Thursday, May 29, 2014

தகுதியுள்ளவர் யார்? குடியிருப்பவர் யார்?

திருப்பாடல் 15ல் இரண்டு கேள்விகள் நம் முன். இந்தப் பாடல் தாவீதுக்கு உரியது. 'கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை' என்பது தமிழ் விவிலியம் கொடுக்கும் தலைப்பு.

உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

தங்குதலும், குடியிருப்பதும் ஒன்றா?

இந்தத் திருப்பாடலை எழுதியவர் மிகப்பெரிய கவிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்தப்பாடலின் வாக்கிய அமைப்பு அப்படி உள்ளது. அந்த சிறப்பான அமைப்பு சிதைந்து விடாமல் தமிழில் மொழிபெயர்த்தவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.
'தங்குவது' என்பது தற்காலிகமானது. 'குடியிருப்பது' என்பது நிரந்தரமானது.

தங்குவதில் அடங்கியிருக்கும் தற்காலிகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது 'கூடாரம்' என்ற வார்த்தை. குடியிருப்பதில் அடங்கியிருக்கும் நிரந்தரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது 'மலை' என்ற வார்த்தை.

வெளியூர்களுக்கும், வெளிநாட்டிற்கும் செல்லும்போது நாம் அங்கே தங்குகிறோம். ஆனால் நம் வீட்டில் குடியிருக்கிறோம். வெளிநாட்டில் குடியிருந்து கொண்டு, நம் வீட்டில் தங்குகிறோம் என நிலை மாறிவிட்டால் அங்கே ஆபத்து இருக்கின்றதுதானே!

ஒரு நாட்டின் குடியுரிமை பெற வேண்டுமெனில் அதற்கென சில தகுதிகளை விதிக்கின்றது ஒரு நாடு. ஒரு லாட்ஜில் நாம் ஒரு இரவு தங்க வேண்டுமெனில் அங்கேயும் அந்த நிர்வாகம் சில தகுதிகளை முன்வைக்கின்றது.

தாவீது அரசர் தன் யூதா அரசையும் தாண்டி இறைவனின் அரசில் தங்குவதற்கும், குடியிருப்பதற்குமான தகுதிகள் என்ன என்பதை இப்பாடலில் எழுதுகின்றார். கொஞ்ச நாள் தங்குதலோ, நிரந்தரத் தங்குதலோ இங்கே தகுதிகள் ஒன்றுதான்.

பத்துத் தகுதிகளை திருப்பாடல் முன்வைக்கின்றது:

1. நேரியவற்றைச் செய்வர்.
2. உளமார உண்மை பேசுவர்.
3. நாவினால் புறங்கூறார்.
4. தோழருக்குத் தீங்கிழையார்.
5. அடுத்தவரைப் பழித்துரையார்.
6. நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்.
7. ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்.
8. தமக்குத் துன்பம் வந்தாலும் கொடுத்த வாக்குறுதியை மீறார்.
9. தம் பணத்தை வட்டிக்குக் கொடாதார்.
10. மாசற்றவருக்கு எதிராக கையூட்டு பெறார்.

இந்த அமைப்பைப் பாருங்களேன். இதில் 4 தகுதிகள் 'எப்படி இருக்க வேண்டும்!' எனவும், 6 தகுதிகள் 'எப்படி இருக்கக் கூடாது' எனவும் சொல்கின்றன. முதல் இரண்டும் நேர்மறை, மற்ற மூன்றும் எதிர்மறை. மறுபடி முதல் இரண்டும் நேர்மறை. மற்ற மூன்றும் எதிர்மறை. இலக்கியத்தில் இதற்குப் பெயர் 'ஓடு வேய்தல்' (tiling technique) - அதாவது ஒரு ஓட்டின் மேல் மற்றொரு ஓட்டை வைத்து மேயும்போது ஒரு பகுதி உள்ளே போய் இருக்கும். மற்ற பகுதி அதன் தொடர்ச்சியாக இருக்கும்.

இந்த மொத்த 10 தகுதிகளையும் ஒரே வார்த்தையில் சுருக்கியும் சொல்கின்றார்: 'மாசற்றவராய் நடப்பவர்!'

இந்தப் பத்துத் தகுதிகளில் எட்டாம் தகுதியை மட்டும் இன்று சிந்திப்போம்:

'கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது!' எப்போது? எப்போதும். தமக்குத் துன்பம் வந்தாலும்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாக இறைமக்கள் முன்னிலையில் 'நான் விருப்பத்துடன் இறைப்பணி ஆற்ற முன்வருகிறேன்' என்று நான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின் வாங்க தினமும் சிந்தனை வருகின்றது. இந்தப் பாடலின் வரியோடு என் மனப்போராட்டத்தையும் இணைத்து சிந்திக்க விழைகின்றேன்.

'நீ கோபமாக இருக்கும் போது முடிவு எடுக்காதே! நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாக்குறுதி கொடுக்காதே!' என்பார்கள். ஏரோது அரசன் மகிழ்ச்சியாய் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிதான் திருமுழுக்கு யோவானின் இறப்பிற்குக் காரணமாக மாறுகின்றது. நான் வாக்குறுதி கொடுத்த போது என்ன நிலையில் இருந்தேன்? மகிழ்ச்சி தான். அன்று மகிழ்ச்சியால் நான் வாக்குறுதி கொடுத்தேன் என்று சொல்வதை விட, வாக்குறுதி கொடுத்ததால் மகிழ்ச்சியாக இருந்தேன் என்றே சொல்வேன்.

வாக்குறுதிகள் மூன்று வகை:

1. 'வித் டேர்ம்ஸ் அன்ட் கன்டிசன்ஸ்' (with terms and conditions) - நாம் அனுபவிக்கும் எல்லா சேவைகளும் நமக்கு வாக்குறுதி தருகின்றன. நாம் பயன்படுத்தும் இமெயில், ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக், ஏர்செல், ஏர்டெல், எல்லா செல்ஃபோன் சேவைகள், வங்கி சேவைகள், குரியர் சேவைகள். இந்த எல்லாவற்றிலும் நம்மிடம் 'அக்செப்ட்' என்று அழுத்தச் சொல்லியிருப்பார்கள். அல்லது 'ஆம்' என கையெழுத்திடச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் தங்கள் சேவையை நமக்கு வாக்குறுதி செய்கிறார்கள். எப்போது? அவர்களின் 'நிபந்தனைகளுக்கு' நாம் உட்படும் போது.

2. 'வித் எ பெய்ட் ஸ்மைல்' (with a paid smile) - இது ஏர்ஹோஸ்டஸ் வாக்குறுதி. மருத்துவமனையில் நாம் காணும் நர்சுகள், பள்ளிகளில் நாம் சந்திக்கும் டீச்சர்கள், பேருந்தில் நாம் காணும் நடத்துனர்கள், ஹோட்டலில் நாம் காணும் சர்வர்கள் அனைவரும் இந்த குழுவிற்குள் வருவர். இவர்கள் பயிற்சி பெறும் போதே 'சிரிப்பதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்'. வாடிக்கையாளர் என்ன மாதிரி கடுப்பேத்தினாலும் அவர்கள் சிரிக்கத்தான் வேண்டும். வாங்குகிற காசுக்குச் சிரிப்பார்கள். இதில் டீச்சர்களில் விலக்கு இருக்கலாம். ஆனால் இன்று எல்லாம் தொழில் தானே. மாணவரைக் கண்டிக்க முடியாது இன்று. கண்டித்தால் மீடியாக்கள் பயம் அவர்களுக்கு. ஆகையால் மாணவர்கள் தவறும் போது 'நமக்கு என்ன? தண்டித்தால் யாரு போலிஸ் ஸ்டேசனுக்கு அலைவது' என்று அவர்களும் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

3. 'கள்ளமற்ற வாக்குறுதி' (stainless promise) - திருமணத்தில் ஒருவர் மற்றவருக்கும், அருட்பணி நிலையில் முன்வருபவர் இறைவனுக்கும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோர்கள், நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கும் தரும் வாக்குறுதி இது. 'இது' என்று சொல்வதை விட, இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

இந்த மூன்று வாக்குறுதிகளில் இன்று நான் கொடுத்துள்ள வாக்குறுதி இரண்டாம் நிலைக்குள் இருப்பதாகவே தோன்றுகிறது. 'வாங்குகின்ற காசுக்கு' மனநிலை. ஏர்ஹோஸ்டஸ் போல சிரிப்பது விரைவில் அலுப்பு தட்டிவிடும். கடவுளை எவ்வளவு நாளைக்கு 'பெய்டு ஸ்மைல்' கொண்டு ஏமாற்ற முடியும்.

இன்று வாக்குறுதிகள் கொடுப்பதை விட அதைக் கடைப்பிடிக்கும் விடாமுயற்சிக்காகத்தான் நான் செபிக்கிறேன். வாக்குறுதி யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அதில் நிலைக்க விடாமுயற்சி அவசியம். இன்று நாம் ஒருவர் மற்றவருக்கும், நமக்கு நாமேயும், கடவுளுக்கும் கொடுக்கும் வாக்குறுதியை விட, அதில் நிலைத்திருக்க வேண்டிய விடாமுயற்சிக்காக செபிப்போம்.

'தமக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாத' மாசற்ற மனம் தா இறைவா!


1 comment:

  1. இன்று தங்களுடன் இணைந்து நானும் அந்த 8வது வாக்குறுதி பற்றிப் பேச விழைகிறேன்.தங்களின் சிந்திக்கும் திறனில் ஒரு தெளிந்த நீரோடையைப் பார்க்கிறேன்.ஆனால் பல சமயங்களில் தங்களையே மிக்க் குறைவாக மதிப்பிடுவது தான் ஏன் என்று விளங்கவில்லை.நிதானத்துடன், நம்மை நாமே சுய சோதனைக்குட்படுத்தினால் அனைவருமே அந்த இரண்டாம் நிலைக்குள் தான் இருப்போம்.கூட்டிக்கழித்துப் பார்த்தால் எல்லாமே ஒரு " பண்டம் மாற்று" முறைக்கு உட்பட்டதுதான்.ஆகவே தங்கள் நிலை குறித்து பெருமைப்பட அனைத்து தகுதிகளும் தங்களுக்கு உண்டு.தாங்கள் கொடுத்த வாக்குறுதியால் தான் தங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்தது என்று தாங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்களே,இதற்கு மேல் என்ன வேண்டும்? எல்லோருமே பலவீனத்துக்குட்பட்டவர்களே.தாங்கள் தூவும் விதைகள் சென்றடையும் அனைத்து ஆன்மாக்களும் தங்கள் நலனுக்காக செபிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.நாம் அனைவருமே இறைவனுக்கும்,மற்றவருக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் பிரமாணிக்கம் காட்ட முயற்சிப்போம்.இறைவன் தங்களையும்,தங்களின் அனைத்து முயற்சிகளையும் இன்றும் என்றும் ஆசீர்வதித்துக் காப்பாராக.

    ReplyDelete