Thursday, May 8, 2014

இன்னொரு முகம்

இன்று எங்கள் பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழா. ஒவ்வொரு ஆண்டுவிழாவையும் வளாகத்திற்கு வெளியேயுள்ள ஏதாவது சுற்றுலாத்தளத்தில் கொண்டாடுவார்கள். விரும்புபவர்கள் பங்கேற்கலாம். கடந்த ஆண்டு செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு கண்டிப்பாகப் போகவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று சென்றேன்.

இன்று நான் 'இன்னொரு முகத்தைக்' கண்டேன்.

என் பல்கலைக்கழகத்தின்...

நான் வாழும் இந்த இத்தாலிய நாட்டின்...

இன்னொரு முகமே அது.

பாடம்...படிப்பு...மௌனம்...என்று ஒதுங்கிச் செல்லும் மாணவர்கள் எல்லாம் இன்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்தனர்.

உயர்ந்த கட்டிடம்...குறுகிய மனதினர் என்று நான் கருதிய இத்தாலியும் இன்று என் முன் தன் இன்னொரு முகத்தைக் காட்டியது. இத்தாலி வாழ்வது அதன் கிராமங்களில்தான். ரோம் நகர மக்கள் தாம் தங்களை ஏதோ வானத்தில் இருந்து வந்தது போல நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கிராமங்களில் அதன் முகம் புன்சிரிப்புடன் இருக்கிறது.

இன்று நாங்கள் சென்ற இடம் ஃபோஸ்ஸாநோவா. தூய தாமஸ் அக்வினாஸ் வாழ்ந்து, இறந்து, அடக்கம் செய்யப்பட்ட துறவுமடத்தையும் அதைச் சுற்றியிருந்த ஆலயங்களையும் பார்வையிட்டோம்.

தாமஸ் அக்வினாஸைப் பற்றி ஒரு வார்த்தை. இவர் யார்? ஒரு சிறந்த மெய்யியல் மற்றும் இறையியில் சிந்தனை. தூய அகுஸ்தினாரின் சிந்தனைகள் மனித உடலின் பாலுணர்வை அடிப்படையாக வைத்து இருக்கும். இவரின் சிந்தனை மனிதரின் ஆன்மாவை அடிப்படையாக வைத்து இருக்கும். அகுஸ்தினாரை விட மிக உயர்வாக, பரந்த மனப்பான்மையோடு சிந்தித்தவர்.

'கடவுள் இருக்கிறார்!' என்பதற்கு ஐந்து நிரூபணங்களைக் கொடுத்தவர். இன்றைய நவீன மூளைக்கு அவரின் சிந்தனைகள் பொருந்தாதவைகளாக இருந்தாலும் இன்னும் மாற்றுச்சிந்தனையை முன்வைக்க யாராலும் முடியவில்லை. நான் மெய்யியல் படித்தபோது எனக்குள் எழுந்த 'கடவுள் இல்லை' என்ற சிந்தனைக்கு மருந்திட்டது இவரின் சிந்தனைகள் தாம். கிறிஸ்தவ மெய்யியலார்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் இவர். இவர் சிந்தனையின் உச்சகட்டத்தில் இருந்தபோது மரம் ஒன்று இவர் தலையில் ஒடிந்து விழுந்து இவரை நிரந்தர நோயுற்றவராக்கிவிட்டது. மரம் விழுந்தது நன்மைக்கா? தீமைக்கா? என்பது இன்னும் புரியாத புதிர்.

அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றி வந்தபோது மரத்திற்கு அருகில் செல்லாமல் சற்று தள்ளியே நடந்தேன்.

பல நேரங்களில் என் மனம் மற்றவர்களின் ஒரு முகத்தை மட்டுமே கண்டுவிட்டு அதுவே நிரந்தரம் என்று உறைந்துவிடுகிறது. கோபம், பயம், ஆணவம் கொள்ளும் மனம் உறைந்து விடும் என்பது அக்வினாஸின் கருத்து. இந்த மூன்றும் எனக்கும் அதிகமாகவே இருக்கிறது. முதல் உலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளைக் கொள்ளையிட்டன, இன்றும் கொள்ளையிடுகின்றன என்ற கோபம். புதிய மொழி, புதிய கலாச்சாரம், புதிய உணவு - இதை எப்படி எதிர்கொள்வது என்ற பயம். 'எங்கள் நாட்டில் இல்லாததா!' என்ற ஆணவம். இந்த மூன்றும் தான் இத்தாலியின் இன்னொரு முகத்தைக் காணவிடாமல் என் மனதை உறைய வைத்துவிட்டது.

நம் உறவுகளிலும் இந்த மூன்றும் வந்துவிட்டால் அடுத்தவரின் இன்னொரு முகத்தைக் காண முடியாமல், அடுத்தவரைப் புரிந்து கொள்ள முடியாமல் நம் மனம் உறைந்துவிடுகிறது.

'அகன்ற பார்வையும், பரந்த உள்ளமும், திறந்த மனமும் தா! இறைவா!' என்பதுதான் என் இன்றைய செபமாக இருந்தது.

உங்களுக்கும்...இன்னொரு முகம் இருக்கிறதே!


1 comment:

  1. புனிதர்கள் இருக்கும் இடத்தில்தான் பேய்களும் இருக்கும் போல...உரோமை நகர் பற்றி 2 வார்த்தை கேட்க இன்னும் மனிதரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.புனித தாமஸ் அக்வினாஸின் பெருமைகளைக் கூற அவரைப் புனித அகுஸ்தினாரோடு ஒப்பிட்டிருக்க வேண்டாமே என்பது என் தாழ்மையான கருத்து.தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று குணாதிசயங்களும் சுயமரியாதை கொண்ட எந்த மனிதனுக்கும் தேவைதான்.ஆனால் அதையும் தாண்டி ஒருவரின் நிறை குறைகளோடு அவர்களை ஏற்றுக்கொள்ளும் போதுதான் நாம் உயர்ந்து நிற்கிறோம்."அகன்ற பார்வையும்,பரந்த உள்ளமும்,திறந்த மனதும் தா! இறைவா!" என்பது எங்களின் ஜெபமாகவும் இருக்கட்டுமே!

    ReplyDelete