Monday, May 12, 2014

வாருங்கள்! கற்றுக்கொள்ளுங்கள்!

மேலும் அவர், 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது' என்றார். (மத்தேயு 11:28-30)

சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்குச் சென்றோமெனில் ஆற்றுப்படுகைகளிலும், ஊரணிகள் மற்றும் குளங்களின் கரைகளிலும் நெட்டுவாக்கில் நடப்பட்டு இரண்டு கற்களையும், அவைகளின் மேலே குறுக்காக வைக்கப்பட்ட நீண்ட கல்லையும் காணலாம். இந்தக் கற்கள் தாம் சுமைதாங்கிகள். உணவு, உடை என வாங்கிக்கொண்டு ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்யும் சாமானியர்கள் நிழல் தரும் மரங்களின் கீழே சுமைகளைச் சற்றே இறக்கி வைத்துவிட்டு தண்ணீர் பருகவும், தொடர்ந்து தங்கள் பயணத்தைப் புத்துணர்ச்சியோடு தொடங்கவும் பயன்பட இராஜராஜ சோழன் அமைத்தவையே இந்தச் சுமைதாங்கிகள்.

வாழ்க்கை என்ற பயணத்தில் அன்றாடம் சுமக்கும் சுமைகளைத் தன்னிடம் இறக்கி வைக்க வாருங்கள் என்று சுமைதாங்கியாக நம்மை அழைக்கின்றார் இயேசு.

இன்றைய நற்செய்தியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: 1) அழைப்பு, 2) வாக்குறுதி.

இயேசுவின் அழைப்பு இரண்டு நிலைகளில் உள்ளது: 1) என்னிடம் வாருங்கள். 2) என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

இயேசுவின் வாக்குறுதிகள் மூன்று: 1) நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். 2) நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 3) என் நுகம் அழுத்தாது.

நுகம் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இது ஒரு விவசாய சமுதாயத்தின் வார்த்தை. எருதுகளை சுமைகள் இழுக்கும் வண்டியில் பூட்டும்போதும், நிலத்தை உழுவதற்கு ஏரில் சேர்க்கும் போது எருதுகளின் கழுத்தில் வைக்கப்படும் மரத்துண்டே நுகம். இந்த நுகத்தைச் சுற்றி வரும் தோல் பட்டையினால் எருதுகள் பூட்டப்படும். நுகங்கள் அழுத்தி கறுத்துச் சுருங்கித் தொங்கிப்போன எருதுகளின் கழுத்துப் பகுதி அது சுமக்கும் சுமையின் அடையாளம்.

உகாரித் மற்றும் அசீரிய நாடுகளின் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் அடிமைகளைக் கட்டி இழுத்துச் செல்ல நுகங்கள் பயன்பட்டன என்றும், எகிப்தில் பிரமிடுகளைக் கட்டும்போது பாரவோன்கள் நுகங்களை அடிமைகள் மேல் வைத்து அவர்களைச் சுமைகளைச் சுமக்க வைத்தனர் எனவும் சொல்கின்றனர். இவ்வாறு அவர்கள் செயல்பட்டதற்கான ஓவிய ஆதாரங்களும், கல்வெட்டுக்களும் இருக்கின்றன.

எரேமியா இறைவாக்கினரும் தன் கழுத்தில் நுகத்தைப் பூட்டியவராய் யூதா அரசம் இதேபோல அடிமைத்தனம் என்னும் நுகத்தால் கட்டப்பட்டு பாபிலோனியாவிற்கு இழுத்துச்செல்லப்படும் என்று செதேக்கியா அரசன் முன் இறைவாக்குரைக்கின்றார் (எரேமியா 27).

இந்த இரண்டு பின்புலங்களில் பார்க்கும் போது இயேசு பயன்படுத்தும் 'நுகம்' என்ற வார்த்தை அடிமைநிலையைக் குறிப்பதாக இருக்கின்றது. இயேசு தன் சமகாலத்தவர் அனுபவித்த உரோமை மற்றும் கிரேக்க அடிமைத்தனத்தின் கொடுமைகளிலிருந்து அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இந்த வார்த்தைகளைச் சொல்கின்றார். இயேசுவின் சமகாலத்தவர் அரசியல், சமூகம், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்ற அனைத்து நிலைகளிலும் அந்நியரால் சுரண்டப்பட்டனர். சாதாரண சாமானியரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

இயேசு சுமைகளைக் குறைப்பவராகவோ, சுமைகளைத் தான் சுமந்துகொள்பவராகவோ, சுமைகளை அழிப்பவராகவோ வாக்குறுதி தரவில்லை. மாறாக, இளைப்பாறுதல் தருவதாக மட்டுமே சொல்கின்றார். இயேசுவின் இளைப்பாறுதலைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

அவரிடம் வர வேண்டும். 2. அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சுமைகள் என்றால் உடனடியாக நாம் நம் கடன்சுமையையோ, வேலைப் பளுவையோ, படிப்பையோ, பயணத்தையோ, வீட்டில் நடக்கும் திருமணத்தையோ, நம் நாட்டின் அரசியல், பொருளாதார சூழலையோ மட்டும் நினைக்க வேண்டாம். நம் உள்ளத்தில் இருக்கும் தனிமை, வெறுமை, இயலாமை, குற்றவுணர்வு, பயம், கோபம் என நாம் தெரியாமல் சுமக்கும் சுமைகளும் ஏராளம். எதற்காக அவைகளைச் சுமந்து கொண்டே செல்ல வேண்டும். இயேசுவிடம் செல்லலாமே. அவரிடம் செல்லும் வழியே குறுகலான வழி. அந்த வழியிலேயே நம் சுமைகள் தானாகக் குறைந்துவிடும்.

இரண்டாவதாக, அவரிடம் சென்றால் மட்டும் போதாது. அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன கற்றுக்கொள்வது? கனிவு மற்றும் மனத்தாழ்மை. இதையே பழைய மொழிபெயர்ப்பில் சாந்தம் மற்றும் மனத்தாழ்ச்சி எனக் கற்றோம். கனிவு என்றால் என்ன? கனிவின் அர்த்தம் கனி. காய்க்கும் கனிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? காய் எதிர்த்து நிற்கக் கூடியது. கனி வழிந்து கொடுக்கக் கூடியது. காயைக் கடித்தால் பல்தான் வலிக்கும். ஆனால் கனியில் ஊசியும் இலகுவாக நுழைந்துவிடும். கனியின் இயல்பு நெகிழ்வுத்தன்மை. வலிந்து நின்றால் சுமை இன்னும் வலிக்கும். நெகிழ்ந்து கொடுத்தால் சுமையும் இலகுவாகும். மனத்தாழ்மை என்பது என்ன? நாம பல நேரங்களில் நினைப்போம். நமக்கு நடக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குத் தகுதியற்றவை. வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. சமநிலையில்லாதது வாழ்க்கை. 'நான் ஏழையாக இருக்கப் படைக்கப்பட்டவன் அன்று!' என்று சொல்பவர்களே விரைவில் பணம் வேண்டி திருடத் தொடங்குகின்றனர். 'நான் வெற்றியாளனாக இருக்கப் படைக்கப்பட்டவன்' என்பவர்கள் 'எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று' துணிகின்றனர். இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்வதே மனத்தாழ்மை. இந்த இரண்டும் இருந்தால் எந்தச் சுமைகளையும் சுமந்துவிடலாம்.

நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு பழக்கம் சுமையாக நம்மோடே வரலாம். குடி, கடன், பொய்பேசுதல், வன்சொல் - இவைகளை நெகிழ்வோடும், தாழ்மையோடும் ஏற்றுக்கொண்டால் இளைப்பாறுதல் தானாகவே வந்துவிடும்.

இன்று நம்மைச் சுற்றிப் போலி இளைப்பாறுதல்கள் நிறைய உள்ளன. சில நேரங்களில் ஆன்மீகம் கூட ஒரு போலி இளைப்பாறுதலாக மாறிவிடுகிறது. 'எங்களிடம் வாருங்கள். உங்கள் கடன் சுமை நீங்கும். குடியிலிருந்து விடுதலை கிடைக்கும்' என குணமளிக்கும் கூட்டங்கள் கூவுகின்றன. சரி போகலாம் என்று அங்கும் போய் பாட்டுப் பாடிவிட்டு வந்தால் வீட்டுமுன் கடன்காரன் நிற்கிறான். பாட்டுப்பாடினால் கடன் நீங்கிவிடுமா? வாங்கிய கடனை நாம்தானே கட்ட வேண்டும். தொடங்கிய குடியை நாம் தானே நிறுத்த வேண்டும்.

நம் சுமைகள் என்ன என்பதை அடையாளம் காண்போம். போலி இளைப்பாறுதல்கள் பின் போகிறோமோ என்று எச்சரிக்கையாக இருப்போம்.

'என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. உள்ளே போவர். வெளியே வருவர். இளைப்பாறுதலைக் கண்டடைவர்' (யோவான் 10:9).


2 comments:

  1. நல்ல கட்டுரை பயனாக இருந்தது சகோ. நன்றி

    ReplyDelete
  2. Anonymous11/14/2023

    மிக சிறந்த பாடமாக இருந்தது

    ReplyDelete