Monday, March 31, 2014

ஏதேன் தோட்டம்

இன்றைய உலகை ஒரு ஏதேன் தோட்டம் என்று சொல்லலாம். நம்மைச் சுற்றி எண்ணற்ற மரங்கள் இருக்கின்றன. நாம் அனுப்பிய செயற்கைக் கோள்கள் நம்மைச் சுற்றி விண்மீன்களாக இருக்கின்றன. நம் அந்தரங்களுக்குள் வந்து பார்க்க நாம் நம் தொழில்நுட்பத்திற்கு அதிகமாகவே இடம் கொடுத்து விட்டோம். நாம் எங்கே இருக்கிறோம்? யாரோடு பேசிக் கொண்டிருக்கிறோம்? எவ்வளவு செய்திகளைப் பரிமாறுகிறோம்? எவ்வளவு செலவழிக்கிறோம்? எவ்வளவு கடன் வாங்குகிறோம்? எந்தக் கலர் வீட்டில் குடியிருக்கிறோம்? எந்நேரம் துணி துவைத்து நம் மொட்டை மாடியில் காய வைத்தோம்? எல்லாமே எல்லாருக்கும் தெரியும். நாம் வெறும் டேட்டா. நம்மை அழிக்கலாம். டவுன்லோட் செய்யலாம். அப்லோட் செய்யலாம். ஷேர் செய்யலாம். ஏதேன் தோட்டத்தின் ஆதாம், ஏவாளைப் போல நாமும் நிர்வாணமாகத் தான் நிற்கின்றோம். நாமும் வெட்கப்படுவதில்லைதான்! இன்று நம்மைச் சுற்றி நம்மைச் சோதிக்கும் பாம்பு கையாளும் ஒரே சொல்லாடல் இதுதான்: 'இதைவிட அது பெட்டராத் தெரியல?!' இந்தக் கேள்வியால் அது ஒவ்வொரு பொழுதும் நம்மைச் சோதித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்தப் பெண்ணைவிட அவள் பெட்டராத் தெரியல? இந்த மொபைலை விட அது பெட்டராத் தெரியல? ஆன்ட்ராய்டை விட ஆப்பிள் பெட்டராத் தெரியல? யாகுவை விட கூகுள் பெட்டராத் தெரியல? பிரிட்டானிக்காவை விட விக்கிபீடியா பெட்டராத் தெரியல? வைபரை விட வாட்ஸ்ஆப் பெட்டராத் தெரியல? பிஎஸ்என்எல்லை விட ஏர்டெல் பெட்டராத் தெரியல? நாம் எதை எடுத்தாலும் மற்றொன்று அதை விட பெட்டராகவே தெரிகிறது. வாழ்வின் கனியும், அறிவின் கனியும் இன்று நம் கண்கள் முன் வந்து போகின்றன. இது வாழ்வு தராதா? இது அறிவு தராதா? என்று நம் மனம் அலைபாய்கின்றது. ஆதாம், ஏவாளை விட இன்று நமக்குச் சோதனைகள் அதிகம்தான். பாவம் மனிதர்கள்!

இந்தக் காலகட்டத்தில் இயேசுவும் ஒரு ஆஃபர் கொடுக்கின்றார்: நானே வழியும், எதார்த்தமும், வாழ்வும். இந்த ஆஃபரின் பொருள் என்ன? வழி, எதார்த்தம், வாழ்வு என்பது இயேசுவின் மூன்று அடையாளங்கள் மட்டுமல்ல. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.

வழி நற்செய்தி நூல்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இடுக்கலான வழி, குறுகலான வழி, 'யார் பெரியவர்?' என்று வாதிடும் வழி, வழிப்போக்கனாக இயேசு எம்மாவு நோக்கிப் பயணிக்கும் வழி, சிலுவையின் வழி என எண்ணற்ற வழிகளை நாம் பார்க்கின்றோம். நாம் மேற்கொள்ளும் வெளிஉலகப் பயணத்திற்கான வழியை கூகுள் மேப்ஸ் இன்று எளிதாகக் காட்டிவிடுகிறது. நாம் தவறினாலும் சுட்டிக் காட்டுகிறது. வேகமாகச் சென்று இலக்கை அடைய நிறைய சாய்சும் இருக்கின்றது. ஆனால் உள்மனப் பயணத்திற்கு நமக்கு உதவு எந்த அப்ளிகேசனும் இன்னும் வரவில்லையே? வழி தெளிவாக வேண்டுமென்றால் இலக்கு தெளிவாக வேண்டும். இலக்கு தெளிவில்லாமல் இருக்கும் போது நாம் எந்த வழியில் போனாலும் அது ஒரு பெரிய மாற்றத்தை நம்மிடம் கொண்டு வருவதில்லை.

நம் இலக்கு வாழ்வாகவும், அதற்கான வழி உண்மை எனவும் இருக்க வேண்டும். இவ்வாறாக வழி, வாழ்வு, உண்மை ஒன்றோடொன்று கரம் கோர்க்கிறது. கிரேக்க மொழியில் உண்மை என்று சொல்லப்பட்டிருப்பதை விட எதார்த்தம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. எதார்த்தம் என்பது மிகவும் நெகிழ்வான பொருள் கொண்டது. எதார்த்தம் என்றால் என்ன? பிறழ்வு படாத எல்லாமே எதார்த்தம். பிறழ்வு பட்டால் அது பொய் என மாறிவிடுகின்றது.

மிகச் சின்ன உதாரணம். பசு பால் தரும் என்பது எதார்த்தம். அதையே ஆவினும், ஆரோக்கியாவும் தருகிறது என்றால் அது பிறழ்வு. என்னதான் அவர்கள் முயற்சி செய்து 100 சதவிகித பாலைத் தர முயன்றாலும் அது பிறழ்வுதான். நம்மை அறியாமலேயே நாம் உண்மைகளையெல்லாம் பாக்கெட்டில் அடைக்கத் தொடங்கிவிட்டோம். ஆடை என்பது எதார்த்தம். ரேமண்ட் என்றும் குரோகொடைல் என்றும் அதை பாக்கெட் செய்வது பிறழ்வு. பிறழ்விலிருந்து எதார்த்தத்தை நாம் பிரித்தெடுக்கும் மனப்பக்குவம் பெற வேண்டும்.

நம் வாழ்வில் உணர்வுகளில், எண்ணங்களிலும் நாம் பிறழ்வுகள் கொண்டிருக்கிறோம். 'அனைவரும் சமம்' என்பது எதார்த்தம். 'நான் பெரியவன் - நீ சிறியவன்' என்பது பிறழ்வு. 'எல்லாரையும் அன்பு செய்ய வேண்டும்!' என்பது எதார்த்தம். அன்பு ஒரு மோகப் பொருளாக மாறுவது பிறழ்வு. பிறழ்வுகள் களைவதே உண்மை. இயேசுவின் வாழ்க்கையில் பிறழ்வுகள் என்பதே இல்லை. தன்னைச் சுற்றியிருந்த சமுதாயத்தில், சமயத்தில் நிலவிய பிறழ்வுகளின் ஆடை உரிக்கின்றார் அவர்.

பிறழ்வு என்பது சைனா ஃபோன் மாதிரி. ரொம்ப சத்தம் போடும்.

ஆனால் உண்மை என்பது ஆப்பிள் ஃபோன் மாதிரி. அமைதியாக இருக்கும்!

வழியின் இலக்கு வாழ்க்கையாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் காரணிகளை வாழ்வின் காரணிகள், இறப்பின் காரணிகள் என இரண்டாகப் பிரிக்கின்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். நமக்கு நிறைவான மகிழ்வைத் தருவது வாழ்வின் காரணி எனவும், உடனடி இன்பம் தருவது சாவின் காரணி எனப் பொருள் கொள்ளலாம். கருத்தடை வாழ்வின் காரணியா? இல்லை. உடனடியாக நமக்கு இன்பம் தருகிறது. குடும்பம் என்ற பொறுப்பிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது. காலப்போக்கில் அது நம் மகிழ்வையே எடுத்து விடுகிறது. பொய் என்பது சாவின் காரணி. பொய் சொல்லும் போது உடனடியாக வரும் ஒரு பிரச்சினையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் காலப்போக்கில் அது பெரிய ஆக்டோபஸாக வளர்ந்து நம்மை இறுக்கி விடுகிறது.

நாம் கேட்க வேண்டியதெல்லாம் இதுதான்: 'இன்று இயேசு என்ன செய்வார்?' என் அலுவலகத்தில், என் கல்லூரியில், என் குடும்பத்தில் இன்று இயேசு இருந்தால் என்ன செய்வார்? அதை ஒரு நிமிடம் நினைத்து அதன் படி நாமும் செய்தால் அதுவே வழி! வாழ்வு! எதார்த்தம்!

1 comment:

  1. Anonymous3/31/2014

    "ஒப்பிடுதல்" ஒருவரின் உயிரையே குடிக்கக் கூடிய விஷப்பாம்பு.இன்றைய Blogல் வரும் 'நவநாகரிக' யுகத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் புரிவதெல்லாம்...'தேடல்'.நம் வாழ்வின் செயற்கைத்தனமற்ற எதார்த்தத்தைத் தேடல்.அவரவர் வாழ்வின் சூழலில் உண்மை மகிழ்ச்சிக்கான வாழ்வின் காரணிகளைத் தேடுவோம்.இயல்பான,எதார்த்தமான ஒரு வாழ்க்கை வாழ்வோம்.நன்றி!

    ReplyDelete