Saturday, May 3, 2014

அச்சம் தவிர்

'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் நலமிகு பூங்கா போன்றது. அது எல்லா மாட்சியையும் விடப் பாதுகாப்பு அளிக்கிறது.' (சீராக்கின் ஞானம் 40:27)

'அச்சம் தவிர்' என்பது தமிழ்மொழி. ஆனால் இறைவனிடம் அச்சம் கொள்ளுதலை மேன்மையாக வைக்கின்றது விவிலிய மரபு.

அச்சம் எப்போது வருகிறது? நம்மைவிட மற்றொன்று மேன்மையாக இருக்கும்போது நம்மையறியாமலேயே நம்மேல் தொற்றிக்கொள்ளும் ஒரு உணர்வே அச்சம்.

எடுத்துக்காட்டாக, தேர்வு எழுதப் போகும்போது, தேர்வு நம்மைவிட, நாம் கற்றதை விட, நம் அறிவை விட பெரியதாகத் தெரிகின்றது. அதுவே அச்சமாக மாறி விடுகின்றது.

இறைமை இயல்பாகவே நம்மைவிட உயர்ந்து நிற்கக் கூடியது. ஆகையால் இறைமையின் பிரசன்னத்தில் இயல்பாகவே அச்சம் வந்து விடுகிறது.

கோயில் பூனை சாமிக்குப் பயப்படாது என்பார்கள். ஆண்டவருக்கு அருகில் செல்லும் போது வரும் ஒரு சோதனை இதுதான்: 'என்னால் ஆண்டவரைப்போல ஆகிவிட முடியும்!' என்ற நினைப்பு. இந்தச் சோதனையை முறியடிப்பவர்தான் அச்சம் கொள்கின்றார். அந்த அச்சமே நலமிகு பூங்கா போல அவரைச் சூழ்ந்து கொள்கிறது.

2 comments:

  1. "இறையச்சமே ஞானத்தின் துவக்கம்" என்கிறது விவிலியம்.இந்த அச்சம் நமக்கு கொடுப்பது நேர்மறை,எதிர்மறை விளைவுகள் இரண்டுமே.குதிரைக்கு ஒரு கடிவாளம் போல,தெருவில் ஒரு speed break போல மனது தறிகெட்டு ஓடும் போது அதை 'hold on' என்று இழுத்துப் பிடித்து எச்சரிக்கை விடுவதுதான் இந்த அச்சம்.இது நமக்கு மிகமிகத் தேவையானது.இறையச்சத்தை அணிகலனாய் அணிவோம்;நம் இயலாமையை வெல்வோம்."இறைமை"....எங்கே கண்டெடுக்கிறீர்கள் இத்துணை அழகான சொற்களை? தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete