Saturday, March 15, 2014

யூதாசு என்னும் புதிர்

பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான். (மாற்கு 14:10-11)

இயேசுவின் பாடுகளை சிந்திக்கும் தவக்காலத்தில் இருக்கின்றோம் நாம். இயேசுவின் பாடுகளில் முக்கிய இடம் வகிப்பவர் யூதாசு இஸ்காரியோத்து. யூதாசு இயேசுவை ஏன் காட்டிக் கொடுத்தார்? யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தது சரியா?

கிபி 4ஆம் நூற்றாண்டில் யூதாசை புனிதர் என்று கருதினர் கிறித்தவர்களின் ஒரு பகுதியினர். யூதாசு இறைத்திருவுளத்தை நிறைவேற்றவே அவரைக் காட்டிக் கொடுத்தார் எனவும், இறைத்திருவுளத்தை நிறைவேற்றியதால் அவர் செய்தது சரிதான் எனவும் வாதாடினர் அவர்கள். அவர்கள் பக்கம் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பது நம் ஆய்வு அல்ல.

இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் மூன்று வார்த்தைகளைப் பற்றிச் சிந்திப்போம்:

1. பன்னிருவருள் ஒருவர். யூதாசைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் நற்செய்தி 'பன்னிருவருள் ஒருவர்' என்று குறிப்பிடுகின்றது. யூதாசு செய்த துரோகத்தின் கொடூரத்தைக் காட்டுவதற்காகவே இப்படிப்பட்ட சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. இயேசுவோடு உடனிருப்பது பெரிதல்ல. உடனிருந்தாலும் அவரை விட்டுத் தூரமாக இருக்கலாம். 'தம்மோடு இருக்கவும், அனுப்பப்படவும்' என்று இயேசு பன்னிருவரை அனுப்புகின்றார். ஆனால் அதில் ஒருவர் தூரமாகவே தானே இருந்திருக்கிறார். 

2. தலைமைக் குருக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நம் அனைவருக்குமே ஒரு சப்கான்சியஸ் மைன்ட் உண்டு. அந்த சப்கான்சியஸ் மனம் தான் நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்கிறது. நன்மை நன்மையுடனும், தீமை தீமையுடனும் சேருவதற்கு உதவி செய்வது இந்த ஆழ்மனம் தான். நாம் வாழும் உலகம் கண்ணாடி உலகம். நாம் சிரித்தால் சிரிக்கும். அழுதால் அழும். கோபப்பட்டால் கோபப்படும். பரிவு காட்டினால் பரிவு காட்டும். யூதாசின் ஆழ்மனமும் தலைமைக்குருக்களின் ஆழ்மனமும் ஏதோ ஒருவகையில் தொடர்பை உருவாக்கிக் கொண்டுவிட்டது.

3. அவர்கள் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். மத்தேயு நற்செய்தியாளர் 30 வெள்ளிக்காசுகள் யூதாசுக்கு தரப்பட்டன என எழுதுகிறார். இயேசுவுக்காக 300 தெனாரியத்தைத் துறக்கத் துணிந்து பெண் ஒரு பக்கம். இயேசுவை வைத்து 30 வெள்ளிக்காசுகள் சம்பாதித்த அவரின் சீடர் மறுபக்கம். இயேசுவை விட்டுத் தூரமாக இருந்தாலும் இயேசுவுக்கு அருகில் இருக்க முடியும் என உணர்த்திவிட்டார் அந்தப் பெண்.

இயேசுவைப் பற்றி எழுதப்பட்ட அளவிற்கு யூதாசைப் பற்றியும் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. யூதாசு இன்றும் புதிராகவே இருக்கின்றார். 'இவரைப் போல இருக்கக் கூடாது!' என்பதற்கு அடையாளமாகவே அவர் இன்றும் நம் முன் நிற்கின்றார்!

2 comments:

  1. Anonymous3/16/2014

    ணயூதாசு ஸ்காரியோத்து ஒரு புதிராகத் தெரிந்தாலும் ஒருவகையில் அவனும் போற்றுதற்குறியவனே.மீட்பின் வரலாறு எனும் நாடகத்தில் இயேசு 'ஹீரோ' எனில் 'ஆன்டி ஹீரோ' யூதாசுதானே! ஆனால் இன்று அவனைத் 'தைலம் ஊற்றிய தையலோடு' ஒப்பிட்டுத் தையலை மலைமுகட்டுக்கே ஏற்றிவிட்டு யூதாஸை அதலபாதாளத்திற்கே தள்ளிவிட்ட தந்தையின் மேல் கொஞ்சம் வருத்தம்தான்.இருப்பினும் இப்படியொரு வித்தியாசமான கோணத்தில் யோசிக்க வைத்ததற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Anonymous3/18/2014

    தந்தையே, யூதாசு இன்னும் புதிருக்கு விடை என்னிடம் உள்ளதாகவே எண்ணுகிறேன். நாம் ஆண்டவர் ஓர் இடத்தில் கூறுகிறார். "இச்சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது வானகத்தில் உள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று." ஆவனது அழிவிற்கு ஆவனே 100% காரணம். இது எவ்வாறு, மனிதனுக்கு கடவுல் கொடுத்த மிகமிக முக்கியமான தன்மை என்னவெனில் "சுய சித்தம் அல்லது சொந்த சித்தம்" (free will). அதாவது மனிதன் தான் என்ன செய்ய விரும்புகின்றானோ அதை அவன் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் கடவுள் செய்யாதே என்று சொல்லியும் தான் மீறி அதைச் செய்யும் அளவுக்கு மிகவும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை பெற்று கீழ்ப்படிந்தவர்கள் நினிவே பட்டணத்தார். எச்சரிக்கை பெற்று கீழ்ப்படியாமல் போனவன் சாலொமோன். சாப்பிடாதே என்று சொல்லியும் கீழ்படியாமல் போன சிங்கம் கொன்ற இறைவாக்கினான் மற்றும் ஆதாம்/ஏவாள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாரும் தங்களுடைய சுயசித்தத்தின்படி செய்த பிழைக்கு கடவுள் பொறுப்பல்ல. இயேசு "உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்று முதன் முதலாக வாயைத்திறந்து சொன்ன இடம் மத்தேயு 26ல் தான். அதற்குமுன் அவர் யூதாஸின் போக்கை அறிந்திருந்தார், ஆனால் சொல்லவில்லை.

    எனவே யூதாஸ் ஸ்காரியோத் கெட்டு நரகத்துக்குப்போவது கடவுளுடைய சித்தமல்ல. இவன் நரகத்துக்குப்போவான் என்று முன்குறிக்கவில்லை. ஒருவேளை காட்டிக்கொடுத்தபின்பு மனம் திரும்பியிருந்தால் நாம் ஆண்டவர் அவனை மன்னித்திருப்பார். பேதுரு மறுதலித்தபின்பு மனம் கசந்து அழுதான். ஆனால் யூதாஸ் தெரிந்துகொண்ட பாதை தூக்கு (மனம்திரும்பவில்லை) என்பதாய் இருக்கின்றது. தன்னுடைய சுய சித்தத்தின்படி யூதாஸ் எடுத்த முடிவுகளுக்கு கடவுல் பொறுப்பல்ல. இயேசுவின் ஒரு சீடரே காட்டிக்கொடுக்க முன்வரும் போது அவர்கள் அதை சந்தோஷத்தோடு வரவேற்றனர். ஆனால் யூதாஸ் முன்வராதிருந்திருந்தால் அவர்கள் வேறு வகையில் இயேசுவை ஒழிக்கத் திட்டமிட்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன்.

    ReplyDelete