Monday, May 26, 2014

நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?

கடந்த மாதம் வெளியான 'இன்ஃபினிதாட்ஸ்' (infini thoughts) என்ற ஆங்கில மாத இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை எனக்கு ரொம்பப் பிடித்தது. அதன் தலைப்பு இதுதான்: 'நல்லவராயிருப்பதன் விலை!'

நல்லவராய் இருப்பது நல்லது என்ற நிலை மாறி இன்று நல்லவராய் இருப்பவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் உலகம் தெரியாதவர்கள் என்றும் சொல்லக் கூடிய நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் நல்லவராக இருப்பது சாத்தியமா? அவசியமா? என்று ஆராய்கிறது இக்கட்டுரை.

ஒரு காலத்தில் சிகரெட் பிடிப்பது தீமையாகக் கருதப்பட்டது. இப்போது சிகரெட் பிடிப்பது ஃபேஷன் என்றாகிவிட்டது.

தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்று சொல்லப்பட்ட காலம் போய், எப்படியாவது பாஸ் ஆகிவிடு என்றும் சொல்லும் நிலை வந்துவிட்டது.

ஆண்கள் எல்லாம் 'நான் குடிக்கிறேன்!' என்று சொல்வதும், பெண்கள் எல்லாம் 'எனக்குச் சமைக்கத் தெரியாது' என்று சொல்வதுதான் இன்றைய நாகரீகம்.

குடமெல்லாம் தண்ணீராக இருக்கும் போது அந்தக் குடத்தில் ஒரு செம்பு பாலை ஊற்றினால் பாலும் தண்ணீராகத் தானே போய்விடுகின்றது.

திருப்பாடல் 11ல் தாவீது எதிர்கொள்ளும் கேள்வியும் இதுதான்.

பொல்லாரெல்லாம் அவரை நோக்கி என்ன கூறுகிறார்கள்? 'பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப்போ!' என்றும் நீ எங்களோடு வாழ்வதற்கு லாயக்கு இல்லாதவன் என்றும் சொல்கின்றனர். இன்றைய திருப்பாடலில் வரும் சொல்லாடல்கள் வேடர்குலத்திற்குப் பொதுவான சொற்கள்: பறவை, மலை, வில், அம்பு, கண், பார்வை. இந்தப் பாடலின் பின்புலத்தில் இருந்தவர்கள் வேடர்களாக இருந்திருக்கலாம். அல்லது நம் தமிழ்மொழி குறித்துக் காட்டும் ஐந்து நிலங்களில் ஒன்றான குறிஞ்சி (மலையும், மலை சார்ந்த இடமும்) நிலத்தில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம்.

பாடகருக்குத் தன் உள்ளே எழும் கேள்வி இதுதான்: 'நல்லவனாய் இருந்து நீ என்ன சாதிக்க முடியும்?' என்று நம்மைப் பார்த்து இந்தப் பொல்லார் கேட்கிறார்களே. என்ன செய்வது? நல்லவனாகவே இருப்பதா? அல்லது அவர்களைப் போலத் தானும் மாறிவிடுவதா?

இந்தத் திருப்பாடலுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு 'ஆண்டவரிடம் நம்பிக்கை' எனத் தலைப்பு கொடுக்கின்றது.

அப்படியென்றால் லாஜிக் இதுதான்: மேற்காணும் சோதனை வரும்போது ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்தாலே போதும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

மற்றவர்கள் தன்னை விரட்டினாலும் தான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளதாகப் பாடகர் தொடங்குகின்றார். தான் அடைக்கலம் புகுந்திருக்கும் ஆண்டவரிடம் மூன்று குணநலன்களைப் பார்க்கின்றார்.

அ. ஆண்டவர் பார்க்கின்றார்.
ஆ. ஆண்டவர் நோக்குகின்றார்.
இ. ஆண்டவர் சோதித்தறிகின்றார்.

இந்த மூன்று வார்த்தைகளும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்று போல இருந்தாலும் அவைகளுக்குள் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நல்லவராய் இருப்பதற்குத் தேவை இந்த மூன்றும் தான்.

இந்த மூன்று வார்த்தைகள் இன்று நமக்கு என்ன சொல்கின்றன?

அ. பார்த்தல் (seeing)

ஐம்புலன்களில் நமக்கு அதிகமாக தகவல்கள் மூளைக்கு வருவது கண்கள் வழியாகத்தான். இங்கு நாம் எல்லா மனிதர்களுக்கும் கண் தெரியும் என்ற அடிப்படையில் பேசுவோம். கண்பார்வையற்றவர்களுக்கு அல்லது கண்பார்வை இழந்தவர்களுக்கு இருக்கும் குணநலன்களை நாம் ஆராய விழைய வேண்டாம். நாம் எல்லோருமே பார்க்கின்றோம். ஆனால் நாம் எதைப் பார்க்கின்றோம்? நம் மூளை எதைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றதோ அதைத்தான் கண்கள் பார்க்கும். 'அங்க அவர் நின்னுகிட்டு இருந்தார். நீங்க பார்த்தீங்களா?' என்று மனைவி கணவனிடம் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் 'இல்லை' என்பார். கணவனும், மனைவியும் ஒரே ரோட்டில் ஒன்று போல நடந்து வந்திருந்தாலும் இருவரும் பார்த்த பொருட்களும், நபர்களும் வேறு வேறாகவே இருக்கின்றனர். இதில் நல்லது, கெட்டது என்று சொல்ல எதுவும் இல்லை. நம் மூளை எப்படி பயிற்சி பெற்றிருக்கிறதோ அப்படித்தான் அதன் செயல்பாடு இருக்கும். நல்லவராய் இருக்க முதல் பண்பு 'நன்றாகப் பார்ப்பது'. 'நன்றாகப் பார்ப்பது' என்று சொல்வதை விட நல்லவற்றைப் பார்ப்பது. இதிலும் பிரச்சினை இருக்கின்றது? 'நல்லது எது கெட்டது எது' என்று எப்படித் தீர்மானிப்பது? நான் தீர்மானிப்பது இதுதான். 'என்னை முழுமனிதனாக மாற்றக் கூடியதே' நல்லது. அல்லது 'உடனடி இன்பம்' தராமல் 'நீடித்த மகிழ்ச்சி' தரும் எதுவும் நல்லது.

நாம் மற்றவர்களிடம் நல்லதை மட்டுமே பார்த்தால் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். உறவுகளில் சிக்கல் வரும் போது, அந்தச் சிக்கலுக்குக் காரணமான ஒரு நிகழ்வை மட்டும் பார்க்காமல், அந்த உறவினால் நாம் பெற்ற மகிழ்ச்சியை அசைபோடத் தொடங்கினால் சிக்கலுக்குக் காரணமான நிகழ்வு தானாகவே மறைந்துவிடும். அதைவிட்டு அந்தச் சிக்கலை மட்டும் மிகைப்படுத்திப் பார்த்தால் வருடக்கணக்கில் கட்டியெழுப்பிய உறவு நொடிப்பொழுதில் சரிந்துவிடும்.

ஆ. நோக்குதல் (observing)

பார்த்தலின் கூர்மையே நோக்குதல். 'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்' என்று இராமாயணம் சொல்வது போல 'பார்ப்பது'. காதல் செய்யும் இருவர் ஒருவர் மற்றவரைப் பார்ப்பதற்குப் பெயர்தான் நோக்குதல். காதலன் 25 வருடங்கள் தன் உதட்டில் மச்சம் இருந்ததைக் கவனித்திருக்க மாட்டான். நேற்று வந்த காதலி அதைச் சுட்டிக் காட்டுவாள். தன்னைச் சிறுவயதிலிருந்து வளர்த்த பெற்றோர் ஏதோ கடமைக்காக பெண்ணின் தலையில் பூ வைத்து அனுப்புவார்கள். 'பூ வைத்தால் தான் நீ அழகு. என்ன இது? ரோஜாப்பூவின் தலையில் மல்லிகைப்பூவா?' என வர்ணிப்பான் காதலன். அவள் வசிக்கும் தெருவில் இருக்கும் அனைவரும் அவளின் தலையில் இருக்கும் பூவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அவன் மட்டுமே நோக்குகிறான். நோக்குதல் என்பது நாம் ஒன்றின் மேல் கொண்டிருக்கும் விருப்பத்தில் இருந்துதான் வருகின்றது.

சிலருக்கு கிரிக்கெட், சிலருக்கு காமெடி, சிலருக்கு பாடல், சிலருக்கு பக்தி - அவரவருக்குப் பிடித்தது வரும்போது தான் நாம் டிவியை நோக்குகிறோம். மற்ற நேரங்களிலெல்லாம் டிவியைப் பார்க்கிறோம். அவ்வளவுதான்.

நல்லவானாய் இருப்பேன் என்று யாருக்குப் பிடிக்கிறதோ அவர்கள் தான் நல்லவராக இருக்க முடியும். விருப்பம் நம் பார்வையையும், நம் சிந்தனையையும், நம் செயல்பாடுகளையும் மாற்றிவிடும்.

இ. சோதித்து அறிதல் (judging)

பார்த்தாயிற்று. நோக்கியும் ஆயிற்று. இப்போது கெட்டது எது என்று தெரிந்து நல்லதைப் பற்றிக் கொண்டு, கெட்டதை விடுவதே சோதித்து அறிதல். சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு என்று சிகரெட் பெட்டியிலேயே எழுதியிருந்தாலும், அதைப் பார்த்தாலும், உற்று நோக்கினாலும், நாம் சோதித்து அறிவதில்லையென்றால் நாம் நல்லதை விடுத்துக் கெட்டதையே பற்றிக்கொள்ளத் துணிகின்றோம்.

இந்த மூன்றையும் இறைவன் செய்கின்றார்.

இந்த மூன்றையும் செய்யும் யாவரும் இறைவனின் திருமுகத்தைக் காண்பர் (11:7) என்பது நம் திருப்பாடல் இன்று நமக்கு வைக்கும் செய்தி.

'நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?' என்று சொல்வது எப்படி?


1 comment:

  1. சிலரைப் பார்த்து, நோக்கி, சோதித்து அறிந்து பழகியும் புரிய முடியாமல் போகிறதே என்று பல சமயங்களில் நினைத்து குழம்பில் போயிருக்கிறேன்.இன்று தங்கள் வார்த்தைகளில் தீர்வு கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.ஆம்...அவர்களோடு ஏற்பட்ட சிக்கலை மறந்துவிட்டு அவர்களின் உறவு தந்த சுகத்தை மட்டும் அசைபோடுவதுதான் அது.நேரிய மனதுள்ளவர்க்கு இறைவன் நிச்சயம் தம் திருமுகத்தைக் காட்டுவார் என்றும் நம்புகிறேன்.தங்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.

    ReplyDelete