Thursday, May 29, 2014

இறுதிவரை மறந்துவிடுவீரோ?

'கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார்' என்று சொல்வதைவிட 'மனிதன் கடவுளைத் தன் சாயலாகப் படைத்தான்' என்று சொல்வதே பொருந்தும் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். மனிதர்கள் தங்களின் சாயலாக உருவாக்கியவர்களே கடவுளர்கள். தங்களிடமுள்ள நற்குணங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகத் திரட்டி அதற்குக் கடவுள் என்று பெயர் வைத்துவிட்டனர்.

முதல் ஏற்பாட்டில் (பழைய ஏற்பாட்டில்) - பெயர் விளக்கம். இன்று முதல் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று எழுத வேண்டாம் என இன்று முடிவெடுத்தேன். ஜெர்மானிய மொழிபெயர்ப்பு சொல்வது போல முதல் ஏற்பாடு, இரண்டாம் ஏற்பாடு என எழுதவே விழைகின்றேன். முதல் ஏற்பாட்டில் கடவுள் மனித குணங்களைப் பெற்றவராகவே சித்தரிக்கப்படுகின்றார்.

தோட்டத்தில் உலாவுகின்றார். பேசுகின்றார். மக்களின் கூக்குரலைக் கேட்கின்றார். நினைவு கூறுகின்றார். - இவையெல்லாம் மனிதர்கள் அன்றாடம் செய்யும் செயல்கள். இந்தச் செயல்களையெல்லாம் கடவுளும் செய்கிறார்.

இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 13ன் கடவுளும் மனிதரின் குணங்களைக் கொண்ட ஒரு கடவுளே.

'எத்தனை நாள் மறந்திருப்பீர்? என்றும் 'எத்தனை நாள் முகத்தை மறைப்பீர்?' எனவும் கடவுளை நோக்கிக் கேட்கின்றார் பாடகர்.

'மறதி ஒரு தேசிய வியாதி!' என்று 'இந்தியன்' திரைப்படத்தில் சொல்வார் கமல்ஹாசன். தற்போது திண்டுக்கல்லில் ஆயராக இருக்கும் மேதகு. அந்தோணி அவர்கள் மதுரைக்கு முதலில் துணை ஆயராக வந்த போது, வந்த ஒரு மாதத்தில் எல்லாக் குருக்களின் பெயர்களையும், முகங்களையும் கற்றுக்கொண்டார். அவரிடம் ஒருநாள் சககுரு ஒருவர் கேட்டார்: 'அது எப்படி எல்லாப் பெயரும் உங்களுக்கு நினைவிருக்கிறது?' சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்: 'நாம் விரும்பும் எதையும் நாம் மறக்க மாட்டோம். விருப்பம் இருக்கும் காரணத்தால் எனக்கு மறப்பதில்லை'.

கடவுளைப் பார்த்து 'என்னை மறந்துவிட்டீரா?' என்று பாடகர் கேட்கிறாரென்றால் அதில் பொதிந்துள்ள அர்த்தம் என்ன?

'என்மேல் உனக்கு விருப்பம் இல்லையோ?' என்பதுதான்.

இன்று 'என்னைக் கடவுள் மறந்துவிட்டார்!' என நாம் எண்ணும் நேரங்கள் எப்போது? 

2 comments:

  1. இன்றையப் பகுதியானது "Foot Prints"என்ற தலைப்பின் கீழ் நம்மில் பலர் பார்த்து,படித்திருக்கக்கூடிய வரிகளை நினைவு படுத்துகிறது.இறைவன் தன்னை நாடி வரும் பக்தனை இருள் சூழ்ந்த வேளையில் கரம்பிடித்தும்,புயல்வீசும் நேரத்தில் தன்தோள்மேல் சுமந்தும் வழிநடத்துகிறார் என்பதை உணர்த்தும் வரிகள்.நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் நம்முடன் சேர்ந்தே பயணிக்கிறார் என்று நம்புவது மட்டுமே."ஒருநாளும் கைவிடார்; ஒருநாளும் விலகிடார்"...சிறுவயதில் கற்ற பாடல்.திண்டுக்கல் ஆயர் பற்றிய குறிப்பு...குறிப்புக்குச் சொந்தக்கார்ருக்கும்,தக்க தருணத்தில் அதைச் சுட்டிக்காட்டிய தங்களுக்கும் ஒரு பெரிய "சபாஷ்".

    ReplyDelete