Monday, March 17, 2014

இவருக்குச் செவிசாயுங்கள்!

பேதுரு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற ஒரு குரல் ஒலித்தது. (மத்தேயு 17:6)

நேற்றைய தினம் மாலைத் திருப்பலியில் இந்தப் பகுதியைப் பற்றி மறையுரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது திடீரென எனக்குள் ஒரு சிந்தனை எழுந்தது. இன்றைய நற்செய்திப் பகுதியின் முக்கியமான வார்த்தை 'செவிசாயுங்கள்'. இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமுக்கு இறைவனின் வாக்கு அருளப்படுகின்றது. 'புறப்பட்டுச் செல்' என்று சொன்னவுடன் ஆபிரகாம் புறப்பட்டுச் செல்கின்றார். ஆகையால் 'செவிசாயுங்கள்' என்றால் 'சொன்ன பேச்சு கேளுங்க!' என்றும் பொருள். இறைவனுக்குச் செவிசாய்க்க இன்றைய நாள் அழைப்பு விடுக்கின்றது.

நம் புலன்களில் நமக்குத் தகவல்கள் உள் வரும் வழிகள் இரண்டு: கண், செவி. கீழைச் சமயங்களும், கீழை நாட்டு சிந்தனை மரபுகளும் 'செவி'க்கு முக்கியத்துவம் கொடுத்தன. தமிழ் மரபிலும் 'செவி'க்கே முக்கியத்துவம் உண்டு. தமிழ் இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெறுவதற்கு முன் செவி வழியாகவே காலங்காலமாக பரிமாறப்பட்டன. எபிரேய மரபிலும் செவி வழி ஆன்மீகமே முதன்மை பெற்றது. 'இஸ்ரயேலே! கேள்!' என்றுதான் அவர்களின் விசுவாச அறிக்கை தொடங்குகின்றது. இன்றும் யூதர்களின் செபக்கூடங்களுக்குச் சென்றாலோ, அவர்களின் நூலகங்களுக்குச் சென்றாலோ நாம் இதைப் பார்க்கலாம். அவர்கள் புத்தகத்தைப் பார்த்து மௌனமாகப் படிக்க மாட்டார்கள். சத்தமாகவே படிப்பார்கள். நாமும் சின்ன வயசுல பரீட்சைக்குப் படிக்கும்போதும் சத்தமாகத் தான் படித்திருப்போம். காலப்போக்கில் மௌனமே சிறந்தது என நம்மையே மாற்றிக் கொண்டோம். மேலை நாடுகள் 'செவி வழியை' விட 'கண் வழியையே' 'பார்த்தல்' வழியையே அதிகமாக முன்வைத்தன. மௌனம், காட்சி தியானம் என்பதெல்லாம் அவர்களின் சரக்கு. ஆண்கள், பெண்களை எடுத்துக்கொண்டால் பொதுவாக ஆண்கள் 'பார்த்தல் வழி', பெண்கள் 'கேட்டல் வழி'. ஆண்கள் டிவி, ஐஃபோன், ஐஃபேட், கணிணி என எதையாவது பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். பெண்களுக்கு ஒரு ரேடியோ இருந்தால் போதும். உலகையே மறந்து விடுவார்கள்.

சரி நம் சிந்தனைக்கு வருவோம். 'செவிகொடுங்கள்!'

இறைவனுக்குச் செவிகொடுக்குமுன் நான் எனக்குச் செவிகொடுக்கிறேனா என்று என்னையே கேட்டுப்பார்த்தேன். ஒவ்வொரு நொடியும் நாம் நம்மோடு பேசிக்கொண்டேயிருக்கிறோம். நமக்கு நாமே பேசும் பேச்சைக் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் சொல்வதை நம் மனம் அப்படியே பச்சைக் குழந்தைபோல ஏற்றுக்கொள்ளும். 'நீ ஒரு கோழை!' என்று நமக்கு நாமே சொன்னால் நம் பயம் தானாகவே பயப்படத் தொடங்கிவிடும். ஆகையால் கவனம்!

நாம் நமக்கு நாமே வாக்குறுதிகள் கொடுக்கிறோம்.

அருள்நிலையில் இருக்கும் நான் உலகறிய இரண்டு முறை வாக்குக் கொடுத்திருக்கிறேன்: 

ஒன்று, திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது.

இரண்டு, அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் இறைமக்கள் முன்னிலையில் தான் நடக்க வேண்டும் என்பது திருச்சபையின் பரிந்துரை. கடவுளுக்கும், அவரின் மக்களுக்கும்தான் அருள்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

நேற்று இரவு இந்த இரண்டு திருநிலைப்பாட்டுச் சடங்குகளின் புத்தகத்தையும் எடுத்து வாசித்துப் பார்த்தேன். ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. முதல் நிகழ்வு நடந்தது புனேயில். என் நண்பர் ஜூலியான்ஸ் வந்திருந்தார். இரண்டாவது நிகழ்வு நடந்தது மதுரையில். என் உறவினர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். அந்தச் சடங்குகளை வாசித்தபோது எல்லாம் எனக்குத் திரும்பவும் நடந்தது போலவே இருந்தது. 

திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படும்போது மணத்துறவு, கீழ்ப்படிதல், நற்செய்தி அறிவிப்பு, திருப்புகழ்மாலை என மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது.

இதில் 'மணத்துறவு மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறீரா?' என ஆயர் கேட்கின்றார். மணத்துறவு என்பது விருப்பம் தான். வாக்குறுதி அல்ல. ஆகையால் இது வாக்குறுதியை விடக் குறைவானது என்று அர்த்தமா? இல்லை. வாக்குறுதியில் கூட ஒரு திணிப்புத்தன்மை இருக்கும். ஆனால் விருப்பம் என்பது நமக்கு நாமே வாக்குறுதி தருவது. அடுத்தவருக்குத் தரும் வாக்குறுதியில் கூட நாம் தவறலாம். ஆனால் நமக்கு நாமே கொடுக்கும் வாக்குறுதியில் தவறவே கூடாது. அப்படி நாம் தவறினால் நம் மனம் நம்மைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கிவிடும். நம் மனமே நம்மை நம்ப மறுத்துவிடும். கீழ்ப்படிதல் என்று வாக்குறுதியை இங்கே ஆயருக்குத் திருத்தொண்டர் கொடுக்கின்றார். 

தொடர்ந்து நற்செய்தி நூலைக் கையில் தந்து ஆயர் அவர்கள் சொல்வார்:

கிறிஸ்துவின் நற்செய்தியைப் பெற்றுக்கொள். (Receive the gospel of Christ)
இதன் தூதனே நீ. (Whose herald you now are)
நீ வாசிப்பதை நம்பு. (Believe what you read)
நம்புவதைப் போதி. (Teach what you believe)
போதிப்பதை வாழ்ந்து காட்டு. (and Practice what you teach)

என்ன அழகான கட்டளை: நம்பு. போதி. வாழ்ந்து காட்டு. சின்னச் சின்ன வார்த்தைகள் தாம். ஆனால் அவை வைக்கும் பொறுப்பு மிகவும் அதிகம்.

மேலும் இந்த நிகழ்வில் தான் திருத்தொண்டர் திருச்சபையின் செபத்தைச் செபிக்க (திருப்புகழ்மாலை) பணிக்கப்படுகின்றார்.

மணத்துறவு, கீழ்ப்படிதல், நற்செய்திப் பணி, இறைவேண்டல் பணி என நான்கு வாக்குறுதிகளை (ஒரு விருப்பம் மற்றும் மூன்று வாக்குறுதிகள்) ஒரு திருத்தொண்டர் வழங்குகிறார்.

அருட்பணியாளராகத் திருப்பொழிவு செய்யும் சடங்கில் அதிக வார்த்தைகள் இல்லை. ஆனால் மூன்று அடையாளங்கள்: 1) கைகளை வைத்துச் செபித்தல், 2) திருஎண்ணெய் பூசுதல், 3) திருவுடை அணிதல் - திருப்பலிப் பாத்திரம் வழங்குதல்.

திருப்பலிக்குப் பயன்படும் பாத்திரத்தைக் கையில் வழங்கும்போது ஆயர் சொல்வார்:

'இறைமக்களின் காணிக்கைப் பொருளை ஏற்றுக்கொள்.
நீ செய்வதன் அர்த்தம் தெரிந்து செய். (know what you do)
நீ திருப்பலியில் கொண்டாடுவதைப் போல உன் வாழ்க்கையில் இரு. (imitate what you celebrate)
ஆண்டவரின் சிலுவையின் மறைபொருளோடு உன் வாழ்வை இணைத்துக்கொள்'. (and conform your life to the mystery of the Lord's cross)

இந்த வார்த்தைகளும் மிகுந்த பொறுப்பை உணர்த்துகின்றன.

இந்த இரண்டு திருநிலைப்பாட்டு வாக்குறுதிகளைப்போலவே நாம் பொதுநிலையில் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதி:

'இன்பத்திலும், துன்பத்திலும்
உடல்நலத்திலும், நோயிலும்
நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து
என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும், அன்பு செய்யவும் வாக்களிக்கிறேன்'

இந்த வாக்குறுதியிலும் மிகுந்த பொறுப்பு உண்டு. இதே வாக்குறுதியைத்தான் ஒவ்வொரு அருட்பணியாளரும் தன் மனத்தளவில் திருஅவை என்ற மணப்பெண்ணைத் தழுவிக்கொள்ளும் போது வாக்குறுதியாக எடுக்கின்றார்:

'இன்பத்திலும், துன்பத்திலும்
என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும்,
நான் நல்லா இருந்தாலும், நான் நோயுற்றாலும்,
நான் சேர்ந்து இன்புற்றாலும், தனியே இன்னலுற்றாலும்
என் வாழ்நாளெல்லாம் என் மக்களை நேசிக்கவும், மதிக்கவும், அன்பு செய்யவும் வாக்களிக்கிறேன்'

1 comment:

  1. Anonymous3/17/2014

    என்னதொரு பகிரங்கமான ஆத்தும சோதனை! என் கண்கள் பனித்துவிட்டன.இந்த வாக்குறுதிகளை உணர்ந்து ஒழுகும் தங்களையும் அனைத்து அருட்பணியாளர்களையும் பார்த்து இறைவன் பூரிப்படையும் தருணம் இது.தாங்கள் மட்டுமல்ல,தங்களைப் பெற்றவர்களும் பேறுபெற்றவர்களே! இறைவன் தங்களையும் அனைத்து அருட்பணியாளர்களையும் தம் கொடைகளால். நிரப்பி,தேவையான உடல்உள்ள சுகம் தந்து தம் பாதுகாப்பில் வைத்துக்கொள்வாராக.தொடரும் எங்கள்ஜெபம் உங்களுக்காக!

    ReplyDelete