Saturday, May 24, 2014

இந்நிலை எத்தனை நாள்?

'ஒரே ஆற்றில் இரண்டு முறை இறங்க முடியாது!' என்பார் கிரேக்க தத்துவ ஞானி ஹெராகிளிட்டஸ். இதிலிருந்து வரும் சொல்லாடல் தான் 'மாற்றம் ஒன்றே மாறாதது!' எல்லாமே மாறிக்கொண்டே இருப்பது தான் வாழ்வின் எதார்த்தம். ஆனால் இந்த மாற்றத்தின் போது நம் மனநிலை ஒரே மாதிரி இருக்கிறதா? என்று கேட்டால் 'இல்லை' என்றே பதில் சொல்வேன்.

காதலியுடன் இருக்கும் இரவில் 'இந்த இரவு விடியவே கூடாது!' என நினைக்கின்ற மனம், இறந்தவர் வீட்டில் அமர்ந்திருக்கும் போது 'சீக்கிரம் விடியாதா!' என நினைக்கின்றதே! இரண்டும் இரவுகள் தாம். ஆனால் இரண்டிலும் மனம் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. நமக்கு மகிழ்ச்சி தருவது எப்போதும் நீடிக்க வேண்டுமென்றும், துன்பம் தருவது உடனே அகல வேண்டுமென்றும் மனம் துடிக்கின்றது.

இன்று நாம் காணும் திருப்பாடல் 6ல் பாடலாசிரியர் 'ஆண்டவரே! இந்நிலை எத்தனை நாள்?' என்று கேட்கின்றார்.

'நீண்ட காலம் நீடிப்பது' நமக்குப் பல நேரங்களில் துன்பத்தையும், கலக்கத்தையும் தருகின்றது. நமக்கு வரும் காய்ச்சல் ஒரே நாளில் போய் விட்டால் கவலையில்லை. அதுவே, ஒரு வாரம் நீடித்தால் மனம் லேசாகப் பயப்படுகிறது. என்னவாக இருக்கும்? என்று கேட்கிறது. 'வலி' நீடிப்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது.

திருப்பாடல் ஆசிரியரின் இந்தக் கேள்வியின் பின்னால் என்ன வலி இருந்தது?

இத்திருப்பாடலுக்குத் தலைப்பு 'இக்கட்டான காலத்தில் உதவுமாறு வேண்டல்' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பாடகருக்கு ஏதோ ஒரு இக்கட்டான நிலை. பாடலிலிருந்து நாம் ஊகிக்க முடிவது இரண்டு:

அ. உடல்நலக் குறைவு
ஆ. எதிரிகளின் படைபலம் அல்லது படையெடுப்பு

இந்த இரண்டும் ஏறக்குறைய வெகு நாட்கள் நீடிக்கின்ற சூழல். 'எல்லாம் மாறிவிடும்!' என நினைக்கிறார். ஆனால் ஒன்றும் மாறவில்லை. இந்தப் பிண்ணனியில் இந்தப் பாடலைப் பாடுகின்றார்.

ஆசிரியரின் மனநிலை இரண்டு நிலைகளில் இங்கே பிரதிபலிக்கப்பட்டுள்ளது:

வரிகள் 1 முதல் 8 வரை மிகவும் சோகமாகவும், 9 மற்றும் 10ல் மிகவும் துணிச்சலாகவும் சித்தரிக்கப்படுகின்றார்.

மற்றொரு வகையில் பிரித்தால், பாடலாசிரியரின் உள்ளத்தில் குற்றவுணர்வு, தாழ்த்தப்பட்ட நிலை மற்றும் வருத்தம் என்ற மூன்று உணர்வுகள் இருக்கின்றன.

இந்தப் பாடல் நமக்கு பழைய ஏற்பாட்டுக் கால மக்களின் சிந்தனை ஓட்டங்களையும் வெளிப்படுத்துகின்றது. அவை எவை?

அ. நமக்கு வருத்தம் அல்லது நோய் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நம் பாவம். (எனக்கும் சில நேரங்களில் இந்த மனநிலை வரும். எனக்கும் நான் அன்பு செய்பவருக்கும் ஏதாவது வாக்குவாதம் வந்தால், 'ஐயோ! இன்னைக்கு செபம் செய்யாததால் இப்படி நடக்கிறதோ!' எனத் துடிக்கிறது மனம்)

ஆ. பாதாளம் என்பது இறந்தவர்கள் வசிக்கும் இடம். அங்கே கடவுள் இருப்பதில்லை. இறப்பு என்பது ஒரு தண்டனை. அது கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது.

இ. மனிதர்கள் உடல், மனம், ஆன்மா என்ற மூன்று காரணிகளால் ஆக்கப்பெற்றவர்கள்.

இந்த மூன்று சிந்தனைத்தடாகங்களும் இன்று ஏற்புடையைவா என்பது கேள்விக்குறி.

மொழியியல் பின்புலத்தில் பார்த்தால் மிகவும் கலர்ஃபுல்லான பாடல் இது. மனித உணர்வுகளை வார்த்தையால் உணர்த்த முடியும் என்று நிரூபிக்கும் பாடல்.

தளர்ந்து போனேன்
எலும்புகள் வலுவிழந்தன
உயிர் ஊசலாடுகின்றது
பெருமூச்சினால் இளைத்துப் போனேன்
துயரத்தால் கண் வீங்கியது
கட்டில் கண்ணீரால் நனைந்தது
பகைவரால் கண் மங்கியது

தளர்ந்து போகக் கூடியது மனம். வலுவிழக்கக் கூடியது உடல். ஊசலாடக் கூடியது ஆன்மா.

பாடகரின் மனம், உடல், ஆன்மா என அவரின் மொத்தமும் வருத்தத்தில் இருக்கின்றது.

'கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது!' என்ற சொல்லாடலில் ஆசிரியரின் பாடல்திறன் வெளிப்படுகின்றது. இலக்கியத்தில் இதற்குப் பெயர் 'மிகைப்படுத்துதல்' (ஆங்கிலத்தில் 'ஹைபர்போல';). இருக்கின்ற ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

எ.கா: இந்த மேசை யானை கனம் கனக்கிறது. (கனமாக இருக்கிறது ஓகே! அதற்காக யானையைத் தூக்க முடியுமா?)
இந்த டிரெயினில் இன்று உலகமே பயணம் செய்கிறது. (கூட்டமாக இருக்கிறது ஓகோ! அதற்காக உலகத்தையே டிரெயினில் அடைக்க முடியுமா?)

அதேபோல, கண்ணீர் வடிக்கிறீங்க ஓகே! அதற்காக உங்க கட்டில் அதில் மிதக்குமா?

ஆராய்ச்சி போதும். அர்த்தத்திற்கு வருவோம்.

பாடலாசிரியருக்கு தாள முடியாத வருத்தம். அந்த வருத்தத்தில் இருந்து இறைவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

அவரின் உள்ளத்தின் வருத்தம் என்னவென்று நமக்கு உறுதியாகத் தெரியவில்லையென்றாலும் அவர் வடிக்கும் கண்ணீர் உண்மை.

நாம் அதிகமாக சந்தோஷமாக இருக்கும்போதும், அதிகமாக சோகமாக இருக்கும் போதும் நம் உடல் பேசும் மௌன வார்த்தை கண்ணீர். இந்தக் கண்ணீர் ஒரு வித்தியாசமான எதார்த்தம். அருட்பணியாளராக இருந்து நான் எத்தனையோ கண்களில் கண்ணீரைப் பார்த்திருக்கின்றேன். அடுத்தவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்த்து நான் கையாலாகாத நிலையில்தான் அதிக நேரம் இருந்திருக்கின்றேன். பல கண்ணீருக்கு எனக்குப் பதில் தெரியாது. உரோமைக்கு வந்த புதிதில் நானும் அதிக நாள்கள் கண்ணீர் வடித்திருக்கிறேன். கட்டில் மிதக்கும் அளவிற்கு இல்லையென்றாலும் தலையணை நனையும் வரை அழுதிருக்கிறேன்.

ஒவ்வொரு வீட்டின் தலையணையிலும் ஏதோ ஒரு கண்ணீர்த்துளி ஒட்டியிருக்கத்தான் செய்கின்றது. இரவின் மடியில், யாரும் நம்மைப் பார்க்காமல் இருக்கும் அந்த நேரத்தில் நம் உள்ளம் ஏதோ ஒரு இழப்பை நினைத்து கண்களைக் கசியச் செய்து விடுகிறது.

சோகம் வரும்போது மனம் தளர்ந்து விடுகிறது. உடல் வலுவிழந்து போய்விடுகிறது. மனம் அங்கலாய்க்கிறது. ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்குப் பின்னாலும் இந்த முப்பரிமாண வலி இருக்கும்.

கண்ணீருக்கு என்னதான் வழி?

இறைவன் தரும் துணிச்சல். கட்டில் மிதக்கும் அளவிற்குக் கண்ணீர் விடும் பாடகர் திடீரென 'ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்!' எனத் துள்ளிக் குதிக்கின்றார். இறைவனின் உடனிருப்பை உணர்பவர்கள் மட்டுமே கண்ணீர்க் கடலிலிருந்து மீள முடியும்.

இரண்டாவதாக, கண்ணீர் தானாக சரியாகி விடாது. நாம் தான் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று யோசிக்க வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும்.

விடுமுறையின் போது என் நண்பி ஒருத்தியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அழுதுகொண்டே அவளின் பிரச்சினைகளையெல்லாம் சொன்னாள். அவளின் கண்களைத் துடைத்தவாறு, 'அழாதே! எல்லாம் சரியாகிவிடும்!' என்றேன். வேகமாக அவள் சொன்னாள்: 'எல்லாம் சரியாகிவிடாது! நாம் தான் சரியாக்க வேண்டும்!' உடனே ஞானம் பெற்றேன் நான்.

'முடியும் என்று நினைக்கும் போது விடியச் செய்வாரே!'

என்ற பாடல் வரிகள் எங்கோ கேட்கின்றன.

அவரின் கரங்கள் நம் கண்ணீரைத் துடைக்கட்டும் - இன்றும்! என்றும்!


1 comment:

  1. அதென்னவோ 'கண்ணீர்' என்றாலே அது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என் நினைக்கின்றனர்.இரக்கம்,கோபம்,பாசம் போல கண்ணீரும் ஒரு உணர்வின் வெளிப்பாடு என்பது புரியாமல் கண்ணீர் விடுபவர்களைப்பார்த்து எரிச்சல் படுபவர்கள் தான் அதிகம்.நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதவர்களின் 'இயலாமையின்' வெளிப்பாடே கண்ணீர். உள்ளம் நெகிழ்ந்து விடும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் கண்டிப்பாக அதன் பலனைப் பெறாமல் போகாது.என்ன தந்தையே! தாங்கள் தலையணை நனைய வடித்த அத்தனை கண்ணீரும் இன்று நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அத்தனை அனுபவங்களுக்கும் 'பிள்ளையார் சுழி' என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்கள் தானே!

    ReplyDelete