Thursday, March 20, 2014

யாருக்கு நான் அஞ்சவேண்டும்?



'ஆண்டவரே, என் ஒளி.
அவரே என் மீட்பு.
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்.
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்.
அதையே நான் நாடித் தேடுவேன்.
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம்
நான் குடியிருக்க வேண்டும்.
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்.'
(திருப்பாடல் 27:4)

தூய வளனாரின் திருநாளை இன்று சிறப்பாகக் கொண்டாடினோம். தாவீதின் வழி மரபில் வரும் வளனார் இன்று தாவீதை என் மனக்கண் முன் கொண்டு வந்தார். நேற்றைய தினம் எருசலேம் கோவில் அழிவைப் பற்றிப் படித்தோம். கண்ணீரே வந்துவிட்டது.

'இதுதான் எங்கள் உலகம்' என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்க அவர்கள் கண் முன்னாலேயே அவர்களின் கோவில் அழிக்கப்பட்டது. கோவிலின் திரைச்சீலைகள் பாபிலோனிய அரசனின் அந்தப்புரங்களை அலங்கரிக்கவும், திருப்பாத்திரங்கள் அரசனின் உணவு மேசைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

தாவீது அரசருக்கும் எருசலேம் கோவிலின் மேல் மிகுந்த ஆர்வம் இருந்ததை இன்றைய திருப்பாடல் நமக்குச் சொல்லுகிறது. தாவீது அரசனின் காலத்தில் எருசலேமில் ஆலயம் கட்டப்படவில்லையென்றாலும், யாவே இறைவனுக்கு ஒரு சிற்றாலயம் கண்டிப்பாக அங்கே இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தவருக்கும் கோவில் இருந்தது இங்கே நினைவுகூறப்பட வேண்டும்.

ஒரு அரசன் தன் அரண்மனை வாழ்வை விடுத்து ஆண்டவரின் ஆலயத்தின் வாயில்காப்பவனாக தான் இருக்க விரும்புவதாகப் பாடுவது தாவீது அரசன் ஆலயத்தின் மேல் கொண்டிருந்த பற்றினையே காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டில் இடம் சார்ந்த பிரசன்னமாக இருந்த ஆலயம், புதிய ஏற்பாட்டில் ஆள் சார்ந்த பிரசன்னமாக மாறிவிட்டது. ஆகையால் தான் தூய பவுலடியார் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதும்போது, 'நீங்கள் தூய ஆவி குடிகொண்டிருக்கும் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்கின்றார். 

இறைவனின் பிரசன்னம் ஒளியும், மீட்பும். நம் ஒவ்வொருவரின் பிரசன்னமும் மற்றவருக்கு ஒளியும், மீட்புமாக இருத்தல் அவசியம் தானே!

1 comment:

  1. Anonymous3/20/2014

    ' திருப்பாடல்கள்'...இவ்வார்த்தையை உச்சரிக்கும் போதே என் மனத்தில் ஒரு சுகமான அமைதி குடிகொள்வதை உணர முடியும்.ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு,மாறி வரும் நம் மனநிலைக்கு ஏற்றவாறு உள்ள திருப்பாடல்கள் எத்தனை அழகானவை.இவற்றின் பிறப்பிடமான தாவீது அரசனுக்கு ஒரு சலாம்..இப்பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திய தங்களுக்கும் ஒரு சலாம்

    ReplyDelete