Monday, March 24, 2014

ஜோசியக்காரன் சொன்ன பொண்ணு!

அன்பான இனிய பேச்சால் உலகையே வென்று விடலாம் என்பார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமா? எல்லாச் சூழ்நிலைகளிலும் இது சரி வருமா? ஆனால் கடுஞ்சொற்களைத் தவிர்க்கலாம் என்பது எல்லா நேரத்திற்கும் பொருந்தும். நல்ல பெயர் எடுக்க நிறைய நேரம் எடுக்கும். அந்தப் பெயரில் கிறுக்கல் விழ ஒரு நொடி போதும். 'நீ சொல்லும் ஒரு பொய் வெளியே வரும்போது நீ பேசிய எல்லா உண்மையும் சந்தேகத்திற்கிடமாகும்' என்பார்கள். நம் அன்பிற்கினியவர்களோடு கடுஞ்சொற்கள் பேசிவிட்டால் மனது முழுவதும் குற்ற உணர்வால் நிறைந்து விடுகிறது.

இனிய சொற்களே பேசினாலும் சில சூழல்களில் கடுஞ்சொற்கள் என் நாவில் மிகவும் சூடாய் வந்து விழுந்துவிடுகின்றன. இரத்த உறவுகள் நம்மிடம் அன்பு காட்டுவது இயல்பு. ஆனால் முகங்காணா உறவுகளின் அன்பின் அதிர்வுகளைத் தாங்குவது இறைவனின் வரம். முற்பிறப்பின் தொடர் போல சில உறவுகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்போது இந்த உறவுகளையே நான் அதிகம் காயப்படுத்தி விடுகிறேன்.

இன்று இயேசுவும் சமாரியப்பெண்ணும் சந்தித்த நிகழ்வு என்னில் பல சிந்தனை ஓட்டங்களை எழுப்பியது. இயேசு அந்தப் பெண்ணை முன்பு பார்த்தது கிடையாது. இந்த நிகழ்விற்குப் பின் அவர் அவரைச் சந்தித்ததாக எந்த குறிப்பும் இல்லை. அந்தப் பெண்ணோடு இருந்த கொஞ்ச நேரமும் இயேசு இனிய சொற்களையே பகிர்ந்து கொள்கிறார். அந்தப் பெண்ணின் பழைய வாழ்க்கையைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. நீ சமாரியப் பெண் - நான் யூத ஆண் என்று வேற்றுமை பாராட்டவில்லை. தன்னை முன்வைத்து - நான் பெரிய போதகனாக்கும். நான் சொன்னால் பேயே ஓடுமாக்கும். நான் தண்ணீரைத் திராட்சை ரசமாக்குவேனாக்கும் என்றெல்லாம் தம்பட்டம் இல்லை. 'கொஞ்சம் தண்ணீர் கொடுமா!' எனத் தொடங்குகிறார். அவர் வழியாக அவரின் ஊரையே சொந்தமாக்கிக் கொள்கின்றார்.

பெண்கள் எவ்வளவு ஆச்சரியமானவர்கள். அதிலும் முற்பிறப்பின் தொடர் உறவுகளாக நம்மோடு வருகின்ற பெண்கள் மிகவும் ஆச்சரியமானவர்கள். அவர்கள் நம் படிப்பைப் பார்ப்பதில்லை. நம் சாதியைப் பார்ப்பதில்லை. நம் பின்புலத்தைப் பார்ப்பதில்லை. 'உன்னால் இது செய்ய முடியுமா? அது செய்ய முடியுமா?' என்று கேட்பதில்லை. கொஞ்ச நேரம் நாம் பேசினாலும், அவர்களின் உறவுகள் அனைத்தையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள்.

இயேசு - பெண்ணின் உரையாடலில் நிறைய நக்கல்களும் இருக்கின்றன. 'உங்ககிட்ட வாளி இல்லை. கிணறு ஆழமானது. நீங்க எப்படி பாஸ் தண்ணீ எடுப்பீங்க?' என்கிறார் பெண். 'நீங்க என்ன எங்க யாக்கோபை விட பெரியவரா?' என்று கேட்கிறார். இயேசு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த proof-ம் கொடுக்கவில்லை. இயல்பாக இருக்கிறார். பல நேரங்களில் என் உறவுச் சிக்கல்களுக்கும், என் கடுஞ்சொற்களுக்கும் காரணம் நான் என்னையே prove பண்ண நினைப்பதுதான். நம் உறவுகள் மிகவும் எளியவர்கள். இயல்பானவர்கள். இயல்பாக இருந்தாலே போதும்.

புறவிசை தாக்கும் வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும், நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும் என்பது நியூட்டனின் நிலைம விதி. சமாரியப்பெண்ணின் வாழ்வில் புறவிசையாக வருகின்றார் இயேசு. இயேசுவின் வாழ்வில் புறவிசையாக வருகின்றார் பெண். இரண்டு பேரும் தொடர்ந்து ஓடுகின்றனர் தங்கள் இலக்கு நோக்கி.

'எந்தக் காக்காவும் எதையும் தூக்கிக் கொண்டு போவதுமில்லை. எந்தக் குயிலும் கொண்டு வந்து கொடுப்பதுமில்லை' என்பார்கள். இயல்பாகச் சிரிக்கவும், என்றும் இன்சொல் பேசவும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்!

[இயேசு - சமாரியப்பெண்...
விநாயகர் - பூக்காரப்பெண்...
ஏதோ தொடர்பு இருக்குல?]



1 comment:

  1. Anonymous3/24/2014

    ஒரு அழகான கவிதை படித்த உணர்வு.தங்களுக்கு ஏற்பட்ட இந்த 'சுய சோதனை' பல நேரங்களில் எல்லோருக்குமே வருவதுதான்.
    " இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்
    காய்கவர்ந்தற்று"...இந்தக் குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது...நம் எதிரே இருப்பவர் யாராக இருப்பினும் இன்முகம் காட்டுவோம்; இனியவை கூறுவோம்.ஆமாம்...இவ்வளவு 'homely' யா ஒரு பெண்ணை எங்கே படம் பிடித்தீர்கள்?

    ReplyDelete