Friday, March 28, 2014

தனக்கு எதிராகத் தானே பிளவுபடும்

இயேசு அவர்களிடம் கூறியது: 'தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்து விடும்'...'நான் கடவுளின் விரலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!'

(லூக்கா 11:17,20)

கடந்த ஒரு மாதமாக இத்தாலிய டிவிகளில் அதிகமாக கிரைம் செய்திகளே வலம் வருகின்றன. அப்பாவே மகனைக் கொல்வது, அம்மா தன் இரண்டு மகள்களைக் கொல்வது, மகன் தன் பெற்றோரை கத்தியால் குத்துவது, பேத்தி தாத்தாவுக்கு விஷ ஊசி போடுவது, வீட்டு உரிமையாளர் தன்னிடம் வேலை செய்யும் ஒரு பெண்ணை அப்பார்ட்மெண்டில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது. கேட்கும்போதே மனது படபடக்கிறது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிபட்டவுடன் சொன்னது என்ன தெரியுமா?

'என்ன நடந்ததென்று எனக்கு தெரியாது! ஏதோ ஒரு அவசரத்தில் செய்து விட்டேன்!'

நமக்குள் எந்நேரமும் ஒரு போராட்டம் இருக்கின்றது என்பது எதார்த்தமான உண்மை.

நாம் சொல்வதைச் செய்வதில்லை.

நாம் படிப்பதை நம்புவதில்லை.

நாம் நினைப்பதை உணர்வுகளில் வெளிப்படுத்துவதில்லை.

அதிகமாகப் பாசம் வைக்கிறோம்.

அதிகமாகக் கோபமும் படுகிறோம்.

'மனிதன் பாதி! மிருகம் பாதி!' என்பார்கள்.

அதை விட

'தெய்வம் பாதி! மிருகம் பாதி! = மனிதன்!' என்று சொல்லிவிடலாம்.

நம் மனம் பிளவுபட்டு நிற்கின்றது. ஒரு மனத்தோடு இருக்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம். ஆனால் தோற்றுவிடுகிறோம்.

'இருமனம் கொண்டிருத்தல்' அழிவையே கொண்டுவரும் என்கிறார் இயேசு.

தனக்கெதிராகப் பிரியும் வீடும், அரசும் அழியுமென்றால், தனக்கெதிராகப் பிரிந்து நிற்கும் மனிதரும் அழியத்தானே செய்வர்!

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது? இதற்கு வழியே இல்லையா?

தூய பவுலடியாருக்கும் கூட இந்த 'இருமனப்' போராட்டம் இருந்திருக்கின்றது:

'நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை. எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை. எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்...நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை. அதைச் செய்யத்தான் முடியவில்லை' என உரோமைத் திருச்சபைக்கு எழுதும் கடிதத்தில் (7:14-20) மனம் திறக்கிறார் அவர்.

'இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள்!' (4:8) - என உள்ளத்தூய்மையை வழியுறுத்துகின்றார் திருத்தூதர் யாக்கோபு.

மனம் பிளவுண்டவர்களுக்கு இயேசு தரும் வைத்தியம் இதுதான்: 'கடவுளின் விரல் உங்களோடு இருந்தால்...'

கடவுளின் விரல் பிடிக்கிறவர்களின் மனம் இயல்பாகவே ஒருமனப்பட்டு விடும். கடவுளின் விரலை விடுத்து மற்றவர்களின் விரலைப் பிடிக்கும் போதுதான் 'இது சரியா! தவறா!' என்ற பதற்றம் வருகிறது. 'ஐயயோ இப்படி நடந்து விட்டதே' என்ற குற்றவுணர்வு வருகின்றது.

ஆறு மனமே ஆறு...அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று எழுதுகின்ற கண்ணதாசன் முதற்கட்டளையாக வைப்பதும் இதுதானே:

'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி!'

நம் இருமன பிளவு நிலைகளை இறைவனின் விரல் கொண்டு குணமாக்குவோம்...

சொல்லில்...செயலில்...ஒருமை கொள்வோம்...

அதுதான் அமைதி...அதுதான்...இறையாட்சி!

1 comment:

  1. Anonymous3/28/2014

    எவ்வளவு பெரிய உண்மைகளைத் தங்களுக்கே உரித்தான முறையில் கூறிவிட்டீர்கள்.இறைவனின் கரம் பிடித்து நடப்பவரின் மனநிலை தன் தந்தையின் விரல் நுனி பிடித்து சாலையைக் கடக்க முயலும் சிறுவனின் மனநிலை போன்றது.தந்தையின் 'அருகாமை' இருப்பின் எதையும் கடக்கலாம்; இனிதாக்க் கடக்கலாம்.

    ReplyDelete