Wednesday, May 21, 2014

நற்பேறு பெற்றவர் யார்?

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக விவிலியத்தின் கேள்விகள் ஒவ்வொன்றையும் சிந்தித்தோம். கேள்விகள் இன்னும் முடிந்தபாடில்லை.

இன்று முதல் திருப்பாடல்களில் வரும் கேள்விகளை மையமாக வைத்துச் சிந்திப்போம்.

திருப்பாடல்கள் நூலின் முதல் வரியே கேள்வியோடுதான் தொடங்குகிறது.

'நற்பேறு பெற்றவர் யார்?'

இந்த யார் என்பதற்கான பதிலை மூன்று எதிர்மறை வார்த்தைகளாலும், இரண்டு நேர்மறை வார்த்தைகளாலும் சொல்கின்றது திருப்பாடல்.

1. மூன்று எதிர்மறை வார்த்தைகள்:

அ. பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்.
ஆ. பாவிகளில் வழியில் நில்லாதவர்.
இ. இகழ்வாரின் குழுவினில் அமராதவர்.

ஒரு மனிதர் செய்யும் அடிப்படையான செயல்கள் மூன்று: நடப்பது, நிற்பது, அமர்வது. படுப்பது என்பது அமர்வதின் நீட்சி அல்லது நிற்பதின் சாய்ந்த நிலை என எடுத்துக்கொள்ளலாம். ஆகவே செயல்கள் மூன்று. இந்த மூன்றிலும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வரி உணர்த்துகின்றது.

'பொல்லாதவர்' என்றால் யார்? 'அவன் ரொம்ப பொல்லாதவன்!' எனச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது 'போல அல்லாதவரே!' 'பொல்லாதவர்!' - இயல்புக்கு மாறாக இருப்பவர். இயல்புக்கு மாறாக இருப்பவர்கள், இயற்கையை மீறிச் செயல்படுபவர்கள் இவர்களின் சொல்படி நடக்கக் கூடாது. சரியா?

'பாவிகள்' என்பதற்கு விவிலியம் கூறும் அர்த்தம் பல. அதில் முதன்மையாக இருப்பது 'திருச்சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவர்கள்'. திருச்சட்டம் என்றால் பத்துக்கட்டளைகள்.

'இகழ்வார்' - இகழப்படக்கூடியவர் அல்லது பிறரை இகழ்பவர் என்று இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கலாம். மற்ற மனிதர்கள் இவர்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல.

இந்த வரியில் இயற்கையை மதிக்கவும், இறைவனை மதிக்கவும், பிறரை மதிக்கவும் செய்யாதவர்களிடமிருந்து அகன்று நிற்பவரே 'நற்பேறு' பெற்றவர்.

2. இரண்டு நேர்மறை வார்த்தைகள்:

அ. ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்.
ஆ. அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்.

இந்த இரண்டிலும் மையமாக இருப்பது திருச்சட்டம். புதிய ஏற்பாட்டில் பத்துக்கட்டளைகள் என்னும் திருச்சட்டத்தை இயேசு 'அன்பு' என்ற ஒரே வார்த்தையாகச் சுருக்கிவிட்டார். ஆகையால் அன்பில் மகிழ்ச்சியுறுபவரும், அன்பை இரவும் பகலும் சிந்திப்பவரே நற்பேறு பெற்றவர்.

இந்த நற்பேறு பெற்றவர் எப்படி இருப்பார்?

அ. நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல - ஃப்ரெஷ்ஷாக!
ஆ. தாம் செய்வதனைத்திலும் வெற்றியோடு - பெருமிதமாக!

இன்றும் நாம் பிறரை வாழ்த்தும் போது 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்!' என வாழ்த்துகிறோம். இந்தப் 'பதினாறு' என்பது 'பிள்ளைகளின் எண்ணிக்கை' அல்ல. நம் தமிழ்மரபில் ஒருவர் கொள்ள வேண்டிய நற்பேறாக 'பதினாறை' வகைப்படுத்தியுள்ளனர். அவை இவைதாம்: புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், துணிவு, பொன், நெல், உடல்நலம், இன்பம், அறிவு, அழகு, அறம், பெருமை, ஊழ், நீடிய ஆயுள்.

இந்தப் பதினாறு பெற்றவர்களும் நற்பேறு பெற்றவர்களே.

நீங்களும் நற்பேறு பெறுவீர்களாக! இன்றும்! என்றும்!

2 comments:

  1. தந்தையே, எண்ணிப்பார்த்தேன் 16 நற்பேறு சரியாக இருக்கிறது. வழமையாக இதுவும் எனக்கு புதிய தகவல் தான். உங்களை போல் நானும் ஒரு முயற்சியில் ஈடுபட்டன். திருப்பாடல்களில் வரும் நற்பேறுகளையும், மலைபொழிவில் வரும் நற்பேறுகளையும் இணைத்து ஒரு கட்டுரைகள் எழுத தொடங்கினேன் இன்னும் தொடங்கிய இடத்தில் தான் நிற்கிறேன். முடியல்ல...உங்களால் மட்டும் எப்படி முடிகிறது...

    ReplyDelete
  2. இன்று வெளியூர் செல்வதற்காக நேரத்துடன் எழுந்து தங்கள் பகுதியைத்தான் திறந்தவுடன் கண்ணில் பட்டது "you are blessed".அந்த அதிகாலைப் பொழுதின் ஆசீர்வாதமான வார்த்தைகள் இறைவனே இறங்கிவந்து என்னை ஆசீர்வதித்தது போல் உணர்ந்தேன்.மிக்க நன்றி.நல்லாரையும் பொல்லாரையும் பற்றிய பகுதி.பொல்லாரைப்பற்றி நமக்கு கவலை இல்லை...நாம் நல்லார் என்பதற்காக அல்ல....அதற்காக முயற்சி செய்பவர்கள்.சங்கீதங்களைக் குறித்து நீங்கள் பேசப்போவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.தொடருட்டும் உங்கள் நற்பணி.

    ReplyDelete