Friday, May 16, 2014

எஞ்சிய அப்பங்களை என்ன செய்திருப்பார்கள்?

அக்காலத்தில், பாலைநிலத்திலுள்ள ... பெருந்திரளான மக்களைக் கண்டபோது இயேசு பரிவு கொண்டார். 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே'... 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்...' 'ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறில்லையே...வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார்...எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். (காண். மத்தேயு 14:13-21)

நாம் சின்ன வயசிலிருந்து அடிக்கடி வாசிக்கக் கேட்ட இறைவார்த்தைப் பகுதி. நான்கு நற்செய்திகளிலும் நடைபெறும் ஒரு நிகழ்வும் இது. நான்கு நற்செய்தியாளர்களின் பதிவுகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கின்றன. ஆகையால் இது உண்மையாகவே நடந்திருக்கலாமா? நடந்திருக்கலாம்! ரூல் ஆஃப் மெஜாரிட்டி என்று வைத்துப் பார்த்தால் இது நடந்திருக்கலாம்.

இந்தப் பகுதியை வாசித்தபோது என்னில் எழுந்த கேள்விகள் சில:

1. மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள் என்று சொல்லும் பகுதி எதற்காக இயேசு அங்குச் சென்றபோது எனத் தொடர்கிறது? இயேசு மக்களைப் பின்தொடர்ந்தார் என்பது போல அல்லவா இருக்கிறது!

2. 'ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்' என்று சொல்லும் யோவான் நற்செய்தியில் வரும் சிறுவன் எங்கே?

3. மீதியான அப்பங்களை என்ன செய்திருப்பார்கள்? பன்னரண்டு கூடைகள் பாலைநிலத்தில் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?

பரிவு - பகிர்வு - சமத்துவம். இந்த மூன்று வார்த்தைகள் இந்த நிகழ்வை நமக்கு ஒருமுகப்படுத்துகின்றன. இந்த நிகழ்வு இயேசு நிகழ்த்திய ஒரு அற்புதமா? அல்லது ஒரு போதனையா? என்ற கேள்வி இன்னும் இருக்கின்றது. 'மாலையில் அப்பம் பிடுதல்' என்பது நற்செய்தி நூல்களில் அதிகம் காணப்படும் ஒரு நிகழ்வு: பரிசேயர் வீட்டு விருந்து, இறுதி இராவுணவு, எம்மாவுஸ் உணவு, திபேரியக் கடல் உணவு. இந்த நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை இயேசு செய்த புதுமையாக நற்செய்தியாளர் எழுதியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இயேசுவின் புதுமை வெறும் அப்பங்களைப் பகிரச் செய்தது மட்டுமல்ல. இந்த நிகழ்வில் எண்ணற்ற புதுமைகள் அடங்கியிருக்கின்றன: 1) ஒன்றுமே இல்லை என நினைத்தவர்களிடம் அப்பங்களும், மீன்களும் இருந்திருக்கின்றன. 2) மக்கள் அமர்ந்து உண்ண பாலைவனத்தில் புல்தரை இருந்திருக்கின்றது. 3) எத்தனை பேர் உண்டார்கள் என எண்ணிப் பார்க்க 'கணக்கு' தெரிந்த ஒருவர் இருந்திருக்கிறார். பெண்களும் குழந்தைகளும் நீங்கலாக என்று இருக்கிறது. பெண்கள் இயேசுவுக்கு அருகில் அமர்ந்திருப்பார்களா? இல்லை. தூரமாகத்தான். ஏனெனில் பொதுவிடத்தில் ரபியின் போதனையை அருகில் இருந்து கேட்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பக்கத்தில் உள்ளவர்களை மட்டும் எண்ணிவிட்டு மற்றவர்களை விட்டுவிட்டார்களோ? 4) எஞ்சிய உணவுத்துண்டுகளை எடுக்கத் தயாராக 12 கூடைகள் இருந்திருக்கின்றன. இவைகளும் புதுமைகள் தானே. 'யார் புதுமையைத் தேடுகிறாரோ அவருக்கே புதுமை நடக்கும்' என்பது செல்டிக் பழமொழி. நம் வாழ்விலும் எண்ணற்ற புதுமைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. அவற்றை நாம் புதுமை என உணர்கிறோமா என்பது முதல் கேள்வி.

இரண்டாவதாக, பரிவு. இயேசுவைவிட சீடர்களுக்குத்தானே அக்கறை இருக்கின்றது. 'அவர்களை அனுப்பி விடுங்கள். மாலை நேரமாகிறது!' எனச் சொல்கிறார்கள். சீடர்களின் அக்கறைக்கும், இயேசுவின் பரிவிற்கும் என்ன வித்தியாசம். பரிவு என்பது அக்கறையுடன் கூடிய செயல்பாடு. ஆனால் அக்கறை என்பது வெறும் பொறுப்புணர்வு மட்டும் தான். அங்கே செயல்பாட்டிற்கு இடம் இல்லை. உதாரணத்திற்கு, நம் சாலைகளும், தெருக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் அக்கறைப்படுகிறோம். ஆனால் அது வெறும் உணர்வாக மட்டுமே நின்று விடுகிறதே. சீடர்களின் வார்த்தைகளும் அப்படித்தான் இருக்கின்றன. மக்கள் மேல் அக்கறைப்படுகிறார்களே தவிர, 'அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என நினைக்கிறார்கள். பரிவு என்றால் என்ன? அவனுக்கு நான் இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்பது பரிவல்ல! அவனுக்கு நான் இதைச் செய்யாவிடில் அவனுக்கு என்ன ஆகும் என்று நினைப்பதே பரிவு. மக்களுக்கு உணவு கொடுக்காவிடில் அவர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கின்றார் இயேசு. இன்று மற்றவர்கள் தேவையில் இருக்கும் போது நாம் காட்டுவது வெறும் அக்கறையா அல்லது பரிவு. அக்கறை காட்ட பன்னிரண்டு பேர் இருப்பார்கள். ஆனால் பரிவு காட்ட ஒருவரால் தான் முடியும். நாம் இதில் யார்?

மூன்றாவதாக, வாருங்கள், கேளுங்கள் என்று முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் அழைப்பு விடுக்கின்றார். இயேசுவைச் சந்திக்க வந்த மக்களும் அவரின் போதனையைக் கேட்கவே வருகின்றார்கள். வந்தார்கள்! கேட்டார்கள்! வென்றார்கள்! கால்நடையாகவே வருகின்றார்கள்! நோயுற்றவர்களைத் தூக்கிக் கொண்டே வருகிறார்கள்! பாவம்! கட்டாந்தரையில், சுடுவெயிலில், கல்லும் முள்ளும் குத்த கடவுளைத் தேடியிருக்கிறார்கள். இந்தத் தேடல் எனக்கு ஒரு பாடம். இன்று நாம் கடவுளைத் தேடி ஓடவெல்லாம் தேவையில்லை. நாமே அவரை ஒரு பெட்டிக்குள் வைத்து நமக்கு அருகில் வைத்துவிட்டோம். நம் வீட்டுக் கதவைத் திறந்தால் எதிரில் கோவில். எதிரில் கடவுள். செல்ஃபோனைப் போல இன்று கடவுளும் நம் கைக்கருகில் இருக்கிறார். ஆனால் 'அவர் நம் அருகில் இருக்கிறார்!' என்ற சிந்தனை எனக்கு இல்லை. அவரைத் தேட வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இயேசுவைத் தேடிய மக்கள் இன்று என்னைப் பார்த்தால் என்ன கேட்பார்கள்! வாங்க தம்பி! எங்களோட வாங்க...அவர் இங்க வந்திருக்கிறார்! என்று சொல்லும் போது நான் அவர்களிடம் என்ன சொல்வேன்?

நான்காவதாக, எஞ்சிய உணவுகளை ஏன் மக்களிடமே திருப்பிக் கொடுக்கவில்லை? பழைய ஏற்பாட்டு மன்னா கதை நினைவிருக்கிறதா? அன்றன்றுள்ள அப்பம் - இதுதான் இறைவனின் மதிப்பீடு. சேர்த்து வைப்பது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது - இவையெல்லாம் மனித மதிப்பீடுகள். அன்று விடிகிறதா! அன்று நம் தேடல் சிறப்பாக இருக்கிறதா! அன்று உணவு கிடைக்கிறதா! போதும்! இறைவன் நிகழ்காலத்தின் இறைவன். இறைவனால் நிரப்பப்படும் போது எதிர்காலம் குறித்த கவலை மறைந்துவிடுகிறது. (சொல்ல ஈசியா இருக்கு! ஆனா செய்யக் கஷ்டமாக இருக்கே!)

ஐந்தாவதாக, இயேசு இறுதி இராவுணவில் நற்கருணையை ஏற்படுத்தும் போது பயன்படுத்தும் ஐந்து வினைச்சொற்கள் இங்கேயும் பயன்படுத்தப்படுகின்றன: எடுத்து, பார்த்து, போற்றி, பிட்டு, கொடுத்து. நற்கருணையில் நாம் இன்றும் சொல்லும் இந்த வார்த்தைகள் ஒருவர் மற்றவரின் பசி போக்க நம்மைத் தூண்ட வேண்டும். உணவு மட்டும் பசி அல்ல. அறிவு, அன்பு, நட்பு, அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டுதல், தனிமை, நோய் - இவைகளும் பசிதான். அங்கே நம்மை எடுத்துப் பிட்டுக் கொடுக்க முடிகிறதா?


2 comments:

  1. "பரிவு என்பது அக்கறையுடன் கூடிய செயல்பாடு"..அழகான பதிவு.ஆனால் ஒரு நிகழ்வைப்பற்றிப் பேசும்போது இத்தனை நுணுக்கங்களில் கவனத்தை சிதறடித்தால் 'தேவையானதை' தவறவிட்டுவிடுவோமோ என்னும் பயமும் கூடவே வருகிறது.என் போன்றவர்களுக்கு வேண்டியதெல்லாம்...'இயேசு மக்கள்மீது பரிவு கொண்டார்; புதுமைகள் செய்தார்;என் வாழ்விலும் புதுமைகள் நிகழும்'....இவ்வளவே...இந்த எளிய விசுவாசமே(simple faith) என்னைக் கரைசேர்க்க போதுமல்லவா? என்ன சொல்கிறீர்கள் Father?

    ReplyDelete
  2. "பரிவு என்பது அக்கறையுடன் கூடிய செயல்பாடு"..அழகான பதிவு.இயேசுவின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளைக் குறிப்பிடும்போது இம்மாதிரி பல நுணுக்கங்களில் கவனத்தைச் சிதறடித்தால் தேவையானதை இழந்துவிடுவோமோ என்னும் பயமும் கூடவே எழுகிறது.என் போன்றவர்களுக்கு வேண்டியதெல்லாம்..'இயேசு மக்கள் மீது பரிவு கொண்டார்; அவர்களுக்காக புதுமைகள் செய்தார்; என் வாழ்விலும் புதுமைகள் நிகழும்'..இந்த குறைந்த பட்ச விசுவாசம்(simple faith) போதும் என்னைக் கரைசேர்க்க.அப்பறம் எதற்கு இப்படி மூளையைப் கசக்கணும்? என்ன சொல்கிறீர்கள் Father? 'அதிகப் பிரசங்கி' என்றா?

    ReplyDelete