Tuesday, May 6, 2014

the push

சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். அவர் வலிமைமிக்க வீரர். ஆனால் தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அவள் தன் தலைவியை நோக்கி, 'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்' என்றாள். (2 அரசர்கள் 5:1-3)

கழுகு ஒன்று தன் குஞ்சுகளோடு மலை உச்சியில் உள்ள ஒரு கூட்டில் இருந்தது. குனிந்து பார்த்தது. தன் குஞ்சுகளை மெதுவாக உச்சியின் ஓரத்திற்கு நகர்த்திச் சென்றது. அதன் மனதுள் ஒரு பயம்: 'பறக்கும் த்ரில் எதற்காக பயத்தோடே தொடங்க வேண்டும்?' என்று தன்னையே கேட்டுக் கொண்டது.

குஞ்சுகள் பறந்து விடுமா? விழுந்து விடுமா? ஒரு தாயாக தனக்கிருக்கும் கடமை நிறைவேறும் தருணம் வந்து விட்டது.

இப்போது தேவையெல்லாம் ஒரே ஒரு புஷ். ஒரே முறை தள்ளிவிட வேண்டும். அந்தத் தள்ளுதல் குஞ்சுகளின் வாழ்வில் ஒரு புதிய நிகழ்வைக் கொண்டுவரும் என நினைத்துக்கொண்டே குஞ்சுகளை தள்ளிவிட்டது.

இந்தத் தள்ளிவிடுதலே அது தன் குஞ்சுகளுக்குத் தரும் மிகப்பெரிய பரிசு. இது ஒரு அன்பின் செயல்.

ஒவ்வொரு குஞ்சாகத் தள்ளிவிட்டது. அவைகளும் சிறகடித்துப் பறந்தன.

நம்ம வாழ்க்கையிலயும் கண்டிப்பாக 'புஷ்' மொமண்ட் வந்திருக்கும். யாராவது ஒருவர் நம்மைத் தள்ளி விட்டிருப்பார்கள். அல்லது நாம் யாரையாவது தள்ளி விட்டிருப்போம். அந்தத் தருணம் முதல் நம் வாழ்வின் பாதை கண்டிப்பாக மாறியிருக்கும்.

இந்த புஷ்ஷிற்குப் பெயர்தான் 'என்கரஜ்மெண்ட்'. அதாவது தைரியம் ஊட்டுவது. தைரியத்திற்கு எதிர்ப்பதம் பயம். தைரியம் வருவதற்குப் பயம்தான் வழி. பயப்படுபவர்கள் மட்டுமே தைரியம் பெற முடியும்.

நமக்கு மேல் இருப்பவர்கள்தான் தைரியம் கொடுக்க வேண்டும் என்றல்ல. கீழிருப்பவர்களும் கொடுக்கலாம்.

ஒரு சிறு குழந்தை, வேற்றினத்துக் குழந்தை, அடிமை வேலைக்கு வந்த குழந்தை தன் தலைவன் நாமானுக்கு தைரியம் கொடுக்கிறது.

நாம் யாருக்காவது கீழ் இருப்பதாக நினைக்கும்போது நம் மனது பல நேரங்களில் 'விக்டிம்' நிலையிலேயே இருக்கிறது. 'ஐயோ! நான் இப்படி இருக்கிறேனே! எனக்கு இப்படி ஆயிடுச்சே' என்று புலம்புகிறது. ஆனால் அந்த நேரத்தில் என் வாழ்க்கை என் கையில் என்று நினைக்கிற ஒருவர்தான் தானும் தைரியம் பெற முடியும். மற்றவர்களுக்கும் தைரியம் சொல்ல முடியும்.

எனக்கு படிப்பைக் குறித்துப் பயமாக இருக்கும்போதும், எதிர்காலம் குறித்துப் பயமாக இருக்கும் போதும், வாழ்க்கையில் நினைப்பதற்கு எதிராகவே எல்லாம் நடக்கும் போதும் என் டிரெயின் பயணத்தில் கிட்டார் வாசித்துப் பாடிவரும் கானம்பாடிகளை நினைத்துக் கொள்வேன்.

அவர்களுக்கென்று உறவுகள் கிடையாது. உறைவிடம் கிடையாது. உடுத்த நல்ல உடைகள் கிடையாது. அவர்களின் சொத்தெல்லாம் அவர்களின் கிட்டாரும், அவர்களின் பாடலும் தான். ஒவ்வொரு பொழுதும் அவர்களுக்கும் நம்பிக்கையோடே விடிகிறது.

மற்றவர்கள் நமக்கு 'புஷ்' கொடுக்குமுன் நாமே நமக்குக் கொடுத்தால் நாமும் பறக்கலாமே சிறகடித்து!

1 comment:

  1. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் எத்துணையோ "உந்துசக்திகள்" நாம் இந்நிலை அடையக் காரணிகளாய் இருந்திருப்பர்.நாம் துவண்டு போன நேரங்களில் தோள் கொடுத்தவர்கள்,கீழே சரிந்த நேரங்களில் கரமாயிருந்து தூக்கி விட்டவர்கள், கண் கலங்கி நின்றபோது நம் கண்ணீர் துடைத்தவர்கள்.,உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று முதுகில் தட்டிக்கொடுத்தவர்கள்.....இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.பிறரை உந்தி முன்னோக்கித்தள்ள வேண்டும் ஒரு "தாயுள்ளம்".குழந்தைகளைப பெற்றெடுப்பதால் மட்டும் ஒருவர் தாயாகி விட முடியாது.இதயத்தில் "இரக்கம்" சுரக்கும் அனைவருமே தாய்மார்தான்.நமக்குக் கிடைத்த உந்துசக்திகளுக்கு நன்றி சொல்லும் இவ்வேளையில் நாமும் ஒருசிலரையாவது ஏற்றிவிட்ட "ஏணிகளாக" இருக்க முயல்வோம்.இப்படி அழகான விஷயங்களை அச்சடித்துக்கூறும் தந்தைக்கு ஒரு "சபாஷ்" .

    ReplyDelete