Monday, May 26, 2014

ஏன் தொலையில் நிற்கின்றீர்?

திருப்பாடல்கள் 9 மற்றும் 10 தமிழ் மற்றும் மற்ற மொழிப் பதிப்புக்களில் இரண்டு பாடல்களாக இருந்தாலும் செப்துவாஜின்ட் எனச் சொல்லப்படும் 'எழுபதின்மர் மொழிபெயர்ப்பில்', அதாவது கிரேக்க மொழிபெயர்ப்பில் இரண்டு பாடல்களும் ஒரே எண்ணிற்குக் கீழேயே இருக்கின்றது.

திருப்பாடல்கள் ஒரே நபரால் அடுத்தடுத்து கவிதைகள் போல எழுதப்பட்டவை அல்ல. பல்வேறு காலங்களில் பல்வேறு நபர்களால் பாடப்பட்டவை. பாடியவர்கள் எல்லாம் எழுதியவர்கள் என்பது கருத்து அல்ல. அந்தக் காலத்தில் அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. முதலில் வாய்வழிப் பாடல்களாக இருந்து பின் எழுத்துருவம் பெற்றவை. இப்பாடலை எழுதியவர்கள் அதற்கென்று தலைப்பும் கொடுத்தார்கள். ஆனால் தலைப்புகள் இல்லாத திருப்பாடல்கள் நான்கு: 1, 2, 10 மற்றும் 33. இன்று நாம் காணும் 10ஆம் திருப்பாடலுக்குத் தலைப்பு இல்லை. 9இன் தலைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது:

பாடகர் தலைவர்க்கு: 'மகனுக்காக உயிரைக்கொடு' என்ற மெட்டு. தாவீதின் புகழ்ப்பா.

'மகனுக்காக உயிரைக்கொடு' என்ற பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்பதை இந்தத் தலைப்பிலிருந்தே ஊகித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலையும் ஏதாவது ஒரு மெட்டை வைத்தே அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். நம் மண்ணின் சிறந்த இதிகாசங்களான மகாபாரதமும், இராமாயணமும் கூட பல நூற்றாண்டுகள் வாய்வழி மரபில் இருந்தவைதாம்.

பாடலின் இடையிடையே 'சேலா' என்று வரும் (71 முறை திருப்பாடல்களிலும், 3 முறை அபக்கூக்கு நூலிலும்). சேலா என்பது ஒரு இசைக்குறியீடு. இதன் பொருள்: 'நிறுத்து!' இந்த இடத்தில் நிறுத்தி சிந்திக்க வேண்டும் என்று ஒருசிலர் அர்த்தம் கொடுக்கின்றனர்.

திபா 9 நீதிக்காக நன்றி செலுத்துவதாகவும், திபா 10 நீதிக்காக மன்றாடுவதாகவும் இருக்கிறது. நன்றி செலுத்துவதற்கு முன் மன்றாட்டு வர வேண்டுமல்லவா. ஒருவேளை முன்பின் இடமாற்றம் செய்து இந்தப் பாடலைக் கோர்த்து விட்டார்களோ?

திபா 9 மற்றும் 10ன் முக்கிய வார்த்தை வழக்கு: வழக்காடுபவர் தாவீது (அப்படி வைத்துக்கொள்வோம்!) யாரோடு வழக்காடுகிறார்? கடவுளோடு. எதற்காக? பொல்லாரிடமிருந்து தன்னைக் காப்பதற்காக.

பொல்லார் ஒருபக்கம். கடவுள் மற்றொரு பக்கம். இடையில் தாவீது.

பொல்லாரைப் பற்றி தாவீது சொல்வது மூன்று:

அ. 'கடவுள் இல்லை' என அவர்கள் சொல்கின்றனர்.

ஆ. 'எவராலும் என்னை அசைக்க முடியாது!' என்று சொல்கின்றனர்.

இ. மறைந்திருக்கின்றனர் (ஒளிந்திருந்து, மறைவான இடங்களில், பதுங்கியிருக்கின்றனர்)

கடவுளைப் பற்றி தாவீது சொல்வதும் மூன்று:

அ. ஆண்டவர் கவனிக்கின்றார்.

ஆ. ஆண்டவர் காத்திருக்கின்றார்.

இ. ஆண்டவர் துணைசெய்கின்றார்.

இந்தத் திருப்பாடலில் நாம் சிந்திக்கும் கேள்வி: 'ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கிறன்றீர்?'. பழைய ஏற்பாட்டில் குருத்துவம் உருவாவதற்கு முன்பாக அரசர்கள்தாம் குருக்களாக இருந்தனர். அரசர்கள் மட்டுமே ஆலயத்தில் பணி செய்ய முடியும். இவ்வாறாக, கடவுளுக்கு அருகில் இருக்கும் தாவீது அரசருக்கே கடவுள் தொலைவில் தெரிகின்றார்.

நம் வாழ்விலும் இந்தக் கேள்வி அடிக்கடி வரும். தினமும் செபம் சொல்வோம். கோவிலுக்குச் செல்வோம். புனிதர்களின் கெபிகளுக்குச் செல்வோம். திருயாத்திரை செல்வோம். இருந்தாலும் கடவுள் தொலைவில் இருப்பது போலவே இருக்கும். கடவுள் தொலையில் நிற்கின்றாரா? அல்லது நாம் கடவுளை விட்டுத் தொலையில் நிற்கின்றோமா?

தொலைவு என்பது நபர் சார்ந்தது. என்னதான் 10000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும் என் இனியவர்களோடு பேசும் போது ஏதோ அருகருகில் இருப்பது போலவே எனக்குத் தோன்றும். இங்கே என்னதான் 10 மீட்டர் தொலைவில் இருந்தாலும் இங்கிருப்பவர்களோடு பேசி உறவாட என் மனம் மறுக்கின்றதே.

கடவுள் தொலைவில் இருக்கின்றார் என்ற உணர்வு தான் மிகவும் கொடுமையான உணர்வு. அடுத்ததாக, தாவீது தன்னைப் பற்றி சொல்வது தான் நாம் கவனிக்க வேண்டியது. 'அனாதைக்கு நீரே துணை'. மூலமொழியில் 'அனாதையான எனக்கு நீரே துணை!' என்று உள்ளது. எல்லாம் கொண்டிருக்கிற அரசர் எப்படித் தன்னை 'அநாதை' என்று சொல்ல முடியும்? 'நான் உங்களை அனாதைகளாக விட்டுவிடமாட்டேன்' என்ற இயேசுவின் வார்த்தைகளை 'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விட்டுவிடமாட்டேன்' என புதிய மொழிபெயர்ப்பில் வாசிக்கின்றோம். 'அநாதை' என்பது 'திக்கற்ற நிலை'. திக்கு என்றால் திசை. திசையற்றவர்களே அனாதைகள். அம்மா அப்பா இல்லாதவர்கள் மட்டும் அனாதைகள் அல்லர். அன்பு இல்லாதவர்களும், தாங்கள் எங்கே செல்கிறோம் என்று தெரியாதவர்களும் அனாதைகளே.

கடவுள் தொலைவில் சென்று விட்டால் உடனடியாக எல்லா உறவுகளும் நம்மை விட்டுப் போய்விடுதாகத் தெரியுமோ என்னவோ? தாவீதுக்கு அப்படித் தான் தோன்றுகிறது.

தாவீதுக்கு இப்போது இரண்டு வலி: ஒன்று, உள்ளேயிருக்கும் தனிமை. இரண்டு, வெளியே இருக்கும் பொல்லார்.

ஆண்டவர் நீதியைக் காட்டினாரா? அல்லது அவரும் மறைந்திருக்கிறாரா? அதன் பதில் தான் நாளைய திருப்பாடல்.

'ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்?' (திபா 10:1)

1 comment:

  1. இன்றையப்பகுதி 'இமைப்பொழுது உன்னை மறந்தேன்.ஆயினும் என்பேரிரக்கத்தால் உன்னை மீட்டுக்கொண்டேன்' எனும் ஏசாயாவின் வரிகளை நம் நினைவிற்குக் கொண்டுவருகின்றன.ஆம்,நாம் தடுக்கிவிழுந்த நேரங்களெல்லாம் அவர் நம்மை விட்டுத்தள்ளி நின்ற நேரங்கள் இல்லை என்ற விஷயத்தை நமக்கு உணர்த்தும் வரிகள்தாம்'ஆண்டவரே உம்மை நாடிவருவோரை நீர் கைவிடுவதில்லை; அவர்களின் கதறலை நீர் கேட்க மறப்பதில்லை' போன்றவை.இறைவனின் அருகாமை நம்முடன் எப்பொழுதுமே உடன் வருகிறது என்பதைத் திண்ணமாய்க் கூறியுள்ளீர்கள்.ஆனால் எனக்கு விளங்காத்து...'எப்போதுமே எதற்காகப் பொல்லார் அழிந்தே தீரவேண்டும் என்பதுபோல் திருப்பாடல்களின் வரிகள் உணர்த்துகின்றன? பதில் கிடைக்குமா தந்தையே?

    ReplyDelete