Friday, December 30, 2016

திருக்குடும்பம்

இன்று திருக்குடும்பத்தின் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

நேற்று மாலை கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' ஒலிநாடா கேட்டேன்.

வீடு பற்றிச் சொல்லும்போது, 'படி' மற்றும் 'நிலை' பற்றிச் சொன்னார்.

ஒவ்வொரு வீட்டிலும் இந்த இரண்டும் இருக்கும்.

வீட்டில் இருப்பவர் 'நிலை' போல உயர்ந்திருக்க வேண்டும் எனவும், உயர்ந்திருந்தாலும் 'படி'ந்து போக வேண்டும் என நினைவூட்டவுமே 'படி-நிலை' என்கிறார் கண்ணதாசன்.

திருக்குடும்பத்திலும் இந்த படியும் நிலையும் இருந்தது.

திருக்குடும்பம் மூன்று பண்புகளைக் கொண்டிருந்தது:

அ. பாதுகாப்பு
ஆ. பயணம்
இ. வளர்ச்சி

இந்தப் பண்புகள் நமதாகலாமே!

Wednesday, December 28, 2016

கைகளில்

நாளைய நற்செய்தி வாசகத்தில் குழந்தை இயேசுவை கைகளில் ஏந்துகிறார் சிமியோன்.

குழந்தையைக் கைகளில் ஏந்தியிருக்கிறீர்களா? அதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். கழுத்து நிற்காத குழந்தையைக் கைகளில் தூக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய நாளின் மையம் குழந்தையா? முதியவரா? இரண்டு பேரும் தாம். ஒரு முதியவர் ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். ஒரு அஸ்தமனம் ஒரு உதயத்தைத் தாங்குகிறது. வாழ்வின் முடிவும் வாழ்வின் தொடக்கமும் ஒன்றையொன்று சந்திக்கிறது.

எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது? நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன் தந்தைக்காக சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்தான். மாலை மங்கும் நேரம். பணியாளர்கள் வரிசையாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எல்லார் முகமும் கறுப்பாக இருக்கின்றது. சிறுவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி, ஏறக்குறைய 700 பேர் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் வேலை முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள். எல்லாரும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால் அவரைக் கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் அவர் என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால் தான் நான் இங்கே நிற்கிறேன்.'

சிமியோனுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கம் இதுதான். அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தையை ஏந்தியவுடன் அவர் சொல்லும் சொற்களுக்கு மிகுந்த வாழ்வியல் அர்த்தம் உண்டு:

'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன'.

தன் வாழ்க்கை முடிவுற்றது. இனி தான் அமைதியாகச் செல்லலாம் என்று மொழிகின்றார் முதியவர். வாழ்வில் நமக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது 'விடைபெறுவது'. எதற்காக மரணம் அல்லது பிரிவு பயத்தைத் தருகின்றது? 'பிடிமானம்'. நாம் 'இதுதான் எல்லாம்' என எதையாவது பிடித்துக் கொள்கின்றோம். அதை விட மனம் வரவில்லை. அது கண்டிப்பாக நம்மிடமிருந்து எடுக்கப்படும் என்று தெரியும். இருந்தாலும் நாம் அதை எளிதாக விடுவதில்லை. இது வாழ்வில் மட்டுமல்ல. அனைத்துப் பணிநிலைகளிலும் இருக்கலாம். குறி;ப்பாக, அரசியலில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், மற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், ஏன் குடும்பத்தில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு கட்டத்தில் அதை விட்டுத்தாங்கள் செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. 'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று பிடித்துக் கொண்டேயிருப்பது அவர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பையே கொண்டு வருகின்றது. 'முகமலர்ச்சியுடன் விடைபெற' இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் சிமியோன். சிமியோனின் மனநிலை நமக்கு இருந்தால் இறப்பைக் கண்டும், பிரிவைக் கண்டும் பயப்படவே தேவையில்லை.

என் குடும்பத்தில், என் பணியில், என் படிப்பில், என் பயணத்தில், என் நண்பரில் நான் மீட்பைக் கண்டுகொண்டேன். என்னால் அமைதியாகப் போகமுடியும் என்று நம்மால் சொல்ல முடிந்தால் நாமும் சிமியோன்களே.

பல நேரங்களில் இவர்களில் நாம் மீட்பiயும் மகிழ்வையும் காண்பதில்லை. ஆகையால் தான் நம்மால் மகிழ்ச்சியோடு விடைபெற முடிவதில்லை. நம் வாழ்வின் உதயம் எந்த அளவிற்கு எதார்த்தமானதோ அந்த அளவிற்கு அஸ்தமனமும் எதார்த்தமானது. அஸ்தமனம் கூட அழகுதான் என்பதற்கு அடையாளம் சிமியோன்.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே ஒரு குழந்தை. ஒவ்வொரு பொழுதும் ஒரு உதயம். ஒவ்வொரு பொழுதும் ஒரு அஸ்தமனம். திறக்கின்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட வேண்டும். நாம் சந்திக்கும் உறவுகள் எல்லாம் பிரிய வேண்டும். சில நேரங்களில் பிரியம் வளர பிரிந்துதான் இருக்க வேண்டும். சந்திப்பிற்கும், பிரிவிற்கும் இடையே ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்?

Tuesday, December 27, 2016

தெ ஸ்பை

பவுலோ கோயலோ அவர்களின் வெகு சமீபத்திய புதினம் 'தெ ஸ்பை' வாசித்து முடித்தேன்.

மாத்தா ஹரி என்ற நடன இளவல் உலகப்போரின்போது எதிரி நாட்டு உளவாளியாக மாறிய கதைதான் இது.
நடனம் செய்யவும், தன் கனவு நாட்டைக் காணவும் பாரிஸ் செல்லும் இளவல் அனுபவிக்கும் வாழ்க்கைப் போராட்டமே இந்தப் புதினம்.

இந்த நாவலில் என்னைக் கவர்ந்த சிலவற்றை நான் இங்கே பதிவு செய்கிறேன்:

'நீ இன்று எப்படி உணர்ந்தாலும், எழு, ஆடை அணி, வெளியே செல்!'

---

'நீ எதைப் பற்றியும் வெட்கப்படாதே. வாழ்க்கை உனக்குக் கொடுப்பதை அப்படியே எடுத்துக் கொள். எல்லாக் கோப்பையிலிருந்தும் குடி. சிலவற்றை சொட்டு சொட்டாக. சிலவற்றை அப்படியே. எப்படி வித்தியாசப்படுத்துவது? நீ சுவையற்றதை முதலில் குடித்திருந்தால் அடுத்து வருவது சுவையாக இருக்கும்.'

---

'ஒருவர் உன் வாழ்வில் இருந்து விலகுகிறார் என்றால், மற்றவர் வரப்போகிறார் என்று பொருள். நான் அன்பை திரும்பப் பெறுவேன்.'

---

'நீ எப்படி இருப்பதாக நம்புகிறாயோ அதுதான் நீ!'

---

'எதற்கும் விளக்கம் சொல்லாதே. உன் நண்பர்களுக்கு அது தேவையில்லை. உன் எதிரிகள் அதை நம்பப் போவதில்லை.'

---

'வாழ்க்கை நம்மை எப்படி கூட்டிச் செல்கிறது என்று தெரியாத ஒருவருக்கு எதுவும் இழப்பு அல்ல.'

---

'அன்பு ஒரு மறைபொருள்.'

---

'இளைஞன் ஒருவன் இருந்தான். இளவல் ஒருத்தி இருந்தாள். நீ என்னைக் கரம் பிடிக்க வேண்டுமெனில் சிகப்பு ரோஜா ஒன்று கொண்டு வா - என்றாள் இளவல். அந்த நாட்டில் வெள்ளை ரோஜாக்கள் மட்டுமே இருந்தன. அவளின் கரம் பிடிக்க இந்த இளைஞன் காடு மேடெல்லாம் சிகப்பு ரோஜா தேடினான். இதைப் பார்த்த நைட்டிங்கேல் பறவை இவனுக்கு உதவி செய்ய நினைத்தது.

ரோஜா செடியிடம் போய், 'எனக்காக ஒரு சிகப்பு ரோஜா கொடு!' என்றது.

செடி மறுத்தது. 'என்னால் சிகப்பு ரோஜா கொடுக்க முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். முழு நிலவு நாளன்று என் முட்களில் உன்னை மோதிக்கொண்டே பாட்டுப்பாடு. அப்போது வடியும் உன் இரத்தம் என் வெள்ளை ரோஜாவை சிகப்பாக்கும்.

முழு நிலா இரவும் வந்தது. நைட்டிங்கேல் பாடிக்கொண்டே தன்னை ரோஜாவின் முள்மேல் மோதியது. அந்தப் பறவையின் இரத்தம் மெதுவாக ரோஜா செடியில் வடிந்து அதன் தண்டுக்குள் புகுந்து வெள்ளை ரோஜாவை சிகப்பாக்கத் தொடங்கியது.

'இன்னும் வேகமாக பாடு. சூரியன் வரப்போகிறது' என அவசரப்படுத்தியது செடி.

தன்னிடம் இருந்த அனைத்து இரத்தத்தையும் வடித்துவிட்டது நைட்டிங்கேல். முழுவதும் சிவந்த ரோஜாவை எடுத்துக்கொண்டு இளைஞனிடம் சென்றது பறவை. அவனிடம் கொடுத்த அடுத்த நொடி அது இறந்துவிட்டது.

சிகப்பு ரோஜாவை எடுத்துக்கொண்ட இளைஞன் தன் இளவலை நோக்கி ஓடினான்.

ஆசையாய் நீட்டினான். அவளின் கரம் நோக்கி தன் கரம் நீட்டினான்.

'இந்த ரோஜா இல்லை நான் கேட்டது!' 'இந்த சிவப்பு அல்ல நான் விரும்புவது!' 'இந்த பூ என் ஆடைக்கு பொருத்தமாக இல்லை' - இப்படிச் சொல்லி தட்டிக்கழிக்கிறாள் இளவல்.

இதற்கிடையில் மற்றொரு இளைஞன் அவளைக் கரம் பிடித்து விடுகிறான்.

சோர்வோடு வீடு திரும்பும் காதலன் ரோஜாவை சாலை ஓரத்தில் போடுகிறான். அவ்வழியே வந்த ஒரு டிரக் ரோஜாவை ஏற்றி நசுக்குகிறது.

அவன் தான் விரும்பிய புத்தகங்களுக்குள் தன்னை மறுபடியும் புதைத்துக்கொண்டான். காதலிகளை விட புத்தகங்கள் மேலானவை. இந்த உலகத்தில் கிடைக்காதவற்றை எனக்கு கொண்டு வா என அவைகள் சொல்வதில்லை.

அந்த நைட்டிங்கேல் போல தன்னை உணர்ந்தாள் மாத்தா ஹரி.

---

'வாழ்க்கை மிகவும் கடினமானது. எளிதானவைகளும் அதில் இருக்கின்றன.

ஐஸ் க்ரீம் சாப்பிடுவது.

உன் குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுப்பது.

உன் அறையைப் பெருக்கி சுத்தப்படுத்துவது.'

---

உன் கையில் உள்ள விதைகள் தூலிப் பூக்களின் விதைகள்.

இவைகளை நீ எப்படி வைத்து வளர்த்தாலும் தூலிப் பூக்கள்தாம் வரும்.

அவற்றில் ரோஜா எதிர்பார்த்தால் நீ விதையை இழந்துவிடுவாய்.

உன் வாழ்க்கையும் அப்படியே!

---

பூக்களே சிறந்த ஆசிரியர்கள்.
வாழ்வின் நிலையாமையை அவைகள் அறிந்திருந்தாலும் காலையில் அழகாக சிரிக்கின்றன.
அவைகள் எந்நேரமும் தண்டுகளைப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை.
விழ வேண்டிய நேரத்தில் கீழே விழுந்து அடுத்த பூக்களுக்கு வழி விடுகின்றன.

---

கோயலோ ஒரு வித்தியாசமான நாவல் ஆசிரியர். இவரின் புதினத்தில் நிறைய கத்தோலிக்க சிந்தனைகளும், விவிலிய மேற்கோள்களும் காணக்கிடக்கும்.

செக்ஸ், காதல், அன்பு, பிரமாணிக்கமின்மை, பொறாமை, கோபம் என அனைத்தையும் போகிற போக்கில் இயல்பாக எழுதக்கூடியவர் இவர்.

'இது சரி! அது தவறு!' என்று எந்த அறநெறியையும் உட்புகுத்தாதவர்.

ஒவ்வொருவரும் தனக்கு விருப்பம் அல்லது சரி என்று சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான்!

Sunday, December 18, 2016

சக்கரியா

'அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார்!'

ஆலயத்திற்குள் ஆரவாரத்தோடு சென்றவர் ஊமையாய் திரும்பி வருகிறார்.

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை அப்படித்தான் ஆக்கிவிடுகிறது.

தூபம் ஆட்டும்போதுகூட சக்கரியா இப்படி நடக்கும் என நினைத்திருக்க மாட்டார்.

மரியா கேள்வி கேட்டபோது தண்டிக்காத கபிரியேல், சக்கரியா கேட்டவுடன் தண்டித்துவிடுகிறார். பாவம் ஆண்கள்!

சக்கரியா தன் வீட்டிற்கு எப்படி சென்றிருப்பார்? தன் மனைவி எலிசபெத்தை சந்தித்தவுடன் என்ன சொல்லியிருப்பார்? கணவர்கள் மௌனமாக இருந்தால் மனைவியர் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

இறைவனின் முன்னிலையில் தேவையில்லாமல் வாய் திறக்கக்கூடாது என்பதற்கு சக்கரியா நல்ல உதாரணம்.

ஊமைகளின் உலகம் ஆச்சர்யமானதாகத்தான் இருக்கும்.

ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோட்டில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் வாய் பேச முடியாதவர்கள் கூடிப் பேசுவார்கள்(!). பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

ஆனால், ஊமை என்பதிலும் ஒரு ஆழ்ந்த அமைதி இருக்கும்.

சக்கரியாவை அந்த அமைதிக்குத்தான் அழைத்துச் செல்கிறார் கபிரியேல்.

குழப்பம், கலக்கம் இருக்கும்போது நம்பிக்கையும் காணாமல்போய்விடுகிறது. சக்கரியாவின் பிரச்சினை அதுதான்.

ஆழ்ந்த அமைதியில் சக்கரியா இறைவனைக் கண்டார்!

தி என்ட் ஆஃப் தி அஃப்ஃபயர்

கிரகம் க்ரீன் எழுதிய 'தி என்ட் ஆஃப் தி அஃப்ஃபயர்' என்ற புதினத்தை வாசித்து முடித்தேன்.

கத்தோலிக்க எழுத்தாளர்.

தான் காதலித்த ஒரு பெண் (தன்னைக் காதலித்த ஒரு பெண்) தன் நண்பனுக்கு வாழ்க்கைத் துணையாகிவிட, தன் நண்பன்மேல் வெறுப்பும், தன் காதலி மேல் பொறாமையும் கொள்ளும் ஒருவனின் உள்மனப் போராட்டமே நாவலின் ஒற்றைவரி.

போகிற போக்கில் பாவம், காமம், காதல், செபம், நரகம், மோட்சம், கடவுள், அன்பு, வெறுப்பு, பொறாமை என அனைத்தையும் வரையறுக்கிறார் ஆசிரியர்.

இந்த நாவலில் நான் கோடிட்ட சில வரிகளை தமிழாக்கம் செய்கிறேன் இங்கே:

'உன்னை உன் பெற்றோர் அல்லது கடவுள் தவிர வேறு யாரும் அன்பு செய்ய முடியாது என்ற ஒரு நிலையில் நீ மற்ற ஒருவரால் அன்பு செய்யப்படுவதைக் கண்டு கொள்வது ஒரு ஆச்சர்யமான அனுபவம்.'

'கதைக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. நாமாக ஒன்றை எடுத்துக்கொண்டு இதுதான் தொடக்கம், இதுதான் முடிவு என நினைத்துக்கொள்கிறோம்.'

'நான் உன்னை என் கைகளால் தொட வேண்டும். நான் உன்னை என் நாக்கால் சுவைக்க வேண்டும். அன்பும் செய்யும் ஒருவனால் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடியாது.'

'நான் உன்னை வெறுக்கிறேன், கடவுளே. நீ இருப்பது போல நினைத்து!'

'பாதுகாப்பற்ற நிலைதான் காதலர்கள் உணரும் கொடுமையான உணர்வு. ஆசையே இல்லாத திருமணம்கூட சில நேரங்களில் நல்லது எனத் தோன்றுகிறது. பாதுகாப்பற்ற உணர்வு வாழ்வின் அர்த்தத்தை திரித்து, நம்பிக்கையை விஷமாக்கிவிடுகிறது.'

'என் பொறாமையின் அளவைக் கொண்டே நான் என் அன்பின் அளவைக் கணிக்கிறேன்.'

'வலியை எளிதாக எழுதிவிட முடியும். ஏனெனில் வலியில்தான் நான் யார் என்று உணர்கிறேன். ஆனால் மகிழ்ச்சியை பற்றியை ஒருவர் எப்படி எழுத முடியும்?'

'உன்னை என் தோழியாக நான் ஒருபோதும் எண்ணியதில்லை. ஏனெனில் தோழி இல்லாமல் ஒருவனால் இருக்க முடியும்!'

'நீ பயப்பட வேண்டாம். காதல் முடிவதில்லை. நாம் காணாமல் இருக்கிறோம் என்பதற்காக!'

'அவளோடு பேசுவதற்கு அடுத்த நல்ல செயல் அவளைப் பற்றிப் பேசுவது.'

'ஒருவர் துன்பப்படும்வரைதான் அவர் வாழ்கிறார்.'

'நாம் நம் மனத்தால்தான் அன்பு செய்கிறோம். மனத்தால் மட்டுமா? அன்பு தன்னை விரித்துக் கொண்டே போகிறது. எந்த உணர்வுமற்ற நகத்தில் கூட நாம் அன்பை உணர முடியும். நாம் உடையால்கூட நாம் ஒருவரை அன்பு செய்ய முடியும்.'

'இறுதியாக, நாம் அனைவரும் மனிதர்களே. அன்பே, அன்பே அனைத்தையும் குணப்படுத்தும் என்ற மாயையில் வாழும் மனிதர்கள்.'

'நான் அவளை அதிகம் நினைத்துப் பார்க்கவில்லை. அவள் இல்லாத பொழுதுகள்கூட அவளைப்பற்றியே நிறைந்திருந்தன.'

'நீ வைத்திராத ஒன்றை உன்னால் இழக்க முடியாது. உன்னுடையது அல்லாத ஒன்றை நீ வைத்திருக்க முடியாது. உன்னோடு நிலைக்காத ஒன்றை நீ பிடித்திருக்க முடியாது.'

'எனக்குச் சொந்தமாகாத ஒன்றை நான் இழந்து விட்டேன்.'

இந்த நாவலை வாசிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. கதையின் சில இடங்கள் குழப்பமாக உள்ளன. கதையில் பேசுவது யார் என்பது தெளிவில்லை. ஆங்கில பதங்களும் கொஞ்சம் பழமையானவை. கதை நடக்கும் காலம் 1929 முதல் 1944ஆம் ஆண்டு முடிய.

ஆசிரியரின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான் இது என்பது விக்கிபீடியாவின் கருத்து.

அன்பின் மற்ற பரிமாணத்தை அழகுற எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

Friday, December 16, 2016

நவநாள்

திருவருகைக்காலம் டிசம்பர் 16க்கு முன், டிசம்பர் 16க்குப் பின் என இரண்டு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையிலிருந்து கிறிஸ்து பிறப்புக்கான நவநாள் தொடங்குகிறது.

'புகழப் புகழ அமிர்தமான இயேசுவே' என்ற செபம் உங்களுக்கு நினைவிருக்கிறதா. இந்த செபம் தான் இந்த 9 நாள்கள் சொல்லப்படும்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கின்றோம்.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவின் தலைமுறை அட்டவணையை பதிவு செய்கின்றனர். மத்தேயு இயேசுவை ஆபிரகாமின் மகன் எனவும், லூக்கா ஆதாமின் மகன் எனவும் காட்டுகின்றனர்.

மத்தேயுவின் தலைமுறை அட்டவணையில் 5 பெண்களும் இடம் பிடித்திருக்கின்றனர்: தாமார், இராகாபு, ரூத்து, பெத்சேபா, மரியா.

இறைவனின் திட்டத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம்.

இல்லையா?

Thursday, December 15, 2016

தெருவிளக்கு

'யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.'

இன்று மாலை அப்பல்லோ மெடிக்கல்ஸ் சென்றேன்.

மோடி கொண்டு வந்த பண மதிப்பு ரத்தால் கார்ட் பயன்படுத்தும் கடைக்கு மட்டுமே செல்ல முடிகிறது.

கார்ப்பரேட் வீடுகளில் மட்டுமே அடுப்பெரிய வேண்டும். மற்ற வீடுகளில் காலிப்பானைகள்தாம் இருக்க வேண்டும் என்ற அவரது நினைப்பில் யாராவது ஒரு லாரி மண் அள்ளி போட்டால் நலமாக இருக்கும்!

போகும் வழியில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் நான்கு சிறுவர்கள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் உண்டு. மதுரைக்கும் ஒரு மணம் உண்டு. அந்த மணத்தை உணர மாலையில் அதைச் சுற்றி வர வேண்டும்.

மதுரை பெயரளவில்தான் மாநகரம். ஆனால் அது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு கிராமம். அவ்வளவுதான். இன்றும் மதுரையில் 50 காசுக்கு வடை வாங்க முடியும். இன்றும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்திருந்த நான்கு சிறுவர்கள் ஒருவன் மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அனைவரும் ஆரம்பப் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்களைச் சுற்றி வந்த ஒரு குட்டி அழகி ஒரு நோட்டைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். நோட்டுக்குச் சொந்தக்காரன் கோபப்படவில்லை. பொண்ணுங்க இழுத்தா மதுரைப் பசங்க கோபப்பட மாட்டாங்க போல!

தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் எதிர்காலம் அழகாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.
நகரமயமாக்கலின் எந்தவித ஆரவாரத்திற்கும் ஆட்படாமல் தங்கள் வேலையை அழகாக செய்து கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.

நிற்க.

'நீங்கள் ஒளியில் சிறிது நேரமே மகிழ்ந்திருந்தீர்கள்!' என தன் சமகாலத்து மக்களை குற்றம் சுமத்துகின்றார் இயேசு.

எப்பவாவது நல்லவராக இருப்பது எளிது.

எப்போவுமே நல்லவராக இருப்பது கடினம்.

அன்றும் - இன்றும் - என்றும்!

Tuesday, December 13, 2016

கேரல்ஸ்

நேற்று மாலை கேரல்ஸ் சென்றோம்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் கேரல்ஸ் செல்வதாய் இருப்பதால் ஆர்வமாக இருந்தது.

புதிய பங்கு.

புதிய மக்கள்.

இருந்தாலும் நடை என்னவோ உள்ளுர் நடையாகத்தான் இருந்தது.

நேற்று மூன்று விடயங்கள் என் மனதைத் தொட்டன:

1. சிறிய வீடு. 7க்கு 7தான் வீட்டு அளவு. தாழ்வான வாசல். உள்ளே சமையலறையை மறைக்க ஒரு பெட்ஷீட் கட்டியிருந்தார்கள். குழந்தை இயேசுவை வைக்க ஒரு நாற்காலி போட்டிருந்தார்கள். அந்த நாற்காலி பக்கத்து வீட்டு இரவல் நாற்காலி. ஏனெனில் இந்த வீடு முடிந்தவுடன் அதை அடுத்த வீட்டிற்குக் கொண்டு போனார்கள். குழந்தை இயேசுவை வைத்தவுடன் பூக்களை குழந்தைக்கு சூடினார் அந்த அனாமிகா. அத்தோடு விடவில்லை. பிறந்த குழந்தைக்கு அணிவிக்கும் புதிய ஆடை ஒரு செட்டை குழந்தையின்மேல் விரித்தார். அத்தோடு விடவில்லை. ஜெபம் முடிந்தவுடன் எல்லாருக்கும் ஒவ்வொரு பிஸ்கட் பாக்கெட் வழங்கினார்.

அவர் செய்தது எதுவும் என்னைக் கவரவில்லை என்றாலும், அந்த செயல்பாடுகளுக்குப் பின்னால் இருந்த அவரின் இயல்பு என்னைக் கவர்ந்தது. டோபி வேலைக்குச் சென்ற அவர் எந்நேரம் வீடு திரும்பியிருப்பார்? எங்கே மல்லிகை வாங்கியிருப்பார்? எப்போது துணிக்கடைக்குப் போயிருப்பார்? இத்தனை பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்க 2000 ரூபாய் நோட்டை மாத்தியிருப்பாரா?

2. சிறிய பொண்ணு. பெயர் அனாமிகா என வைத்துக்கொள்வோம். வயது 5. எல்லா இடத்திற்கும் நடந்தே வந்தது. குழந்தை இயேசுவை எந்த வீட்டில் வைத்தாலும் அதன் அருகில் போய் நின்று கொள்வாள் இவள். குழந்தை இயேசுவின் முகத்தை தன் பிஞ்சுக்கரங்களால் வருடிக் கொடுப்பாள். வருடிக் கொடுத்துவிட்டு எல்லாரையும் அண்ணாந்து பார்ந்து வெட்கத்தோடு சிரிப்பாள். அவளைப் பார்க்க நம்ம தமிழ் மாதிரியே இருந்தது. 'வாழ்த்துக்கள்' என்றால் 'வாழ்த்துக்கள்' என்பாள். 'நல்லா இருக்கீங்களா?' என்றால் 'நல்லா இருக்கீங்களா?' என்பாள்.

3. மற்றொரு அனாமிகா. வயது 21-24 இருக்கும்(!). ஆசிரியராகப் பணிபுரிகின்றார். மின்னல் போல வந்தார். சில வீடுகளில் பாடல்கள் பாடினார். மின்னல் போல மறைந்தார். ஒரு வீட்டில் நின்ற போது, 'இதுதான் எங்க வீடு!' என்றாள். தன் குடும்ப பின்புலம் தன்னைத் தடுக்க முடியாது என்ற பெருமிதம் அவர் கண்களில் இருந்தது. மிக நேர்த்தியாக சிறுவர், சிறுமியரை வழிநடத்தினார்.

ஏறக்குறைய 20 பேர். சிறியவர். பெரியவர்.

அதில் யாரையும் எனக்குத் தெரியாது.

ஆனால் நெருக்கமானவர் போல எல்லாரும் பழகினர்.

இதுதான் கிறிஸ்து பிறப்பு என அறிந்தேன்.

Thursday, December 8, 2016

சந்தைவெளி சிறுவர்கள்

'முகநூல், டிவி, பத்திரிக்கை மூன்றையும் மூடிவிட்டு அமர்ந்து கதை பேசினால் 80 வயது வரை வாழலாம்' என்று இன்றைய ஆனந்தவிகடனின் வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கால சிறுவர்கள் தாம் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.

சிறுவர்கள் வித்தியாசமானவர்கள்.

நான் சிறுவனாய் இருந்தபோது எந்நேரமும் சிறுவர்களை தெருவில் பார்க்கலாம். எங்க ஊரில் இருப்பது ஒரு தெருதான். ஒரு தெருவெல்லாம் ஊரா என்று கேட்காதீர்கள். அப்படித்தான்.

மாலை 4 மணிக்கு பள்ளி விட்டு வந்தால் அந்த தெருவில் எல்லாம் நடக்கும்.

வண்டிக்கார தாத்தா மாடுகளை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பார்.

பத்மா சித்தி பாத்திரம் விளக்கி கொண்டிருப்பார்கள்.

சங்கர் அக்காவும், சமுத்திரம் அக்காவும் தீப்பெட்டி கட்டு ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

நாட்டாமை வீட்டுப் பாட்டி தானாக கடுங்காப்பி போட்டுக்கொண்டிருக்கும்.

மில்லுக்கு வேலைக்குப் போனவர்கள் ஒருசேர வீடு திரும்பிக்கொண்டிருப்பர். அவர்களின் காலி டிபன் பாக்ஸ்கள் சைக்கிள் மணி போல 'டிங் டிங்' கென்று குதித்துக் கொண்டிருக்கும்.

4:05 மணி பி.ஆர்.சி. பஸ் புளுதி பரப்பி பறந்து போய்க்கொண்டிருக்கும்.

அப்படியே இந்த கலகலப்போடு வீடு வந்து யூனிஃபார்மை அவிழ்த்து எறிந்துவிட்டு, மாற்று உடை அணிந்துவிட்டு தெருவுக்கு வந்துவிடுவோம்.

அம்மன் கோவில் மேடைதான் நாங்கள் சந்திக்கும் இடம்.

இடத்தில் சேர்ந்தவுடன் என்ன யோசனை வருகிறதோ அந்த விளையாட்டை விளையாட ஆரம்பிப்போம்.

7 மணி வரை விளையாட்டு.

7 மணிக்கு கோவிலில் செபம்.

அம்மன் கோயில் - பிள்ளையார் கோயில் - முருகன் கோயில் - மாதா கோயில் - எல்லா வழிபாடுகளையும் அட்டென் பண்ணுவோம்.

தூரத்தில் இருக்கும் எசக்கி கோயிலுக்கு மட்டும் போகமாட்டோம். அங்கு பேய் ஆடுவதை பார்த்திருக்கிறோம்.

8 மணிக்கு சாப்பாடு.

8:30க்கு தெருவிளக்கில் வீட்டுப்பாடம்.

வீட்டுப்பாடம் முடிந்தவுடன் திருடன்-போலீஸ்.

9:30க்கு சங்கம் கலையும்.

இப்படித்தான் எல்லா நாள்களும் நகர்ந்தன.

இன்று என் ஊர்த்தெரு வெறிச்சோடி இருக்கின்றது.

சிறுவர்கள் வீட்டுக்குள் சுட்டி டிவி, போகோ, டிஸ்கவரி என பார்க்கின்றனர்.

நிறைய விளையாட்டுக்களை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

நாளைய நற்செய்தியில் இயேசு தன் சமகாலத்து சந்தையில் விளையாடிய சிறுவர்களை உருவகமாக எடுத்துக்கொள்கின்றார்.

இன்று அவர் வந்தால் யாரை உருவகப்படுத்துவார்!


Wednesday, December 7, 2016

அமல உற்பவி

நாளை அன்னை மரியாளின் அமல உற்பவத் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் நாளை விடுமுறை. நாளைய தினம்தான் வீடுகளில் குடில் அமைப்பார்கள். குடில் பொருள்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதும். நாளை முதல் இல்லங்களில் நட்சத்திரங்கள் மற்றும் ஒளி விளக்குகள் தொங்கவிடுவார்கள்.

அன்னை மரியின் அமல உற்பவம் ஒரு விசுவாசக் கோட்பாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவரின் தூய்மை மற்றும் மாசின்மை பற்றிய எண்ணங்கள் திருஅவையில் பரவலாக இருந்தன.

பவுலோ கோயலோ என்னும் நாவலாசிரியரும் தன் எல்லா புதினங்களையும்,

'அமல உற்பவியான மரியாளே,
உன்னை நாடிவரும் மக்களுக்கு அடைக்கலமாய் இரும்!'

என்றுதான் தொடங்குவார்.

'தூய்மை' என்பது ஒரு மேலான மதிப்பீடு.

சமூகவியல் கருத்தின்படி மனிதர்கள் தங்களில் காணப்படும் உயர்ந்த எண்ணங்களையும், மதிப்பீடுகளையும் அப்படியே உயர்த்தி அவற்றை கடவுளாக்கி விடுவார்கள். ஆக, கடவுள் என்பது நம் ஒட்டுமொத்த மேலான எண்ணங்களின் தொகுப்பு என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் கருத்து.

'தூய்மை' என்பது கடவுளுக்கு அடுத்த நிலை என்பது ஆங்கிலப் பழமொழி.

ஆடையில் தூய்மை, உணவில் தூய்மை, உறைவிடத்தில் தூய்மை என தூய்மையை நாம் பேணுகிறோம்.

'தூய்மை' என்பதை வைத்தே மனித இனத்தில் பிரிவுகளும் உண்டாகின.

ஆக, தூய்மை என்பது பல நேரங்களில் மக்களை பிரிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. 'தூய உணவு உண்பவர்கள்,' 'தீட்டு உணவு உண்பவர்கள்' என்ற பிரிவினை இன்றும் இருக்கிறது.

ஆனால், மரியாளின் தூய்மை நம்மை அவரிடமிருந்து பிரித்துவிடவில்லை.

'நான் தூய்மையற்றவர்,' 'மரியா தூய்மையானவர்' என்று மரியாவை அந்நியமாக்கும் அல்லது பிரித்துப்பார்க்கும் விழா அல்ல இது. மாறாக, அவரோடு நம்மையே ஒன்றித்துக்கொள்ளும், அவரின் தூய்மையில் பங்குகொள்ளும், அவரின் தூய்மை போல நம் தூய்மையை அமைத்துக்கொள்ளும் விழா.

நம் உள்ளமும், இல்லமும் தூய்மை பெற அந்த அமலி அருள்வாராக!

அனைத்து அமலன், அமலி, நிர்மலாக்களுக்கும் நாமவிழா வாழ்த்துக்கள்.

Tuesday, December 6, 2016

ஜெ. ஜெயலலிதா

'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.
கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்.
அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.'
(எசாயா 40:25-31)

டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆன்மா இறைவனில் நிலையான இளைப்பாற்றியைக் கண்டடைவதாக!

செல்வி. ஜெயா அவர்களுக்கு நாளைய முதல்வாசகப் பகுதி அழகாகப் பொருந்துகிறது.

தன் வாழ்நாள் முழுவதும் தன்னைத் தோல்விகள் விரட்டினாலும் ஓடினார். களைப்படையவில்லை. நடந்தார். சோர்வடையவில்லை.

ஆனால், அவரின் இறப்பு இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாவம்! தனிமை ஒன்றையே தன் வாழ்வின் துணையாக இறுதிவரை கொண்டிருந்தார்.

சின்ன உருவகம்.

என் கழுத்தில் பெரிய தங்க மாலை இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

நான் தனியாக நடந்து செல்கிறேன்.

என் தங்க மாலையைப் பார்த்த சிலர் என்னோடு சேர்ந்து நடக்கின்றனர்.

என்னோடு பேசுகின்றனர். சிரிக்கின்றனர். வழிநடக்கின்றனர்.

அவர்கள் என்னிடம் பேசுவது என் கழுத்தில் இருக்கும் தங்க மாலைக்குத்தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இருந்தாலும், வழி தூரமாகவும், பயமாகவும் இருப்பதால் நான் அவர்களை என் துணைக்கு வைத்துக்கொள்கிறேன்.

சில நாட்களில் என்மேல் உள்ள அக்கறை மாறி என் தங்க மாலை பற்றியே அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்.

நான் என்ன செய்வது என்று புலம்புவேன்.

அவர்களை வைத்துக்கொள்ளவும் முடியாமல், விடவும் முடியாமல் எத்தனிப்பேன்.

நிற்க.

இந்த நிலைதான் ஜெயாவுக்கு இறுதியில் இருந்தது.

'பகைவர்களை வென்றுவிட்டேன். ஆனால் நண்பர்களிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே!'

என்ற கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

Sunday, December 4, 2016

கட்டின்மை

இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி, 'நான் உமக்குச் சொல்கிறேன்.நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!' என்றார்.

... ... ...

இதைக்கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய் ... 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று பேசிக்கொண்டார்கள்.

(காண். லூக் 5:17-26)

நான்கு பேர் அவரைத் தூக்கிவர அவர் அழைத்துவரப்படுகின்றார்.

குணம் அடைந்தவுடன் தன் கட்டிலையே தூக்கும் அளவிற்கு வலிமை பெறுகின்றார்.

அவர் தன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு சாலையில் போனபோது மக்கள் என்ன பேசியிருப்பார்கள்?

என் அறையின் நாற்காலியை அடுத்த அறைக்குத் தூக்கிக்கொண்டு போகவே எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஆனால் அந்த நபர் எப்படி கட்டிலை தலையில் தூக்கிக்கொண்டு தன் வீடு சென்றிருப்பார்?

அவரைத் தூக்கி வந்த அந்த நான்கு பேர் எங்கு சென்றார்கள்?

சின்ன வயசுல எங்க ஊருக்கு எந்த கார் வந்தாலும் அதன் பின்னாலே கொஞ்ச தூரத்துக்கு ஓடுவோம். எப்படியும் அந்தக் காரைத் துரத்தி தொட்டுவிட வேண்டும் என்ற ஒரு வீராப்பு இருக்கும் அன்று. காரில் செல்பவர்கள் கடிந்து கொண்டாலும் நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்.

இவர் கட்டிலைத் தூக்கிக்கொண்டு சென்றபோது அவரைச்சுற்றியும் சிறார் கூட்டம் ஓடியிருக்கும்.

அவர் அவர்களை அதட்டியிருப்பாரா?

அல்லது புன்னகை செய்திருப்பாரா?

'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று மக்கள் சொல்கிறார்களே. அப்படி எதை அவர்கள் புதுமை என நினைத்தார்கள்?

எல்லாரையும் சார்ந்திருந்த ஒருவர் எவரையும் சாராத ஒரு கட்டின்மை அடைந்த நிலைக்கு கடந்து போகின்றார்.

அதுதான் புதுமை என நான் நினைக்கிறேன்.

Saturday, December 3, 2016

பிரான்சிஸ் சவேரியார்

இன்று தூய பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தில் ஒரு அழகுப்போட்டி நடைபெற்றது.

இரண்டு ஃபோட்டோக்களைப் போட்டு, 'இவற்றில் எது அழகு?' என்ற கேள்வி கேட்கப்பட்டு, ஓட்டு எடுக்கப்பட்டது.

இடது பக்கம் தூய சவேரியாரின் அழியாத உடலின் பாதம். வலது பக்கம் 'தாளம்' படத்தின் ஐஸ்வர்யா ராயின் பாதம்.

வலது பக்க படத்திற்குத்தான் நிறைய ஓட்டுகள் விழுந்திருந்தன.

இறுதிச்சுற்றில், ஐஸ்வர்யாவின் பாதமே வென்றது.

ஐஸ்வர்யா வென்றதில் எனக்கு எந்த கோபமும், வருத்தமும் இல்லை. இன்று பல நேரங்களில் நம் பார்வை அப்படித்தான் இருக்கிறது.

மிருதுவாக, இளமையாக, பளபளப்பாக, சிகப்பாக இருப்பதுதான் நம் கண்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது.

ஆனால், வன்மையாக, முதுமையாக, பொலிவிழந்து, சிகப்பில்லாமால் இருப்பதும் அழகுதான் என்பதை உணர்ந்ததால் தான் சவேரியார் நம் நாட்டிற்கு வந்தார்.

அவரின் பாதங்கள் இன்று போட்டியில் வேண்டுமானால் வெல்லாமால் இருக்கலாம்.

ஆனால், அந்தப் பாதங்களில் இருந்த வேகம், தளராத துணிச்சல், நேர்கொண்டு நிமிர்ந்த நடை காலத்தைக் கடந்த பாடங்கள் - அவரின் அழியாத பாதங்கள் போலவே!

Thursday, December 1, 2016

பார்வை

பார்வையற்ற இருவர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.
(காண். மத் 9:27-31)

இயேசு பார்வையற்ற இருவருக்கு பார்வை தருகின்றார்.

இயேசு தனது வீடு வந்து சேர்ந்தபோது அவர்களும் வந்தனர் எனப் பதிவு செய்கின்றார் மத்தேயு.

இயேசுவின் வீட்டிற்கு அந்தப் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது யார்?

இயேசுவே அழைத்துச் சென்றாரா?

அல்லது ஏதோ ஒரு நல்ல உள்ளம் அழைத்துச் சென்றதா?

கண் தெரியாத ஒருவரின் கைகளைப் பிடித்து நடந்திருக்கிறீர்களா?

நான் ஒருமுறை நடந்திருக்கிறேன்.

அவரை விட எனக்குத்தான் பயம் அதிகமாக இருந்தது அன்று.

பார்வையற்றவர்களை அழைத்து வந்தவர்களைப் பார்த்த பார்வையற்றவர் என்ன சொல்லியிருப்பார்?

'நன்றி' மட்டுமா?

இல்லை.

ஒளியாம் கிறிஸ்துவிடம் அழைத்து வந்த அவர் அவர்களுக்கு ஒளி பெற்றுத் தருகின்றார்.

'ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு' என்கிறார் திபா ஆசிரியர் (27:1).

நாமும் மற்றவர்களை இயேசுவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எத்துணை நலம்!