Thursday, March 6, 2014

குத்தும் முட்புதர்

மோசேயின் அழைப்பைப் பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தேன். கட்டுரை ஆசிரியரின் பெயர் சைல்ட்ஸ் (Childs). விவிலியத்தில் அழைப்பு நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது ஒரு விஷயம் புலப்படுகிறது. கடவுளால் அழைக்கப்படுபவர்கள் முதலில் தயக்கம் காட்டுகிறார்கள். பின் அவரைப் பின் தொடர்கிறார்கள். ஆபிரகாம் தயக்கம் காட்டுகிறார். எரேமியா தான் ஒரு சிறுவன் என்று பின்வாங்குகிறார். எசாயாவுக்கு தன் தூய்மையற்ற உதடுகள் தடையாக இருப்பதாகச் சொல்கின்றார். பேதுரு, 'என்னை விட்டு அகலும்!' என்கிறார். மோசே ஐந்து முறை ஆண்டவரைப் பார்த்து 'முடியாது!' என்கின்றார். இந்த ஐந்து முறையும் கடவுள் 'முடியும்!' என நம்பிக்கை தருகின்றார்.

1. 'நான் யார்?'
'பார்வோன் முன் செல்வதற்கு நான் யார்?' என்பது மோசேயின் முதல் கேள்வி. தான் ஒன்றுமில்லாதவன் எனவும், பாரவோன் என்னும் வலிமையை எதிர்க்க இந்த வலுவின்மையால் ஒன்றும் செய்ய முடியாது எனத் தயங்குகின்றார். கடவுள் தரும் பதில் இதுதான்: 'நான் உன்னோடு இருப்பேன்'. நம் வாழ்வின் அடையாளங்கள் நம் பெயரை வைத்தோ, நம் குடும்பத்தை வைத்தோ, நம் சூழலை வைத்தோ, நம் படிப்பை வைத்தோ, நம் வேலையை வைத்தோ வருவதில்லை. 'கடவுளின் உடனிருப்பே' நம் அடையாளம். கடவுளின் உடனிருப்பு நம்மை அடையாளப்படுத்தினால் நமக்கு வேறு அடையாளங்கள் தேவையில்லை.

2. 'அவர் பெயர் என்ன?'
'உன்னை அனுப்பியவர் யார்? அவர் பெயர் என்ன?' என்று இஸ்ரயேலர் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? எனப் பின்வாங்குகிறார் மோசே. ஒருவரின் பெயரைத் தெரிந்திருப்பது என்பது ஒருவரால் அனுப்பப்படுவது என்பதற்குச் சமம். உதாரணத்திற்கு, வேறு நாடுகளில் ஒரு அருட்பணியாளர் படிப்பிற்கோ, பணிக்கோ செல்கிறார் என்றால் அவர் அவரது சொந்தப் பெயரால் செல்வதில்லை. அவர் அவரது ஆயர் மற்றும் தலைமைநிலையில் இருப்பவரால் அனுப்பப்படுகிறார். ஆகையால் தான் இங்கே என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி: உங்கள் பேராயரின் பெயர் என்ன? அவர் யார்? கடவுள் இங்கே தன் பெயரை வெளிப்படுத்துகிறார்: 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே!' - இந்த மூன்று வார்த்தைகளைக் குறித்து எவ்வளவோ நூல்கள் எழுதப்பட்டு விட்டன. ஆனால் இன்னும் இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. கடவுளின் பெயரை மறைபொருளாகவே வைத்து விடுவோம்.

3. 'அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்!'
கண்ணுக்குப் புலப்படும் வரை நாம் எதையும் நம்புவதில்லை. தன்னை மக்கள் நம்பவில்லை என்றால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்த மோசேக்கு கடவுள் மூன்று அடையாளங்களைத் தருகின்றார்: கோல் பாம்பாக மாறுகிறது, கை தொழுநோய் பிடித்து பின் நலமடைகிறது, நைல் நதியின் தண்ணீர் இரத்தமாக மாறுகிறது. இந்த மூன்று அடையாளங்களும் சொல்வது என்ன? இறைவன் வாழ்வின் இறைவன். வாழ்வின், சாவின் ஊற்று அவரே. அவர் நினைத்தால் அவரால் அழிக்கவும் முடியும், ஆக்கவும் முடியும்.

4. 'எனக்கு நா திக்கும்!'
தமிழின் அழகு பார்த்தீர்களா? 'நா' என்ற ஒரு எழுத்து நாக்கைச் சுருக்கி விடுகிறது. தன் உடல் இயலாமை மோசேக்கு தடையாக இருக்கிறது. ஆனால் அனைத்து இயக்கங்களுக்கும் காரணகர்த்தா தான் தான் என உறுதி செய்கிறார் இறைவன்.

5. 'வேறு யாரையாவது அனுப்பும்!'
இறுதித் தயக்கம். இந்தத் தயக்கம் எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். 'நான் தான் செய்யணுமா?' என்ற கேள்வியை நாமும் பல நேரங்களில் கேட்கின்றோம். இங்கே ஆரோனைத் துணையாகத் தருகின்றார் கடவுள். மற்றவரின் துணையின்றி நம் வாழ்வில் ஒன்றுமில்லை என மனிதர்களின் உடனிருப்பையும் உணர்த்துகின்றார் இறைவன்.

இவ்வளவு தயக்கங்கள் காட்டினாலும் மோசே முன்னேறிச் செல்கின்றார். தன் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறார்.

ஒரு உருவகத்தோடு நிறைவு செய்வோம்:

கொல்லீன் மெக்கல்லோ என்பவர் 1971ஆம் ஆண்டு எழுதிய ஒரு இனிய நாவல்: The Thorn Birds (முட்பறவைகள்!). அதிலிருந்து ஒரு quote:

"தன் வாழ்வில் ஒரே ஒரு முறை பாடும் ஒரு பறவை பற்றி ஒரு புராணம் உண்டு. ஒரே முறை பாடினாலும் அந்தப் பாடல் மற்ற எல்லாப் பறவைகளின் பாடலை விட மிகவும் இனிமையாக இருக்கும். தன் கூட்டை விட்டுப் பறக்கத் தொடங்கிய நாள் முதல் அது ஒரு முள் மரத்தைத் தேடும். தான் தேடும் மரம் கிடைக்கும் வரை அது தேடிக் கொண்டே இருக்கும். கண்டுபிடித்தபின், அந்த மரத்திலேயே மிகவும் ஊசியாக இருக்கின்ற முள்ளின் மேல் தன் உடலை மோதி அந்த முள்ளால் குத்திக் கொள்ளும். குத்திக்கொண்டே பாட ஆரம்பிக்கும். அந்த முள் தரும் வலியில் இன்னும் அதிகமாய்ப் பாடும். ஒரேயொரு பாடல். அதற்காகத் தன் உயிரையே அழித்துவிடும். ஆனால், அந்தப் பாடலைக் கேட்க உலகமே மௌனமாய் நிற்கும். அந்தப் பாடலைக் கேட்கும் கடவுள் மெல்லப் புன்னகை செய்வார். மிக விலையுயர்ந்ததைப் பெற மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டும்...என முடிகிறது அந்தப் புராணம்."

இதை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நான் அழுதுவிடுவேன்.

இந்தப் பகுதிதான் நான் என் அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட நாள் அன்று  தேர்ந்து கொண்டது. அருட்பணியாளர் திருநிலைப்படுத்தப்பட்ட நாள்தான் அவர் கூட்டைவிட்டு வெளியேறும் நாள். அன்று முதல் அவர் முள்ளைத் தேடிப்பறக்கின்றார். தான் கண்ட முள்ளில் தன்னையே குத்திக் கொள்கின்றார். அந்த வலியில் அவர் பாடும் பாடல் மிக இனிமையானது.

திருமணத்தில் இணையும் போதும் ஒருவர் தன் கூட்டைவிட்டு முள்ளைத் தேடிப் புறப்படுகின்றார். கணவன் - மனைவி - பிள்ளைகள் என அன்றாடம் தன்னையே குத்திக் கொள்கின்றார். கானம் பாடும் அந்த வானம் பாடிகள் மிக அழகான பாடலைப் பாடுகின்றன.

மோசே என்ற பறவையும் கூடு தாண்டிப் புறப்பட்டது. பாலைவனத்தில் தன்னையே குத்திக் கிழித்தது.  ஒவ்வொரு சொட்டு இரத்தத்திலும் அது இனிமையாகப் பாடியது...

'மிக விலையுயர்ந்ததைப் பெற ... மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டும் ... '

எனச் சொல்லுகிறது ஒரு புராணம்.

1 comment:

  1. Anonymous3/07/2014

    நம்மைப் பிறருக்கு அடையாளப்படுத்துவது " கடவுளின் உடனிறுப்பே".அழகான,ஆறுதலான வார்த்தைகள்.ஆழ்கடலின் அடியில் சென்று முத்தெடுப்பவனுக்கும்,ஒரு தேன் கூட்டிலிருந்து தேன் எடுப்பவனுக்கும்,ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும் நன்றாகத் தெரியும் தாங்கள் கொடுக்கும் விலை என்னவென்று." முட்பறவைகள்" என் கண்களையும் கசியவைத்துவிட்டன.

    ReplyDelete