Sunday, March 9, 2014

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

அவர் அவர்களை நோக்கி, 'வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?' என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, 'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!' என்றனர். அவர் அவர்களிடம், 'என்ன நிகழ்ந்தது?' என்று கேட்டார்.

எம்மாவு சீடர்கள் இயேசுவைச் சந்தித்த நிகழ்வை இன்று நாம் சிந்திக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நற்செய்தியாளரும் வித்தியாசமாக எழுதுகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் 'நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருப்பேன்' என்னும் இயேசுவின் வார்த்தைகளோடு நிறைவு செய்கின்றார். இம்மானுவேல் - கடவுள் நம்மோடு எனத் தொடங்கும் மத்தேயு நற்செய்தி 'கடவுள் நம்மோடு' என்ற வார்த்தைகளோடு நிறைவு பெறுகிறது. மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை ஒரு துன்புறும் பணியாளராகச் சித்தரிப்பதால் உயிர்ப்பிற்குப் பின் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி எழுதாமல் அவசர அவசரமாக தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார். யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் அன்புக் கட்டளையை உயிர்ப்பின் நிகழ்வுகளில் நிழலாட விடுகின்றார். லூக்கா நற்செய்தியாளரின் இயேசு 'வழியில்' நடக்கின்றார். லூக்கா நற்செய்தி எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. லூக்கா நற்செய்தியாளரில் வரும் அனைவருமே பயணம் செய்கின்றனர்: சக்கரியா, எலிசபெத்து, மரியா, இயேசு, நல்ல சமாரியன், ஊதாரி மகன். இன்று நாம் காணும் எம்மாவு சீடர்களும் வழியில் தான் இயேசுவைச் சந்திக்கின்றனர். 

வழி எதைக் குறிக்கிறது? வழி வாழ்க்கைக்கான ஒரு உருவகம். வாழ்வில் நாம் பயணியர்கள், வழிப்போக்கர்கள். எந்நேரமும் நாம் எதையாவது ஒன்றை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றோம். எருசலேமிலிருந்து எம்மாவு நோக்கிச் செல்கின்றனர் சீடர்கள். எருசலேம் துன்பத்தின் உருவகம். தன் தலைவர் அழிக்கப்பட்டுவிட்டார், தங்களையும் அழித்து விடுவார்கள் என்று பயந்து ஓடுகின்றனரா? அல்லது 'எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றும் இல்லை' என விரக்தியில் நடக்கிறார்களா? விரக்தியில் நடக்கும் போது நம்மையறியாமலேயே நம் நடை சுருங்கி விடுகிறது. இந்தச் சீடர்களும் அப்படித்தான் சுருங்க நடந்திருக்க வேண்டும். விரக்தி, பயம், குழப்பம், கவலை. இனி என்ன நடக்கும்? இயேசு உயிர்த்துவிட்டாரா? பெண்கள் சொல்வதை நம்பலாமா? இப்படிக் கேள்விகளோடும், ஆச்சர்யங்களோடும் நடந்தவர்களைச் சந்திக்கின்றார் இயேசு ஒரு வழிப்போக்கன் போல. நம் வாழ்விலும் கேள்விகள், ஆச்சர்யங்கள் வரும்போது அங்கேயும் இயேசு ஒரு வழிப்போக்கனாக நடந்து வருகிறார்.

இயேசு சீடர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வியை இன்று நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்: 'நீங்கள் ஒருவரோடு ஒருவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' இதற்கு விடையாக சீடர்கள் எருசலேமில் நடந்தவற்றையெல்லாம் சொல்கின்றனர். இயேசுவும் அவர்களுக்கு இறைவாக்குகளை எடுத்துரைக்கின்றார். 

இந்தக் கேள்விக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு:

1. நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

2. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்?

3. அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்?

நாம் வாழும் இந்தச் செல்லுலார் உலகத்தில் அன்றாடம் 'பேச்சு' வழியாக பல டேட்டாக்கள் பரிமாறப்படுகின்றன. இந்த நொடி எவ்வளவோ பேர் பேசிக்கொண்டிருப்பார்கள்: தொலைபேசிப் பேச்சு, நேருக்கு நேர் பேச்சு, நமக்குள் நாமே பேசும் மொளனப் பேச்சு, வலியின் முணகல், போரின் சத்தம், அலைகளின் சத்தம், மேடைப் பேச்சு, சினிமா, பாடல் என நம்மைச் சுற்றி பேச்சு இருந்து கொண்டே இருக்கின்றது. 

முதலில் நாம் கேட்க வேண்டியது: 'அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்?' அதாவது இன்று உலகம் என்ன பேசிக் கொண்டிருக்கிறது. பேஸ்புக், ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்ஆப் என எல்லாத் தளங்களிலும் மக்கள் இன்று பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள்? நாம் டிவியை ஆன் செய்தால் யார் யாரோ வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்க்கும் விளம்பரங்கள், சினிமாக்கள், மெகாசீரியல்கள் என எல்லாவற்றிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்கள் நமக்குச் சொல்வது என்ன? இன்றைய உலகம் கருத்தடை, கருக்கலைப்பு, பிளாஸ்டிக், புவிவெப்பமயம், நாகரீகம் பற்றிப் பேசுகின்றது. கடவுள் இல்லை எனவும் 'நம்மால் எல்லாம் முடியும்!' என்று சொல்கின்றது. இன்றைய உலகம் பேசும் பல நம் செவிகளுக்கு இனிமையாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் காலப்போக்கில் நமக்குத் துன்பமும், விரக்தியுமே மிஞ்சுகின்றது.

இரண்டாவதாக, சீடர்களாகிய நாம் இன்று எதைப் பேசிக் கொண்டிருக்கிறோம்? நம் பேச்சு உலகின் பேச்சு போலவே இருக்கின்றதா? நம் பேச்சு உலகின் பேச்சுக்கு நடுவில் மறைந்து போகின்றதா? இன்று நம் கண்முன் அநீதி, வன்முறை, ஏற்றத்தாழ்வு இருக்கும்போது அதை எதிர்த்து நம்மால் பேச முடிகிறதா? நாம் பேசுவதற்குத் தடையாக இருப்பது என்ன? நம் பயமா? நம் கவலையா? நம் விரக்தியா? நம் நடையும் சுருங்கிப் போய் இருக்கின்றதா?

மூன்றாவதாக, அவர் இன்று என்ன பேசுகிறார்? இயேசு எதைப் பற்றி நம்மிடம் உரையாடுகின்றார்? இயேசுவின் உரையாடல் எப்போதும் நம்பிக்கை தருவதாகவே இருக்கின்றது. நம் அறியாமையைக் கண்டு சில நேரங்களில் 'மந்தப் புத்தி உள்ளவர்களே!' என்று இயேசு நம்மையும் சாடுகின்றார். துன்பங்கள் வழியே மீட்பு எனச் சொல்கின்றார் இயேசு. 'கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும், செவிகளுக்கு இனிமையாய் இருப்பவை எல்லாம் நல்லது என நினைத்து விடாதீர்கள்' என்கிறார்.

இயேசு இன்னும் நடப்பது போல காட்டிக் கொள்கின்றார். 'எங்களோடு தங்கும்!' என்கின்றனர் சீடர்கள். முன்பின் தெரியாத ஒருவரைத் தங்களோடு தங்கிக் கொள்! என்று சொல்லும் சீடர்கள் மிக எளிமையானவர்கள். தாராள உள்ளத்தினர். இந்தத் தாராள உள்ளம் நம்மிடம் இருக்கின்றதா? நாம் யாரையாவது சந்திக்கும்போது, 'இவன் எப்படா போவான்?' என நினைக்கிறோம். பிறரை நம் தனித்தன்மைக்கு எதிரானவர்களாகப் பார்க்கிறோம். கடவுளையும் சில நேரங்களில் எதிரியாகப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம். 

அப்பம் பிட்குதலில் இயேசுவைக் காண்கின்றனர் சீடர்கள். அவர் மறைந்தவுடன் தான் அவர் யார் எனத் தெரிகின்றது அவர்களுக்கு. கடவுளின் 'இல்லாமையே' அவரின் இருத்தலை நமக்குக் காட்டுகின்றது.

இறைவார்த்தையிலும், இறைவுணவிலும் இன்றும் இயேசு நம்மோடு வருகின்றார். அவர் பேசுவதை நாம் கேட்போம். அவர் நம்மோடு தங்கட்டும். அவரைச் சந்தித்தபின் எந்த எருசலேமும் நமக்குத் துன்பமில்லை. எந்த நிலையிலும் நமக்கு இறப்பில்லை, விரக்தியில்லை, பயமில்லை, கவலையில்லை.

1 comment:

  1. Anonymous3/09/2014

    என்னைப் கவர்ந்த,எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி...சீடர்கள் இயேசுவைப் பார்த்து " எங்களோடு தங்கும்" என்று சொல்வது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.இந்த பெருந்தன்மை நமக்குமிருந்தால் வெட்டி பேச்சுக்களை விட்டு நம் செவிகளை அவர்பால் திருப்பலாம்.அவரும் நம்மோடு தங்குவார்.எம்முள் அணைந்துகொண்டிருக்கும் திரியைத் தூண்டி விட்டதற்கு நன்றி.

    ReplyDelete