் அவளை அவளது பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியச் செய்தீர். திருமண வயது வந்தபோது அவள் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட, அவள் அவனைத் தலைவனாக ஏற்று அவனுக்குப் பணிபுரிந்தாள். அவள் அவனை உமக்காக வெற்றி கொள்ள முயன்றாள். அவளது மதிப்பீடுகளாலும் விழுமியங்களாலும் - அவற்றினால் நீர் அவளை அணிசெய்திருந்தீர் – உம்மைப் பற்றி அவனிடம் பேசினாள். இப்படியாக அவளது கணவன் அவளை அன்பு செய்யவும், மதிக்கவும், பாராட்டி வியக்கவும் விரும்பினாள். அவனது பிரமாணிக்கமின்மையை அவள் பொறுத்துக் கொண்டாள். அதுபற்றி அவள் அவனிடம் சண்டையிட்டதில்லை. உமது இரக்கம் அவன்மேல் வரும் என்றும், அவன் உம்மேல் நம்பிக்கை கொண்டால் கற்பில் நிலைத்திருப்பான் எனவும் அவள் எதிர்நோக்கினாள். மேலும், அவன் எந்த அளவுக்குக் கருணை உள்ளவனோ அந்த அளவுக்கு முன்கோபியாகவும் இருந்தான். கோபப்படுகின்ற கணவனைத் தன் சொல்லாலும் செயலாலும் எதிர்க்கக் கூடாது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவன் சாந்தமாகவும் அமைதியாகவும் ஆனபின், வாய்ப்பு சரியாக அமையும்போது, தன் செயலுக்கான காரணத்தை அவனிடம் விளக்குவாள். சாந்தமான கணவர்களுக்குத் திருமணமான பல பெண்கள் அவர்களால் துன்புறுத்தப்பட்டுத் தங்களது முகத்திலும் உடலிலும் காயம் பட்ட தழும்புகளைத் தாங்கித் தங்களது வாழ்வை நகர்த்துகிறார்கள். தங்களுக்கிடையேயான உரையாடலில் இவர்கள் அவளிடம் தங்களது கணவனின் இச்செயல்களை முறையிடுவார்கள். அவள் அவர்களோடு சிரிப்பது போலச் சிரித்துக் கொண்டு அவர்களுக்குச் சீரிய ஆலோசனை வழங்குவாள். அவர்களின் வாய்தான் அவர்களின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பாள். திருமண வாக்குறுதிப் பத்திரம் வாசிக்கப்பட்டபோது நமக்கான அடிமைச் சாசனம் வாசிக்கப்பட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டும் என்பாள். ஏனெனில், அன்று முதல் மனைவியர் கணவர்களுக்கு அடிமைகள் ஆகின்றனர். இந்த நிலையை அவர்கள் அறிந்து அதற்கேற்றாற்போல வாழ வேண்டுமே தவிர தங்களது தலைவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கக் கூடாது என நினைத்தாள். இவள் பொறுத்துக் கொள்ளும் இவளுடைய கணவனின் முரட்டுக் குணத்தைக் கேள்வியுற்ற மனைவியர் இவளுடைய வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்தனர். ஆனால், பேட்ரிக் அவளை அடித்ததாகவோ, அவளது முகத்தில் தழும்பை ஏற்படுத்தியதாகவோ, அவளோடு ஒருநாள்கூட சண்டையிட்டதாகவோ இல்லை. இதற்கான காரணம் என்று பெண்கள் அவளிடம் ஆத்மார்த்த உரையாடலில் கேட்கும்போது, நான் மேற்சொன்ன வார்த்தைகளையே அவள் அவர்களுக்குச் சொல்வாள். அவளது அறிவுரையைக் கேட்டவர்கள் தங்கள் வாழ்வில் நலம் கண்டு அவளுக்கு நன்றிக்கடன் பட்டார்கள். அவளது அறிவுரையைக் கேளாதவர்கள் தங்கள் கணவர்களிடம் நன்றாக அடிபட்டார்கள்.' (புத்தகம் 9, பிரிவு 9)

அவளுடைய மாமியார்தான் அவளுக்கு முதல் எதிரி. பணிப்பெண்களின் கிசுகிசுப்பைக் கேட்ட அவள் தனது மருமகள்மேல் பகைமையையும் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டாள். ஆனால், தனது மதிப்புமிகு நடத்தையாலும், விடாமுயற்சியுள்ள பொறுமை மற்றும் கனிவாலும் மாமியாரையும் வென்றாள் அவள். விளைவு, அவளது மாமியார் வம்பளக்கின்ற பணிப்பெண்களைப் பற்றித் தனது மகனிடம் முறையிட்டாள். அவர்களைத் தண்டிக்கும்படி அவனிடம் சொன்னாள். ஏனெனில், அப்பெண்களாலேயே குடும்பத்தில் அமைதி சீர்குலைந்தது. அவனும் தனது தாயின் கோரிக்கைக்குச் செவிமடுத்தான். தன் குடும்பத்தின்மேல் தான் கொள்ள வேண்டிய அக்கறை பற்றித் தெளிவுற்ற அவன், குடும்ப அமைதியை நிலைநிறுத்தும் பொருட்டு, அப்பணிப்பெண்களைச் சாட்டையால் அடிக்குமாறு செய்தான். தனது மருமகளைப் பற்றி யாராவது அவதூறு பேசினால் இதே நிலைதான் என அவள் மற்றப் பெண்களை எச்சரித்தாள். அன்றிலிருந்து யாரும் மற்றவருக்கு எதிராக எந்த வார்த்தையும் பேசவில்லை. ஒருவர் மற்றவரின் நன்மையை நாடும் நிலையே குடும்பத்தில் இருந்தது. 

'உமது அடியாளை நீர் மற்றுமொரு கொடையால் அணிசெய்தீர். என் கடவுளே! என் இரக்கமே! அவளது வயிற்றில் நீர் என்னை உருவாக்கினீர்! அந்தக் கொடை என்னவெனில், எப்போதெல்லாம் அவளால் முடியுமோ அப்போதெல்லாம் அவள் கருத்து முரண்பாடு கொண்ட அல்லது சண்டையிடுகின்ற மனிதர்களை இணைத்து வைத்து ஒப்புரவாக்கினாள்.' (புத்தகம் 9, பிரிவு 9)

6. இறைமடியில் மோனிக்கா

'... மேலும், ஜன்னலுக்கு அருகில் நடந்த எங்கள் உரையாடலின்போது, 'நான் இங்கே செய்ய என்ன இருக்கிறது?' எனக் கேட்டபோது, அவள் தனது வீட்டில் இறக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. மேலும், நான் பின்னர் கேள்வியுற்றேன், நாங்கள் ஓஸ்தியாவில் இருந்தபோது, எனது நண்பர்கள் சிலரிடம், தாய்க்குரிய இரகசியத்தோடு, தனக்கு இந்த உலக வாழ்வின் மேல் உள்ள வெறுப்பையும், இறப்பின் நன்மையையும் பற்றிப் பேசியிருக்கிறாள். நான் அப்போது அங்கு இல்லை. அவளது துணிச்சலைக் கண்ட என் நண்பர்கள் - இத்துணிச்சலை நீரே அவளுக்கு அளித்தீர் –அவளது சொந்த ஊரிலிருந்து தூரமாக உடலை விட்டுச் செல்வது பயமாக இல்லையா என்று அவளைக் கேட்க, அவள் உடனே பதில் தந்தாள்: 'கடவுளிடமிருந்து எதுவும் தூரமில்லை. உலகம் முடியும் போது எந்த இடத்திலிருந்து என்னை உயிர்ப்பிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியாமல் போகுமோ என்று பயப்படத் தேவையில்லை!' நோயுற்ற ஒன்பதாம் நாள், தனது ஐம்பத்து ஆறாவது வயதில், எனக்கு முப்பத்து மூன்று வயதானபோது, பக்தியும் அர்ப்பணமும் கொண்ட இந்த ஆன்மா உடலிலிருந்து விடுதலை பெற்றது.நான் அவளது கண்களை மூடினேன்.' (புத்தகம் 9, பிரிவு 11)

நாம் மோனிக்காவிடம் கற்றுக்கொள்வது என்ன?

பொறுமை. ஏனெனில் நம் கடவுள், 'நம்ம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமாக' (காண். எபே 3:20) இருக்கிறார்.

Tuesday, August 25, 2020

முன்மாதிரி காட்ட

இன்றைய (26 ஆகஸ்ட் 2020) முதல் வாசகம் (2 தெச 3:6-10,16-18)

முன்மாதிரி காட்ட

கொரோனா காலத்து லாக்டவுன் கொரோனாவை விடக் கொடுமையாக இருக்க ஒரு காரணம், நம் உழைப்பு தேங்கிப்போவதுதான். 'மனிதன் ஓர் உழைப்பாளி அல்லது வேலைக்காரன்' என மனிதனை வரையறுக்கிறார் கார்ல் மார்க்ஸ். உழைப்பு நமக்கு ஒரு தண்டனை அல்ல. மாறாக, ஒரு கொடை. இந்த உழைப்பின் வழியாக நாம் மற்றவர்களை உருவாக்குமுன் நம்மை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். எளிதான வாழ்வியல் எடுத்துக்காட்டு. செய்வதற்கு நிறைய இருக்கிறது, ஆனால், சோம்பலாக இருக்கிறது, அல்லது மனம் சோர்வாக இருக்கிறது என நாம் நினைக்கும் நேரத்தில், தொலைக்காட்சி பார்க்கின்றோம், காணொளிகள் பார்க்கின்றோம், நிறைய வலைப்பக்கங்களை வாசிக்கின்றோம், காணொளி விளையாட்டுகள் விளையாடுகிறோம். இறுதியில் மிஞ்சுவது சோர்வே. ஆனால், சட்டென்று எழுந்து நம் அலமாரியைச் சுத்தம் செய்தால், நம் துணிகளை அடுக்கி வைத்தால், பாத்திரங்களைக் கழுவினால், அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினால், துணிகளைத் துவைக்க ஆரம்பித்தால் நம்மை அறியாமல் ஓர் உற்சாகம் நம்மைப் பற்றிக்கொள்வதோடு, எல்லாம் சரியான இடத்தில் அமைவதுபோல இருக்க ஆரம்பிக்கிறது. ஆகையால்தான், பவுலோ கோயலோ, 'உன் அறையைச் சுத்தம் செய், உன் மனம் சுத்தமாகும்' என்கிறார்.

தெசலோனிக்கா நகரில் வாழ்ந்த தொடக்ககால கிறிஸ்தவர்கள் நடுவே மனச்சோர்வு எழுகிறது. காரணம், உடனடியாக நிகழவிருந்த இரண்டாம் வருகை. உலகம் அழியப் போகிறது என்று சொல்லிக் கொண்டு சோம்பித் திரிகின்றனர். இதை நாம் பள்ளிகளில் பார்க்கலாம். மூன்று நாள் தொடர்ந்து விடுமுறை வருகிறது என்றால், அதற்கு முந்தைய நாள் மதியத்திலிருந்து பள்ளியில் கற்றலும் நடக்காது, கற்பித்தலும் நடக்காது. அப்படிப்பட்ட ஒரு சோம்பலைத்தான் கடிந்துகொள்கிறார் பவுல்.

எப்படி?

முதலாவதாக, உழைப்பின் கனிகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

உழைத்தால் என்ன நடக்கும்?

(அ) உழைத்தல் சோம்பலை முறித்துவிடும்.

(ஆ) உழைத்தல், இலவசங்களை நோக்கி நம் மனத்தைத் திருப்பாது. 

(இ) உழைப்பவர் யாருக்கும் சுமையாக இருக்க மாட்டார். தன் ரொட்டியைத் தானே உற்பத்தியாக்குவார். 

(ஈ) உழைப்பவர் தன் ஊதியத்தைக் கொண்டு அடுத்தவரின் நலம் விரும்புவார், நற்செயல் செய்வார்.

திருத்தூதர் என்ற நிலையில் தாங்கள் நிறைய உரிமைகள் பெற்றிருந்தாலும், மேற்காணும் கனிகளைத் தன் உழைப்பின் வழியாக அறுவடை செய்கின்றார் பவுல். அதையே மற்றவர்களும் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார்.

இரண்டாவதாக, தன் வாழ்க்கை முறையை அவர்களுக்கு முன்மாதிரியாக வைக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 23:27-32), தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடத்தை அல்லது துர்மாதிரியான வாழ்க்கை முறையைக் கடிந்துகொள்கின்றார். தலைமைத்துவத்தில் முன்மாதிரி மிகவும் அவசியம். நான் இருப்பதைப் போலவே எனக்குக் கீழ் இருப்பவரும் செயல்படத் தொடங்குவார் என்பதால், என் இருத்தலில் நான் அக்கறை காட்டுவது அவசியம். ஆக, உழைப்பவர் தன் சக உழைப்பாளருக்கு முன்மாதிரி காட்டுகின்றார்.

மூன்றாவதாக, 'ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக!' என அவர்களுக்கு ஆசி மொழிகிறார் பவுல். இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன: ஒன்று, உழைப்பு ஒருபோதும் நம்மைப் பரபரப்புக்கு உள்ளாக்கி, நம் மன அமைதியை நம்மிடமிருந்து பறித்துவிட நாம் இடம்தரக் கூடாது. இதையே, சபை உரையாளரும், 'உழைப்பு இரு கை இருப்பதை விட, மன அமைதி ஒரு கையளவு இருப்பது மேல்' என அறிவுறுத்துகிறார். இரண்டு, உழைப்பின் கனிகளை வழங்குபவர் ஆண்டவரே. நகருக்கு நாம் காவல் காக்கலாம், ஆனால், நகரைக் காப்பவர் கடவுளே. நாம் செங்கல் வைத்துக் கட்டலாம், ஆனால், வீடு நிறைவுபெறுவது ஆண்டவராலேயே. இதையே திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்!' (காண். திபா 127:1) என எச்சரிக்கின்றார். நம் உழைப்பின் கனிகள் யாவும் ஆண்டவரிடமிருந்து வருகின்றன என நாம் உணர்ந்தால், உழைப்பில் வரும் போட்டியுணர்வைத் தவிர்க்க முடியும்.


ஏமாற்ற இடம் கொடாதீர்

இன்றைய (25 ஆகஸ்ட் 2020) முதல் வாசகம் (2 தெச 2:1-3,14-17)

ஏமாற்ற இடம் கொடாதீர்

தெசலோனிக்க நகர் திருஅவைக்கு புனித பவுல் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து நாம் இந்நாள்களில் வாசித்துக் கொண்டிருக்கும். இறையியல் மற்றும் மேலாண்மையியல் கண்ணோட்டங்களில் இது  ஒரு முக்கியமான திருமடலாக இது பார்க்கப்படுகிறது. ஏனெனில், இரண்டாம் ஏற்பாட்டு நூல்களில் முதலில் எழுதப்பட்ட நூல் என அழைக்கப்படுகின்ற, 1 தெசலோனிக்கர் நூலில், பவுல், உடனடியாக நிகழவிருந்த இரண்டாம் வருகை பற்றிப் பேசுகின்றார். ஆனால், இரண்டாம் வருகை தள்ளிப்போகத் தொடங்கவே, புதிய நம்பிக்கையாளர்கள் சற்றே மனம் தளர்கின்றனர். அதாவது, உலகம் நாளை முடியப் போகிறது என யாரோ ஒருவர் எனக்குச் சொல்ல, நாளைக்கு உலகம் முடிந்துவிடும் என்ற எண்ணிக்கையில் நான் என் வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி என அனைத்தையும் விற்று விடுகிறேன். அல்லது இலவசமாகக் கொடுத்து விடுகிறேன். அல்லது அவற்றை உண்டுவிடுகிறேன். ஆனால், நாளைக்கு உலகம் முடியவில்லை. மூன்றாம் நாளில், நான் எதைக் கொண்டு உயிர் வாழ்வேன்?

இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவான நிலையில், சிலர் தங்களுடைய பழைய நெறிகளுக்குத் திரும்புகின்றனர். இன்னும் சிலர் மனக்குழப்பம் அடைகின்றனர். இன்னும் சிலர் அப்படித் தங்களுக்குச் சொன்னவர்கள்மேல் கோபம் கொள்கின்றனர். இன்னும் சிலர் ஒன்றும் செய்ய இயலாமல் சோம்பித் திரிகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் பவுலுக்கு ஏற்படுகிறது: இவர்களுக்கு என்ன அறிவுறுத்துவது? இவர்களை எப்படி நெறிப்படுத்துவது?

இந்தப் பின்புலத்தில், இன்றைய முதல் வாசகத்தில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

'இரண்டாம் வருகை பற்றி யாராவது சொன்னால், அல்லது எழுதினால், மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம். திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்!'

நான்கு மனித எதிர்மறை உணர்வுகளைப் பதிவு செய்கிறார் பவுல்:

மனம் கலங்க வேண்டாம்.

நிலைகுலைய வேண்டாம்.

திகிலுற வேண்டாம்.

ஏமாற வேண்டாம்.

நம் வாழ்வில் நாம் எந்தவொரு எதிர்மறை நிகழ்வையும் எதிர்கொள்கின்ற வேளையில் நம்மில் மேற்காணும் உணர்வுகள் எழுவது வழக்கம்.

கொரோனா நோய் பற்றிய அறிவிப்பு நமக்கு வந்தபோது, நாம் மனம் கலங்கினோம். நம் அறிவியல் மற்றும் மருத்துவம் அதற்குமுன் மண்டியிட்டபோது நாம் நிலைகுலைந்து போனோம். அங்கே, இங்கே என்று வந்த கொரோனா, நம் அலைபேசியில் நாம் சேமித்து வைத்திருக்கும் எண்ணைக் கொண்ட ஒரு நபருக்கு வந்தபோது திகிலுற்றோம். இந்த நிலையில், பல கட்டங்களில் அரசு இயந்திரங்களும் மருத்துவ பெருநிறுவனங்களும் நம்மை ஏமாற்றுகின்றன. 

இதற்குப் பதிலாக பவுல் மூன்று நேர்முக உணர்வுகளைக் கொண்டிருக்குமாறு அவர்களை அறிவுறுத்துகின்றார்:

(அ) அறிவுத்திறனின் ஆய்வுக்கு அனைத்தையும் உட்படுத்துங்கள். 'எல்லாரும் சொல்கிறார்கள்' என்று ஒரு பொதுஓட்டத்தில் ஓடத் தொடங்காமல், நின்று, 'இது என்ன? அது என்ன?' என ஆய்ந்தறிவது.

(ஆ) எதிர்நோக்குடன் இருங்கள். எல்லாம் மாறும் எனக் காத்திருத்தல். முடிவது அனைத்தும் இனிமையாகவே முடியும் என நம்பிக்கைகொள்ளல்.

(இ) ஊக்கம் கொள்ளுங்கள், ஊக்கப்படுத்துங்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொள்ளவதோடு, ஒருவர் மற்றவரையும் ஊக்குவிப்பது.


Thursday, August 20, 2020

உலர்ந்த எலும்புகள்

இன்றைய (21 ஆகஸ்ட் 2020) முதல் வாசகம் (37:1-14)

உலர்ந்த எலும்புகள்

இன்றைய முதல் வாசகத்தில், 'எலும்புக்கூடு பள்ளத்தாக்கு' காட்சியை எசேக்கியேல் காண்கின்றார். உலர்ந்த எலும்புகளுக்கு உருக்கொடுத்து, அவற்றுக்கு உயிரும் கொடுக்கிறார் ஆண்டவராகிய கடவுள். பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் மீண்டும் புத்துயிர் பெறுவர் என்பதன் அடையாளமாகவே இது இருக்கிறது.

இக்காட்சியில் வரும் முதல் உரையாடல் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

'எலும்புகள் மிக உலர்வாய் இருந்தன.

அவர் என்னிடம், 'மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?' என்று கேட்டார்.

நான், 'தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!' என்று மறுமொழி அளித்தேன்.'

மனித வரையறைகளை நன்கு உணர்ந்தவராக இருக்கிறார் என்றார் எசேக்கியேல்.

'முடியுமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்' அல்லது 'இல்லை' என விடையளிக்காமல், 'நடப்பது அனைத்தும் அவருக்குத் தெரியும்,' 'செய்வதனைத்தையும் அறிந்தவர் ஆண்டவர்' என்ற நிலையில், 'உமக்குத் தெரியுமே' எனப் பதிலளிக்கின்றார்.

இறைவாக்கினரின் இந்தப் பதிலில், அவர் ஆண்டவர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், எதிர்நோக்கும், அதே வேளையில் அவரின் தாழ்ச்சியும் வெளிப்படுகிறது.

நம் ஆராய்ச்சிக்கு உட்படாதவற்றின்மேல் அல்லது நம் அறிவுக்கு எட்டாத பலவற்றைக் குறித்து நாம் கவலைகொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். 

வாழ்வில் இக்கட்டான கேள்விகளை நாம் எதிர்கொள்ளும்போதும், சூழல்கள் நமக்கு எதிராக நிற்கும்போதும்,

'தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!' என்று சரணாகதி அடைதல் சால்பு.


Wednesday, August 19, 2020

அவர்கள் பொருட்படுத்தவில்லை

இன்றைய (20 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 22:1-14)

அவர்கள் பொருட்படுத்தவில்லை

திருமண நிகழ்வை ஒட்டி நம் இல்லங்களில் சொந்த பந்தங்களுக்கு ஆடைகள் எடுக்கும் வழக்கம் நம் ஊர்களில் இன்னும் உள்ளது. சிலர் தாங்களே ஆடைகள் எடுத்துக் கொடுக்கின்றனர். இன்னும் சிலர் ஆடைகளுக்குரிய பணத்தைக் கொடுத்து ஆடைகள் எடுத்துக்கொள்ளுமாறு சொல்கின்றனர். திருமணத்திற்கென்று எடுத்த ஆடைகளை அணிந்து வருவது திருமண வீட்டாரால் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது சிலர் திருமண வீட்டார்மேல் உள்ள கசப்புணர்வைக் காட்டுவதற்காக, அவர்கள் எடுத்துக்கொடுத்த ஆடையை அணிய மறுத்து, தாங்கள் விரும்பும் ஆடையில் செல்வதுண்டு. தாங்கள் கொடுத்த ஆடையை நிராகரித்த அவர்கள்மேல் மணவீட்டாருக்குக் கசப்புணர்வு இன்னும் அதிகமாகவே செய்கின்றது.

விண்ணரசு பற்றிய திராட்சைத் தோட்ட எடுத்துக்காட்டைத் தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, திருமண விருந்து எடுத்துக்காட்டைத் தருகின்றார். நேற்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதி நமக்கு இடறலாக இருந்ததுபோல, இன்றைய எடுத்துக்காட்டின் நிறைவுப் பகுதியும் இடறலாக இருக்கிறது.

திருமண ஆடை அணியாத ஒருவனைக் காணும் அரசர், 'தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' எனக் கேட்டு, இருளில் தள்ளுகின்றார்.

அழைத்தவர்கள் அனைவரும் வர மறுக்கின்றனர். அவர்கள் தீக்கிரையாக்கப்படுகின்றனர்.

வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடை இன்றி ஒருவர் வருகின்றார். அவர் இருளில் தள்ளப்படுகின்றார்.

இங்கே இரண்டு விடயங்கள் புரிதலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை:

(அ) அழைத்தலை நிராகரிப்பதும் தவறு

அழைத்தலை நிராகரித்தவர்கள் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களது முதன்மைகள் வேறாக இருந்தன. 

(ஆ) அழைத்தலுக்கு நம்மைத் தகுதியாக்க மறுப்பதும் தவறு

அழைத்தல் பெற்று விருந்தில் பங்கேற்றவர்களுள் ஒருவர், தனக்குக் கொடுக்கப்பட்ட விருந்து ஆடையை அணியை மறுக்கின்றார். ஆக, அவரும் அரசனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

மனித வாழ்வில், 'அதிகாரம்' என்பது அந்த அதிகாரத்தை ஏற்க ஒருவர் இருக்கும் வரைதான். ஒருவருடைய அதிகாரத்தை நான் ஏற்க மறுத்தால் அவர் என்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. ஆனால், இங்கே, அரசர் அனைவர்மேலும் அதிகாரம் பெற்றவராக இருக்கின்றார். 

'திருமண ஆடை' என்பதை நாம் இங்கே உருவகமாகவே புரிந்துகொள்ள வேண்டும். தகுதியான அல்லது தகுதிப்படுத்தப்பட்ட வாழ்வே திருமண ஆடை. மத்தேயு குழுமத்தில் நிலவிய ஒரு பிரச்சினைக்கான தீர்வையே நாம் இங்கே காண்கிறோம். கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவுதல் என்பது தானாகவே நடக்கும் ஒரு செயல் அல்ல. மாறாக, அந்த நம்பிக்கைக்கு ஒருவர் தன்னைத் தயார்படுத்த வேண்டும்.

நேற்றைய உவமையோடு இதை ஒப்பிட்டால்,

ஏணியில் ஏறுவது ஓர் அழைப்பு என்றால், அந்த அழைப்பிற்கு ஒருவர் தன்னையே தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதிப்படுத்தவில்லை என்றால், அவர் கீழே விழ வாய்ப்பு உண்டு.

தகுதிப்படுத்துதல் சிறிய அளவில்தான் தொடங்க வேண்டும். திருமண ஆடை அணிதல் போல.

ஏனெனில், 'சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்' (காண். சீஞா 19:1)

கிறிஸ்தவ வாழ்வில், திருமுழுக்கின்போது நமக்கு வழங்கப்படும் 'வெள்ளைநிற ஆடை' என்பது நம் திருமண ஆடை. இந்த ஆடை நமக்குக் கொடையாக வழங்கப்பட்டாலும், அந்த ஆடையை அணிய நான் என்னைத் தகுதிப்படுத்த வேண்டும்.

அருள்பணியாளர்களாகிய நாங்கள் அணியும் வெள்ளை அங்கி, அல்லது துறவற சபையில் இருப்பவர்களின் ஆடைகள் என அனைத்தும் திருமண விருந்து ஆடைகளே. இவை கொடையாகக் கொடுக்கப்பட்டாலும், இந்த ஆடைகளை அணியும்போதுதான், எங்களையே திருமண விருந்திற்குத் தகுதியாக்கிக் கொள்ள முடியும். வெறுமனே ஆடைகள் அணிதல் அல்ல. மாறாக, ஆடைக்குரிய வாழ்க்கை முறையைத் தகவமைத்துக்கொள்தல்.

சேறும் சகதியும் தூசியுமாய் வந்த தன் இளைய மகன்மேல் புதிய ஆடையைப் போர்த்திய இரக்கத்தின் இறைவன், புதிய ஆடையை அணிய மறுத்தால் நீதியுள்ள இறைவனாக நம்மைத் தண்டிப்பார் என்பதை நினைவுபடுத்துகிறது நற்செய்தி வாசகம்.


Tuesday, August 18, 2020

வேலைக்கு அமர்த்தவில்லை

இன்றைய (19 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 20:1-16)

வேலைக்கு அமர்த்தவில்லை

திருச்சி இரயில் சந்திப்பிலிருந்து கிராப்பட்டிக்குச் செல்லும் பாதையில், பாலத்திற்கு அடியில், தினமும் காலையில் 6 மணி முதல் 9 மணி வரை ஒரே கூட்டமாக இருக்கும். பக்கத்து ஊர்களிலிருக்கும் பலர் தங்கள் கையில் உணவுப் பையோடு யாராவது தங்களைக் கூலி வேலைக்கு அமர்த்த மாட்டார்களா என்று காத்திருப்பர். மதியம் 12 மணி, மாலை 3 மணி, மாலை 5 மணி எனச் சென்றாலும் ஒரு சிலர் வேலை வேண்டி நிற்பதை அங்கே பார்க்க முடியும். வேலை முடிந்த அவர்கள் பெரும்பாலும் சாலையில் நின்றுகொண்டு, ஏதாவது லாரி அல்லது வேன் ஒன்றில் பயண அனுமதி கேட்டுத் தங்கள் இல்லங்கள் திரும்புவர். இரவு 9 மணிக்கும் வீடு திரும்பாமல் பலர் நிற்பர். அவர்கள் யாருடைய தயவிலாவது தங்கள் இல்லம் திரும்பி, இரவு உணவு உண்டு, கொஞ்ச நேரம் தூங்கி மறுபடியும் அடுத்த நாள் காலையில் எழுந்து இதே போல கால்கடுக்க நிற்க வேண்டும்.

பரிதாபமான வாழ்க்கை நிலை அவர்களுடையது!

ஏறக்குறைய இதே வாழ்க்கை நிலையைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். திராட்சைத் தோட்டக்காரர்கள் எடுத்துக்காட்டில் காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, 3 மணி, மாலை 5 மணி என ஐந்து பொழுதுகளில் ஆள்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வருகிறார்கள். வந்தவர்கள் அனைவரும் ஒரு தெனாரியம் வீதம் கூலி பெறுகின்றனர்.

பல பேருக்கு பல நெருடல்களை ஏற்படுத்துகின்ற வாசகம் இது.

'எங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்னும் வார்த்தைகளை மட்டும் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சின்ன வயசுல பாம்புக் கட்டம் விளையாடியிருக்கிறீர்களா? 1 முதல் 99 வரை உள்ள கட்டங்களில், சில கட்டங்களில் ஏணிகள், சில கட்டங்களில் பாம்புகள் என சிறிய, பெரிய அளவுகளில் இருக்கும். நாம் தாயக்கட்டை அல்லது சோளிகளை அல்லது புளியங்கொட்டைகளை வீசி நகர நகர, சில நேரங்களில் ஏணிகளில் உயர்வோம், சில நேரங்களில் பாம்பு கடி பட்டு கீழே வருவோம். 98 வது எண்ணில் ஒரு பாம்புத் தலை இருக்கும். அந்தப் பாம்பு கொத்தியது என்றால், கீழே 3ஆம் எண்ணுக்கு நாம் வந்துவிடுவோம். அதே போல 5ஆம் எண்ணில் ஓர் ஏணி இருக்கும். அதில் ஏறினால் நாம் 96வது கட்டத்திற்கு உயர்ந்திடுவோம்.

இந்தக் கட்டங்களில் விளையாடும் நமக்கு, இத்தனை எண்தான் விழும் என்று நம்மால் கணிக்க முடியுமா? கைகளை மடக்கி ஏமாற்றி விளையாண்டால் ஒரு வேளை கணிக்கலாம். ஏணியில் ஏறிக்கொண்டே ஒருவன் இருக்கிறான். மற்றவன் பாம்புக் கடிபட்டு கீழே உள்ள கட்டங்களில் இருக்கிறான். ஏணியில் ஏறியவன் பாம்புக் கடிபட்டவனைப் பார்த்து, 'நீ தோற்றுவிட்டாய்!' என்று சொல்ல முடியுமா?

'முடியாது'

'சொல்லக் கூடாது' என்றே நான் சொல்வேன். 

ஒருவன் ஏணியில் ஏறுவதும், இன்னொருவன் பாம்புக் கடி படுவதும் இயல்பாக விளையாட்டில் நடக்கக் கூடியது. அங்கே எதுவும் தகுதியைப் பொருத்து நடப்பதில்லை. ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்றால், இன்னொருவர் உயர்ந்த பதவிக்கு வர முடியவில்லை என்றால், உயர்ந்த பதவியில் இருப்பவர் மற்றவரை விடத் தகுதி வாய்ந்தவர் என்பது பொருள் அல்ல. அவர் கட்டத்தில் ஏணி இருந்தது, இவர் கட்டத்தில் பாம்பு இருந்தது, அவ்வளவுதான்.

இன்று நான் என் அறையில் அமர்ந்து இதை கணிணியில் தட்டச்சு செய்கிறேன். என் அறைக்கு வெளியே இன்னொருவர் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார். அவரை விட நான் மேலானவனா? இல்லை. அவரை விட எனக்குத் தகுதி கூடுதலா? இல்லை. இருவரும் வாழ்வின் பாம்புக்கட்டத்தில் அவரவருடைய எண்களில் இருக்கிறோம். அவ்வளவுதான்! நான் பெருமை கொள்ளவோ, அவர் சிறுமை கொள்ளவோ இடமே இல்லை.

ஆனால், பல நேரங்களில் ஏணிகளில் நாம் உயரும்போது, வாழ்வில் வெற்றிபெறும்போது, உயர் பதவிகளை அடையும் போது, 'இது என்னால் நடந்தது! இதற்கு நான் தகுதி வாய்ந்தவன்!' எனக் கருதி இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறோம். 

இது தவறு எனக் காட்டுகிறார் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் நிலக்கிழார்.

ஆறு மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர் தன் தகுதியால் தனக்கு வேலை கிடைத்தது என நினைத்துப் பெருமிதம் கொள்கிறார். 

மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவரை யாரும் அதுவரை வேலைக்கு அமர்த்தவில்லை. அவரும் காத்துக்கொண்டேதான் இருந்தார். எந்த விதத்திலும் அவருடைய தகுதி குறையவில்லை. 

காலையில் வேலைக்கு வந்தவர் ஏணியில் வந்தார். மாலையில் வேலைக்கு வந்தவர் பாம்பு கொத்திக் காத்துக் கிடந்தார்.

இங்கேதான், தோட்டக்காரர் கட்டங்களைப் புரட்டிப் போடுகின்றார். பாம்புகளை அழித்து விட்டு ஏணிகள் என்றும், ஏணிகளை அழித்துவிட்டு பாம்புகள் என்றும் வரைகின்றார். பாம்புகளால் கடிபட்டவர்கள் மகிழ்கின்றனர். ஏணிகளில் ஏறியவர்கள் முணுமுணுக்கிறார்கள். கட்டங்கள் புரட்டிப் போடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. கட்டங்கள் என்றென்றும் அப்படியே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், ஏணிகளில் ஏறியது தங்களது தகுதியால் என அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பாவம் அவர்கள்! அறியாமையில் இருக்கிறார்கள்!

இரண்டு கேள்விகள் எனக்கு:

(அ) என் இருத்தலை நான் என் தகுதியின் பலன் எனக் கருதி பெருமை கொள்வதை விடுத்து, என் இருத்தல் இயல்பாக நடக்கிறது என்ற வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?

(ஆ) யாரும் வேலைக்கு அமர்த்தாத, யாரும் கண்டுகொள்ளாத, யாரும் உயர்பதவி அளிக்காத மற்றவர்களைப் பார்க்கும்போது, என் மனநிலை இரக்கம் சார்ந்ததாக இருக்கிறதா? அல்லது அவர்கள் சோம்பேறிகள், தகுதியற்றவர்கள் என நான் அவர்களைப் பழிக்கிறேனா?

பழித்தல் தவறு. பெருமிதம் கொள்தல் தவறு.

எது சரி?

அடுத்தவர் என்னைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு நல்லவனாய் இருத்தலே சிறப்பு.


Monday, August 17, 2020

நிராகரிக்கப்படும் ஆஃபர்

இன்றைய (18 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 19:23-30)

நிராகரிக்கப்படும் ஆஃபர்

பாதி வழி வந்த இளவல் மீதி வழி செல்ல முடியாமல் தன் வழி நடக்க, இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் இடையே உரையாடல் தொடர்கிறது. உரையாடலில் இரண்டு கருத்துருக்கள் இடம் பெறுகின்றன: (அ) செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். (ஆ) இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு

அ. செல்வரும் விண்ணரசும்

'செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்' எனச் சொல்கிறார் இயேசு. 'செல்வர்' என்றவுடன் நாம் உடனடியாக, செல்வம் படைத்த மற்றவர்களைத்தான் பல நேரங்களில் நினைக்கின்றோம். பெரிய அடுக்குமாடியில் குடியிருந்து, வங்கியில் நிறைய சேமிப்பு வைத்திருந்து, நிறைய நிலபுலங்கள் வைத்திருக்கும் மற்றவர்களை நாம் நம் மனத்திற்குள் சுட்டிக்காட்டி, அவர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்று சொல்லி நாம் அகமகிழ்கிறோம். அது தவறு. இரண்டு புரிதல்கள் அவசியம். ஒன்று, 'செல்வம்' என்பது சார்பியல் வார்த்தை. எடுத்துக்காட்டாக, 'அவன் உயரமானவன்' என்ற வாக்கியத்தில், 'அவன் யாரைவிட உயரமானவன்' என்ற ஒப்பீடு அடங்கியுள்ளது. இந்த ஒப்பீடு இருந்தால்தான் வார்த்தையின் பொருள் கிடைக்கும். அளவு, நிறம், மதிப்பு சார்ந்த சொற்கள் அனைத்தும் சார்பியல் சொற்களே. யாரும் செல்வரும் அல்லர். யாரும் ஏழையரும் அல்லர். அல்லது எல்லாரும் செல்வர். எல்லாரும் ஏழையர். இரண்டு பெரிய வீடுகள் வைத்திருக்கும் ஒருவரை நான் செல்வர் என அழைக்கிறேன் என்றால், நல்ல உடல்நலத்தோடு இருக்கும் ஏழையும் செல்வரே. இரண்டு, செல்வத்தைப் பற்றிய புரிதல் விவிலியத்தில் தெளிவாக இல்லை. செல்வம் மறுக்கும் விவிலியமே, விண்ணரசைப் புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகிறது என்பதை மனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஆனால், செல்வம் என்பது சீடத்துவத்துக்கான பெரிய தடை என்பதில் விவிலியம் தெளிவாக இருக்கிறது. அந்த ஒரு பின்புலத்தில்தான் இந்தப் பாடத்தைப் புரிந்துகொள்தல் வேண்டும். செல்வம் ஏன் தடையாக இருக்கிறது? செல்வம் ஒருவருக்குத் தன்னிறைவைக் கொடுக்கிறது. செல்வம் இருந்தால் கோவில் கதவுகள் தானாகவே திறக்கும். எடுத்துக்காட்டாக, திருப்பதி கோவிவில், நேர்மையான செல்வம் ஈட்டிய ஒருவர் தன் காணிக்கையை பெருமாளுக்குக் கொடுக்க நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதி, இலஞ்சப் பணத்தில் காணிக்கை கொடுக்க, அதே இலஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி, விஐபி நுழைவுச்சீட்டு பெற்று, ஓரிரு நிமிடங்களில் கடவுளின் அருளைப் பெற முடியும். இதே நிலை நம் ஆலயங்களிலும் சில நேரங்களில் நீடிக்கிறது. பங்கு ஆலயத்திற்கு அள்ளிக் கொடுக்கும் ஒருவர் அலுவலகம் வந்தால் அவருக்கு உடனடியாக வேலை நிறைவேறுகிறது. காத்திருக்கும் மற்றவர்கள் காத்துக்கொண்டே இருக்க வேண்டும். செல்வத்தால் இப்படி நிறைய பலன்கள் இருப்பதால்தான் சபை உரையாளரும், 'பணம் இருந்தால்தான் எல்லாம் கிடைக்கும்' (காண். சஉ 10:19) என்கிறார். தன்னிறைவு பெற்ற ஒருவர் கடவுளைத் தான் உடைமையாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறார்.

உடல்நலம், பொருள், அறிவு என்னும் எல்லாச் செல்வங்களும் தன்னிறைவுக்கே இட்டுச் செல்லும். இத்தன்னிறைவை இறைவனிடமிருந்து நம்மைத் திருப்பிவிடும். இதே எச்சரிக்கையை இன்றைய முதல் வாசகமும் விடுக்கிறது.

ஆ. கைம்மாறு

செல்வங்களைத் துறக்கச் சொல்லும் இயேசு, தன்னைப் பின்பற்றுபவர்கள் நூறு மடங்கு நிலபுலன்கள் பெறுவர் எனச் சொல்கிறார். அதாவது, நான் ஓர் ஏக்கர் நிலம் துறந்தால் எனக்கு நூறு ஏக்கர் கிடைக்கும். செல்வத்தைத் துறக்கும் ஒருவருக்கு செல்வமே மீண்டும் வாக்களிக்கப்படுவது புதிராக இருக்கிறது. 'எல்லாவற்றையும் விட்டு விட்டு நாங்கள் உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்று பேதுரு இயேசுவிடம் கேட்கின்றார். இயேசுவும், 'நீங்கள் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்பீர்கள்' என்றும், 'இழந்தவை அனைத்தும் நூறு மடங்கு கிடைக்கும்' எனவும் கூறுகின்றார். இயேசுவின் ஆஃபர் இன்றுவரை நிராகரிக்கப்படுகிறது. இயேசுவின் ஆஃபர் அப்படி ஒன்றும் இன்று யாரையும் ஈர்க்கவில்லை. ஏனெனில், இயேசுவின் ஆஃபர் மறுவுலகம் சார்ந்தது. செல்வர்கள் மறுவுலகை நம்புவதில்லை. இவ்வுலகிலேயே விண்ணகத்தை அனுபவிக்கும் ஒருவருக்கு மறுவுலகில் விண்ணகம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? செல்வர்கள் உடனடி ஆஃபரையே விரும்புகின்றனர்.

ஆக, இரண்டு கருத்துருக்களிலும் செல்வம், சீடத்துவத்துக்கான தடை என்பது முன்வைக்கப்படுகிறது.

என் இதயம் எங்கே இருக்கிறதோ அதுவே என் செல்வம்.

இறைவன் மேல் இருந்தால் அது விண்ணகம்.

மற்றதன் மேல் இருந்தால் அதை நான் இழக்க வேண்டும்.


Sunday, August 16, 2020

நிறைவுள்ளவராக விரும்புதல்

இன்றைய (17 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 19:16-22)

நிறைவுள்ளவராக விரும்புதல்

'நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' என்று தன்னிடம் கேட்டு வருகின்ற இளைஞரிடம், 'கட்டளைகளைக் கடைப்பிடியும்' என்கிறார் இயேசு.

பின், அக்கட்டளைகள் எவை என்பதை, பத்துக் கட்டளைகளிலிருந்து சிலவற்றை எடுத்தாண்டு விடையளிக்கிறார்.

தொடர்ந்து, 'நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடும்!' என்கிறார். இளைஞர் முகவாட்டத்தோடு செல்கின்றார்.

இங்கே, பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்த இளைஞன், இயேசுவின் இந்தக் கட்டளையை ஏற்க மறுத்துவிடுகிறார்.

அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது என்பது ஒரு காரணம்.

இயேசுவின் வார்த்தைகளைக் கட்டளையாக ஏற்றுக்கொள்ளாதது இன்னொரு காரணம்.

இங்கே, இயேசு, செல்வந்த இளைஞன் தன் சொத்துக்களை இழக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஏனெனில், இழத்தலுக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. செலவழித்தல், வீணடித்தல், பரிசாகக் கொடுத்தல், கடனாகக் கொடுத்தல் என்னும் நிறைய வழிகளில் ஒருவர் தன் சொத்துக்களை இழக்க முடியும். ஆனால், இங்கே, இழத்தல் என்பது, ஒருவர் தன்னிடம் உள்ளதை ஏழைகளின் வயிற்றுக்கு அல்லது வாழ்வுக்கு மாற்றுவது. 

அல்லது, தானே ஓர் அடையாளமாக மாறுவது.

நிறைவாழ்வு என்பது குறைகளோடு இருக்கும் ஒருவரைக் கண்டுபிடித்து அவரை நிறைவுசெய்வது.

அவ்வளவுதான்!

ஆக, அடுத்தவர் மைய வாழ்வுக்கு இளைஞரை அழைக்கின்றார் இயேசு.

இயேசுவின் சமகாலத்தில், பத்துக் கட்டளைகள் எல்லாம் ஒவ்வொருவருடைய தனி மனித முன்னேற்றத்திற்காகவும், தூய்மைக்காகவும், அறநெறிக்காகவும் தேவையானவை எனக் கருதப்பட்டன. ஆனால், அவற்றைத் தாண்டி பிறரோடு இணைந்த ஓர் அறநெறிக்கு அழைக்கின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 24:15-24), தன் இறைவாக்குப் பணியில், தன் மனைவியை இழக்கும் எசேக்கியேல் தானே ஓர் அடையாளமாக மாறி நிற்கின்றார். யூதா நாட்டினர் எசேக்கியேல் போலத் துக்கம் கொண்டாடவும் வழி அறியாமல் நாடு கடத்தப்படுவர் என்ற செய்தியை ஆண்டவராகிய கடவுள் அவருடைய இழப்பின் வழியாக வழங்குகின்றார்.

நாம் கற்கும் பாடங்கள் எவை?

நிலைவாழ்வு பற்றிய விருப்பம் கொள்தல்.

இயேசுவிடம் வருதல்.

முகமலர்ந்து செல்தல்.


Saturday, August 15, 2020

மரிய ராஜ் நினைவேந்தல்

மதுரை உயர்மறைமாவட்டம் 

இன்று தன் மூத்த அருள்பணியாளர்களில் 

ஒருவரை இழந்து நிற்கின்றது. 

மகிழ்ச்சி

மன நிறைவு

மனச் சுதந்திரம்

மரிய ராஜ்!

மரியாள் விண்ணக ராஜ்யம் சென்ற இன்றே,

தான் இவ்வளவு நாள்கள் இங்கே கண்ட காணும் கடவுளைக் காண

அங்கே சென்று விட்டார் மரிய ராஜ்!

'அப்பொழுது, 'என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா? என்று ஆகார் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, 'காண்கின்ற இறைவன் நீர்' என்று பெயரிட்டழைத்தாள்' (தொநூ 16:13)

அருள்பணி மரிய ராஜ் அவர்களின் ஆன்மீகம், தனிமனித வாழ்வு, பிறரோடு உறவு என அனைத்திற்கும் ஊற்றாக இருந்தது மேற்காணும் விவிலிய வார்த்தைகள் மட்டுமே.

தன்னை இறைவன் காண்கின்றார் என்பதால் மகிழ்ச்சியாக இருந்தார்.

தன்னை இறைவன் காண்கின்றார் என்பதால் மனநிறைவோடு இருந்தார்.

தன்னை இறைவன் காண்கின்றார் என்பதால் மனச்சுதந்திரத்துடன் இருந்தார்.

இவர், தன் வாழ்வை, ஆகாரின் பாலைநிலப் பயணத்தின் உருவகமாகவே எண்ணியிருந்தார். பயணியாகவே தன் வாழ்ந்தார்.

(அ) பயணிகள் சுமைகள் அதிகம் வைத்துக்கொள்வதில்லை. அருள்பணி மரிய ராஜ் அவர்கள் எதையும் சுமக்கவில்லை. தன்னிடம் உள்ளதைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் எங்கள் இல்லத்தின்முன் உள்ளவர்களுக்கு வாரி வழங்கியவர். 

(ஆ) பயணிகள் சகப் பயணிகளோடு கோபித்துக் கொள்வதில்லை. அருள்பணி. மரிய ராஜ் அவர்களின் எந்த ஒரு சொல்லும் செயலும் யாருக்கும் காயம் இழைத்ததில்லை. அனைவரையும் கடவுளின் கண்களால் கண்டவர். 'மாட்சியின் பெரியோரைக் கண்டு அவர்; வியந்ததும் இல்லை. சிறியோரை இகழ்ந்ததும் இல்லை!'

(இ) பயணிகள் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள். நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்ந்தார் அருள்பணி. மரிய ராஜ். கடந்த காலத்தின் பதிவுகள் அவர்மேல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எதிர்காலம் பற்றிய பார்வைகள் அவருக்கு அச்சம் தரவில்லை.

உரோமையில் அவர் ஏறிய பாப்பிறை விவிலியக் கல்லூரியின் படிக்கட்டுக்களில் நானும் ஏறி பாடம் பயின்றேன் என்பதிலும், அவரோடு ஓராண்டு அருகிருந்தேன் என்பதிலும் நான் மகிழ்கிறேன். திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரிக்கு மாறுதலாகி நான் வந்தபோது, உடன் வந்து என்னை ஆசீர்வதித்தவர் என்பதிலும் நான் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.

அருள்பணி வாழ்வு என்னும் அழைப்பின் மகிழ்ச்சி.

எந்த நிலையிலும் தளர்ந்து போகாது மனநிறைவு.

தன் நம்பிக்கையை இறுதிவரை வாழ்ந்த மனச்சுதந்திரம்.

இவை நான் இன்று இவரிடம் கற்கின்ற பாடங்கள்.

அருள்பணி. மரிய ராஜ் இல்லாத பேராயர் இல்லம், 

ஆகார் இல்லாத ஆபிரகாமின் வீடு போலவே இருக்கும்.

தன் ஆசைகளைத் தனக்குள்ளே வைத்துக்கொண்டு 

பாலைவனத்தில் பயணப்பட்ட ஆகார் போல,

எங்களைவிட்டுப் புறப்பட்டுப் போன அன்பு அருள்பணியாளரே!

உம் ஆசைகளை எமக்கு ஆசீகளாகத் தரும்!

அன்புடன்,

உம் சகோதர அருள்பணியாளர்கள்


அறிவு வெல்லும்!

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

I. எசாயா 56:1,6-7 II. உரோமையர் 11:13-15,29-32 III. மத்தேயு 15:21-28

அறிவு வெல்லும்!

மாரியோ புட்ஸோ எழுதிய மிக அழகிய புதினம் 'தெ காட்ஃபாதர்.' ஆங்கிலத்தில் மூன்று பகுதிகளாக இது திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. 'பத்ரோனே' என்ற இத்தாலிய பதத்தின் ஆங்கிலம்தான் 'காட்ஃபாதர்.' தமிழில், 'ஞானத்தந்தை'. சில ஊர்களில் 'தொட்டப்பா' என அழைக்கிறார்கள். அதாவது, திருமுழுக்கின்போதும், உறுதிப்பூசுதலின் போதும் குழந்தையின் தோளைத் தொடுகின்ற அப்பா. 'மனிதர்கள் மிகவும் கட்டுப்பாடற்றவர்கள். ஆகையால்தான், இவ்வுலகில் கடவுள் அவர்களை வளர்க்க, ஒரு தந்தையையும், ஒரு ஞானத்தந்தையையும் அனுப்புகிறார்' என்று இத்தாலி நாட்டில் வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. ஞானத்தந்தை-பிள்ளை உறவு மிகவும் மேன்மையானதாக இத்தாலி நாட்டில் போற்றப்படும். அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலியர்களின் ஒட்டுமொத்த, 'ஞானத்தந்தையாக' உருவெடுக்கும் 'டான் கொரேலெயோனே' என்னும் கதாநாயகனைக் கொண்ட புதினமே இது. இதில் எனக்குப் பிடித்த வரிகளில் ஒன்று, 'மனிதர்களை எப்போதும் அறிவுசார் முறையில் பேசிச் சமரசம் செய்ய முடியும்.' அல்லது 'அறிவுசார் முறையில் பேசி நாம் எதையும் சாதிக்கலாம்.' இவ்வார்த்தைகளை அவர் அடிக்கடிச் சொல்வார். இதில் அடங்கியிருக்கும் செய்தி என்னவென்றால், வெறும் உணர்ச்சிகளால் அல்லது உணர்வுக் கிளர்ச்சிகளால் செய்ய முடியாததை அல்லது சாதிக்க முடியாததை, அறிவுசார் முறையில் சாதிக்கலாம். என்மேல் ஒருவர் கோபம் கொண்டு என்னைப் பார்த்துக் கத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர், தன் அறிவைப் பயன்படுத்தாமல், என்மேல் கோபம் என்ற உணர்வைப் பயன்படுத்துகின்றார். இப்போது, நானும் அவருக்கு எதிராக, கோபம் அல்லது தற்காப்பு என்னும் உணர்வைப் பயன்படுத்தினால், அங்கே இரண்டு உணர்ச்சிகளின் வெடிப்பு நிகழுமே தவிர, எந்த நேர்முக மாற்றமும் இராது. ஆனால், நான் பதிலுக்கு அவர்மேல் கோபம் கொள்ளாமல், சற்று அமைதியாக இருந்து, 'இவர் ஏன் இதைச் சொன்னார்? இவரின் கோபத்திற்குக் காரணம் என்ன? இவ்வளவு கோபம் கொள்ளும் அளவுக்கு என் செயல் அவர்மேல் ஏற்படுத்திய தாக்கம் என்ன?' என நான் அறிவுசார் முறையில் யோசிக்கத் தொடங்கினால், நான் என் உணர்வுகளைக் என் கட்டுக்குள் வைப்பதோடு, அடுத்தவரின் கோபத்தையும் என்னால் சரி செய்ய முடியும்.

'அறிவுசார் முறையில் பேசி எதையும் சாதிக்கலாம்!' என இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஓர் இனியவர், பேய் பிடித்த இளவல் ஒருத்தியின் தாய்.

இயேசு, கானானியப் பெண்ணை அல்லது அவளுடைய மகளை, 'நாய்' அல்லது 'நாய்க்குட்டி' என அழைக்கும் பகுதியை (நற்செய்தி வாசகம், காண். மத் 15:21-28) வாசிக்கும்போதெல்லாம் என்னில் சில நெருடல்கள் எழுவது உண்டு:

1. அந்தப் பெண்ணை அல்லது அவளுடைய மகளை, இயேசு மட்டும், 'நாய்' என அழைக்கவில்லை. இயேசு ஒரு முறை அழைக்கிறார். நற்செய்தியாளர் அதைத் தன் எழுதுகோல் கொண்டு எழுதும்போது, அந்தப் பெண்ணை, 'நாய்' என அழைக்கிறார். நீங்களும், நானும் அந்தப் பாடத்தை வாசிக்கும் போதெல்லாம், அந்தப் பெண்ணை நம் மனத்தில் அல்லது சொற்களில், 'நாய்' என்றே அழைக்கின்றோம். அன்று தொடங்கி, இன்று வரை, பாவம் அந்தப் பெண்! தனக்கு முன்பின் தெரியாத பலரால், 'நாய்' என்றே அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.

2. இயேசு தன் சமகாலத்து யூத மேட்டிமை உள்ளம் கொண்டவராகவே வளர்கின்றார். இதற்கு எதிராகச் சிலர் சொல்வதுண்டு: அப்படியெல்லாம் இல்லை! இயேசு தான் எல்லாருக்குமானவர் என்று அவருக்குத் தெரியும். அந்தப் பெண்ணைச் சோதிப்பதற்காகத்தான் அவ்வாறு சொன்னார் என்று. அப்படி அவர் சோதிக்கிறார் என்றால், தன்னிடம் வந்த நூற்றுவர் தலைவனிடம் சொல்லியிருக்கலாமே! அவனும் புறவினத்தான் தானே! ஏன் அவனுடைய இல்லத்திற்கு, அவன் அழைக்காமலேயே செல்ல விரும்புகின்றார்? அதற்குப் பதிலாக, 'கண்ட நாய் வீட்டுக்கெல்லாம் வர முடியாது!' என்று சொல்லியிருக்கலாமே! இயேசுவுக்கு பயம் இருந்திருக்கும். ஏனெனில், அவன் நூற்றுவர் தலைவன். அப்படி இயேசு அவனிடம் சொல்லியிருந்தால், இயேசுவும் அவருடன் உடனிருந்தவர்களும் அடுத்த நாள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. இந்த அபலைப் பெண்ணிடம் மட்டும் இயேசு ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? பாவம் அந்தப் பெண்! புறவினத்துப் பெண்! பேய் பிடித்த குழந்தையின் தாய்!

3. இயேசு மிகக் குறுகிய மனப்பான்மை கொண்டவராக அல்லது சமயோசித புத்தி இல்லாதவராக இங்கே இருக்கிறார். அதாவது, விளைவு தெரியாமல் பேசுகிறார். இந்நற்செய்தி வாசகத்தின்படி இயேசு நடந்து செல்லும் பகுதி, தீர், சீதோன் பகுதி. முழுக்க முழுக்க புறவினத்தார் வாழும் பகுதி. அந்தப் பெண்ணை, 'நாய்' என்று அழைத்தவுடன், அவள் ஊருக்குள் சென்று, 'டேய்... எல்லாரும் வாங்கடா! நம்ம சாதிக்காரனுகள அல்லது நம்ம இனத்துக்காரனுகள, இங்க ஒருத்தன் 'நாய்னு' சொல்லிட்டான். இந்த ஊரை விட்டு அவனுக தாண்டுறதுக்குள்ள அவனுகள ஒரு வழி பண்ணிடுவோம்!' என்று ஊருக்குள் சென்று, ஆட்களைக் கூட்டி வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இயேசுவும் அவருடைய சீடர்களும் தப்பி ஓடியிருப்பார்களா? அல்லது 'தெரியாம சொல்லிட்டோம்' என்று மன்னிப்பு கோரியிருப்பார்களா? 

4. 'அவள் கத்திக்கொண்டு வருகிறாள்' - இப்படித்தான் அந்தப் பெண்ணை இயேசுவிடம் அறிமுகம் செய்கிறார்கள் சீடர்கள். சீடர்களும் யூத மேட்டிமை உணர்வு கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஒருத்தியின் புலம்பல், கையறுநிலை, தேவையில் இருக்கும் நிலை இன்னொருவருக்கு வெறும், கத்தலாகவும், கூச்சலாகவும் கேட்கிறது. இயேசு தன் சீடர்களுக்குச் சரியாகப் பாடம் கற்பிக்கவில்லை என நினைக்கிறேன். அனைவரையும் மதிக்கவும், குறிப்பாக, தேவையில் இருப்பவர்களின் மனம் நோகாமல் பேசவும் கற்றுக்கொடுத்திருக்கலாம். அல்லது, தன் தலைவனைப் போலவே தாங்களும் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சீடர்கள் அப்படிக் கேட்டிருக்கலாம்.

5. இயேசு, உணர்ச்சிகளுக்கு அடிமையானவராக இருக்கிறார். தன்னிடம் உதவி கேட்டு வருகின்ற பெண்ணிடம், அவர்  'ஆம்' என்றால் ஆம் எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, தன்னுடைய இனவெறுப்பை அவளிடம் கொட்டுகின்றார். ஆக, இன்னொருவரைப் பார்த்தவுடன் என்னுடைய உணர்வுகள் மேலோங்கி வருகின்றது என்றால், அது சால்பு அல்ல. 

6. நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று! அது எப்படி ஸாரே? நான் என் ஊருக்குச் செல்கிறேன். செல்லும் வழியில், அருள்மிகு ஆண்டாள் கோயில் இருக்கிறது. என் வாழ்வின் பிரச்சினைகளை ஆண்டாள் தீர்த்து வைப்பாள் என நினைத்து நான் உள்ளே சென்று அர்ச்சனை செய்யும் வரிசையில் நிற்கிறேன். அர்ச்சனை தட்டை ஏந்திக்கொண்டு அனைவருக்கும் திருநீறு கொடுத்துக்கொண்டே வருகிறார் அர்ச்சகர் என்னும் ஓர் அவாள். அவாள் என் கழுத்தில் உள்ள சிலுவையைப் பார்த்துவிட்டு என்னிடம், 'கிறிஸ்தவ ...களுக்கெல்லாம் நாங்கள் திருநீறு கொடுப்பதில்லை. இது வைணவர்களுக்கு மட்டும்தான்!' எனச் சொல்வதாக வைத்துக்கொள்வோம். உடனே நானும், 'ஐயோ! அப்படியன்று ஐயனே! நீங்கள் கொடுக்கும் திருநீற்றைத்தானே நாங்கள் திருநீற்றுப் புதன் (சாம்பல் புதன்) அன்று பூசிக்கொள்கிறோம்' என்று பதில் சொல்கிறேன். அவாளும், 'தம்பி! உன் நம்பிக்கை பெரிது! நீ விரும்பியபடியே நடக்கும்!' என்று சொல்லி அனுப்புகிறார். இந்த நிகழ்வு எத்துணை மடைமையானது இல்லையா? இது மடைமை என்றால் நற்செய்தி வாசகத்தில் நிகழ்வதும் மடைமை தானே!

இந்த நிகழ்வில், மேற்காணும் நெருடல்களோடு பார்க்கும்போது, நம் நாட்டில் உள்ள வந்தேறி பார்ப்பனர்களுக்கும், இயேசுவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவர்கள், பிரம்மணின் உடலிலிருந்து படைக்கப்படாதவர்களைப் பஞ்சமர்கள் என்றும், காலிலிருந்து படைக்கப்பட்டவர்களை சூத்திரர்கள் என்றும் அழைக்கிறார்கள். இயேசுவும், தன் யூத இனத்தைச் சாராத மற்றவர்களை 'நாய்' அல்லது 'நாய்க் குட்டி' என்று அழைக்கின்றார். இந்த ஆறு நெருடல்களையும், ஒரே கேள்வியில் சொல்வதென்றால், நம்ம ஊரில் ஒரு சொலவடை உண்டு: 'உன்கிட்ட குச்சி இருக்கிறது என்பதற்காக, எல்லாரையும் நீ குரங்குன்னு நினைப்பியா?' - இப்படித்தான் இயேசுவிடம் கேட்கத் தோன்றுகிறது.

நிற்க.

ஒரு குழுவினர் தங்களையே பிறப்பின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும், நிறத்தின், மொழியின், இனத்தின், சாதியின், மதத்தின் அடிப்படையிலும் தங்களை மேலானவர்கள் என நினைத்து, அவர்கள் சாராதவர்களைக் கீழானவர்கள் என்னும் கருதுபோக்கு இன்று வரை தொடர்கிறது. அது இன்னும் தொடரும். ஏனெனில், ஒருவர் மற்றவரைப் பிரித்துப் பார்ப்பதையும், தன்னை மேலானதோடு ஒட்டிக்கொள்வதையுமே மனித மனம் விரும்புகிறது.

பெயரில்லாத இந்தப் பேதை நமக்கு மட்டுமல்ல, நம் ஆண்டவராகிய இயேசுவுக்கே பாடம் கற்பிக்கின்றாள்.

தன் மேட்டிமை உணர்வாலும், தன் இனத்தின் மேலுள்ள பற்றாலும் பார்வையற்றவராக நின்ற இயேசுவின் கண்களைத் திறக்கிறாள். இந்த நிகழ்வின் படி, இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும்தான், 'மேட்டிமை உணர்வு' என்னும் பேய் பிடித்திருப்பதுபோலத் தெரிகிறது. அந்தப் பேயை அவள் தனது நம்பிக்கையால் அல்ல, மாறாக, தனது அறிவால் விரட்டுகின்றாள். அறிவு வெல்லும் எனக் காட்டுகின்றாள் இந்தப் பெண்.

இயேசுவின் பதில்மொழி அந்தப் பெண்ணுக்கு மூன்று நிலைகளில் இருக்கிறது:

முதலில், மௌனம் காக்கின்றார்.

இரண்டாவதாக, தன் பணி தன் இனத்து மக்களுக்கு மட்டுமே என வரையறுக்கின்றார்.

மூன்றாவதாக, அப்பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டி, அவள் விரும்பியவாறே நடக்கும் எனச் சொல்லி அனுப்பிவிடுகின்றார். அந்நேரமே பிணி நீங்குவதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.

இயேசு கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார். தூரம், பக்கம், உடனிருப்பு என நெருங்கி வருகின்றார்.

அந்தப் பெண், இயேசுவைப் போல வளரத் தேவையில்லை. அவள் ஒரே இடத்தில் நிற்கிறாள். அவள் கடவுள்போல. அவள் என்றும் ஒன்றுபோலவே இருப்பாள். அவள் மாறவில்லை. அவள் மாறத்தேவையில்லை. 

முதலில், இவர் 'தாவீதின் மகன்' என இயேசுவை அறிவுப்பூர்வமாக ஏற்று அறிக்கையிடுகின்றாள்.

இரண்டாவதாக, சீடர்கள் கடிந்துகொண்டபோது, பின்வாங்காமல், அல்லது அவர்களோடு கோபம் கொள்ளாமல், தன் கத்தலில் உறுதியாக இருக்கின்றாள். அது ஓர் அறிவுப்பூர்வமான மனவுறுதி.

மூன்றாவதாக, 'மேசையும் தரையும் வேறு, பிள்ளையும் நாயும் வேறு, ஆனால் மேலிருக்கும் ரொட்டியும் கீழிருக்கும் ரொட்டியும் ஒன்று' என்று அறிவுப்பூர்வமாக விடையளிக்கின்றாள்.

அறிவால் அழைத்து, அறிவால் நிலைத்து நின்று, அறிவால் பதிலிறுப்பு செய்து தான் விரும்பியதைப் பெற்றுக்கொள்கின்றாள் பெண்.

இந்த நிகழ்வில் நான் கற்கும் பாடங்கள் எவை?

அ. அறிவு வெல்லும்! இன்றைய கொரோனா காலத்தில், 'எங்களைப் பிடித்திருக்கும் பேய் நீங்கட்டும்!' என்று கடவுளிடம் மேலோட்டமான நம்பிக்கை கொண்டிருப்பதற்குப் பதிலாக, 'எம்மில் இருப்பது உம் சாயல்தானே! நாங்கள் அழிந்தால் நீருமல்லவா எங்களோடு சேர்ந்து அழிகின்றீர்! எங்களைக் காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை. உம் சாயலையாவது நீர் காப்பாற்றிக்கொள்ளலாமே!' என்று அறிவுசார் சமசரம் கடவுளோடு அவசியம். அறிவுசார் விதத்தில், நாம் அவரின் சாயலைக் கறைப்படுத்திய நிலையை எண்ணிப் பார்த்து, அறிவுசார் விதத்தில் அதைத் தூய்மையாக்குதல் நலம்.

ஆ. தேடலில் தெளிவு! அந்தப் பெண்ணின் தேடல் தெளிவாக இருந்தது. தேவை தெளிவாக இருந்தால்தான் தேடல் தெளிவாக இருக்க முடியும். தேடல் தெளிவாக இருந்தால் அதை அடைவது நிச்சயம் எனக் கற்பிக்கிறாள் அந்தப் பெண். தன் குழந்தைக்கு நலம் கிடைக்க வேண்டும் என்பது அவளுடைய தேவையாக இருந்தது. அந்தத் தேவையைத் தன் தேடலாக மாற்றிக்கொள்கின்றாள். அந்தத் தேடல் நிறைவேறும் வரை மனவுறுதியோடு தொடர்ந்து போராடுகிறாள். இன்று என் மனவுறுதி குறைவதற்குக் காரணம் என் தேவையும், தேடலும் தெளிவாக இல்லாமல் இருப்பதுதான்.

இ. உணர்வுசார் கிளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்தல்! இன்று நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நம் உணர்வுகளைத் தூண்டி எழுப்பி, நம் சிந்தனையை, அறிவை மழுங்கடிக்கின்றன. ராமர் கோயில், கந்த சஷ்டி கவசம், கறுப்பர் கூட்டம் போன்றவை நம் மத உணர்வையும், இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதம்-இந்தித் திணிப்பு போன்றவை நம் மொழி உணர்வையும், கார்கில், பாகிஸ்தான், சீனா, சுதந்திர தினம் போன்றவை நம் தேசிய உணர்வையும் தூண்டிவிடுகின்றன. கொஞ்சம் அமர்ந்து, அறிவுக்கு உட்படுத்தினால், எந்த மதமும் மேலானதும் அல்ல, எந்த மொழியும் உயர்ந்ததும் அல்ல, எந்த நாடும் சிறப்பானதும் அல்ல. எல்லாம் மதங்கள். எல்லாம் மொழிகள். எல்லாரும் மனிதர்கள். அவ்வளவுதான்! வெறும் உணர்ச்சிகளையும், உணர்வுக் கிளர்ச்சிகளையும் வைத்து கிறிஸ்தவமும் வரலாற்றில் பல தவறுகளைச் செய்திருக்கின்றது. இன்றுவரை நம் ஆழ்மனத்தில் இருக்கும் கிறிஸ்தவ மேட்டிமை உணர்வு மற்ற கடவுளர்களை, 'பேய்கள்' என அழைக்கிறது. கிறிஸ்தவத்திற்குள் உள்ள சாதியக் கட்டமைப்பில், நம் சாதி தரும் மேட்டிமை உணர்வு, ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்குபெறுபவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறது.

என் விருப்பம் எல்லாம்... அந்தப் பெண், அந்தக் கானானியப் பெண், மீண்டும் நம் நடுவில் வந்து, கத்த வேண்டும் என்பதே!

அவள் தன் கதறலையே இறைவனுக்கு உகந்த புகழ்ச்சியாக மாற்றினாள் (காண். திபா 67). இயேசுவின் ஓட்டத்தை நிறுத்தி, அவரை உலுக்கிய அவள், இன்று நம்மையும் நிறுத்தி உலுக்கட்டும்!

Friday, August 14, 2020

விண்ணேற்பும் விடுதலையும்

இன்றைய (15 ஆகஸ்ட் 2020) திருநாள்

விண்ணேற்பும் விடுதலையும்

இன்று நம் தாய்த்திருநாட்டின் 74வது விடுதலைப் பெருவிழாவையும், தம் அன்னை கன்னி மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவையும் கொண்டாடி மகிழ்கிறோம்.

கொரோனாப் பெருந்தொற்று காலத்தில், விடுதலை என்பதன் அவசியத்தை நாம் மிகவே உணர்கிறோம். இதே தொற்றைப் பயன்படுத்தி, மக்களை எப்படி அடிமைப்படுத்தலாம் என்பதை நம் அரசு செய்கிறது. ஏறக்குறைய 200 ஆண்டுகள் நாம் இங்கிலாந்து அரசின் பிடியில் இருந்தோம். விடுதலை பெற்றோம். நம் ஆட்சியாளர்கள் விரும்பினால், இந்தக் கொரோனாவைப் பயன்படுத்தி, இன்னும் 200 ஆண்டுகள் நம்மை அடிமையாக வைத்திருக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக, கார்கில் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் ஒலிபரப்பான திருச்சி பண்பலையில், கார்கில் போரில் பங்கேற்றவர்களோடு ஒரு நேர்காணல். அந்த நேர்காணலில் செய்தியாளர் மற்றவரிடம், 'நீங்க பாகிஸ்தான் காரர்களை நேருக்கு நேர் சந்தித்து போரிட்டார்களா? அவர்கள் எப்படி இருந்தார்கள்?' எனக் கேட்கிறார். என்ன ஒரு இனவெறுப்பு பாருங்கள்! பாகிஸ்தான்காரர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாமே. அவர்கள் எப்படி இருப்பார்கள்? கேள்வி கேட்ட நபரைப் போலத்தான் இருப்பார்கள். ஒரே நாடாக இருந்துவிட்டு, பின் நாமே பிரிந்துவிட்டு, அவர்களை எதிரி என்று சொல்லி, தேசியம் என்ற போலி மாயையை உடுத்திக்கொள்கிறோம். பிரித்தானிய அரசிடமிருந்து நாம் விடுதலை வாங்கவில்லை. நாம் எப்போதும் விடுதலை பெற்றே இருக்கிறோம். அல்லது இன்று அன்று இருந்த விடுதலைக் காற்று இன்று இல்லை.

இன்றைய தகவல்தொழில்நுட்ப உலகில் எனக்குத் தான்மை என்பதே கிடையாது. இணையத்தைப் பொருத்தவரையில் நான் ஒரு டேட்டா. அரசியலைப் பொருத்தவரையில் நான் ஓர் ஓட்டுவங்கி. வணிகத்தைப் பொருத்தவரையில் நான் ஒரு நுகர்வோன். சமயத்தைப் பொருத்தவரையில் நான் ஒரு பற்றாளன். நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்தக் கோவில்சாமியைக் கும்பிட வேண்டும், என்ன மொழியில் படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், என்ன சம்பளம் வாங்க வேண்டும், அதில் எவ்வளவு அரசுக்குக் கொடுக்க வேண்டும் என எதுவுமே நான் முடிவுசெய்ய முடியாதபோது நான் விடுதலை பெற்றவன் என்று எப்படிச் சொல்ல முடியும்?

முடியும்! என்கிறார் மரியா.

எப்படி?

'தெ காட்ஃபாதர்' நாவலில் இன்னொரு அழகான வரியும் உண்டு: 'ஒரு பத்தாயிரம் முட்டாள்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி, அரசியலுக்கு வந்து ஆட்சி செய்யும் ஒரு முட்டாளிடம் நான் என் எதிர்காலத்தைக் கொடுத்துவிட மாட்டேன். என் வாழ்வை நானே வடிவமைத்துக்கொள்வேன்.' - இப்படியாக கதாநாயகன் தன் மகனிடம் சொல்வான். 

தன் வாழ்வைத் தன் கையில் எடுத்து வாழ்ந்தவர் மரியா.

நம் அனைவருக்கும் ஒரே ஒரு விதிதான், ஒரே ஒரு வாழ்க்கைதான். அதை நாம் கண்டுபிடித்து வாழத் தொடங்கினால், யாரையும் எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.

'அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்'

- இவ்வார்த்தைகள் மரியாளின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகின்றன. நான் இப்படி இருந்தேன், கடவுள் என்னை இப்படி மாற்றினார், நான் இன்னும் இப்படி இருப்பேன் என நினைத்து தன் வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து செல்கின்றார். ஓடிக்கொண்டே இருக்கிறார் ஒரு பெண்மானாக. அந்த ஓட்டத்தின் நிறைவே அவருடைய விண்ணேற்பு.

இன்று,

நான் இணையத்தை மறுக்க முடியும். அரசியலை மறுக்க முடியும். நுகர்வதைக் குறைக்க முடியும். நம்பிக்கையை எனதாக்கிக் கொள்ள முடியும். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இந்த உணர்வுதான் விடுதலை உணர்வு. இந்த உணர்வு வந்துவிட்டால், மண்ணுலகிலேயே நாம் விண்ணேற்பு அனுபவம் பெறலாம்.

Thursday, August 13, 2020

திருமணம்

இன்றைய (14 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 19:3-12)

திருமணம்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையமாக இருக்கின்ற வார்த்தை, 'திருமணம்.' இந்த வார்த்தை மூன்று பரிமாணங்களில் எடுத்தாளப்படுகிறது:

(அ) மண உறவு

(ஆ) மண முறிவு

(இ) மணத்துறவு

மண உறவைப் பற்றி நேரிடையாக பதிவு எதுவும் இல்லை என்றாலும், மண உறவு இல்லாமல், 'முறிவு' இருக்க வாய்ப்பில்லை என்பதால், மண உறவும் குறிக்கப்படுவதாகவே நாம் எடுத்துக்கொள்வோம். இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் திருமணம் என்பது வெறும் நிகழ்வு அல்லது கொண்டாட்டம் அல்ல. மாறாக, அது ஒரு குறியீடு அல்லது உருவகம். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உடன்படிக்கை உறவை, ஆண்டவராகிய கடவுள் திருமண உறவுக்கு ஒப்பிடுகின்றார். ஆக, திருமணத்தில் இணையும் ஒவ்வொருவரும் அதே உறவுநிலையை இம்மண்ணிப் பிரதிபலிக்கின்றார். 

மேலும், திருமண உறவு என்பது படைப்பின் தொடக்கத்திலேயே, கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தபோது உருவானது. 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல' என்று சொல்லி அவனுக்கு ஏற்ற 'உதவியாளரைப்' படைக்கின்றார் கடவுள். இவ்வாறாக, திருமண உறவு கடவுளின் படைப்புத் திட்டத்தில் ஒன்றாக இருக்கிறது.

ஆனால், காலப்போக்கில் திருமண வாழ்வில் நிறையப் பிறழ்வுகள் வர ஆரம்பிக்கின்றன. முதன்மையான பிறழ்வாக இருப்பது 'பெண்ணின் பிரமாணிக்கமின்மை.' 'ஆணின் பிரமாணிக்கமின்மை' பற்றி விவிலியம் பேசவில்லை. திருமண இணைப்பில் இருக்கும் ஒரு பெண், இன்னொரு ஆணுடன் உறவு கொண்டால் அதற்கு மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து, அவரை விலக்கிவிட மோசேயின் சட்டம் அனுமதி தந்தது. இயேசு, இன்னும் ஒரு படி சென்று, அப்படி அந்தப் பெண் விலக்கிவிடப்பட்டால், ஆணும் இன்னொரு பெண்ணுடன் சேர நேர்கிறது. ஆக, அதுவும் பிரமாணிக்கமின்மை என்று புரட்சி செய்கின்றார். இவ்வாறாக, திருமணப் பிணைப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரியது எனச் சொல்கிறார் இயேசு.

இதைக் கேட்ட சீடர்கள் இடறல்படுகிறார்கள். 

'கணவர் மனைவியர் உறவுநிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது!' என்கிறார்கள் சீடர்கள்.

இந்த வார்த்தைகளை இவர்களது மனைவியர் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? சோறு கிடைத்திருக்காது!

வீடு கட்டினால், வரி செலுத்த வேண்டும், மராமத்து பார்க்க வேண்டும், அங்கே இங்கே பூச வேண்டும், வந்தது போவதைப் பார்க்க வேண்டும் என நிறைய வேலைகள் இருக்கத்தான் செய்யும். அதை விட்டுவிட்டு, 'வீட்டில் குடியிருப்பதில் இவ்வளவு பிரச்சினை என்றால், வீடு இல்லாமல் ரோட்டில் திரிவதே நல்லது!' என்று சொல்வது போல இருக்கிறது சீடர்களின் வார்த்தைகள்.

திருமண உறவுநிலையில் பிரச்சினைகள் இருப்பதுபோல, மணத்துறவிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. மணத்துறவு மேற்கொள்பவர்களைவிட திருமணம் முடித்தவர்கள் உணர்வு முதிர்ச்சி உடையவர்களாக இருப்பதாகவும், நீண்ட ஆயுள் வாழ்பவர்களாகவும், நோய்த் தொற்று அபாயம் குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள் என்கின்றன உளவியல் ஆய்வுகள்.

இயேசுவும், சீடர்களின் கருத்தை ஆமோதிப்பதாக, 'அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள இயலாது' என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் கடவுளின் படைப்புத்திட்டத்தைக் கேலி செய்வதாக உள்ளன. திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றால், கடவுள், ஆதாமை அப்படியே விட்டிருக்கலாமே? ஏன் ஏவாளைப் படைக்கின்றார்? அல்லது இருவரையும் படைத்தாலும், இருவரும் இரு உயிரிகள் என்று தனிமைப்படுத்தியிருக்கலாமே!

சில நேரங்களில் கடவுளர்கள் தங்களுக்குள்ளே இப்படித்தான் முரண்படுகிறார்கள்.

தொடர்ந்து, இயேசு மூவகை மணத்துறவு பற்றிப் பேசுகின்றார்: (அ) பிறப்பினால் வரும் மணத்துறவு. இங்கே மணத்துறவு என்பது இயலாமையால் வருகிறது. எடுத்துக்காட்டாக, என்னுடைய மரபணுப் பிறழ்வால் என் பாலியல் உறுப்புக்கள் சிதைவுறும்போது நான் பிறப்பால் மணத்துறவு ஏற்கிறேன். (ஆ) மருத்துவக் காரணங்களுக்காக மணத்துறவு. எடுத்துக்காட்டாக, எனக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் நான் என் ஆண்மையை இழக்கிறேன். அல்லது ஒரு பெண் தவறான சிகிச்சையால் தன் கருவுறும் தன்மையை இழக்கின்றாள். இது பிறரால் ஏற்படுத்தப்படும் மணத்துறவு. (இ) விண்ணரசின் பொருட்டு மணத்துறவு ஏற்பது. தங்கள் வாழ்க்கை இலக்கை அடைய விரும்புவர்கள், கவனச் சிதறல்களைக் குறைத்துக்கொள்வது. திருமணம் முடித்தல் என்பது கவனச் சிதறல் என்றும், திருமணம் முடிப்பவர்கள் இலக்கை அடைவதில்லை என்றும் பொருள் அல்ல.

இயேசுவின் இவ்வார்த்தைகள், திருஅவையில், 'மணமுடித்தவர்' மற்றும் 'மணத்துறவு கொண்டவர்' என்று பிரிவை உருவாக்கி, முன்னவர்களைத் தாழ்வானவர்கள் என்றும், பின்னவர்களை உயர்வானவர்கள் என்றும் கொண்டாட வழிவகுத்துவிட்டன. இந்த மனப்பாங்கு மாற வேண்டும்.

மண உறவும், மணத் துறவும் இரு வேறு அழைத்தல்களே!

இரண்டிலும் முறிவு வரலாம்.

இரண்டிலும் முறிவு வரக் காரணம் பிரமாணிக்கமின்மையே.

ஆனால், முன்னதில் ஏற்படும் மணமுறிவு சரி செய்யப்பட்டுவிடும். ஏனெனில், அது மனிதர்களுக்கு இடையே நடப்பது. ஆனால், பின்னதில் ஏற்படும் முறிவு ஆபத்தானது. ஏனெனில், அது மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே நடப்பது. முன்னதில் பிரமாணிக்கமின்மை மன்னிக்கப்படலாம். ஆனால், பின்னதன் பிரமாணிக்கமின்மை எந்தச் சீட்டுக் கொடுத்தாலும் மன்னிக்க இயலாதது.

மேலும், மணத்துறவு என்பது வெறும் உடல்சார்ந்த பொருள் அல்ல. மணத்துறவு ஏற்கிறேன் என நான் சொல்லிவிட்டு, உறவுகளை என் மனத்தில் சுமக்கத் தொடங்கினால் அதுவும் பிறழ்வு.

இறுதியாக, மணத்துறவின் ஒரு சாதகம் என்ன?

இன்றைய நாளில் நாம் கொண்டாடும் மாக்ஸிமிலியன் மரிய கோல்பே, நாசி வதை முகாமில், கொல்லப்படுவதற்குக் குறிக்கப்பட்ட, தன் சக கைதிக்குப் பதிலாக, தன்னையே கொல்லப்படுவதற்காகக் கையளிக்கின்றார். மணத்துறவு கொண்ட அவர், மணஉறவு கொண்ட தன் சக கைதிக்காகத் தன் உயிரை இழக்கின்றார். மணத்துறவின் மேன்மை இதுவே.

இழப்பதும் இனிதே என அறிந்துகொள்வதற்கான, முதற்பயிற்சியே மணத்துறவு. 

Wednesday, August 12, 2020

மன்னித்தல் என்னும் பளு

இன்றைய (13 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 18:21 - 19:1)

மன்னித்தல் என்னும் பளு

நேற்றைய நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து, குழும வாழ்விற்கான அடுத்த பண்பாக இயேசு முன்வைப்பது 'மன்னிப்பு.' 

'எழுபது தடவை ஏழு முறை மன்னிக்க வேண்டும்' என அறிவுறுத்துகின்ற இயேசு, தொடர்ந்து, 'எப்படி மன்னிப்பது?' என்பதை ஓர் உவமை வழியாக எடுத்துரைக்கின்றார்.

'ஓர் அரசனும் பணியாளனும்' என்னும் எடுத்துக்காட்டில், 'அரசன் மன்னிப்பது எளிது. ஏனெனில், அது அவனுடைய பணம் அல்ல. ஆனால், பணியாளன் மன்னிப்பது கடினம். ஏனெனில், அது அவனது பணம்' எனக் கடந்த முறை எழுதியிருந்தது நினைவிருக்கிறது. மேலும், அரசன் மன்னித்த பணம் அதிகம், பணியாள் மன்னிக்க மறுத்த பணம் மிகக் குறைவு என்பதும் நாம் அறிந்ததே.

பணியாளனால் ஏன் தன் சக பணியாளனை மன்னிக்க இயலவில்லை? அல்லது அரசனால் தன் பணியாளனை எப்படி மன்னிக்க முடிந்தது?

கொஞ்ச நாள்களாக நான் அறிந்த ஒன்று என்னவென்றால், 'நான் ஒருவரோடு அதிகமாக நெருக்கமாக இருக்கும்போது, அவரை அதிகமாகப் புரிந்துகொள்ளும்போதும், அல்லது அவரின் நோக்கங்கள் எனக்குத் தெளிவாகிற போதும் என்னால் அவரை மன்னிப்பது கடினம்.'

அல்லது, 'அதிகமாகப் புரிந்துகொண்டால் என்னால் குறைவாகவே மன்னிக்க முடியும்!' '(The more you understand, the less you forgive!')

இதை எடுத்துக்காட்டுக்கள் வழியாக விளக்குகிறேன்:

ஒன்று. நான் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து வங்கியில் என்னுடைய கணக்கில் செலுத்தச் சொல்கிறேன். அவர் சென்ற சில நிமிடங்களில், 'ஃபாதர், வர்ற வழியில நான் வண்டியில இருந்த கீழே விழுந்துட்டேன். என்னைத் தூக்கிவிட சிலர் வந்தார்கள். எழுந்து பார்த்தால் நீங்கள் கொடுத்த பணத்தைக் காணவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்!' என ஃபோன் செய்கிறார். நானும், 'ஐயோ! பாவம்! உங்களுக்கு ஒன்னும் ஆகலயே!' என்று சொல்லி ஃபோனை வைத்துவிடுகிறேன். அவரை நான் மன்னித்தும் விடுகிறேன். ஆனால், ஓரிரு வாரங்கள் கழித்து, மற்றவர்கள் வழியாக நான் வேறொன்றைக் கேள்விப்படுகிறேன். அவர் சாலையில் விழுந்ததாகச் சொன்னது, பணம் காணாமல் போனது எல்லாம் பொய் என உணர்கிறேன். அவர் எனக்கு ஏன் இப்படிச் செய்தார்? நான் அவருக்கு நல்லது தானே செய்தேன்? பணத் தேவை என்றால் என்னிடம் அவர் கேட்டிருக்கலாமே? என நான் அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது, அவரின் செயலுக்கான நோக்கங்களை அறியத் தொடங்கும்போது என்னால் அவரை மன்னிக்க இயலாமல் போய்விடுகிறது. அல்லது மன்னித்தல் ஒரு கடினமான அல்லது பளுவான செயலாகிவிடுகிறது.

இரண்டு. நான் நடந்து போகிறேன். சைக்கிளில் வந்த ஒருவர் என்மேல் மோதிவிடுகிறார். நான் எழுந்து தூசி எல்லாம் துடைத்துவிட்டு, 'ஐயோ! பரவாயில்லை! யாராவது வேண்டுமென்று மோதுவார்களா? இது ஒரு சிறிய விபத்துதான்! நீங்கள் போங்க!' என அவரை அனுப்பினால், என்னால் அவரை மன்னிக்க முடியும். ஆனால், வந்தவர் குடித்திருந்தாரா? என்ன நோக்கத்திற்காக என்னை இடித்தார்? யார் என்மேல் அவரை இடிக்கச் சொன்னார்கள்? என நான் அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கினால், என்னால் அவரை மன்னிக்க இயலாது.

ஆனால், நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ, நம்மை அறியாமலேயே நாம் அடுத்தவர்களைப் புரிந்துகொண்டே இருக்கிறோம். புரிதல் கூடக்கூட மன்னிப்பும் தூரமாகிவிடுகிறது. 

இயேசுவின் எடுத்துக்காட்டில் உள்ள அரசனுக்குத் தன் பணியாளனைப் புரிந்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆகையால் அவன் எளிதாகப் பணியாளனை மன்னித்துவிட்டான்.

ஆனால், பணியாளன் தன் சக பணியாளனைப் பார்க்கிறான். பணத்தைத் தன்னிடம் வாங்கிக்கொண்ட அவன், கடனைச் செலுத்துவதற்குப் பதிலாக, நன்றாகக் குடிக்கவும், குடும்பத்தோடு பிக்னிக் செல்லவும், விருந்துண்ணவும், பளபளப்பான ஆடைகள் வாங்கவும் செய்வதைப் பார்க்கும்போது, பணம் கொடுத்தவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் தன் பணியாளனுடன் கொண்டிருக்கும் நெருக்கம், அவனை மன்னிக்க இயலாதவனாக ஆக்கிவிடுகிறது. ஆகையால், அவனது கழுத்தைப் பிடிக்கிறான்.

நம் வாழ்விலும் பார்க்கலாம்.

யாருக்கோ நடந்தால், 'சரி! தெரியாம செய்துவிட்டான்! மன்னிச்சுடுங்க!' என்று சொல்வோம்.

ஆனால், என் குடும்பத்தில், என் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், அருள்பணிநிலை உறவில் யாராவது தவறு செய்தால், நம்மால் எளிதாக மன்னிக்க இயலவில்லை. ஏனெனில், இங்கே நெருக்கம் அதிகம். நெருக்கம் அதிகம் என்பதால் உரசல் அதிகம். உரசல் அதிகம் என்பதால் காயம் அதிகம். காயம் அதிகம் என்பதால் வலி அதிகம். வலி அதிகம் என்பதால் கோபமும் அதிகம்.

ஆக, நான் மற்றவரை மன்னிக்க வேண்டுமென்றால், என் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அறிதல் கூடக்கூட, புரிதல் கூடக்கூட மன்னித்தல் கடினமாகும்.

அல்லது, கண்களை மூடிக்கொண்டு, நான் மன்னிப்பு பெற்ற அனுபவத்தை எண்ணிப்பார்த்து, தாராளமாக அடுத்தவரை மன்னிக்க வேண்டும்.