Friday, May 9, 2014

நானும் மயங்கிப் போனேன்!

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்து போனேன்.
நீர் என்னைவிட வல்லமையுடையவர்.
என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்.
'அவர் பெயரைச் சொல்லமாட்டேன்.
அவர் பெயரால் இனிப் பேசுவும் மாட்டேன்' என்பேனாகில்,
உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல் இருக்கின்றது.
அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது.
(எரேமியா 20:7,9)

'ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர். நானோ மயங்கிப் போனேன்' என்ற ஒரு பாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதிகமாகக் கோவிலில் பாடப்பட்ட ஒன்று. இந்தப் பாடலைப் பாடகர் குழு பாடத் தொடங்கியவுடன் ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சைகை காட்டிய, புன்முறுவல் பூத்த நண்பர்களையும், காதலர்களையும், தம்பதிகளையும் நிறையவே பார்த்திருக்கிறேன்.

'மயக்கிவிட்டாய். நானும் மயங்கிப்போனேன்'.
ஆழ்ந்த நட்பில், காதலில் இருக்கும் இருவர் ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சொல்வதாக இந்த வாக்கியம் இருக்கின்றது. இதே வாக்கியத்தைத் தான் எரேமியா யாவே இறைவனைப் பார்த்துச் சொல்கின்றார்.

'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்!'

'இதுதான் அழகுல மயங்குறதோ!'

என்ற திரைப்படல் வரிகளும் சரி,

'என்ன மாயமந்திரம் போட்டாளோ...என் மகன் இப்படி மயங்கிட்டான்' என்று தன் மகன்களைப் பற்றிப் புலம்பும் அப்பாவி தாய்மார்களைப் பார்க்கும் போதும் சரி,

'பொடி போட்டு கண்ணை மறைத்துவிட்டு மயங்கும் நேரத்தில் நகைகளைக் கொள்ளையிட்டார்கள்' என்று வாசிக்கும் செய்தித்தாள் வரிகளும் சரி

நமக்குச் சொல்வது இதுதான்:

மயங்குதல் நம்மை ஒரு மாற்று உலகிற்கு அழைத்துச் செல்கிறது.

பழைய தமிழில் இதை 'சொக்கிப்போதல்' என்கிறோம்.

எபிரேயத்தில் எரேமியா பயன்படுத்தும் வார்த்தை என்ன தெரியுமா? 'சக்கா' - அதாவது வீழ்ந்துவிடுதல்.

என்னை வீழ்த்திவிட்டாய். நானும் வீழ்ந்துவிட்டேன்.
என்னை ஆட்கொண்டாய். நானும் ஆட்கொள்ளப்பட்டேன்.
என்னை ஏமாற்றினாய். நானும் ஏமாந்துவிட்டாய்.
என்னை மயக்கினாய். நானும் மயங்கிவிட்டேன்.
என்னைச் சொக்க வைத்தாய். நானும் சொக்கிப்போனேன்.

என இதை மொழிபெயர்த்துக்கொண்டே இருக்கலாம்.

நம்மை மயங்கச் செய்வது எது?

ஒருவரின் அழகு.

ஒருவரின் அறிவு.

ஒருவரின் ஆற்றல்.

இவைகளில் நாம் மெய்ம்மறந்து விடுகிறோம்.

நீங்கள் மெய்ம்மறந்து பொழுது என்ன? என்று கேட்டால் நீங்களும் நிறையவே சொல்லலாம்.

எரேமியா எதற்காக ஆண்டவரைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொல்கின்றார்?

எரேமியா நினைத்தது போல அவரது பணி மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்த ஆதங்கத்தில் 'நீயெல்லாம் கூப்பிட்டு நான் வந்தேன் பாரு...என்னயச் சொல்லனும்...' என்ற விரக்தியில் எழும் வார்த்தைகள் தாம் இவை.

ஆனால் அவரின் வார்த்தைகளைத் தொடர்ந்து வாசியுங்களேன். அவருக்கு ஆண்டவரிடம் இருந்த அன்பை அப்படியே பிட்டுப் பிட்டு வைக்கின்றார். 'நான் உன்கூட பேச மாட்டேன். உன் பெயரைச் சொல்ல மாட்டேன்' என்று சொன்னாலும் உன் வார்த்தையும் நினைவும் என்னைக் கொல்லுகிறதே...

'நான் இன்று உன்னை நினைக்க மாட்டேன்'
என்று முடிவெடுக்கும் ஒவ்வொரு பொழுதும்
உன்னை நினைத்துக்கொண்டேயிருந்தேன்...
என்று காதலன் தான் சண்டையிட்ட காதலியிடம் சொல்வது போல இருக்கிறது இது...

மயங்குதல் ஒரு இனிய உணர்வு.
நீங்கள் யாரையாவது மயக்கிவிட்டீர்கள் என்று உங்களை யாரையாவது சொன்னால்
இன்று சந்தோசப்படுங்கள்.
நீங்கள் மயங்கியிருந்தாலும் சந்தோசப்படுங்கள்.

கட்டித்தழுவிய பொழுதுகள்
முத்தமிட்ட நிமிடங்கள்
ஆழ்ந்த சிந்தனைகள்
மேலான ஆன்மீகம்
விரும்பிய பயணம்
வற்றாத நீர்வீழ்ச்சி
வளைந்து ஓடும் ஆறு
குழந்தையின் சிரிப்பு
முதுமையின் நிறைவு

என நம்மை மயக்கியவைகள்...நம்மைக் கண்டிப்பாக மாற்று உலகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கும்...

மயக்கி விட்டாய்...நானும் மயங்கிப் போனேன்!

2 comments:

  1. இறைவனின் வாக்குறைக்க எரேமியா மக்களிடம் சென்றபோது 'பஸ்கூர்'என்பவன் அஅவரைச் சிறையிலடைக்க விரக்தியின் உச்சத்தில் கூறுகிறார் இங்கு மேற்கோள்காட்டப்பட்ட வசனங்களை என்று உணரமுடிகிறது.ஒருவரிடமோ அல்லது ஒரு பொருள்மேலோ நாம் கொள்ளும் ஈர்ப்பே மயக்கம்,அன்பு,பாசம்,காதல்,நேசம் என்று பல வார்த்தைகளில் சொல்லப்பட்டாலும் அர்த்தம் ஒன்றுதான்.இவை யாவற்றுக்குமே 'ஆயுசு' குறைவு.ஏனெனில் இவை யாவுமே புற அழகைப்பார்த்து வருபவை.ஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டு நிலைத்து நிற்கக்கூடியது ஒன்று எனில் அதுதான்'அர்ப்பணம்'.பிரதிபலனை எதிர்பாராது நம்மை முழுமையாக்க் கொடுக்கக் கூடியது.இறைவனில் நம்மை அர்ப்பணிப்போம்; அவரது அன்பில் நிலைத்திருப்போம்.சுவையான பகுதியை எடுத்துக்கூறி சிந்திக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்....

    ReplyDelete
  2. Anonymous5/09/2014

    தந்தையே அருமையான பதிவு, அருமையான வரிகள். ஆனால் சின்ன சந்தேகம். 'நீயெல்லாம் கூப்பிட்டு நான் வந்தேன் பாரு...என்னயச் சொல்லனும்...' இது எரேமியாவின் ஆதங்கமா அல்லது உங்கள் ஆதங்கமா என்பது தான் சந்தேகம். தந்தையே....ம்ம்ம்ம்...அவ்வாறு நினைத்தாலும் அது நாம் ஆண்டவரின் மேல் உள்ள காதலினால் தான் அல்லவா. அண்மையில் இல்லத்தாரிசிப்பு சென்று இருந்தீர்கள் அல்லவா அப்போது உங்களுக்கு இருந்த மனநிலை தான் (கடவுளை எவரும் தேடுவதில்லையே). அன்று எரேமியாவுக்கும் இருந்தது. உங்கள் வாரிகளின் அழகு என்ன தெரிவுமா? நீங்கள் எந்த மனநிலையில் இருந்து எழுதுகிறீர்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இரு தளத்தில் இருந்து கொண்டு இரண்டையும் கலந்து ஒரு அழகிக கருத்தை கூறுவீர்கள். இன்று ஆன்மீகமும், காதலும். இதை வாசித்து விட்டு நாம் அதிர்ந்து போய் இருப்போம். ஆம் சிந்திக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்....

    ReplyDelete