Saturday, March 1, 2014

கலவை வாக்கியம்

அவன் பெயர் பாபு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடிக்க இன்னும் 3 மாதங்களே இருந்தன. அவனது காலேஜிலிருந்து என்.எஸ்.எஸ் கேம்பிற்காக அலங்காநல்லூருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்திற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு முன் பெய்த மழையில் கவர்மெண்ட் போட்டிருந்த செம்மண் ரோடெல்லாம் அரித்து விட்ட நிலையில் அந்த ரோட்டைச் சீரமைப்பு செய்வதே அவர்கள் பணி. அவனோடு சென்ற 30 பேருக்கு அவன் தான் லீடர். எல்லாரையும் அழைத்துச் சென்ற என்.எஸ்.எஸ் மாஸ்டர் சுகுமாரன் அவர்களை லீடர் பொறுப்பில் விட்டுவிட்டு தன் இல்லம் திரும்பினார்.

பகலில் ரோடு வேலை செய்வோம். இரவில் அந்த ஊரின் பிள்ளைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுப்போம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது விழிப்புணர்வு நாடகம் நடத்துவோம். சாப்பாட்டுக்குச் சொல்லியாயிற்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீட்டிலிருந்து சாப்பாடு வரும். பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்வோம். இந்த ஊரின் ஆரம்பப் பள்ளிதான் நாம் தங்கப் போகும் இடம். எல்லாவற்றையும் திட்டமிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான் பாபு.

இவனுக்கு இனியா வீட்டிலிருந்துதான் சாப்பாடு. இனியா அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். சுறுசுறுப்பானவள். எப்போதும் ஓடிக் கொண்டேயிருப்பாள். 'அண்ணே உங்க எல்லாருக்கும் நான் தண்ணி எடுத்து ஊத்துறேன்' எனச் சொல்லி காலையிலும் மாலையிலும் அவர்களுக்குக் குடத்தில் குடிதண்ணீர் கொண்டு வந்து ஊற்றினாள்.

தன் நண்பர்கள் கேங்கை அழைத்துக் கொண்டு ஆங்கிலம் கற்க வந்தாள். அந்த ஊரின் தெரு விளக்கில் அமர்ந்து அந்த மாணவர்கள் அந்தக் கிராமத்தின் பொடுசுகளுக்கு இங்கிலீசு கற்றுக் கொடுத்தனர். பாபுவும் அங்கு இருந்தான். இனியாவுக்கு ஒரு டவுட்.

'சிம்பிள் சென்டன்ஸ் என்றால் என்ன? காம்பவுண்ட் சென்டன்ஸ் என்றால் என்ன? காம்ப்ளக்ஸ் சென்டன்ஸ் என்றால் என்ன?'

ஒவ்வொரு முறை பரீட்சையிலும் அந்த கிராமர் பகுதியில் மார்க் வெறும் முட்டை தான் வரும். 'அண்ணே எனக்குச் சொல்லித் தாங்களேன்!' என ஒவ்வொருவரையும் நச்சரித்தாள். அவர்களும் சொல்லிக் கொடுத்தார்கள்.

'ஒரு சப்ஜெக்ட் ஒரு வெர்ப் ஒரு ஆப்ஜெக்ட் இருந்தால் சிம்பிள் சென்டன்ஸ்' என்று தொடங்கினான் பாபுவின் நண்பன் ஜோ. 'சப்ஜெக்ட்னா' மேத்ஸா? என்று கடுப்படித்தாள் இனியா. ஜோ கோபக்காரன். 'ஆமாம். நீ படித்தது போதும். போ!' என விரட்டி விட்டான். அவனுக்கு யாரும் எதிர்கேள்வி கேட்டால் பிடிக்காது.

'என்னடா ஆச்சு?' கேட்டுக் கொண்டே வந்தான் பாபு. 'எனக்கு கிராமர் சொல்லித் தாங்க!' குழைந்தாள் இனியா.

மிக நன்றாகவே புரியும்படியாகச் சொல்லிக் கொடுத்தான் பாபு. கடைசியில் அவளிடம் தமிழில் இந்த மூன்று வகை அமைப்புகளும் இருக்கின்றனவா? என்று கேட்டான். அவளும், 'ஆம்!' என்றாள். 'காம்பவுண்ட் சென்டன்ஸை' தமிழில் சொல் பார்க்கலாம்' எனக் கேட்டான்.

'கலவை வாக்கியம்!' எனச் சொல்லி நாக்கைக் கடித்தாள்.

'தமிழில் சொல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அந்த வாக்கிய அமைப்பு இல்லை. ஏனெனில் தமிழ் 'இணைப்புச் சொற்கள்' இல்லாத மொழி' என்று லெக்சர் கொடுக்க ஆரம்பித்தான். 'இது கூடத் தெரியல! நீயெல்லாம் எனத்தப் படிச்சு?' என்று கிண்டல் செய்கிறான். அவளை இன்னும் கேள்விகள் கேட்டுக் குழப்புகிறான். இனியாவுக்குக் கோபம் வந்து விடுகிறது.

'உங்களுக்குத் தெரிஞ்சா எல்லாருக்கும் தெரியணுமா? ஏன் இப்படியெல்லாம் திட்டுறீங்க? எனக்குக் கிராமர் தெரியலனா என்ன? படிப்பறிவே இல்லாம எத்தணை பேர் இருக்கிறாங்க! கிராமர் முக்கியமல்ல. உண்மையா இருக்குறோமா? நாலு பேர மதிக்கிறோமா? எல்லாருக்கும் உதவி செய்றோமோ? அதுதான் முக்கியம்!' எனப் பொறிந்து தள்ளினாள்.

பாபுவுக்கு அவமானமாய்ப் போய்விட்டது.

அன்று அவனுக்குச் சாப்பிடவே மனமில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான்.

அவள் சொல்வதிலேயும் நியாயம் இருக்கிறதே!

'நமக்கு முக்கியமானது எல்லாருக்கும் முக்கியமா என்ன?' தன்னையே கேட்டுக் கொள்கிறான்.

எங்கோ தூரத்தில் ஒரு டீச்சர் டியூசன் நடத்தும் சத்தம் கேட்கிறது:

'காம்பவுண்ட் சென்டன்ஸ் என்றால் கலவை வாக்கியம்!'

தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறான் பாபு.

1 comment:

  1. Anonymous3/02/2014

    சிம்ப்பிளோ,காம்ப்பௌண்டோ நாம் மற்றவர் வாழ்க்கையைக் காம்ப்ளெக்ஸ் ஆக்காதவரை சரிதான்.நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் அடுத்தவருக்குத் தெரியாது என்பதாலோ இல்லை நமக்கு ஒன்று தெரிந்ததாலேயே நாம் புத்திசலிகளென்றோ நினைப்பது நாளடைவில் நம்மை முட்டாள்களாகத்தான் சித்தரிக்கும். நான் முட்டாளா இல்லை புத்திசாலியா...யோசிப்போம்.

    ReplyDelete